Monday 15 May 2023

"உயிர்த்தலம்"காலத்தின் பொக்கிஷம் - எம் மீரான் மைதீன்

எனது திருவாழி நாவல் துபாயில் வெளியிட முடிவானதும் தோழமை ஆசிப் மீரானிடம் நான் வேண்டியது ஆபிதீன் அண்ணன் நாவலை வெளியிடட்டும் என்பதைத்தான். அவரும் எனது எண்ணத்தையே பிரதிபலித்தார்.நிகழ்வு அன்று நான் அங்கு சென்றிருந்தபோது மாலையே ஆசிப் மீரானோடு ஆபிதீன் அண்ணனும் அருமைக்குரிய எழுத்தாளர் சென்ஷி'யும் வந்து சேர்ந்த போது எங்களுக்குள் அந்த மாலைப்பொழுது சலங்கைக் கட்டிக் கொண்டது.எழுத்திலுள்ள அதே துடிப்பும் அதே பாவனையும் பலருக்கும் கைக்கூடாத காரியங்கள்.ஆனால் ஆபிதீன் அவர்கள் அவ்வாறே இருந்தார்.எங்கள் ஊரில் சிறுபிராயத்தில் கடற்கரைக்கு செல்லும் போது அலைகளை எண்ணத்துவங்கி ஏழாம் அலை மிகவீரியமாக சுழன்று சுழன்று அடிப்பதை நாங்கள் ரசனையோடு கண்டு  ஒரு கற்பனையான உணர்வில் பெரும் கூச்சலிட்டுக் கொண்டாடுவோம். அவ்வாறான ஒரு கொண்டாட்டமான உரையாடல்.எல்லா வார்த்தைகளுக்கும் மேல் அண்ணன் ஏழாம் அலையாக அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்தார்.நிகழ்வில் நாவலை அவர் வெளியிட,அந்த அரங்கிலேயே எனக்கு உயிர்த்தலம் சிறுகதை நூல் பரிசளிக்கப்பட்டது.

 நிகழ்வு நிறைவு பெற்று நானும் ஆசிப் மீரானும் ஆபிதீன் அண்ணன் மற்றும் சென்ஷியோடு நால்வரும் ஷார்ஜாவில்  நல்ல தரமான உணவு விடுதியில் இரவு உணவை உண்டு கொண்டே நிறைய பேசிக் கொண்டோம்.சென்ஷியின் மிக முக்கியமான தொகுப்பு நூல் ஒன்று கைமாறியக் கதை,அண்ணனின் கதை உலகு,தொலைந்த கதைகள்,சில மகோன்னதமிக்க மகான்கள் பற்றியெல்லாம் நள்ளிரவு தாண்டியும் பேசிக் கொண்டோம்.எனது கைக்கடிகாரத்தில் இந்திய நேரமும் எனது கைப்பேசியில் அமீரகத்தின் நேரமுமாக நான் இரட்டை இயக்கத்திலிருந்தேன். நள்ளிரவுக்குப் பிறகும் ஷார்ஜாவில் ஆசிபின் வீட்டில் தங்கி மேலும் உரையாடலைத் தொடரலாம் என்ற நிலையில் ஆபிதீன் அண்ணன் துபாயிலிருக்கும் அவரின் வசிப்பிடத்துக்குப் போகவேண்டுமென பிடிவாதமாக இருந்ததால் அந்த நள்ளிரவில் மீண்டும் துபாய் பயணம் செய்யும்படியாக இருந்தது.இரவில் துபாய் நகரம் பேரழகு கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது. விமான ஓடுபாதையின் கீழ் உள்ள அந்த வசீகரமான சாலையும் மின்னொளியில் மின்னும் உயர்ந்த கட்டிடங்களுமாய் ஐம்பதாண்டுகால அமீரகத்தின் வளர்ச்சி உலகம் உற்றுக் கவனிக்கப்பட வேண்டிய ஏராளமான அம்சங்களைக் கொண்டது. ஒரு நாடு மனிதத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் கூடவே உழைப்பும் அறிவும் இணையும் போது அதன் பரந்த வளர்ச்சியை யாராலும் தடுக்க இயலாது.பிரிவினையும் வெறுப்பும் வளர்க்கப்படும் ஒரு நாடல்ல அது.பரந்த மனம் கொண்ட ஒரு தேசம் தன்னகத்தே இணையும் மனிதர்களையும் பரந்த மனம் உடையவர்களாக மாற்றிக் கொள்கிறது. அந்த அழகிய நள்ளிரவில் ஆபிதீன் அண்ணனை துபாயில் அவரின் வசிப்பிடத்தில் விட்டு விட்டு மீண்டும் ஷார்ஜா நோக்கிய பயணம்.அவரோடு அன்று நிகழ்ந்தேற வேண்டிய முதலிரவு மறுநாளின் அவரின் பணியின் நிமித்தமாகத் தடைபட்டுப் போனது. இல்லையென்றால்  உரையின் நீட்சி மேலும் பல சித்திரங்களை வரைந்திருக்ககூடும். திரும்ப வரும்போது  சென்ஷி கதைத்துக் கொண்டு வந்தார். கதை,எழுத்து போன்றவைகளில் சென்ஷியை ஒரு வலிமையான சக்தியாக உணரமுடிந்தது.
அன்றைய இரவில் இந்தியாவில் விடியும் போது நாங்கள் ஷார்ஜா அறையில் தூக்கத்தை துவங்கியிருந்தோம்.மனிதர்கள் ஆத்மார்த்தமாகக் கூடிப் பேசினால் அதன் அழகும் வசீகரமும் பொழுதுகளை நிகரற்றதாக்கி விடுகிறது. மனிதர்களில் கீழானவர்கள் என்றும் மேலானவர்கள் என்றும் எதுவுமில்லை.அரபியரல்லாதவர்களைவிட அரபியர்களுக்கு ஒரு உசத்தியும் கிடையாது என்று நபி பெருமகனார் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஆதிக்க வெறியர்கள், சமூக சமன்பாட்டைக் குலைக்கும் செயல்  ஆதிக்க வெறி அல்லாது வேறு என்னவாக இருக்கமுடியும்.ஆபிதீனின் வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால் "ஒரு அர்த்தத்தில் அல்ல பல அர்த்தங்களிலும் மனிதர்களைவிட குதிரைகள் மேலானதுதான்.
ஏனென்றால் அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன".


ஆபிதீன், இந்த பெயரை உச்சரிக்கும் போது ஓசையில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக கம்பீரம் வரும்.நான் விரும்பி நேசிக்கும் எனக்கு இஷ்டமான ஆளுமை. பொதுவெளியில் அவரை எத்தனை பேருக்குத் தெரியும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகம் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான ஒரு எழுத்து சக்தி அண்ணன் ஆபிதீன்.எனக்கு இணைய பரிட்சயத்தின் அடிப்படை அறிவுகூட தோன்றியிராத காலத்தில் நான் எழுதியிருந்த கவர்னர் பெத்தா சிறுகதையை அதன் ஆழம் கருதி இணையத்தில் தட்டச்சு செய்து இன்னொரு விசாலத்துக்கு கொண்டு போனவர்.நாம் இங்கு கொண்டாடிக் கொண்டிருக்கும் பலபேரிலும் உயர்ந்த எழுத்தாளர்.நீங்கள் அவரின் ஏதேனும் ஒரு சிறுகதையை வாசித்திருந்தாலும் போதும் அதன் வீரியத்தை,அவரின் எழுத்தின் வீரியத்தை உணரமுடியும். அவர் நிறைய எழுதாமல் விட்டுவிட்டார். எழுதாமல் முடக்கப்பட்டவரும் கூட. மனிதர்கள் மேலெழுந்து போக தனித்த பாதை வகுக்காமல் முன்னிருப்பவனின் முதுகில் மிதித்து ஏறிப்போகும் வஞ்சகத்துக்கு தன்னைப் பாதையாக கொடுத்தவரும் கூட.ஒரு எழுத்தாளன் இஸ்லாமியனாக இருப்பது என்பது சாதரணமான விடயமில்லை.அது பெரும் சக்தி மிக்கச் செயல்பாடு. இஸ்லாம் சமூகத்துக்கு உள்ளிருந்து எழுதுகிறவர்களை எதிரியாகப் பார்க்கிற இஸ்லாமியர்கள் ஒருபக்கம்.இஸ்லாமிய பெயரோடு இருப்பதனாலேயே மறுபக்கத்தில் புறக்கணிக்கப்படுகிற வெறுப்பு இன்னொருபக்கம் என மத்தளம் போல அடிபடுகிறவர்களாக இருப்பதை மிகநுட்பமாக அவதானிக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் தனது அங்கதத்தால் கடக்க இயலுமா? என்றால் மதிப்புக்குரிய ஆபிதீன் எழுத்து வாழ்வு என எல்லாவற்றையும் அங்கதத்தால் கடக்கிறார்.இரண்டு மலைகளின் நடுவே உள்ள பள்ளத்தாக்கை அச்சமின்றி,காடு இயல்பிலேயே பரிட்சயமான ஒரு வனப்பழங்குடி கடப்பது போல வாழ்வின் எல்லா அடுக்குகளிலும் மறைந்திருக்கும் கதையைக் கண்டுபிடிப்பதோடு அதன் எழுத்துக்களை கவணில் கட்டி அடிக்கவும் செய்கிறார்.நான் மிக காலதாமதமாக ஆப்பதீன் அவர்களுடை எழுத்தை இப்போது முழுமையாக  சுவீகரிக்கிறேன்.இன்னும் நேரமே நான் வாசித்திராதது எனது துரதிர்ஷ்டம் என்றுதான் எனக்கு இப்போது தோன்றுகிறது. சரியான இடத்திலுள்ள வழிகாட்டும் பாதகை நாம் நமது இலக்கை அடைவதற்கு இன்னொரு வழியைக் கூட காட்டித் தருவதாக இருக்கும். சரியான நேரத்தில் உயிர்த்தலம் பற்றாமல் போய்விட்டேன். அழுகையும் வலியும்தான் அங்கதமாக வெளிப்படுமென்று அறிஞர்கள் சொல்வதாக ஆபிதீன் கதைகளின் நடுவே சொல்கிறார்.எல்லா கதைகளையும் இந்த உலகில் நாம்  முன்னமே பெரும் ஆவல் கொண்டு வாசிக்க இயலாது.ஒரு  பெரும் மரத்தின் விருட்சங்களைப் போல கதைகள் அங்கேயே அதனிடத்திலேயே  புதைந்திருக்கின்றன.இந்த வாழ்வில் நாம் பெரிய சிறிய மரங்களைப் பார்பதுபோலவோ,அல்லது அங்கே மறைவில் இப்படியான ஒலி வருகிறது எனவே இது இன்ன மிருகமாக இருக்கும் என்று நாம் அனுமானிப்பதைப் போலவோ, கதைகளை வாசிக்கிறோம், ரசிக்கிறோம்.ஆனால் நிஜத்தில் ஒரு கதை என்பதே கதைக்குள் மறைக்கப்பட்டிருக்கிற ஒரு கதையாக இருப்பதை நாம் எல்லா நேரங்களிலும் கண்டடைவதுமில்லை அல்லது அந்த கதைகள் இவ்வாறான இலக்கோடு தன்னை எல்லா நேரங்களிலும் உற்பத்தி செய்து கொண்டதுமில்லை. ஆபிதீன் அண்ணனின் கதைகள் நம்மை துனியா முழுமைக்கும் துரத்துகிறது.நாம் யார் கண்ணுக்கும் தெரியமாட்டோம் என்றால் நமக்கு கூச்சநாச்சம் அவசியமானதல்ல. இவரின் சிறுகதைகள் நம்மை ரகசியமாக்கிவிடுவதால் நாம் கூச்சநாச்ங்களைக் கடக்கிறோம் அல்லது அவ்வாறு ஒரு நிர்பந்தத்தில் வீழுகிறோம்.இது ஒரு கதையின் மாபெரும் வெற்றி .எல்லா கதைகளாலும்  உங்களை உங்களிலிருந்து இல்லமல் ஆக்கமுடியாது.அது இந்த உலகின் கடும் பணிகளில் ஒன்றாகும்.ஆனால் ஆபிதீன் உங்களை உங்களிலிருந்து இல்லமலாக்குகிற கதைகளை உருவாக்குகிறார்.அந்த கடும் வேலையை சர்வசாதரணமாக சரிவான ஒரு மலை பள்ளத்தாக்கின் பச்சையம் போல சீராக வரைந்து போகிறார்.

காலச்சுவடு ஒரு குறும்பதிப்பாக 2016ல்  வெளிவந்த "உயிர்த்தலம்" சிறுகதை நூலில் அமைந்துள்ள சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தபின் எனக்கு முதலில் தோன்றியது இங்கு தமிழில் முன்னிருத்தப்படும் ஏது ஜம்பவான்களையும் விட எழுத்தில் ஒரு படி மேலே நிற்கிற அற்புதமான எழுத்து ஆபிதீனுடையது. ஆனால் அவர் அதன் முழுமையாகக் அறியப்படுகிறாரா என்றால் இல்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.இந்த அழகான உலகம் மிகவும் பலவீனமான மனிதர்களால் சூழப்பட்டுள்ளது.இஸ்லாம் சமூகத்தினருக்கும் கூட கதைகளை கொண்டாடவோ பேசவோ ஒன்றுமில்லாதவர்களைப் போன்ற செயல்பாட்டினர்தான்.அவர்களுக்கு ஆயிரத்தி நானூறு வருட்களுக்குப் பின்னரான வரலாற்றைக் கூட தெரியாத கூட்டமாக அல்லது அவற்றின் மீது தாத்பரியமற்றவராக அங்கிருந்து ஒரே துள்ளலில் நேராக சமகாலத்தில் வந்து விடுவார்கள். சமகாலத்திலிருந்து மறு துள்ளலில் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் போய் நிற்பார்கள்.இவர்களிடத்தில் மலேஷியா நாட்டின் முன்னாள் பிரதமர் மஹாதீர் முஹம்மதுக்கும் எனக்கும் தகராறு ஒன்றும் கிடையாது எனத் துவங்கும் கதையின் போக்கை எங்கே எவ்வாறு பொருத்துவது என்பது தெரியாமல் போவதை நாம் குற்ற காரியமாகவும் பார்க்க இயலாதுதானே. ஆனால் ஆப்தீனின் எழுத்துகள் இவைபற்றியோ அல்லது அவைபற்றியோ ஒரு துளியளவும் கவலை கொள்ளாது வரையப்பட்டது. அதற்காகப் போய் நீங்கள் இலகுவில் பார்த்து இதுதான் இன்னதுதான் என்று  ஒரு முடிவுக்கு வந்துவிடலாமென்று கருதிவிடாதீர்கள்.நீங்கள் வரலாறு இன்றியோ, சமகால உலகப்பரப்பில் நிகழும் நவீன மாற்றங்களின் அவதானமின்றியோ,உங்கள் பண்பாடுகளிலும் அவற்றில் நிகழ்தேறிய கடும் மாற்றங்களின் அறிவு இன்றியோ,ஆபிதீனின் வரைதலின் ஒரு பக்கத்தின் சிறு முனையைக்கூட உங்களால் நுகர முடியுமென்று நான் நம்பவில்லை.

அபு ஹூரைரா(ரழி)சொன்ன ஹதீஸ் ஒன்று உண்டு.'இறுதிக் காலத்தில் சிலர் வருவர்.மார்க்கப் பக்தர்கள் போன்று நடித்து உலகத்தை ஏமாற்றுவர். இவர்களின் பேச்சு தேனைவிட இனிமையாக இருக்கும்.இதயங்களோ ஓநாயுடையவை'.இது இப்போதைய காலத்தைக் குறிக்கவில்லை என்று யார் மறுக்க முடியும்.மீஜான் கதையின் ஒரு பகுதியில் இப்படி ஒரு நபி மொழி வருகிறது.இப்படி இப்படி ஊடுபாவும் விசயங்கள் நம்மை எங்கெங்கோ கொண்டு போகும் ஆனால் நாம் நின்று ஸ்தம்பித்துவிடாமல் அவரின் கதைஉலகில் பயணிப்பதுதான் அடுத்தடுத்த அனுபவங்களைப் பெற ஏதுவானது.ஒரு சிறுகதை இந்த பேரண்டத்தின் கீழான பல நூறு அனுபவங்களை இவ்வளவு காத்திரமாகப் பொதிந்து தர இயலும் என்பதற்கு இச்சிறுகதைகள்தான் இருக்கின்றன என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன்.இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இங்கிருக்கிற பெரும்பான்மை வாசக பரப்புக்கு இவை அந்நியமாக இருக்கிறது.மிகப்பெரிய முயற்சி செய்து நுழையவேண்டியவை,மாறாக இப்பரப்பில் பரிட்சயமுள்ள இஸ்லாமிய வாசகப் பரப்பில் வாசிப்பு என்பது அவர்களுக்கு மிகச் சோம்பலானதாக தோன்றக்கூடிய ஒன்றாகும். இவ்வாறான சூழலில் ஆபிதீன் அவர்களின் கதைகளின் தோட்டத்து நிழலில் எந்த விவாதக் கூடாரமும்  அடிக்கப்படாமலேயேக் கிடக்கிறது.

உயிர்த்தலம் பதினான்கு சிறுகதைகளைக் கொண்டிருக்கிற நூல்.சாமான்ய முஸ்லிம்களின் நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், அடங்க மறுக்கும் சுயநலங்கள்,ஆன்மீகத்தின் போர்வையால் மறைந்துகிடக்கும் சிறுமைகள் என பேரழகு கோலங்களாலும் அதற்கு நிகரான வசைகளாலும் வார்த்தெடுத்த பாத்திரங்கள் ஆபிதீனின் கைபட்டு உயிர்பெற்று உலாவருவதாக இலங்கையின் மூத்த எழுத்தாளர்  எஸ்எல்எம் ஹனிபா குறிப்பிடுகிறார். கைபட்டோ மனம்பட்டோ ஆப்தீன் கதைத்தார் என்றால் மூன்றாவதாக வேறு எதோ ஒன்று பட்டுக்கூட உயிர்பெறுவதாகச் சொல்லுவார். கதைச் சொல்லியின் அஸ்மாவோடுதான் கேட்க வேண்டும். கதைகளில் அஸ்மா நீக்கமற நிறைந்தவள்.ஒரு ஜீம்பூம்பா கதையில் மாமன்னனின் உயிர் ஏழு கடல்தாண்டி தீவிலுள்ள ஒரு மர்மப் பொந்திலிருக்கும். உயிர்த்தலத்தின் ஏகதேசம் எல்லா கதைகளின் ரூஹூம் அஸ்மாவிடமிருக்கிறது.ரூஹ் இறைவனுக்குறியது என்பது போல அஸ்மா ஆப்தீனுக்குரியவளாக கதையின் ரூஹாகி வாழ்கிறாள்.

இந்த நூலைப்பற்றி நான் கதைகளாகச் சொல்ல முடியாது.இதில் எனக்குக் கிடைக்காத இன்னொரு அனுபவம் உங்களுக்கு கிடைக்கலாம்.எனவே உங்களுக்கான அனுபவத்தை நீங்களே இதிலிலிருந்து எடுத்துக்கொள்ள பாத்தியப்பட்டவர்கள்.இது மழைத்துளியை வெட்டவெளியில் பாத்திரம் ஏதுமின்றி பிடித்துக் குடிப்பது போலத்தான்.இதை ஒருவனுக்கு எப்படி செய்வதென்று நாம் எங்கனம் சொல்லிக் கொடுக்க இயலும். கண்ணியத்திற்குரிய கள்ளஹாஜி அவர்களுக்கு, என்று கோபமான தமிழில் துவங்கும் ஒரு நீளமான கத்தியை உங்களுக்கு  பார்க்கும் விருப்பம் உண்டுமென்றால் நீங்கள்தான் பார்க்கவேண்டும்.ஒரு நடிகையின் பாவாடை உயர்ந்த தருணத்தில் அவள் சரியாக காமிராவைவிட்டு விலகினாள் என்று நான் எழுதியற்கு எனது தோழி ஒருத்தி உள் பெட்டியில் வந்து இது பெரிய மனுசனுக்கு அழகா என்று என்னோடு சினுங்குகிறாள்.சிறிய மனிதர்களுக்கு மட்டும் அழகானவை என்று ஏதேனும் தனியாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.நானே பெரிய மனிதன் என்றால் ஆபிதீன் மகா மகா பெரியமனிதனாக இருக்கிறார். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரண்டாயிரத்தி இரண்டிலேயே அவர் வாழைப்பபழம் கதையை எழுதிவிட்டார். இப்போதுதான் எனக்கு பழைய கள்ளஹயவான்களின் எழுத்தின் அடியூற்று இங்கு கிடப்பதும் புலப்படுகிறது.படித்தால் உங்களுக்கும்   இன்னும் நிறைய புலப்படும்.இங்கு எல்லாம் புலப்பட்டதுபோல பெருமை பீத்திகளுக்கு ஒரு குறைவும் இல்லை. எல்லாம் பொய்யர்கள்,ஒப்பனைக்கூட ஒழுங்காகச் செய்து கொள்ளத்தெரியாத பொய்யர்கள். மனிதர்கள் புலப்படாத பொய்யர்களாக இருப்பதைவிட கேடுகெட்ட அடிமுட்டாள்களாக இருப்பது சிறப்பானது.அதனை நீங்கள் மட்டுமாவது அறிந்திருக்க வேண்டும் என்பதை ஒரு கதை உங்களுக்குச் சொல்லித்தரும் என்றால் அதன் பாக்கியம் எவ்வளவு முக்கியமானது. மனிதனை சோதனை செய்வதில் ஆண்டவனுக்கு இருக்கும் ஆனந்தமே தனிதான்.

நாற்தைங்கா பானையில் உப்பும் மிளகோடுகிடந்து நாற்தைங்காய் மெர்ஜ்ஜாவது போல அங்கதத்தில் கிடந்து மெர்ஜ்ஜாவது லேசுபட்ட காரியமில்லை.சுயஅங்கதம்,பிறஅங்கதமென அங்கதத்தில் பலாய் மூஸீபத்துக்களை வாரி இறைத்துக் கொள்ளும் உச்சம்.அங்கதத்தின் சுவை அறிந்தவர்களால் அவையின்றி நகர்தல் சாத்தியமில்லை.வாழ்வை நாம் பிரயாணம்போலக் கடக்கிறோம். பிரயாணம் வாய்க்கும்,ஆனால் அது எப்போதும் நமக்கு இஷ்டமான சாலையில் நிகழ்வதில்லை.ஆனாலும் நாம் பிரயாணத்தை சலிப்பற்றதாக அமைத்துக் கொள்ளவேண்டும்.நம் வாகனத்தின் ஒரு சக்கரமேனும் அங்கதம் பூசிக்கொள்ளுதல் நலம்.எங்கள் மாவட்டத்தில் இப்போதும் சக்கரம் என்றால் பணம் என்றுதான் பொருள்.அதுகிடக்கட்டும் விடுங்கள் சிலருக்கு ரோமமும் சக்கரமும் ஒன்றுபோலவே வளர்கிறது.சரியான அங்கதம் அப்படி ஒரு ரோமத்தைப் போல வளர்வதல்ல அது ஞானத்தின் ஒரு வகைமையில் வளர்கிறது. ஆபிதீனின் கதைகள் இந்த ஞானத்தின் பலவகைகள். நாங்கோரி என்ற உறுப்பினர் என்ற கதையில் ஒரு பாரா இப்படி இருக்கிறது."ஜாலிஜமால் என்று குஸ்கா பிரியர்களால் செல்லமாக இப்போது அழைக்கப்படும் திருச்சி கல்லூரியில்,முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த அனைத்துக் கல்லூரி இசை விழா ஒன்றில் நான் ஜும் பரா ப் பாடி முதல் பரிசு பெற்று,பின் ஆயிரக்கணக்கான மாணவமணிகளின் விருப்பத்திற்கேற்ப SPB யின் சம்சாரம் என்பது வீணை கிஷோரின் ருக்ஜானா பிறகு என விருப்பமாக SMA காதரின் ஒரு தும்ரி பாடி கரகோஷங்களை ஒரேயடியாக அள்ளிய இரண்டாம் நாள் எனக்கு வந்த-ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த-ஒரு மொட்டைக் கடுதாசி, 'உங்களின் அபாரமான குரல்வளத்தில் மயங்கிவிட்டேன்;இந்த இளம் வயதில் இப்படி ஒரு திறமையா? உங்களைப் போல பாட இனி யாராலும் முடியாது' என்று ஒரேயடியாகப் புகழ்ந்து,இறுதியில் இப்படி முடிந்தது: 'ஆமாம் நீங்கள் ஏன் ஜங்ஷனிலோ அல்லது சிதம்பரம் பஸ் ஸ்டாண்டிலோ போய் பாடிப் பிழைக்ககூடாது?. இப்படி எழுத்தே தன்னை அங்கத மழையில் நனைத்துக் கொள்கிறது.சிறு காயங்கள் உயிர் போவதுபோல வலிதரும் ஆனால் ஆதீத காயங்கள் வலியறியாது.நாம் கொஞ்சம் கதைக்கு வரலாம்.

நான் சிறுவனாக  இருந்தபோது எங்கள் பகுதிகளில்  மசில்வெடி என்று ஒருவகை துப்பாக்கி இருந்தது.அது கொஞ்சம் விசித்திரமான இரட்டைக்குழல்  துப்பாக்கி. கரிமருந்து, சைக்கிள் ball,சவுரி என சில உபகரணங்களைப் போட்டு இடித்து நிரப்பிச் சுடுவார்கள்.கொக்குகள் கூட்டமாக இருக்கிற இடத்தில் சுட்டால் எட்டு பத்து கொக்குகளேனும் ஒரு வெடியில் மரணமடையும்.அவ்வளவு பவர்ஃபுல்லான வெடி.நான் எனது கலுங்கு பட்டாளம் நாவலில் ராஜேந்திர பாலாஜி என்று பாத்திரம்பற்றி சொல்லும் போது அவரின் தந்தை ஒரு மசில்வெடிக்காரன் என்று குறிப்பிட்டதின் மூலம் ஏற்கனவே தமிழ் இலக்கிய உலகுக்கு மசில்வெடி பற்றிய குறிப்பொன்றை வழங்கியிருக்கிறேன். உண்மையில் நான் இங்கு குறிப்பிட விரும்புவது ஆபிதீன் அண்ணனின் சிறுகதைகள் குறைந்தது இருபத்தி ஐந்து மசில்வெடிகளுக்கு நிகரானது என்பதைத்தான்.அது தன்னகத்தே ஒரு இலக்கை வைத்துக் கொண்டே இலக்கின்றி சுட்டுத் தள்ளிவிடுகிறது. இந்த குமரி மாவட்டத்துக்காரர்களிடம் நிறைய மொழி குழப்பம் உண்டு. மொழியல்லாத வேறுபல குழப்பங்களும் உண்டு.உடல்உறவுக்கும் இங்கு வெடி என்று ஒரு பெயர் இருக்கிறது.பட்டாசுக்கும் வெடி என்று பெயர் இருக்கிறது.துப்பாக்கிக்கு தோக்கு என்றும் சுடுவதற்கு வெடி என்றும் பெயர் இருக்கிறது. ஒருவன் வந்து 'நான் வெடி போட்டேன்' என்றால் நாம் ஆளைவைத்து புரியவேண்டும். அதுபோல தோக்குக்கும் இன்னொரு பொருள் இருக்கிறது. அவன் தோக்கத் தூக்கிட்டு வந்தான் என்று சொல்லும் போதும் நாம் அதனை மிக நுட்பமாக புரியவேண்டும். மசில்வெடி தோக்கு வைத்திருந்த ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் பகலில் சண்டை.அவள் சண்டையின் உச்சத்தில் சொன்னாள் "நைட்டு தோக்கத் தூக்கிட்டு வா அத தறிக்கனா என்னான்னு பாரு..." தறிப்பது என்பது வெட்டுவதாக அர்த்தம்.மெய் பொருள் காணபதுதான் அறிவு.ஆபீதீன் கதை ஒரு இடத்தில் இப்படி சொல்கிறது.
கையிலே ஓட்டமில்லை
வீட்டிலோ திட்டமில்லை
ஓடினேன் துபாய்க்கு
உழைத்தேன்.... உழைத்தேன்...
அப்பாடா
ஒருவழியாக செட்டில் ஆனேன்
- சிலோன் காரியோடு! இதன் கீழே ஒருவழியாக துபாயில் இன்னொரு தமிழ் கவிஞன் பிறந்துவிட்டான் என்பதில் நானா ஒரு டானைப் போல நின்று நாலாபக்கமும் மசில்வெடிகளை சுட்டுத்தள்ளுகிறார்.
கொஞ்சம் சிரித்தால் சிரிக்கலாமே என்கிற அடிப்படையில்தான் நான் இவ்வாறாக இதன் உலகை விரிக்கிறேன்.
ஆபிதீனின் நூல்பற்றி எழுதும் போது குறைந்தபட்சம் இந்த சுவை நமக்கு வராமல் போனால்தான் அதிசயம். நீண்டகாலமாகவிட்டது  எழுத்தை நுகர்ந்து மீளமுடியாத அளவுக்கு மயங்கி.அந்தரத்திலிருந்து தூக்கி வீசி ஒரு வாசகனை சிதறி தெறித்துப் போகாமல் பூப்போல அவனை நிலம்பாவச் செய்யும் இந்த எழுத்துக்காரனை ஏன் இன்னும் போதுமான அளவுக்கு எவனும் கொண்டாடவில்லை என்பதுதான் தெரியவில்லை.கொண்டாடப்பட வேண்டியவரை கொண்டாடாமல் புறக்கணிப்பதின் வாயிலாக இங்கு உருவாக்கி வளர்க்கப்படும் உள்ளார்ந்த அரசியலின் சோகம் நம் தலைக்கு மேலாகப் பறந்தபடியே  இருக்கிறது. இங்கு நாயகப் பிம்பத்திலிருக்கும் எவரின் எழுத்தைவிடவும் ஒருபடி மேலானது இவ்வெழுத்து.ஆனால் ஆபிதீனின் எழுத்தில் நுழைவதென்பது இலகுவான ஒரு நிகழ்வு இல்லை.அதற்காக வாசகன் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் நிமித்தமாக நம் காலத்தின் பொக்கிஷமொன்று மறைந்து கிடப்பதின் வலி எனக்குள் பரவுகிறது.

5 comments:

  1. அன்பும் நன்றியும் மீரான்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி அண்ணன்

      Delete
  2. நிச்சயமாக படித்து விட வேண்டியதுதான். இணையத்தில் ஆபிதீன் பக்கங்கள் என்ற blogஐ படித்துள்ளேன். அந்த எழுத்து இவருடையதா.உங்கள் குரலைப் பற்றி சொல்லி விட்டார். என் மனைவி என்னைப் பாட வேண்டாமென பலமுறை கெஞ்சியுள்ளார்.ஒரு தேர்ந்த ரசிகன் நல்ல பாடகனாகவும் இருக்கவேண்டிய அவசியமில்லை என எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ஆபிதீன் நல்ல பாடகராக இருக்கிறார் என்றே நான் நம்புகிறேன்.குரல் பற்றியது அவரது கதையில் உள்ளதுதான்.அவரின் கதைகள் சுய கேலியாலும் கூட நிறைகிறது.

      Delete

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...