Wednesday 25 October 2023

உமர் கய்யாம்

கியாஸ்உத்தீன்அபுல்ஃபத் உமர்இப்னுஇப்ராஹீம் அல்கய்யாமி
இது உமர் கய்யாமின் முழுப்பெயர்.

உமரின் புகழ் ருபாயத்தின் முலமே உச்சம் பெற்றது
பிர நூல்கள் 
1 மகாலத்-பில்-ஜபர்-வல்-முகாபிலா
2முஸதறாத்-கிதாப்-யுக்லிதாஸ்
3 லவாஸீம்-அம்சினா
4 ஸிச்-மாலிக் ஷாஹி
5 றிசாலா கௌன்-வல்-தக்லீப்
6 அல-வுஜீத்
7 குல்யாத்-அல்-வுஜீத்
8 மீஸான் அல்ஹிகம்
9 நௌரோஸ் நாமா

ஏ ஆர் ரஹ்மானின் 
முகாபிலா பாடல் நினைவுக்கு வருகிறது

கவிஞர், கணிதவியலாளர், மெய்யியலாளர், வானியலாளர் என பலதுறை வல்லுனராக இருந்தாலும்  . தனது கவிதைகளாலே உலகில் இன்றளவும்  அறியப்படுகிறார்.

கயாமின் ஓரு பாடலை பாருங்கள்.

அவர்களோடு ஞான விதையை
நானும் நட்டேன்
என்னுடைய சொந்தக் கையினாலே
அதை வளர்த்தேன்
ஆனால் கடைசியில்
நான் அறுத்த அறுப்பு இதுதான்
தண்ணீர் போல் வந்தேன்
காற்றைப் போல் போகிறேன்

#
நிபுணர்களிடத்தில்
உலகத்தின் தத்துவத்தை
விட்டுவிட்டு
எனனுடன் ஒரு மூலையில்
குந்தவா
நம்மைப் பரிகசிக்கும்
இந்த லீலையைக் குறித்து
பரிகாசம் செய்வோம்

Tuesday 24 October 2023

"ரோஜாமலர்"

உழன்று கொண்டே கிடக்கிறது மனம்.
           கவிஞர் கோ.கலியமூர்த்தி 

ரோஜாமலர் என்றொரு கதாபாத்திரம்
******************************************
       எழுத்தாளர் மீரான் மைதீன் குமரி மாவட்டத்துக்காரர். கலைஇலக்கியப் பெருமன்றத்தின் மூலம் பழகக் கிடைத்து நெருக்கம் கூடிய உறவுகளில் ஒருவர்.

    சிறுகதை, நாவல் இரண்டு வடிவங்களிலும் தொடர்ந்து இயங்குபவர். சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்த அவரது 'திருவாழி ' நாவல் அவரது உச்சபட்ச படைப்பு.

   அவரது அபாரமான சிறுகதைகள் பலவுண்டு. என்றைக்கும் என் மனதில் நீங்காத இடம்பிடித்து ரீங்காரம் இடும் கதை  'தங்கமுலாம் பூசப்பட்ட இரண்டு சிறகுகள் '.இந்தக் கதை  'பலாமரம் நிற்கும் புதிய வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறான் '
என்ற தலைப்புள்ள தொகுப்பில் இருக்கிற கதை.

   காமம் மனிதமனதின் அலைக்கழிப்பு மையமாகத் தொடர்ந்து செயல்படுவதையும்,தனித்த பெண்கள் கையறுநிலை நடுவிலும் சூடுகிற கம்பீரம் அவர்களுக்கு ஒரு ராஜகுமாரியின் சாயலை அளிப்பதையும், காமம் அரும்புகிற பதின்பருவ வயதுகளில் எல்லாச் சிறுவர்களையும் ஆண்களாக்குகிற வளர்ந்த பெண்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள்.அபிதா யமுனா சுகறா போன்ற இலக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையான கதாபாத்திரங்கள் அவை  என்பதையெல்லாம் நினைவில் மீட்டச் செய்கிற கதை அது.

   கதையில் வருகிற ரோஜாமலர் என்கிற வித்தியாசமான  பெயருள்ள வித்தியாசமான பெண் இளைஞி அல்ல,பேரிளம்பெண். சிறுவனான தன் மகனோடு, பற்றிப்படர கொழுகொம்பு தேடும் கொடிபோல் அலைக்கழியும் அவள் வாழ்வில் ஒருகட்டத்தில் வந்துபோகும் கொஞ்சம் ஆண்கள், அவர்கள் அவளைப்பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகள், மனிதமனத்தின் விந்தையான இயங்குதளங்கள், யாரும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட வாழ்வின் ஓட்டம் என அழகான நுட்பமான கதை அது.

   அதற்குப்பின் அதைவிடவும் சிறப்பான கதைகளை மீரான் மைதீன் எழுதியிருந்தாலும், பதின்பருவ ஈர்ப்பின் ரகசிய ருசிகளின் பரவசம் மிளிரும் ரோஜாமலர் என்னும் படிமத்தைத் தாண்டி நகரமுடியாமல், முதலில் வெகுநேரம் பிறகு 
வெகுகாலம் அந்தக் கதைவெளிக்குள் உழன்றுகொண்டே கிடக்கிறது மனம்.

Monday 23 October 2023

உணவு மற்றும் உணவகங்களின் ஜனநாயகம்



        சைவத்தை விட  அசைவம் உண்ணக்கூடியவர்களே உலகில் அதிகமாக இருக்கின்றனர்.
நான் சைவம் மற்றும் அசைவம் இரண்டுவகை உணவிலும் சம விருப்பமுடையவன்.குமரி மாவட்டத்தில் ஆறுநாள் மீன் உணவும் ஞாயிறு அன்று மட்டன் சிக்கன் ஒருவேளை வசதியில்லாத நேரமென்றால் குறைந்தபட்சம் கருவாடாவது சாப்பிட்டு விடுகிறோம்.இப்படியான ஒரு டிசைனில் உள்ள மாவட்டம் தமிழ்நாட்டில் வேறு எங்காவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.சில நகரங்களிலுள்ள பெரிய ஹோட்டல்களைவிட அங்குள்ள கையேந்திபவன்கள் நாட்களைச்  சிறப்பாக்கிவிடுகின்றன,குறிப்பாக நெல்லை,மதுரை,திருச்சி. 

உணவு என்பது எவ்வகையிலும் நமக்கு கெடுதல் செய்யாமலிருந்தால் போதுமானது.அவ்வகையில் மதுரை சுல்தானியா மனம்கவர்ந்த உணவகமாக நான் உணர்ந்திருக்கிறேன்.சென்னை வடபழனியில் விலை கொஞ்சம் அதிகமென்றாலும் கேம்பஸ் மற்றும் ஸ்ரீராகா நல்ல திருப்திகரமானவை.திருச்சியில் காமாட்சி உணவகம் அப்படியானது.இன்னும் அசைவத்தைவிட சைவத்தில்தான் அதிக விலையிட்டு கொள்ளையடிக்கிறார்களோ என்று உணர்ந்த தருணங்கள் நிறைய இருக்கிறது. 

கேரளாவில் உணவுவகைகள் ரொம்பவும் சிறப்பாக இருக்கும்.தமிழ்நாட்டின் விலையை ஒப்பிடுகையில் விலையும் குறைவு.இதன்காரணமாக அங்கு மேற்கொள்ளும் பயணங்கள் இன்பகரமானவை.அசைவம் சாப்பிட மிகச்சிறந்த இடமும் கூட.குறிப்பாக பீஃப் உணவை நம்பிச் சாப்பிடலாம். இந்தியாவுக்கு வெளியே என்றால் வளைகுடா நாடுகளைவிட அசைவ உணவு சாப்பிட தோதான இடமாக இலங்கையைக் குறிப்பிடலாம். 

நம்முடைய நாட்டைப் பொருத்தவரையில் பெரும்பாலான உணவகங்களில் தரம் பேணப்படுதல்,முறையான தயாரிப்பு முறைகளைப் பின்பற்றுதல் போன்றவைகளில் குறைபாடு நிறைய இருக்கிறது.சென்னையில் எண்பது ரூபாய்க்கு பிரியாணியும் கிடைக்கிறது இருநூறு ரூபாய்க்கு தயிர்சாதம் விற்பவர்களும் இருக்கிறார்கள்.ஆலந்தூரில் மிகப்பெரிய கடையாக இருக்கிற சுக்குபாய் கடை அசைவமும் ,வடபழனி துரைசாமி ரோட்டில் சிறிய அளவிலுள்ள சாத்தப்பன் கடை அசைவமும் ஒரு தொல்லையும் செய்யாத ஆரோக்கியமானவைகளாக கண்டிருக்கிறேன்.மனிதர்களின் அடிப்படையான உணவு என்பது இந்த உலகில் ஆகப்பெரும் வியாபாரமாக உருமாறியிருக்கிறது.இன்று உலகின் எல்லா நகரங்களிலும் சர்வதேச நிறுவனங்கள் நங்கூரமிட்டு இறங்கியிருக்கின்றன.ஆனாலும் நினைவுகளில் பசுமையாக கிடக்கிற ஒன்று,திருவண்ணாமலையருகேயுள்ள வேட்டவலம் என்னும் ஊரில் 2014ல் ஒரு சாதரணக் கடையில்(வீடுபோல இருந்தது)நாலு இட்டிலி சாப்பிட்டுவிட்டு எவ்வளவு என்று கேட்டதும் அந்த அம்மா ஐஞ்சு ரூபா கொடுப்பா என்றது இன்னும் மறக்க முடியவில்லை.எந்த உணவகமாக இருந்தாலும் இன்னும் மறக்கமுடியவில்லை என்ற சொல்லை மனங்களில் உருவாக்குவதே அது காலா காலத்துக்கு நின்று நிலைக்ககூடியது.வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகவேண்டும் என்று சொல்வதைப்போலவே இன்று பெரும்பாலான உணவகங்களின் இருப்பை புரிய முடிகிறது.இன்று பரவலாக பலரும்  உணவகங்களை வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை நாம் ஜனநாயகத் தன்மை மிக்கதாகப் பார்க்கலாம்.இதன் பின்னணியிலுள்ள கலகக்குரல்களை யாரும் மறுக்க இயலாது என்பதைத்தான் புதிய குரல்கள் வாயிலாக நாம் புரிந்து கொள்கிறோம்.ஆனாலும் கூட சொல்லவிரும்புவது தமிழ்நாட்டில் கேரளா மற்றும் கர்நாடகாவை ஒப்பிடுகையில் உணவகங்களில் விலை அதிகம்.அதிகம் என்பதைவிட கொள்ளை விலை விற்கிறார்கள் என்பதுதான் உண்மை.

Tuesday 10 October 2023

மாய எண்ணங்களுக்கு உயிர் தரும் எழுத்து.

மாய எண்ணங்களுக்கு உயிர் தரும் எழுத்து. 
ஒருவனை தனியாக ஒரு அறையில் அடைத்துவிட்டால் அல்லது பேச்சறவமற்று தனிமைப் பட்டுப்போகும்போது அவன் அகமனதோடு அதிகம் பேசிக்கொண்டிருப்பான். அந்த பேச்சு கற்பனையாக தொடங்கி கண்முன் காட்சிகளாக விரியும். அதையே தீவிரமாக அவனது மனம் சிந்திக்கத் தொடங்கும்போது அந்த சிந்தனைகளில் உள்ள நல்லது கெட்டதுகளில் தன்னையே ஒரு பாத்திரமாக உருவகித்துக்கொள்வான். சில நேரங்களில் அதில் தெளிவடையும் மனிதனும் உண்டு, மீண்டும் மீண்டும் அதிகமாக தன்னை குழப்பிக்கொண்டு அதிலேயே உழல்பவர்களும் உண்டு. இந்த விசித்திரமான நோய் மனிதனாக பிறந்த எல்லோருக்கும் உண்டு என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 

அந்த வகையில் எழுத்தாளர் மீரான் மைதீன் அண்ணனுக்கும் இது சற்றுஅதிகமாகவே இருப்பதாக எண்ணுகிறேன். ஏனென்றல் இப்படி இல்லாத ஒன்று குறித்து தன்மனதோடு கலந்து கற்பனையினால் அதற்குள் அவிழ்க்க முடியாத பல சூழ்ச்சிகளிட்டு பின்பு ஞானம் பிறந்தவனை ஒரு தெளிந்த குளத்தை காணுவதுமாதிரி அந்த கதாபாத்திரத்தை வாசகனுக்கு கடத்துவதில் வல்லவர். மேலும் அது வெறும் நல்ல மாதிரியான கற்பனையாகவுமிராது. அதற்குள் பேய், பிசாசு, பில்லி சூனியம் ,மாந்ரீகம், மூட நம்பிக்கைகள் என பலதும் இருக்கும்படியாக பார்த்து வார்த்தெடுப்பார். 

கொரோனோ காலத்தில் எல்லோரும் வீட்டோடு முடங்கின காலத்தில் அவரோடு ஒரு மெய்நிகர் சந்திப்பில் கலந்து கொண்டபோது இந்த கேள்வியை கேட்டேன். 

 "உங்கள் கதைகளில் இப்படி தனிமனித மனத்தோடு கூடிய உரையாடலும், அது மேலும் மூடநம்பிக்கையின் பொருட்டு நகர்வதாகவே கதை,நாவல்களில் தென்படுகிறதே?  இதற்கு பிரத்யேக காரணம் எதுவும் உண்டா?"

அதற்கு அன்று, "அப்படி தனிப்பட்ட எந்த காரணமும் இல்லை., சிறுவயதில் கேட்ட வளர்ந்த கதைகளின் வழி எனக்குள் அது பரவிவிட்டது என்றும் மேலும் அந்த உலகில் இல்லாத ஒன்றிற்கு உருவகம் கொடுத்து உயிர் கொடுத்து நடமாட விடுவது ஒருவித பிரயாசை அதை வாயால் சொல்லிவிட முடியாது ராஜா நீங்க தனியாக இருக்கும்போது அப்படி சிந்தித்து பாருங்கள் உங்களுக்கே புலப்படும்" என்றார். 

ஆனாலும் எனக்கு அன்று அந்த பதில் அவ்வளவு திருப்தியில்லை மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்த போதும் அதையே தான் கேட்டேன். அப்பொழுதும் சிரித்துக்கொண்டே 
"ராஜா பேய் பிசாசு என்றெல்லாம் ஒன்று இல்லை தான் ஆனால் அதுசார்ந்த கதைகளை கேட்டு தானே நாம் வளர்ந்திருக்கிறோம். மேலும் மனிதனுடைய கற்பனை திறன் தான் இந்த உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்தது ஆக, அதை எதனாலும் வெல்லவே முடியாது எனும்போது அந்த மாதிரியான மனிதர்களையும் அவர்களின் வெள்ளந்தி தனத்தையும் பரவவிடுவதில் தவறில்லையே" என்றதாக ஞாபகம் பின் வேறு பேச்சுக்குள் மூழ்கிவிட்டோம். 

அது உண்மை தான் ஒருவன் தனிமைப்பட்டு போகும்போது தான் இவ்வாறான எண்ணங்கள் தலைதூக்கும். 

கடந்த நான்கைந்து நாட்களாக வைரஸ் காய்ச்சல் படாதபாடு படுத்திவிட்டது. தனிமை படும்போது உண்டாகும் எதிர்மறையான எண்ணங்களைவிட உடல் நலிவுற்று கிடக்கும் போது உண்டாகும் எண்ணங்கள் மிக கொடூரமானதாக இருக்கும். அப்படியான எண்ணங்களில் தவிர்க்க முடியாதது நாம் இல்லாமல் போய்விட்டால் என்ன ஆகும்? எது நடக்கும் எது நடக்காது?  நமக்கு பிறகு நம் சார்ந்தவர்களை யார் பார்த்துக்கொள்வார்கள் போன்ற காரணமுள்ள எண்ணங்களும் உண்டு. இப்படியான விதண்டாவாத எண்ணங்களோடு மல்லுக்கட்டிக்கொண்டு காய்ச்சல் அவஸ்தையோடு புரலள்வதைவிட ஐந்தாறு மாதங்களாக தொடாத வாசிப்பை தொடங்கலாமென அலமாரியிலிருந்த புத்தக அடுக்கிலிருந்து எடுத்தது தான் 'சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்' சிறுகதை தொகுப்பு. 

அந்த தொகுப்பிலுள்ள பதினோரு கதைகளில் பலகதைகள் மேற்சொன்ன எதிர்மறையான எண்ணங்களால் என்னென்ன நிகழ்கிறதென்று விளக்குபவைகளாகவே உள்ளது. எங்கோ ஒரு மூலையில் கேட்பாரற்று கிடக்கும் கயிறுக்குவியல்களுக்கு பின்னால் என்ன கதை இருந்துவிட போகிறது உங்களுக்கோ எனக்கோ? ஆனால் படைப்பவன் கண்ணில் பட்டால் அதற்கு பின்னால் ஆயிரமாயிர கதைகளை புனைய முடியும். அதிலும் அந்த கயிற்றுக்குவியலுக்கு பின் இறுகி உயிர்நீத்த கழுத்துகள் கூட அமானுஷ்யமாக வந்து உங்களோடு பேசும். 

வெளிநாட்டில் பணிநிமித்தமா சென்றிருப்பவன் தினமும் வீட்டிற்கு தொலைபேச டெலிபோன் பூத்திற்கு சென்றால் அங்கு தொங்கும் பல்வேறு நாட்டு கடிகாரங்கள் பல விநோத சித்திரங்களை உங்கள் கண்முன் நகைச்சுவையாக வரைந்துவிட்டு போகும். 

சாதாரணமாக வீட்டின் வாசலில் உள்ள ஒரு மாதுளை மரம். அதுவும் அவர் மனைவிக்கு யாரோ வாங்கி வந்த பழத்திலிருந்து விழுந்த வித்திலிருந்து முளைத்தது. அதனால் இத்தனை ஆண்டுகளுக்குபின் வீட்டின் உரிமையாளருக்கு தூக்கம் கெடுகிறது. தன் சாயங்கால சாயாக்குடி சகாக்களோடு கலந்தாலோசித்து காரணம் 'தென்றல்' தான் என கண்டுபிடிக்கிறார். தென்றலை தீர்த்துக்கட்ட வேண்டுமென்று திட்டம் தீட்டுகிறார் என்றால் உங்களால் சிரிக்காமலிருக்க முடியுமா?. சிரிப்போடும் அதே சமயம் ஒரு சீரியஸ் டிஸ்கஷனோடும் கதை செல்லும். 

இப்படியாக ஊசிகாந்தம் உயர்ந்த மலைப்பிளவின் வழி, மத்தது, குப்பையாண்டி பிள்ளையின் சுவர், உக்கிர ஒலி,கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன் வாய்கள், ஒருபாடு கதைகள் போன்ற கதைகள் அதனதன் வடிவத்திலும், கருப்பொருளிலும் தனித்தன்மை வாய்ந்தவை. குப்பையாண்டி பிள்ளையின் சுவர் கதையும், கலர் வேலைப்பாடுகளுடன் கூடிய டிசைன் வாய்கள் கதையும் கற்பனை திறனின் உச்சம் என்றே சொல்லலாம். ஒரு சுவர் பேசினால் அது எத்தனை ஆண்டுகளின் கதையை தன்மேல் ஏற்றியிருக்கும் என்பதும்- மனிதர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு வாயை பொறுத்திக்கொண்டு பேசுகிறார்கள் என்பதுவும் வேறு வேறு கோணங்கள். ஆனால் இருவரிடத்திருந்தும் வருவது சமகால வார்த்தைகள். மிக நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு நல்ல தொகுப்பை படித்த திருப்தியை இவ்வளவு அதிகமாக பதிவு செய்துவிட்டதாகவே நினைக்கிறேன். ஆகையால் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்  புத்தகத்தை நீங்கள் வாங்கி படித்து உண்மையை தெரிந்துகொள்ளுங்கள். 

பின் குறிப்பு:- மாய எண்ணங்களை போலவே ஒளி,ஒலிகளை வாசகனுக்கு கடத்துவதிலும் எழுத்தாளர் மீரான் மைதீன் வல்லவர் அந்த எண்ணங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கும் ஒளி, ஒலிகளின் அவருடைய தீராக்காதல். அவ்வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சேலம் வருகையின் போது அறையில் வைத்து இந்த படத்தை நான் எடுத்தேனென்றாலும் இந்த ஜன்னோலரம் எடுங்க ராஜா நல்ல ஒளியா இரிக்கு என்று அவர்தான் சொன்னார். புத்தக விபரம் முதல் கமெண்டில் தருகிறேன்.❤️ 

பேரன்புடன், 
   -சேலம் ராஜா 
        -10-10-23.

Monday 2 October 2023

ஒரு வாசிப்பனுபவம்

மீரான் மைதீனின் நாவல் ஒச்சை - வாசிப்பு அனுபவம் 

மீரான் மைதீனில் கதை மாந்தர்கள் எல்லோருமே அவரவர் நிறைகுறைகளோடு தான் வாழ்கிறார்கள். கதையும் கூட கதாநாயகன், நாயகி என்று இருவரை மட்டுமே  சுற்றி வருவதில்லை. கதைப் போக்கில் , அது ஓர் ஊர்க் கதையாகவும் , அந்த மனிதர்கள் அனைவரின் கதையாகவும் உறுப்பெறும் மாயம் நிகழ்கிறது. இது அவருடைய எல்லா நாவல்களிலும் காணக்கூடிய பொதுவான போக்கு. 

ஒச்சை நாவலும் விதிவிலக்கல்ல. 

அன்று காலை வழக்கம் போல் சலாம்து சாயிப்பின் டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் வருவதும் போவதுமாக , டீ குடித்துக் கொண்டே ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த குருசுமிக்கேலின் மகன் சைக்கிளில் இருந்து காலை ஊன்றியபடி , ஓய் சாயிப்பு.. உங்களுக்கு ஒண்ணும் தெரியாதா என்று ஆரம்பிக்கிறான். சொல்லுலே .. தாயழி என்று சலாம்து சாயிப்பு சத்தம் போட ,  கிளவுஸ் கம்பெனிக்க பின்னாடி கோயாவக் கொன்னு போட்டிருக்கானுவ. கத்திக் குத்து .. ரத்த வெள்ளத்தில செத்துக் கிடக்கான் என்று சொன்னவுடன் ஊர் மக்களுக்கு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. 

போலீஸ் விசாரணை சூடு பிடிக்கிறது. 

மோப்பம் பிடித்து ஓடிவந்த போலீஸ் நாய் கோலப்பன் புரோட்டாக் கடை ஷட்டரைப் பார்த்து குரைத்து விட்டு அங்கேயே படுத்துக் கொள்கிறது. கோலப்பன் மீது கொலையின் சந்தேக நிழல் படிகிறது. 

நள்ளிரவில் தன்னுடைய கடையைச் சாத்திவிட்டு , வீட்டுக்குச் சென்று  குளித்து படுக்கைக்கு செல்ல 4 மணி ஆகிவிடும் கோலப்பனுக்கு. நம்பிக்கையும் நாணயமும் இரு கண்கள் என்று எழுதப்பட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர் நெட்டையின் விசிட்டிங் கார்டை கடுப்பில் தூக்கி வீசப்போக அது கொலையுண்ட கோயா, அன்றைய இரவில் நண்பர்களான பூமணி, மோசே உடன்  மது அருந்திய இவனுடைய புரோட்டாக் கடையின் பின்புறம் கண்டெடுத்த போலீஸ் , கோலப்பனையும் வளையத்துக்குள் சிக்க வைக்கிறது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவன் வாழ்க்கை போலீஸ் , விசாரணை என்று தடம் புரள்கிறது. 

கொலையுண்ட கோயா ஒரு சுவாரஸ்யமான கேரக்டர். எல்லாவற்றையும் நுட்பமாக கிரகிக்கும் ஆற்றல் படைத்தவன். திடீரென்று பேரறிஞர் அண்ணா, மாப்பிள்ளமார் கலகம், குமர கோயில் நுழைவுப் பேராட்டம் பற்றியெல்லாம் வரலாற்றுத் தரவுகளோடு பேசுவான். மிதமான போதையில் கோயாவின் பேச்சு பெரும் ஞானம் கொண்டவனின் பேச்சு போல் இருக்கும் என்று எழுதிச் செல்கிறார் மீரான். அது சரிதான் என்று பல இடங்களில் நிரூபிக்கிறான் கோயா. 

ஒரு முறை காசு, பணம் பற்றி ஐயப்பனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது போகிற போக்கில் கோயா, மானங் கெட்ட பயலுவளுக்குதான் காசு பணம் பெரிசு ஐயப்பா என்று சொல்வான். 

அதே போல் ஆட்டோ டிரைவர் பஷீரின் வேணி மேல் கொண்ட ஒரு தலைக் காதல் தோல்வியில் முடிந்தவுடன் ஆறுதல் சொன்ன கோயா, கவலைப்படாதே ... உனக்கென்று ஒரு சீதேவியோ மூதேவியோ வருவாள் என்று சொல்லிட்டு , காதல் ஒரு முடிவுறாத பயணம் என்பான். கேட்டுக் கொண்டிருந்த சிந்தா ஷேக்மதார், காதல் ஒரு முடிவுறாத பயணம்.. அருமையான டைட்டில் என்று பாராட்டுவான். 
மரியம் பீவி என்று தன் அன்னையின் பெயரில் இருந்த ஆட்டோவின் பெயரை திரிவேணி என்று பிரியப்பட்ட பொண்ணின் பெயரில் மாற்றிக் கொண்டு,  காதல் தோற்றவுடன், ஆட்டோவில் அடிக்கடி கம்பன்  ஏமாந்தான் பாடலை ஒலிக்க விடுவான். கேட்டுக் கொண்டிருந்த சங்கரன் மாமா, டீக்கடை சலாம்து பாயிடம், தாயழி , இவன் ஏமாந்துட்டு  கம்பன தெருவுல இழுத்து விடுறான் பாரு என்று சொல்லும் போது சலாம்து பாயோடு சேர்ந்து நமக்கும் சிரிப்பு வருகிறது. சலாம்து பாய், சங்கரன் மாமா கல கல கூட்டணி ஊர் நடப்புகளைப் பற்றி இப்படி நச்சென்று  கமெண்ட் அடிப்பது நாவல் முழுக்க பரவிக் கிடக்கிறது. எந்த ஒன்றையும் வலிந்து திணிக்காமல் , கதாபாத்திரங்களின் உணர்வுப் போக்கிலேயே கதையை நகர்த்துவதும், நகைச்சுவை உட்பட அனைத்து உணர்வுகளையும் நுட்பமாக கடத்தக் கூடிய எழுத்துக்குச் சொந்தக்காரராக மீரான் திகழ்கிறார். 

கோயா, மனைவி சைனபாவைத் தள்ளி  வைத்து விட்டு , ஏதோ தொடுப்பில் இருப்பதாக ஊருக்குள் பேச்சு. மனோரஞ்சிதம் என்கிற அந்த ' நொண்டிச் சிறுக்கி ' , இடுப்புக்குக் கீழே கம்பியாய் சூம்பிக் கிடக்கும் கால்களோடு , ஆற்றங்கரைக் குடிசையில் கள்ளச் சாராயம் விற்று வயிற்றைக் கழுவுபவள். ஒரு முறை அவளுடைய குடிசை தீப்பற்றி எரிந்த போது, ஊரே வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, கோயா தான் உயிரைத் துச்சமென மதித்து அவளைக் காப்பாற்றியவன். கருணை உள்ளத்தோடு அவன் செய்யும் உதவிகளைப் பார்த்தால், அந்த உறவை எப்படிக் கொச்சைப் படுத்த முடியும் என்று தெரியவில்லை. 

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு கன கச்சிதம். ஒரே ஒரு காட்சியில் வரும் கேரக்டர் கூட மனதில் ஆழமாய் பதிந்து விடுகிறது. நிஜ மனிதர்கள் போலவே மனதில் உலவ ஆரம்பித்து விடுகிறார்கள். வரிகளை வாசிக்க வாசிக்க அவர்களுடைய அனுபவங்கள் அப்படியே நெஞ்சில் உயிரோவியங்களாக நிலை பெற ஆரம்பித்து விடுகின்றன. 

ரியல் எஸ்டேட் புரோக்கர் ஐயப்பனும் , கோயாவும் ' ஒண்ணாம் கிளாஸில் ' இருந்தே கூட்டாளிகள். ஓமனில் இருந்து இரண்டு மாத விடுமுறையில் வந்த ஜின்னாவுக்கு இடத்தைக் காட்டி, நாலு நல்ல வார்த்தை சொல்லி அவனுக்கு எடவாடு முடித்துக் கொடுத்தால் , கையில் கொஞ்சம் பணம் புரளும். லேசாக ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என்னும் ஆவலாதியில் இருவரும் போகும் போது, வழியில் சந்தித்த கோயாவிடம் சிறிது நேரம் உரையாடி விட்டுத்தான் செல்கிறார்கள். இப்படித்தான் நாவல் ஆரம்பிக்கிறது. 

அடுத்த நாள் காலையில் பார்த்தால் கோயா குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஆடிப் போகிறான் ஐயப்பன். 

அப்போது சதாசிவனும், ராமச்சந்திரனும் ஐயப்பனிடம் மெல்லக் கேட்டனர் , செத்தவன் சாயப்பு, நான் வேணும்னா சுப்ரமணியத்துட்டப் பேசவா என்று எதற்கோ அடிபோடுவதைப் போல் கேட்கிறான். அவனுடைய விபரீத எண்ணத்தை உணர்ந்த ஐயப்பன் , " எங்க எழவு உழும் ,  ரத்தம் குடிக்கலாம்னு நடக்கியளாலே " என்று விரட்டி விடுகிறான். போகிற போக்கில் , உரையாடல் வழியாகவும், நிகழ்வுப் போக்குகள் வழியாகவும் அரசியல், சூழல் கேடு, சமய அடிப்படைவாதிகள் போற்றிப் பாதுகாக்கும் நம்பிக்கைகள், சமூகச் சீரழிவுகள் என எல்லாவற்றின் மீதும் இது போன்ற நுட்பமான விமர்சனங்களை பொதிந்து வைத்துக் கொண்டே போகிறார் மீரான். 

போலீஸின் சந்தேக நிழல் ஐயப்பன்  மீதும் விழுகிறது. விசாரணைக்கு அழைத்துப் போக சுசீலன் என்கிற காவலர் மஃப்டியில் வந்து ஐயப்பனிடம் , எங்கயாவது தோப்பு வெலைக்குக் கிடந்தாச் சொல்லுங்க ... வாங்க தள்ளிப் போய் பேசுவோம் என்று நைசாக அழைத்துப் போகிறான். ஆட்டோ அருகில் வந்ததும், ஏறுலே வண்டில என்று அதட்டுகிறான். என்ன தொனி மாறுகிறதே என்று உச்ச கோபத்தில் பதற்றமான ஐயப்பன், யாருலே நீ? எதுக்குலே ஆட்டோல ஏறணும் என்று கேட்கிறான். ஆங், உன் அம்மைக்கு மாப்பிளை பாக்கதுக்கு ... ஏறுலே தாயழி என்று கழுத்தில் கைவைத்து ஆட்டோவுக்குள் தள்ளுகிறான். 

' அம்மைக்கு மாப்பிள பாக்கதுக்கு ' என்ற வார்த்தையை தாங்க முடியவில்லை ஐயப்பனால். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அந்த வார்த்தைகள் சம்மட்டி அடிபோல் இறங்கிக் கொண்டே இருந்தது. கற்பனையில் ஒருவன் சன்னம் சன்னமாக கொன்று போடக் கூடிய வார்த்தைகள் எத்தனை துரதிர்ஷ்டமானது என்று பதிவிடுகிறார் மீரான்.  வாழ்வின் எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பம் , "என்ன மயிரப் புடுங்குன வாழ்க்கைடா " என்று அங்கலாய்ப்பாய் இருந்தது ஐயப்பனுக்கு. 

விடிய விடிய தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தவன், அதிகாலைப் பள்ளிப் பாங்கோசை கேட்டு எழுந்து பாயில் உட்காருகிறான். ஐயப்பனுக்கு அதன் அர்த்தங்கள் எதுவும் புரியவில்லை என்றாலும், குழந்தைப் பருவத்தில் இருந்தே கேட்டு வரும் அந்தப் பாங்கின் சத்தம் இனிமையாக இருந்தது. பாங்கு முடிந்ததும் சிவன் கோவிலில் பாட்டு போட்டார்கள் என்று எழுதுகிறார் மீரான். 

சட்டென்று எழுந்து குளித்து விட்டு, கோயாவின் அடக்க ஸ்தலத்துக்குப் போகிறான். நேற்று முந்திய காலையில் சிரிக்கச் சிரிக்கப் பேசிய கூட்டாளி இப்போது செத்து மண்ணுக்குள். ' மனிதன் காலத்தால் எதில் வளர்த்திருக்கிறான் என்றே தெரியவில்லை ' என்னும் யோசனையோடு அடக்க முடியாமல் அழுகை பீறிட்டு வெடிக்கிறது. கபர்ஸ்தானத்துக்கு அழைத்து வந்தவனால் இவன் இப்படி அழுவதை நம்ப முடியவில்லை. திரும்ப வரும் போது , இந்த உலகத்துல எங்கயாவது மனுஷன் நல்லவனாகவும் இருக்கான் என்று பலவிதமாக பேசிக்கொண்டே வருகிறான். 

நண்பனின் கொலை, போலீஸ் விசாரணை எல்லாம் அதுநாள் வரை தன்னுடைய ' சுய அசைவுகள் மேல் எழுந்து விடாதபடி தனக்குத் தானே போர்த்திக் கொண்ட வலையில் ' இருந்து மெள்ள மெள்ள விடுபடுபவனாகக் காட்சியளிக்கிறான் ஐயப்பன். 

ஆரம்பத்தில் துப்பறியும் மர்ம நாவல் போல் தோற்றம் கொண்டாலும் , சகல மனித உணர்வுச் சுழிகளாய் நடக்கும் நதிபோல் சலசலக்கிறது நாவல். 

விசாரணைக்குச் செல்லும் கணவன் ஜின்னாவுடன் செல்லும் மனைவி உசைமா, அவனைக் கலாய்ப்பதெல்லாம் தரமான நகைச்சுவை. 

போலீஸ் விசாதனைக்குப் பிறகு ஆறு மாதத்தில் மரணித்த பூமணி, நோய்வாய்ப்பட்ட மோசே, இன்சா அல்லா என்று சொல்லிவிட்டு , சிரித்துக் கொண்டு, என்ன சரியாச் சொன்னேனா என்று கேட்கும் தடிக்காரன்கோணம் வைத்தியர், கிளீனிக்கின் நடுத்தர வயதுப் பேரழகி, வெட்டி பந்தா காட்டும் ஜமா அத் தலைவர் அன்வர், குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாளாய் வாழ்வைக் கழிக்கும் மோதினார், விசாரணை பயத்தில், சிவம்பிள்ளை பண்ணையார் வயலில் நாத்தங்கால் பிரிச்ச வாமடையில் நீர் ஓடுவது போலப் போயிட்டே இருக்கே என்று மூத்திரம் பெய்யும் நெட்டை என்றழைக்கப்படும் ரசாக் என்கிற ரியல் எஸ்டேட் புரோக்கர், கடைசியில் கொலையாளி என்று கைது செய்யப்படும் கோயாவின் தம்பி காஜாவின் மீதான குற்றப்பத்திரிக்கையில் உள்ள ஓட்டைகளைப் புட்டுப் புட்டு வைக்கும் நடேசன் வக்கீல், ஜமாஅத் தலைவர் அன்வரின் வெற்றுச் சவடால்களை அம்பலப் படுத்தும் ஆட்டோ டிரைவர் பஷீர், இன்ஸ்பெக்டர் ராயன், காவலர் ரேணுகா என்று எல்லோரும் உயிர்ச் சித்திரங்களாக உலா வருகிறார்கள். 

ஒச்சை என்ற மலையாளச் சொல்லுக்கு சந்தடி , இரைச்சல், கலகலப்பு என்று பொருள். 

கோயா கொலையானவுடன் நின்று போன பள்ளி முக்கு ஒச்சை, காஜா விடுதலை ஆன சிறிது காலத்தில் மீண்டும் வந்ததாகக் கதை முடிகிறது. 

ஜி.நாகராஜன் , வைக்கம் முகம்மது பஷீர் போல், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களுடைய சமூக நியதிகளை அல்லது நியதி மீறல்களை அன்பும் கருணையும் கொண்டு அவர்களின் சமூக, பொருளாதார நிலையில் இருந்து பார்க்கும் பார்வையில்தான் மீரான் மைதீனின் படைப்புகள் இருப்பதாக உணர்கிறேன். 

மனித நேயமே மீரான் மைதீனின் எழுத்தின் அடிநாதம். அதை மனித நேயம் என்றாலும் சரி, பேரன்பு என்றாலும் சரி, இவருடைய எழுத்துக்களும், கதை மாந்தர்களும் சாதி, மத, இன, மொழி என்ற எந்த மன மாச்சரியங்களும் இல்லாத வாழ்க்கை நெறியைத்தான் முன்வைப்பதாகப் படுகிறது. 

எந்த மனநிலையில் உள்ள வாசகனுக்கும் இந்த உணர்வு ஏற்படும் என்று நினைக்கிறேன். 

நல்ல இலக்கியப் படைப்பு இதைச் சாதிக்கும். 

' ஒச்சையும் ' சாதித்திருக்கிறது. 

அன்புடன், 
காமு 

வெளியீடு : புலம் 
பக்கம்      : 164 
தொடர்பு  : 98406 03499

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...