Monday, 12 August 2024

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன்
சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன்.

ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வாசித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ கொஞ்சம்  படித்திருக்கிறேன்.ஞானம் தொடர்பான சூஃபிய வாசிப்புகளே அதிகம். கொஞ்சம் மார்க்ஸிய வாசிப்புமுண்டு. 

இன்று காலையிலேயே நண்பர் ஒருவர் காமம் பற்றி பேச்சுக்கு கொண்டு போய்விட்டார்.அதன் பேச்சு தொடர்பாகவே இந்த பதிவு.மேலும் சிலரும் கலந்து கொண்டனர்.இந்த போன்ற பேச்சுக்களே எல்லோரையும் ஒருசேர ஆர்வப்படுத்தும் விசயமாக இருக்கிறது. காமம் பற்றி எழுதுவதில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. ஆனால் வாசிப்பதில் யாருக்கும்  தயக்கமில்லை.ஒருவேளை ரகசியமாக வாசித்துவிடக்கூடியவர்களாக இருக்கிறோம்.மலையாளத்தில் காமுகன், காமுகி என்ற  சொல்லின் தமிழ் பொருள் காதலன்,காதலி என்பதாக இருக்கிறது.காமம் உடல்,மன இன்பநுகர்ச்சியோடு மட்டும் சாராமல் அது ஒரு படைப்பாற்றலைக் கொண்டிருப்பதால் அற்புதமானதுதான். காமம் மனிதன் இன்னும் கண்டடையாத ஏராளமான ரகசியங்களைக் கொண்டிருக்கிறது.இல்லற நூல்களான
காமசூத்ரா,அனங்க ரங்கா,
மானச லோசா,ரதி ரகசியங்கள்,
ரதி மஞ்சரி,ரதி ரத்ன மாலிகா,
ரதி லோலினி ,ரச மஞ்சரி,மணக்கும் தோட்டம்,காந்தர்வ சிந்தாமணி,அபிலாச தீர்த்த சிந்தாமணி,சிருங்கார ரசம்,திருக்குறளின் மூன்றாம் பால்,சங்கத் தமிழின் அக இலக்கியங்கள் மற்றும் நவீன கால தந்த்ராஅறிஞர்களின் நூல்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் கிடைக்கின்றன.இதுபோக இணையத்திலும் மலையளவுக்குக் குப்பைகூழங்களாகவும்
சில நல்லதாகவும்
காணக்கிடைக்கிறது.

ஞானமாமேதை பீர்முகம்மது அப்பாவின் ஞானமுச்சுடர் பதிகங்களில் வருகின்ற "அறைதிறப்புப் பதிகத்தின் பனிரெண்டு பாடல்களும் இதன்வகை பேறறிவாக இருக்கிறது."விந்துகலை செண்டுதனம் விற்பன மெழும்பிவர
விஞ்சறை திறப்ப ரெவரோ..."
இன்னொரு பாட்டில் பீரப்பா

கன்னி மாமயில் சொர்ன மாகிய கமல அல்குல்வி ரிந்திடும்
சொர்ன மாரி சொரிந்திடும் மொரு வட் சரத்தினது பெருமையால்
வன்னம் பாடியே கொஞ்சுமா மொழி யாஹூயாரப்ப லாலமீன்
எண்ணி யாடி யிரங்கி நின்றிடு மேக மில்முல்இன்  ஸானிலே ..   ...

மகாகவி பாரதி சொல்கிறார்
"பாதி நடுக் கலவியிலே காதல் பேசி பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே...என்று.

தொடர்ந்து கண்டு வரும் நிர்வாணத்தால்(Nude)துவண்டுபோகும் மனிதன்,பரஸ்பரம் ஆணோ பெண்ணோ வேட்கையின் பொருட்டு உடலில் மட்டும் புகுதல் சற்று துயரமானதும்கூட.ஆன்மாவுக்குள் புகும் முறையாலே தனது காமத்தை  மனிதன் கடக்க இயலும்.ஓஷோவிடம் ஒருமுறை கேட்கப்பட்ட கேள்வி பதில் இப்படி இருந்தது.ஏன் மனிதர்கள் திரும்பத் திரும்ப உடல் உறவில் ஈடுபடுகிறார்கள்?.அவர்கள் ஒருபோதும் ஒழுங்காக ஈடுபடவில்லை அதனால்தான்.
நாம் சிரிக்கலாம் ஆனால் இது உண்மையுங்கூட.

ஒரு நண்பர் சொன்னார் "எனக்கு காலையில் டீ குடித்தால்தான் கக்கா போகுமென்றார்.இன்னொரு நண்பர் தாம்பத்திய உறவு கொண்டால்தான் தன்னால் இரவு தூங்க முடிகிறது என்றார்.மனிதன் பெரும்பாலான விசயங்களில் தனது அறிவை இவ்வாறுதான் வைத்திருக்கிறான்.நமக்கு தேயிலைபற்றியும் தெரியாது,காமம் பற்றியும் தெரியாது.கழுதைகள் தொடர்ந்து இடைவிடாது பொதிகளை சுமந்தவாரே இருக்கின்றன.
பாரசீக அறிஞன் ராமீனின் ஒரு வார்த்தை இவ்வாறு இருக்கிறது.
"சாணைப்பிடித்த கூர்மையான வாள் எனக்கு நேராக வரும் போது
வெளிப்படும் என் காதலைக் குறித்து யோசனையற்ற
உன்னால் அசிரத்தையாக வீழ்த்தப்படுகிறேன்" .




இந்த பேச்சும் இது தொடர்பான செய்திகளும் இன்னும் எழுதலாம் .
இதையொட்டிய முகநூல் பின்னூட்டங்களையும் இணைத்துள்ளேன்

ஜெயசீலன் கணபதி.

ஓஷோ நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மகத்தான சிந்தனையாளன். நமது வழமையான சிந்தனை முறைமைகளை கட்டுடைப்பதில் தலையாய மனிதன் அவர். ஓடும் நதி கணந்தோறும் தன்னை புதிய நீரால் புதிப்பித்துக்கொள்வது போல புதுப்புது சிந்தனைகளால் மனித மனத்தை மலரச்செய்வதவர்.  அவரே சொல்வது போல ''ஓஷோவை யாராலும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது...ஓஷோ உட்பட''. ஹைசன்பர்க்கின் அனிச்சை தத்துவத்திற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு ஓஷோ மட்டுமே. ''காமத்திலிருந்து கடவுளுக்கு'' அவருடைய அற்புதமான நூல். அதை அவருடைய குரலில் கேட்பது சுகமான அனுபவம்.

நிஷா மன்சூர்.

மலையாளத்தான் எப்பவுமே இப்படித்தான்,
தண்ணீரின் மாபெரும் ஓட்டத்திற்குதான் நாம் வெள்ளம் என்கிறோம்.அவன் ஒரு கிளாஸ் தண்ணீரையே வெள்ளம் என்கிறான்.

காமுகன் காமுகி என்றெல்லாம் மலையாளத்தான் பேசும்போது கொஞ்சம் கிறுகிறுன்னு வர்ரது எனக்கு மட்டும்தான்னு நெனச்சுட்டிருந்தேன். இப்போ மனசுக்கு நிம்மதியா இருக்கு .

ஆர்கஸம் பத்தியெல்லாம் எழுதறீங்களே பொதுவா நீங்க சூஃபி ஞானம்னுதானே எழுதுவீங்க என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார்.
"கண்டு களித்து சகலமும் விட்டு கரையேறினால் நலம்தானே" என்றுதான் குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பாகூட சொல்லியிருக்கிறார்கள். சிற்றின்பம் துய்த்தல் ஒன்றும் பிழையான ஒன்றல்ல. இன்னும் சொல்லப்போனால் இதில் முழுமையடையாதவன் அதன் வாசலைக்கூட அணுக இயலாது.
ஆகவே,"ஆர்கஸம் அறி;ஆண்டவனைத் துதி" என்றேன்.

எம.மீரான் மைதீன்

நிஷா மன்சூர் ஓஷோ....பாரசீக சூஃபிகளை நிறைய சுவீகரித்தவர்.குறிப்பாக ஹல்லாஜ் மன்சூர்,முஹ்யித்தீன் அப்துல் காதிரு ஜீலானி,ஷெய்கு சாஅதி முதலானவர்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.குணங்குடியப்பா ஒரு பொக்கிஷம் தானே

நிஷா மன்சூர் .

பறவைகளின் பரிபாஷை(மன்த்திகுல் தைர்) எனும் நூல் சூபிகளின் மிகமுக்கிய வழிகாட்டியாக உள்ளது. அதில் ஏழு பள்ளத்தாக்குகளின் ரகசியம் எனும் சொல்லாடல் மூலம் ஏழுவகையான நிலைகளில் இறைவனைச் சங்கமிக்கும் பயணத்தைச் சொல்லியிருப்பார்.
அந்த ஏழு நிலைகள்:
1.ஹுப் (நேசம்) 2.உன்ஸ் (நெருக்கம் INTIMACY) 3.இஷ்க் (தீவிரமான காதல்)4.ஹக்கீகத் (பிரிவின்மை. இதன் மூலச்சொல்லுக்கு முடிச்சு என்று பொருள்.) 5.இபாதத் (அடிமைத்தனம்) 6.ஜுனூன் (பித்துநிலை) 7.மெளத் (இறப்பு)
இதில் கடைசி நிலையாக உள்ள மெளத் என்பது பக்தனின் சுயம் இறைவனில் அழிந்துவிடுகின்ற நிலையைக் குறிக்கும்.
சூஃபிகளின் ஞானக்கலையில் இது ‘ஃபனா’ என்று சொல்லப்படும்.  இந்த நூலின் சாரத்தைத்தான் ஓஷோ "வாழ்வின் ஏழு பள்ளத்தாக்குகள்" என்று The secret of the secrets எனும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். (ஓஷோவின் ஒட்டுமொத்த இறையியல் கல்வியும் சூபிச ஞானத்தின் அஸ்திவாரத்தினால் எழுப்பப்பட்டதுதான்.பரீதுத்தீன் அத்தார்,ஸம்சுத்தப்ரேஸ்,ரூமி,மிர்தாத் ஆகிய ஞானியர்களின் எளிமைப்படுத்தப்படு நவீனமயமாக்கப்பட்ட  நிழலின் ஒப்பனையே ஓஷோ என்றும் கூறப்படுவதுண்டு) 

#என்னுடைய "ரூமியின் வரிகள்வழி பிரபஞ்சத்தை வாசித்தல்" கட்டுரையின் ஒரு பகுதி.

சிராஜூதீன் நைனாமுகம்மது.

சொர்க்க சுகத்துக்கு மாதிரியாக ரசூலுல்லா மனைவியிடம் புணரும் இன்பம் எனச்சொன்னதாக ஒரு செய்தி உண்டு. சிற்றின்பம் பேரின்பத்திற்கு மாதிரியும், தடையும்கூட. காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயணர் ஒரு பிரம்மச்சாரி. பித்தனைப்போல தெருவில் கிடந்த பூவார் நூகுவலியுல்லா அப்பாவை தாலக்கடியானாக ஏற்ற பணக்கார பெண் அவருடன் ஒரு இரவை கழித்தபின்,ஏற்கனவே ஒப்புக்கொண்டதுபோல அவரை விவாகரத்து செய்ய மறுத்துவிட்டதாகவும் அவரே என் புருஷன் என உறுதியாக நின்றதாகவும் செய்தி உண்டு.கலவியில் ஈடுபடுபவர்களெல்லாம் கலவியை பற்றி தெரிந்தவர்களல்ல.சித்தர்களும்,ஞானிகளும் அதைப்பற்றி அதிகம் அறிந்தவர்களாகவே இருக்கின்றனர்.
பீரப்பா இல்முல் இன்ஸான் படலத்தில் கலவியைப்பற்றி பேசுகிறார்.
பேரின்பத்தைப்பற்றி பேசும் சித்தர்களெல்லாம் பேரின்ப அனுபவம் மூளையிலேயே நிகழ்கிறதுஎன்கின்றனர்.பிட்யூட்டரி கிளாண்ட்டிலிருந்தே அமுதம் சுரப்பதாகவும் கூறப்படுகிறது. அதைப்போல் விந்து உற்பத்திக்கும் மூளைக்கும் சம்பந்தமிருக்கிறது.
Orgasm என்னும் கலவி உச்ச இன்பமும் மூளையாலேயே உணரப்படுகிறது

காமாக்னி எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் தீ. காமம் உள்ளதனாலே உலகம் நிலைத்து நிற்கிறது.

மி.மு.இஸ்மாயில்

அறம் பொருள் இன்பம்
என்கிறது திருக்குறள்

காமம் இல்லை என்றால்
ஆதத்தோடு முடிஞ்சிருக்கும் பிறப்பு

இரு பசிகள் இன்றியமையாதது
இந்த இரு பசியிலும்தான்
தன்னிறைவு காண்பான் மனிதன்

போதும் போதும் என்பதும்
இந்த இரு பசிகளுக்கு மட்டுமே

ஆனாலும் திரும்பவும் பசிக்கும்.
பசிப்பது புசிக்கத்தானே

இருப்பவன் புசிப்பான்
இல்லாதவன் பட்டினிதான்
இரு பசிகளுக்கும் பொதுவானது இது

வயிற்றுப்பசி
உடற்பசி.

No comments:

Post a Comment

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...