Friday 21 July 2023

மீரானின் படைப்புலகம் - ஹாமீம் முஸ்தஃபா

நாளை 23/7/23 கோவையில் நடைபெறும் எனது படைப்புலகம் குறித்த உரையாடல் நிகழ்வுக்கு முன்னோட்டமாக நண்பர் ஹாமீம் முஸ்தஃபா எழுதியுள்ள முகநூல் பதிவு.


மீரான் மைதீன் நாவல்கள் குறித்த உரையாடல் கோவையில் நாளை நடைபெறுகிறது. 

தொண்ணூறுகளின் கடைசியில்  புனைவு எழுத்துக்குள் மீரானின் பயணம் தொடங்குகிறது. இதே கால கட்டத்தில்தான் அவருக்கும் கலை இலக்கியப் பெருமன்றத்திற்குமான தோழமையும் ஆரம்பமாகிறது.

களியலில் நடைபெற்ற பேராசியர் நா.வா நினைவு முகாமில்தான் தமிழுக் குள் அவரைக் கொண்டுசேர்த்த கவர்னர் பெத்தா சிறுகதையை வாசித்தார். மன்ற அரங்கில் அவர் பகிர்ந்து கொண்ட முதல் சிறுகதை அது. 

மீரான் எழுத்துக்குள் அவரின் இருபது களில் வந்தாலும் சிறுவயது தொட்டே மேடை நாடகத்தோடு தொடர்புடைய வராக இருந்தார். அவரின் தந்தை நினைவில் வாழும் அலி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் நன்கு அறிமுகமான நாடகக் கலைஞராகவும் , நாடகம் எழுதக்கூடிய வராகவும் இருந் தார். தந்தையின் விரல்பிடித்து நடிக்கத் தொடங்கிய பருவத்திலிருந்தே மீரானிடம் அந்த ஆர்வம் இயல்பாக வந்து சேர்ந்துவிட்டது. 

இன்று மீரான் திரைத்துறைக்குள் பிரவேசிக்கத் தொடங்கிவிட்டார். நிறைய வேலை செய்து கொண்டிருக் கிறார். இந்த பரபரப்புக்கு இடையிலும் யாரா வது உள்ளூர் நாடகக்கலைஞர்கள் நாடகத்தில் மேடை ஏறவேண்டும் என்று அழைத்தால் மறுக்காமல் சென்று அவர் களுள் ஒருவராகி விடுவார் . இந்த அனுபவங்கள் மீரானுக்குள் இருக்கும் உலகின் பரப்பளவை பரத்திப்போட் டுள்ளது. 

மீரானின்  அகவுலகுக்குள்   சொந்த நம்பிக்கைகளுக்கும் , சொந்த பண்பாட்டுக்கும்  எவ்வளவு இடம் இருக் கிறதோ அதே அளவு இடத்தை தன் னோடு பழகக்கூடியவர்களின் நம்பிக் கைகளுக்கும் பண்பாட்டுக்கும் இருக்கிறது . இதுமிகவும் அபூர்வமான ஒன்று. தமிழ் படைப்பாளர் களிடம் அதிகம் காணமுடியாத ஒன்று .அதுதான் மீரானின் பலம்  

இந்த மனிதர்கள் இல்லாமல் மீரானின் நாவல்கள் முழுமை பெறுவதில்லை. தான் அல்லாத மற்றமைகளை மீரான் தன் எழுத்துக்களில் எதிர்மறையாக சித்தரிப்பதில்லை.  

பெயர்கள், அவர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக் கங்கள் வேறாக இருக்க லாம்.ஆனால் அவர்கள் அனைவரும் மனிதர்கள் இந்த உலகின் மகிழ்ச்சியும், அன்பும், நட்பும் , சோகமும், தோழமையும்  துயரமும், துரோகமும் எல்லோருக் குமானது. இவற்றோடு மனிதர்கள் வாழ்கிறார்கள், பயணப்படுகிறார்கள் . இது மீரானின் எழுத்துக்கள் வழியாக நமக்குக் கிடைக்கும் சித்திரம். இந்த மக்கள்  எல்லோரையும் இணைத்துக் கொண்ட, நேசிக்கின்ற  முழுமைதான் மீரானின் எழுத்து. 

கவர்னர் பெத்தா சிறுகதைத்தொகுப்பு வழியாக ஆரம்பித்த இந்தப் பயணத் தில் ரோசம்மா பீவி, சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம், பலாமரம் நிற்கும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான்  என்னும்  சிறுகதை நூற்கள், 

ஓதி எறியப்படாத முட்டைகள், அஜ்னபி, ஒச்சை, ஒரு காதல் கதை, கலுங்கு பட்டாளம்,  திருவாழி  என்னும் நாவல் கள், மஜ்னூன் என்னும் குறுநாவல் என்று மீரானின்  படைப்புகள் வரிசைப்படுகின்றன. 

வளைகுடா நாடுகளை தங்களின் பொருள்தேடும் களமாகக் கொண்ட முஸ்லிம்களின் வலியை தமிழில் மீரானின் அளவுக்கு யாரும் இன்னும் துல்லியம் செய்யவில்லை. எதார்த்த எழுத்து முறைதான் மீரானின் தொடர்ச்சி. எதார்த்தத்தை அதன் முழு அழகோடும் அவரால் கொடுக்க முடிகிறது . அதன்காரணமாகவே அவரின் எழுத்துக்கள் நம்மோடு நெருக்கம் கொள்கின்றன . 

மீரானின் ஓதி எறியப்படாத முட்டைகள், அஜ்னபி , திருவாழி நாவல்கள் குறித்த உரையாடல் அரங்கினை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற கோவை மாவட்டக்குழு நாளை ஒருங்கிணைப்பு செய்கிறது . சமீபகாலமாக படைப் பிலக்கியத்தின் மீது தன்னுடைய கவனத்தை கோவை பெருமன்றத் தோழர்கள் குவித்துவருவது மகிழ்ச் சியும், நம்பிக்கையும் தருகிறது. 

தோழர்களுக்கும் மீரானுக்கும் வாழ்த்தும் அன்பும். நிகழ்வு சிறக்கட்டும் நன்றி முஸ்தபா

Thursday 20 July 2023

மாமரத்தின் அப்பா அம்மா மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை மீரான் மைதீன் -2016


----------------------------------
மாமரத்தின் அப்பா அம்மா மற்றும்
    வளர்ப்புத் தந்தையின் கதை
                                 மீரான் மைதீன்

 வேடிக்கையும் ஞானத்தையும் பாடுபொருளாகக் கொண்டிருந்த ஒரு நடு இரவாயிருந்தது. என்ன காரணக் காரியமென்றுத் தெரியாமல் சற்றும் முன்பின் தொடர்பற்று   திடீரென பேச்சு மாமரம் பற்றியதாக மாறியபோது  நான் ஒரு மாமரத்தைக் குறிப்பிட்டு அந்த மாமரத்திடம் போய் என் பெயரைச் சொல்லிப்பார் அது மெல்ல தலையசைக்கும் என்றேன். அவள் என்னை பைத்தியக்காரனைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டே சிரித்தாள். அவளின் அவ்வாறான சிரிப்பை பல தருணங்களில் நான் சுவீகரித்திருப்பவன் என்பதால் இப்போது அவளின் பரீட்சயமான சிரிப்பை   உறுதிப்படுத்திக் கொண்டே தொனி பிசகாமால் மறுபடியும் சொன்னேன் நீ வேண்டுமானால் இதை ஒரு சோதனையாகக் கூட செய்து பாரேன். இப்போது சிரிப்பைச் சுத்தமாக நிறுத்திவிட்டு வினோதமாக பார்த்துக்கொண்டிருக்கிறாள். இன்னும் கொஞ்சம் நேரம் இதுபோல் பேசினால் சுற்றிலும் இருள் பரவிக் கிடந்த அந்த நடு இரவில் அவள் பயப்படுவாள் என்பதைப் புரிந்து சிறிய இடைவெளிவிட்டு  பேச எத்தனிக்கையில் வார்த்தை வெளிப்படும் முன்னமே போ லூசு என்றாள். என்னக் காரணமோ தெரியவில்லை பெண்கள் பழகிய ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள்ளாகவே என்னை லூசு என்று எந்த தயக்கமும் இன்றி அழைத்து விடுகிறார்கள்.  லூசு என்று அழைத்ததில் உங்களுக்கு வருத்தம் ஓன்றுமில்லையே என்று மிக்க பவ்யமாய் கேட்கும் அவளிடம்  இல்லை என்றும் அடியாளத்திலிருந்து வெளிப்படும் உண்மைகள் ரொம்பவும் இதமான ஆறுதல் தருபவைதான் என்றேன். அப்படியானால் ‘போடா லூசு என்று சொல்லட்டுமா’ என மெல்லியக் குரலில் கேட்ட போது இது இன்னும் ஆறதலானது என்றேன். அவளுக்கு அதில் கொஞ்சம் சந்தோசமும் பெருமிதமும் இருந்தது. ஒரு நாள் அந்த மாமரம் எங்கேயிருக்கிறது என்று கேட்டாள். மறந்துவிடுவாளென நினைத்துக்கொண்டு நாளை சொல்வதாகச் சொன்னாலும் மாமரம் தலையாட்டும் என்றது அவள் உள்ளிருந்து முளைக்கத் துவங்கிவிட்டதோ என்னமோ விடாமல் நச்சரித்து மறுநாளும் தலைவா மாமரம் எங்கே நிற்கிறது என்றாள். அவளின் தலைவாவும் போடா லூசும் ஒரே அர்த்ததளத்தில் இயங்குபவைதான். அவளிடம் பேசும் போது அவளுக்கென்றே ஒரு ஸ்கிரிப்டை நான் தயார் செய்து சொல்லவேண்டும். நீக்கம், மறைப்பு, ஒப்பனையென நுட்ப வேலைப்பாடுகளோடு கிடுக்கிப்பிடி கேள்விகள் அவளுக்குள் உருவாகிவிடாதவாறு ஏக திருப்தியோடு கட்டமைத்து விட்டால் அவளிடம் சொல்லிவிடலாம். லூசாக இருப்பதில் இதில் ஏராளமான சௌந்தர்ய சவுரியங்கள் உண்டு.

      சில தினங்கள் கடந்த ஒரு காலையில் நாளிதழோடு தேநீரும் பருகிக் கொண்டிருந்த போது ‘உண்மையைச் சொல்லு அந்த மாமரத்திடம் உன் பெயரைச் சொன்னால் தலையாட்டுமா? இன்றைக்கு நாம் போகலாம். நான் உன் பெயரை அந்த மரத்திடம் சொல்கிறேன். அது தலையாட்டுவதை எனக்குப் பார்க்கவேண்டும் லூசு’ என்று கெஞ்சத் தொடங்கினாள்.  கெஞ்சுவதைப் பார்த்தால் சட்டென அதைவிட்டு விலகிவிடும் உத்தேசம் அவளுக்கு இல்லையென தோன்றியபோது அது ரொம்ப தூரம.; உடனடியாகப் போக இயலாது. நான் நிச்சயமாக அழைத்துப் போகிறேன். மனசுக்குள் இருந்து மாமரத்தை தற்காலிகமாக எடுத்துவிடு. நான் ஒரு பேச்சு ரசனைக்காக சொன்னது என்றேன். அவள் பொய்தானே என்ற போதாவது ஆமாம் பொய்தானென விட்டுத் தொலைத்திருக்க வேண்டும். ஆனாலும்  பொய்யெல்லாம் இல்லை உண்மைதான். கடந்த மே மாதம் அதற்கு முன்னே நின்று என் பெயரைச் சொன்னேன். அது தலையாட்டியது என்ற போது போடா லூசு நீ சொல்லும் போது காற்றடித்து மரம் அசைந்திருக்குமென்றாள். அப்படியெல்லாம் இல்லை அது என் மரம். என் பெயரை எத்தனை முறைச் சொன்னாலும் தலையாட்டுமென நான் சொல்லிக் கொண்டிருந்த என் கம்பீரத்தை அவளின் போடா லூசு என்ற அழைப்பு காலி செய்திருந்தது.

அந்த மரத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு, ரொம்ப தூரம் என்றால் எங்கே, ஏன் இதற்கு முன்பு அப்படியான மாமரத்தைப் பற்றி பேசியதில்லையென தொடர்ச்சியாக கேள்விகள் எதுவும்  கேட்கவில்லையானாலும் நிச்சயமாக எப்போதாவது மதிய உணவருந்தும் போது அவள் கேட்கக்கூடும்.

என் கணக்குக் கூட்டலில் அந்த மாமரத்திற்கு இருபத்தி ஏழு வயதாவது பூர்த்தியாகியிருக்க வேண்டும். மாடம்பி இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. ஏழு வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை மாமரத்தை பார்க்க போனபோது மாடம்பியை அந்தத் தோட்டத்தின் முனை டீ கடையில் பார்த்த சமயத்தில் நலன் விசாரித்துப் பேசிக் கொண்டபோது என்னை ஆச்சரியத்தோடு இமைமூடாமல் விழுங்குவதுபோல பார்த்துக் கொண்டிருந்தவர்; பெருஞ்சலிப்புடன் காலத்தைத் திட்டினார். போன மாசம் வந்திருக்கலாமே பாட்டக்காரன் மூடை மூடையாக மாங்காய் பறித்துக்கொண்டு போனான் என்பதைச் சொன்னபோது சிரித்துக் கொண்டேன். அவர் அவளைப் பற்றி குசு குசுப்பான குரலில் கேட்டதும். நான் தெரியாது அதன் பிறகு பார்க்கவேயி;ல்லை முஸ்திபெடுத்து தேடவுமில்லை என்றதும் கருமேகம் கவிழ்ந்து மூடிக்கிடந்த மேற்குப் பக்க அடிவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே காலத்துக்க போக்கப் பாத்தியா என்றபோது மிகக் கடுமையான வருத்தத்தின் சாயல் அவர் முகமெங்கும் பாய்ந்திருந்தது.

மனம் நினைவுகளை காலத்தின் தன்மை மாறாமல், உருவங்களைக் கூட மாற்றாமல் அற்புதமான காட்சியாகவே தந்துவிடுகிறது. அந்த அவளுக்கும் எனக்குமான பழக்கத்தில் சாக்லேட், சிறப்பு உணவுகள், பேக்கிரி பண்டங்கள் என பலவற்றை பங்கிட்டு உண்டிருக்கிறோம். அவ்வாறான நாட்களில் அன்று அவள் தான் மாம்பழத்தைக் கொண்டுவந்தாள். கல்கத்தாவிலிருந்து அவள் உறவினர் கொண்டு வந்து பின்னர் ஊரிலிருந்து அவள் அம்மா மூலமாக அவளின்  விடுதிக்கு வந்து சேர்ந்திருந்தது அந்த மாம்பழம். நாங்கள் இருவரும் பங்கிட்டு சாப்பிடவேண்டி அசட்டுத் துணிச்சலில் எங்கள் இருப்பிடத்திலிருந்து முப்பது மைல் தூரம் பயணித்திருந்தோம். மாடம்பியிடம் மாட்டிக்கொண்டதும் அன்று தான். மாடம்பி எங்கள் ஊரில் ஒரு பண்ணையாரின் தோட்டத்தில் பார்வைக்காரனாக இருந்ததால் என் முகம் அவருக்கு நல்ல பரிச்சயம்முண்டு மட்டுமல்லாமல் என் தந்தையின் மீது பெரும் மதிப்புக் கொண்டிருந்தவர். அந்த இடத்தில் அன்று சற்றும் எதிர்பாராமல் மாடம்பி டேய் தம்பீ என்று அழைத்தபோது திடுக்கிட்டுப் பரிதாபமாக நின்றேன். என்னையும் அவளையும் மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டே மாடம்பி போலீஸ்காரனைப் போலக் கேட்டார் யாருடே… இது

      என்கூட படிக்கிறவங்க

      இங்கே எதுக்கு வந்தே….

      டேமுக்கு சுத்தி பாக்க

      சரி இல்லையே…. கையில என்னது

      மாம்பழம்..

       மாடம்பி மேலும் சில கேள்விகளை வீசிக் கொண்டிருக்க முடிந்த மட்டும் அவைகளில் சிக்குண்டு விடாமல் தப்பித்துக் கொண்ட பிறகே மாம்பழம் வெட்டித்தின்ன கத்தி தந்தார். ஆனாலும் நாங்கள் பயந்து போயிருந்தோம். ‘காலம் மோசம்பிள்ளே…… இனி இப்படி தனியா வரப்புடாது நானும் நிக்கேன்…… நீங்க சுத்திபாருங்க……. இரண்டரைக்கு ஒரு பஸ் உண்டு அதுல ஏத்திவுடுவேன்…… பொன்னுபோல ஊருபோய் சேந்திரனும’; தலையாட்டினோம். இரண்டரை பஸ்சுக்கு மேலும் மூணு மணிநேரம் இருந்தது. தேங்காய் சில்லுபோல அடர்த்தி கொண்டிருந்த மாம்பழம் நல்ல ருசி. முன்பு எப்போதும் சாப்பிட்ட வகையிலுள்ளதுமில்லை. மாசு மருவற்று மஞ்சள் நிறத்திலிருந்த மாம்பழத்தில் ஒரு சிவந்த படரலும் உண்டு. அவள் துண்டுகளாக வெட்டியதிலிருந்து மாடம்பிக்;கு கொடுக்கப்பட்ட துண்டை வாயில் வதைத்த உடன் சப்புக் கொட்டியபடி சொன்னார். மக்கா பயங்கர ருசி…….எங்க உள்ளது…… நான் அவளைக் காட்டியபோது மாடம்பி அவளை மலைப்பாக பார்த்துக்கொண்டே ‘தேவலோகத்திலிருந்து மாம்பழத்தோட இறங்கிவந்திட்டாளா…. இந்த இனிப்பு இனிக்கு… கொள்ளாம்டே. நமக்கு நட்டுருவோம். என்றபடி மாடம்பி டேமின் அருகிலுள்ள அவரின் பராமரிப்புத் தோட்டத்துக்கு அழைத்துப்போனார். எதிரில் வந்த ஒருவரிடம் நமக்கு வேண்டப்பட்ட பிள்ளைங்கதான் ஆராய்ச்சி படிப்புக்காக வந்திருக்காவோ என்ற போது  நானும் அவளும் ரகசியமாக சிரித்துக்கொண்டோம்.

      சுற்றிலும் காட்டாமணக்குச் செடிகளால் வேலியாக்கப் பட்டிருந்த மாடம்பியின் பராமரிப்பிலுள்ள பெரிய தோட்டத்தில் முன் பக்கம் ஒரு படலமைக்கப்பட்டு ரோட்டோரமாகவே இருந்தது. ஓன்றிரெண்டு மாதங்களுக்கு முன்னால் தான்  சுற்றிலும் தெங்கு நட்டுப் பிடித்திருப்பார்கள் போலும். அது இன்னும் பள்ளதிலிருந்து மேலெழும்பவில்லை தோட்டம் வலுப்பெற இன்னும் சில ஆண்டு காலம் பிடிக்கும் என்றார். தோட்டத்தின் நடு நாயகமாக வாக்காய்க் கிடந்த செம்மண் தரையில் மண்வெட்டியால் நாலு வெட்டுதான் வெட்டியிருப்பார். என் கையிலிருந்த மாங்கொட்டையைக் காட்டி இரண்டுபேரும் சேர்ந்து நின்னு அதப் போடுங்க என்ற போது நானும் அவளும் நெருக்கமாக நின்று அந்த மாம்பழ விதையை பிரார்த்தனையோடு குழிக்குள் வைத்து  கைகளாலே மண்ணைத்தள்ளி மூடி வைத்தோம.; ஈர நைப்போடு மண்ணாகியிருந்த எங்கள் கைகளை மாடம்பி காவட்டையில் கொண்டுவந்த தண்ணீரில் கழுவி நீரையும் அதில் ஊற்றிவிட்டபோது அவர் அந்த நிலம் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டே பேசினார். பேரு, அழகு, இன்பம், பிணி, மூப்பு, சாக்காடு இந்த ஆறும் கருவுல உள்ளது. கரைக்ட்டா வந்து சேந்திருக்குப்பாத்தியா. எங்க எது வரணுமோ அது வந்து சேந்திடும்… எல்லாம் வகுத்தது.… இந்த மண்ணுல மரம் நட்டு வளக்கவன் கடவுள் மாதிரி.

      நானும் அவளும் அன்று இனம் புரியாத மகிழ்வோடு தோட்டத்தைச் சுற்றி வந்து அங்கிருந்த குளுமையான ஒரு கல்லில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மாடம்பி தோட்டத்தின் வெளியே சரளைக் கற்கள் நிரம்பிய சாலை முனையிலிருந்த தேநீர் கடையிலிருந்து வாங்கித்தந்த பலகாரங்களை பகிர்ந்து தின்னும் போதும் இடையிடையே எங்களை நோட்டமிட்டுக் கொண்டே மாடம்பியும் பேசிக் கொண்டிருந்தார்.  இரண்டரை பஸ்சில் கிளம்பும் நேரத்தில் மறு வாரம் வரலாமா என்றபோது தலையை வடக்கும் தெற்குமாகக் ஆட்டிக்கொண்டு அது சரிப்படாது மக்கா என்றார். சரிபடாது மக்கா என்ற வார்த்தை ஒரு பாடு அர்த்தங்களைக் கொண்டிருந்தது. ஆனாலும் அன்றிலிருந்து சரியாக  மூன்றரை மாதத்திற்கு பிறகு ஒரு சனிக்கிழமை நானும் அவளும் மாடம்பியின் பாரமாரிப்பிலுள்ள அந்த தோட்டத்துக்குப் போய் விட்டோம். அப்போது மாமரம் எங்கள் மார்பு உயரத்திற்கு ஒற்றைக் குச்சியாய் வளர்ந்திருந்தது எட்டோ பத்தோ இலைகளோடு. மரம் நட்ட முதல் பயணத்திற்குப் பிறகு அதுவும் விடுதியின் அருகே வைத்து அது முளைத்திருக்குமா என்று அவள் கேட்டப் பிறகு  தெரியாது நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என இரண்டாவது வாரம் நான் மட்டும் தனியாக கிளம்பிப் போயிருந்தேன். என்னை பார்த்ததும் மாடம்பி சுற்றி சுற்றித் அவள் எங்காவது மறைந்து நிற்கிறாளா என்று தேடிய அவரின் சுழன்றலையும் பார்வை நாலாபுறமும் அலைபாய்ந்து நான் மட்டும் தான் தனியாக வந்திருக்கிறேன் என்று உறுதிப்படுத்தியப் பின்னரே அழைத்துப்போனார்.

இளம் குங்குமக் கலரில் ஒரு தெளு ஈரம் உலராத மண்ணுக்குமேலே செல்லமாக தலைகாட்டியதை ஆர்வாமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கணத்தில் பார்த்தது போல ஒரு அற்புதமான தெளுவை வாழ்வில் பின்னர் ஒருபோதும் பார்த்ததில்லை என்கிற தோணுதல் இப்போதும் எனக்கு பொய்யாகவே இல்லை. இரண்டாம் பிறையை தரையில் நட்டுவைத்ததைப்போல பேரழகு முளையாக மெல்ல எழுந்து வந்திருந்தது. உன் பேர அதுட்ட சொல்லு.. அதுக்கு கேட்கும் என்றார் மாடம்பி. கேட்குமா என்றேன் மறுபடியும். கேட்கும் அது ஒரு உயிர் என்றார். நானும் மாடம்பியும் மாமர முளையின் அருகே மிக நெருக்கமாக அமர்ந்திருந்தோம். எனக்கு சிரிப்பாக வந்ததது சிரித்துக் கொண்டே என் பெயரை மெல்லச் சொன்ன போது முளை மண்புழுவைப்போல மெலிதாக அசைந்தது. மாடம்பியின் கவனம் திசைமாறிய ஒரு தருணத்தில் அவள் பெயரையும் சொன்னேன் அப்போதும் அந்த மண்புழுவின் அசைவு முந்ததைய அசைவிலிருந்து எவ்வகை மாற்றமும் இன்றி முளையில் தென்பட்டது.

      விடுதியருகிலான அன்றைய பேச்சில் அவள் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள். என் பெயரைச் சொன்னதும் கூட அசைந்ததா… அசைவு எப்படி இருந்தது… அழகாக இருக்கிறதா… உனக்கு அது என்னைப் போல் தெரிந்ததா… அன்று அவள் எனை நோக்கி கேட்ட கேள்விகளும் அவளின் முகபாவனைகளும்  எண்ணிக்கையற்றவை. பின்னர் நாங்கள் அந்த மரத்தின் நினைப்போடே வேறு வேறு மரங்களைக் குறித்து சிந்திக்கத் துவங்கி எங்களின் பிரதான பாடுபொருள் மரங்களாகிப் போனது. மரங்களைப் பார்க்கும் விதமும் எங்களிடம் முன்புபோல இல்லாமல் முற்றிலும் மாறிப்போய் உலகிலுள்ள எல்லா மரங்களும் எங்களின் அதிசயத்திற்குரியதாகவும்  பேரன்பிற்குரியதாகவும் நொடிப் பொழுதில் மாறிவிட்டது. எல்லா கட்டிடங்களையும் அழித்தொழித்துவிட்டு மரங்களை நட்டுத் தள்ளிவிடவேண்டும் என்றேன். பிறகு பிறகு என கேட்டுக் கொண்டிருந்தாள். சாலைகளில் எல்லாம் மரம்நட்டு போக்குவரத்தை மாற்றிவிட வேண்டுமென்றேன். மரம் வெட்டுபவனை எல்லாம் சகாரா பாலைவனத்துக்கு கடத்திடணும் என்றேன். பிறகு என இன்னும் கேட்டாள். அவளின் ‘பிறகு’ தீரவே இல்லை. எனக்கு அப்போது சில நாட்களாக மரக்கிறுக்கன் என்று ஒரு செல்லப்பெயர் வைத்திருந்த அவள் விடுதியிலிருந்து விடைபெற்றுப் போகும் வரை தனியான எங்கள் உரையாடலில் எல்லாம் அந்த பெயரையே குறிப்பிட்டுக் கொண்டிருந்தாள.; அவள் மாடம்பியின் தோட்டத்துக்கு அழைத்துப்போகச் சொன்னப் பிடிவாதத்தை அப்போது உடனடியாக நிறைவேற்ற இயலவில்லை. ஆனாலும் நான் பின்னரும் மூன்று மாதங்களில் இரண்டு முறை போய் வந்திருந்தேன். அப்போதெல்லாம் பச்சை இலைகளில் சிலதும் இளம் குங்குமக்கலரில் சில தெளுவுகளுமாய் எங்கள் மாமரம் ஒரு அடி உயரத்திற்கு வந்துவிட்டது. நிறைய முறை பெயர் சொல்லி; விளையாடியிருக்கிறேன். என் கையால் உரம் வைத்து தண்ணீர் விடவேண்டுமென மாடம்பியிடம் பிடிவாதமாக நின்றபோது உரம் இப்போது வேண்டாம் தண்ணீர் வேண்டுமானால் விடு என்றார். உரம் வைத்தால் என்னவென எனது துடுக்குத்தனமான கேள்வியை மாடம்பி அமிழ்த்துப் பிடித்து அது பச்ச பிள்ளை மக்கா வளரட்டும் நமக்கு உரம் வைக்கலாம் என்றார். நான் அன்று கிளம்பும் முன்னால் பரீட்சித்துப் பார்க்கும் எண்ணத்தோடு வேறு சொற்களை சப்தங்களாக்கி மிதமான மிதமற்ற வகைபாடுகளில் கத்திப் பார்த்த போதும் செடி அசையவேயில்லை. வேண்டு;மென்றே தொண்டையை இறுக்கி குரல் மாற்றி என் பெயரை மெதுவாகச் சொன்னேன். செடி மெல்ல அசைந்தது. மாடம்பி பின்னால் நின்று கவனித்தப்படி ‘எப்படி மாற்றிச் சொன்னாலும் உம் பேருதான் அதுக்கு தனியா தெரியுதுடே’

      இப்ப பாரு ஒய் என்றபடி அவளின் பெயரைச் சொன்னேன். செடி அவ்வாறே செல்லமாய் அசைந்தது. மாடம்பி சிரித்தபடி ‘கொள்ளாம்புடே நீயும் அவளும் இந்த மாமரத்துக்க அப்பனும் அம்மையும்மாக்கும் அதான்’ நான் மாடம்பியிடம் கேட்டேன். ‘அப்போ நீரு’

      ‘நான் வளர்ப்பு தந்தை’ மாடம்பி ஹோ ஹோ என பெருங் குரலெடுத்துச்  சிரித்துக் கொண்டிருக்கும்போது மெல்ல கேட்டேன் ‘ஒய் அவள செடி பாக்க ஒரு நாள் கூட்டிட்டு வரட்டா’ சிரிப்பை நிறுத்திவிட்டு ஒரு மாதிரியாக பார்த்தபடி ‘அவயாரு அவளுக்கும் உனக்கும் என்னா…. ஒண்ணுகெடக்க ஒண்ணுண்ணா நேர இப்பவே பஸ்ச பிடிச்சி ஏறிப்போய் சாயிப்புட்ட விசயத்த சொல்லிப் போடுவேன் பாத்துக்கோ’

      ‘எனக்கும் அவளுக்கும் ஒண்ணும் கிடையாது… கூடப்படிக்கிறா…. பழக்கம்.. என்ன அவளுக்குப் பிடிக்கும்’

‘உனக்கு அவள பிடிக்காதா…’ பிடிக்கும் என்றபோது முறைப்பதைப் போல பார்த்த  அவரிடம் அன்றைக்கு பேசிப்பேசி மாலை நாலரை பஸ்ஸில் தான் கிளம்ப முடிந்தது. மாடம்பி துளைத்து துளைத்து கேள்வி கேட்டார். எனக்கும் அவளுக்கும் ஒன்றும் கிடையாது என்று ஸ்தாபித்து விட்டேன். மாடம்பி அவளை கூட்டிவாவென்றும் சொல்லவில்லை வரவேண்டாமென்றும் சொல்லவில்லை பொத்தம் பொதுவாக நின்றார். அன்றைய மாடம்பியுடனான உரையாடலில் ஒரு உணர்ச்சிகரமான விசயம் நடந்தது. பேச்சுவாக்கில் ஒரு இடத்தில் மாஞ்செடியை புடிங்கி எறிந்துவிடுவேன் என்று சொன்ன அந்த கணத்தில் அவ்வளவு தூரம் நான் தேம்பி தேம்பி அழுவேன் என்று மாடம்பி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. என்னை சமாதானிக்கும் பொருட்டு அன்று மதியம் சோறும் வாங்கித்தந்து செடிக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்கொள்வேன் என சத்தியமும் செய்தார். நாலரை பஸ்சுக்கான நீண்ட காத்திருப்பில் பொதுவாக மரங்களைப் பற்றியும், அதன் வளர்ச்சி, பராமரிப்பு, மரத்திற்கான நோய்நொடிகள், பூக்கும் காய்க்கும் காலங்கள் பற்றியும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். பஸ் பயணத்தில் வரும் வழியிலெல்லாம் சாலையோரத்து வீட்டின் முற்றங்களிலுள்ள மாமரங்களை எல்லாம் எண்ணிக் கொண்டே வந்தேன். மறுநாள் மாலை விடுதியின் அருகே வைத்து அவள் மொத்தம் எத்தனை மரம் என்றாள். உத்தேசமாக ஒரு எழுபதுக்கு மேல் இருக்கும் நான் இடதுபக்கம் மட்டும்தான் எண்ணினேன் என்றபோது அடிவானத்தின் ஐஸ்வரியம் நிறைந்த அவளின் புன்னகையில் நின்று விடாமல் மாடம்பி சொன்ன மரங்களைப் பற்றிய குறிப்புகளை அவளிடம் கதைகதையாக சொல்லிக்கொண்டிருந்தேன். நேற்று மாமரத்தின் தலையாட்டல் அமைதியான நீரின் மேற்பரப்பில் மென்மையான காற்று வீசும்போது ஏற்றபடும் அதிர்வைப்போல் இருந்தது என்றேன். நானும் அவளும் அந்த மாமரச் செடியின் அப்பா அம்மா என மாடம்பி சொன்னதைச் சொன்னபோது அவளின் முகபாவனையும் சிரிப்பும் கறந்த பாலின் பரிசுத்தம் போல் இருந்தது. அவள் விடுதியை ஒட்டிய சாலையில் பெரும் போக்குவரத்தெல்லாம் கிடையாது. காலணியின் பின் பக்கமாக வந்து ஒற்றைச் சாலையை அடைந்து விட்டால் அது நீண்டுகிடக்கும். இரண்டு பக்கமும் அழகழகான பெரும் மரங்கள் உண்டு. அந்த சாலை பிரதானச் சாலையோடு இணையும் முனையில் ஒரு பூங்காவும் இருந்தது. ஒன்றிரண்டு முறை அந்த ஒற்றைச்சாலையில் நானும் அவளும் விடுதி வரை நடந்துகொண்டே  பேசியபடி போயிருக்கிறோம். மாடம்பியின் பராமரிப்பிலுள்ள தோட்டத்தில் மாமரம் முளைத்தப்பிறகே அந்த ஒற்றைச்சாலையின் மரங்கள் மீதான ஈர்ப்பும் ரசிப்பும் இருவருக்குள்ளேயும் மிகுந்திருந்தது. இந்த மரங்களை எல்லாம் மிகப்பெரிய அன்பானவர்களால்தான் நட்டு வைத்திருக்க முடியும் என்றவள் மரம் இன்னொரு மரத்தோடு பேசுமா என அவளின் வலப்பக்கம் நடந்துகொண்டிருந்த என்னிடம் கேட்டாள்.

      பேசிக்கொள்ளும் காதல் செய்யும் என்றபோது அவள் பட்டென ‘ஆனால் ஏமாற்றாது’ என்றபடி அமைதியாக நடந்தவள் பின்னர்  என்னை நம்ம மரம் பாக்க எப்போ கூட்டிட்டு போவே எனக்கு அதைப் பார்க்க வேண்டும். எனக்கு இப்போது கனவுகளில் உன்னோடு அந்த மரமும் வருகிறது. நேற்று அதிகாலை கனவில் மாமரத்தை என் மடியில் கிடத்தி அதற்குப் பூச்சூடினேன் என்றவள் என்னை அழைத்துப் போகவில்லை என்றால் நான் தனியாக போய்விடுவேன். உன் மாடம்பியைக் கண்டு எனக்கொன்றும் பயமில்லை பெரிய வளர்ப்பு தந்தையாம்…. அம்மாவை பார்க்கவிடாமல் செய்வதுதான் நியாயமா என்றாள். நாம் விரைவில்  போகலாம் என்றேன். பின்னர் ஒரு மாலைப் பொழுதில் விடுதியருகே வைத்து நீயாவது போய் பார்த்து வா என்றபடி உன் பெயரை எத்தனை முறைச் சொல்வாயோ அத்தனை முறையும் என் பெயரையும் சொல்ல வேண்டும் என்றாள்.

      இம்முறை பயணம் என்னை தவியாய் தவிக்க வைத்திருந்தது. என் தவிப்பின் விளைவே பயணத்தில் வலப்பக்க மாமரங்களை எண்ணும் திட்டத்தைக் தொலைத்துப் போட்டுவி;ட்டது. அந்த தோட்டத்தில் எனக்காக மாமரம் இருக்கிறது. அது என்னை தேடுகிறது என்பதால் அதைப் பார்க்கும் ஆவலும் தவிப்புமாகித் துடித்துக் கிடந்தது மனம். பஸ்சில் ஏறி அமர்ந்த தருணத்தில் இருந்து ஒரு நூறு முறைக்கு மேல் எங்கள் மாஞ்செடியருகே போய் வந்துகொண்டேயிருந்தேன். இந்த பஸ்சுக்கு சிறகு முளைத்துப் பறந்து போய்விட்டால் கொள்ளாம் போல் தோன்றியது.  ஆனாலும் இரண்டுமணிநேர யாத்திரையில் நான் அவள் மரமென கனவும் கனவில்லாததுமான ஒரு சஞ்சரிப்பில் உழலும் உலகமாய் இருந்த பயணத்தை ஒரு ஞான நிலையென்று கூச்சமின்றி சொல்லிவிடுவேன். எனக்கென்னமோ அன்றைக்கு முன்னிலும் ஒரு அரை அடி கூடுதலாக வளர்ந்திருந்த அந்த மரத்தை என் மார்போடு அணைத்துக் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. மாடம்பி விலகிய ஒரு தருணத்தில் அன்று அதை நான் செய்தும் விட்டேன். அந்த மரத்தின் இலையில் இருந்து வெளிப்பட்ட அதன் மூச்சுக் காற்று என் சர்Pரத்தை குளுமைப்படுத்தியது.

      மறுநாள் இரு பக்கமும் மரங்கள் அடர்ந்த அவள் விடுதி உள்ள அந்த ஒற்றைச் சாலையில் நடந்து போகும் போது நேற்றைய நிகழ்வின் விவரிப்பில் அவள் கண்கள் கலங்கிப் போனாள். பின்னர் அவளின் பேச்சு இவ்வாறாக இருந்தது. 

      நான் மே மாததத்துக்குப் பிறகு ஊருக்குப் போய் விடுவேன். மேற்படிப்புக் குறித்து உறுதி இல்லை ஊருக்குப் போறதுக்கு முன்னால் அந்த மரக்கன்றை பிடுங்கிக் கொண்டு போய் என் வீட்டில் உன் நினைவாக நான் நட்டு வைத்துக் கொள்கிறேன். அதற்கு முன்பு எனக்கு உடனே அதை பார்க்க வேண்டும் என்றாள். நான் பதிலாக ஏதும் பேசிக் கொள்ளவில்லை இதன் பிறகு நாங்கள் பதினைந்து தினங்களுக்குப் பிறகு மாடம்பியிடம் சொல்லிக் கொள்ளாமலே ஒரு காலை பயணமானோம். விடுமுறை நாள் என்பதால் பஸ்ஸில் நிறைய கூட்டமில்லையென்றாலும் என் முன் இருக்கையில் அமர்ந்திருந்தாள் இடையிடையே வாய்க்கும் போது பேசிக் கொண்டோம். பேச்சு மரங்களைப் பற்றியதாக இருந்தது. முன்னர் எங்கள் பேச்சு பொதுவாக கவிதை பற்றியதாக இருக்கும் இப்போது கவிதையை விட மரம் சிறப்பானது என்ற முடிவுக்கு திட்டமிடுதலின்றியே வந்துவிட்டோம். எங்கள் இருவரையும் அன்று ஒரு சேர பார்த்த போது மாடம்பி சின்ன ஆச்சரிய முகபாவனையைத் தவிர்த்து வேறொன்றையும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவள் இப்பதான் மாமரக் கன்றை முதன் முதலாகப் பார்க்கிறாள். கிட்டத்தட்ட அவள் மார்பு உயரத்துக்கு வளர்ந்திருந்தது. நுனி இலையில் செல்லமாக ஒரு முத்தமிட்டாள். நானும் பின்னர் அவ்வாறு செய்தேன். கொஞ்சம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த மாடம்பி என்னை கவனித்துக் கொண்டிருப்பது நன்றாவே தெரிந்தது அவளுக்கு மாங்கன்றை விட்டு விலக மனசில்லை. இலைகளின் வாசத்தை நாசியில் உறிஞ்சி உள்ளிளுத்து சுவாசித்தாள். சுவாசிப்பின் ரசிப்பில் இமைமூடிய அவளின் முகத்தோற்றம் இப்போதும் அந்த பெருமரத்தின் அடிப்பாகத்தில் வியாபித்துக் கிடக்கிறது. என் பெயரை அவளும் அவள் பெயரை நானுமாக மரக்கன்றிடம் சொல்லி விளையாடிக்கொண்டிருந்தோம். இடையில் மாடம்பித் தந்த கருப்பட்டிச் சாயா அத்துணை இதமானதாக இருந்தது. இரண்டரை பஸ்சுக்கு பயணப்பட ஆயத்தமான போது அவள் லேசாக அழுதுகொண்டிருந்தாள். பிடுங்கிக் கொண்டுபோகும் முயற்ச்சி உசிதமானது அல்ல அது கன்றை அழித்துவிடும் என மாடம்பி உறுதியாகச் சொல்லிவிட்டார். இரண்டரை பஸ் அன்று புறப்படும் தருணத்திலேயே ஓடி வந்து ஏற முடிந்தது. அன்று அவள் மாங்கன்றை விட்டுப் பிரிய மனமின்றி கொஞ்சிக் கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் மார்போடு அணைத்தும் பிடித்திருந்தாள். என்ன காரணமோ தெரியவில்லை ஆண்களை பொத்தாம் பொதுவாகத் திட்டினாள். பஸ்ஸிலும் முன் இருக்கையிலிருந்து திரும்பியவளின் கண்கள் நீர் கோர்த்துச் சிவந்திருந்தது. அவள் எதுவும் என்னிடம் பேசிக் கொள்ளவில்லை. அவளுக்கு முன்னமே அந்த பேருந்திலிருந்து நான் இறங்கிக் கொள்ளவேண்டிய இடைவெளியில் என் ஊர் இருந்தது. நிறுத்தத்திற்கு சற்று முன்னர் திரும்பி என்னிடம் பேசினாள். மரத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள் அது ஒரு பெண் மரம.; நான். என்றாள். பேருந்து மெல்ல ஒதுங்கி நின்றது. சில மதங்களுக்குப் பிறகான ஒரு நண்பகல் என்று நினைக்கிறேன். அவள் அப்பாவும் அம்மாவும் வந்து அவ்வாறாக அவள் விடுதியில் இருந்து விடைபெற்றுப் போனாள். இதற்கு முந்திய பகலில் நானும் அவளும் ஒன்றாய் அமர்ந்து ஒரு பேக்கரியில் குளிர்பானம் பருகியிருந்தோம். அவ்வளவுதான்.

      நான் முன்னமே சொன்னேனே இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதென்று. இக்காலங்களில் ஐம்பது அறுபது முறைக்கு மேல் நான் போய் வந்துவிட்டேன். என் மரக்கன்று இப்போது பெரிய மாமரம். பெரிய மாமரம் என்றால் ரொம்பப் பெரியது. பச்சை மாடம் தரித்த பிரம்மாண்டம். ஒருபாடு கிளைகளோடு நான் கட்டிப்பிடத்துக் கொள்ளும் அளவுக்கு அடிப்பாகம் உடையது. என் கட்டிப்பிடித்தலின் அளவு மாறி மாறிப் இப்போது நான் கைகளை கோர்த்துப் பிடிக்கும் அளவிற்கு வந்திருக்கிறது. கைகோர்த்துக் கட்டிப்பிடிக்க முடியாத அளவிற்கு இன்னும் வலுதாகக் கூடும். பத்து பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை நண்பரோடு போய்ச் சேரும்போது இருட்டிவிட்டது. அன்று மாடம்பியையும் பார்க்க முடியவில்லை. ஒன்றும் தெரியாத இருட்டு. ஆனாலும் அந்த திசைநோக்கி வாயருகே கரம் குவித்து அவள் பெயரைச் சொல்லிக் கத்தினேன். நண்பர் என்னை பரிகசித்துக் கொண்டிருக்கும் போதே மாம்பூவின் வாசனை நிரம்பிய காற்று என்னைத் தழுவிக் கொண்டது. இருட்டிலும் என் மாமரம் தலையசைத்திருப்பதை உணர்ந்து உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பிலிருந்து விடுபட நீண்ட நேரமானது. அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்திருக்கிறேன். மணிக்கணக்கில் பைத்தியக்காரனைப் போல நின்று மரத்தோடு பேசியிருக்கிறேன். கட்டிப்பிடித்து முத்தமிட்டிருக்கிறேன். அதன் வாசத்தை நாசியில் இழுத்து உறிஞ்சி சுவாசித்திருக்கிறேன். மாடம்பி கதை கதையாக சொல்லுவார். கதைகளெல்லாம் மாமரம் பற்றியதுதான். முதன்முதலாக ஐந்தாவது வருடத்தில் பூத்ததாம் மொத்தம் நாற்பத்தி ஏழு காய்கள் பறித்தாராம். அவர் மரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கும் விதம், பின்னர் அதன் கிளையொன்றில் வாக்காய் படுத்திருந்த விதம், மருந்து, உணவு இத்தியிலை பற்றிப்பிடித்து விடாத ஆத்மார்த்தமான கவனிப்பு என மாடம்பி மாமரத்தின் கதை சொல்லிய விதம் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். வயதில் தளர்ந்துவிட்ட மாடம்பி பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு முறை ‘அந்த பிள்ளைய அதுக்கு பொறவு எப்பமாவது பாத்தியாடே’ என மெல்லக் கேட்ட போது இல்லை என்றதும்    ‘காலம் இரக்கம்மில்லாததுடே’ என்றவர் ‘நானும் பாக்கேன் எப்பவாச்சும் இந்த மரத்த தேடி வந்திரமாட்டாளன்னு’. அன்று பேசி விடைபெறும் போது மாடம்பி மறுத்த போதும் பிடிவாதாமாக கொஞ்சம் பணம் கொடுத்தேன்.

      ‘இந்த மரத்த எப்பவாச்சியும் யாரும் வெட்டிடக் கூடாது’…… என்றேன் ‘எனக்க சீவன் கெடக்குற வரைக்கும் எவனையும் வெட்ட விடமாட்டேன்…..’ என தீர்க்கமாகச் சொன்னார். மாடம்பியைப் பார்த்து ஏழுவருடங்களாகிவிட்டது. மாடம்பி இறந்து போய்விட்டார் என்பதும் நம்பகமான தகவலாய் இல்லை.

மொட்டைமாடி நிலவிரவில் நான் தனித்திருந்த போது என்னைக் கொஞ்சம் கருணையாகப் பார்த்துக் கொண்டே பட்டென கேட்டாள். ‘லூசு… என்ன பாத்துட்டு இருக்கே…… மாமரத்துட்ட எப்போ கூட்டிட்டு போவ….. உன் பேரச் சொன்னா தலையாட்டுத அதிசயத்தப் பாக்கணும்….’

      மறந்திருப்பாள் என்றுதான் நினைத்திருந்தேன் இப்போது விடாது நச்சரிக்கிறாள். இவளிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஏதோ ஒரு உந்துதலில் தலையாட்டும் மாமரம் பற்றி சின்னக் குறிப்பை மட்டும் சொன்னதிலிருந்து அவளுக்கு மாமரம் பார்க்கும் ஆவல் உள்ளுக்குள் உருப்பெற்றுவிட்டது. இனி மறந்துவிடுவாளென தட்டிக்கழிக்கவெல்லாம் முடியுமா என்பதும் தெரியவில்லை குழந்தையைப்போல குதூகலிக்கும் அவளை அழைத்துக் கொண்டு மறுவாரம் மாமரம் பார்க்கப் போவதாக முடிவு செய்து கொண்டேன்.

      ‘மவனே….. மாமரம் மட்டும் உன் பேர் சொன்னதும் தலையாட்டலே…. உனக்கு டூப்பு சங்கரன்னு பேரு வச்சிருவேன்….’  எனக்கு கொஞ்சம் பயமும் இருந்தது. ஒருவேளை இவள் என் பெயர் சொல்லி தலையாட்டவில்லை என்றால் போடா லூசு என்பதற்குப் பதிலாக டூப்பு சங்கரன் கொஞ்சம் பரவாயில்லை தானே

      பயணத்துக்கு அவள் கொஞ்சம் உணவு பதார்த்தங்கள் தயார் செய்து வைத்திருந்தாள். கிளம்பிய தயாரெடுப்புகள் எல்லாம் ஒரு நாள் இன்ப சுற்றுலாவுக்குரிய அலங்காரங்களைக் கொண்டிருந்தது. அதிகாலையில் கிளம்பினோம் மாமரம் பார்த்துவிட்டு அங்கு அருகே ஒரு அருவியில் குளிப்பதாகவும் உத்தேசம்.

      ‘இப்பவாவது உண்மையைச் சொல்லு லூசு…. மாமரம் தலையாட்டுமா’

             ‘அவசரப்படாதே…… வா…..பார்க்கலாம்’

      அவள் லூசோடு சேர்த்து இப்போது டூப்புசங்கரனையும் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். கார் பயணம் என்பதால் ஒன்றேகால் மணிநேரத்தில் வந்துவிட்டோம். மே மாதத்தில் பார்த்ததைவிட மாமரம் வனப்பாக நின்றிருந்தது பிரமாண்டமான அதன் அற்புதம் பார்த்த கணத்திலேயே என்னைக் குளிர்வித்துக் கொண்டிருக்க அவள் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

      சொல்ட்டா என்றவளிடம் சொல்லு என்றேன் சொன்னாள். மாமரத்திடம் ஒரு அசைவும் இல்லை கோபமாக எனைப் பார்த்துக் கொண்டே ‘லூசு என்ன பைத்தியக்காரின்னு நினைச்சியா….’ கோபப்பட்டுவிட்டாள். அவளை சமாதானப்படுத்தி நான் சொல்கிறேன் பார் என்றேன். நான் சொன்னேன் மாமரம் அவ்வளவு அற்புதமான அசைவை வெளிப்படுத்தியது. அசைவென்றால் அசைவு வாரி அணைக்க வா என்று அழைப்பது போல். நம்பிக்கையும் நம்பிக்கையற்றும் வியப்பாகப் பார்த்தவள் கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

      நான் சொன்னா ஏன் அசையல….

ஒரு தடவைக் கூட சொல்லிப்பாரு….

அவள் தொடர்ச்சியாக ஆறு ஏழு முறை சொன்னாள் எந்த அசைவும் மாமரம் வெளிப்படுத்தவில்லை என்னை இன்னும் ஒரு முறை சொல்லச் சொன்னாள். நான் நிமிர்ந்து நின்று மரவாசனையை இழுத்து சுவாசித்தப்படி மாமரம் பார்த்துச் சொன்னேன். என்னை வாரி அணைக்கும் வாஞ்சையோடு மரம் அசைந்தது. அவள் கலங்கிப்போனாள். கொஞ்சநேரம் நின்றிருந்தவள் என்னைப்போல முகபாவனை அமைத்துக் கொண்டு நிமிர்ந்து மரம் பார்த்து சொன்னாள். அசைவில்லை. நான் அவளிடம் மெல்லச் சொன்னேன்;. ‘என் பெயரோடு ‘குயின்;’ என சேர்த்துச் சொல்லிப்பார். அவள் அவ்வாறே சொன்னாள். மாமரம் ஆடியது. அது ஒரு கொண்டாட்டமான ஆட்டம் போல இருந்தது. ‘படச்ச ரப்பே…. இது என்ன அதிசயம்….’ என வியந்தவளின் புருவம் அத்துணை நேர்த்தியாய் வடிவம் கொண்டிருந்து. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்து வந்தவள் நெருக்கத்தில் வந்து கேட்டாள் டேய் லூசு ‘குயின்’ என்றால் யார்.

இனி நான் அவளுக்கு ஒரு கதை சொல்லவேண்டும்

Friday 7 July 2023

பரிசுகள் அன்பை சுமக்கின்றன

எனது சேகரத்தில் நிறைய தஸ்பீகு மாலைகள் இருக்கிறது.நான் தொடர்சியாக அதனை பயன்படுத்துபவனும் கூட இப்போது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எனது கையின் விரல்களினிடையே உருளும் தஸ்பீகு மாலையின் கதை இது.

2018 ஐனவரியில் ஒரு நாள்(தேதி பத்தாக இருக்கலாம்)மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் நிகழ்சி முடித்துவிட்டு நண்பர் முகம்மது சப்ரி நல்ல சொகுசான காரில் என்னையும் நண்பர் ஹசீனையும் அண்ணன் எஸ்எல்எம் அவர்களையும் ஓட்டமாவடிக்கு Slm Hanifa அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.அவரது வீடு அப்படியே எனது குடும்ப வீட்டை அச்சு அசலாக நினைவூட்டியது. நல்ல விருந்து செய்து சிறப்பித்த அண்ணன் எஸ்எல்எம் வீட்டில் தங்கிய அந்த இரவில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கு அங்கிருந்து கண்டிக்கு புறப்படும் போது அவர் எனக்குப் பரிசாக தந்த தஸ்பீகு மாலை இது. KOKULU TESBIH TURK MALI என வாசகம் பொறிக்கப்பட்ட சிறிய பெட்டியில் அது அழகாக சுருண்டிருந்தது.
அவர் மேலும் சில பதார்த்தங்கள் பரிசாகத்  தந்தார் ஆனாலும் இந்த தஸ்பீகு மாலையில் அவரின் நினைவுகளும் தினந்தோறும் எனக்குள் உருளுகிறது. இந்தநொடியிலும் அதனை நான் முகர்ந்துப் பார்க்கிறேன் அதன் வாசனை இப்போதும் மாறவில்லை. பரிசுகள் பெரும்பாலும் அலங்காரங்களாக வீட்டின் காட்சிப் பெட்டியில் அமர்ந்து கொள்கின்றன.
அபூர்வமாகத்தான் அது கைகளில் உருளும்படியாக இருக்கிறது.நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வதுண்டு சின்னஞ்சிறிய பொருட்களில் பெருங்கதைகள் இருக்கிறதென்று. நீங்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கிக் கொள்ளுங்கள்.பரிசுகள் அன்பை சுமந்துகொண்டே நம்மோடு பயணிக்கும்.

Wednesday 5 July 2023

என்னுள் ஊர்ந்த அந்த மூன்று கதை- ஹனிஸ் முகம்மத்



என்னுள் ஊர்ந்த அந்த மூன்று கதை
********

பலாமரம் நிற்கும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான் என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து.
சிறுகதையாளர் மீரான் மைதீன் அவர்களின் படைப்பான “பலாமரம் நிற்கும் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறான்” என்ற சிறுகதை தொகுப்பில் ஏழு சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. அச் சிறுகதைகளில் உள்ளம் கவர்ந்த, என்னுள் வியப்பை ஊற்றிய, என் மனதினுள் ஆச்சீரிய தீயை எரியவிட்ட இயற்கையோடும், ஜடப்பொருட்களோடும் அந்த மூன்று சிறுகதைகள் என்னை மிகவும் ஆழமாக கவர்ந்தும் பாதித்துமிருந்தது. இயற்கையும், சமூகத்தையும் நேசிக்கும் ஒரு மனிதனால்தான் இப்படியெல்லாம் எழுதமுடியும். அதுவும் ஒரு எழுத்தாளன்தான் இப்படி எந்த தங்கு தடையுமின்றி கற்பனை உலகத்தை நிஜத்தில் கொண்டு வர முடியும். அது கற்பனையென்றும் கூறமுடியாது, ஒரு சராசரி மனிதன் சாதாரணமாக நினைத்துக் கொண்டு கடந்து போகும் அசாதாரண சூழல் அது. ஆசார அசாதாரண பொருள் அது. இந்த வித்தியாசமான பார்வை தான் ஒரு. சாதா மனிதனையும் ஒரு எழுத்தாளனயையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
“வீடு என்பது வெறும் மண்ணும் கல்லும் மரத்தாலுமானது அல்ல, ரத்தமும் சதையும் நரம்புகளாலுமான துடிப்புள்ள ஒரு சரீரத்தை போன்றது, வீடுகளோடு நம்மால் பேச இயலும் ஆனால் துரதிருஷ்டவசமாக யாரும் பேசுவதில்லை, நம்மோடு பேசாத நொம்பலம் வீடுகளுக்கு உண்டு”
புத்தகத்தின் முதல் கதையான பலாமரம் நிற்கும் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறான் என்ற முதல் கதை எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது, நாம் வசிக்கும் இடங்களை, தனது சுற்றுச்சூழலை, தன்னோடு சேர்ந்து வாழும் ஒட்டுண்ணி உயிர்களை எப்படி ஒருவனால் இந்த அளவு நேசிக்க முடியும். பணத்தை செலவழித்து கல்லையும் மண்ணையும் கொட்டி சீமெந்தினால் மெழுகு வார்க்கப்பட்ட அந்த வீட்டிற்கு உயிர் உள்ளது என்று எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்ததுண்டா? நம்மைச் சுற்றியுள்ள எத்தனையோ ஜடப்பொருட்கள் நம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றது, ஆனால் நாம் அவைகளை செவிமடுக்க தயாராக வில்லை என்பதை இக்கதை உணர்த்துகின்றது. நமது வாழ்நாளில் சிந்திய மொத்த வியர்வை துளிகளால் உருவான அந்த வீடு நம்மை நேசிக்கின்றது, நம்மை அரவணைக்கின்றது, நம்மோடு பேச எத்தனிக்கிறது, நம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றது, ஆனால் நாமோ அந்த வாழ்நாள் முழுவதும் சிந்திய அந்த வேர்வைத்துளிகள் காய்ந்தவுடன், நாம் அதை கவனிப்பாரற்று விட்டுவிடுகிறோம். அந்த வீட்டிற்கும் ஒரு மனது இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் கடந்து போகிறோம்.
“அவன் தன்னிடமிருந்த கருப்புக் காரை விற்பதைத் தவிர வேறு வழியற்று இருந்தான், அதில் ஒரு துளியும் அவனுக்கு விருப்பமில்லை, அவனை பார்த்துக் கொண்டே மனைவி சொன்னாள், ‘எல்லாவற்றையும் உயிருள்ளதாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அது பைத்தினக்காரதனமாக போய்விடும்’
பைத்தியக்காரத்தனங்களும் சிலநேரங்களில் அழகாகத்தான் இருக்கின்றது”.
மற்றுமொரு கதையான தங்க முலாம் பூசப்பட்ட இரண்டு சிறகுகள், இக்கதையில் வரும் குறிப்பிட்ட பகுதியானது நமது வாழ்க்கையில் நாம் என்றும் தேடி நிற்கும் ஒன்றை உணர்த்தி நிற்கின்றது. நமது ஆழ்மனம் இன்பத்திலோ, துன்பத்திலோ நாம் எப்போதும் ஒரு துணையைத் தேடிக் கொண்டிருக்கும், அது நமக்கு பக்கபலமாக இருக்கும் என்றால் நாம் கடந்து வந்த எல்லாவற்றையும் காற்றில் கரைந்து போகும் ஒரு உணர்வை நாம் உணர்ந்து கொள்வோம்.
“நீ நன்றாக ம்… கொட்டுகிறாய். இந்த ம்.. உரையாடலில் முக்கியமானது. நல்ல ‘ம்’ கள் இதயத்திலிருந்து எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுவிடும். நான் இந்த ம்… களுக்காய் ஏங்கிய நாட்கள் உண்டு”.
“…ம்…”
“உன்னுடைய ‘ம்’ என்னை பேசத்தூண்டுகிறது, மற்றவர்களின் ‘ம்’ மைப்போல் இல்லாமல் உன் ‘ம்’ ஈர்ப்புடையதாக இருக்கிறது. ஆகவே நான் பேச வேண்டாமென நினைக்கிறேன்”.
(தங்க முலாம் பூசப்பட்ட சிறகுகள் சிறுகதையிலிருந்து )
எவ்வளவு நிதர்சனமான உண்மைகள் இந்த வசனங்கள். நம்மை பிரச்சினைகளும், சிக்கல்களும் பூதங்களாகவும், சாத்தான்களாகவும் சூழப்பட்டு, சூறாவளியாக சுழன்று அடிக்கும்போது நாம் தனிமையில் வேர்கள் வாடிக்கொண்டிருக்கும் போது ஒரு துளி நீரின் ஏக்கத்துக்காக, நமது வலியின் ரணங்களை விதைப்பதற்கு ஒரு வகையான ஈரமுள்ள ஒரு மனித மனங்களை நாம் தேடுவோம். அந்த மனம் ஒரு தரிசு நிலமாக இருந்தாலும் கூட, நமது பபிரச்சினைகளை கேட்டு ‘ம்’ என்று பொடுபோக்காக கொட்டு போடுவதாக இருந்தாலும் பரவாயில்லை, நமது வலிகளும் சுமைகளும் ஒரு கணம் பஞ்சாக மாறி காற்றில் மிதந்து போவது போல் நமக்கு தோன்றும். நம்மினுள் சிக்கல்களின் வார்த்தைகள் சிக்கி தவிக்கும்போது தான், அந்த ‘ம்’ என்ற ஒற்றைச் சொல்லின் தேடலையும், அதன் ஏக்கத்தையும் நாம் அறிந்து கொள்வோம், அந்த ‘ம்…’ என்ற சொல் எங்கேயும் இருந்து கேட்கலாம், நம் துணைகளிடமிருந்து, நமது நண்பர்களிடமிருந்து, தமது உற்றார்களிடமிருந்து, ஏன் ஒரு தெரு செடி, கொடி மரங்களிடமிருந்து அல்லது ஒரு யாசகனமிடமிருந்தாவது அந்த ‘ம்…’ என்ற சொல் நமக்கு ஒரு வரத்தை தரலாம்.
மூன்றாவது கதையான “மாமரத்தின் அப்பா அம்மா மற்றும் வளர்ப்பு தந்தையின் கதை” தலைப்பே கதையை வாசிக்கும்போது ஒரு கருவை என்னுள் ஊற்றினாலும், கதையின் நுழைந்த பிறகுதான் எனது எண்ணப்பாடு பிழையானது என்று உணர்த்தியது. ஒரு மனிதனின் தாய், தந்தை மற்றும் வளர்ப்பு தந்தையானாலும், அது ஒரு மனிதனாக தானே இருக்கும். ஒரு மரத்தின் தாய் தந்தையும் மற்றும் வளர்ப்புத் தந்தையும் ஒரு மரமாக தானே இருக்க வேண்டும். ஆனால் இங்கே, ஒரு மரம் இரு மனிதர்களால் பிரசவிக்கப்பட்டு ஒரு தந்தையினால் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. தன்னால் பிரசவிக்கப்பட்ட அந்தக் குழந்தை. எப்படி தன் பெற்றோர்களுக்கு இசைவாக்கம் அடையுமோ! அதே மாதிரியான ஒரு தோற்றப்பாடு இந்த மரம் அதன் பெற்றோருக்கு கொடுக்கிறது.
நாம் எல்லோரும் இயற்கையை நேசிக்க தொடங்கி இருந்தால், நாம் இந்த இயந்திர வாழ்க்கைக்கு அகப்பட்டு, சிக்கிச் சீரழிந்து இருக்க மாட்டோம் என்று என்னுள் உணர்த்தியது இந்தக் கதை. வேடிக்கை என்னவென்றால், நாம் நமக்கு மட்டுமே உயிர் உள்ளது என்ற எண்ணப்பாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
“இரண்டுநாள் பிறையை தரையில் நட்டு வைத்தது போல பேரழகு முறையாக மெல்ல எழுந்து வந்து இருந்தது. “உன் பேர அதுட்ட சொல்லு.. அதுக்கு கேட்கும் என்றார் மாடம்பி, கேட்குமா என்றேன் மறுபடியும். கேட்கும் அது ஒரு உயிர் என்றார். என் பெயரை மெல்லச் சொன்ன போது முளை மண் புழுவைப்போல மெலிதாக அசைந்தது.
மாமரம் ஒரு அடி உயரத்திற்கு வந்துவிட்டது. வேண்டுமென்றே தொண்டயை இறுக்கி குரல் மாற்றி என் பெயரை மெதுவாகச் சொன்னேன். செடி மெல்ல அசைந்தது. மாடம்பி பின்னால் நின்று கவனித்தபடி “எப்படி மாற்றிச் சொன்னாலும் உம் பேருதான் அதுக்கு தனியா தெரியுதுடே”. அவளின் பெயரையும் சொன்னேன். செடி அவ்வாறே செல்லமாய் அசைந்தது. மாடம்பி சிரித்தபடி. கொள்ளாம்புடே நீயும் அவளும் இந்த மாமரத்துக்கு அப்பனும் அம்மையுமாக்கும் அதான்”. நான் மாடம்பியிகம் கேட்டேன் “அப்போ நீரு”. நான் வளர்ப்புத் தந்தை.

Monday 3 July 2023

கவர்னர் பெத்தா -சிறுகதை (1998) மீரான் மைதீன்


‘அஸ்ஸலாமு அலைக்கும். இன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் தமிழக கவர்னர் மாண்புமிகு பாத்திமா பீவி அவர்கள் நம்முடைய தர்ஹாவுக்கு வருகைதர இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோரும் வந்து சிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்’.

சுபுஹ் தொழுகைக்குப் பிறகு விடிந்து கொண்டிருந்த அதிகாலைப் பொழுதில் தர்ஹா ரேடியோவிலிருந்து காலைக் காற்றில் கலந்து வந்த அறிவிப்பை எல்லோரும் கேட்டார்கள். தொழுகைப் பாயிலிருந்த பீர்மா பெத்தாவுக்கு இருப்பு வரவில்லை. உடனடியாக தர்ஹாவுக்குப் போகவேண்டும் என்ற தவிப்பும் துடிப்பும் அவளின் மனம் முழுவதும் பரவிக் கிடந்தது. பெரையில் கிடந்த களக்கம்பு ஏணியைத் தூக்கி சாய்த்து வைத்து மெல்ல தட்டுக்கு ஏறிவந்து கிழக்குப்பக்கம் சாயம்போன கலர் சேலையைப் போல ஒரு தினுசாய் செவந்து கிடந்த ஆகாயத்தைப் பார்த்தாள். ஆகாயத்தைத் தொடுவது போலவே நின்ற தர்ஹா மினாரா அவளின் கண்களுக்குள் வந்தது. அலங்கரிக்கப்பட்டிருந்த மினாரா உச்சியில் கொடி பறந்து கொண்டிருந்தது. தெருவைப் பார்த்தாள். யாருமில்லை. பீர்மா பெத்தாவுக்கு கோபம் கோபமாக வந்தது.

“சே.. என்ன ஜென்மங்கோ.. கவர்னர் வாராவோ.. நேரத்த முழிப்போம்னு பாக்குதுவளா.. லெட்சணம் கெட்டதுவோ… சே.. சே..”

தெருவில் இறங்கி நடந்து விடலாமா? நினைப்பு வந்த உடனே மகனோ அல்லது பேரனோ “எங்களா போற துக்கே.. வயசு காலத்துல ஒரு எடத்துல கெடவராதாளா..?” என்று திட்டுவார்கள். பீர்மா பெத்தாவுக்கு மகனோ பேரனோ பேசுவது கூட கவலை தராது. ஆனால் மருமகள் தமாஷ் அடிப்பாள் என்பதில்தான் தயங்கினாள்.

பத்து நாட்களுக்கு முன்னாலே கவர்னர் தர்ஹாவுக்கு வரப்போகிறார் என்ற செய்தி ஊருக்குள் குசுகுசுக்கப்பட்டாலும் பீர்மா பெத்தாவின் காதுக்கு அது எட்டவில்லை. அமலா கான்வென்ட் ஸ்கூல்டேக்கு பேரனின் இங்கிளீஸ் டிராமா பார்க்கப்போன மறியம் பெத்தா வந்த உடன் பீர்மா பெத்தாவிடம் ஒருபாடு பீத்திவிட்டுச் சொன்னாள்.

“பிள்ளா.. பீர்மா…தர்ஹா ரோட்ல ரோடு போடுதானுவோ பாத்துக்கோ.. உனக்கு என்னமும் தெரியுமா?”

“என்ன நீக்கம்போ எனக்கெங்க தெரியும்”

“உச்செக்கு ஒருபாடு போலீஸ்காரன்மாருவளும் தர்ஹா கிட்ட வந்தானுவளாம்..”

“அந்த களுசாம்பறையோ இங்கே எதுக்கு வந்தானுவோ?”

மறியம்பெத்தா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் பீர்மா பெத்தா எதிர்கேள்வியாகவே கேட்டாள். பீர்மா பெத்தாவிடம் ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என வந்த மறியம் பெத்தாவுக்கு ஏமாற்றமாகிப்போனது. மறியம் பெத்தாவின் முகத்தைப் உற்றுப்பார்த்த பீர்மா பெத்தாவுக்கு அவள் ஏமாந்து போனதை அறிய முடிந்தது. அந்த முகத்தோடு அவளை அனுப்ப பீர்மா விரும்பவில்லை.

“பீர்மாட்ட கேக்கலாம்னு போனேன். அந்து துக்கேக்கு ஒண்ணும் தெரியலே…” என்று வேறுயாரிடமாவது போய் சொல்லுவாள். அது தனது கௌரவத்துக்கு இழுக்காகிவிடும் என்பதை பீர்மா உணர்ந்தவளாய் தாண்டிப்போன மறியத்தைப் பார்த்து “பிள்ளா..மறியம்..நில்லுனா.. எம்பேரன்ட கேப்போம்”. பேரனை அழைத்து பீர்மா கேட்டாள்.

“லே வாப்பா.. தர்ஹாகிட்டே ரோடு போடுதானுவளாமே.. போலீஸ்காரன்மாருவளும் வந்தானுவளாமே.. உள்ளதா..?”

“உள்ளதுதான்..”

“என்னத்துக்குலே..”

“அது… நம்ம தர்ஹாவுக்கு கவர்னர் பாத்திமா பீவி வாராங்களாம்..”

“பாத்துமாயியா… இஸ்லாமானவளா..?”

“பின்னே..” பேரன் தலையாட்டினான்.

பீர்மாவுக்கும் மறியத்துக்கும் முகங்களில் தவழ்ந்த புன்னகை காற்றில் கலந்து, அவர்களின் வயதை ஒத்த அனைவியரின் முகங்களிலும் அடுத்த அரைமணிநேரத்தில் தவழத் தொடங்கியது.

“இதுக்கு முன்னால அவா பெரிய ஜட்ஜியா இருந்தாளாம்… கேரளத்துகாரியாம்..முட்டாக்கும் போட்டுட்டு எப்படி இருக்கா தெரியுமா… பேப்பர்ல போட்டுருக்கானுவோ..”

செய்தூன் பெத்தா வீட்டுத் திண்ணையில் நூறுபீவியும் சேனம்மாவும் விசயங்களோடு அமர்ந்திருந்தனர். சுப்ரமணி அண்ணாச்சியின் அம்மா வடுவாச்சியும் கூட இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்தூன் பெத்தா பேப்பரை கொண்டுவந்து பீர்மாவிடம் கொடுத்தாள். கவர்னர் பற்றிய செய்தியும் போட்டோவும் இருந்தது. எல்லோரும் படத்தை உற்றுப்பார்த்தார்கள். பீர்மாவுக்கு படிக்கத் தெரியாது. மறியத்துக்கும் அப்படித்தான். செய்தூனும் சேனம்மாவும் எழுத்துக் கூட்டிப் படிப்பார்கள். எல்லோரும் முண்டியடித்து அந்த பேப்பர் துண்டை எச்சி ஒழுக உத்துப் பார்த்தனர்.

கவர்னரின் புன்னகையான முகமும் அதிலே கச்சிதமாக இருந்த கண்ணாடியும் கருப்பு வெள்ளை படத்தில் மங்கலாகத் தெரிந்தாலும்கூட பட்டுச்சேலையின் பளபளப்பும், பட்டுச்சேலையின் ஒருபாகம் கவர்னரின் தலையில் முட்டாக்காய் கவிழ்ந்து கம்பீரமாய் கிடக்கும் விதமும் பீர்மாவை சிலிர்க்க வைத்தது. உற்றுப் பார்த்தாள். அவளின் பார்வையில் நிறைய தேடல்கள் இருந்தன. ஸலாம் சொல்லிவிட்டு கவர்னர் பாத்திமா பீவியின் கரங்களைப் பற்றி, “என்னா சொகமா… இருக்கியளா…?” என்று உடனே ஒரு வார்த்தை கேட்கவேண்டும்போல இருந்தது.

ஊரின் அநேக வீடுகளிலும் கவர்னர் புராணம் தொடங்கிவிட்டது. தெருவிலும் கடைப்பக்கத்திலும் குளத்திலும் எல்லா இடங்களிலும் கவர்னர் பற்றி எப்படியாவது ஒரு பேச்சு வந்து விடும், ஒருவரை ஒருவர் எதிர் எதிரே பார்க்கும் போதெல்லாம்.

“இன்னும் எட்டுநாள் பாக்கி..”

“எதுக்கு..?”

“கவர்னர் வரதுக்கு..”

“படச்சவனே, மறந்தேப் போச்சி..”

கசாப்புக்கடை மாஹின் வீடுவீடாகப் போனார்.

“கவர்னர் வர அன்னைக்கு மூணு கிடாய் அறுக்கப் போறேன்..கறி வேணும்னா சொல்லுங்கோ..”

“எனக்கு ரெண்டு கிலோ”, “எனக்கு ஒண்ணு” என வீட்டுக்கு வீடு ஆடர் கூடிக்கொண்டே வந்தது. கசாப்பு மாஹின் திங்கள் சந்தைக்குப் போய் மேலும் மூன்று கிடாய் பிடித்துவந்து தெருவில் அவர் வீட்டு முன்னால் தென்னை மரத்தில் கட்டிப் போட்டிருந்தார்.

சின்னப்பையன்மாரெல்லாம் கிடாயைச் சுற்றி சுற்றி வந்தனர். ஆடுபோல கத்தினார்கள். ஒரு பையன் தென்னஈக்கலை எடுத்து ஐந்தாறு சாத்து சாத்தினான். கிடாய் முன்னங்காலை தூக்கி முட்டுவதற்கு தயாரானது.

“முட்டதுக்கா பாக்கா..ஒன்னைய சங்கரபுங்கரயாக்கி போடுவேன்..” என தூரமாய் ஓடிப்போய் ஒரு கல்லெடுத்து சரியாக எறிந்து விட்டான்.

“ம்மேய்..ம்மேய்..” சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து கசாப்பு மாஹின் பாய்ச்து வந்தார். அவரைக் கண்டதும் பயலுவ நாலா பக்கமும் சிதறி ஓடினார்கள். எதிரே வந்த மஸ்தான் பிள்ளை,

“என்னடே சின்னபுள்ளய வெரட்டுதே..”

“பின்னே அவனுவோ கவர்னர் கிடாய கல்லெடுத்து எறியானுவோ..”

இதன் பிறகு கசாப்பு மாஹின் வீட்டு முன்னால் நின்ற ஆறு கிடாய்களையும் கவர்னர் கிடாய் என்றே ஊரில் எல்லோரும் கூப்பிட்டனர்.

கவர்னர் தர்ஹாவுக்கு வர இன்னும் ஐந்து நாட்களே மிச்சம் உள்ளது. இதற்கிடையில் தெருவில் நின்ற ஐந்தாறு பாடாவதி எலக்ட்ரிக் போஸ்டில் லைட்டு போட்டார்கள். புதிதாகப் போட்ட தெருவிளக்கு வெளிச்சம் ஏலாக்கரை வரை பரவிக்கிடந்தது. அவுசான்பிள்ளை தெருவிளக்கை நிமிர்ந்து பார்த்தபடி,

“நல்ல இருக்கட்டு கவர்னரு.. அவ புண்ணியத்துல லைட்டாவது போட்டானுவளே..”

பையன்மாரெல்லாம் வெளிச்சத்தில் பாட்டொ, இடியாண்டோ விளையாடினார்கள். பொட்டப்புள்ளைகளுவ சைக்கிள் , பாண்டி விளையாடினார்கள். கசாப்பு மாஹின் வீட்டு முன்னால் விழுந்த வெளிச்சத்தில் கவர்னர் கிடாயின் கண்கள் மின்னூட்டாம் பூச்சியைப் போல் மின்னின.

திண்ணையில் அமர்ந்து வெத்திலை தட்டிக் கொண்டிருந்த பீர்மாவுக்கு ஒரு பட்டு கசவு கவுணியும் ஒரு குப்பாயமும் எடுத்தால் கொள்ளாம் போல இருந்தது.

வீட்டுக்குள் போய் பார்த்தாள். ஈஸிச் சேரில் மகன் சாய்ந்து கிடந்தான். கண்கள் மருமகள் இருக்கிறாளா என்று தேடியது. மருமகள் அடுக்களையில் வேலையாக இருந்தாள். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு மகனிடம் மெல்ல கேட்டாள்.

“மௌனே..”

நிமிர்ந்து பார்த்தான்.

“எனக்கொரு பட்டுகசவு வச்ச கவுணியும் சட்டையும் தச்சி தாலே..”

“இப்போ எதுக்கு..”

“எனக்கு வேணும்..”

“பெருநாளுக்குத்தானே எடுத்தோம்.. அதுக்கெடையிலே இப்போ எதுக்கு..”

பீர்மாவுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. மௌனமாக நின்றாள். மகன் அவளின் மூஞ்சியைப் பார்த்தபடி இருந்தான்.

“கவர்னரு.. தர்ஹாவுக்கு வாரால்லா..அதான்..” தயங்கித் தயங்கித் சொல்லி முடிக்கும்போது மருமகள் வந்து விட்டாள்.

“ஆமா கவர்னரு வந்து நேர உங்க கையைப்பிடிச்சித்தான் குலுக்கப் போறாளாக்கும்..”

எல்லோரும் கொல்லெனச் சிரித்தார்கள். பீர்மாவின் முகம் சுண்டிப் போனது. மகன் கண்களில் கண்ணீர் வருமளவுக்கு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். பீர்மாவுக்கு அழுகை வந்து விட்டது.

இரவு முழுவதும் பீர்மா சரியாகத் தூங்கவில்லை. பேப்பரில் பார்த்த கவர்னரின் கருப்புவெள்ளை புகைப்படம் பலமுறை மனதில் வந்து போனது. மருமகள் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப மனதுக்குள் விழுந்து தெறித்தது.

காலையில் தர்ஹா பக்கத்தில் ரோட்டில் அஞ்சாறு ஆர்ச்சுகள் போடப்பட்டிருந்தன. தெருவின் முன்னாலும், ஆர்ச் போடும் வேலை வேகமாக நடந்து கொண்டிருந்தது. வயதானவர்களும் சிறுவர்களும் இளைஞர்களும் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தனர். தர்ஹா பக்கத்தில் ஒன்றிரண்டு வீடுகளில் புதிதாக வெள்ளை அடித்தனர். ஜீப்பில் சில அதிகாரிகள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் பிறகு பள்ளியில் நேச்சையாகக் கொடுத்த பழங்களைத் தின்றுவிட்டு பழத்தொலியை கசாப்பு மாஹினிடம் கொடுத்தார்கள். மாஹின் மொத்தமாக வாங்கி பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு வந்து

வீட்டுக்கு முன்னால் கட்டிப் போட்டிருந்த கவர்னர் கிடாய்களுக்கு போட்டான்.

நாளை காலைதான் கவர்னர் வரப்போகிறார். சாயங்காலமே தர்ஹா ரேடியோ பாடியது. தர்ஹாவில் சீரியல் லைட்டுகள் மின்னி எரிந்தன.

பீர்மா வாசலில் நின்று தெருவைப் பார்த்தாள். தெருவில் கடந்து போன ஆறேழு பேரிடமாவது கேட்டிருப்பாள்.

“காலையில் எத்தனை மணிக்கு வாராவோ?”

“ஒன்பது மணிக்கு”

எட்டுமணிக்காவது தர்ஹாவுக்கு போய்விட வேண்டும். முதல் ஆளாக நிற்க வேண்டும். நினைக்க நினைக்க அவளின் நெஞ்சம் படபடத்தது.

பீர்மா பாய்போட்டு தூங்கப்போகும்போது பத்து மணி இருக்கும். அந்த இரவு அவளுக்கு ரொம்பவும் அவஸ்தையாக இருந்தது. எல்லாம் ஒரு நிமிடத்தில் மாயாஜாலம் போல விடிந்துவிட வேண்டும் என்று விரும்பினாள். தஸ்பீகு மாலையை எடுத்து உருட்டினாள். தூங்கினால் கொள்ளாம் போல இருந்தது. ஆனாலும் எளவு தூக்கம் வரவில்லை.

அஞ்சாறு முறை கோழி கூவி சத்தம் கேட்டது. கிடாய்களின் சத்தம் கேட்டது. கவர்னர் கிடாய்களாகத்தான் இருக்க வேண்டும். சுபுஹ் பாங்கு சத்தம் கேட்டது. பட்டென்று பாயை விட்டு எழுந்தாள்.

தொழுதுவிட்டு வாசல்கதவைத் திறந்து திண்ணைக்கு வந்து தெருவைப் பார்த்தாள். மங்கலான வெளிச்சம். பள்ளி ரேடியோவில் கவர்னர் வருகை குறித்த அறிவிப்பு. தெருவைத் திரும்பிப் பார்த்தாள். கசாப்பு மாஹின் வீட்டு முன்னால் கட்டிப் போட்டிருந்த கவர்னர் கிடாய்களைக் காணவில்லை.

நன்றாக விடிந்தபோது பெருநாளைக்கு எடுத்த பட்டுகசவு கவுனியும், குப்பாயமும் போட்டுக்கொண்டு மறியம்பெத்தா வீட்டுத் திண்ணைக்கு வந்தாள். திண்ணையில் கால்நீட்டி உட்கார்ந்திருந்த மறியம், பீர்மா அவர்வதற்கு சவுரியம் செய்து கொடுத்தாள்.

“சவுக்கு கம்ப போட்டுக் கெட்டி வச்சிருக்கானுவளாம்.. ஒருத்தரும் கிட்டே போவ முடியாதாம்.. சுத்தி ஆபீஸர் மாருவளாத்தான் இருப்பானுவளாம். போலிஸ்மாருவெல்லாம் தோக்கையும் தூக்கிட்டு விடியதுக்கு முன்னால வந்துட்டானுவளாம்… அந்த துக்கயள பாக்கதுக்கே பேடி உண்டாவுது.”

மறியம் சொல்லும்போதே பீர்மா நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.

“ஆருளா சொன்னா..?”

“தொழுதுட்டு போவத்துல… முக்கூட்டு பயலும் கரிசட்டிக்கு பேரனும் பேசிட்டு போனானுவோ… நான் அந்தாக்குல கூப்பிட்டுக் கேட்டேன்..அவ வரதுக்கு ஒன்பதாவுமாம்..பப்பனாபுரம் கோட்டைக்கும் சுசீந்தரம் கோயிலுக்கும் போயிட்டுத்தான் இங்க வாராளாம்”

“கோயிலுக்கு போவாளா..” பீர்மாவுக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

“அவ கவர்னருல்லா..”

பீர்மா மறியத்தின் வெத்திலை பெட்டியை இழுத்து முன்னே வைத்து கொண்டு பேச ஆரம்பித்தபோது அஸ்மா வந்து விட்டாள். தொடர்ந்து கொஞ்ச நேரத்திலெல்லாம் பாக்குப் பெத்தா வந்து விட்டாள். வந்து உடனே புதிய செய்தி சொல்ல வாய் திறந்தாள். அவள் எப்பவும் அப்படித்தான். அவளுக்கு ஏதாவது ஒன்று தெரிந்து விட்டால் யாரிடமாவது சொல்லிவிட வேண்டும். இரவு என்றால் தூங்க மாட்டாள். பகல் என்றால் சாப்பிட மாட்டாள். செய்திகளை ஐந்தாறு செவிகளிலாவது சொன்னால்தான் அவளுக்கு சுகம். பாக்கு பெத்தா நடந்து எதாவது வீட்டுக்குள் போனாலே வினை போவதாகத்தான் பலரும் சொல்வார்கள்.

“பிள்ளா ஒரு விஷயம் தெரியுமளா..?” பாக்கு பெத்தா சொன்னவுடன் எல்லோர் முகங்களும் ஆவலாயின.

“அவோ இங்கிளிஸ்லதான் பேசுவாளாம்.. தமிழ் தெரியாதாம்..”

“பேப்பர்ல தமிழ்லதானே போட்டிருந்தானுவோ..” அஸ்மா மடக்கினாள்.

“என்ன எளவோம்மா இங்கிலிஸ்லதான் பேசுவாளாம். எனக்க மருமவன் சொன்னாரு”

பாக்குபெத்தா கொண்டுவந்த விசயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது பாக்கு பெத்தாவுக்கு சே என்பது போல ஆயிப்போனது.

எட்டரை மணிக்கு தெருவிறங்கி நடந்தார்கள். பீர்மாதான் முன்னே நடந்தாள். தெரு திருப்பில் பையன்கள் நின்று பரிகாசித்தனர். மெயின் ரோட்டிலிருந்து தர்ஹா வரையிலும் இரண்டு பக்கமும் வரிசையாக போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர்.

மறியம் பயந்து போனாள்.

“இந்த பாளறுவானுவளே.. பாத்தாலே கொடலு கலங்குதள்ளா..”

“பேசாம வாளா..”

சேனம்மா தைரியம் சொல்லி நடத்தினாள்.

தர்ஹாவைச் சுற்றிலும் முன்பக்கமும் பாதைபோன்று அமைத்து மற்ற இடங்களிலெல்லாம் சவுக்கு கம்பால் அடைத்துக் கட்டி விட்டிருந்தனர். பீர்மா முன்னால் வேகமாக நடந்து வாசல் பக்கமாய் போய் வாக்கான அந்த இடத்தில் வசமாக நின்று கொண்டாள். நேரம் ஆக ஆக பீர்மா பெத்தாவின் பின்னாலும் பக்கவாட்டிலுமாக நிறைய பெண்கள் வந்து குவிந்து விட்டார்கள். ஆண்கள் எதிர்ப்பக்கம் நின்றார்கள்.

காலை வெயில் பீர்மாவின் மூஞ்சியில் பளிச்சென்று விழுந்தது. ஆனாலும் அவள் விலகிக் கொள்ளாமல் முட்டாக்கை இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள். முட்டாக்கு துணியின் விளிம்பிலிருந்து பட்டுக்கசவில் வெயில் பட்டு மின்னியது.

ஒரே பரபரப்பாக இருந்தது. உய்ங்…உய்ங்…என் கார்கள் வருவதும் போவதும், அதிகாரிகளும், பெரிய போலீஸ்மார்களும் சரட்டுபுரட்டு என்று அங்குமிங்கும் நடந்தார்கள். ஆங்காங்கே சிறு சிலசலப்பு எழும்போதெல்லாம் பீர்மா முகத்தில் அதிகப்படியாக ஆவல் ஒட்டிக்கொள்ளும்.

பாக்கு பெத்தாவுக்கும், மறியம் பெத்தாவுக்கும் வெறுப்பாகிப் போனது. கூட்டத்தில் கிடந்து மொனங்கினார்கள். சேனம்மாவின் காலை யாரோ சமுட்டி விட்டார்கள் என சேனம்மா திட்டி திமிறினாள்.

“நாசமா போனதுவளுக்கு என் கால கண்டவுடனே தானா பேதி எடுக்கணும்..”

சேனம்மாவின் வார்த்தை கேட்டு சில பொம்பளைகள் சத்தமாய் சிரித்தனர். சிரித்துக்கொண்டே சேனம்மாவை நெருக்கித் தள்ளினார்கள். சேனம்மா மேலும் திட்டினாள். சிரிப்பு மேலும் கூடியது. கூட்டம் கூடிவந்து பீர்மா மேலும் ஒன்றிரண்டு பொம்பளைகள் சாய்ந்து தள்ளினார்கள். நல்லவேளை முன்னால் சவுக்கு கம்பு இருந்ததால் பீர்மா விழுந்து விடாமல் நின்று கொண்டாள். ஆனாலும் திரும்பி அஞ்சாறு அறுப்பும் கிழியும் வைத்துக்கொடுத்தாள்.

ஒன்பது மணிக்கு மேலே கார்கள் அணிவகுத்து வர கவர்னர் வந்து இறங்கினார். அதிகாரிகள் சுற்றிக்கொள்ள , ஒருவர் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டார். கவர்னர் பாத்திமா பீவி முட்டாக்கும் போட்டுக்கொண்டு கம்பீரமாய் நடந்து நாலா பக்கமும் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்து புன்னகையுடன் திரும்பினார்கள்.

ஜமா-அத் தலைவர் பொன்னாடை கொடுத்து வரவேற்றார். கவர்னர் புன்னகையுடன் நடந்துவர வாசல் அருகே வரும்போது பெண்களின் பக்கம் கவர்னர் திரும்பிப் பார்த்து ஒரு புன்னகை சிந்திவிட்டுத் திரும்பும்போது பீர்மா பளிச்சென்று கவர்னரைப் பார்த்து கையை நீட்டினாள். கவர்னரும் பீர்மாவின் கரத்தைப் பற்றி குலுக்கினார். சடசடவென நிறைய கரம் நீண்டது. கவர்னர் பீர்மாவின் கரத்தை விட்டபடி புன்னகையுடன் உள்ளே போய்விட்டார்.

கூட்டத்தில் சத்தம் வந்தது.

‘பிள்ளா கவர்னர் பெத்தா..”

பூரித்துப் போனாள்.

அடுத்த இருபது நிமிடங்களில் கவர்னர் போய்விட்டார். பீர்மாவின் கையை கவர்னர் பிடித்துக் குலுக்கியது ஊரில் மிகப்பெரிய செய்தியாகிவிட்டது. பீர்மாவை பலரும் விசாரித்தார்கள். பீர்மாவின் மருமகள் மயங்கியே விழுந்து விட்டாள். சிலர் பீர்மாவை வயிற்றெரிச்சலோடு பார்த்தனர். பீர்மாவின் அடையாளப் பெயர் கவர்னர் பெத்தாவாகிப்போனது.

தர்ஹாவிலிருந்து திரும்பி நடந்து வரும்போது பீர்மா மறியத்திடம் சொன்னாள்:

“நாசமா போனதுவோ…நம்மள படிக்க வைக்காம உட்டுட்டுதுவோ…நம்மளமாதிரித்தானே இருக்கா..எங்கம்மாகாரி நெலையளிஞ்சி நின்னுட்டா… பள்ளிகோடத்துக்கு போட்டாளான்னு கேட்டதுக்கு.. பொட்ட புள்ள படிச்சி பெரிய கவர்னராட்டா ஆவப்போறா..ன்னா..”

வேதனையும் எரிச்சலும் ஒருசேர எழுந்தபோது அவளின் உம்மாவின் முகமும் வாப்பாவின் முகமும் நினைவில் வந்தது.

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...