Wednesday 3 May 2023

பேகம் கதீஜாவின் சாமான்ய ஜீவிதம்

எனக்கு ஞானஇலக்கியங்கள் படிக்கத் துணைபுரிந்த ஆசிரியர்  ஷாகுல்ஹமீது அவர்கள் பெண்களை உயர்வாகப் போற்ற வேண்டும் என்பதை  ஒரு பாடமாகவே சொன்னார். தொடர்ச்சியான வேறு வேறு படித்தரங்களில் புரிந்து கொண்டது. பெண்கள் முழுமையானவர்கள் என்றும் ஒரு ஆண் கால்நூற்றாண்டு தவமிருந்து பெற்றுக் கொள்கிற மனநிலையை ஒரு பெண் இயல்பிலேயே பெற்றுக் கொள்கிறாள் என்பதுதான்.சில விதிவிலக்குகள் இருக்கலாம்.இந்த நாவல் பேகம் கதீஜாவின் சாமான்ய ஜீவித்தை நேர்கோட்டு முறையில் பெரும் வாழ்வாகப் படைத்திருக்கிறார். நாவலாசிரியர் எம்.எம்.நௌஷாத் தேர்ந்த கதைச் சொல்லியாகவும் அற்புதமான அந்த  மொழியைக் கையாள்வதில் நல்ல உயரிய பாங்கும் கொண்டு எண்ணற்ற புற அகவய உணர்வு நிலைகளை ஒரு சித்திரக்காரனைப் போல வரைந்து செல்கிறார்.அடர் இருளும் வெளிச்சமுமாய் மனிதர்கள் புழங்கும் இந்த கதை உலகம் நம் உணர்வுகளுக்குள் ஊடுபாவுகிறது.
ஐந்தாறு நாட்களாக எம்.எம்.நௌஷாத் எழுதியிருக்கிற கஸல் பதிப்பகத்தின் "பேகம் கதீஜாவின் சாமனிய ஜீவிதம்" நாவலை வாசித்து நிறைவு செய்திருக்கும் இந்த நேரத்தில் மேற்குறிப்பிட்டுள்ள கருத்தில் இப்போதும் என்னால் அட்ச்சர பிசகின்றிப் பொருந்திப் போக இயல்கிறது.

பேகத்தின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு என்று குறிப்பிடும் ஆசிரியர் இதனை அவருடைய பயிற்சி நாவல் என்று குறிப்பிடுகிறார்.உண்மையில் இது ஒரு தேர்ந்த நாவலாக இருக்கிறது. சாம்பல்மேடு என்கிற ஒரு கிராமத்தின் கதையாகவும்,பேகம் கதீஜாவின் வாழ்வோவியமாகவும் விரிந்து படரும் கதைஉலகில் பேகம் கதீஜாவைச் சுற்றிலும் கொஞ்சம் மனிதர்களும் மனுசிகளும் இருக்கிறார்கள்.அவர்கள் நாம் நினைப்பதுபோல அத்தனை சாதரண மனிதர்களல்ல. தாயைத் திண்டவள்,இப்படியே நாசமத்துப்போ எனத் திட்டும் உம்மும்மாவிலிருந்து, ஆண்களைக்  குசினிக்குள் வர இடங் கொடுத்தால் வீட்டில் தரித்திரம் வந்துவிடும் என எச்சரிக்கைவிடும் ஹாதிசுல்தானின் உம்மாவரையிலும், ஹாதிசுல்தானின் பிரியமான ஆட்டை நஞ்சூட்டிக் கொல்லும் ஸாஹிபின் உம்மா என நீளும் எல்லா கதைமாந்தர்களும் பேகத்தின் வாழ்வில் அனல் அள்ளி வீசிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் யானைகளுக்கென்று தனித்துவமான பாதை இருப்பதைப் போல, அவர்கள் அனைவரிலிருந்தும் பேகம் அசாத்தியமானதொரு  பெருவாழ்வு வாழ்கிறார். நல்லவர்களால் நிரப்பப்படாத சாம்பல்மேட்டுக் கிராமத்தில் கதீஜாவுக்கு துயரங்களுக்கு யாதொரு குறையுமில்லை.ஆனால் நீண்ட நெடு வாழ்வில் துயரங்கள்தான் பேகத்தின் முன்பு மண்டியிட்டு தோற்றுப்போகிறது. மதம்,பண்பாடு,சகமனிதர்கள் எனத் தொடர்ந்து அவள் வாழ்வில் நிகழும் எந்த ஒடுக்குதலாலும் பேகத்தை அசைக்க முடியவில்லை. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டும் மீறிக்கொண்டும் அவள் வாழ்கிறாள். இதன் நிமித்தமாகத்தான் "காட்டின் ஆன்மா மிடறு மிடறாக அவளுக்குள் ஊடுருவி அவள் வனமானாள் என்று பேகம் கதீஜாவின் பரம்பரையில் வெகுகாலம் கழித்துப் பிறந்த ஒரு கவிஞனால் எழுத முடிகிறது.
இந்த நாவலைப் பற்றி பேசவும் எழுதவும் மனம் சார்ந்த நிறைய விடயங்கள் இருக்கின்றன.இதன் செய்முறையும் காலத்தைக் கலைத்துப்போடும் வித்தையும் நல்ல வடிவமானது.எல்லா துயரங்களும் இடர்களும் பெண்களைத்தான் முதலில் வந்தடையும் என்பதுபோல பேகத்தின் மக்களின் வாழ்வின் வளர்பருவங்களில் அவர்கள் ஒவ்வொருவரும் கடந்து போகும் தருணங்கள் இந்த வாழ்வு அடுத்தடுத்த காலங்களை நம்மிடமிருந்து எப்படிக் கொண்டு போகும் என்பதின் படித்தரங்கள்.ஒவ்வொன்றும் ஒரு அச்சுகளில் இயங்குகிறது பேகம் இந்த நாவலின் மொத்த அச்சுகளின் ஆதாரமாக இருக்கிறாள்.எனவே அவள் நொறுங்க முடியாது.மகன் தன் இருப்பிலிருந்து இல்லாத ஒன்றை நோக்கி நகர்ந்து அவன் அதுவாகிப் போவதும்,இன்னொருமகன் தன்னிடமில்லாததை இருப்பவற்றிடமிருந்து எடுத்துக் கொள்ள முனைவதும் சமூக மதிப்பீடுகள் சகமனிதனை வேட்டை மிருகத்தின் சாயலிலாக்குவதை உள்வாங்க முடிகிறது.பேகம் கதீஜா உண்மையில் பேகம் கதீஜாவை வெறுத்துக் கொண்டிருக்கிறாள். எனவேதான் தன் பெண்மக்களில் ஒருத்தியை ஹாஜியாரின் மகனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு அங்கு கூலி வாங்காமல் பாத்திரங்களைக் கழுவிக் கொடுப்பவளாக மாறுகிறாள். இன்னொரு மகள் விசயத்தில் பேகத்தின் முடிவு இந்நாவலின் வெளியே இன்னும் நம்மை நீட்டிச் செல்கிறது.அது ஒருக்கிலும் நம்மை நாவலிலிருந்தோ,சாம்பல்மேட்டிலிருந்தோ வெளியேற விடாது தக்கவைத்துக் கொள்ளும்.இந்த தக்க வைத்தலின் வழியே நாம் அர்பாகானைத் தேடிக் கொண்டிருக்கலாம்.அர்பாகான் கதையில் மறைந்திருக்கிறான்.
அதிகாலை நான்கு மணிக்குத் துவங்கும் பேகத்தின் ஒருநாளின் துவக்கம் இயற்கையின் என்ன வகை மாற்றங்களுக்கும் உட்பட்டதல்ல.அவள் இந்த கடும் வேலைகளுக்கிடையேயும் முதலில் தஹஜ்ஜத் தொழுவாள் பின்னர் சுபஹூக்கு நேரம்பாலித்து அதனையும் தொழுவாள்.இதை இன்னொரு பார்வையில் வெவ்வேறு வடிவங்களிலான ஓராயிரம் பேகங்களின் கதையாகவும் அவதானிக்கலாம்.இப்படியாகத்தான்  நௌஷாத் இந்த நாவலை பிடித்து நம் மனதுக்குள் கட்டுகிறார்.நாம் அந்த நிலத்தையும் சில மனிதர்களையும் தேடி அலைபவர்களாகவோ அல்லது அதுபற்றி சிந்திக்க கூடியவர்களாகவோ நம்மை இந்த நாவலின் வாயிலாகக் கட்டமைக்கிறார்.
எழுத்துக்கள் காலந்தோறும் எவ்வளவோ பரிசோதனை முயற்ச்சிகளைப் பார்த்துக் கொண்டே வருகிறது.இசங்கள்,வாதங்கள் ஒன்றை ஒன்று கேலி செய்து கொண்டே அதனதன் போக்கில் எல்லாம் வளர்ந்த வண்ணமிருக்கிறது.நான் ஒரு எழுத்தாளனை தீவிர முன்தீர்மானம் கொண்டவனாகப் பார்க்கவில்லை. அவன் பொறியாளனைப்போல நிர்ணயிக்கப்பட்ட சூத்திரங்களை உபயோகித்து எழுத்தைச் செய்கிறவனுமல்ல.அவன் சமூகத்தை,மாந்தர்களை ஊடுருவிப் பார்க்கிறவன்.அவதானிக்கிறவன்.
அவனின் அவதானம் அசாத்திய திறன் கொண்டது.அசாத்திய திறன் கொண்ட அந்த பார்வையின் வழியே காலத்தோடு தனது அவதானிப்பிலுள்ள பாத்திரங்களைக் கலக்கவிடுகிறான். அவ்வாறான கலவையில் அவர்கள் அவர்களுக்கான வாழ்வை வரைகிறார்கள்.அந்த வாழ்வு எழுத்தாகிறது.இவ்வாறான எழுத்துகளிலுள்ள வாழ்வுதான் இந்த பிரபஞ்ச வாழ்வோடு பொருத்தப்பட்டு காலாகாலத்துக்கும் நின்று நிலைக்கிறது.நௌஷாத்தின் இந்த எழுத்து நின்று நிலைக்ககூடிய வகையிலுள்ளதாகவே நான் கருதுகிறேன்.

அன்புடன் 
எம்.மீரான் மைதீன்
03/05/2023

இந்த நாவலை சென்னை புத்தக திருவிழா அரங்கில் நான் வெளியிட குங்குமம் துணையாசிரியர் ரஞ்சித் பெற்றுக் கொண்டார்.உடன் எழுத்தாளர் ஷபி.

2 comments:

  1. வலை தளம் கண்டதில் மகிழ்ச்சி தொடர்ந்து பதிவுகளை எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி.முயற்சிக்கிறேன்.

      Delete

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...