Tuesday, 2 May 2023

ஒரு காதல் கதை

பஷீர் போலொரு எழுத்து
------------------------------------------
மீரான் மைதீனின் 'ஒரு காதல் கதை '
-------------------------------------------------------------
தமிழில் பஷீர் இல்லை என்று நான் அடிக்கடி குறிப்பிடுவது உண்டு.என் கருதுகோளை மாற்றியிருக்கிற நெடுங்கதை இது.
      ஒரு ரயில்பயணத்தில் உடன் பயணிக்கிற எதிர்இருக்கைப் பெண்மணியுடனான உரையாடல் என்கிற வடிவத்தில் அமைந்த இந்தச் சற்றே பெரிய சிறுகதை, தேர்ந்துகொண்ட பொருண்மையாலும், சொல்லல்முறையின் நுட்பத்தாலும் இடையிடையே வரும் கவித்துவமான விவரணைகள் விளக்கங்களாலும், காட்சிப்படுத்தும் மொழியழகாலும், உச்சக்கோடையின் நடுப்பகல் உக்கிரத்தைச் சட்டென்று பொழிந்து அணைத்துவிடும் கோடைமழை போல அபூர்வமான வாசிப்பின்பம் தருகிற கதையாக மாறுகிறது.
     கதையை இந்த அறிமுகத்தில் நான் சொல்லப்போவதில்லை. அது வாசகன் படித்தடைய வேண்டிய பரவசமான இன்பம். நான் ரசித்த சில வரிகளை மட்டுமே பகிர விரும்புகிறேன்.
    ஒரு அழகிய பெண்ணைப்பற்றி சொல்கிறபோது நேர்த்தியற்ற உடையிலும் நேர்த்தியாக இருந்தாள் என்கிறார் மீரான்.
   இந்த மனம்தான் என்னென்ன நினைவுகளையெல்லாம் கொண்டுவந்து குவிக்கிறது. ஒரு சிறிய பொந்தில் எறும்பாக ஊர்ந்து ஊர்ந்து மறுபக்கம் யானையாக வெளியேறிவிடுகிறது என்கிறார்.
   இந்த உலகில் இடைவிடாது எல்லாம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அதன் அதியற்புதங்கள் எப்போதும் நம் கண்களுக்குக் காட்சிப்படுவதில்லை என்கிறார் மற்றொரு இடத்தில்.
   இந்த உலகில் ஒரு மனிதனுக்கு அற்புதமான மந்திரம் அவன் பெயர்தான் எனக் குறிப்பிடும் மீரான், 
   நாம் வளரவளர நமது பெயரை உச்சரிப்பவர்கள் குறைந்துபோய் விடுவார்கள். பின்னர் அது ஆவணங்களாலாகி அழைப்பாரின்றிப் போய்விடுகிறது என்கிறார்.
    அவர் கண்களில் காலம் ஒரு நதியாக ஓடிக்கொண்டிருந்தது என்கிறார்.
   காலம் இரக்கமுள்ளதாகவும் இரக்கமற்றதாகவும் இருந்ததை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் என்கிற ஷீலா என்கிற வஷீலாவின் சற்றே சப்தம் கூடிய பேச்சு நமக்குள் படித்து முடித்து வெகுநேரம் கழித்தும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
    மரணம் குறித்துப் பேசும்போது
இந்தப் பேரண்டத்தில் கலப்பது என்பது நிச்சயம் ஒரு மகிழ்வான விஷயமாகத்தான் இருக்கும் என்று வேறொரு தளத்தின் ஞானம் பேசுகிறார்.
    எளியஒரு காதல்கதை போலத் தோன்றுமொரு கதைக்குள் கவித்துவம் ததும்பும் விவரணைகள் வழியே உளவியலும் அழகியலும் கலக்கும் வகையில் புதியதொரு படைப்பாக மாற்றிக்காட்டும் மீரான், எனக்கு பஷீரை நினைவூட்டுவதில் வியக்க ஒன்றுமில்லை.

நூல்:ஒரு காதல்கதை
ஆசிரியர் :மீரான் மைதீன்
பதிப்பகம் :புலம்
பக்கங்கள் 56
விலை ரூ.80
தொலைபேசி 9840603499.

No comments:

Post a Comment

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...