Tuesday, 2 May 2023

திருவாழி" பார்வை 2

 என்மீது அன்பு கொண்ட லால்குடி முரளிதரன் அவர்கள்.அஜ்னபி நாவலைப்பற்றி அப்போதும் இனிமையாக எழுதியிருந்தார். இப்போது திருவாழி பற்றியும் 

நீண்ட நாள் கழித்து ஒரு அருமையான புதினம் வாசித்தேன். மீரான் மைதீன் எழுதிய 'திருவாழி'. ஒரு நல்ல கதை வாசிக்க ஆரம்பித்த முதல் சில பக்கங்களிலேயே வாசகர்களைக் கட்டிப் போட்டு கதையுடன் ஒன்ற வைத்து விடும். சிலவன வாசகனுக்கு சலிப்பை உண்டாக்கி சில வரிகளை படித்தும் பதியாது வேறு விஷயங்களில் மனம் சஞ்சரிக்கச் செய்து விடும். 'திருவாழி' முதல் ரகம். 'திருவாழி' ஏழு கடைகள் கொண்ட ஒரு வணிக வளாகம். அதன் முதலாளியின் பெயர் கொண்டது. மீரான் மைதீன் நாவல்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தனது நாவல்களில் பழைய தமிழ் திரை இசைப் பாடல்களை ஆங்காங்கே தூவி விடுவதுதான். வேலு மயிலு "அண்ணே" 'வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே' வாசிக்கவான்னு கேட்டவுடன் 'திருவாழி'. 'பூ மழை தூவி ' வாசி என்பதும் விடியும் வரை அதையே வாசிப்பதாக சொல்வதில் மைதீனின் அங்கதம் வெளிப்படுகிறது. இனி எப்ப அந்தப் பாட்டைக் கேட்டாலும் 'திருவாழி' நாவல்தான் ஞாபகம் வரும் கதையைப் படித்தவர்களுக்கு. நாவல் ஆசிரியரின் கதை கருவிலிருக்கும் போதே இடது கால் முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனக்கு ஐந்தாம் எண் கடையை வாடகைக்கு எடுக்க ஆசைதான். அந்தக் கடையை வாடகைக்கு எடுத்த இருபது பேர் கால் முறிந்திருக்கிறது என்பது வினோதம். அஞ்சாம் நம்பர் கடையை வாடகைக்கு எடுத்து நடத்த ஒரு ஆள் கேட்டிருக்கு என்றவுடன் யாராவது வெளியூர்க்காரனா என கேட்டதும் சிரிப்பு தொற்றிக் கொள்கிறது வாசகர்களிடம். சிலங்கா கடையைப் பார்க்க வரும்போது கூலிங் கிளாஸ் அணிந்த மைனர் சலாமின் பார்வை அவளின் இடது காலை நோக்கியதாக இருந்தது என்று வருவது சரியாக மெய்ப்பு பார்க்காததால்  வாசகனை சிலங்கா பெண்ணோ என எண்ணித் தடுமாறி பின்னோக்கி வாசிக்கத் தள்ளுகிறது. செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் அருகி வருவதை மைதீன் தனக்கே உரித்தான பாணியில் சாடியுள்ளார். பெரிய பிரச்சினை அதனாலதான் வாழை இலையில் மை போட்டு என்று பல்பு சொல்லும்போது கதை மாந்தர்களோடு நாமும் சிரிக்கிறோம். பல்பின் அகோரமான தோற்றத்தின் மீது அவன் அபார இசை ஞானம் திரை போட்டு மறைத்தது  என்று சொல்லி பிலிப்பின் மீதான சிந்துவின் ஈர்ப்பு உடல் ரீதியானது மட்டும் இல்லை என்கிறார் மைதீன். நல்ல இசை ரசிகனுக்கு அதை எழுதிச் சொல்லும் வித்தை அமைவது அபூர்வம். மைதீனுக்கு அது கைகூடியுள்ளது திருவாழியிலும், அஜ்னபியிலும் தெரிகிறது.பிலிப்பிடம் இனிமே யாரும் உங்களை பல்புன்னு கூப்பிட அலவ் பண்ணாதீங்க என சிந்து சொல்வது 16 வயதினிலேயில் ஶ்ரீதேவி கமலிடம் 'இனிமே உன்னை யாராவது சப்பாணின்னு கூப்பிட்டா சப்புன்னு அறைஞ்சுடு'ன்னு சொல்வதை நினைவு படுத்தினாலும் வாசிப்பவர்களுக்கு பிடிப்பதாக இருக்கிறது. ஒரு மவ இருந்தா இந்த அன்சாரிப் பயலுக்குக் கட்டிக் கொடுத்திருப்பேன் என்று சொல்லும் திருவாழி ஒரு முதலாளி போல எப்போதும் நடந்து கொள்வதில்லை யாரிடமும். அது போலவேதான் ஆறாம் நம்பர் ராஜ்குமார் அண்ணாச்சி தன் கடையில் வேலை பார்த்த குமாருக்கு உளுந்தூர்பேட்டையில் கடைவைத்துக் கொடுப்பதும் நமக்கு சம்பாதித்துக் கொடுத்து உதவியவனுக்கு பதிலுபகாரம்தான்..  'உமக்கு வேணுமா, வரீறா' எனப் பிராட்டி கேட்டதும் அண்ணாச்சி மட்டுமில்ல நாமும் மிரள்கிறோம். நம்பிக்கைத் துரோகம் பண்ண அகிலனை வெளுக்கும் சமயத்தில் பயப்படும் பொன்ராஜியை தகப்பன் போல அணைத்துப் பேணுவதில் அண்ணாச்சி உயர்ந்து நின்றாலும் பின்னர் சலூன் கடையுடன் மல்லுக்கு நிற்பதை ஏற்க முடியவில்லை.



பழங்கதைகள் கேட்பவர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியாது. ஆனால் சொல்பவர்களுக்கு ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கும் என்று மைதீன் சொல்வது என் மனைவி புவனா என் அப்பா அவளிடம் பழைய கதைகளை பலமுறை சொன்னதையே திரும்ப சொல்வதில் அவருக்குக் கிடைத்த ஆனந்தத்தை என்னிடம் அவள் சொன்னதை நினைவூட்டியது.


திருவாழியின் உண்மையான நாயகன் பட்டணம் முதலாளிதான். நன்றிக் கடனாக தன்னைத் தர சூளாமணி விழையும்போது பட்டிணம் 'எங்க மதத்துல கல்யாணம் பண்ணாம ஒரு பொண்ணத் தொடறது பாவம்னு' உயர்ந்து நிற்கிறார். ஜெயமோகனின் 'சோற்றுக் கணக்கு' கெத்தேல் சாகிப்பை விட பட்டிணம் ஒரு படி மேலே நம் மனதில். ஏனென்றால் சுற்றியிருப்பவர்கள் நலனையும் விரும்பியவர் பட்டிணம். சூளாமணியின் மூணு வயது மகனுடனான அவரின் உரையாடலில் இது புலப்படும். கொழும்பு முதாலாளியோட பேரன்தான் காசிம் என்று   தெரிந்தவுடன் திருவாழி உருகிப் போகிறார்.


அஞ்சிலிருந்து பேயை ஒண்ணாம் நம்பர் கடைக்கு மந்திரவாதி மாத்தப் போறதா சொல்லும்போதும், அரிகோபாலன் ' ரொம்ப மொரண்டு பிடிச்சு' எனும்போதும் உள்ளுக்குள் நமக்கு சிரிப்பு வருவதைத் தடுக்க முடியவில்லை. வெளப்பக்காரன் என்ற சொல்லை முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன். Google தேடலில் பொருள் கிடைக்கவில்லை. க்ரியா அகராதியிலும் இல்லை. சமையல்காரர் என அர்த்தப்படுத்திக் கொண்டேன்.  அன்சாரி எந்த மத வித்தியாசமும் பாராமல் திருச்செந்தூர், குருவாயூர் என மற்றவர்களுக்காக கோவில் கோவிலாக போவது பண்பட்ட மக்களுக்கு இன்னும் பஞ்சம் வரவில்லை என்பதை தெரிவிக்கிறது. நாகூர் தர்க்காவில் குழந்தைக்கு மொட்டை போடுவது எங்கள் குலவழக்கம் என்று கூறிய என் மனைவி வழி உறவினர்(பிராமணர்) சொன்னது நினைவுக்கு வந்தது. 


இந்த நாவல் முழுவதும் கையில் எழுதாமல் தன் மொபைல் போனிலேயே தட்டச்சு செய்ததாக மைதீன் குறிப்பிட்டிருந்தார் முகப்புத்தகத்தில். அப்படி தட்டச்சு செய்யும் பழக்கம் உள்ள எனக்கு இப்போது பேனா பிடிக்கவே கடினமாக உள்ளது. மோசமான என் எழுத்தும் படு மோசமாக ஆகிவிட்டது. மொபைல் போன்ற சாதனங்களால் கவனச்சிதறல் அதிகம் இருக்கும் காலத்தில் ஒரு புதினத்தை வாசிப்பது கடினம்தான். இருந்தாலும் மொபைலை அணைத்து வைத்து விட்டு வாசிப்பு இன்பத்தில் திளைக்கலாம்.

No comments:

Post a Comment

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...