Tuesday, 2 May 2023

திருவாழி" பார்வை 3

 திருவாழி நாவல் பற்றிய கவிஞர் தக்கலை ஹலீமா அவர்களின் பதிவு.



"ஏழு கடைகளும்

ஏழாயிரம் வாழ்க்கையும்"


======≠==============

மீரான் மைதீனின் "திருவாழி"நாவல்..

இப்போது மட்டுமல்ல எப்போதுமே சுய நலமும் கணக்குக் கூட்டலுமாக திரிகிற ஜனங்கள் நிறைந்திருக்கும் ஒரு சமூகத்தில் இன்னும் அன்பின் தாங்கலோடும் அரவணைப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறிய நகரின் பன்மைத்துவ உறவுகளின் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் திரைபோல திருவாழி நாவல் விரிகிறது.


திருவாழி,கிருஷ்ணன்,புகழேந்தி, சத்தார் சுல்தான்,பட்டணம் முதலாளி, மைனர் சலாம்,பூபாலன்,வேதமாணிக்கம்,பூராடம் அத்தை,மனோகரன் வாத்தியார், குச்சான்,பிலிப்பு,தங்கம்,சிந்து,சியாமளா,சூளாமணி,வேலுமயில்,மகாலிங்கம்,அகிலன்,காசிம்,சின்னப்பள்ளி லெப்பை அன்சாரி இவர்களோடும் திருவாழியின் கட்டிடத்தில் இருக்கும் ஏழுகடைகளோடும் ஐந்தாம் நம்பர் கட்டிடத்திலிருந்து அப்புறப்படுத்தப் பட்ட அந்த மாய கல்லோடும் தனது புதினத்தை வழிநடத்திச் செல்லும் மீரானின் எழுத்திலிருக்கும் மனிதமும் பகடியும் நாவலை ரசமாக்கித் தந்திருக்கிறது.


பொதுவாக மீரானின் நாவல்களிலும் சிறுகதைகளிலும் நிறைந்து இருக்கும் நக்கலும் நையாண்டியையும் தாண்டி பேரன்பின் பிரவாகம் இதில் ஆட்சி செய்கிறது.பேரன்கள் நாக்பூர் வாசத்தால் காப்பக வாசியாகிவிடும் பூராடம் அத்தையின் திருச்செந்தூர் கோவில்போகும் நேர்ச்சைக்குத் துணையாக காசிமும் அன்சாரியும் உடன்செல்லும் காட்சியில்

"அன்சாரி என்றால்முஸ்லிம் பையனா"என பேரன்கள் கேட்கிற இடத்தில் அந்த ஒற்றை கேள்வியின் வழி சிறுபான்மை சமூகம் குறித்த பொது சமூகத்தின் பதட்டத்தையும் கசப்பையும் நாவல் மிகவும் நுட்பமாக சொல்லிச் செல்கிறது.

இதே திருச்செந்தூர் குறித்த ஒரு செய்தியை இங்கு பதிவு செய்யவேண்டியதின் தேவை இருக்கிறது.திருச்செந்தூர் கோவிலின் ஒன்பது நிலைகளையுடைய கோபுரத் திருப்பணியைத் தொடங்கி திருவாவடுதுறை ஆதீன ஒடுக்கத் தம்பிரான் தேசிக மூர்த்தி சுவாமிகள் திருப்பணி செய்துவந்தபோது ஆறு நிலைகள் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டபோது முருக பெருமான் தேசிக மூர்த்தி சுவாமிகளின் கனவில்தோன்றி "வள்ளல் சீதக்காதி கீழக்கரையில் உள்ளார் அவரிடம் செல்க" என தெரிவித்திட அதன்படியே வள்ளல் சீதக்காதியின் உதவியோடு கோபுரப்பணிகள் முடிவுற்தாக திருச்செந்தூர் தலபுராணத்தில் காணப்படுகிறது.

மணக்க மணக்க பன்மைத்துவ மனங்களின் ஓட்டங்களை "திருவாழி" பதிவு செய்திருக்கிறது./மண்ணுக்குள் மறைந்து கிடக்கும் வளம்போல மனிதனும் தனக்குள்ளே பலவாறாக மறைந்து கிடக்கிறான்/ என நாவலின் ஓரிடத்தில் மீரான் சொல்லாடியிருக்கும் கூற்றையே இந்தப் புனைவின் கதாபாத்திரங்கள் வழியாக காண்கின்றேன்.



412 பக்கங்கள் கொண்டு காலச்சுவடின் வெளியீடாக"திருவாழி" நாவல் வந்துள்ளது.வாசிப்பின்போது பெற்ற நிறைவை இந்தப் பதிவின் வழியாக வாசகர்களுக்கு என்னால் கடத்த முடியாது.நீங்கள் வாசிக்கும்போதும் அதை உணரலாம்.

வாழ்த்துக்கள் மீரான்.

No comments:

Post a Comment

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...