Sunday 28 May 2023

கவர்னர் பெத்தா

மீரான் மைதீனின் 'கவர்னர் பெத்தா' : மனம் நெரிக்கும்
--------------------------------------------------------------------------------
நினைவுகள்
------------------

பொறுப்புகளும் அவற்றின் பக்கக் கிளைகளென நீளும் மன அழுத்தங்களும்தான் நம்மை இருக்கவும் விடுவதில்லை பறக்கவும் விடுவதில்லை என்றால் யார்தான் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவற்றில் மூழ்கியோ மூழ்கியதிலிருந்து எழுந்த நினைவுகளிலிருந்தோ விடுபட முனைந்து வெற்றியோ தோல்வியோ தழுவுவது அவரவர்பாடாயிருக்கிறது.

‘கவர்னர் பெத்தா’ தொகுப்பை ஓரிரு மாதங்களுக்கு முன்பு வாங்கியிருப்பேன். அவ்வப்போது புத்தகத் தலைப்பு கண்ணில் படும்போதெல்லாம் பெரியம்மா ஒருத்தர் பெரும் பொறுப்பிலிருந்தோ அல்லது அதிகாரத் தோரணையினாலோ கவர்னர் என்று அழைக்கப்படுகிற கதையாயிருக்கும் என்றுபட்டிருக்கிறது. நேற்றைய போது தொகுப்பை வாசித்தபோதுதான் தெரிந்தது. பத்தே பத்து கதைகள் கொண்ட அழகிய தொகுப்பு என்பதும், பீர்மா பெத்தாவுக்குக் கவர்னர் பெத்தாவென்று பேர் வந்ததற்குக் காரணம் நாம் நினைத்ததில்லை என்பதும். இவையெல்லாம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எழுதிய கதைகள் என்கிறார் மீரான் மைதீன்.

‘அசன் கண்ணாப்பா’ கதையில் வருகிற கண்ணாப்பாவும் ‘ஓட்டு’ கதையில் வருகிற ஷாபியின் உம்மம்மாவும் எண்பதுகளில் கிராமப்புறங்களில் குழந்தைகளாயிருந்தவர்களின் தாத்தா பாட்டிகள். கண்ணாப்பா மாதிரியான தாத்தா எனக்கு இல்லை என்பதும் உம்மம்மா மாதிரி கோமதிப்பாட்டி இருந்ததும் ஞாபகம் வந்தது. வெறும் கையும் காலுமே முடுக்கி ஓட்டும் வாகனமாய்க் கொண்டு வாயால் ஒலியெழுப்பி ஓடிய காலத்துக்குள் தள்ளிவிடுகின்றன இக்கதைகள்.

தெருவிலுள்ள சின்னப் பிள்ளைகள் ரசிக்க ரசிக்கக் கதை சொல்வதே தனது முதுமைக்கும் தனிமைக்குமான துணையும் சக்தியுமென இருந்த அசன் கண்ணாப்பாவை விட்டு, சின்னப் பிள்ளைகள் விலகிச் செல்ல அவர் எப்போதும் பெருமை பேசிவரும் பேரனே காரணமாகிவிடுகிறான். அவன் அரேபியாவிலிருந்து வாங்கிவந்த டிவி பெட்டி பிள்ளைகள் பெரியவர்களென எல்லாரையும் விழுங்கிவிடுகிறது. சீந்துவாரற்றுப் போய்விடுகிற கண்ணாப்பாவின் ஆற்றாமையும் புலம்பலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கால நகர்வினாலும் அறிவியல் வளர்ச்சியினாலுமான சில எந்திரங்களின் ஈர்ப்பின் முன் கண்ணாப்பாவோ அவர் பேரனோ சின்னப்பிள்ளைகளோ யார்தான் என்ன செய்யமுடிகிறது.

ஷாபிக்கும் அவனது உம்மம்மாவுக்குமான பிரியத்தைச் சொல்லித் தொடங்கும் கதை ‘ஓட்டு’. ஆனால் அப்படியே போய்விடவில்லை. பள்ளியில் சேர்ந்த பிறகான அவனது கவனப்பாடு மாறும் திசையில்தான் கதை நகர்கிறது. பெரியவர்களது கட்சி அரசியல் மற்றும் தேர்தல் நடத்தைகள் என்பவை பிள்ளைகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பகடி செய்கிறது. பிள்ளைகளின் தேர்தல் களமும் தேர்தல் முறையும் பார்ப்பது நமக்கு கலகலப்பாக இருந்தாலும் கூடவே ஒரு பெருமூச்சும் வருவதை உணராமல் இருக்கமுடியாது.

மனம் பேதலித்துவிட்ட பால்ய கால நண்பனைப் பார்க்கக் கதைசொல்லி செல்கிற கணங்களும் அவன் குறித்த இளம் நினைவுகளுமாக பிணைந்து முயங்குகிற கதை ‘யூசுப்’. கதையோட்டம் எனக்கு இரு நினைவுகளைக் கிளர்த்திற்று. குணசீலம் கோவிலை ஒட்டிய சுற்றிலும் வேலி கட்டிய மண்டபத்தில் சங்கிலியில் கட்டப்பட்ட காலோடு கிடந்த இளைஞன் ஒருவனுக்கு, ஒரு இளம் தம்பதி வாழைப்பழத்தை வீசி எறிந்து வேடிக்கை பார்த்ததும், அவன் அதை அப்படியே எடுத்து தோலோடு கடித்துத் தின்றதும் ஒன்று. ஏர்வாடி தர்காவினுள்ளே நுழைவாயிலை அடுத்து இடதுபுறமுள்ள ஒரு மண்டபத்தில் புர்க்கா அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி அரபி மந்திரம் எழுதப்பட்டிருந்த உள்ளறைச் சுவரின் மீது ஓடிச் சென்று மோதுவதும், பின் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்படியே வெளியே ஓடி வந்து கர்ணமடித்து மணலில் விழுவதுமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது மற்றொன்று. ‘மௌனே... எம் புள்ளையைப் பாத்தியா?’ எனக் கேவும் யூசுப்பின் உம்மா குரல் எங்கெங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி கேவக்கூட ஒரு ஜீவனும் இல்லாதவர்களும் இருப்பார்கள்.

மூன்று பெண்களைப் பெற்று வளர்த்து கட்டிக்கொடுத்து, வரிசையாய் மாற்றி மாற்றிப் பிரசவம் என்று கவனித்துத் தேய்ந்து போகும் அஸ்மா – மொய்து சாகிபின் ஆற்றாமைகளையும் நில்லா ஓட்டங்களையும் சொல்கிற கதை ‘சம்மந்தக்குடி’. மூத்த மாப்பிள்ளையின் உம்மா என்கிற  ஜபர்தஸ்தால் சம்பந்திகளைக் கிறங்கடிக்கவேண்டும், பெண்டு பிள்ளைகளை விட்டு அரேபியாவிலேயே மகன் இருந்து மாதச் சம்பளத்தைத் தன் பெயருக்கு அனுப்பினால் போதும் என்றிருக்கிற சலீமின் உம்மாவும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஓரிரு மாதம் வரவும் தன் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சற்றே வளரந்த பின்னே முதல்முதலாய்ப் பார்க்கவுமாக வாய்க்கிற சலீமும், கருவுற்ற காலத்து மனைவியின் எளிய ஏக்கங்களைக் கூட மென்று முழுங்கியே கண்ணால் மட்டும் காட்ட முடிகிற ஜெரினாவும் பொருளீட்ட வேண்டி அரேபியா செல்கிற பலர் வீட்டு மாந்தர்கள்.

ஊர்விட்டு ஊர்வந்து பள்ளிவாசல் ஒன்றில் மோதியாராக இருக்கிறார் காதர் சாகிபு. ஒவ்வொரு வேளை உணவும் ஒவ்வொரு வீடு என்றும் பள்ளிவாசல் வராந்தாவே வசிப்பிடம் என்றும் ஆகிவிட்ட அவர் மீது  அவ்வூர்க்காரர்கள் காட்டும் இளக்காரமும் சீண்டலும் இலேசுப்பட்டதல்ல. அவர் படுக்கவென வாய்த்த பெஞ்சுகள்தான் அவ்வூரில் யாரொருவர் மௌத்தாகிப் போனாலும் கிடத்தப் பயன்படுபவை. ஆகவே அவருக்குப் படுக்கையும் நிச்சயமில்லை, உறக்கமும நித்தியமில்லை. ஏதோ நாலு காசு சேர்த்து ஊரிலிருக்கும் தன் பெண்ணை கொஞ்சம் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தால் போதும் என்று அனைத்தையும் தாங்கிக்கொண்ட காதர் சாகிபு, ஒரு கட்டத்தில் இங்கிருந்து போனால் போதும் என்று நினைத்தாலும் போகமுடியாமல் போகிறது. பொருளாதார வலுவற்ற ஒரு மனிதரின் கதை ‘பெஞ்சு’.

பீர்மா பெத்தாவுக்கு அவரது வயதொத்த சினேகிதிகளுடனான பேச்சும் கிண்டலும் அத்தனை பிடித்தமானது. அவர்கள் ஊர் தர்காவுக்குக் கவர்னர் பாத்திமா பீவி வருகிறார் என்ற  சேதி வந்ததும் ஊரே சுறுசுறுப்பாகிறது. அதிகாரிகள் பறக்கிறார்கள். சாலை மின்கம்பங்கள் சரியாகின்றன. பீர்மாவோ கவர்னரைப் பார்க்கவென்றே மகனிடம் புதுத்துணி கேட்டு மகன்-மருமகளிடம் கிண்டலுக்கு ஆளாகிறார். ஆனால் யாரும் நினைக்காத நேரத்தில் பீர்மாவின் கைபிடித்துக் குலுக்கிவிட்டுச் செல்கிறார் கவர்னர். அதனால் ஊர்க்காரர்களிடம் கவர்னர் பெத்தாவாகிவிட்ட பெருமையையும் மீறி தனது உம்மா – வாப்பாவின் மீது கோபம் வருகிறது பீர்மாவுக்கு. ‘பொட்டப்புள்ள படிச்சு பெரிய கவர்னராட்டா ஆகப்போறான்னு நம்மளப் படிக்கவைக்காம உட்டுட்டுதுவோ’ என வைகிறார். இக்கதையின் தலைப்பாக மட்டுமின்றி இத்தொகுப்பின் தலைப்பாகவுமாகிவிட்ட ‘கவர்னர் பெத்தா’ இதன்மூலம் இன்னொரு அர்த்தம் தருகிறது.

எளிய சொற்களில் உரிய காட்சிப்படுத்தலோடு மிகைப்பாடு ஏதுமின்றி இயல்பாய்ப் போகின்றன மீரான் மைதீனின் இக்கதைகள். கதை மாந்தருக்கும் வாசகருக்குமான அணுக்கமும் அதனால் எழும் பிணக்கமும் நேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆத்துனாச்சி பெத்தாவையோ ஹமீது சாகிபையோ எங்கேனும் பார்த்தால் நாலு வார்த்தை கேட்காமல் போகமாட்டேன். இக்கதைகளில் மண்ணையும் மொழியையும் மக்களையும் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. மொழி அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. நினைவோட்டங்களும் நம் மனதுக்குள் சொல்லிக் கொள்வது போலவே இருக்கின்றன. வெகு நாட்களுக்குப் பின் மனதுக்கு நெருக்கமாக உணரச் செய்த தொகுப்பு இது. மீரான் மைதீன் வாழ்த்துக்குரியவர்.

- யுவபாரதி மணிகண்டன்  29/05/2017

(கவர்னர் பெத்தா – மீரான் மைதீன் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ.100/-)

Tuesday 16 May 2023

பயணமும் நூலும்

               
பயணமும் சில நூல்களும்
எம்.மீரான் மைதீன்



                  நம் நாயகம்
               ஜெஸிலா பானு


2023 மார்ச் பத்தாம் தியதி இரவு எட்டுமணிக்கு  திருவனந்தபுரம் விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு துபாயில் அந்த இரவே சென்று சேர்ந்த என்னை அன்பாக உபசரித்து வரவேற்று அழைத்துச் சென்றார் அருமை சகோதரர் ஆசிப் மீரான் அவர்கள்.
11ந்தேதி மாலை துபாயில் எனது புதிய நாவலான "திருவாழி" வெளியிடப்பட்டது. மிகச்சிறப்பும் அன்பு நிறைந்த ஒருகூட்டம் எழுத்தாளர் பெருமக்கள் ஒன்றுகூடிய மனதுக்கு உகந்த விழாவாக இருந்தது.அமீரக எழுத்தாளர் வாசகர்வட்டம் இணைந்து காணல் இலக்கிய அமைப்போடு நாற்பது ஐம்பதுபேர் கூடி  நடத்தப்பட்ட சிறப்பான விழாவினை ஒழுங்கமைவு செய்திருந்தவர்களில் முக்கியமான ஒருவராக எழுத்தாளர் ஜெஸிலாபானு அவர்களுமிருந்தார். அவரின் நூல்கள் எனக்குப் பரிசளிக்கப்படுவது வரையிலும் அவரை எழுத்தாளர் என்று தெரியாது.அவரை ஒரு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக அந்த நொடியில் அறிந்திருந்தேன்.ஆனால் 
ஜெஸிலாபானு அமீரகத்தில் வாழும் தமிழ் எழுத்தாளர்.வேற்று திசை என்னும் சிறுகதைநூல் மற்றும் இறைதூதர் மூஸா நபி மற்றும்  முஹம்மது நபி(ஸல்)பற்றியுமான மூன்று முத்தான  நூல்களை எழுதியிருக்கிறார்.வியப்புகள் வாழ்வில் மெல்ல மெல்லத்தான் நிகழ்ந்தேறுகின்றன. இது அவரின் எழுத்துப் பற்றிய பதிவு.அவர் தன் சிந்தனைகள் மீது தன்னளவில் மிகத் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருக்கிற ஒரு ஆளுமையான பெண்மணி. 
துபாய் வானெலியின் தமிழ் பண்பலை நிகழ்வுக்கு என்னை அவரின் வாகனத்திலேயே அழைத்துக் கொண்டுபோய் நிகழ்வை சிறப்பித்தார்.வானொலியில் என்னிடம் நிகழ்த்தப்பட்ட நேர்காணலை அவரின் முகநூல் பக்கத்தில் நேரடி காட்சிப்பதிவாய் வெளியிட்டு மேலும் சிறப்பாக்கினார்.வானொலி அறிவிப்பாளர்களுக்கு எழுத்தாளர் என்பதைவிட வதந்தி வெப் தொடரில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர் என்பது கொஞ்சம் கூடுதலான பெருமிதமாகத்தான் தெரிந்தது போலும். எழுத்தாளனைவிட நடிகன் சமூக மதிப்பில் உயர்ந்திருக்கிறான். ஒருமணி நேரம் அந்த நிகழ்வை நிறைவு செய்துவிட்டு  அந்த நண்பகல் உணவை நண்பர் எழுத்தாளர் மற்றும் கேலக்ஸி பதிப்பாளர்  பாலாஜி பாஸ்கரோடு இணைந்து மேலும் சிறப்பாக்கினார். நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு ஆட்டின் காலை நாங்கள் கூட்டாக உண்டு களித்து உரையாடி மகிழ்ந்த நினைவு இனிமையாக மனதில் கிடக்கிறது.
 அந்த உணவுக்குகூடம் மிகச்சிறப்பான பாரம்பரியம் கொண்டதாக இருந்தது. பலவகையான மந்திவகைஉணவுகளை வளைகுடா நாடுகளில்  உண்டு மகிழ்ந்த நினைவுகளிருந்தாலும் அந்த துருக்கி உணவகத்தின் அன்றைய மதியம் நாங்கள் உண்ட மந்தி உணவு அபரிமிதமானது.
பிரயாணத்தில் வாகனத்தை இயக்கிக்கொண்டே அவர் சினிமா, குறும்படம், இலக்கியமென சீரான உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.ஃபிஷ் ஆண்ட் பிளைண்ட் என்ற ஒரு குறும்படம் பற்றியும்,கலைவடிவங்கள் மொழியற்று பறவையைப் போல பறந்துவிடுகின்றன எனவே சிறிய படங்களை நாம் மொழியற்று உலகின் உணர்வுகளில் கலக்கவிடுவதைப் போல  உருவாக்குதல் சிறப்பாக இருக்குமென்ற பேச்சு நீண்டு போனது.  தொடர்ந்த பயணத்தில் வெளியே இந்த உலகின் மாண்புமிக்க நாடுகளில் ஒன்றான துபாயின் வெளிப்புறக் காட்சிகளை ரசித்துக் கொண்டே கதை,திரைப்பட அனுபவம் என  அவரிடம் உரையாடியது அவ்வளவு மகிழ்வான தருணமாக இருந்தது.
நான் ஷார்ஜாவிலிருந்த நாட்களிலேயே அவரின் சில சிறுகதைகளை வாசித்தேன்.எப்போதும் காலையில் எழுந்ததும் நான்கைந்து பக்கங்கள் படிப்பதை வாடிக்கையாக கொண்ட எனக்கு ஆசிபின் வீட்டில் நல்ல நூலகம் ஒன்றிருந்தது உதவிகரமானதாக இருந்தது. ஜெஸிலாவின் எழுத்து கதை,கட்டுரை, கவித்துவம்,சித்தாந்த தர்க்கமென எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது.அதுவும் ஒரு சுவைதான்.அவர் தன்னைச் சுற்றி நடப்பவைகள் மீது கடும் அவதானம் கொண்டவராக இருக்கிறார்.அந்த அவதானமே அவரது எழுத்தாகவும் இருக்கலாம்.எனது வகுப்பாசிரியர் சொல்லுவார் மனதில் தோன்றுவதை தைரியமாகச் சொல்லிவிட வேண்டும் தயக்கம் மிக மோசமான குணங்களில் ஒன்று என்று.ஜெஸிலா தைரியம் கைவரப்பெற்றவர் தனக்குத் தோன்றியதை முன்தீர்மானங்களற்று  எழதியிருக்கிறார். அவரின் எழுத்துகள் கேள்விகளை முன்வைக்கின்றன.நாம் யாரிடம்தான்  கேள்விகளுக்கு பதில் இருக்கிறது. வாழ்வின் இலட்சிய பயணத்தில் எத்தனை வழிமுறைகள் இருக்கிறது என்று கேள்வி கேட்கப்படும் இடத்தில் ஒருவர் விரல்மடக்கி எண்ணத்துவங்குவார்.கேட்டவர் சொல்லுவார் எண்ணிக்கையெல்லாம் கிடையாது இந்த உலகில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அதே அளவு எண்ணிக்கையில் வழிமுறைகளும் இருக்கிறது. உண்மைதான் ஒன்று,இன்னும் ஒன்றுக்கு உதாரணமில்லை. பிரபஞ்சத்தின் எண்ணிலடங்கா மனங்களின் ஒருதுளியாக நம் மனம் இருக்கிறது. 
2019ல் வெளிவந்திருக்கும் பத்து சிறுகதைகள் கொண்ட வேற்றுதிசை என்கிற இந்நூலில் "அவன் அப்படித்தான்" என்கிற கதையைத்தான் நான் முதலில் வாசித்தேன்.
மூன்றாம் பாலினமாக ஒருவன் தன்னை உணர்ந்து  அறியப்படும் தருணத்தை ஒரு மனுசி அங்கீகரிப்பதாக கொள்வதென்பது ஒரு உயர்ந்த நேசம்தானே.அதிர்ச்சிகரமான ஒன்றின் பொருட்டு நாம் நடுங்கி நின்றுவிடாமல் அதன்மீது அன்பை, கரிசனத்தை, முன்வைப்பதென்பது ஆகப்பெரும் மனதின் திறப்பாக அவதானிக்க இயலும். சு.சமுத்திரத்தின் வாடமல்லி நாவலை நீண்ட காலம் முன்பே வாசித்த அனுபவம் அவன் அப்படித்தான் கதையை சுவீகரிக்க உதவுகிறது. அந்த கதையின் பாடுபொருள் ஆச்சிரியமானது. இதன் நிமித்தமாக ஜெஸிலா நம் மதிப்புக்குரியவராக மாறுகிற ஒரு கதைக்களமும் கூட. இந்தக் கதையின் தாக்கத்தோடுதான் மற்றைய கதைகளை அனுகினேன். அவரின் மேலும் சில கதைகள் கதைகளாக முற்றுப்பெறவில்லை. கதைகள்,கதைகளாக முற்றுப்பெற வேண்டிய யாதொரு கட்டாயமுமில்லை.மிகப்பெரிய விசயங்களும் கடும் தர்க்கங்களுமாய் எடுத்தாளப்பட வேண்டியவைகளை அனாயசமாக அவர் அதன் மீதேறி கடந்து போகிற ஒன்றையும் இயல்பாகச் செய்கிறார்.சில நேரங்களில் சில மனிதர்கள் கதை மனிதர்கள் நம்பிக்கைக்கும் வாழ்வுக்கிடையேயும் கொள்ளும் முரண்.நம்பிக்கைகளின் வழி நிகழும் சந்தர்ப்பவாதங்களைக் கேள்வியாகக் கேட்கிறார்.இந்த கேள்விகளால் தன் மீது படியும் அபிப்ராயங்களைப் பற்றியும் இந்த கதைச் சொல்லிக்கு கவலை இல்லை.கேள்விகளை குவித்தவண்ணமிருக்கிறார்.


அலுவலக மேலாண்மை,குடும்ப மேலாண்மையென இடையறாத கடும் பணிச்சூழலின் நடுவே இவர்கள் எழுதுவதென்பதே ஒரு சாகசம்தான். இந்த சாகசத்துக்காகவே இவர்களை வாழ்த்தலாம்.எழுத்து ஒரு அர்த்தத்தில் இவர்களை புத்துயிர்ப்பாக்குவதாக தோன்றுகிறது.


 கதைகளல்லாத இன்னொரு பங்களிப்பாக நபிமார்கள் வரலாற்று போதனைகள் வரிசையில் அவர் குழந்தைகளுக்கானதாக  உருவாக்கியிருக்கும் "நம் நாயகம்"
ஜெஸிலா பானுவின் மற்றுமொரு சிறப்பான பங்களிப்பு.
நபிகள் நாயகம் இவ்வுலகில் 63 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு அவர்களின் நாற்பதாவது வயதில் நபித்துவம் கிடைக்கிறது. அன்றிலிருந்து அவர்கள் மறைந்த 63வது வயதுவரையிலும் 23 ஆண்டுகளாக அவருக்கு அருளப்பட்டதுதான் இஸ்லாமியர்களின் புனித நூலான திருகுர்ஆன்.அவருக்கு அருளப்பட்டது திருகுர்ஆனாகவும் அவர் தனக்கு அருளப்பட்டதின் வாயிலாக வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறை ஹதீஸ் என்று அழைக்கப்படுகிறது.
நம் நாயகம் என்கிற இந்த சிறப்பான நூலை நாயகத்தின் 63 ஆண்டுகள் உலகியல் வாழ்வை குறிப்பிடும் வகையில்  63 தலைப்பில் நமக்குத் தருகிறார்.
குழந்தைகளுக்கான நூல்வடிவங்களைச் செய்கிறவர்கள் மிகக் குறைவு.அவர்களிடத்தில் ஒரு பண்பை, மாண்பை, வளர்க்க வேண்டுமென அகவிருப்பம் எல்லோரிடத்திலும் இருக்கும் என்றாலும் அதற்கான செயல் வடிவங்களை எப்படி உருவாக்குவது என்பதுதான் இன்று மனிதர்களிடத்தில் சவாலான விடயமாக இருக்கிறது. நீதிக்கதைகள், நீதிபோதனைகள் என  ஏராளமான நூல்கள் பொதுவில்  இருந்தாலும் கூட மானுட வாழ்வியலின் அறம் பற்றிய செய்திகளை முதன்மையாக் கொண்டு ஒரு பண்பாட்டைக் குழந்தைகளிடமிருந்து துவங்குவதற்கான அழகிய பணியை நம் நாயகம் சிரமேற்கொண்டு செய்கிறது.ஜெஸிலாவுக்கு இந்த எழுத்துமுறை  அழகாகக் கைகூடுகிறது. இதன் தொடர்ச்சியாக வந்துள்ள இறைத்தூதர் மூஸா பற்றிய மற்றொரு நூல் இன்னும் அவரின் இந்த பணி தொடரும் என்பதற்கான வரைவாக இருக்கிறது.சின்னச் சின்னதாகப் பெருஞ்செய்தி சொல்லும் அன்பால் நிரம்பிய சேகரமாக நம் நாயகத்தைக் குறிப்பிடலாம்.
தூதர் மூஸா(ஸல்) மற்றும் ,தூதர் முஹம்மது(ஸல்) வாழ்வுப்  பகுதிகளாக வந்துள்ள இந்த நூல்கள் அழகுமிளிரும் அற்புத நூல்வடிவமாக வந்திருக்கிறது. அதன் ஆக்கமே குழந்தைகளிடம் ஈர்க்கும் விதமாக ஒரு நற்பண்புகளை உருவாக்கி வளர்க்கும் முனைப்பு கொண்டதாக அமைந்திருக்கிறது.

Monday 15 May 2023

"உயிர்த்தலம்"காலத்தின் பொக்கிஷம் - எம் மீரான் மைதீன்

எனது திருவாழி நாவல் துபாயில் வெளியிட முடிவானதும் தோழமை ஆசிப் மீரானிடம் நான் வேண்டியது ஆபிதீன் அண்ணன் நாவலை வெளியிடட்டும் என்பதைத்தான். அவரும் எனது எண்ணத்தையே பிரதிபலித்தார்.நிகழ்வு அன்று நான் அங்கு சென்றிருந்தபோது மாலையே ஆசிப் மீரானோடு ஆபிதீன் அண்ணனும் அருமைக்குரிய எழுத்தாளர் சென்ஷி'யும் வந்து சேர்ந்த போது எங்களுக்குள் அந்த மாலைப்பொழுது சலங்கைக் கட்டிக் கொண்டது.எழுத்திலுள்ள அதே துடிப்பும் அதே பாவனையும் பலருக்கும் கைக்கூடாத காரியங்கள்.ஆனால் ஆபிதீன் அவர்கள் அவ்வாறே இருந்தார்.எங்கள் ஊரில் சிறுபிராயத்தில் கடற்கரைக்கு செல்லும் போது அலைகளை எண்ணத்துவங்கி ஏழாம் அலை மிகவீரியமாக சுழன்று சுழன்று அடிப்பதை நாங்கள் ரசனையோடு கண்டு  ஒரு கற்பனையான உணர்வில் பெரும் கூச்சலிட்டுக் கொண்டாடுவோம். அவ்வாறான ஒரு கொண்டாட்டமான உரையாடல்.எல்லா வார்த்தைகளுக்கும் மேல் அண்ணன் ஏழாம் அலையாக அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார்.நிகழ்வில் நாவலை அவர் வெளியிட,அந்த அரங்கிலேயே எனக்கு உயிர்த்தலம் சிறுகதை நூல் பரிசளிக்கப்பட்டது.

 நிகழ்வு நிறைவு பெற்று நானும் ஆசிப் மீரானும் ஆபிதீன் அண்ணன் மற்றும் சென்ஷியோடு நால்வரும் ஷார்ஜாவில்  நல்ல தரமான உணவு விடுதியில் இரவு உணவை உண்டு கொண்டே நிறைய பேசிக் கொண்டோம்.சென்ஷியின் மிக முக்கியமான தொகுப்பு நூல் ஒன்று கைமாறியக் கதை,அண்ணனின் கதை உலகு,தொலைந்த கதைகள்,சில மகோன்னதமிக்க மகான்கள் பற்றியெல்லாம் நள்ளிரவு தாண்டியும் பேசிக் கொண்டோம்.எனது கைக்கடிகாரத்தில் இந்திய நேரமும் எனது கைப்பேசியில் அமீரகத்தின் நேரமுமாக நான் இரட்டை இயக்கத்திலிருந்தேன். நள்ளிரவுக்குப் பிறகும் ஷார்ஜாவில் ஆசிபின் வீட்டில் தங்கி மேலும் உரையாடலைத் தொடரலாம் என்ற நிலையில் ஆபிதீன் அண்ணன் துபாயிலிருக்கும் அவரின் வசிப்பிடத்துக்குப் போகவேண்டுமென பிடிவாதமாக இருந்ததால் அந்த நள்ளிரவில் மீண்டும் துபாய் பயணம் செய்யும்படியாக இருந்தது.இரவில் துபாய் நகரம் பேரழகு கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது. விமான ஓடுபாதையின் கீழ் உள்ள அந்த வசீகரமான சாலையும் மின்னொளியில் மின்னும் உயர்ந்த கட்டிடங்களுமாய் ஐம்பதாண்டுகால அமீரகத்தின் வளர்ச்சி உலகம் உற்றுக் கவனிக்கப்பட வேண்டிய ஏராளமான அம்சங்களைக் கொண்டது. ஒரு நாடு மனிதத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் கூடவே உழைப்பும் அறிவும் இணையும் போது அதன் பரந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க இயலாது.பிரிவினையும் வெறுப்பும் வளர்க்கப்படும் ஒரு நாடல்ல அது.பரந்த மனம் கொண்ட ஒரு தேசம் தன்னகத்தே இணையும் மனிதர்களையும் பரந்த மனம் உடையவர்களாக மாற்றிக் கொள்கிறது. அந்த அழகிய நள்ளிரவில் ஆபிதீன் அண்ணனை துபாயில் அவரின் வசிப்பிடத்தில் விட்டு விட்டு மீண்டும் ஷார்ஜா நோக்கிய பயணம்.அவரோடு அன்று நிகழ்ந்தேற வேண்டிய முதலிரவு மறுநாளின் அவரின் பணியின் நிமித்தமாகத் தடைபட்டுப் போனது. இல்லையென்றால்  உரையின் நீட்சி மேலும் பல சித்திரங்களை வரைந்திருக்ககூடும். திரும்ப வரும்போது  சென்ஷி கதைத்துக் கொண்டு வந்தார். கதை,எழுத்து போன்றவைகளில் சென்ஷியை ஒரு வலிமையான சக்தியாக உணரமுடிந்தது.
அன்றைய இரவில் இந்தியாவில் விடியும் போது நாங்கள் ஷார்ஜா அறையில் தூக்கத்தை துவங்கியிருந்தோம்.மனிதர்கள் ஆத்மார்த்தமாகக் கூடிப் பேசினால் அதன் அழகும் வசீகரமும் பொழுதுகளை நிகரற்றதாக்கி விடுகிறது. மனிதர்களில் கீழானவர்கள் என்றும் மேலானவர்கள் என்றும் எதுவுமில்லை.அரபியரல்லாதவர்களைவிட அரபியர்களுக்கு ஒரு உசத்தியும் கிடையாது என்று நபி பெருமகனார் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஆதிக்க வெறியர்கள், சமூக சமன்பாட்டைக் குலைக்கும் செயல்  ஆதிக்க வெறி அல்லாது வேறு என்னவாக இருக்கமுடியும்.ஆபிதீனின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் "ஒரு அர்த்தத்தில் அல்ல பல அர்த்தங்களிலும் மனிதர்களைவிட குதிரைகள் மேலானதுதான்.
ஏனென்றால் அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன".


ஆபிதீன், இந்த பெயரை உச்சரிக்கும் போது ஓசையில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக கம்பீரம் வரும்.நான் விரும்பி நேசிக்கும் எனக்கு இஷ்டமான ஆளுமை. பொதுவெளியில் அவரை எத்தனை பேருக்குத் தெரியும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு எழுத்து சக்தி அண்ணன் ஆபிதீன்.எனக்கு இணைய பரிட்சயத்தின் அடிப்படை அறிவுகூட தோன்றியிராத காலத்தில் நான் எழுதியிருந்த கவர்னர் பெத்தா சிறுகதையை அதன் ஆழம் கருதி இணையத்தில் தட்டச்சு செய்து இன்னொரு விசாலத்துக்கு கொண்டு போனவர்.நாம் இங்கு கொண்டாடிக் கொண்டிருக்கும் பலபேரிலும் உயர்ந்த எழுத்தாளர்.நீங்கள் அவரின் ஏதேனும் ஒரு சிறுகதையை வாசித்திருந்தாலும் போதும் அதன் வீரியத்தை,அவரின் எழுத்தின் வீரியத்தை உணரமுடியும். அவர் நிறைய எழுதாமல் விட்டுவிட்டார். எழுதாமல் முடக்கப்பட்டவரும் கூட. மனிதர்கள் மேலெழுந்து போக தனித்த பாதை வகுக்காமல் முன்னிருப்பவனின் முதுகில் மிதித்து ஏறிப்போகும் வஞ்சகத்துக்கு தன்னைப் பாதையாக கொடுத்தவரும் கூட.ஒரு எழுத்தாளன் இஸ்லாமியனாக இருப்பது என்பது சாதரணமான விடயமில்லை.அது பெரும் சக்தி மிக்கச் செயல்பாடு. இஸ்லாம் சமூகத்துக்கு உள்ளிருந்து எழுதுகிறவர்களை எதிரியாகப் பார்க்கிற இஸ்லாமியர்கள் ஒருபக்கம்.இஸ்லாமிய பெயரோடு இருப்பதனாலேயே மறுபக்கத்தில் புறக்கணிக்கப்படுகிற வெறுப்பு இன்னொருபக்கம் என மத்தளம் போல அடிபடுகிறவர்களாக இருப்பதை மிகநுட்பமாக அவதானிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் தனது அங்கதத்தால் கடக்க இயலுமா? என்றால் மதிப்புக்குரிய ஆபிதீன் எழுத்து வாழ்வு என எல்லாவற்றையும் அங்கதத்தால் கடக்கிறார்.இரண்டு மலைகளின் நடுவே உள்ள பள்ளத்தாக்கை அச்சமின்றி,காடு இயல்பிலேயே பரிட்சயமான ஒரு வனப்பழங்குடி கடப்பது போல வாழ்வின் எல்லா அடுக்குகளிலும் மறைந்திருக்கும் கதையைக் கண்டுபிடிப்பதோடு அதன் எழுத்துக்களை கவணில் கட்டி அடிக்கவும் செய்கிறார்.நான் மிக காலதாமதமாக ஆப்பதீன் அவர்களுடை எழுத்தை இப்போது முழுமையாக  சுவீகரிக்கிறேன்.இன்னும் நேரமே நான் வாசித்திராதது எனது துரதிர்ஷ்டம் என்றுதான் எனக்கு இப்போது தோன்றுகிறது. சரியான இடத்திலுள்ள வழிகாட்டும் பாதகை நாம் நமது இலக்கை அடைவதற்கு இன்னொரு வழியைக் கூட காட்டித் தருவதாக இருக்கும். சரியான நேரத்தில் உயிர்த்தலம் பற்றாமல் போய்விட்டேன். அழுகையும் வலியும்தான் அங்கதமாக வெளிப்படுமென்று அறிஞர்கள் சொல்வதாக ஆபிதீன் கதைகளின் நடுவே சொல்கிறார்.எல்லா கதைகளையும் இந்த உலகில் நாம்  முன்னமே பெரும் ஆவல் கொண்டு வாசிக்க இயலாது.ஒரு  பெரும் மரத்தின் விருட்சங்களைப் போல கதைகள் அங்கேயே அதனிடத்திலேயே  புதைந்திருக்கின்றன.இந்த வாழ்வில் நாம் பெரிய சிறிய மரங்களைப் பார்பதுபோலவோ,அல்லது அங்கே மறைவில் இப்படியான ஒலி வருகிறது எனவே இது இன்ன மிருகமாக இருக்கும் என்று நாம் அனுமானிப்பதைப் போலவோ, கதைகளை வாசிக்கிறோம், ரசிக்கிறோம்.ஆனால் நிஜத்தில் ஒரு கதை என்பதே கதைக்குள் மறைக்கப்பட்டிருக்கிற ஒரு கதையாக இருப்பதை நாம் எல்லா நேரங்களிலும் கண்டடைவதுமில்லை அல்லது அந்த கதைகள் இவ்வாறான இலக்கோடு தன்னை எல்லா நேரங்களிலும் உற்பத்தி செய்து கொண்டதுமில்லை. ஆபிதீன் அண்ணனின் கதைகள் நம்மை துனியா முழுமைக்கும் துரத்துகிறது.நாம் யார் கண்ணுக்கும் தெரியமாட்டோம் என்றால் நமக்கு கூச்சநாச்சம் அவசியமானதல்ல. இவரின் சிறுகதைகள் நம்மை ரகசியமாக்கிவிடுவதால் நாம் கூச்சநாச்ங்களைக் கடக்கிறோம் அல்லது அவ்வாறு ஒரு நிர்பந்தத்தில் வீழுகிறோம்.இது ஒரு கதையின் மாபெரும் வெற்றி .எல்லா கதைகளாலும்  உங்களை உங்களிலிருந்து இல்லமல் ஆக்கமுடியாது.அது இந்த உலகின் கடும் பணிகளில் ஒன்றாகும்.ஆனால் ஆபிதீன் உங்களை உங்களிலிருந்து இல்லமலாக்குகிற கதைகளை உருவாக்குகிறார்.அந்த கடும் வேலையை சர்வசாதரணமாக சரிவான ஒரு மலை பள்ளத்தாக்கின் பச்சையம் போல சீராக வரைந்து போகிறார்.

காலச்சுவடு ஒரு குறும்பதிப்பாக 2016ல்  வெளிவந்த "உயிர்த்தலம்" சிறுகதை நூலில் அமைந்துள்ள சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தபின் எனக்கு முதலில் தோன்றியது இங்கு தமிழில் முன்னிருத்தப்படும் ஏது ஜம்பவான்களையும் விட எழுத்தில் ஒரு படி மேலே நிற்கிற அற்புதமான எழுத்து ஆபிதீனுடையது. ஆனால் அவர் அதன் முழுமையாகக் அறியப்படுகிறாரா என்றால் இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.இந்த அழகான உலகம் மிகவும் பலவீனமான மனிதர்களால் சூழப்பட்டுள்ளது.இஸ்லாம் சமூகத்தினருக்கும் கூட கதைகளை கொண்டாடவோ பேசவோ ஒன்றுமில்லாதவர்களைப் போன்ற செயல்பாட்டினர்தான்.அவர்களுக்கு ஆயிரத்தி நானூறு வருட்களுக்குப் பின்னரான வரலாற்றைக் கூட தெரியாத கூட்டமாக அல்லது அவற்றின் மீது தாத்பரியமற்றவராக அங்கிருந்து ஒரே துள்ளலில் நேராக சமகாலத்தில் வந்து விடுவார்கள். சமகாலத்திலிருந்து மறு துள்ளலில் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் போய் நிற்பார்கள்.இவர்களிடத்தில் மலேஷியா நாட்டின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மதுக்கும் எனக்கும் தகராறு ஒன்றும் கிடையாது எனத் துவங்கும் கதையின் போக்கை எங்கே எவ்வாறு பொருத்துவது என்பது தெரியாமல் போவதை நாம் குற்ற காரியமாகவும் பார்க்க இயலாதுதானே. ஆனால் ஆப்தீனின் எழுத்துகள் இவைபற்றியோ அல்லது அவைபற்றியோ ஒரு துளியளவும் கவலை கொள்ளாது வரையப்பட்டது. அதற்காகப் போய் நீங்கள் இலகுவில் பார்த்து இதுதான் இன்னதுதான் என்று  ஒரு முடிவுக்கு வந்துவிடலாமென்று கருதிவிடாதீர்கள்.நீங்கள் வரலாறு இன்றியோ, சமகால உலகப்பரப்பில் நிகழும் நவீன மாற்றங்களின் அவதானமின்றியோ,உங்கள் பண்பாடுகளிலும் அவற்றில் நிகழ்தேறிய கடும் மாற்றங்களின் அறிவு இன்றியோ,ஆபிதீனின் வரைதலின் ஒரு பக்கத்தின் சிறு முனையைக்கூட உங்களால் நுகர முடியுமென்று நான் நம்பவில்லை.

அபு ஹூரைரா(ரழி)சொன்ன ஹதீஸ் ஒன்று உண்டு.'இறுதிக் காலத்தில் சிலர் வருவர்.மார்க்கப் பக்தர்கள் போன்று நடித்து உலகத்தை ஏமாற்றுவர். இவர்களின் பேச்சு தேனைவிட இனிமையாக இருக்கும்.இதயங்களோ ஓநாயுடையவை'.இது இப்போதைய காலத்தைக் குறிக்கவில்லை என்று யார் மறுக்க முடியும்.மீஜான் கதையின் ஒரு பகுதியில் இப்படி ஒரு நபி மொழி வருகிறது.இப்படி இப்படி ஊடுபாவும் விசயங்கள் நம்மை எங்கெங்கோ கொண்டு போகும் ஆனால் நாம் நின்று ஸ்தம்பித்துவிடாமல் அவரின் கதைஉலகில் பயணிப்பதுதான் அடுத்தடுத்த அனுபவங்களைப் பெற ஏதுவானது.ஒரு சிறுகதை இந்த பேரண்டத்தின் கீழான பல நூறு அனுபவங்களை இவ்வளவு காத்திரமாகப் பொதிந்து தர இயலும் என்பதற்கு இச்சிறுகதைகள்தான் இருக்கின்றன என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன்.இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இங்கிருக்கிற பெரும்பான்மை வாசக பரப்புக்கு இவை அந்நியமாக இருக்கிறது.மிகப்பெரிய முயற்சி செய்து நுழையவேண்டியவை,மாறாக இப்பரப்பில் பரிட்சயமுள்ள இஸ்லாமிய வாசகப் பரப்பில் வாசிப்பு என்பது அவர்களுக்கு மிகச் சோம்பலானதாக தோன்றக்கூடிய ஒன்றாகும். இவ்வாறான சூழலில் ஆபிதீன் அவர்களின் கதைகளின் தோட்டத்து நிழலில் எந்த விவாதக் கூடாரமும்  அடிக்கப்படாமலேயேக் கிடக்கிறது.

உயிர்த்தலம் பதினான்கு சிறுகதைகளைக் கொண்டிருக்கிற நூல்.சாமான்ய முஸ்லிம்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், அடங்க மறுக்கும் சுயநலங்கள்,ஆன்மீகத்தின் போர்வையால் மறைந்துகிடக்கும் சிறுமைகள் என பேரழகு கோலங்களாலும் அதற்கு நிகரான வசைகளாலும் வார்த்தெடுத்த பாத்திரங்கள் ஆபிதீனின் கைபட்டு உயிர்பெற்று உலாவருவதாக இலங்கையின் மூத்த எழுத்தாளர்  எஸ்எல்எம் ஹனிபா குறிப்பிடுகிறார். கைபட்டோ மனம்பட்டோ ஆப்தீன் கதைத்தார் என்றால் மூன்றாவதாக வேறு எதோ ஒன்று பட்டுக்கூட உயிர்பெறுவதாகச் சொல்லுவார். கதைச் சொல்லியின் அஸ்மாவோடுதான் கேட்க வேண்டும். கதைகளில் அஸ்மா நீக்கமற நிறைந்தவள்.ஒரு ஜீம்பூம்பா கதையில் மாமன்னனின் உயிர் ஏழு கடல்தாண்டி தீவிலுள்ள ஒரு மர்மப் பொந்திலிருக்கும். உயிர்த்தலத்தின் ஏகதேசம் எல்லா கதைகளின் ரூஹூம் அஸ்மாவிடமிருக்கிறது.ரூஹ் இறைவனுக்குறியது என்பது போல அஸ்மா ஆப்தீனுக்குரியவளாக கதையின் ரூஹாகி வாழ்கிறாள்.

இந்த நூலைப்பற்றி நான் கதைகளாகச் சொல்ல முடியாது.இதில் எனக்குக் கிடைக்காத இன்னொரு அனுபவம் உங்களுக்கு கிடைக்கலாம்.எனவே உங்களுக்கான அனுபவத்தை நீங்களே இதிலிலிருந்து எடுத்துக்கொள்ள பாத்தியப்பட்டவர்கள்.இது மழைத்துளியை வெட்டவெளியில் பாத்திரம் ஏதுமின்றி பிடித்துக் குடிப்பது போலத்தான்.இதை ஒருவனுக்கு எப்படி செய்வதென்று நாம் எங்கனம் சொல்லிக் கொடுக்க இயலும். கண்ணியத்திற்குரிய கள்ளஹாஜி அவர்களுக்கு, என்று கோபமான தமிழில் துவங்கும் ஒரு நீளமான கத்தியை உங்களுக்கு  பார்க்கும் விருப்பம் உண்டுமென்றால் நீங்கள்தான் பார்க்கவேண்டும்.ஒரு நடிகையின் பாவாடை உயர்ந்த தருணத்தில் அவள் சரியாக காமிராவைவிட்டு விலகினாள் என்று நான் எழுதியற்கு எனது தோழி ஒருத்தி உள் பெட்டியில் வந்து இது பெரிய மனுசனுக்கு அழகா என்று என்னோடு சினுங்குகிறாள்.சிறிய மனிதர்களுக்கு மட்டும் அழகானவை என்று ஏதேனும் தனியாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.நானே பெரிய மனிதன் என்றால் ஆபிதீன் மகா மகா பெரியமனிதனாக இருக்கிறார். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரண்டாயிரத்தி இரண்டிலேயே அவர் வாழைப்பபழம் கதையை எழுதிவிட்டார். இப்போதுதான் எனக்கு பழைய கள்ளஹயவான்களின் எழுத்தின் அடியூற்று இங்கு கிடப்பதும் புலப்படுகிறது.படித்தால் உங்களுக்கும்   இன்னும் நிறைய புலப்படும்.இங்கு எல்லாம் புலப்பட்டதுபோல பெருமை பீத்திகளுக்கு ஒரு குறைவும் இல்லை. எல்லாம் பொய்யர்கள்,ஒப்பனைக்கூட ஒழுங்காகச் செய்து கொள்ளத்தெரியாத பொய்யர்கள். மனிதர்கள் புலப்படாத பொய்யர்களாக இருப்பதைவிட கேடுகெட்ட அடிமுட்டாள்களாக இருப்பது சிறப்பானது.அதனை நீங்கள் மட்டுமாவது அறிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு கதை உங்களுக்குச் சொல்லித்தரும் என்றால் அதன் பாக்கியம் எவ்வளவு முக்கியமானது. மனிதனை சோதனை செய்வதில் ஆண்டவனுக்கு இருக்கும் ஆனந்தமே தனிதான்.

நாற்தைங்கா பானையில் உப்பும் மிளகோடுகிடந்து நாற்தைங்காய் மெர்ஜ்ஜாவது போல அங்கதத்தில் கிடந்து மெர்ஜ்ஜாவது லேசுபட்ட காரியமில்லை.சுயஅங்கதம்,பிறஅங்கதமென அங்கதத்தில் பலாய் மூஸீபத்துக்களை வாரி இறைத்துக் கொள்ளும் உச்சம்.அங்கதத்தின் சுவை அறிந்தவர்களால் அவையின்றி நகர்தல் சாத்தியமில்லை.வாழ்வை நாம் பிரயாணம்போலக் கடக்கிறோம். பிரயாணம் வாய்க்கும்,ஆனால் அது எப்போதும் நமக்கு இஷ்டமான சாலையில் நிகழ்வதில்லை.ஆனாலும் நாம் பிரயாணத்தை சலிப்பற்றதாக அமைத்துக் கொள்ளவேண்டும்.நம் வாகனத்தின் ஒரு சக்கரமேனும் அங்கதம் பூசிக்கொள்ளுதல் நலம்.எங்கள் மாவட்டத்தில் இப்போதும் சக்கரம் என்றால் பணம் என்றுதான் பொருள்.அதுகிடக்கட்டும் விடுங்கள் சிலருக்கு ரோமமும் சக்கரமும் ஒன்றுபோலவே வளர்கிறது.சரியான அங்கதம் அப்படி ஒரு ரோமத்தைப் போல வளர்வதல்ல அது ஞானத்தின் ஒரு வகைமையில் வளர்கிறது. ஆபிதீனின் கதைகள் இந்த ஞானத்தின் பலவகைகள். நாங்கோரி என்ற உறுப்பினர் என்ற கதையில் ஒரு பாரா இப்படி இருக்கிறது."ஜாலிஜமால் என்று குஸ்கா பிரியர்களால் செல்லமாக இப்போது அழைக்கப்படும் திருச்சி கல்லூரியில்,முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த அனைத்துக் கல்லூரி இசை விழா ஒன்றில் நான் ஜும் பரா ப் பாடி முதல் பரிசு பெற்று,பின் ஆயிரக்கணக்கான மாணவமணிகளின் விருப்பத்திற்கேற்ப SPB யின் சம்சாரம் என்பது வீணை கிஷோரின் ருக்ஜானா பிறகு என விருப்பமாக SMA காதரின் ஒரு தும்ரி பாடி கரகோஷங்களை ஒரேயடியாக அள்ளிய இரண்டாம் நாள் எனக்கு வந்த-ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த-ஒரு மொட்டைக் கடுதாசி, 'உங்களின் அபாரமான குரல்வளத்தில் மயங்கிவிட்டேன்;இந்த இளம் வயதில் இப்படி ஒரு திறமையா? உங்களைப் போல பாட இனி யாராலும் முடியாது' என்று ஒரேயடியாகப் புகழ்ந்து,இறுதியில் இப்படி முடிந்தது: 'ஆமாம் நீங்கள் ஏன் ஜங்ஷனிலோ அல்லது சிதம்பரம் பஸ் ஸ்டாண்டிலோ போய் பாடிப் பிழைக்ககூடாது?. இப்படி எழுத்தே தன்னை அங்கத மழையில் நனைத்துக் கொள்கிறது.சிறு காயங்கள் உயிர் போவதுபோல வலிதரும் ஆனால் ஆதீத காயங்கள் வலியறியாது.நாம் கொஞ்சம் கதைக்கு வரலாம்.

நான் சிறுவனாக  இருந்தபோது எங்கள் பகுதிகளில்  மசில்வெடி என்று ஒருவகை துப்பாக்கி இருந்தது.அது கொஞ்சம் விசித்திரமான இரட்டைக்குழல்  துப்பாக்கி. கரிமருந்து, சைக்கிள் ball,சவுரி என சில உபகரணங்களைப் போட்டு இடித்து நிரப்பிச் சுடுவார்கள்.கொக்குகள் கூட்டமாக இருக்கிற இடத்தில் சுட்டால் எட்டு பத்து கொக்குகளேனும் ஒரு வெடியில் மரணமடையும்.அவ்வளவு பவர்ஃபுல்லான வெடி.நான் எனது கலுங்கு பட்டாளம் நாவலில் ராஜேந்திர பாலாஜி என்று பாத்திரம்பற்றி சொல்லும் போது அவரின் தந்தை ஒரு மசில்வெடிக்காரன் என்று குறிப்பிட்டதின் மூலம் ஏற்கனவே தமிழ் இலக்கிய உலகுக்கு மசில்வெடி பற்றிய குறிப்பொன்றை வழங்கியிருக்கிறேன். உண்மையில் நான் இங்கு குறிப்பிட விரும்புவது ஆபிதீன் அண்ணனின் சிறுகதைகள் குறைந்தது இருபத்தி ஐந்து மசில்வெடிகளுக்கு நிகரானது என்பதைத்தான்.அது தன்னகத்தே ஒரு இலக்கை வைத்துக் கொண்டே இலக்கின்றி சுட்டுத் தள்ளிவிடுகிறது. இந்த குமரி மாவட்டத்துக்காரர்களிடம் நிறைய மொழி குழப்பம் உண்டு. மொழியல்லாத வேறுபல குழப்பங்களும் உண்டு.உடல்உறவுக்கும் இங்கு வெடி என்று ஒரு பெயர் இருக்கிறது.பட்டாசுக்கும் வெடி என்று பெயர் இருக்கிறது.துப்பாக்கிக்கு தோக்கு என்றும் சுடுவதற்கு வெடி என்றும் பெயர் இருக்கிறது. ஒருவன் வந்து 'நான் வெடி போட்டேன்' என்றால் நாம் ஆளைவைத்து புரியவேண்டும். அதுபோல தோக்குக்கும் இன்னொரு பொருள் இருக்கிறது. அவன் தோக்கத் தூக்கிட்டு வந்தான் என்று சொல்லும் போதும் நாம் அதனை மிக நுட்பமாக புரியவேண்டும். மசில்வெடி தோக்கு வைத்திருந்த ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பகலில் சண்டை.அவள் சண்டையின் உச்சத்தில் சொன்னாள் "நைட்டு தோக்கத் தூக்கிட்டு வா அத தறிக்கனா என்னான்னு பாரு..." தறிப்பது என்பது வெட்டுவதாக அர்த்தம்.மெய் பொருள் காணபதுதான் அறிவு.ஆபீதீன் கதை ஒரு இடத்தில் இப்படி சொல்கிறது.
கையிலே ஓட்டமில்லை
வீட்டிலோ திட்டமில்லை
ஓடினேன் துபாய்க்கு
உழைத்தேன்.... உழைத்தேன்...
அப்பாடா
ஒருவழியாக செட்டில் ஆனேன்
- சிலோன் காரியோடு! இதன் கீழே ஒருவழியாக துபாயில் இன்னொரு தமிழ் கவிஞன் பிறந்துவிட்டான் என்பதில் நானா ஒரு டானைப் போல நின்று நாலாபக்கமும் மசில்வெடிகளை சுட்டுத்தள்ளுகிறார்.
கொஞ்சம் சிரித்தால் சிரிக்கலாமே என்கிற அடிப்படையில்தான் நான் இவ்வாறாக இதன் உலகை விரிக்கிறேன்.
ஆபிதீனின் நூல்பற்றி எழுதும் போது குறைந்தபட்சம் இந்த சுவை நமக்கு வராமல் போனால்தான் அதிசயம். நீண்டகாலமாகவிட்டது  எழுத்தை நுகர்ந்து மீளமுடியாத அளவுக்கு மயங்கி.அந்தரத்திலிருந்து தூக்கி வீசி ஒரு வாசகனை சிதறி தெறித்துப் போகாமல் பூப்போல அவனை நிலம்பாவச் செய்யும் இந்த எழுத்துக்காரனை ஏன் இன்னும் போதுமான அளவுக்கு எவனும் கொண்டாடவில்லை என்பதுதான் தெரியவில்லை.கொண்டாடப்பட வேண்டியவரை கொண்டாடாமல் புறக்கணிப்பதின் வாயிலாக இங்கு உருவாக்கி வளர்க்கப்படும் உள்ளார்ந்த அரசியலின் சோகம் நம் தலைக்கு மேலாகப் பறந்தபடியே  இருக்கிறது. இங்கு நாயகப் பிம்பத்திலிருக்கும் எவரின் எழுத்தைவிடவும் ஒருபடி மேலானது இவ்வெழுத்து.ஆனால் ஆபிதீனின் எழுத்தில் நுழைவதென்பது இலகுவான ஒரு நிகழ்வு இல்லை.அதற்காக வாசகன் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் நிமித்தமாக நம் காலத்தின் பொக்கிஷமொன்று மறைந்து கிடப்பதின் வலி எனக்குள் பரவுகிறது.

Thursday 11 May 2023

பெருவெளியில் விட்டெறியப்பட்ட கவிதை

          பெருவெளியில் விட்டெறியப்பட்ட கவிதை
                     -மீரான்மைதீன்

            பல அர்த்தங்களிலும் ஒரு சூஃபியின் மனம் என்பது பெண்மையின்,தாய்மையின் மனம் போன்றதுதான்.இதனோடு படைப்புமனமும் கலைமனமும் இசைவு கொண்டிருந்தால் அது மேலும் ஒரு ஆனந்த அனுபவமாகிவிடுகிறது.
சில படைப்புகளை வாசிக்க நேர்கையில் அதன் மைய்ய ஓட்டம் நமக்கு புலப்படும் போது நாம் அதற்குள் வெகுவாக ஈர்க்கப்பட்டு விடுகிறோம். நாம் தனித்தனியாக ஏராளமான அனுபவங்களின் குவியலாக இருக்கிறோம்.ஆனால் அனுபவங்களுக்கு நம்மிடம் தனித்தனியான பெயர்கள் இல்லை. அளவுகளுமில்லை.இவைகளின் அளவுகளாக நாம்தான் இருக்கிறோம். இலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமான அகப்பற்றுடையது என்பதால் கவிதைகளின் அனுபவத்தோடு சொல்லவியலாத ஈர்ப்பு மானிடசமூகத்துக்கு உண்டு. இதன் நிமித்தமாக கவிதைகள் நம்மை வந்தடையும்போது அது விசையாக இழுக்கவோ விலக்கவோ அல்லது இரண்டுக்கும் மத்தியில் ஒரு மாயம் போலச் சுழலச் செய்வதையோ செய்துவிடுகிறது.இது எல்லோருக்கும் ஒன்றுபோல நிகழவேண்டுமென இல்லை.அது தனித்த அல்லது ஒரு அலைவரிசையின் கூட்டு  மனப்பிரயாசங்களின் இயக்கம்.
       
   எனக்கு இப்புதிய ஆண்டில் கவிஞர் அம்முராகவின் ஔவையின் கள்குடுவை கிடைக்கப்பெற்றபோது மேம்போக்கான ஒரு வாசிப்புக்குப் பிறகு இப்போது முழுமையான மற்றுமொரு வாசிப்பு வசமாகியிருக்கிறது.இந்த மற்றுமொரு வாசிப்புதான் எனக்கு இவரின் கவிதைகள் மீது தனித்த மனப்பிரயாசங்களை உருவாக்கியிருக்கிறது.பொதுவாக கவிதைநூல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புகளில் வேறு வேறு தனித்தனி அனுபவங்களைத் தரக்கூடியதாக இருக்கிறதென்பதை நாம் காலதேச வர்த்தமானங்களைக் கடந்து உணரமுடிகிறது.
கடலை மிக அருகில் எல்கையாகக் கொண்டு வாழும் நிலத்திலுள்ள உயிருக்கும், கடலற்ற நிலத்தைக் கொண்டிருக்கும் உயிருக்கும் இயல்பிலேயே  உண்டாகியிருக்கும் பார்வை நுட்பம் கவிதையில் மைய்யம் கொண்டு அது பிரதியில்  இன்னொரு காட்சிச் சித்திரமாகிற வியப்பை இத்தொகுப்பின் சிலக் கவிதைகளில் கண்டுணரமுடிகிறது.நாம் அறிந்தும் அறியாமலும் இயங்குவது போல கவிதையும் இந்த கூறுகளைக் கொண்டிருப்பதை உணரலாம்.
"கடலற்ற ஊரில் கடல்க்காரன் சொல்லும் கடல் கதைகளின் மீது நான் ஒரு  கப்பலில் பயணிக்கிறேன்."
இவ்வாறு இந்த தொகுப்பிலுள்ள பல கவிதைகளில் கடலின் மீதான ஈர்ப்பும் மயக்கமும் தொடர்ச்சியாக இயங்குவதின் ஆழம் கடலைப்போல இரகசியமாகவே கிடக்கிறது.

செங்காந்தாள்,அனிச்சம் என இரட்டைப் பிரிவுகளாக ஔவையின் கள் குடுவையிலுள்ள கவிதைகள் மனசுக்கும் இயற்கைக்குமிடையேயும், கனவுக்கும் நனவுக்குமிடையேயும் நிகழ்கின்ற பயணம்.
நீ நீயாக இல்லாமல் வா நான் நானாக இல்லாமல் வருகிறேன் என்பது போன்ற சூஃபிய மனோநிலையின் நிறைவான கலப்பு போல,பிரபஞ்ச பேரியக்க இயற்கையின் மீது எல்லையற்ற அன்புகொள்ளும் இவரின் கவிதைகள் உருவாக்கும் உலகம் இன்னொரு பேருலகின்  நிலையாக மாறிவிடுகிறது.


கவிஞர் எனக்கு அவரின் முந்தைய கவிதைத் தொகுப்பான ஆதிலாவிலிருந்து அறிமுகமானவர். இப்போது என்மீதும் என் எழுத்தின் மீதும் நிறைவான அன்பும் மதிப்பும் கொண்டவரும் கூட.எனது கலுங்குப்பட்டாளம் நாவலை வெளியீட்டுக்கு முன்பாகவே வாசித்து அவற்றின் செம்மையாக்கத்துக்கு துணை செய்தவர் இப்போது எனது புதிய நாவலான திருவாழியிலும் இதுபோன்றே அவரின் பங்கிருக்கிறது. ஆதிலா கவிதைநூலுக்கு சிறகிடம் கைமாறும் கவிதைகள் எனத் தலைப்பிட்டு நான் எழுதியிருந்த முன்னுரையில் அம்முவின் கவிதைகள் மனதின் கடினங்களை எடுத்து காற்றில் வீசிக்கொள்ளாமல் மென்மையாகப் படர்கிறது என்கிற ஒரு குறிப்பை எழுதியிருக்கிறேன்.இப்போது இரண்டாவது தொகுப்பாக வந்திருக்கும் இத்தொகுப்பு  மனதின் ஓசைகளை உயிரியக்க பிரபஞ்சவெளியோடும் இயற்கையின் எல்லா அம்சங்களோடும் மெல்லியச் சாரல் போல நனைத்துக் கொண்டே ஊடுபாவுகிறது. இது ஒரு அசாத்தியமான பாய்ச்சலாக அவரிடத்தில் நிகழ்ந்தேறியிருக்கிறது. ஒரு கவிதையில் ஒரு தேநீர்  கோப்பையில் மழையைப் பிடிக்கிறார் மழையின் துளிகளால்  நிறைந்த கோப்பையில் அவருக்குச் சொந்தமாக ஒரு நதியும் கடலும் கைகூடுகின்றன. பிரிதொன்றில் ஒரு நதிப்படுகையில் ரகசியமாய் வசிக்கும் இரண்டு மீன்களின் கதையைச் சொல்கிறார். இன்னொன்றில் நேவாவின் கலம் பற்றிக் குறிப்பிடும் கவிஞர் ஆழ்கடலில் கிடக்கும் சிதிலமான கப்பல்பற்றியும் புதிய குறியீட்டுத் தன்மை வாய்ந்த கவிதைகள் புனைகிறார்.

தமிழ்நாட்டின் நிலவியலில் மத்தியபாகமான மதுரையின் அருகே தேனியில் வசிக்கும் கவிஞரின் மனம் முழுவதும் கடல் பெருக்கெடுத்துக் கிடக்கிறது.நான் இந்த மாறுபட்ட நிலவியலிலிருந்து இந்த கவிதைகளை அணுகும்போது என்னை இவைகள் பிரமிப்பிலாக்குகின்றன.கடல்மீது அளப்பரிய ஈர்ப்புக்கொண்ட எனக்கு கவிதையின் கடல்பற்றிய அற்புதவெளியில்  பலகுறியீடுகளை வரைந்து செல்வதையும் அதன் உள்ளார்ந்த மனதின் ஓசைகளையும்  அவதானிக்க இயலுகிறது.
படைப்பு என்பது வெறுமனே மனித மூளைமண்டலத்தில் உண்டாகிற சிந்தனைகள் மட்டுமல்ல அது ஆழ்மனதின் அதீத ஏக்கங்களை புதிய வார்த்தைகளால் பொதிவதாகவும் இருக்கிறது என்பதை கண்டடையும் புள்ளியாக இவரின் கடல்பற்றிய கவிதைகளைக் காணலாம்.பரந்துபட்ட வெளிகளில் பிரவேசிக்கும்  இவரின் கவிதைகளை யாரேனும் இதன் அம்சங்களில் பார்ப்பார்களாவென எனக்குத் தெரியவில்லை.ஆனால் இவ்வம்சம் அவ்வையின் கள்குடுவையில் முழுக்கமுழுக்கப் பார்க்கப்படவேண்டிய அம்சமாகக் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாக இருக்கிறது .

இந்த மானுட வாழ்வு விசித்திரமானது என்றால் பெண் வாழ்வு இன்னும் பலபடி மேலே விசித்திரங்களைக் கொண்டது. இயற்கையின் எல்லா அம்சங்களோடும் ஆலிங்கனம் செய்கிற கவிதைகள் பெண்ணுடல் பற்றிய கருத்துக்களை, சித்திரங்களை அனாயசமாக அடித்துக் கடந்து போகிறது."யோனிச் சுழியிலென் மூன்றாவது கண்ணை இப்படித்தான் திறந்து பார்த்தேன்" எனக் கவிதையொன்று முடிகையில் மீளமுடியாத மௌனச்சுமையேறிய ஒரு ஆண்மனம் நமக்குள் புரள்கிறது. சிலநேரங்களில் வார்த்தைகள் என்னை எடுத்தாட்கொண்டு உலவுகின்றன எனக் குறிப்பிடும் கவிஞரின் சிலவரிகள்  பெரும் நெருப்புக் குவியலுக்குள் புகுந்து கரிந்துபோகாமல்,ஒரு விளக்கைக் கொண்டுவருவது போன்ற செய்கைகளைக் கொண்டு அமைந்திருக்கிறது.இயற்கையின் மீதும் ஆதியின் மீதும் சிறு பெரு உயிரினங்களின்மீதும் கவிதையின் கண்கள் பார்க்கும் விதத்தில் ஒரு ஞானப்பார்வை உடையதாக தன்னை உருவாக்குகிறது.அர்த்தத்தை அவ்விடத்திலேயே வைத்துக்கொண்டு கவிதையின் மொழி ஔிவேகத்தில் பயணிப்பது சிலவற்றிலிருந்து ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட விதந்தோதும்  உண்மைகளாக இருக்கின்றன.

       நமக்கு ஏன் ஒரு கதை பிடிக்கிறது கவிதை பிடிக்கிறது என்கிற கேள்வியை முன்வைத்தால் நமது பிடித்தங்களுக்கு பல மாறுபட்டக் காரணங்கள் இருக்கலாம்.அவை ஒன்றுபோல ஒன்றிருக்காது.நாம் இங்கு ஏற்கனவே நமக்குள் பிடித்தமான விசயத்திலோ கருத்துகளிலோ இருந்துவருகிறோம் எனவே நமக்குப் பிடித்தமானவைகளில் ஒன்றோ அல்லது பலதோ நம்மை வந்தடையும் போது நமக்கு அது பிடித்தமானதாக நெருக்கமாகி விடுகிறது.இது ஒரு படைப்புக்குள்ளும் இயங்குகிறது. எனக்கு பூனைகள் ரொம்பவும் பிடித்தமானது.எனவே இந்த உலகில் யாருக்கெல்லாம் பூனைகளைப் பிடிக்குமோ,யாரெல்லாம் பூனைகளைப் பற்றிப் பேசுவார்களோ அவர்கள் எனக்கு எங்கிருந்தாலும் நெருக்கமாகி விடுகிறார்கள்.இத்தொகுப்பிலுள்ள முக்கியமான பத்துப் பதினைந்து கவிதைகள் பூனைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.இக்கவிதைகளோடு நான் இவ்வளவு சிலாகிப்பும் நெருக்கமாகவும் மாறிக்கொள்வதற்கு இந்த படிமங்களும் குறியீடுகளும் போதுமானது.இவைகள் எனக்குள் தகவமைக்கும் அனேக அர்த்தங்களும் அதன் வழி உருவாகும் சித்திரங்களும்  அலாதியான சுவையுடையது. பூனையின் பிளிறல் என்றொரு கவிதை கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்காய்  கோபம் கொள்கிறது.புதரில் பதுங்கிய அந்த பிஞ்சு பூனைகளின் மியாவ் ஒலி ஒரு யானையின் பிளிறலைப் போலக் கேட்கிறது.இந்த கவிதையின் உளவியலை அதன் மனதை இந்த பிரபஞ்ச மனதோடு கொண்டு பிணைத்துவிடுதாக நான் கண்டுகொள்கிறேன். தனது துயரங்களை மௌன ராகமாக மென்குரலினும் குறைவான ஓசையில் பேசிக்கொள்கின்ற இந்தக் கவிதையின் குரல் ஒரு சிறு உயிரின் வாழ்வு இருப்புக்கான குரலை இந்த கவிதை மொத்தப் பெரும் குரலாக  யானையின் பிளிறலோடு ஆகப்பெரும் ஓசையாக்குகிறார்.இன்னொரு பகுதியில் பூனை,மீன் குறியீட்டில் நான் ஒரு கெண்டை மீனைப்போல துள்ளி விழுகிறேன்.நீ என்னை ஒரு பூனையைப் போலக் கவ்விக் கொண்டுபோ என்பதன் முரண்பட்ட அர்த்ததளம் சில விசித்திரங்களைச் சூடிக்கொள்கிறது.இந்த சித்திரமே ஒரு உச்சமான காட்சியாக மலருகிறது. இதனோடான பயணம் முற்றுப்பெறவிடாமல் துரத்துகிறது. எனவே இந்த வரிகளில் பூனையாக கவ்வுவதும் மீனாக ஒப்புக்கொடுப்பதும் அகவயச்சார்பின் வலி அல்லது இன்பம் சார்ந்த உணர்ச்சி பெருக்காலான  முரணாகவோ கவிதை வரைந்து போகிறது.
  
       தனிமனிதர்களின் அகத்தன்மைகள்,உணர்ச்சிப் பின்னணி, தனித்தன்மை ஆகியவற்றிற்கிடையில் ஒரு பொதுச் சராசரி மொழி நிலவுவதாக சசூர் குறிப்பிடுகிறார். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை செங்காந்தள் அனிச்சம் என இரண்டு பிரிவாக வரையறுத்திருந்தாலும் அது மேலும் சில பகுதிகளாக விரிவடைகிறது. பெண்ணுடல்,இயற்கை,இயற்கையின் அம்சங்களில் காடு,மலை,கடல் மற்றும் வெளியின் அரூபங்கள், சிறுபூக்கள், பூனை,மீன்,யானை,என சிறுஉயிர்களில் நிகழும் கவிதையின் பயணம் மேலும் உயரிய சில அம்சங்களாகிறது. ஒன்றையொன்று ஊடறுத்து செல்லும் கவிதையின் நிலப்பரப்பு ஒரு எல்லையிலிருந்து கடந்து பெரும் பார்வையைக் கொண்டிருக்கிறது.இது கவிதையின் போக்கிலோ அடுக்கிலோ மிக இயல்பாக வர்ணப்பூச்சுகளற்று உண்மையாக இருக்கிறது.ஒரு சிறு துவாரத்திலிருந்து பேருலகைப் பார்ப்பதும் பேருலகிலிருந்து ஒரு சிறு புள்ளியைப் பார்ப்பதுமான வினோத விளையாட்டைக் இந்தக் கவிதை தனக்கு வசமான பரப்பில் கொண்டாடுவதையும் அவதானிக்க இயலுகிறது. பெருங்கடலைக் காதல் கொண்டு பார்க்கும் கவிதையே, சிதிலமடைந்த பழைய படகின் இண்டில் சேகரமான மண்ணில் வளர்ந்த செடியின் சிறு பூக்களையும் கொண்டாடுகிறது. தன்னை இயற்கையோடும் இயற்கையை தன்னோடும் அனாயசமாக இணைத்துக்கொள்கிற நுட்பமான கவிதைகளை கண்டடைந்திருக்கிறார். பிரகாசமான ஒரு பூவின் பூப்பைப் போல வந்துதித்த யானை இருளில் இருளாகக் கிடக்கிறது என்கிற கவிதைவரிகளில் நாம் மயக்கமுறுகிறபோதே, அவர் இரகசியமாக யானையொன்றை கொசுவத்தில் முடிந்து வளர்த்து வருவதாக வரும் கவிதைக்குள் நாம் எண்ணிப் பார்க்கமுடியாத சித்திரக் குறிப்புகள் தோன்றி ஒரு  காட்சி இன்பத்துக்கு கொண்டு போகிறது. எனது தும்மலின் நிமித்தமாக அது வனத்தில் பிளர்கிறது.அல்லது அதன் பிளிர்தலின் நிமித்தமாக நான் தும்மலிடுகிறேன்.இதுபோன்ற கவிதைகளிலிருந்து நம்மால் கடந்தே போகவியலாது.
பெண்ணாலானது உலகு, பெண்தன்மையுடையது இயற்கையின் அம்சங்கள் .இந்த பிரபஞ்சத்தில்  உலவும் எல்லா உயிர்களுக்குள்ளும் வியாபித்திருக்கும் பெண்மையைக் கொண்டாடி கொண்டாடி கவிதைகள் ஒவ்வொரு முனையில் உற்சாகம் கொள்கின்றன.இதன் மொத்தக் கவிதைகளின் மையச்சரடு இதுவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நேசத்தை விதைத்து நேசத்தை அறுவடை செய்யும் ஔவையின் கள்குடுவை பேரனுபவமாக உணரமுடிகிறது.

ஒரு கவிதை நூலை பெரும்பாலும் நாம் இங்கு மேம்போக்காத்தான் பார்க்கிறோம்.அதற்குள் புகுந்து வெளியேறும் வித்தைகள் எப்போதும் ஒரு வாசகனுக்கு வாய்த்துவிடும் என்று சொல்ல இயலாது.கவிதை ஏராளமான அனுபவங்களைக் கொண்டிருந்தால் நாம் அதில் நுழைந்து வெளியேறும் போது அதன் சில அனுபவங்களைப் பெறுகிறோம்.இங்கே இது என்னை இவ்வாறு நீண்ட பேச்சுக்கு இட்டுச் செல்லக் காரணமாக நான் கருதுவது இக்கவிதைகள் எல்லாவற்றின் மைய்ய அரசியலாக அது பெண்மையைக் கொண்டாடக் கூவுவதை நான் உணருவதால்தான்.
சூஃபிய சிந்தனையில் பெண் உயர்வான ஓர் அம்சமாக இருக்கிறாள்.எனவே இது எனக்கு ஏற்புடைய குரல்."சக்தியாய் சிவனாய் இந்த தரணியிலாக்கியெனை " எனத் தொடங்கி மதுரமோடு உருவாய் எனை வகுத்தவா என பீரப்பா பாடுவார்.நாம் மதுரத்தின் உருவ அடையாளமாக இருக்கிறோம். ஔவையின் கள்குடுவையில் சக்தியே எல்லாமுமாக இருக்கிறாள்.அவள் மதுரமாக இருக்கிறாள்.ஆணாக பெண்ணாக கடலாக,காடாக,யானையாக,பூனையாக, போத்தலில் அடைபட்ட இரவாக, நதிப்படுகையாக,இரகசிய சீசாவாக, ஒரு பூந்தொட்டியில் நட்டு வைக்கப்பட்ட மீசையாக,இந்த கவிதைகளின் வெளியெங்கும் சக்திதான் மதுரமாகப் பரவி நிற்கிறாள். அவர்  குறிப்பிடுவது போல இம்முறை அவர் கவிதைகளை பெருவெளியில்தான் விட்டெறிந்திருக்கிறார்.எனவே அதனை நாம் கண்டடைய கொஞ்சமல்ல நிறைய மெனக்கெட வேண்டும். இத்தொகுப்பின் சாரங்களிலமர்ந்து  நீண்ட பேச்சுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

"குப்பியில் அடைபட்ட கப்பல்"

'நெடுங்கடலின் ஆழத்திலொரு மீனைப்போலப் பறக்கவோ
பெருவெளியிலொரு பறவை போல
நீந்தவோ வாய்த்திடாத இவ்வாழ்வு
குப்பியிலடைபட்ட கப்பலாய்
எல்லோருக்குமான ஆச்சரியமாய்
மிதக்கிறது

அற்புதம் தோய்ந்த கண்களின்
காட்சிப் பொருளாய்க் கிடக்கிறது குப்பிக்குள் கப்பல்

வந்து வந்து பார்த்துச் செல்லும்
எல்லா கண்களுக்கும்
குப்பியில் புகுத்தப்பட்ட கப்பலின் அதிசயம் தெரிகிறது

குப்பிக்கு வெளியே
சாகர சாட்சியாய் படரும்
என் காதலின் சுவாசம்
அதிசயம் பார்க்கும் கண்களுக்கும்
காற்றுக்கும் தெரியாது

குப்பியில் அடைபட்ட
அலங்காரக் கப்பல்
இதுவரையிலும் கடல் பார்த்ததில்லை

குப்பியில் அடைபட்ட நான்
கடல் கன்னியாக இருக்க
கனவில் இழைபவன் கடலாக இருக்கிறான்.
நான் நெடுங்கடலின் ஆழத்திலொரு
இறகு முளைத்த,
குப்பியின் கழுத்துப் பகுதியின்
இடர் கடந்து நீந்திப் பறக்கும்
மீனாவது எப்படி சாத்தியம்

கண்ணாடிக் குப்பியில்
அடைபட்டு அலங்காரப் பொருளான
கப்பலுக்கு குப்பி உடைத்தல்
அத்தனை சுலபமானதல்ல

காட்சிப் பெட்டகத்திலான இருப்பு
எப்போதாவது தூசு தட்டப்படும்
பொழுதுகளில் இளைப்பாறுகின்றன
பெருமூச்சுகளை அடக்கிக் கொண்டு
எடுக்கப்படும் சிறுமூச்சுகளில்.

கவிதையின் வரிகள் எளிமையானதுதான் என்றாலும் அது விரிக்கும் உலகம்  பன்மைத்துவமான அர்த்தத்தளங்களில் இயங்கும் வலிமை கொண்டது.

Sunday 7 May 2023

பர்தா- நாவலின் உள்ளும் வெளியும்- எம்.மீரான் மைதீன்

       பர்தா- நாவலின் உள்ளும் வெளியும்
                    எம்.மீரான் மைதீன்


 இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியைப்  பூர்வீகமாகக் கொண்ட நாவலாசிரியர் ஃபாத்திமா மாஜிதா தற்போது லண்டனில் வசிக்கிறார். இலங்கையின் எமூத்த எழுத்தாளரான எஸ் எல் எம் ஹனிபா அவர்களின் மகளான மாஜிதா, எழுத்தின் ஒரு பாரம்பரிய தொடர்ச்சியாக நமக்கு இந்நாவலின் வழியே அறிமுகமாகிறார்.மரபு ரீதியாக அவருக்குள் குடிகொண்டிருந்த எழுத்து இப்போது இந்த நாவலின் வாயிலாக  விசாலமான சமூகப்பார்வையோடு வெளிப்பட்டிருக்கிறது.இந்த வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாக மாஜிதா தனது நாவலான "பர்தா"வை தந்திருக்கிறார். எதிர் வெளியீடு வெளிக்கொண்டு வந்திருக்கிற இந்த நாவல் பல சிறப்புக்களையும், காத்திரமான  விவாதப் புள்ளிகளையும்  கொண்டிருக்கிறது.இந்த நாவலை மாஜிதா,மறைந்த கவிஞர் ஹெச் ஜி ரசூலின் நினைவுகளுக்கு சமர்பித்திருக்கிறார்.


உயிரினங்களில் உடை என்பது மனித சமூகத்துக்கு மட்டுமேயானது. மனிதர்கள் விதவிதமான உடைகள் அணிகின்றனர்.ஆடையின் வாயிலாக தங்களை அழகுபடுத்துகிறார்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.
விடுதலைப் போராட்ட களத்திலிருந்த மகாத்மா காந்தி அரையாடை அணிந்திருந்தார்.நேரு அப்போதே நவநாகரீக உடையணிந்து வலம் வந்த உன்னதமான அரசியல் தலைவர். அண்ணல்  அம்பேத்கார் தனது அழகிய உடையை ஒரு போராட்ட யுக்தியாகவே பிரகடனப்படுத்தி அணிந்தவர். தமிழ்நாடு கேரளாவில் வேட்டி அணிவதுபோல இந்தியாவின் பிற மாநிலங்களில் அணிவதில்லை. அவர்கள் உரிமைக்குரல் எம்ஜியார் வேட்டி போல அணிந்திருப்பார்கள். பெண்களின் புடவையிலும் கூட இந்த வகை மாதிரிகள் நிறைய உண்டு. மார்வாடி பெண்களின் புடவை அணியும் முறையும், பிராமண சமூகத்தில் பெண்கள் மடிசார் கட்டும் முறையும்,இஸ்லாம் பெண்கள் முட்டாக்கு போடும் முறையும் காலந்தொட்டே நீடித்திருக்கும் பண்பாட்டுப் பாரம்பரியமானதுதான். உலகெங்கிலும் மனிதர்கள் அணிகின்ற உடைகளை ஆராய்ந்து பார்த்தால் நிலம்,காலநிலை,தனித்த பண்பாடுகள் என ஏராளமானவைகள் அவற்றிற்குள் பெருஞ் செய்திகளாக  இருக்கின்றன. சிந்தனையாளர் சுவாமி விவேகானந்தரால்,மனநோயாளிகளின் கூடாரம் என அழைக்கப்பட்ட  பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கடுமையான சாதிய ஒடுக்குமுறைகள் இருந்த காலத்தில்  குறிப்பிட்ட சாதியினரைத் தவிர்த்து,பெண்களில் மற்றவர்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்ட நிலையிருந்தது. அக்காலத்திலும் இஸ்லாமிய பெண்கள் குப்பாயம் அணிந்து வந்தனர்.மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் ஒரு உரையாடலில் குறிப்பிட்டார் சமஸ்தான காலத்தில்  குமரிமாவட்ட முளகுமூட்டில் வைத்து ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த ஒரு பெண் மேலாடை அணிந்து வந்த நிலையில் அவள் மார்பை அறுக்க முயன்றபோது அப்பெண்மணி அங்கிருந்து தப்பியோடி குளச்சலில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் தஞ்சம் புகுந்ததாகவும் பின்னர் அவர் அங்கேயே  இஸ்லாமியராக மாற்றம் பெற்றுக் கொண்டு குப்பாயம் அணிந்ததாக ஒரு செய்தியைக் குறிப்பிட்டார்.அரபு சமூகத்தில் அறியாமைக் காலத்தில் பெண்கள் ஆடையின்றி வலம் வந்த செய்திகள் கிடைக்கின்றன.
கிருஸ்தவ பின்புலத்தில் அருள்சகோதரிகளாக வாழ்பவர்களின் உடை ஒரு அடையாளத்தைக் கொண்டிருப்பதையும் அவர்கள் திருமணபந்தங்களில் ஈடுபடுவதில்லை என்பதும் அவர்கள் மரபாக இருக்கிறது. அதுபோல சில ஆசிரமங்களில் மாதவிடாய் திட்டு போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு கர்ப்பபை அகற்றும் போக்கு பற்றி சில செய்திகள் வந்த நிலையில் அவைகள் பெரிதாகப் பேசப்படவில்லை. 
அரபு நாடுகளில் பெண்களின் பர்தா உடையை சவுதி அரேபியா மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் ஒரு நாடாக இருந்தது.மற்றைய அரபு நாடுகள் குறிப்பாக துபாய் போன்ற நாடுகள் தனிமனித விருப்பங்களுக்கு மதிப்பும்  முதன்மையும்  வழங்கியது. முழுக்க மூடிய பர்தா அணிந்து நடமாடும் பெண்களையும் அங்கு பார்க்கலாம் அதே நேரத்தில் மேற்கத்திய கலாச்சார உடையில் நடமாடும் பெண்களையும் பார்க்கலாம்.மனிதர்கள் தங்கள் விருப்பத் தேர்வுகளை செய்து கொள்ளலாம் அது எவ்வகையிலும் இன்னொரு மனிதனை பாதிக்காததாக இருக்க வேண்டும். எனது உடை என்பது எனது உரிமைதான்.நான் நிர்வாணமாக நடமாடினால் அது பிறருக்கு குந்தகம் விளைவிக்கிற செயல்.ஆனால் நான் ஒன்றுக்கு  இரண்டு சட்டை அணிந்து கொள்வதால் யாருக்கும் ஒரு பிரச்சனையும் ஏற்படுவதில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ளலாம்.
இஸ்லாம் உலகம் முழுவதும் ஊடக பலமற்ற சமூகமாக இருப்பதையும், அல்லது பொதுவான உரையாடல்கள் வருகிறபோது அவற்றில் இன்னும் மதவிவகாரங்களில்  ஜனநாயகப் பார்வையில் தன்னை வளப்படுத்திக் கொள்ளாத சிலர் இருப்பதையும் அவதானிக்கலாம்.மதஅறிஞர்கள் போதுமான அளவுக்கு பொதுக் கல்வியில் தங்கள் இருப்பை அமைத்துக் கொள்ளாத நிலையில் தொடர்ந்து கருத்தியல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய இடத்தில் பலவீனமான உரையாடலை மேற்கொள்ளும்  நிலையை முற்றிலும் மறுக்க இயலாது.
வரலாறு திரிக்கப்பட்ட நிலையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை 1947க்கு முந்திய இந்தியாவின் கண் கொண்டு பார்க்கத் தெரியாத தலைமுறையின் பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்த அல்லது அவை குறித்த விசாலங்களை, உண்மைகளை  அரிதாகவே சிலர்  பேசுகின்றனர். இஸ்லாமியர்கள் விடுதலைப் போராட்ட அம்சமாக ஆங்கிலக் கல்வியை புறக்கணித்து தாங்கள் எல்கைகளைச் சுருக்கிக் கொண்டவர்கள்.இந்த வரலாற்றின்  மேலும் பல அம்சங்களை நாம் தட்டையாக அணுகாமல் ஒரு திறந்த மனம் கொண்டு விவாதிக்கப்பட வேண்டிய ஒரு காலமாக இன்றைய காலமிருக்கிறது.
இஸ்லாமிய ஆண்கள் இஷ்டத்துக்கு திருமணம் செய்யலாம் என்கிற ஒரு கருத்தியலை ஊதிப் பெருக்கும் பொதுமனம், இதல்லாத
இஸ்லாமிய ஆண்களின் வேறு  விசயங்களைப் பேசுவதில்லை. மாறாக  இஸ்லாமிய பெண்களின் விசயங்களை பேச அலாதி விருப்பமுடையவர்களாக இருப்பதையும் நாம் கவனிக்கலாம். இஸ்லாமிய பெண்கள் விசயத்தில்  தலாக் மற்றும் உடை விசயத்தில் நிறைய பேச்சுக்கள் இந்த உலகில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த அளவுக்கு இந்த உலகில் வேறு ஏதேனும் விசயங்கள் பேசப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் ஆச்சரியமான உண்மை. உண்மையில் அது அவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் என்றால் அது  எந்த அடக்குமுறையாக இருந்தாலும் அவைகளுக்கு அடங்காமல் மனிதர்கள்  வெளிப்படும் தருணங்கள் உருவாகமல் போய்விடப் போவதில்லை. எல்லா சமயத்திலும் பெண்கள்தான் பெரும்பாலும் மத அடையாளங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இந்தியச் சூழலில் மத அடையாளங்களை தூக்கிச் சுமப்பது பெருகியது எனலாம்.மசூதி இடிப்புக்கு முன் பின் என சூழலை நாம் பிரித்துப்பார்த்தால் அந்த ஆய்வு நீண்டு போகும். புடவையின் முந்தாணையை நீட்டி தலையில் முக்காடாகப் போட்டுக் கொள்ளும் வழக்கம் மெல்ல விலகி அது அடையாள உடையாக பரிணாமம் கொள்கிறது.இப்போது பர்தா என்கிற வடிவம் பெரும்பாலும் எலலா இஸ்லாமிய குடும்பங்களிலும் குடியேறியிருக்கிறது.இந்த உடை பரவலாக நடைமுறைக்கு வந்த பிறகு இஸ்லாமிய பெண்களின் வெளியுலக வரவு என்பது புத்துயிர் பெற்றது. இப்போது கல்வி நிலையங்களில் மிக கணிசமான எண்ணிக்கையில் கல்வி கற்கின்றனர். இந்த புதிய சூழலை இந்த உடை வழங்கிய ஒரு மறுமலர்ச்சியாகவும் பார்க்கலாம்.
அரபு சூழலில் இஸ்லாமிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தியபோது நபிகளார் பெண்களுக்கு கௌரவமான ஆடை, அடிமை விடுதலை, விதவை மறுமணம் மற்றும் கல்வி என்கிற புரட்சிகரமான நிலைப்பாடு உருவாக்கினார். பெண் குழந்தைகள் உயிரோடு புதைக்கப்பட்ட அறியாமைக் காலத்தை, இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே புரட்டிப் போட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கூட இந்தியச் சூழலில்  சமஸ்தானங்களில்  ஆடை மறுப்பு, கல்வி மறுப்பு,சதி, அடிமைமுறை முதலியன நடைமுறையில் இருந்ததை இந்த நாவலை ஒட்டியே நாம் விவாதப்புள்ளியாக எடுத்துக் கொள்ளலாம்.


உலகில் முதன் முதலாக முற்றிலும் உடை பற்றிய உரையாடல் சார்ந்த நாவல் இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.உள்ளும் புறமுமாகத் தொடர்ந்து இன்றளவிலும் விவாதம் முற்றுப்பெறாத ஒரு உடையாகப் பர்தா இருக்கிறது.எனவே இதனை பாடுபொருளாகக் கொண்டு ஒரு நாவல் வரைவது நிசாரமான காரியமாகக் கருதமுடியாது.இன்னும் பேசித்தீராத இந்த உடை பற்றிய பெண்களின் குரல்  பேசவேண்டும்.ஆனால்  ஏன் பொதுசமூகத்துக்கு இவ்உடையின் மீது இவ்வளவு ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதையும் இங்குள்ள வரலாற்றுப் பின்னணியிலிருந்தும் பேச வேண்டும். இஸ்லாமிய பெண்கள் இவ்உடை மூலமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்றால் அவர்கள் அதனை மறுதலித்துப் பேச பூரண உரிமையுடையவர்கள். இதனை அவர்கள் குரலிலிருந்துதான் பேசப்பட வேண்டும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தலாம்.இஸ்லாம் இன்ன வர்ணத்தில் இன்ன வடிவத்திலென எங்கேயும் அது உடையை வடிவமைக்கவில்லை.அது அங்கங்களை மறைத்து ஆண் பெண் என இருபாலருக்கும் கண்ணியமான உடை அணியச் சொல்கிறது. காலத்தால் உடையின் வடிவங்கள் பலமாற்றங்களைப் பெற்று பல வடிவங்களாக வளர்ந்து இன்று இது அடையாள உடையாக வந்து நிற்கிறது. இங்கு பெரும்பான்மையினர் பல பிரிவுகளாக இருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் எதிர் பிம்பமாக இஸ்லாமியர்களை தேவைக்கு அதிகமாகவே கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியலாளர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட மனோபாவம் என்பது மிக சுலபத்தில் இந்த உடை மீது பாய்வதற்கு வழிகோலுகின்றன.இதன் அம்சங்களிலும் பேசப்பட வேண்டியதாக இந்த நாவலை முன்வைக்கலாம்.


1991ல்  செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒரு மேலங்கிபோல வடிவமைக்கப்பட்ட ஒரு உடையை அணிந்திருந்தார். அவருக்கு தொடர்ந்து பொதுவெளியில் இயங்க வேண்டிய தேவை இருந்ததையும் அதன் காரணமாக அசௌரியங்கள் ஏதும் இல்லாமல் இருக்க அவர் அந்த உடையைத் தேர்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.அந்த உடை எங்கள் ஊரில் பெண்கள் வீட்டில்  தொழுகையின் போது அணிந்து கொள்ளும் மக்ணா என்கிற உடை வடிவத்துக்கு நிகராக இருந்தது.தீவிர இத்துத்துவ செயற்பாட்டாளர் உமாபாரதியின் உடையும்,மலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவராக குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூரின் உடையும் கிட்டத்தட்ட முக்காடற்ற ஒரு காவி பர்தா போல இருப்பதையும் நாம் பார்க்கலாம். சூடான் பெண்கள் பலமடங்கு புடவையை உடம்பில் சுருள் சுருளாக சுற்றியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.பிரம்மகுமாரிகள் ஒருவகை உடையணிகின்றனர். உலகம் முழுவதும் உடைகள்,அதுவும் பெண்களின்உடைகள் பலவகையான பண்பாட்டு முகம் கொண்டது. ஆண் மைய்ய மானுட சமூகம் எல்லா மதங்களிலும்  தாங்கள் அடையாளங்களை பெண்களிலிருந்துதான் துவங்கியிருப்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாகவே அறியலாம்.ஆனால் இங்கு தொடர்ந்து ஒரு சாராரின் விசயம் பேசப்படுவதற்கும் தர்க்கிக்கப்படுவதற்கும் பின்னாலுள்ள அகமும் புறமுமான அரசியல் கூறுகள்  நுட்பமாக பார்க்கப்பட வேண்டியதாக இந்த நாவலின் வாசிப்பிலிருந்தும் குறிப்பிடுகிறேன். ஒரு படைப்புக்குள் விழும்  வாசகனை அதன் பரப்புக்கு வெளியேயும் காலவெளி கடந்து அவனை நகர்த்திக் கொண்டு செல்வதும் நிகழுகிறது.

கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பொதுவெளியில் இஸ்லாமிய பெண்களின் பங்களிப்பு , கல்வி, போராட்டக்களம், வேலையென முன் எப்போதுமில்லாத அளவுக்கு நிறைந்து கிடக்கிறது.இந்த நிறைவு சிலரைப் பயப்படுத்துவதை நாம் இப்போது தெளிவாகவே உணருகிறோம். பெண்கள் தனியாக விமானப் பயணம் செய்கிறார்கள், பெருநகரங்களுக்கு வேலை கல்வியென நீண்ட பயணங்களை தனியாக மேற்கொள்கின்றனர். சரி பாதி மானுடசக்தியின் பயன்பாட்டை இஸ்லாம் சமூகம் பொதுவெளியில் இட்டு நிரப்பியிருக்கிறது.கூடவே பர்தாவின் நிரப்புதலும் பெருகி இருக்கிறது.அவர்கள் சர்வசாதரணமாக வெளியுலகில் புழங்குகின்றனர். மூடுண்ட சமூகம் எனச் சொல்லப்பட்டு குறுகிய விமர்சனங்களை தூவியவர்களுக்கு இந்த உடை எரிச்சலை ஏற்படுத்துவதையும் இந்த உடையின் வாயிலாக அவர்களின் கல்வி மேம்பட்ட தன்மையை அடைந்திருப்பதும்  அச்சப்படுத்துகிறது. அதன் விளைவாக ஹிஜாப் தடை என இந்த உடையரசியலை எடுத்துக் கொண்டு முடக்க முயலும் அரசியலையும் நாம் பேச வேண்டியவைகளாகப் பார்க்கலாம். இலங்கைச் சூழலில் நாவலின் கதைக்களம் இருந்தாலும் இந்தியச்சூழலில் சிறுபாண்மை மக்களின் மீது உருவாக்கப்படும நெருக்கடிக்குள்ளிருந்தும் இந்த நாவல் அவதானிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

நாவலில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன.இதன் உயிராக நாவலில் வரும் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆபிதாவின் ஒற்றைச் சொற்கள் மற்றொரு பெரும் உரையாடலுக்கான சிறப்பு புள்ளிகளாக தொடக்கம் பெருகின்றன. அவற்றையும் விட்டுவிட முடியாது.இலண்டன் பூங்காவில் பர்தா அணிந்த பெண்மீது அந்த ஆங்கிலேயப் பெண்மணி அத்துணை வன்மமாகப் பாய்வது உலகம் முழுவதும் எத்தகைய சித்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

வழக்கறிஞரான நாவலாசிரியர் இன, ஆணதிகார,அடிப்படை வாதங்களுக்கு எதிராக மிகக் காத்திரமான உரையாடலை இஸ்லாம் சமூகத்துக்கு உள்ளேயும் வெளியேயும்  தொடர்ந்து உரையாடி வருபவர்.மூன்று தலைமுறையின் மாறுபட்ட பார்வைகள் பதிவு பெறுகின்றன.கடந்த கால் நூற்றாண்டில் இந்த உடையின் பெருக்கம் எவ்வாறு வளர்ந்தோங்கியது.வாழ்க்கை ஆதாரங்களுக்காக பல்வேறு நாட்டினர் வளைகுடா நாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றனர்.தகவல் தொழில்நுட்பம் உலகின் காட்சிகளையெல்லாம் நம் இருப்பிடங்களில் கொண்டு சேர்த்திருக்கிறது.கலாச்சாரங்கள் இங்கும் அங்குமாங் ஊடுபாவி இருக்கின்றன.வலுகுறைந்ததை வலுவானது உண்ணும் என்பதுபோல பெரும் சக்திமிக்க பண்பாடுகள் சில பிரதேசங்களின் நுண்பண்பாடுகளைக் கபளிகரம் செய்திருக்கின்றன.நாம் நாவலை இந்த கால மாற்றங்களிலிருந்தும் உலகமயமாக்கலின் ஆதிக்க பரவலிலிருந்தும் கூட பேசப்பட வேண்டிய விடயமாக காணலாம். இந்த நாவலில் அதன் எல்லா அடுக்குகளும் நிமித்தங்களும் பதிவாகி இருக்கின்றன.எந்த சாராரும் ஒரு ஒற்றைக் கண் கொண்டு வாசிக்கப்பட வேண்டிய புதினமாக இது இல்லை என்பது இதன் சிறப்பு.இவற்றை நாம் கால்நூற்றாண்டு கால சர்வதேச சமூகத்தில் நிகழ்ந்துள்ள உலகத்தை ஒருங்கிணைத்தல் தன்மையின் கூறுகளை உள்வாங்கி வாசிக்கப்பட வேண்டியதாகும்.உடையரசியல் மட்டுமல்லாது இஸ்லாம் சமூகத்துக்குள் தர்ஹா,பிரதேச பண்பாட்டு நிகழ்வுகள் என பலவிடயங்களில் அதன் தாக்கம் அப்பட்டமானது.இதனடிப்படையில் மாஜிதா இந்த நாவலை சர்வதேச தரத்தில் தந்திருக்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இஸ்லாம் சமூக சமய,பண்பாட்டுப் பிரச்சனைகளை,உள் முரண்களை எழுதுகின்ற இச்சமூகத்தின் பெரும்பாலான படைப்பாளிகள் துணிச்சலாகவே சுயவிமர்சனங்களை முன்வைப்பதையும்,அவற்றை காத்திரமாக எதிர் கொள்வதையும் நாம் கண்டு வருகிறோம்.தமிழ் சூழலில்,இதிலிருந்து விலகி மற்றொரு நிலையில் இங்குள்ள முற்போக்கு படைப்பாளிகளில் பலரும்கூட சுயசாதி பெருமை பேசும் எழுத்துக் கொண்டாட்டங்களில் இருப்பதையும் அறியமுடிகிறது.

பர்தா நாவலை முன்னெடுப்பாகக் கொண்டு அரசியல், உடையரசியல், அடையாள அரசியல், பண்பாட்டுக் கூறுகளில் இவை என்ன தாக்கங்களை உருவாக்குகிறது, உடை ஒடுக்குமுறையா அல்லது விடுதலையா என விரிவடையும் விடயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உரையாடலுக்கான களமாக பர்தா நாவலைக் கொள்ளலாம். கொள்வேண்டும் என்பதுதான் முதன்மையானது.இந்த நாவலின் வெற்றி என்பது அது பல நூற்றாண்டு கதைகளை நமக்குள் மறுபார்வை செய்யவும் விவாதிக்கவும்  துணை புரிகிறது. இணையவெளியெங்கும் இஸ்லாமிய உரையாடல்கள் பல விசமக்காரர்களால் வெறும் குப்பையைப் போல பல்கிக் கிடக்கிறது. சாதாரணமாக ஒருவர் அதன் வழி இதனை அணுக முயலும் போது அவர் மனம் எவ்விதமான கட்டமைப்புக்கு செல்லும் என்பதை சிந்திக்க இயலவில்லை.எனவே இங்கு அரோக்கியமான விவாதங்களும் அதனுடைய பதிவேற்றங்களும் அவசியமான காலமாக இருக்கிறது.

நாவலாசிரியர்  மாஜிதாவுக்கு நிறைவான அன்பின் வாழ்த்துகள்.

Friday 5 May 2023

கடல் பழகுதல்


 கடல் பழகுதல் 
ஒரு யுகத்துக்கான எழுத்து
                      எம்.மீரான் மைதீன்

கிட்டத்தட்ட நாற்பதுக்கும் அதிகமான நூல்களை படைத்திருக்கிற முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார் என்பதில் இப்போதும் பெருமிதம் ஏற்படுகிறது. அவரின் எல்லா நூல்களையும் வாசிக்காவிட்டாலும் சிலவற்றை முன்னமே வாசித்திருக்கிறேன்.அவரின் நூற்களை கொஞ்சம் அகன்ற வாசிப்புக்கான காலம் கனிந்திருப்பதாக உணர்கிறேன்.முன்னமே வாசித்த நூல்களில்   "வர்ளக் கெட்டு" சிறுகதை நூலும் ஒன்று. எழுத்தின் எல்லா முனைகளிலும் அவர் தன்னைக் கூர்தீட்டி,தனது நீண்ட பயணத்தில் அவ்வாறு கூர்தீட்டிய தனது எழுத்துக்களை நல்ல ஆயுதமாக சமூகத்துக்கு ஒப்படைத்திருக்கிற ஒரு பெரும்பணியை செய்திருக்கிறார், செய்து கொண்டிருக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இந்த வரிசையில் படைத்து மானிட சமூகத்துக்கு கொடையளிப்பதென்பது  லேசான பணியல்ல,கடின உழைப்பும் இலட்சிய வேட்கையும் கொண்ட பிரதிபலன் பாராத ஒருவருக்கே சாத்தியமானது.



இப்போது சில தினங்களாக முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கடல் பழகுதல் நூலை வாசித்து நிறைந்திருக்கிறேன்.ஒரு நூல் என்ன செய்துவிடும் என்பவர்களுக்கு ஒரு நல்ல நூல் காலத்தால் எல்லாம் செய்துவிடும் வல்லமை கொண்டது என்பதை தவிர வேறு பதிலெதுவும் சொல்லத் தேவையில்லை.இதன் உறுதியை,உண்மைத் தன்மையை "கடல் பழகுதல்" வாசகர்களுக்கு மெய்பிக்கிறது.



கடல் அழகானது,எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது, குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை கடலைக் காணும் போது உற்சாகம் கொள்கின்றனர், கொண்டாடுகின்றனர். உற்சாகமிகுதியில் அலைகளோடும் கடலின் கரைகளோடும் விளையாடுகின்றனர். ஆர்பரிக்கும் கடலின் அழகில் ஆனந்தமடைதல் என்பது மனிதர்களுக்கு எப்போதும் ஆனந்த தாண்டவம்தான்.எந்த ஊருக்குப் போனாலும் கடல் பார்க்க வேண்டும் என்பது எனது அதீத விருப்பங்களில் ஒன்று.தொடர்ச்சியாக கடல் பார்க்க கிடைக்காத நாட்களின் எண்ணிக்கை கூடிப்போகும்  பல தருணங்களில் நான் வெறுமையாக உணர்ந்திருக்கிறேன். இயற்கையின் பேரம்சமான உப்புக்கடலில் இந்த நிலம் பாதுகாப்பாய் கிடப்பதாக நான் கருதுகிறேன்." ஊத்தைச் சடலம் படைத்து உலையாமலே உப்புக்கடலைப் புகுத்தி "என்று சூஃபிஞானி  ஞானமாமேதை பீர்முகம்மதப்பா அவரின் ஞான ஆனந்தகளிப்பில்,பாடியிருப்பார்.இந்த நிலத்தை  கடல்தான்  உலையாமல் பார்த்துக் கொள்கிறது. எனக்கு கடலின் மீதான காதல் அதீதமானது. விமான பயணங்களில் நான் நிலத்தின் மீது பறக்கும் போது இருப்பதை விட கடலின் மீது பறக்கும் போது ரொம்பவும் பாதுகாப்பாய் உணருவேன்.என்னோடு ஒருமுறை பயணித்த ஒரு பயணிக்கு இது விந்தையாக இருந்தது.அவர் ஆச்சரியமடைந்து காரணம் கேட்டார். பிரத்யோகமான காரணம் என்றால் நான் கடல் மீது காதல் கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான் என பதில் சொன்னேன்.இவ்வாறான மனநிலை கொண்ட எனக்கு "கடல் பழகுதல்" நூல் எண்ணிலடங்காத புத்தம் புதிய  வாசல்களை திறந்து தருகிறது. வறிதையா கான்ஸ்தந்தின் அவர் சார்ந்திருக்கிற  சமூகத்தின் மீது  கொண்டிருக்கிற பேரன்பின் வடிவமும் ஒரு கடல் போல படர்ந்து கிடப்பதாக தோன்றுகிறது.கடலும் உப்பு சுவையும் போல,இது ஒரு நேசனின் எழுத்து. நான் பல நேரங்களில் சிந்திப்பதுண்டு கடல் நம்மை அதிகமாக கவர்கிறது, அதன் கரையோரம் காலார நடக்கும் போதும்,நின்று அந்த நெடுங்காற்றை நெஞ்சிலிழுத்துக் கொள்ளும் போதும் இந்த ரசனை,கவர்ச்சியைத் தாண்டி இந்த கடலுக்குள் என்ன இருக்கிறது. வியப்பும் விந்தையும் மேலோங்க மேலோங்க சிந்தனைகள் எப்போதும் மனதுக்குள் அலைபோல அடித்துக் கொண்டே கிடக்கிறது.சின்னவிளை கடற்கரையின் குருசுப் பாறைக்கு கீழே அமர்ந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நெடுக விரிந்து கிடக்கும் கடல் என் கண்களுக்கு வழங்கிய இன்பம் அலாதியானது.இந்த கடல் இன்பத்தின் ஊடாகத்தான் எனது அஜ்னபி நாவலை நான் செங்கடல் கரையிலிருந்து துவங்கியிருப்பேன். ஒரு மீனவரோடு நீண்ட கடல் பயணம் நிகழ்த்த வேண்டும் என்கிற ஆவல் இன்னும் நிறைவேறாமல் மனதுக்குள்ளே கிடக்கிறது.சமவெளி பிரதேசங்களில் உடனுக்குடன்  ஆவல்களை பூர்த்தி செய்து கொள்கிற நமக்கு கடல் அவ்வாறு லேசானதல்ல. ஏன் என்றால் உண்மையில் கடல் பற்றிய எந்த அடிப்படை அறிவும் நமக்கில்லை.அது பேரற்புதங்கள் நிறைந்த ஒரு மாயலோகம்.அந்த மாயலோகத்தை நாம் கற்க வேண்டும்.கடலின் கரம்பற்றி நடைபோட யார் கற்றுத் தருவார்கள். இந்த நூல் மெல்ல மெல்ல  அதனைக் கற்றுத் தருகிறது.ஒரு பூமாலையில் இழையும் கசவு போல கடலோடு இழைய முடிகிறது.கடல் பற்றிய முந்தைய நமது  அபிப்ராயங்களை மறுகட்டமைப்புக்கு கொண்டு போகிறது.கடல் பற்றிய,மீனவர்கள் பற்றிய ,அவர்களின் ஈடில்லா உழைப்புபற்றிய,அவர்கள் மீது நிகழ்த்தும் அதிகார வர்க்கங்களின் சுரண்டல்கள் பற்றிய,இன்னும் பலநூறு உணர்வு நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளப்பரிய ஒர் வேலையை இந்த நூல் நமக்கு செய்துதருகிறது.



அவதானம்,ஆய்வு,வாசிப்பு, என மூன்று பகுதியாக எழுதப்பட்டிருக்கும் நூல் இந்த இயற்கையின் பேரம்சமான கடல் பற்றியும்,கடல்வாழ் உயிர்கள் பற்றியும், ஆதிப்பழங்குடி மீனவர்கள் பற்றியும் பொது சமூகத்தின் முன்னால்  அது பரப்பி வைக்கும் உலகமும் உண்மையும் ஆச்சரியம் நிறைந்தது மட்டுமல்ல அத்தியாவசியமான கல்வியும் கூட. இந்த கடல் பற்றிய கல்வியை கற்றுத்தேறாமல் இந்த உலகை நாம் பார்க்கமுடியாது.கடல் தவிர்த்த நம் கல்வியின் பார்வை ஒருபோதும் நிறைவு பெற்றதுமல்ல. கடல் என்பது அடிப்படையில் நீர் என்னும் திரவம். இயல்பில் வெப்ப ஆற்றல் மாற்றங்களைப்  பொறுத்துத் திட நிலைக்கும் ஆவி நிலைக்கும் மாறிக் கொள்கிற திரவம்.தன்னளவில் நிறமற்ற இந்த திரவம்தான் உயிரின் ஆதாரம் என்கிறார்.ஒரு உயிர் தனது ஆதாரத்தை கற்காமல் அதன் கல்வி ஒருபோதும் நிறைவு பெறாது.நாம் ஆசைதீர கடலைப் பார்க்கிறோமே தவிர கடலோடு பழகவில்லை. கடலோடு நாம் பழகுவதற்கு கடலிடம் என்னவெல்லாம் இருக்கிறது, கடல் நமக்கு  என்னவாக இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டுமல்லவா ?. அசைவற்ற சமபரப்பில் வாழ்கின்ற மனிதர்களுக்கு சதா அசைந்து கொண்டேயிருக்கும் ஒன்றில் உலவும் மனிதர்களின் கண்கள் வழியாக கடல் பார்ப் பதென்பதுதான் ஞானம் நிறைந்தது. அந்த ஞானத்தின் சில திறப்புகளை வறிதையா கான்ஸ்தந்தின் தனது எழுத்தின் வாயிலாக திறந்து தருகிறார்.


அவதானம் ,கடலை சொல்லித் தருகிறது. பெருங்கடல் நீரோட்டங்கள், கடற்பாதாளங்கள்,கடல்மாசுபாடு,கடல் பழங்குடிகள், கடல்உயிர்களனெ நமது அறிவை விசாலமாக்குகிறது. சுரண்டப்படுகிற ஒரு சமூகத்தையே ஏளனமாக பார்க்கப்படும் பார்வையின் ஆபத்தை உணர்த்துகிற நூலானது , சமநிலையற்ற வளர்ச்சி அபாயமானது. வளர்ச்சியிலிருந்து விலக்கப்படும் சமூகம் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்படும் போது அது ஒரு பேராபத்தை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கைகளையும் நாம் இதன் வழியே அவதானிக்க முடிகிறது. நகர மையப் பார்வை,நில மையப் பார்வை, தான் வாழும் நிலத்தை மையமாகவும் கடலை நிலத்தின் விளிம்பாகவும் நிறுத்தும் கருதுகோள் ஏற்படுத்திய அபாயங்களை குறிப்பிடுகிற போது கடல் நதியை நம்பியிருக்கவில்லை,கடல்தான் நதியை ஈன்று தருகிறது என்கிறார்.

நில மைய,நகர் மையப் பார்வையோடு இதை எப்போதும் புரிந்து கொள்ள இயலாது.


  கடல் பழகுதல் நூலின் ஆய்வுப் பகுதியில் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் கிட்டத்தட்ட பனிரெண்டு  ஆண்டுகளுக்கு மேலாக  தொடர்ந்து செய்துவரும் ஆய்வுக்கட்டுரைகள் நம் பார்வைக்கு கிடைக்கின்றன.கடல் வாழ்க்கையின் சிக்கல்களை, உண்மைகளை போதிய அளவில்  அக்கரையோடு பதிவு செய்கிறார். உண்மையில் மீனவர்களுக்கான பிரச்சனைகள், அவர்களின் போராட்டங்களிலுள்ள நியாயங்கள், அவர்கள் வாழ்வின் போக்கும் சிக்கல்களும் என பொதுசமூகம் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் நமக்கு நேராக வைக்கிறார்.நாட்டில் எல்லோரும் சமமாக நடத்தப்படவில்லை என்கிற நேரடி எதார்த்தம் புரிகிறது. பேரிடர்களை எதிர்கொள்ளும் போது பண்பாட்டுக் கூறுகளுக்கும் முக்கியமான இடம் இருப்பதை யாரும் பேரிடர் சூழலை பண்பாட்டு புரிதலுடன் அணுகவில்லை என்கிற உண்மை புலப்படுகிறது.சுனாமி மற்றும் புயல் கால பேரிடர்களில் பண்பாட்டுக் கூறுகளோடு அணுகாததின் வலிகள் ஒரு பாடமாக முன்வைக்கப்படுகிறது. பெரும்பாலும் தோல்விகள் எப்போதும் அணுகுமுறை கோளாறுகளால்தான் ஏற்படுகிறது.அதுபோல பேரிடரை நாம்  இன்னும் பெண்களின் கண்கள் வழியாகப் பார்க்கத் தொடங்கவில்லை என்பதிலுள்ள உண்மை மானிடவர்கத்தின் துயரமான பக்கங்களாகவே இன்னும் இருக்கிறது. பேரிடர் மற்றும் பெருந்துயரக் காலங்கள் பெண்களுக்கு நிகழ்த்தும் கடினங்களை நாம் புரிந்து கொள்ள இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது.எல்லா துயரங்களும் பெண்களை சுலபத்தில் சென்றடைவதையும் குறிப்பிடும் வறீதையா எல்லையற்ற பிரதிநிதித்துவமாகி இருக்கிறார். ஆழ்கடலில் ஒரு புயலின் தாக்கம் எப்படியிருக்கும் என்னவெல்லாம் செய்யும் என்பது நம் பார்வை புலனுக்கு ஒருபோதும் வருவதில்லை. காற்றின் விசை அலைகளின் இடைவெளியை நிர்ணயிக்கிறது. காற்றின் சீரற்ற தன்மையில் ஒரு படகு என்னவாகும் அதிலுள்ள மனிதர்கள் என்னவாவார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் பதினைந்து கிலோ மீன்புரதம் தேவைப்படுகிறது. சீனாவுக்குப் பிறகு மிகப்பெரிய மீன் அறுவடை நடைபெறும் இந்திய கடலில் உழலும் மீனவர்களின் கடல் வாழ்வை சமவெளியிலிருக்கும் அரசும்,பெருமுதலாளிகளும்,  அதிகாரிகளும் திட்டங்கள் வகுக்கும் போது அது என்னென்ன துயரங்களை நிகழ்த்தும் என்பதை யெல்லாம் இந்த ஆய்வுக் கட்டுரைகள் நுட்பமான பார்வைகளை முன்வைத்து  பல கேள்விகளை நமக்கு முன்னால்  இட்டுச் செல்கிறது. அவர்கள் வாழ்வு அவர்களுக்கான கடினம் என்று தள்ளிவிட முடியாது .இந்த வாழ்வு ஒற்றைத் தன்மையுடையதல்ல மாறாக ஒரு சங்கிலியின் அடுத்தடுத்து வரும் கண்ணிகளைப் போன்றது.ஒன்றை வீழ்த்த ஒன்று முனைவது சிந்தனையற்ற அறிவின் போதமையாகவே இருக்க முடியும். சமவெளி பிரதேசத்தின் ஒரு அழுத்தம் கடலையும் கடலின் ஒரு அழுத்தம் சமவெளி பிரதேசத்தையும் நேரடியாக பாதிப்புக்குள்ளாக்கக் கூடியவைகள். கடலுக்குப் போகும் ஒரு மீனவரால் கரையில் சராசரியாக பதினாறு பேர் தொழில் பெறுகிறார்கள்.ஒன்று ஒன்றை வளர்க்கிறது,ஒன்று மற்றொன்றை தாங்குகிறது.நமக்கு மீன் உணவு வேண்டும்.அது கடலிலிருந்தே வந்தாக வேண்டிய நிலையில் பருவமாற்றத்தால் கடல் வீழ்ந்து கொண்டே வருவதைப் பற்றிய கவலை கொள்ள வேண்டிய நேரம் இது. பெரும் தொழிற்சாலைகள் மாசுகளை கடலில் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. வனத்தை பாதுகாக்கிற வனப் பழங்குடிகள் அங்கிருந்து துரத்தப்படுகின்றனர். கடலை பாதுகாக்கிற கடல் பழங்குடி மீனவர்கள் கரையிலிருந்து துரத்தப்படுகிறார்கள் என்பதெல்லாம் பெரும் சிக்கல்கள் நிறைந்த  துயரமான காலத்துக்கு மானிட சமூகத்தை கொண்டு போய்விடும். வனத்திலுள்ள ஒரு உயிரை, நகரத்திலுள்ள ஒரு உயிரை, சமப்பரப்பிலுள்ள இயற்கையின் சிறிய அம்சங்கள் வரையிலும் புவிகோளத்தின் எல்லா உயிர்களையும் கடலே வருடி நிக்கிற நிலையில்,கடலின் முக்கியத்துவத்தை ஆய்ந்தறியும் மேன்மையான பாங்கினை இந்த நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது. "கடல் பழகுதல்" நூலின் தலையாய சிறப்பும் இதுதான். பெருநகரங்கள் உள்ளிட்ட மக்கள் மிகுந்த எல்லா நகரங்களும் கடலின் வெகு அருகிலேயே அமைந்துள்ளன. இந்திய பெருங்கடலில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மீன் அறுவடை படிப்படியாக வீழ்ந்து வரும் நிலையில் 2048ல் மீன்களற்ற கடல் உருவாகும் துயரத்தைப் பற்றிய எச்சரிப்பை கவனப்படுத்தியாக வேண்டும் . நிலப்பரப்பில் நிகழும் எல்லா மற்றங்களின் அழுத்தமும்,வளர்ச்சி என்கிற பெயரில் நிகழும்  சிதைவுகளின் அழுத்தமும் கடலையே சென்று சேர்கின்றன. வெப்பநிலை உயர்வே புயலின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது.வீரியம் அதிகமாகும் புயல்களின் விளைவே சமவெளிப் பகுதிகளில் பெருவெள்ளப் பேரிடராகிறது. புவிப்பரப்பின் வெப்பநிலை மாற்றமே கடல் மட்டத்தை உயர்த்துகிறது.எல்லா இயற்கை சீற்றங்களும் மனிதனின் எல்லையற்ற இயற்கை ஆக்கிரமிப்புகளாலும், கட்டற்ற அறிவியல் தொழில்நுட்ப அணுகுமுறை விளைவுகளின் வழியாகவும் நடந்தேறுகிறது. இவைகளைப் பற்றிய ஒரு பொது அறிவை பேசுவதில் இந்த நூல் முக்கிய பங்காற்றுகிறது.


நெய்தல் நிலத்தின் இலக்கிய பரப்பை,வரலாறை,ஆளுமைகளைப் பற்றியும் இந்த நூல் "வாசிப்பு" என்கிற பகுதியில் பேசுகிறது.ஒவ்வொரு இனக்குழுவும் தனது இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வரலாற்றில் இடமில்லை என்றால் சமூக,அரசியல் வெளிகளிலும் இடமில்லாமலாகிவிடும் என்பதை கோடிட்டு நெய்தல் நிலத்தின் இலக்கிய உலகை அறிமுகம் செய்கிறார்.கடல்சார் மக்களோடு தொடர்புடைய "சென்பகராமன் பள்ளு"என்கிற பதினேளாம் நூற்றாண்டின் சிற்றிலக்கியம் பற்றிய குறிப்பு நமக்கு கிடைக்கிறது. அம்மூவனார்,உலோச்சனார்,போன்ற நெய்தல் நில கவிகள் நமக்குத் தெரிய வருகிறார்கள்.1975 ல் வார்த்தைச் சித்தர் ஞானபாரதி வலம்புரிஜாண் அவர்களின் "நீர்க்காகங்கள்" புதினமே தமிழ்நாட்டில் அச்சான முதல் நெய்தல் இலக்கியம் என்கிற செய்தி நம் தேடுதலை இன்னும் விசாலமாக்க துணை செய்கிறது.ஜோடி குரூஸ்,வறீதையா கான்ஸ்தந்தின், பானுமதி பாஸ்கோ,தார்சி எஸ் பெர்னாண்டோ,குரும்பனை பெர்லின், செல்வராஜ்,ஆன்றனி அரசு,அருள் சினேகம்,இரையுமன் சாகர் என பல நெய்தல் நில படைப்பாளிகள் நமக்கு அறிமுகமாகின்றனர்.வறிதையா கான்ஸ்தந்தின் குறிப்பிடும் இந்த அற்புதமான கதைச் சொல்லிகளின் கதை உலகில் பயணித்து அனுபவித்த அனுபவம் முன்னமே எனக்கிருக்கிறது. சமூக எதார்த்தத்தை பச்சையாகப் பிரதியிடும் சில நல்ல படைப்புகள் சமூக மாற்றத்திற்கான கருவிகளாக மாறி நிற்கின்றன.


முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருபவர்களால் அவரின் இணையற்ற மீக நீண்ட உழைப்பையும் அவதானிப்பையும் இடைவிடாது அம்மக்களுக்காக சிந்தனையை செலவிடும் அவரின் மிகஉயர்ந்த எண்ணம் வேறு எதனோடும் ஒப்பிட இயலாதது.நெய்தல் நிலத்தி்ன் வாழ்வை,பிரச்சனையை நமக்கு காட்டித்தருவதோடு மட்டுமல்லாமல் நம் கரிசனத்தை அப்பக்கமாக திருப்புகிற எழுத்து வல்லமை இவருக்கு அதிகமாக உண்டு.நெய்தல் மக்கள் மீதும்,ஈடு இணையற்ற இந்த இயற்கை மீதும் தான் கொண்டிருக்கிற நேசமே வறிதையா கான்ஸ்தந்தின் இரத்த நாளங்களிலிருந்து எழுத்தாக மலறுகிறது.எனவேதான் இந்த எழுத்து துடிப்படங்காமல் நம்முள் கலக்கிறது. இது ஒரு நேசனின் ஞானநிலை தவிர வேறொன்றுமில்லை.கடல்பழகுதல் நூல் இன்னும் சில யுகங்களுக்கானது.




  





Thursday 4 May 2023

பலாமரம் நிற்கும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான்



2 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தொட்டியின் உயரத்திலிருந்து குறுகிய இரும்புப்படிகள் வழியாக கீழிறங்கிக்கொண்டிருக்கின்றேன்...

விசாகன்
தேனி
---------------------------------------------------------------
ஒருவர் அன்றாடம் கடந்துசெல்லும் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் இரண்டு பக்க அளவிலான எழுத்தால் நிறைப்பவரின் குருதியோட்டம் தாளலயமிக்கது. அவரின் மனமோ தானியங்கி ரெக்கைகளைக் கொண்டது. அவர் கையாளுகின்ற புனைவுவெளி பூமியைப் போன்று உலகையும் சுற்றும், தன்னைத்தானேயும் சுற்றிக்கொள்ளும். அதிலும், எவருடைய பாணியையும் பின்பற்றாது, உலகளாவிய முன்னோடிகளை சுட்டிக்காட்டி உதாரணப்படுத்தாது தனக்கான ஒரு வெளி உருவாக்கி, அதற்குள் உருண்டு புரளும் உத்தியால் வாசகனைக் கட்டிப்போடும் கதைசொல்லியாக ஒருவராக இருப்பாரெனில் அவர், தன்னுடைய படைப்புளின் வழியாக, பிறர் உள்ளத்தைச் சுடர்விட்டு எரியச் செய்கின்றவராகிறார். அந்த வகையில், கதையின் தலைப்பின் வழியாகவே வழுவழுப்பேற்றிய கேரம் போர்டில் முழுவீச்சில் உந்திவிடப்பட்ட "ஸ்ட்ரைகர்" போன்று சுற்றிச் சுழன்று பல திசைகளில் நம் மனதை மோதச் செய்யும் "புனைவுகோடி" (புண்ணியகோடி போன்று) மீரான் மைதீனின் சமீபத்திய "பலாமரம் நிற்கும் வீட்டிற்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறான்" என்ற சிறுகதைத் தொகுப்பு நம்முள் தாளலயம் மீட்டுகிறது. 112 பக்க அளவில் ஏழு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பிற்கு, "பெயல்" ஆய்விதழின் ஆசிரியர் செந்தில்குமார் ஒரு Scanned அணிந்துரை வழங்கியுள்ளார்.


சில நேரங்களில் குழந்தைகள் தன்னையறியாது அடையும் பரமானந்தத்திற்கு இணையானது ஒரு புனைவின் வழி வாசகன் தன்னை அறிந்து அடைகின்ற ஆனந்தம். பரமானந்தத்தின்பொது குழந்தை வெளிப்படுத்தும் மழலை தோய்ந்த குதூகலச் சத்தத்தை வாசகன் தன் மனதளவில் உணர்வது அந்தக் குழந்தையும் அடையாத உச்சம். அதுபோன்ற பரமானந்தத்தையும் உச்சத்தையும் தருகின்ற படைப்பாளிகள் வரிசையில் நின்று மீரான் மைதீன் சிரிக்கிறார்.

தொகுப்பில் உள்ள ஏழு கதைகள் குறித்து எழுத நினைத்தால் தொகுப்பைவிட பக்கங்கள் அதிகமாகிவிடும் பேரானந்தம் வாய்த்துவிடும். முதல் கதையைப் பொருத்தளவில், "ஒரு வீட்டில் மட்டும் வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பது ஒரு சாபக்கேடு. ஆனால், கேடுகெட்ட அந்த சாபத்தை எடுத்துப் போர்த்திக்கொள்கின்ற வகையிலான பயணமே நம்முடைய நோக்கமாக இருக்கிறது" என்ற கருத்தைப் பதிவு செய்துவிட்டு, என்னளவில் அதிகமாக ரசித்த 3வது கதையான, "மாமரத்தின் அம்மா அப்ப மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை" என்ற கதையை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். நட்டுவைத்து வளர்த்து பராமரிக்கின்ற ஒரு மரம், அதை நட்டவன் நேரில் வந்து தனது பெயரை உச்சரித்தால், அந்த மரம் தலையசைத்து இன்பமுற்று இன்பம் தரும் என்ற கற்பனை அல்லது செய்தி அல்லது உண்மை அல்லது பொய், நமக்குள் ஏற்படுத்துகின்ற ரசவாதம் என்ன...? "மனம் நினைவுகளை காலத்தின் தன்மை மாறாமல், உருவங்களைக்கூட மாற்றாமல் அற்புதமான காட்சியாகவே தந்துவிடுகிறது' என்று மீரான் மைதீன் சொல்வதைப் போல, மரம் குறித்த இந்தப் புனைவு சொல்லாத பல கதைகளை நமக்குள் ஊற்றெடுக்கச் செய்கிறது. இக்கதையில் ஒரு இடத்தில்,

அவள்: "மரம் மற்றொரு மரத்துடன் பேசுமா....?"
அவன்: "பேசிக்கொள்ளும், காதல் செய்யும்"
அவள்: "ஆனால் ஏமாற்றாது"

என உரையாடல் இருக்கிறது. எனவே நான் முதலில் குறிப்பிட்டதைப் போல நொடிக்கு ஒன்றிரண்டு பக்கத்தை எழுத்தால் நிரப்பும் திறனை நாம் மீரான் மைதீனின் எழுத்தில் உணர முடியும். அதாவது "மரம் மற்றொரு மரத்துடன் பேசுமா...? நமக்குள் கற்பனை விரிகிறது, "பேசிக்கொள்ளும், காதல் செய்யும்" நம்மனம் பறக்கத் தொடங்குகிறது. "ஆனால் ஏமாற்றாது" மனம் எதார்த்த வாழ்க்கையின் அனுபவங்களை அலசி ஆராய்கிறது. ஆக, எது நம்மை நமக்குள்ளான சோதனை முயற்சியைச் செய்ய உந்தித் தள்ளுகிறதோ, அது நம்முடைய மனதையும் வாழ்வையும் நேர்மை குலையாது, இழப்புகளை ஈடுகட்டி மேன்மையடையச் செய்கிறது. மீரானின் எழுத்து அதைச் செம்மையாகச் செய்கிறது.


மீரான் மைதீனின் கதைகளில் அடர்த்தியும் தெளிவும் எளிமையும் பின்னிப் பிணைந்திருப்பது ஆச்சரியப்படத்தக்க அதிசயம். பயிற்சியாளர்களுக்கெல்லாம் பயிற்சியளிக்கின்றவரின் தலைமைப் பண்பும், திறமையையும் போன்ற ஒரு இலக்கியச் செயல்பாடும், அதன் மூலம் ஒரு செறிவான உரையாடலை தன் கதைசொல்லும் திறன் மூலம் நமக்குள் நிகழச் செய்கின்ற மீரான் மைதீனின் இலக்கியச் செழுமையும்  நம்மை ஆரத்தழுவி ஆட்கொள்கிறது.

Wednesday 3 May 2023

அமீரகத்திலிருந்து மலையாளத் திரையோரம்

ஆமிரகத்திலிருந்து மலையாளத் திரையோரம்
                  எம்.மீரான் மைதீன்



பயணங்கள் புதிய அனுபவங்களைத் தரும் அதுவும் வாழ்வில் நாம் முன்பொருக்கிலும் பெறாத அனுபவங்களாக இருக்கும்.2020 ல் ஒருமுறை தோஹாவிலிருந்து ஒமானுக்கு பயணப்பட்டிருந்தேன் அப்பயணத்தில் அரைமணிநேரம் சென்று பூமியில் வளமாய் தெரிந்த நகரத்தைக் காட்டி அருகிலிருந்த நண்பர் இதுதான் துபாய் என்றார்.நான் ஜன்னலோரமாய் கீழே பார்த்தேன்,அப்போதுதான் இருள் பரவத்துவங்கிய நேரமென்பதால் அந்த நகரம் மின்னொளியில் மின்னிக் கொண்டிருந்தது.அப்போது மனதில் தோன்றியதுதான் துபாய்க்கு ஒருமுறை பயணம் செய்ய வேண்டுமென்பது.மனதில் ஒன்று தோன்றும்போதே அது வளரத் துவங்கும்.அதன் வளர்ச்சியை நாம் ஆராதிப்பவர்களாக இருந்தால் அந்த ஆராதனை பலன் செய்யாமல் விடுவதில்லை.


2022 ன் மத்தியில் மிகத்தீவிரமாக "திருவாழி" நாவலை எழுதிக் கொண்டிருந்த நேரம்.தீவிரம் என்றால் மிக உச்சமான எழுத்துத் தன்மை.எழுத்து எப்போதும் அப்படித்தான் மெல்லத்துவங்கி பின்னர் பெரும் வேகமெடுத்து நம்மை அதன் விசைக்கு இழுத்துக் கொண்டு போகும்.அப்படியான ஒரு தவநிலையிலிருந்த நேரத்தில் நெஞ்சம் நிறைந்த அன்புத் தோழமை ஒருவர் கேட்டார் ,நாவலை எங்கு வெளியிடப் போகிறீர்கள் என்று.அஜ்னபி நாவலை சென்னையில் வெளியிட்டோம் இதையும் சென்னையில் வெளியிடலாம் என்றுதான் எண்ணுகிறேன் என்றதும் துபாயில் வெளியிடலாமா என்றார்.
கேள்விகள் மெல்ல மெல்ல முளைக்கின்றன.பார்க்கலாம் என்றபோது பார்ப்போமென்ற தோழமையின் உற்சாகத்தில் சகோதரர் ஆசிப் மீரான் தொடர்பில் வந்தார்.மெல்ல நகர்ந்து  நகர்ந்தது.2023 மார்ச் 11ம் தேதி துபாயில் நாவல் வெளியீடு என்று உறுதியானது.அருமை அண்ணன் எழுத்தாளர் ஆப்தீன் அவர்கள் வெளியிட்டு அறிமுகப்படுத்த வேண்டுமென நான் கேட்டுக் கொண்டேன்.நான் இப்போது எழுத விரும்புவது நாவல் வெளியீட்டு நிகழ்வு பற்றியது மட்டுமல்ல ஆசிப் மீரானின் மலையாளத் திரையோரம் நூலைப் பற்றியும் பயண அனுபவங்களையும் இணைத்து கொண்டு ஒரு கதை பேசலாம் என்றுதான்எண்ணுகிறேன்.

குமரி மாவட்டத்துக் காரர்களுக்கு நிலவியல் ரீதியாகவும் பண்பாடு கலாச்சாரம் பண்டிகை என எல்லா கொண்டாட்டங்களிலும் சில திண்டாட்ங்கள் உண்டு.நெல்லை எங்கள் எல்லை குமரி எங்களுக்குத் தொல்லை என்ற கலைஞரின் அடுக்குமொழி ரொம்பவும் பிரசிசத்தமானதும்கூட.நாங்கள் ஆரல்வாய்மொழி கடந்து போனால் எங்களை மலையாளி என்றும் சேட்டன் என்றும் அழைக்கிறார்கள்.
மறுபக்கம் களியாக்காவிளைத் தாண்டி போனால் அவர்கள் பாண்டி என்று அழைப்பார்கள்.நாங்கள் பாண்டியா,மலையாளியா அல்லது இரண்டுக்கும் நடுவிலா?விடையற்ற கேள்விகள் நிறைய உண்டு.நான் பலரோடும் சொல்வதுண்டு இது ஒரு பன்முகப் பண்பாட்டுப் பிரதேசமென்று. உண்மைதான் எனவேதான் இலக்கிய உலகின் மிகக் காத்திரமான படைப்பாளிகளெல்லாம் இந்த ஊரிலிருக்கிறார்கள் என்பதனை மேற்குறிப்பிட்ட வாக்கியத்தின் உதாரணமாகக் கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் சமீபகாலமாக பரவலாக மலையாளப் படங்களைக் கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது.கொண்டாட்டமென்றால் சாதாரணக் கொண்டாட்டமல்ல ஆர்த்திமூத்த கொண்டாட்டம்.நான் யோசிப்பதுண்டு ஏன் இவர்கள் இப்படி கொண்டாடுகிறார்கள்.தமிழ் கலைஞர்கள் சாதியாகப் பிரிந்து கிடக்கிறார்கள் அதன் வன்மம் காரணமாக அருகிலிருப்பவனைக் கொண்டாட மறந்து தூரத்திலிருப்பவனைக் கொண்டாடுகிறார்கள். கொண்டாட்டமென்பது ஒரு அழகான மனோபாவம்,அவற்றை தவிர்க்க இயலாத மனிதன் அருகிலிருப்பவற்றின் மீது அடையாளச் சிக்கல்கள் குவிந்து கிடப்பதால்,அதல்லாத  தனக்கு சவுரியமான ஒன்றை எடுத்துக் கொள்கிறான் என்கிற யோசனை சரியா என்றும் தெரியவில்லை. நாங்கள் மலையாள சினிமாவை நேரடியாகவே பார்க்கிறோம். கேரளத்தின் தலைநகரம் எங்களுக்கு மிகவும் அருகிலிருக்கிறது.அந்த மொழியும் கூட ஓரளவுக்கு மேலே எங்களுக்கு பரிட்ச்சயமானதுதான். ஆனால் சென்னைவாசிகள் ஏன் இப்படி கொண்டாட வேண்டுமென யோசனை வரும்போதே கலை,இன்றைய காலத்தில் அதன் எல்கைகளை பரப்பி  கால தேச பிரதேச வெளிகளைக் கடந்து மனித மனங்களுக்குள்வியாபித்திருக்கிறது என்கிற உண்மை புலப்படுகிறது. புத்தாயிரத்துக்குப் பிறகான காலம் உண்மையில் உலகினை நமக்கு வசப்படுத்தி தந்திருக்கிறது.இன்று ஒரு சினிமாவை நாம் நமக்கு புரிகிற மொழியில் இருக்குமிடத்திலிருந்து பார்க்க வரம் பெற்றவர்களாக இருக்கிறோம்.கால் நூற்றாண்டுக்கு முன்னரே ஔிப்பதிவாளர் செழியன் அவர்கள் உலக சினிமாக்களை தமிழில் அறிமுகப்படுத்தி இரண்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஈரான் திரைப்படங்கள் மற்றும் கொரியா,ஜப்பானிய படங்கள் என உலகின் முக்கியமான சினிமாக்கள் நம்மை வந்தடைந்தன. உளவியலாளர் மற்றும் எழுத்தாளரான நண்பர் ஷபி அவர்கள் ஈரானிய சினிமாவை அறிமுகப்படுத்தி நூல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.இன்னும் நம் பார்வைக்கு வராத பலரும் இப்பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர்.

மலையாள சினிமா பற்றி நான் சிறுவனாக இருந்த காலத்தில் பொதுவான அபிப்ராயம் என்பது அத்தனை உசிதமானது அல்ல. இவன் மலையாளப்படம் பார்க்கிறான் என்றால் அதன் அர்த்தம் நிறைய நகைப்புக்குரியது.ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் மலையாளப்படங்கள் திரையிடுவதற்கென்றே திரையரங்குகள் இருந்தன.ஐஞ்சரைக்குள்ள வண்டி என்கிற தலைப்பு கடும் கவனம்பெற்றதாகும்.ஆனால் தொண்ணூறுகளின் இறுதியில் இவை முற்றிலுமாக மாறி மலையாள சினிமா ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது.அது தன்மீது படிந்து கிடந்த முந்தைய எல்லா அபிப்ராயங்களையும் துடைத்தெறிந்து வேறொரு பக்கத்தை உலகுக்கு காட்டியது.நான் ஆசிப் மீரானின் "மலையாளத் திரையோரம்"விமர்சன கட்டுரை நூலை முன்பே அறிந்திருந்தாலும் எனக்கு வேறு எங்கும் வாசிக்க கிடைக்கவில்லை.துபாய் பயணத்தில் அவரின் அறையில் உடனிருந்த நாட்களில் எனக்கு நூல் கிடைக்கப் பெற்றது.ஆசிப் மீரான் என்னை, பழமையாக வடிவமைக்கப்பட்ட துபாய் நகரத்திலுள்ள ஒரு மார்க்கெட்டுக்கு அழைத்துப் போனார்.அத்தனை சௌந்தர்யம் ஒரு நூறு வருடங்களுக்கு முந்தய காலத்தில் இருந்ததைப் போல,காலம்தான் எவ்வளவு அழகானது.அந்த இரவு உணவை நாங்கள் சார்ஜாவிலுள்ள ஆதாமிண்ட சாயக்கடை என்கிற உணவு விடுதியில் உண்டு மகிழ்ந்தோம்.
அந்தக் கடையும் மிகப் பழமையான காலத்தின் தன்மையோடு வடிவமைக்கப்பட்டிருந்தது.முந்திய இரவும் இங்கு தேநீர் அருந்துவதற்காக நானும்  ஆசிப்,சென்ஷீ,மற்றும் ஆப்தீன் அண்ணனுமாக வந்திருந்தோம். அந்தக் கதைகளை உயிர்த்தலம் பற்றி எழுதும்போது விரிவாக எழுதுவேன். இப்போது இந்த பழங்கதையோடு 
ஆசிப் மீரானின் மலையாளத் திரையோரத்துக்கு வந்து விடலாம்.
அவர் அன்பும் நல்ல உளப்பூர்வமான  அணுசரனையுமிக்க மனிதர்.நாம் இந்த நவீன உலகில் பலரிடமும் இதை காணவோ உணரவோ முடியாது.ஒரு சரத்தைக் கழிப்பதுபோல கடமையாக முடித்துக் கடந்துவிடுகிற மானிட வாழ்வில் நேசத்தை நீடித்து வைத்திருப்பது ஒரு பெரும் பண்புதான். இப்படியான பண்பு கொண்ட நண்பரின் நூலை அவரின் அறையிலிருக்கும் போதே வாசிக்க இயன்றது.அவருக்கு மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் அவன் தனது வாழ்வின் சில காலங்களை கல்விக்கா கேரளாவில் வாழ்ந்திருக்கிறார்.மலையாள மொழியும் அதன் பண்பாட்டு அம்சங்களும் அவருக்கு மிக நெருக்கத்திலிருக்கின்ற ஒன்றாகும். இந்த ஒன்றுக்குள்ளிருந்தே  பத்தொன்பது மலையாள சினிமாக்களை இந்த நூலில் அறிமுகப்படுத்துகிறார். அவருக்கே உரித்தான பாணியில் மெல்லிய மற்றும் மெல்லியத் தன்மையற்ற விமர்சனங்களையும் செய்கிறார். நான் கிட்டத்தட்ட அவர் குறிப்பிடுகிற பெரும்பான்மையான சினிமாக்களைப் பார்த்து விட்டதால் எனது வாசிப்பில் ஆதீத ஆர்வமிருந்தது.முதலில் எந்நு நின்டெ மொய்தீன் வாசித்தேன். மறக்கவியலாத சினிமாவாக நான் இப்போதும் கவனப்படுத்துகிறேன். நான் ஏன் ஆசிப் மீரானின் இந்த நூலை மைய்யமாகக் கொண்டு இந்த விடயத்தை எழுதுகிறேன் என்றால் இந்த பத்தொன்பது சினிமாவை கைக்கொண்டால் நீங்கள் மலையாள சினிமாவின் ஒரு காலத்தைக் கைகொள்ள இயலும்.காலத்தைக் கைகொள்ளுதல் அத்தனை சுலபமானதல்ல அது ஒரு கடும் தவம்போல.நூலில் ஆசிப் ஷிக்காரில் துவங்கி பிராஞ்சியேட்டன் த செயிண்டில் முடிக்கிறார்.இந்த சினிமாக்கள் கேரளத்தின் பல்வேறு மாறுபட்ட பண்பாடுகள் ஒன்றை ஒன்று ஐக்கியபடுத்திக் கொண்டு வாழும் பரிமாணங்களின் ஒரு திறப்பாகக் கிடக்கின்றன.இன்று வரலாறு திருடப்பட்டு அடுத்தாக புவியியல் திருட்டு துவங்கியிருக்கிற காலத்தில் ஆசிபின் இந்த பத்தொன்பது கட்டுரைகள் நமக்கு ஒரு காலத்தை பார்க்கத் துணை புரிகிறது என்பதுதான் இந்த நூலின் முக்கியத்துவமாகப் பார்க்கலாம்.

ஆசிப் மீரானின் சிறுகதைகளை ஷார்ஜாவில் தங்கியிருந்தபோது  அவரின் பழைய கோப்புகளிலிருந்து வாசித்தேன்.அவர் அதனை நூலாக வர அனுமதிக்க வேண்டும். எப்படியான மனிதர்கள் நம்மிடையே இருந்தார்கள் என்பதனைஉலகுக்கு அறியத்தருவதுதான் கலையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக நான் கருதுகிறேன்.காலத்தைக் கபளிகரம் செய்து வைத்திருக்கிற இன்றைய மதிப்பீடுகளின் முன்பாக வசந்தகால மனிதர்களை உலவவிடுவதுதான் அதற்கு மருந்தாக இருக்கும்.

குறிப்பு.துபாய் பயண அனுப வரிசையில் ஆப்தீன் அண்ணனின் உயிர்த்தலமும் அவரோடு நடவாமல் போன முதலிரவும்" விரைவில் எழுதுவேன் என்று நம்புகிறேன்.

அன்புடன்
மீரான் மைதீன்
04/05/2023

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...