Thursday 7 March 2024

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்
                   இன்னொரு சாயல்

                           எம்.மீரான் மைதீன்



               தெரிசை சிவா குமரி மாவட்டத்துக்காரர். "குட்டிகோரா" சிவாவினுடை சிறுகதை தொகுப்பு நூல்.பன்முகப் பண்பாட்டு நிலமான குமரி மாவட்டம் பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது.இப்போதைய இதன் தலைநகரான நாகர்கோவிலிலிருந்து பத்துகிலோமிட்டர் எப்பக்கமாகப் பயணித்தாலும் மாறுபட்ட நிலத்தை தரிசிக்க இயலும்.மலைசாரந்த பகுதி,காடு,வயல்,வறட்சியான நிலம்கூட பார்க்க இருக்கிறது.தெற்கு பக்கமாக நகர்ந்தோமானால் பரந்த கடல்வெளி தரிசனமாகும்.மேற்கு பகுதி நிலம் துவங்கி உணவு உடை பண்பாடு என எல்லாவற்றிலும் மலையாளச் சுவை மிகுந்திருப்பதைக் காணலாம். விளவங்கோடு கல்குளம் அகஸ்தீஸ்வரம் தோவாளை என நான்கு தாலுகாக்களுக்கும் தனித்தனி நிறம் மணம் குணமிருப்பதை நெருக்கத்தில் உணர இயலும்.இதனை ஓர் எல்லையற்ற பேரழகாக உணரலாம்.
         இங்கு இஸ்லாமியர்களிடமும் கூட இந்த நிலவியல் அமைப்பில் வழிபாட்டு நம்பிக்கைகள் ஒன்றுபோல இருப்பதைக்கடந்து வாழ்வியல் முறைகளில் பேச்சும் உணவும் சடங்குகளும் கூட சில மாறுதல்களைக் கொண்டதுதான்.இது தனித்துவமான மாவட்டம் என்பதைக் கடந்து பனமுகப் பண்பாட்டுப் பிரதேசம் என்பதாகக் கொள்வது பொருத்தமானது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் இலக்கிய ஆளுமைகள் நிறைந்த பகுதியும் கூட.ஹெப்சிபாய் ஏசுதாசன்,ஐசக் அருமைராசன் ஒரு பகுதி எனக்கொண்டால் இதன் இன்னொரு பகுதியாக பொன்னீலன் உலகம்.இதன் தொடர்ச்சியாக வரும் லக்ஷிமி மணிவண்ணன்,கிருஷ்ன கோபால்,பிரபு தர்மராஜ்,ராம்தங்கம் போன்றவர்கள் ஒருபகுதியின் பிரதிபலிப்பு.நாஞ்சில் நாடன், மா.அரங்கநாதன் துவங்கி சிவதானு,தெரிசை சிவா,வைரவன்,என வரும் படைப்பாளிகள் மற்றொரு நிலவியல் பிரதிபலிப்பு.நீல.பத்பநாபன் காத்திரமான இன்னொரு பிரதிபலாப்பு.குமார செல்வா, ஜே.ஆர்.வி.எட்வட்,செல்சேவிஸ்,போன்றவர்கள் விளவங்கோடு தாலுகாவின் நுண்பண்பாட்டுப் பிரதிபலிப்பு. இதல்லாத ஆளுமை முகமாக சுந்தரராமசாமி மற்றும் ஜெயமோகன் போன்றவர்களின் பொதுவான எழுத்துகள்.கிழக்கும் மேற்கும் உரசிக்கொள்ளும் மற்றொரு எல்கையாக இருக்கக்கூடிய தக்கலைப் பகுதியை மைய்யமாகக் கொண்ட இயங்கிய இயங்கும் ஹெச்.ஜி.ரசூல், அபிலாஷ், நட.சிவகுமார்.ஐ.கென்னடி, முஜிப் ரஹ்மான்,சிவசங்கர்,ஹாமீம் முஸ்தபா,பைசல்,மலர்வதி,அமுதா ஆர்த்தி  போன்றவர்களின் எழுத்துகள் அறியப்படாத பல நுண் பண்பாட்டு வெளியில் இயங்கக்கூடிய எழுத்துக்களாக வந்தடைகின்றன. ஆரல்வாய்மொழியிலிருந்து எழுதிய வெகுஜனப் பரப்பில் பெரிதும் அறியப்படாத மறைந்த எழுத்தாளர் சாலன் அந்த நிலத்தின் மாறுபட்ட அற்புதமான ஒரு முகம்.அவரின் அழுக்கு சிறுகதை நூல் முக்கியமானது. ஆதிக்கச் சாதியின் அழுத்தங்களால் கிருஸ்தவர்களாக மாறிய தலித் வாழ்வியலைப் பேசியக்கதைகள். இன்னொரு வாழ்வியலைப் பேசிய தோப்பில் முகம்மது மீரான்,ஆளூர் ஜலால்,மீரான் மைதீன்,இடலாக்குடி ஹசன் போன்ற வரிசையைப் போல கடல்சார் வாழ்வைப் பேசிய வறீதையா கான்ஸ்தந்தின்,குறும்பனை பெர்லின்,செள்ளு செல்வராஜ், இறையுமன் சாகர்,அருள் சினேகம், கடிகை ஆன்றனி,கடிகை அருள்ராஜ், சப்திகா,முட்டம் வால்டர்,தமிழ் தேவனார் என பலரையும் அடையாளப்படுத்த இயலும்.இவற்றில் ஒரே வரிசையில் இயங்கியவர்களிடம் கூட எழுத்துக்களில் பல மாறுபட்ட வாழ்வுமுறை அடுக்குகள் வெளிப்பட்டிருக்கின்றன.நீல பத்பநாபனின் நாவலை வாசிக்கும் போது நாம் உள்வாங்கும் சமூகமும் நாஞ்சில் நாடனின் நாவலை வாசிக்கும் போது உள்வாங்கும் சமூகமும் தனித்த தன்மைகள் கொண்டு இயங்குபவவைகளாகும்.பொன்னீலனின் நாவல்கள் காட்டும் உலகமும் குமார செல்வாவின் நாவலின் உலகமும் ஒரு பின்புலத்தின் இருவேறு நுண்பண்பாட்டு முகங்களாக வெளிப்படும் இரண்டிலும் தனித்துவமான இரண்டு அரசியல்கள் வெளிப்படுகின்றன.இந்த மாவட்டத்தின் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு எனக் கொண்டால் கூட, இங்குள்ள எழுத்தாளுமைகளின் எழுத்துக்களை சுமந்து நகர்ந்தால்  இங்குள்ள பல கூறுகளையும் அரசியலையும் மொழியையும் கலாச்சார மாற்றங்களையும் புழங்கு பொருட்கள் வரையிலும் எல்லா அம்சங்களையும் ஒட்டியும் வெட்டியுமான பெரும் தரிசனம் வாய்க்கப் பெறலாம்.தனித்தனியான ஆய்வுப் பார்வைகள் நிறைய நிகழ்ந்திருக்கிறது என்றாலும் ஒரு கூட்டு ஆய்வானது மேலும் பல சுவாரஸ்யங்களைத் தரக்கூடும்.
                   மனிதர்களுக்குள் கூர்மையான இரண்டு எதிர் எதிர் மனிதர்கள் உண்டு.அது அவனுக்குள் அல்லது அவளுக்குள் தலைகீழாக இருக்கிறது.இந்த எதிர் எதிர் மனிதர்கள் என்பதை கடவுள் சாத்தான் குறியீட்டில் பொருத்திக் கொண்டால் கடவுளையும் சாத்தானையும் ஒருங்கே கொண்டலையும் மனிதன் தனது எழுத்துப் பிரதிகளிலும் இந்த எதிர்நிலையை அறிந்தோ அறியமலோ சமைத்துவிடுகிறான்.வெளியே இருந்து பிரதிக்குள் நுளையும் ஒவ்வொருவனும் ஒவ்வொருவளும் முன்னமே கடவுளையும் சாத்தானையும் தங்களுக்குள் கொண்டிருப்பதால் அதன் வழியே பயணிக்கின்றனர். பிரதியிலிருக்கும் சாத்தானைத் தேடி கடவுளும்,கடவுளைத் தேடி சாத்தானும் பயணப்படுவது ஒரு விளையாட்டுதான். விளையாட்டு எல்லா நேரங்களிலும் விளையாட்டாக இருப்பதில்லை, வினையாகியும் விடும்.ஆதியிலே கடவுளும் சாத்தானும் நண்பர்களாக இருந்தனர்.பின்னர் அவர்களுக்கிடையேயான விளையாட்டு வினையாகியது,எதிரிகளான கடவுளும் சாத்தானும் இப்போது நமக்குள்ளும் நம்பிரதிகளுக்குள்ளும் இல்லாமல் வேறு எங்குதான் வாசம் செய்ய இயலும் .வாசம் செய்கிறவர்களால் சும்மா இருக்க இயலாது எனவே நல்வழி படுத்தியே தீருவேன் என்கிறார் கடவுள் . வழிகெடுக்காமல் விடமாட்டேன் என்கிறார் சாத்தான்.நாம் மூச்சு இடைவெளியில் அங்கும் இங்குமாக சிக்கிக் கொள்கிறோம்.பிரதிகள் நம் மேல் விழுந்த வண்ணமாக இருக்கிறது. பிரதிகளால் மூடப்படுகிறோம். பிரதிகளுக்குள்ளிருந்து ஒன்று பத்து நூறு ஆயிரம் லட்சம் கோடி என கடவுளும் சாத்தானும் நம்மை சூழ்ந்துள்ள நிலையிலிருந்தும் பிரதியை அனுகலாம்.
இயற்கையின் அம்சங்களான கடல், மலை,நிலம் ,வயல்வெளி,நதி போன்ற நீர்சூழ்ந்த நமது ஊர்.அல்லது நாம் அறிந்த ஊர்கள்.மதம்,சாதி,நம்முடைய வழிபாட்டு நம்பிக்கை,உணவு, உடை, நம்முடைய அரசு,அதன் நிர்வாக முறை,சட்டம்,நாம் சார்ந்த சடங்கு சம்பிரதாயம்,சமயப்பண்பாடு,பொதுப்பண்பாடு.இவைகளோடு,ஆண்பெண் உறவு,காதல்,கோபம்,எனத்தொடரும் மனித உணர்ச்சிகள் இவை எல்லாம் கலந்த அல்லது ஏதேனும் சில பகுதிகள் கலந்த மனித வாழ்வின் பிரதிபலிப்புகளே வேறு வேறு வகைமைகளில் பிரதியில் மைய்யம் கொள்கின்றன.இதில் கடவுளையும் சாத்தானையும் விலக்க முடியாத தன்மை மனித பிறப்பிலேயே ஏற்பட்டு விடுவதால் பிரதியின் மைய்யத்திலும் இந்த கடவுள் சாத்தான் விளையாட்டு நாம் அறியாமலே இருப்பு கொள்கிறது. பிரதியை சூழ்ந்திருக்கும் முதன்மை உலகம் இதுதான் என்றாலும். மனிதனுக்குள் ஒரு கனவுலகமும் இருக்கிறது.மனிதனி்ன் கனவுலகிலும் இரண்டு எதிர்நிலைகளை காணலாம்.ஒன்று கடவுளின் கனவு,இரண்டு சாத்தானின் கனவு.எனவே கனவுவெளி புனைவுப் பிரதிகளிலும் இந்த கடவுள் சாத்தான் விளையாட்டு இயல்பிலேயே அமைந்துவிடுகிறது.ஒரு பிரதியின் ஆக்கமுறையில் அது நேர்கோட்டு எழுத்தாகவோ,அல்லது காலத்தை கலைத்துப்போடும் எழுத்தாகவோ, கனவுவெளி புனைவெழுத்தாகவோ எவ்வகைமையானாலும் இந்த கடவுள் சாத்தான் விளையாட்டு மைய்யச் சரடாக இருந்து பிரதிகளை கட்டமைப்பதில் அடிப்படை தன்மை கொள்கிறது.நான் மேற்குறிப்பிட்டுள்ள எல்லா படைப்பாளிகளிடமும் இந்த அடிப்படைத் தன்மை இருக்கிறது.
           மீக அழகான பாரம்பரிய பரப்பில் தெரிசை சிவாவினுடை குட்டிகோராவும் ஒரு கண்ணியாக நம்மை வந்தடைந்திருக்கிறது.நாம் எல்லா மனிதர்களையும் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.தனித்துவமான நல்லதோ கெட்டதோ அவர்களிடத்திலிருந்தால் அவர்கள் நமக்கு அபூர்வமானவர்கள்.இந்த அபூர்வமானவர்களே நம்முடைய மனங்களை ஆக்கிரமிக்கின்றனர். குட்டிகோரா  இவ்வாறான ஆக்கிரமிப்பாளர்களையே நமக்கு தருகிறது எனவே இந்தக் கதைகளின் மனிதர்கள் நம்முள்ளே வாழ்கிறார்கள். நிலத்தை வடிவமாக்குகிற நேர்கோட்டுக் கதைகளில் அவரின் மாந்தர்கள் ஒரு ஒப்பனையுமின்றி இயல்பில் வாழ்கிறார்கள்.திடிரென நினைத்துப் பார்த்திரா ஒரு விசயமோ சொல்லோ நிகழ்வோ கதையை சிதறடிக்கிறது. மேலும் அதுவே முடிவுறாத மற்றொன்றை நோக்கி நகர்கிறது. இதனை சிவாவின் எழுத்தாழமாகப் பார்க்கலாம்.தோசை என்றொரு சிறுகதை,மிகச் சாதாரணமான ஒரு இஸ்லாமிய பாத்திரம்.திடிரென அவர் மீது ஒரு சித்திரம் தீட்டப்படுகிறது.அந்த அழுத்தம் எப்படி அவரை மெல்லக் கொல்கிறது என்பதன் பதிவு.பக்கீர் பாய் என்பவரின் கதையாக வரும் நிலம் சிவாவின் அருகாமை ஊர் என்பதும் மேலும் அதனை சுற்றிலும் பரவும் நிலமும்கூட அறிந்தவர்களுக்கான ஒரு உலகத்தை கட்டமைக்கும்.அபூர்வமான மனிதர்களின் வரிசையில் பக்கீர் பாய்,துரை பாட்டா மற்றும் ஆசான் போன்றவர்களின் உலகினை எளிதில் கடந்து போய்விட இயலாது.ஒருவேளை நாமும் இதுபோன்ற மனிதர்களை சந்திக்கலாம் துரைபாட்டா போன்ற ஒருவரோடு புழங்கிக் கொண்டிருக்கலாம்.சிவா அபுர்வமான ஆண்களை கொண்டுவருவது போலவே கும்பாட்டக்காரியான வள்ளியம்மாள் மற்றும் வெத்திலைப் பெட்டி கதையில் வரும் பெண்மணி என பெண்கள் வருகிறார்கள்.சிவாவின் இந்த தொகுப்பில் நான் குறிப்பிட்ட கடவுள் சாத்தான் விளையாட்டு அழகான களம் அமைத்திருப்பதை வாசிப்பின்வழி  காண இயலும். சிவாவின் எழுத்துக்களை ஒரே வகையாக சொல்லிவிட முடியாது அல்லது அப்படியே எதார்த்த வகைமையில் மட்டும் பயணிப்பதுமல்ல.உலக்கை அருவி மற்றும் குட்டிகோரா சிறுகதைகள் இன்னொரு எதிர்நிலை எழுத்தாகி மலருகின்றது.நாம் சாதரணமாக பேசத் தயங்கும் விடயங்கள் மனதின் அடியாழத்தில் மறைக்கப்பட்ட விடயங்கள் என பல திறப்பு கொண்டவையாக அதன் மற்றொரு உலகு புலப்படுகிறது.அழகிய யுக்தி பூர்வமான வெளிப்பாடு. சுடலைமாடனுக்கும் ஆட்டிற்கும் நடக்கும் உரையாடல் பகடி கடந்த கதையாக ரசிக்கத் தக்கவை .பெரிய விசயங்களை சின்னவைகள் மீது ஏற்றி அனாயசமாக ஆடும் ஓர் ஆட்டமாக ஆடுகிறார். சாதிய மனம் மனிதர்களின் அகத்தில்  பதுங்கிக் கிடப்பதையும் அது எவ்வாறான சந்தர்பங்களிலெல்லாம் வெளிப்படுகிறது எங்கு வெளிப்படுகிறது என்பதையும் அது எதுபோன்ற வர்ணஜாலங்கள் மூலமாக தன்னை மறைத்துக் கொள்ள விரும்புகிறது என்பதைப் பற்றியெல்லாம் நாசூக்காக பேசிவிடுகிற "நறுவல்"போன்ற கதைகள் ஈர்ப்பு மிக்கது.எழுத்தோடு பயணிக்கும் ஓட்டத்தில் மனதிலிருக்கும் அச்சம் பதிவாகிறது.ஒரு மலையாளப் பேய் என்கிற கதை ஒன்றில் சாலையில் சிதறிக்கிடக்கும் கிரேந்திப்பூ மரணத்தை நினைவூட்டுகிறது மரணம் பேயை நினைவூட்டுகிறது இதன் மனவோட்டம் கதையாக தொடர்ந்து வாசகனைத் துரத்துகிறது.
         ஏராளமான எழுத்து முறைகளை வாசிக்கிறோம். ஏற்பதும் முரண்படுவதுமான பல மாறுபாடுகளை அலசிக்கொண்டேதான் யாராவது காதருகே அமர்ந்து கதை பேசினால் கேட்பதற்கு ஆர்வமுடையவர்களாகவே இருக்கிறோம்.சிவா காதருகே கதை சொல்வதோடு நம் கரங்களைப் பற்றி இழுத்துக் கொண்டுபோய் நிலத்தில் விடுகிறார்.இது ஒரு யுக்தி என்றால் பாரம்பரியமான தொடர்ச்சியில் இவர் தனக்கான இருப்பை கண்டடைந்திருக்கிறார் என்றே கருதலாம்.தந்தையை வெளிநாட்டுக்கு அழைத்துப்போய் அவருக்கு இன்னொரு பண்பாட்டிலுள்ள உடையை அணிவித்துப் பார்பது,கண் பார்வையற்ற ஒருவரின் பாலியல் உணர்வு கற்பனைகள் எப்படியானது, என கதையின் அடுக்குகள் நிறைய இருக்கின்றன.பெண் அறியாத பெண் உடலின் சித்திரங்கள் ஒரு ஆண் மனதில் பலவாறாக குவிந்து கிடக்கலாம்.பார்வையற்ற ஒருவன் உருவாக்கிக் கொள்ளும் சித்திரம் எப்படியானது,அது கனவா நினைவா.முடிவற்ற வாழ்வை பேசும் கதைகளாக  சிவாவின் எழுத்து பரவுகிறது.ஏற்கனவே தமிழ் வாசகர்களுக்கு மா.அரங்கநாதன், நாஞ்சில் நாடன் போன்றவர்களால் அறிமுகமாகியிருக்கிற இந்த நிலத்தின் முகம் சிவாவிடமிருந்து இன்னொரு சாயலையும் தருகிறது.
      
           

Wednesday 14 February 2024

" புதிய திறப்பு "

    " கலாச்சாரத்தின் மீதான
           ஒரு புதிய திறப்பு "

                             எம்.மீரான் மைதீன்


       ஆமினா முஹம்மத் எழுதியிருக்கிற ஆகாத தீதார் என்கிற சிறுகதை நூலை வாசித்துவிட்டு அமைதியாக யோசித்த தருணங்கள் நன்றாக இருந்தது.நம்மை  நெகிழ்த்தும் எழுத்துக்கு எப்போதும் நமக்குள்ளே ஒரு இடம் உருவாகுகிறது. நமது சிந்தனைப் பரப்பை விசாலப்படுத்தி நம்மை அசைக்கும் போது நாம் அந்த அசைவுகளுக்கு ஏற்ப மன எல்கைகளில் நம் வாழ்வியல் தொடர்புகளிலுள்ள முந்தைய சுவீகாரங்களின் வழியே  பயணிக்கிறோம்.அப்படியான ஒரு பேரனுபவத்தை தருகிற தொகுப்பாக அமைந்திருக்கிறது.இஸ்லாமிய வாழ்வியல் பரிட்சயமுடையவர்களுக்கு இந்த கதைமாந்தர்களும் மொழியும் உரையாடலும் மதுரமான சுவையுடையதாக இருக்கும். ஒரு மலைப்பிரதேசத்தின் மழை வெள்ளம் பள்ளத்தை நோக்கி பாய்ந்தோடுவது போல வாழ்வின் எல்லா நிலைகளும் பெண்களை நோக்கியே பாய்ந்தோடும் வாழ்வியல் சித்திரத்தை காலத்தின் முன்னும் பின்னுமாக ஆமினா எழுதியிருக்கிறார்.வாழ்வை வரலாறாகவும் வரலாற்றையே வாழ்வாகவும் கலைப்படுத்தும் இந்த சிறுகதை நூல் சாதரணர்களின் அற்புதமான ஒரு ஆவணமாக நம்மை வந்தடைந்திருக்கிறது.முந்தைய பல இருப்புகளை உடைத்துப்போடும் ஒரு ஜென்மத்தின் மனுசிகள் அப்படியே காலத்தோடு நம்மை வந்தடைகின்றனர். புகைப்படம் என்கிற ஒரு சிறுகதை, தொகுப்பிலுள்ள ஆகச்சிறிய கதையும் கூட.காலத்தைாமட்டுமே உறையச் செய்யாமல் செய்யப்பட்ட துரோகங்களையும் தாங்கி நின்று நடுக்கமுறசெய்யும் ஒரு கேள்வியை முன்வைக்கிறது.கேள்விகளுக்கு இங்கு பதில் இல்லை என்றாலும் கேள்விகளால் எல்லாவற்றையும் குதற முடியும்.குர்ஆனில் காலத்தின் மீது சத்தியமாக எனத்துவங்கும் பல வசனங்களை வாசித்திருக்கிறோம். காலம் எத்துணை முக்கியமானது என்பதன் புரிதலாக இதனை கொள்ளலாம்.கடந்த காலத்தை நம்முன் கொண்டு வருவதன் வாயிலாகவே நாம் புதிய கட்டமைப்பை உடைக்கவோ உருவாக்கவோ இயலும்.

          உயிர்கள் இந்த உலகவாழ்வை மரணத்தின் வாயிலாக நிறைவு செய்கின்றன.மரணமடைந்தவர்கள் பிறகு ஒருபோதும் திரும்ப வருவதில்லை.எனவே அது நமக்கு மிக்கடுமையான துயரம் தரக்கூடியது. நமக்கு தெரிந்தவர்கள்,நம்மோடு பழகியவர்கள்,நம்மோடு நெருக்கமாகப் பழகியவர்கள்,மிகமிக நெருக்கமாகப் பழகியவர்கள்,நாம் அன்றாடம் பார்த்து வரக்கூடியவர்கள்,உறவுகள்,தூரத்து உறவுகள்,நேரடியான இரத்த சம்பந்தமுடைய உறவுகள்,உறவுகளின் உச்சமான தாய்தந்தையர் கணவன் மனைவி,சகோதர சகோதரிகள் என பலவிதமான அடுக்குகளில் நிகழும் மரணங்களில் மனிதர்கள் துயரப்பட்டு, வலிசுமந்து,நினைவுகளின் ஆக்கிரமிப்பிலேயே வாழ்வதைப் பார்க்க இயலும்.தாய் தந்தையரின் மரணங்கள் பிள்ளைகளின் வாழ்நாள் முழுவதும் நினைவுகளாய் துரத்துவதுபோல இணையர்களின் மரணமும் அதீத நினைவுகளின்பால் மூழ்கடிக்கும் துயரமானது. இதன்பொருட்டு அந்த அதீத அன்பின் நினைவுகளை சுமந்து,நீ இல்லாத இந்த உலகில் வாழ இயலாதென தாங்கமுடியாத இழப்பின் வலியில்  தன்னை சுயமாக மாய்த்துக் கொள்கிறவர்களைக்கூட நாம் பார்க்கிறோம்.இன்னொரு பக்கம் கடுமையான துரோகங்களின் பொருட்டு நீ இருக்கும் இந்த உலகில் இனி நான் வாழ விரும்பவில்லை என்கிற நிலையில் நிகழும் சுய மரணங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.மரணம், மரணித்தவருக்கு விடுதலையாகவும், வாழ்பவர்களுக்கான தண்டனையாகவும் இருப்பதாக  ஒரு கதையில் எழுதியிருக்கிறேன். மரணத்தின் பொருட்டு சுற்றிலும் நாம் கற்பனை செய்ய இயலாத மாற்றங்கள் நிகழ்கின்றன.ஒரு மரணத்தால் ஒருவேளை ஒரு அடிமை சுதந்திரவானாக மாறலாம்.ஒரு ஏழை செல்வந்தனாக மாறலாம். அதுவரையிலும் அதிகாரமற்ற ஒருவர் அதிகாரம் பொருந்தியவராக மாறலாம்.இவைகள் அனைத்தும் எதிராகவும் மாறக்கூடும்.மரணம் ஒருவகையில் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

           இந்த வாழ்வில் நாம் பல மரணங்களைப் பார்த்திருக்ககூடும். எந்த மரணமும் நம்மை கொஞ்சமேனும் துரத்தும்.மரணப்பட்டவரின் நல்லவைகளும் கெட்டவைகளும் நம்மோடு அவர் வாழ்ந்த காலத்தில் நடந்த விதங்கள்,பேசிய சொற்கள் என நினைவுகள் துரத்தாமல் விடுவதில்லை.பெரும்பாலும் மரணித்தவர்களின் மீது நமக்கு வன்மமில்லை.துக்கம் மெல்ல மெல்ல எல்லா வன்மங்களையும் பகைகளையும் இல்லாமலாக்கி புனிதப்படுத்த முயலும்.மரணித்தவரின் விடயத்தில் இதில் நமக்கு ஒரு நட்டமுமில்லை.எனவே நாம் மரணித்தவரின் மீது 'நல்ல மனுசன்..போயிட்டான்..'என்பது போன்ற வார்த்தைகள் நமது சட்டைப்பையில் இருப்பு இருக்கின்றன.மரணித்தவர்கள் மீது எல்லா சமயங்களும் தனித்தனியாக நிறைய நம்பிக்கை சடங்குகள் செய்வதையும் அவ்வகைச் சடங்குகளை செய்வதைக் கடமையாகவும் கொள்வதைப் பார்க்க இயலும்.இஸ்லாம்,எல்லா உயிர்களும் மரணத்தை சுவைத்தே தீரும் எனவும்.மரணத்திற்குப் பிறகு இறைவனிடத்தில் அந்த உயிர் எழுப்பப்பட்டு கேள்விகணக்குகளின் வாயிலாக அந்த உயிரின் நன்மை தீமைகள் அளவீடு செய்யப்பட்டு அதன் பலாபலன்கள் அவ்உயிருக்கு வழங்கப்படும் என்பதை நம்பிக்கையாக கொண்டிருக்கிறது.

              இஸ்லாம் சமூகம் மூடுண்ட சமூகம் என்கிற குற்றச்சாட்டு இப்போது மிகப்பழமையாகிப் போயிருக்கிறது. பெண்கைள முடக்கி வைத்திருக்கிறார்கள் என்றக் குரல்கள் பொய்த்துப் போய்விட்டது. அரசியல், சமுதாயசேவை,ஆய்வு,கலை இலக்கியம் என அவர்கள் நிறைய பங்களிப்பைச் செய்ய வருகின்றனர். இப்போது அது பெருகிவருகிறது.இதில் ஆண்களின் உலகம் ஓரளவுக்கு முன்னமே விசாலமானது. தமிழ் சிறுகதை உலகில் இதற்கான நூற்றாண்டு வரலாறு இருக்கிறது. ஆனால் பெண்கள் என்று குறிப்பிட்டால் தமிழில் இலங்கையையும் இணைத்துக் கொண்டாலும் கூட சொற்பமானவர்களின் பெயர்களே முன்வருகின்றன.பெண்களின் பங்களிப்பாக முன்னோடிகளான பாத்திமுத்து சித்தீக், கே.ஜெய்புன்னிஸா,ஜரீனா ஜமால், இளசை மதீனா,தொண்டியைச் சார்ந்த பாத்திமா ஷாஜஹான்,பஜிலா ஆசாத்,எஸ்.பர்வின் பானு,நஸீமா ரசாக்,ஜெஸீலா பானு,என்னும் வரிசையில் வெகுஜனப் பரப்பில் அறியப்பட்ட கவிஞர் சல்மாவுக்குப் பிறகு நீண்ட காலம் கடந்து ஆய்வுத்தளத்தில்  நஸிமா பர்வின் நவீன எழுத்தின் முகமாக வந்திருந்தார். தொடர்ந்து இஸ்லாமிய வாழ்வியலை எழுதும் ஷம்ஸுல் ஹுதா இரண்டு சிறுகதை நூல்களைத் தந்திருந்த நிலையில் இப்படியான காலத்தில் சமீபத்திய காத்திரமான வரவாக அறிமுகமாகியிருக்கிறார் "ஆகாத தீதார் "சிறுகதை தொகுப்பினுடை ஆசிரியர் ஆமினா முஹம்மது.கதைக் கட்டமைப்பில் நுட்பமான பார்வை கொண்டிருக்கும் அசாத்தியமான வரவாக தெரிகிறார்.முதல் சிறுகதையை வாசித்ததுமே வியப்பாக இருந்தது.தேர்ந்த வசப்பட்ட எழுத்துமுறை.கதையை ஆமினா துவங்குகிற இடமும் முடிக்கிற இடமும் அழகிய அம்சங்களின் நேர்த்திமிக்க  கலவை.அவருக்கு எழுத்தின் வசீகரமான சாரம்சங்கள் வாய்த்திருக்கிறது என்பது உண்மையாகத் தோன்றதக்க சாத்தியங்கள் இருக்கின்றன. கண்களின் இயல்பான பார்வையைப் போல ஒரு பாடுபொருளைப் பிரதானமாக முன்வைத்து மனங்களின் வழியே கடத்துகிற எழுத்து யாத்திரையில் நல்ல ஓட்டத்தை ஓடியிருக்கிறார்.இதன் தொடர்ச்சியில் இன்னும் வீரியமான வரைவுகள் அவரிடமிருந்து வரக்கூடும்.


"காலையின் மீது இரவின் இருள் இன்னும் முழுதாய் நீங்கியபாடில்லை. அதற்குள்ளாகவே கான்சா தெரு பெண்களும் குமரிகளும் செய்யிதா நாச்சியாள் இல்லம் முன்பாக ஒருவர் பின்னே ஒருவராக வர ஆரம்பித்துவிட்டார்கள்.நீண்ட வரிசையில் கலர்,கலர் பிளாஸ்டிக் குடங்கள் அணிவகுத்திருந்தது. பானைகளை வைத்துவிட்டு தனக்கு சவுரியப்பட்ட இடங்களில் அமர்ந்துக் கொண்டு,தரையில் இருந்து பாம்பு போல் படமெடுத்து நிற்கும் குழாய் மீதும் கவனம் செலுத்தியபடி கதை பேசத் தொடங்கினார்கள்."
ஒரு காட்சி,அந்த காட்சியின் மேல் அடுக்குகள்,அந்த அடுக்குகளின் குறுக்குவெட்டு காட்சி,இவை எல்லாவற்றிற்குமான முதன்மையாக ஒரு தண்ணீர் குழாய் பாம்புபோல படமெடுத்து நிற்பதில் கவனம் கொள்ளும் கான்சா தெரு பெண்களும் குமரிகளுமாக குவிந்திருக்கும் மாந்தர்கள்.ஆனால் ஆமீனா இதனை மாந்தர்களின் கதையாக வளர்க்காமல் அத்தாக்கு நம்ம மேல பாசம் ... ஆனா அம்மா மேல பைத்தியம் என சலித்துக் கொள்ளும் சாய்ராவின் உலகம் உடைபடும் கதையாக நிறைவுருகிறது. இது ஆமினாவின் வசீகரமான எழுத்து முறையாக இருக்கிறது.
       நாசிக்குள் ஈரெட்டென வந்திலங்கு மன மந்திரத்தின் தீதாறு தந்தருளஞ் சீமானே.... என ஞானமாமேதை பீராப்பா ஞானப்புகழ்சியில் பாடியிருக்கிறார். ஞானப்புகழ்ச்சியில் பல இடங்களில் வருகின்ற சொல்லாக தீதாறு இருக்கிறது.தீதாறுக்காக இறைஞ்சுகிறது பாடல்.
         ஆமினாவின் 'ஆகாத தீதார்' மரணித்தவரின் முகத்தினை கடைசியாக பார்பது இஸ்லாமியர் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. செத்தாலும் எம் மூஞ்சியில முழிக்காதே என்கிற வார்த்தை ஆகக் கொடுரமான வெறுப்பின் உச்சமாக வெளிப்படக்கூடியவை.ஆமினாவின் மொத்தக் கதைக்களமும் இதுதான். இதுதான் என்றால் வாழ்வு மரணத்தில் மரணித்தவரல்லாத எவருக்கும் முற்றுப் பெருவதில்லை.எனவே ஒரு புதிய தொடக்கத்துக்கான வரைதலை துவங்கும் புள்ளியை வைத்துவிட்டு மெல்ல நிமிர்ந்து பார்க்கும் கதைகள்.இத்தொகுப்பிலுள்ள பதிமூன்று சிறுகதைகளிலும் மரணம் நிகழ்கிறது.மனிதர்களின் கஷ்டங்களைக் கேட்பது அவ்வளவு எளிதான விசயமல்ல .அது நம் நிம்மதியை ஒட்டுமொத்தமாய் சீர்குலைக்ககூடியது.ஆனால் இந்த கதைகள் நம்மை எங்கோ சீர்படுத்த முனைகின்றன.நம்மை வாஞ்சையோடு ஒவ்வொன்றின் அருகிலும் அழைத்துப் போகிறது.
           சாதரண மனிதர்களைவிட கலைஞன் அகலப்பார்வை உடையவன்.இன்னும் சொல்லப்போனால் கலைமனம் கொண்டவர்களுக்கு ஒரு கொம்பு கூடுதலாகவே இருக்கிறது.அதை திமிர் என்றோ ஆணவம் என்றோ ஞானமென்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும் அதுகுறித்து வரைகிறவர்களுக்கு ஒரு கவலையுமில்லை.வாழ்வின் நெடிய பரப்பில் அவர்கள் தனித்துவமான அவதானம் கொண்டவர்கள். அவர்களுக்கு பிறப்பின் பெயரிலும் இறப்பின் பெயரிலும் கூட இன்பதுன்பம் கடந்த தனித்த அவதானம் உண்டு.ஆமினாவும் அவதானித்திருக்கிறார்.அந்த அவதானத்தை தனக்குள்ளே உருக்கி படைத்திருப்பதை இதன் வாசிப்பில் புரியமுடிகிறது.சில கதைகளில் தொடர்ச்சியாக பௌசியா வருகிறாள்.ஒரு மனிதருக்குள் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்.ஜனாசாவின்(மரணத்தவரின் பூத உடல்) கட்டைவிரலில் எஞ்சிய மையின் தடம் உயில் எழுதப்பட்டிருப்பதை உணர்த்தியது என்பன போன்ற முடிப்புகளில் ஆமினா ஆகப்பெருங் கதைகளை மௌனங்களில் விதரணம் செய்வதையும் உணர முடிகிறது.

        ஆகாத தீதாரிலுள்ள இன்னொரு காத்திரமான கதையாக 'மங்கா மாமியா செவத்தா' இருக்கிறது.அனேகமாக மரணத்தில் நிறைவு பெறாத நம்பிக்கையளிக்கும் ஒரு கதையாகவும் கொள்ளலாம்.ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்குமிடையே உயிர் வாழும் ஆயிரத்தோரு அராபிய இரவுகளின் நாயகியைப் போல செவத்தாவின் உயிர் வாழ்தல் மங்காவின் உலகத்தை நீட்டிக்கச் செய்கிறது.இவ்வாறான ஒற்றை அடுக்கில் நின்று கொண்டே கதை பெரும் வரலாற்றைப் பேசுகிறது. வார்த்தைகள் ஸ்தம்பிக்க வைக்கின்றன.வீரியமான சொற்கள் மற்றுமல்ல பழைய கலாச்சாரத்தின் ஒரு புதிய திறப்பை போகிற போக்கில் 'எல்லை காக்குற அக்பரம்மாக்கே வெளிச்சம்'என்ற சொல் இன்னும் நகரவிடவில்லை.அதில் தங்கி ஒரு பேராய்வு நிகழ்த்தப்பட வேண்டிய தேவையை உணரமுடிகிறது.கதைகள் வரலாற்றின் மீதான பக்கங்களைக் காட்டித் தருவதுபோல மர்ம முடிச்சிகளின் மீது ஒரு வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி விலகிக் கொள்கின்றன.இந்த தொகுப்பில் இவ்வாறான விளையாட்டுகள் நிறைந்திருப்பதைக் கூர்மையாக கவனிக்க முடிகிறது.
        இன்று எழுதுகிறவர்கள் தாங்களைச் சுருக்கிக்கொள்ள முடியாது.மனித வாழ்வின் எல்லா பக்கங்களும் இன்றைய காலத்தில் பொதுப்பரப்பில் விவாதிக்கப்படுகிறது. அதன் பொருட்டு ஆமினாவும் தனது பங்கை வெறும் சிலாகிப்போடு நின்றுவிடாமல் விமர்சனப்பூர்வமாக அணுகுகிற பார்வையைக் கொண்டிருக்கிறார்.அவரால் தனக்குள் உருவாகும் கேள்விகளையும் அதன் நிமித்தமான சமநீதிக் குரலையும் உயர்த்த முடிகிறது.ரேகை போல் வாழ்க்கை' சிறுகதையில் "ஆண்தான் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கப் படைக்கப்பட்டவன் என்ற ஒரு ஆணின் ஆதிக்க மனோபாவம் வயோதிகப் பருவத்தில் தகர்ந்துபோகும்.குறிப்பிட்ட பருவத்திற்கு பின்னே ஆணுக்கு பெண்ணே அடைக்கலம் கொடுத்துதவும்படி இயற்கை ஆண் பெண் உறவை சமநிலைப்படுத்தியே வைத்திருக்கிறது."இவ்வாறான கதையோட்ட வரிகளில் விமர்சனப்பூர்வமான பாங்கு இருக்கிறது.அதன் வாசல் இயல்பாகத் திறக்கிற காலமாக, பெண்களிடத்தில் இருந்து படைப்புக் குரலாக பீறிடுகிறது என்பதை இங்கு கவனப்படுத்துகிறேன். இது இன்னும் பெருகும். 'டெய்லி செவத்தாவ பாக்க வர்ரவக கொடுக்குற எந்த காசையும் கையால வாங்குறதில்லேன்னு வைராக்கியத்தோட வாழ்ற மங்கா அந்த காச கைல தொட்டுப் பாக்காமயே எப்படி காலி பண்ணுறாளோ அப்படியான வித்தை இந்த எழுத்திலிருக்கிறது.அது தன்னை சுற்றிலுமுள்ள எளியவர்களின் வரலாற்றை சுவீகரித்து தனக்கான மொழியையும் நடையையும் உருவாக்கிக் கொண்டு மலருகிறது.வாசிக்க வாசிக்க இது அவரவர்களுக்கான காலத்தை திரும்ப காட்சிப்படுத்துகிறது.எனது கவர்னர் பெத்தா தொகுப்பிலுள்ள கதைகள் காட்டிய ஒரு உலகம் போல ஆகாத தீதார் மலைக்க வைக்கும் மற்றொரு உலகத்தின் வாசலை திறக்கிறது.எனது ரோசம்மா பீவி சிறுகதையின் ரோசம்மா பீவி போன்ற காத்திரமான பெண்கள் உலவுகின்றனர்..கவிதை கதை குறித்த முந்தைய பார்வைகள் மீது மெல்லிய கேள்விகளை எழுப்பியவாறே பல்கிப்பெருகும் பெண்படைப்பாளிகளை நாம் ஜனநாயகத்தின் சமன்பாடெனக் கொள்ள வேண்டும்.நாம் கலையைக் கைவிட்டால் பின்னர் இங்கு எடுத்துக் கொள்வதற்கென எதுவுமிருக்காது. ஆமினாவின் எழுத்து கச்சிதமானது. கதைகளில் அவரின் செய்முறை தேவைக்கு குறைவாகவுமில்லை தேவைக்கு அதிகமாகவுமில்லை என்பது இதன் பலமாக இருக்கிறது. ஆகாத தீதார் நூலாசிரியர் ஆமினா முஹம்மது பதிப்பாளராகவும் பல நூல்களையும் பதிப்பித்து வருகிறார்.எழுத்தில் மேலும் உயரம் தொடும் எல்லா சாத்தியங்களையும் கைவரப் பெற்றதாக நம்பிக்கை கொள்ள ஏராளமானவைகள் நிறைந்திருக்கின்றன.

Tuesday 23 January 2024

மஞ்சள் ஔி

மஞ்சள் ஒளிப்பரவலில் 
சிதறிக் கிடந்த சித்திரத்தை
யார் வரைந்து போட்டார்களென்று தெரியவில்லை
விடியும் வரை அப்படியே 
கிடந்தது

அதிகாலை பனியின்
குளிரில் நடுங்கியபடி
போர்த்திக் கொண்டிருந்த 
சித்திரம் 
மஞ்சள் ஒளிப்பரவலில் 
சிதறிக் கிடந்ததல்ல

ஒளி அலைபாய்ந்தோடும்
வீதிகளெங்கும்
முகமற்ற
சித்திரங்கள் 
ஓடி மறைகின்றன
சிலது வாகனத்தின் பின்னே
துரத்துகின்றன

காகமாக
கழுகாக
நாகமாக
நாயாக
பேயாக 
வாகனச் சக்கரத்தில்
வரிசையாக நசுக்கி 
மாற்றி மாற்றி
சித்திரங்களிலும் 
கடந்து போகிறேன்

அடி வானில்
அப்பிக் கிடந்த
ஆயிரத்து ஒன்றாவது
சித்திரத்தில் 
கொம்பு வைக்க 
குளத்து நீரில் கல்லெறிந்த போது
கொம்பு முளைத்துக் கொண்டது

ஆந்தையும் 
வவ்வாலும்
கூட்டாய் வரைந்த 
சித்திரத்தில்
சூரியன் 
இருளாய் இருக்கிறது



                -மொய்தீன் கவிதை-

Tuesday 16 January 2024

ஈரவாதை'நாவல் அறிமுகம்

நண்பர் ரபீக்ராஜாவின் முந்தைய எழுத்துக்களை நான் வாசித்ததில்லை.முதன்முதலாக இப்போது அவரின் ஈரவாதை என்னும் இந்த புதினத்தை வாசித்திருக்கிறேன். அக்கரை என்கிற சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டுள்ளது.நான் வாசித்துவிட்டு அக்கரையாக அவரிடம் சில விசயங்களைப் பேசிய  பேச்சில் குறிப்பிட்டுள்ளேன்.

நாம் இந்த வாழ்வில் அறிந்த பக்கங்களைக் காட்டிலும் அறியாதவைகளின் உலகம் ஆகப்பெரியது.ரபீக்ராஜா இந்த புதினம் வாயிலாக அறியாத உலகின் ஒரு திறப்பின் வழியே நம்மை குழந்தையைப்போலக் கரம் பிடித்து நடத்திக் கொண்டு போகிறார். அலங்காரமற்ற எளிய ஆவணமாக வரையப்பட்டிருக்கிறது.அலங்காரம் அத்தியாவசியமானதல்ல என்றாலும் ஒரு எழுத்து வாசகர்களுக்கான வெளியை வழங்காமல் அவைகளை அபகரித்துக் கொள்ளுதல் ஈர்ப்பை குறைக்குமென்றாலும்,புதினம் கொண்டிருக்கிற பாடுபொருளின் நிமித்தமாக ரபீக்ராஜா அதீத நம்பிக்கை கொண்டிருப்பதை நாம் குலைத்துவிட இயலாது.
        ஒரு தந்தையும் மகனும் கூட்டாகக் கலந்து  முதன்மையாக நகர்த்தும் இக்கதை உலகம் கடும் நோயின் பரப்பில் இயங்குகிறது.ஒரு மருத்துவமனையின் இருப்பினுள்ளே நோயாளிகளும் அவர்கள் மீது கடப்பாடுகள் கொண்டவர்களும் புழங்குகிறார்கள்.உயிர்களிடத்தில் நோய்கள் எண்ணிலடங்காத வகைமைகளில் இருக்கிறது.அது எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் உயிர்கள் அதனை எதிர்த்து உயிர்வாழ்தலின் பொருட்டு போராடுகின்றன.அது இரண்டுமாத குழந்தையாக  வயோதிகராக. அல்லது அப்போதுதான் திருமணமான இளம் தம்பதியரில் ஒருவராக இருக்கலாம், அந்த நோயாளிகளோடு ஒரு அம்மாவோ,மகனோ,கணவனோ,மனைவியோ சேர்ந்து போராடுகிறார்கள். இந்த போராட்டங்கள் பல காரணகாரியங்களைக் கொண்டிருக்கின்றன.இந்த உணர்வுகளின் பொதுவான பக்கம் போல 'ஈரவாதை' தோன்றினாலும் இது தனித்துவமான அகஉலகமாக இருக்கிறது.புற்றுநோய் பற்றி வெகுஜன சினிமா ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் நீண்டகால பிம்பங்களின் மீது ஒரு மாற்றை இக்கதை உலகம் செய்கிறது. சபிக்கப்பட்டதைப் போல தோற்றம் தரும் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.இங்கு மனிதர்களில் மோசமானவர்கள் என்று யாரும் வரவில்லை.நீதி நேர்மை தர்மம் அன்பு காரூண்யம் என தேவாம்சம் கொண்டவர்களாக பரஸ்பரம் மானுட அன்பின் பரப்பில் நடமாடும் மனிதர்கள். சிறுதுளி மூத்திரம் மகனின் மீது பட்டுவிட்டதற்காக கலங்கும் அப்பா நோயின் கடுமையால் மனம் வெதும்பி தற்கொலையில் தோல்வியடையும் போது அழுகிறார்.அம்மா பற்றிய நினைவுகள் எங்கோ தூரத்தில் திருப்பறங்குன்றம் மலைமீது கிடக்க,சிறுவனாக அம்மாவை இழந்த மகனுக்காக அப்பாவும் அம்மாவுமாக வாழ்துவரும் அப்பாவை அவன் இத்தனை கருணையோடும் வாஞ்சையோடும் பார்த்தும் கேட்டும் நடப்பதில் கதை கதையாகப் போய்கொண்டே இருக்கிறது.
           உணர்வுகளின் போராட்டத்தோடு  மனம் அலைபாயும் பேருலகின் பல அம்சங்களை எழுதுவதற்கான வாய்ப்புள்ள புதினமாக இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் மருத்துவம் அது நோயாளிகளிடத்தில் நிகழ்த்தும் வன்முறை அல்லது கருணை இவைகளின் விரிவான உலகைப்பற்றிய அறிய வாய்ப்புள்ளதையும் பயன்படுத்தாமல் புதினம் தன்னைச் சுருக்கியிருக்கிறது. சைக்கிளில் இருந்து இறங்காமலே வட்டமடிக்கும் ஒரு சாகசகாரனின் செயல்போலவும் இதனைக் கருதலாம். நேர்கோட்டு முறையில் எழுதப்பட்டுள்ள இப்புதினத்துக்கான தனித்த பயண இலக்கு எது என்பது இல்லை என்றாலும் இது நமக்கு காட்சிகளைக் காட்டுகிறது.காட்சிகளை சாதரணமாக ஒதுக்கியும் விடஇயலாதவாறு துயரம் நம்மை அடைகிறது.'அப்பாவின் கைகள் மட்டுமல்ல கால்களிலும் நரம்புகள் புடைத்துக் கொண்டு நிற்கும்.ஊசியை எடுத்து கையில் வைக்கும்போது அப்பா வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.அப்பாவின் செய்கை எனக்குப் புதிதாக இருந்தது. சமையலின் போது எந்த துணியின் பிடிமானம் இல்லாமலே சட்டியை அடுப்பிலிருந்து இறக்குவார். காய்கறிகள் நறுக்கும் போதுகூட ஏற்படும் வெட்டுக்காயம் அவரை முகம் சுளிக்க வைக்காது.இயல்பு வாழ்விலுள்ள வலிக்கும் வலிந்து திணிக்கப்படும் வலிக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.' ரபிக்ராஜா குறிப்பிடும் இந்த இரட்டைவலிகளின் உலகமாகவும் இந்த புதினத்தை இன்னொரு அர்த்தத்தில் கருத முடிகிறது.இயல்பு வலியும் திணிக்கப்படும்வலியுமாக மனிதர்கள் குறுக்குவெட்டாக நோயர்களின் உலகில் பயணம் நிகழ்த்துகின்றனர். நடேசன் மனைவியை இளமையிலேயே இழந்து விடுவது இயல்பான வலி என்றால் அவர் இன்னொரு துணையை அமைத்துக் கொள்ளாதது அவர் வலிந்து ஏற்படுத்திக் கொள்ளும் வலியாகத்தான் இருக்கிறது.
இந்த இரட்டை நிலைபாட்டை இந்த ஈரவாதை புதினத்தின் அனேக கதைமாந்தர்களிடம் அவதானிக்க முடிகிறது.நலவாழ்வும் நோய் வாழ்வுக்குமிடையே மீளத்துடிக்கும் மனிதர்களின் உலகமாக இந்த புதினம் அதன் பரப்புக்கு வெளியே இருக்கும் பேருலகின் அவதானங்களை விட்டு விடுவதையும் பார்க்க முடிகிறது.

              ஈரவாதை,காத்திரமான வாசிப்பிற்கான பகுதிகளை கொஞ்சம் பின்னே வைத்திருக்கிறது.புதினத்தின் மைய்யச் சரடில் ஊடுபாவி விலகும் சில கதைமனிதர்கள் மறக்கவியலாதவர்களா இருக்கிறார்கள்.மின்னலில் கனப்பொழுதில் மின்னி மறையும் அதிசயம்போல ஆக அபூர்வமான மனிதர்களாக இருக்கின்றனர். செய்முறையில் இந்த புதினம் கலைக்கப்பட்டிருக்கலாம் என்ற தோன்றுதல் எனக்கு திரும்பத் திரும்ப வந்த வண்ணமே இருப்பது இதன் நிமித்தமாக கூட இருக்கலாம்.
யாதார்த்தம் உண்மையைப் பேசுவதாக இருந்தாலும் உண்மையைக் கலையாக மாற்றுவதில்தான் ஒரு படைப்பாளி தனக்கான தனித்துவங்களை உருவாக்க இயலும்.உண்மைக்கும் கலைக்கும் இடையே ஒரு சந்திப்புத்தளம் இருக்கிறது.அந்த சந்திப்புத்தளத்தை படைப்பாளி மெருகேற்றக் கடமைப்பட்டவன்.அவன் இதன் தனித்துவம் குறித்து கவனம் கொள்ளவில்லை என்றால் உண்மை வெறும் உண்மையாகத்தான் இருக்கும்.புதினக்கட்டமைப்பில் கலைத்துப் போட்டு புதிய புதிய பரிமாணங்களை செய்வதற்கான சாத்தியங்களைப் பயன்படுத்தாமலும் விட்டு விடக்கூடாது.நோய் கொடியதாக இருந்தாலும் நோயாளி உட்பட யாரும் இரண்டு வாரத்திற்குப் பின் துக்கப்பட விரும்புவதில்லை.ஒன்று நோயை மறந்து விடுகிறார்கள் இல்லையேல் ஏற்றுக் கொள்கிறார்கள்.இரண்டுமே நல்லதுதான் எனக் குறிப்பிடும் புதிதனத்தின் சொல் வெறும் சொல் மட்டுமல்ல ஏகதேசம் வாழ்வின் நிலையும் கூட.ஆனால் வாழ்வில் ஒருபோதும் மறக்கவியலாத நினைவுகளைக் கொண்டு நடேசனை முன் வைத்துதான் இப்படியான சொற்களை செய்யும் முரண்களையும் நாம் புதினத்தின் வழியே அவதானிக்கலாம்.ரபீக்ராஜா ஒரு புதிய பகுதியை எடுத்துக் கொண்டு அதனையே முழுமையாகப் பேசும் புதினத்தை நம்பகமாக படைத்திருப்பதை பாராட்டவும் தவறிவிடக்கூடாது.சமரசமின்றி அவர் எழுத்தை எழுதியிருக்கிறார்.வெகுஜன வாசிப்பில் இதன்மீதான நல்ல உரையாடல்கள் புதினத்தின் உள்ளேயும் வெளியேயுமாக நிகழ்ந்தேற வேண்டும்.

      கடற்கரையைப் போலவோ பூங்காவைப் போலவோ நாம் ஒரு மருத்துவமனையின் உள்அவயங்களை நாம் நெருங்கிப் பார்க்க விரும்புவதில்லை.தள்ளி நின்று பார்க்கிறோம்.நமது இந்த அபிப்ராயத்தை உடைத்து ஈரவாதை நம்மை நெருக்கமாக்கியிருக்க வேண்டும்.மௌனங்களின் அழகை   வார்த்தைகளால் விரையம் செய்துவிடாமலிருப்பதும் கலைதான்.இந்த புதினத்தை வெளிக் கொண்டுவரும் ஆமினா முகம்மதுக்கும் நாவலாசிரியர் ரபீக்ராஜாவுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பான வாழ்த்தும் அன்பும்.இன்னும் எழுத்துக்கள் புறப்பட்டு வரட்டும்.

அன்புடன்
எம்.மீரான் மைதீன்
நாகர்கோவில்
01-01-24

Friday 5 January 2024

"வீரியமிக்க விளிம்பின் குரல்" மீரான் மைதீன்


       கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக இலக்கிய உலகில் கோலேச்சும் எழுத்தாளுமை மதிப்புக்குரிய தோழர் ம.காமுத்துரை அவர்கள். இவரது எழுத்துகளின் முதன்மைத் தன்மையாக நாம் அறிவது, உணர்வது, புனைவிலக்கியத்தில் விளிம்பு நிலைக் குரலாக எப்போதும் ஒலிக்கும் இவரின் படைப்புகள்தான். அடித்தட்டு மக்களின் வாழ்வை - வலியைக் கலைப்படுத்தும் காமுத்துரை அந்த மக்களின் சொற்களிலேயே அதனை வரைவதில் தமிழ்ச் சூழலில் வல்லமையுடையவர்களில் மிகச்சிறந்த ஒருவராக இருக்கிறார்.

              சாதாரணமாகப் பொருட்களை அளவீடு செய்வதற்கான உபகரணங்கள் பலவகைப்பட்ட மாதிரிகளில் நம்மிடமிருக்கின்றதைப் போல துல்லியமான அளவீட்டுக் கருவிகள் இலக்கியத்தின்பால் நம்மிடமில்லை. நாம்தான், நாம் ஒவ்வொருவரும்தான் கலையின், இலக்கியத்தின் அளவீடாக இருக்கிறோம். எனவே, காமுத்துரையின் அளவீடு என்பது இந்த உன்னத வாழ்வின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வுபரப்பில் மேவும் சுவீகாரமாக இருக்கிறது.அதனை அதனளவில் அப்படியே உள்வாங்கும் இந்த தெளிவான சுவீகாரமே தேர்ந்த கதைகளாக  அந்நியப்பட்டவர்களுக்கும்  அதனைக் கொண்டு சேர்ப்பதில் வெல்கிறது. இந்த வெற்றி அங்குமிங்குமாக ஏற்றத்தாழ்வுளாகக் கிடக்கும் சமூகச் சமன்பாட்டுக்கு அத்தியாவசியமானது. கலையின் ஜனநாயக முகம். இதனடிப்படையில் சிறுகதை, நாவல் என தனது தனித்துவமான படைப்புலகை கால இடைவெளியின்றி சீரான பயணமாக நிகழ்த்தும் அவரிடமிருந்து எழுத்துக்கள் பொங்கிப் பெருகி வந்த வண்ணமே இருக்கின்றன.தமிழ் இலக்கியத் தடத்தில் பலரிடத்திலும் அவ்வப்போது சில தேக்கநிலைகளைக் கண்டிருக்கிறோம் ஆனால் சிறிதும் தளர்வின்றி அரை நூற்றாண்டை நோக்கிப் பாய்கிறது காமுத்துரையின் எழுத்து.சத்தமின்றி ஒரு சகாப்தமாக மலர்ந்திருக்கிற இதனை கொண்டாட்டத்திற்கான ஒன்றாக கவனப்படுத்துகிறேன்.


              குதிப்பி, கோட்டைவீடு, மில், கொடி வழி போன்ற முக்கிய புதினங்களை நான் முன்னமே வாசித்திருக்கிறேன்.காமுத்துரையின் இருப்பில் இன்னும் ஒன்றை நான் சிறப்பாகக் கருதுவது அவர் இலக்கிய உலகின் எல்லா முனைகளிலும் பாகுபாடின்றி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்சூழலில் இது அபூர்வமானதும் கூட. அவர் எழுத்தின் வழி இதனை சாத்தியப்படுத்தியிருப்பதாக உறுதிப்படுத்தலாம். காமுத்துரையின் எழுத்து என்பதே இந்த உறுதிப்பாட்டின் சாட்சியமாகச் சொல்கிறேன். காட்சியை அப்படியே எண்ணம் பிசகாமல் வாசக மனப்பரப்பில் பதித்துச் செல்லும் எழுத்தின் வலு, தன்னிடமிருந்தும் தன் நிலத்திலிருந்தும் சுவீகாரம் செய்கிற வாழ்வை வரைவதாலோ என்னமோ இவரின் எழுத்தில் குருதியோட்டம் துடிப்படங்காமல் எப்போதும் சுடச்சுட இருப்பதை அவதானிக்க இயலும். வாசிக்கும் மனங்களுக்கு உணர்ச்சிகளைக் கடத்துவதில் அனுபவமிக்க தனது எழுத்தால் ஆணுக்குள் பெண்ணையும் பெண்ணுக்குள் ஆணையும் மடைமாற்றி வாசகனைத் தனித்தவனாக இல்லாமல் நியாய அநியாயங்களின் மீது எதிர்வினை புரிய அந்த கூட்டத்தில் ஒருவனாக்கிவிடும் வசீகரம் இவரின் எழுத்திலுண்டு.
               கலவையை இப்போது வாசித்த இந்த அனுபவம் எனக்குள் காட்சியாகத்தான் இப்போதும் கிடக்கிறது. காட்சி என்றால் முற்றிலும் புதிய காட்சி,அபூர்வமான காட்சி. விளிம்புநிலையில் அழகிய அவதானம். இந்த அவதானம் உயிர்ப்புமிக்கது. எனவேதான் வேறு பிரதேசம் வேறு பண்பாட்டிலுள்ள ஒருவனையும் அது காட்சிக்குள் இழுத்துச் சென்று பாத்திரத்தில் ஒருவனாக்குகிறது.

           ம.காமுத்துரை எழுதியிருக்கிற இந்த கலவை என்கிற நாவல் விளிம்பு நிலை வாழ்வியலை மையமாகக் கொண்டுள்ளது. புதினம் திறக்கின்ற வாழ்வும், அந்த வாழ்வில் வலம் வருகின்ற மனித மனுசிகளும், அவர்களின் வழக்குமொழியும், ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
கட்டுமானப் பணியிலுள்ள அடித்தட்டு உழைப்பாளிகளும் அவர்தம் நிலையிலுள்ள முதலாளிகளும் ஊடறுக்கும் கதைக் களத்தின் மையப் பாத்திரமாக பூங்கொடி இயங்குகிறாள்.
மனிதர்கள் எல்லா நிலைகளிலும் ஒருவரை ஒருவர் மிகைக்க விரும்புகின்றனர் உள்ளார்ந்த இந்த மிகைவிருப்பமே வாழ்வின் போக்கில் நாம் எண்ணவியலாத உணர்வுநிலை மாற்றங்களை நிகழ்த்துகிறது. பரஸ்பரம் பாலியல் தேவைகள்வரை பூர்த்தி செய்து கொள்ளும் ஒத்த அன்பு கொண்ட பூங்கொடியும் குரங்காட்டி குமாரும்‌ தமது உலகில் நிகழும் வாழ்வும் வலியும் முரணுமான ஒரு நேர்கோட்டு கதைக்களத்தில், அய்யம்மாள் மைதானத்தின் மத்தியக் கோடுபோல நின்று தனது இருப்பை நிலைநிறுத்தும் போது பூங்கொடியும், குரங்காட்டி குமாரும் அங்குமிங்குமாக நின்றாடும் தருணம் அமைகிறது.

எதார்த்த வாழ்வென்பது நம் புனிதங்களை உடைத்துப் போடுகிறதாய் இருக்கிறது. கட்டுமான தொழிலாளியான பெண்னொருத்தி வேலையிடத்தில் மூத்திரம் பொய்கிறாள். அது சின்ன அறை என்பதால் பாத்ரூம் என்று கருதி மூத்திரம் பெய்ததாக அவள் அய்யம்மாவிடம் கூறும் போது 'மூதேவி அதுதான் பூஜையறை'யென அய்யம்மாள் சொல்லும் பதில் காற்றில் கடந்து போகிறது.புனிதங்களின் முந்தைய இருப்புகள்மீது என்னவெல்லாமோ நிகழ்ந்திருப்பதை கதை உலகம் போகிற போக்கில் வீசுகிறது.நம்மிடமிருக்கிற தூய்மைவாதம்,பெருமைகள்,தனித்தஅடையாளமென கட்டி புணரமைக்கப்பட்டுள்ள எல்லாவற்றின் ஆதியும் இவ்வாறான கதைகளைக் கொண்டதுதான் என்கிற சிந்தனைக்கு நம்மை கடத்துமிடமாக புரிந்து கொள்ளலாம்.இன்றைய எல்லா புனிதங்கள்மீதும் உழைப்பவனின் இரத்தமும் சதையும் வியர்வையும் மட்டுமல்லாது அவர்களின் கழிவுகளும் கலந்திருக்கின்றன என்பதான இந்த சித்திரம் இலக்கியத்தின் புதிய பதிவாக விரிந்திருக்கிறது.எளிய மனிதர்களுக்கு வாழ்வின் நிமித்தமான காரியங்களின் மீது எந்த வரையரையுமில்லை.அவர்கள் அவர்களின் இயல்பிலேயே வாழ்கிறார்கள். நாம்தான் அந்த நிகழ்வுகளின் மீது அதிர்ச்சி கொள்கிறோம்.நல்லது என்றும் கெட்டது என்றும் தனித்த வார்த்தைகள் இல்லாத மனிதர்கள் தங்களது சேகரங்களில் உள்ள வார்த்தைகளை முன் தீர்மானங்களின்றி வீசிக்கொள்கின்றனர்.மொழி தெறிப்புகளாகி பரவுகின்றன. பெண்ணாக இருக்கும் அய்யம்மாளிடம் ஆணாதிக்க சிந்தனை கதையின் போக்கிலேயே மலருகிறது.அது ஏற்கனவே சமூகம் கட்டிவைத்திருக்கும் படிநிலைகளினால் ஏற்படும் கௌரவத்தின் கூறுகளிலிருந்து தோன்றி வளரும் பண்பாடுகளில் உள்ளவையாக இருக்கிறது.அவைகளால் துரத்தப்படும் அய்யம்மாள் மெல்ல மெல்ல தானே துரத்துபவளாகவும் மாறுகிறாள்.
பூங்கொடியும் குரங்காட்டிக் குமாரும்  செடிகொடி மறைவில் அதீத அன்பின் நம்பிக்கையின் நிமித்தமாக  சங்கோஜமின்றி புணரமுடிகிறது, நம்பிக்கையும் அன்பும் தகரும்போது  அவ்வாறு புணர்ந்தவனை தெரியாது என்று சொல்லுவதில் தனது கௌரவத்தை மீட்டெடுக்க பூங்கொடிக்கு இயலுகிறது. குமாரின் கருவைச் சுமக்கும் அவள் வாழ்கிறாள் மற்றொரு பக்கம் அவனும் வாழ்கிறான் காலமும் வாழ்கிறது. திட்டங்கள் தந்திரங்களின்றி ஒருவரை ஒருவர் ஆளுகிறார்கள்,வெல்கிறார்கள்,வெள்ளந்தித்தனமாக ஒன்றை ஒன்று ஒழித்துக்கட்டவும் முயலுகிறது.இந்த வினோதமான முரண்களோடு இயங்கும் எளிய மனிதர்களின் உலகில்தான் எண்ணிலடங்காத மாயஜாலம் நிகழ்கிறது. காமுத்துரை இந்த மனிதர்களை அவதானித்து நம்மிடம் கொண்டு சேர்பதற்காக அதில் மேலோட்டமாக இல்லாமல் இரண்டற கலந்திருக்கிறார் என்பதை இந்த புதினம் நமக்கு காட்சிப்படுத்துகிறது.

ஒரு வீடு கட்டுபவனுக்கு அது வாழ்வதற்கான கனவுகள் நிறைந்த வாழ்விடம் என்றால் அதைக் கட்டி எழுப்பும் உழைப்பாளிகளின் உலகம் அந்த வீட்டின் மீது புனிதங்களாலும் அபுனிதங்களாலும் நிறைகிறது. உழைப்புக்கு கூலியும் அங்கு உழைப்பின் நிமித்தமான ஒரு பெரும் வாழ்வும் அவர்களுக்கு வசமாகிறது. பிறகு அவர்களுக்கும் அந்த கட்டிடத்துக்கும் தொடர்பற்றுப் போய்விடுகிறது.இந்த தொடர்பற்றுப் போகுதல் என்பது இந்தக் கதை மனிதர்களுக்குள்ளும் நிகழும் போது நாம் வருந்துகிறோம்.மெல்லிய உணர்வுகளை,உழைப்பை வலியை காதலை ஆக்ரோசத்தை,ஒரு ஆணைக் தக்கவைப்பதில் பெண் என்னும் அடையாளத்தின் வழி நிகழும் சச்சரவுகளை சித்திரமாக்கும் காமுத்துரையின் இந்த நாவல் புனிதங்களும் அபுனிதங்களும் ஊடறுக்கும் உலகம். நாம் அன்றாடம் கடந்துபோனாலும் நாம் கவனிக்காத கதைமாந்தர்கள் வாழும் உலகத்தினுள் நம் இருப்பை வசமாக்கும் நாவல் கலவை, நமது தரிசனங்களில் பார்வைப் புலனுக்கு அகப்படாத வீரியமிக்க விளிம்பின் குரல் .

   நான் எப்போதும் கொஞ்சம் அதிசயமாகப் பார்க்கும் எளிய மனிதர். தனது நெடிய அனுபவங்களின் வழி வாழ்வையும் எழுத்தையும் ஒன்றாகக் கொண்டிருக்கும் தோழர் காமுத்துரையின் எழுத்து இன்னும் நீண்டதூரப் பயணத்துக்காக காத்திருக்கிறது. சலிக்காத மானுடப்பற்றாளர் இதையெல்லாம் சாத்தியப்படுத்துவார் என்றே நம்புகிறேன்.


           அன்புடன்
     எம்.மீரான் மைதீன்
        நாகர்கோவில்
        30/11/2023

Tuesday 2 January 2024

"மனிதன் ரகசியங்களில் உடைபடுகிறவன்" மீரான் மைதீன்.

கதைகளுக்கு தனித்துவமான முகமிருக்கிறது.அபூர்வ பச்சிலையின் சாறு பூசிக்கொண்ட ஒரு மூதாதையின் முகம் போல வைரவன் லெ.ரா.வின் கதைகள் இருக்கின்றன.

              நண்பர் ஷாகுல் ஹமீதின் முயற்சியில் இரண்டு நூற்கள் கிடைக்கப்பெற்று நாட்களாகிவிட்டாலும் பட்டர்-பி பிறகதைகள் என்கிற சிறுகதை நூலும் ராம மந்திரம் என்கிற மற்றொரு சிறுகதை தொகுப்பு நூலும்  எப்போதும் பார்வையில் படும்படியாகவே இருந்தது.அவ்வப்போது வாசிப்பதும் அசைபோடுவதுமாக இருந்த சூழலில் இன்று 'நான்,நாய்,பூனை' என்கிற சிறுகதையை வாசித்து முடித்த தருணம் கொஞ்சம் மிரட்சியாகவே இருந்த உண்மையை மறுக்க இயலாது.நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியைச் சார்ந்தவர் வைரவன். வாசிக்க வாசிக்க நம்மை மௌனப்படுத்துகிறது.
நிலம், பெரும்வாழ்வு, ஆதிஅந்தம், மாயமென பழையாற்றின் வெள்ளப்பெருக்குப் போல நாள்பட்ட எல்லாவற்றையும் அடித்துப் பொறுக்கி மறிகடந்து ஓடும் ஓட்டத்தில் நம்மையும் இழுத்துப் போடுகிறது.ரொம்பவும் ஆழமானதுதான்.ஆழமென்றால் பள்ளிகொண்டவனின் தொப்புளில் நான்முகன் தோன்றிய தாமரைத்தண்டின் வேரினைக் காண விழைவதுபோல.கதைகளின் முடிப்பில் வாசகனை அந்த ஆழத்தில் தள்ளிவிட்டு அனாயசமாகக் கடந்துபோகும் ஒரு மாய சுழற்சி வசப்பட்ட எழுத்து.

         குமரி மாவட்டம் ஒரு பன்முகப் பண்பாட்டு பிரதேசமாகும்.ஒரே மாவட்டத்திலேயே பல விநோத எல்கைகளும் மொழிவழக்கும் உணவு உடை என எண்ணிலடங்காத முறைகளும் பல்கிப் பெருகிக் கிடப்பதை நுட்பமாக அவதானிக்க இயலும்.ஒரே சாதி ஒரே மதத்தினருக்குமிடையே கூட இந்த மாற்றங்கள் வேறு வேறு அலங்காரங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம்.வைரவனின் எழுத்து வகையை முந்தைய தடத்திலிருந்து பார்பதானால் என் புரிதலில் இது நாஞ்சில் நாடனின் பிரதேசவெளியும் பின்னர் அதில் மற்றொரு தடமாக வந்த தெரிசை சிவாவின் பிரதேச வெளியும் கடந்து முன்றாவதாக வைரவன் மற்றுமொரு அழகிய தடத்தை உருவாக்கியிருப்பதாகக் கொள்ளலாம்.பணி நிமித்தமான பெங்களுர் வாசமும் அடிப்படை இருப்பான  நாகர்கோவிலின் மணமும் முயங்குகிறது.'ராம மந்திரம்' தொகுப்பில் ராம மந்திரம் சிறுகதையும் அடுத்து வரும் பொந்து சிறுகதையும் அவ்வளவு நேர்த்தி.ஏகாந்த நிலையில் நட்பு கொள்ளும் மனிதர்களில் இருவர் வாழ்கிறார்கள்.அவர்களுக்குள் நிறைய பொருத்தப்பாடு.ஒருவரிடம் உள்ளதுபோலவே பிரிதொருவரிடமும் தாடகையும் தாடகமலை பற்றிய கதையும் கூட இருக்கிறது.ஒரு வாழ்வை  மந்திரத்தில் முழுங்கி ஆனந்தமாய் நிறைக்கிறார்கள்.இதற்கு சற்றும் குறைவில்லாமல் மேரி தனது பொந்தில்(பெண் குறியில்)எல்லாவனையும் எல்லாவற்றையும் முழுங்குகிறாள். அடுத்தடுத்து வரும் இந்த கதைகளின் உலகில் ஒரு பாலம் கிடக்கிறது. பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது எல்லா எழவுகளையும் அடித்துப்பிடித்துக் கொண்டு போனாலும் பாலம் ஒரு போதும் அசராது.அது அத்தனை உறுதியானது. வைரவன் கதைகளுக்கிடையே கட்டும் பாலமும் அப்படியாகத்தான் தோன்றுகிறது.

      ஓராண்டு இடைவெளியில் வந்துள்ள இரண்டு நூல்களிலுமாகச் சேர்த்து மொத்தம் இருபத்தியிரண்டு கதைகள் வாசிக்க கிடைக்கிறது.ஒரு சிற்பியைப் போல செதுக்கப்பட்டிருக்கிற இந்த கதைகளின் மொழி தனித்துவமானது. ஒன்றை சொல்ல இன்னொன்றை துவங்குகிறது.ஒரு சொல் நீண்ட தூரங்களுக்கு இட்டுச் செல்கிறது. இந்தியாவின் நீண்ட கழிப்பறை என்கிற சொல்லின் நீளமும் அப்படித்தான். நிலத்தை இணைத்துக் கொண்டு எழுதுகிற எழுத்துகள் எப்போதும் வீரியமானவைதான்.நல்லது கெட்டது மணம் நாத்தம் என எல்லாவற்றையும் தன்மீது வாரிப் போட்டுக்கொள்கிற எழுத்து வசப்படுவது லேசான காரியமல்ல.வைரவன் அதை சுவீகரித்திருக்கிறார்.எல்லா கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பது உசிதமானதல்ல என்பதனால் ராம மந்திரம் மற்றும் பட்டர்-பி என இரண்டு சிறுகதை நூல்கள் வாசிக்கவும் அதில் பயணிக்கவும் எக்கச்சக்கமான விசயங்களை வைத்திருக்கிற ஒரு குறிப்பை மட்டும் சொல்லியிருக்கிறேன்.
இதல்லாத ஒரு குறிப்பாக சொல்வதென்றால்,உண்மையில் மனிதன் தன்னை ரகசியமாக வைத்திருக்கவே விரும்புகிறான் ஆனால் அவன் அவனறியாது உள்ளார்ந்த விருப்பங்களிலிருந்து விடுபடத் தெரியாதவனாக தனது ரகசியங்களில் உடைபடுபவனாக இருக்கிறான்.'ராம மந்திரத்தின்' பாத்திரங்களான சிவதானு மற்றும் ராமைய்யாவும் ஒரு பக்கமாகவும் 'பொந்தில்' வரும் பாத்திரங்களான மேரியும் ராமசாமியும் மற்றொரு பக்கமாவும் நின்றாடும் தளத்தில், பாத்திரங்களின் பெயர்களாக வலம் வருவது பெயர்கள் மட்டுமல்ல அது ஒரு குறியீடு எனக்கொண்டால் மனிதன் மட்டுமல்ல எழுதுகிறவனும் ரகசியத்தில் உடைபடுகிறவன் என்பது போத்தியமாகிறது.இவ்வாறு உடைபடுதல் இருபத்தியிரண்டு கதைகளிலும் நிகழ்கிறது. 'நான்,நாய்,பூனை'கதையிலும் கூட அவன் அப்படித்தான் உடைகிறான்.இந்த எல்லாக்  கதைவெளியிலும் நிகழுகின்ற உடைதல்  மேலோட்டமான வாசிப்பில் புலப்படுமா என்று தெரியவில்லை. இங்கு அரசியல் இல்லாமல் என்னதான் இருக்கிறது.நல்ல அனுபவத்தை ஏற்படுத்துகின்ற கதைகளின் எழுத்துக்காக வைரவன் லெ.ரா.வுக்கு அன்பும் வாழ்த்தும்.

மீரான் மைதீன்
நாகர்கோவில்
03/01/24


பட்டர்-பி
ராம மந்திரம்

நூல்கள் வாசிக்க
யாவரும் பப்ளிஷர்ஸ்

Monday 1 January 2024

அஜ்னபி'யின் பார்வையிலே- பிலால் அலியார்



அஜ்னபி, 355 பக்கங்கள் -
மீரான் மைதீன், காலச்சுவடு பதிப்பகம்

வளைகுடா வாழ்வு குறித்தும், அதன் வழியாக சம்பாதிக்கும் மனிதர்களை குறித்துமான இஸ்லாமியர், இஸ்லாமியரல்லாத சமூகங்களின் பொதுப்பார்வையையும், சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலி பிம்பத்தையும் உடைத்துச் சுக்குநூறாக்குகிறது, சவூதி அரேபிய நிலப்பரப்பில் சிக்கிக் கொண்ட திருமணமாகாத ஒரு இஸ்லாமிய இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து அதன் பின்னனியில்  எழுதப்பட்ட அஜ்னபி என்ற இந்த நாவல்…

அஜ்னபி என்ற அரபி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் அந்நியன். வளைகுடாவிற்கு பொருளாதார தேடலுக்காக செல்லும் எந்த நாட்டினரும் அஜ்னபி தான்.. கேட்பதற்கு நன்றாக தெரியும் இந்த வார்த்தைக்கு பின்னால் மறைந்து கிடக்கும், மற்றவர்களால் உணர முடியாத அவலங்களும்,அவமானங்களும், சுயமரியாதையை இழந்து குடும்பத்திற்காக படும் துயரங்களையும் தன் எழுத்தில் வடித்திருக்கிறார் மீரான் மைதீன்.

கதை நிகழும் காலம் 1990களுக்கும் 2000த்திற்கும் இடைப்பட்ட காலமாக இருப்பதை தெளிவாக உணர முடிகிறது.ஏனெனில் குடும்பத்தினரின் தொடர்புக்காக கடிதங்களை எதிர்பார்ப்பதையும், தொலைபேசியில் பேசுவதற்கு ஊரில் உள்ள வசதியானவர்களின் வீட்டுக்கு சொல்லி குடும்பத்தினரை வரவழைத்து பேசுவதும், திருமணம் நிச்சயிக்கப்பட பெண்ணின் புகைப்படத்தை பார்த்து கொண்டே காலத்தை தள்ளுவதும், சவூதி சென்றுவிட்டாலே சம்பாதித்து விடலாம் என்ற தவறான கற்பிதமும் அந்த காலகட்டத்தை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.இந்த சூழல்கள் தற்போது ஓரளவிற்கு களையப்பட்டிருப்பது ஒரு ஆசுவாசத்தை தருகிறது.

பட்டப்படிப்பை முடித்து விட்டு 2000 முதல் 2007 வரை சென்னையில் பணியில் இருந்து கொண்டே வளைகுடா வாய்ப்புக்காக Employment NRI Times என்று மும்பையிலிருந்து வெளியாகும் நாளிதழை வைத்து கொண்டு விண்ணப்ப படிவங்களை அனுப்பி கொண்டிருந்தேன்.. அப்போது வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கீழ்ப்பாக்கத்தில் நடத்த ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். ஆப்ரிக்க நாட்டை சார்ந்த ஒருவர் நேர்முகத் தேர்வு நடத்திவிட்டு என்னை அலுவலக கணிணி உதவியாளராக நியமிப்பதாகவும், ஏனைய விபரங்களை ஏஜென்சியிடம் கேட்டு கொள்ளவும் என்றார். ஏஜென்சியினர் 30,000 பணமும் என்னுடைய ஒரிஜினல் பட்ட படிப்பு சான்றிதழ்களையும் (அட்டஸ்டேசன் செய்ய வேண்டுமென) கேட்டனர். சான்றிதழ் அட்டஸ்டேசன் என்றவுடன் முழுமையாக நம்பி விட்டோம். நானும் அண்ணன் கொடுத்த பணத்தை கட்டிவிட்டு அனைத்து சான்றிதழ்களையும், பாஸ்போர்ர்டையும் ஒப்படைத்து விட்டு வெளிநாட்டு கனவில் மிதந்து கொண்டிருந்தேன், ஆனாலும் சென்னையில் அதே வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்.. விசா வந்துவிட்டதா என ஒருவாரம் கழித்து ஏஜெண்ட அலுவலகம் இருந்த திருவில்லிக்கேணி சென்ற போது, அந்த அலுவலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர், ஒரே களேபரம்.. ஏஜென்ட் ஓடிவிட்டதாகவும் அலுவலகத்தில் யாருமில்லை என்ற தகவல் வந்தது.. அப்போது அங்கிருந்த ஒரு அண்ணனிடம் என்னண்ணே பண்றது என்ற போது அவர் என்னை பார்த்து அழுது விட்டார், கடைசியா பொண்டாட்டியோட தாலிய வித்துட்டு வந்து பணத்த கட்டுனேன், என்ன பண்றதுண்ணே தெரியல என்ற போது அதிர்ச்சியானேன்.. 30,000 பண இழப்பு என்பதை என்னால் பெரிய இழப்பாக கருதவில்லை, ஆனால் பாஸ்போர்ட்டும், சான்றிதழ்களும் மொத்தமாக போனதில் ஒரு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது.. அங்கிருந்த சிலர் எழும்பூர் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று புகாரளிக்க செல்வோம் என கிளம்பினர், நாங்கள் அங்கே செல்லும் முன்னே ஊடகங்களும், செய்தியாளர்களும் குழுமி விட்டனர்.. அவர்களுடன் பணத்தை இழந்தவர்கள் பேட்டி கொடுத்தனர்.. ராஜ்டிவியில் ஒளிபரப்பான செய்தியில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்த என்னை பார்த்த அண்ணன், உடனடியாக இடத்தை விட்டு நகர சொல்லி ஊருக்கு வரச் சொன்னார்.. புகார் மனுவை அளித்து விட்டு ஊருக்கு வந்தேன், அடுத்த பத்து நாளில் கொரியர் மூலமாக அனைத்து சான்றிதழ்களும் பாஸ்போர்ட்டும் வீட்டுக்கு வந்தது.. பணத்தை மட்டும் அடித்து விட்டு சான்றிதழ்களை அனுப்பியதால் பத்து நாட்களில் என் மனதை வென்றான் அந்த ஓடிப்போன ஏஜெண்ட். அன்று ஒரு முடிவு எடுத்தேன், வெளிநாட்டுக்கு கம்பெனியே நம்மை கூப்பிட வேண்டும் நாமாக ஏஜெண்டிடம் செல்ல கூடாதென.. அதன்படியே அடுத்த இரண்டாண்டுகளில் துபாய்க்கு பணி திறனின் அடிப்படையில் வந்து சேர்ந்தேன்.. வந்தநாள் முதல் இன்றுவரை வளைகுடாவில் வாழும் தமிழர்களையும், தமிழ் இஸ்லாமியர்களின் சூழலையும் பார்க்கும் எனக்கு இந்த நாவல் ஒரு ஆவணமாக இருக்கிறது..

வளைகுடா பணிக்கு படித்துவிட்டு சரியான நடைமுறையில் வருபவர்களை விட, எப்படியாவது வளைகுடா (சவூதி, அமீரகம், குவைத், ஓமன், பக்ரைன், கத்தார்) சென்றால் போதும் என்ற எண்ணத்தில் யார் பேச்சையாவது கேட்டு, இல்லாத பணத்தை எப்படியாவது ஏற்பாடு செய்து, இங்கு வந்து அல்லல்படுபவர்கள் அதிகம். ஊருக்கும் சொல்ல முடியாமல், செல்ல முடியாமல், இங்கும் அதிகமாக சம்பாதிக்க வழியில்லாமல் அவர்கள் படும் துயரங்களை நாம் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது..

அம்மாதிரியாக சவூதியில் வந்திறங்கிய ஃபைசல் என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு, குமரி இக்பால், பிரபு, மிஷிரி கிழவன், நாசர், மம்மரிபா, மம்மக்கண்ணு, மம்மலி, கோபகுமார், பணியடிமை, டெய்லர் அஹமது, செளதி அரபுகள் துவைஜி, அப்துல்லா,
அரூஷா, பிலிப்பைனி, பாகிஸ்தானி ஷமி, பாலஸ்தீனி, ஜாஸ்மின் என்ற உலகின் பலதரப்பட்ட நிரப்பரப்புகளில் வாழ்ந்தவர்களின் பின்னனியில் அஜ்னபியை ஒரு பத்தாண்டு சித்திரமாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் மைதீன்.

சவூதியின் நிலப்பரப்பு என்பது மிக நீண்டதாக இருந்தாலும் ரியாத்தில் இருந்து எந்தவித பேப்பரும், பாஸ்போர்ட்டும் இல்லாமல் தப்பிக்கும் ஃபைசலை ஜித்தா கொண்டு வந்து அவனை தாயகம் திரும்ப வைக்கும் நடவடிக்கைகளும், அந்த செயல்பாடுகளினோடு ஜித்தாவில் நிகழ்வும் அஜ்னபிகளின் வாழ்வியல் சம்பவங்களும் ஒரு காட்சிப்பிழையாக நம் கண்முன் நிற்கிறது. சவூதி அரபிகளின் சட்டங்களும், சட்டத்தை நிலைநாட்ட அவர்கள்  அரபி, ஷியா, அஜ்னபிகளுக்கிடையே காட்டும் பாகுபாடுகளை நாம் உணரும் போது, வாழ்வதற்கான பொருளாதார தேடலின் கடுமையான பயணம், பாலைவன சூட்டை விட சூடு மிகுந்ததாக உணர முடிகிறது.

துவைஜி என்ற அரபியின் கொடூர முகம் சாத்தானின் முகமாக நம் கண்களில் தெரியும் வேளையில், மம்மலியின் முதலாளி அரபி அப்துல்லாவும், அரபி அபுஹூசுனும் இஸ்லாத்திற்கான அடையாளமான மனிதம் இன்னும் இருக்கிறது என்றும் நம்மை ஆசுவாசப்படுத்துகின்றனர்.

வார இறுதிநாட்களில் ஏதேனும் ஒரு தங்குமிடத்தில் கூடி குடித்து, நன்றாக சமைத்து சாப்பிட்டு, சீட்டு விளையாடி, நீலப்படங்களை கண்டு விட்டு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்காக அடித்து பிடித்து ஓடுவதையே தனி நாவலாக எழுதலாம், அந்தளவிற்கு வியாழன் இரவு நண்பர்களுடனான தனிக் கதைகளும், கிண்டல்களும், ஊரிலிருந்து வந்திருக்கும் கடிதங்களின் செய்திகளுமே வளைகுடா வாழ்வை நகர்த்தி செல்ல ஒவ்வொருவருக்கைமான மனதை அளிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது, அதை அஜ்னபியில் வெகு நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர், தன் எழுத்தாளுமையால்.

நாவலில் வரும் கருத்தான் காதர் என்ற கதாபாத்திரத்தின் முன் அறிமுகத்தையும், நாவலின் இறுதிப்பகுதியில் காதர் குறித்து வரும் செய்தியையும் படிக்கையில் ஒரு மனிதனின் வாழ்வை முடிவு செய்வது சம்பவங்களும், சூழலுமே.. எந்த மனிதனும் சமூகத்தின் பார்வையில் மோசமானவனகவும், நல்லவனாகவும் எப்போதுமே இருக்க முடியாது என்பதை காதரின் வாழ்வின் மூலம் நமக்கு கடத்தப்படுகிறது. கருத்தான் காதர் என்ற கதாபாத்திரம் இந்த நாவலில் சூறாவளியாய் வந்து தென்றலாய் கடந்து செல்லும் …

இஸ்லாம் குறித்த வாசகனின் பார்வையை இன்னும் கூர்மையாக்குகிறார் நாவலாசிரியர், தொழுகை, வணக்கம் போன்றவற்றின் செயல்பாடுகள் கணக்குகளுக்காகவோ, சமுதாயத்திற்காகவோ அல்ல, அவை இறையை நோக்கிய நம் நீண்டகால பயணம் என்பதும், நம் புற அடையாளங்களால் இறையை நோக்குவதை விட மனதை இறைவனை நோக்கி செலுத்துவதற்குண்டான உறுதியை பெறுவதே ஆகச்சிறந்த வணக்கம் என உணர்த்தப்படுவதும், அதை பிரபு என்ற இஸ்லாமியரல்லாத ஒரு இளைஞன் நானும் தொழலாமா? என்ற கேள்வியின் மூலம் மிஷிரி கிழவனின் வழியாக நம்மை வந்தடைவதுடன், அடிப்படைவாதிகளை பதட்டமடையவும் செய்யும்.

வாலிபனாக செளதி வந்து தொழிலாளியாக தன் வாழ்வை ஆரம்பித்து திருமணம், குழந்தைகள், அவர்களின் கல்வி என காலம் கடந்து பெற்ற மகனும் கல்வியை உதாசீனப்படுத்தி, எந்த வயதில் தந்தை செளதிக்கு தொழிலாளியாக வந்தாரோ அதே வயதில் மீண்டும் செளதிக்கு தொழிலாளியாக மகன் வரும் கொடுமையும், அந்த தந்தை ஊரில் இறந்த செய்தி வந்த பின்பு தந்தையின் ஜனாசாவை காண செல்ல முடியாமல் மனம் பேதலித்து திரியும் இடமும், தந்தையை இழந்த மகனிடம் மிஷிரி கிழவன் வந்து, நாசர்… அழாதே… உனது தந்தை எனது நீண்ட நாள் நண்பன், நீ பிறந்த செய்தியை அவன் என்னிடம்தான் இனிப்பு தந்து முதலில் சொன்னான், நீ கலங்காதே உன் தந்தையின் ஞாபகம் என் நெஞ்சம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது என, தந்தையின் இறப்பிற்கு செல்ல முடியாத மகனிடம் ஆறுதல் சொல்லும் இடம் நம்மை உருக்குலைத்து விடும். இன்றும் வளைகுடாவில் தன் மகன், மருமகன்களுக்கான விசாவுக்காக பாடுபடுவர்களையும், அவர்களின் சூழலையும் கேட்பது மனதை வருத்தமடைய செய்யும். ஆயினும் வாழ்தல் வேண்டி இதையெல்லாம் அவர்கள் பொறுத்துக் கொண்டே வாழ வேண்டியிருக்கிறது.

ஒரு படைப்பு சமூக அக்கறையுடன், சமூகம் குறித்த மதிப்பீடுகளையும், பிம்பங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் முன்னேற்றத்திற்கான ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில் அஜ்னபி தன் இலக்கை துல்லியமாக தாக்கியிருக்கிறது. உனக்கென்னப்பா வெளிநாட்டு சம்பாத்தியம் என்ற ஊராரின் பார்வையை இந்த புதினம் கேலி பேசுகிறது. அஜ்னபி (அந்நியன்)யாக நடத்துவதை விட மோசமான அடிமையாக நடத்துபவர்களும், இன்னும் தங்களின் கல்வியையும், உலகளாவிய போட்டிகளுக்கேற்ப திறமையை வளர்த்து கொள்ளாத இளைய சமூகமாக இருந்து கொண்டு, கடுங்கோட்பாட்டுவாத பார்வையில் அரசியல்/சமூக/பொருளாதார முன்னேற்றத்தை எவ்வாறு நாம் பெற முடியும் என்ற கேள்விக்கு யாராவது விடையளிப்பார்கள் என காத்திருக்கிறேன்.

பிலால் அலியார்
24/12/21
மனாமா, பஹ்ரைன்

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...