Tuesday, 2 May 2023

திருவாழி" பார்வை 1

 திருவாழி, வைராக்கியம் மிகுந்த பெண்களின் கதை

கவிஞர் கலியமூர்த்தி

திருச்சி

-------------------------

மீரான் மைதீனின் திருவாழி எதார்த்தவாத வடிவத்திலான நேர்கோட்டுக்  கதைசொல்லல் முறையிலானதுதான் எனினும், காலத்தினூடே முன்பின்னாகப் பயணிக்கும் அதிசயமும், வாழ்க்கை குறித்த பன்முக நம்பிக்கைகள் உணர்வுநிலைகள் விவாதங்கள் கொண்ட கதையாடலாலும், கன்னியாகுமரி வட்டாரவழக்கின் ருசிமிகுந்த உரையாடல்கள் பகடிகளாலும் விநோதத்தன்மையும் சூடியஓர் படைப்பு.


    நல்ல கலைமனம் படைத்த ஒரு உழைப்பாளியால் ஒன்றை அற்புதப்படுத்திவிட முடியும் என்று பக்கம் 

292 ல் ஒருவரி வருகிறது.

    அந்த அற்புதப்படுத்தலைத்தான் மீரான் கதையில் நிகழ்த்தியிருக்கிறார். 

    பல்வேறு இயங்குதளங்கள் மையப்புள்ளிகள் கொண்ட இக் கதைப்பரப்பில், வைராக்கியம் மிகுந்த பெண்களின் கம்பீரம் முக்கிய விசை.

    கணவனை விவாகரத்து செய்யும் சிந்து தனக்கான அடுத்த துணையைத் தேர்வுசெய்யும் துணிச்சல் அவளது ஞானம் கொண்ட அணுகுமுறை பாத்திரவார்ப்பு ஒருபுறம் எனில்

    அண்ணாச்சியால் அடித்துத் துவைக்கப்பட்டுத் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு அவமானப்படுத்தப்படும் அகிலனைக் காதலிக்கும் தங்கம், அவனை மேம்படுத்தி வெளிநாடு போய்ப் பொருளீட்டச்செய்து கம்பீரத்தையும் கௌரவத்தையும் மீட்டெடுத்து அண்ணாச்சியின் முகத்தில் பணத்தை வீசியெறியும் கம்பீரம் வியக்க வைப்பது.

    அவ்வப்போது கதையில் ஒரு துணைப்பாத்திரம் என்ற அளவில் மட்டுமே வருகிற பிராட்டி என்கிற அந்தக் கதாபாத்திரம், தனது பின்னிளமைப் பருவம் தொட்ட கம்பீரமான உதிரிப்பாட்டாளி.

    என்னையெல்லாம் எவனும் வச்சிக்க முடியாது, நானா இரக்கப்பட்டு யாரையாவது வச்சிகிட்டாதான் உண்டு என்று சொல்கிற அந்தக் கம்பீரம் 'ஆண்களுக்குப் பீதியூட்டுவது.


    இந்த உலகத்தில் ஒரு அம்மாவின் பிரார்த்தனையை மிஞ்சிய பேயுமில்லை சாத்தானுமில்லை என உறுதியாகச் சொல்கிற அன்சாரியின் அம்மா அஞ்சாதே மகனே என்கிறாள். 

     கதையின் மைய மர்ம முடிச்சை அவிழ்க்கக் கிளைமாக்ஸில் காரில் வந்திறங்கும் சூளாமணி, அடடா! அவர்தான் கதையாடலின் உயிர்.

   கணவன் இல்லாமல் இரண்டு சிறுபிள்ளைகளோடு திருவாழிக் கட்டடத்தின் 5ம் எண் கடையான பட்டணம்சாயபுவின் ஹோட்டலில் தண்ணீர்கோரி ஊற்றுகிறவளாகச் சேரும் சூளாமணி, அவரது கருணை அன்பின் மீதான காதலால் அவரது மனைவியால் விளக்குமாற்றால் அடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு

வெளியேறும் அந்தப் பெண், கதையின் முடிவில், அந்தத் திருவாழிக் கட்டடத்தையே கோடிரூபாய்க்கு வாங்குகிற தன் மகனோடு காரில் வந்திறங்கும் கம்பீரம் கதையையே காவியத்தன்மை வாய்ந்த  கம்பீரமான அழகியலோடு முடித்து வைக்கிறது. 

    தாய்த்தெய்வம் என்கிற மூலப்படிமமாக

வைராக்கியம் மிகுந்த பெண்கள் சவால்களை வென்று சாதிப்பதைக் கொண்டாடுவதையே மையமாய்க் கொண்டிருக்கிறது திருவாழி.

   

No comments:

Post a Comment

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...