Tuesday 26 September 2023

முளைக்கிறது

அருவு பிடித்தல் மட்டுமே
பாக்கி.
வர்ண ஒலைகளில் ஒன்றை
ஒருசுற்று நெடுவு பிடித்தலும்
பாக்கி.
கிலுக்காம் பெட்டியில்
ஒம்பாதவது உப்புக் கல்லை
நிறப்பாமல் விட்டதும்
பாக்கி.
தட்டுப் பிளாவில் காயவைத்த
வடகத்தின் மேல் துண்டுத்துணி  விரிக்காததும் 
பாக்கி.
ராஜபாட்டையில் நடப்பவனே
பாக்கிகளுக்காக
நான் பப்படமாக உடைபடுவதின்
நொம்பலமற்று
கூடிப் பேசும் உன் குசினிப் பேச்சு
பாக்கியற்று எனை வந்தடைந்து விடுகிறது.
நன்றாக உறங்கி எழு
உன் பாக்கி
மெல்ல முளைக்கிறது.


மீரான் மைதீன்

Saturday 23 September 2023

" நிலையானது என்று எதுவுமில்லை"

                          "  திருவாழி "
   
   வாசிக்க தொடங்கி பத்து ஆண்டுகளுக்கு மேலானபின்பும் தமிழில் மிக குறைவாக வாசித்தவன் நானாகத்தானிருப்பேன்.எதை வாசிக்க ஆரம்பித்தாலும் ஏழாவது நிமிடத்தில் தூங்கியிருப்பேன்.ரொம்ப சிரமப்பட்டுதான் கொஞ்சம் வாசித்துள்ளேன்.
மீரான் மைதீனின் கதைகள் எனக்கு பிடிக்கும்.உலகம் அறியாத இஸ்லாமிய சமூகத்தை சொல்லும் கதைகள்.அவை எங்கள் கதைகளும் கூட.கவர்னர் பெத்தா,சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம்,அஜ்னபி,ஓதி எறியப்படாத முட்டைகள்,பலா மரம் நிற்கும் புதிய வீட்டிற்கு கிளம்பிக்கொண்டிருக்கிறான், ஒரு காதல் கதை,கலுங்கு பட்டாளம், ஒச்சை என அவரது நூல்களை வாசித்துள்ளேன்.
  
கடந்த மார்ச் மாதம் திருவாழி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அவரது கையெழுத்து பெற்று திருவாழி நாவலை வாங்கி வந்தேன்.இந்த வாரம் ஞாயிறு கிடைத்த ஓய்வு நாளில் திருவாழியை கையில் எடுத்தேன் நூறுபக்கங்களை கடந்திருந்தேன். திங்கள்கிழமை கப்பல் சிங்கப்பூரில் நங்கூரமிட்டு எண்ணையும், பொருட்களும் நிரப்பியதால் கடும் பணி.வாசிக்கவே நேரம் கிடைக்கவில்லை.இரவில் களைப்பில் தூங்கி போனேன்.
  மறுநாள்  அதிகாலை முதல் வாசிக்க துவங்கினேன்,கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிபோவதால் எங்கள் கடிகாரம் பின்னே செல்லும் நாட்களில் அதிகாலை நான்கு மணிக்கு விழிப்பு வரும்போது எழுந்து வாசித்து இன்று அதிகாலை (வெள்ளிக்கிழமை) திருவாழியை வாசித்து முடித்தேன்.
    
      எளிய மனிதர்களின் ஆழ் மனதை சொல்லும் கதை.மனிதனின் ஆழ் உள்ளத்தில் இரக்கமே இருக்கிறது. பைபிளில் வசனம் kingdom of god within you மனிதன் இறை வடிவானவன் என்பதை இந்நாவல் உறுதிபடுத்துகிறது.
  
      கதையின் மையம் ஒன்பது சென்று மனையில் இருக்கும் திருவாழி  கட்டிடமும் அதிலுள்ள கடைகளும் அதன் எதிருள்ள கிருஷ்ணன் கடையும் அதன் சுற்றுவட்டமும் அதில் புழங்கும் மனிதர்களின் கதைதான்.
அன்சாரியின் சேவை பிரமிக்க வைக்கிறது.துணையில்லாமல் இருப்பவரை குருவாயூருக்கும், திருவாழி சாரின் வயதான மாமியின் கடைசி ஆசையான திருசெந்தூருக்கு அழைத்து செல்கிறான். அதற்காகவே காத்திருந்த அவர்  திருசெந்தூர் கோயில் சென்று வந்ததும் இறக்கிறார்.
வெளிநாட்டில் வாழும் பாட்டியின் பேரன்கள் அவர் இறந்துவிட்டால் நல்ல முறையில் அடக்கம் செய்ய என்ன செலவானாலும் தருகிறோம் என்கிறார்கள் உலகம் இப்படியாக  மாறிவிட்டதை எழுத்தாளர் அதன் போக்கிலேயே வரைந்து செல்கிறார்.
ஆனால் அந்த உடலை  அடக்கம் செய்யும் முன் முன்பின் அறியாத இஸ்லாமியர் ஒருவர் குளிப்பாட்டி சுத்தம் செய்து அடக்கம் செய்ய உதவுகிறார்.நான் மும்பையில் வேலை தேடிகொண்டிருக்கும்போது ஒரு நாள் அதிகாலை ஐந்துமணிக்கு சேகர் எனும் நண்பரின் மனைவி நாங்கள் தங்கியிருந்த அறைக்கதவை தட்டினாள் கணவன் இரவில் இறந்துவிட்டதாக. அவளுக்கு எங்களை தவிர வேறு யாரையும் தெரியாது என்றார்கள். நானும்,நண்பர் ஷாஜியும் இணைந்து மொழி தெரியாத ஊரில் மயானத்தில் எரியூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்தது நினைவுக்கு வந்தது.
 பட்டணம் சாயிபு சூளாமணிக்கு தனது ஹோட்டலில் வேலை கொடுப்பது அவளின் பசிக்கு மட்டுமல்ல சிற்பக்காரி,ஐசுவரியம் உள்ளவ இங்குன கிடந்துட்டு போட்டு.
கிருஷ்ணன் சொல்வார் சூளாமணிக்கு பட்டணம் உதவி செஞ்சாரு, பாதுகாத்தாரு இல்லேன்னா இங்குன உள்ளவனுவோ அவள இன்னொரு பிராட்டியா ஆக்கிருப்பானுவோ.உலகில் சில மனிதர்கள் ஆபூர்வமாக இப்படி சிலரை பாதுகாக்கிறார்கள்.
 உடம்பு சரியில்லாமல் இருக்கும் சூளாமணியின் மகனுக்கு ஓதி பார்த்தபின் லெப்பை சொல்வார் “அந்த பயலுக்க மொக லட்சணத்த பாத்தா நல்ல பரக்கதுள்ள பையனா வருவான்” என்றபோது பட்டணம் “வந்துட்டு போட்டு பாவங்கள் இல்லியா ரெச்ச படட்டும்” என்பார்.அதுபோலவே அந்த சிறுவன் வளர்ந்து சிறுவயதில் அம்மாவுக்கு என்ன வாங்கி தருவாய் என கேட்கும்போது இந்த கடையை வாங்கி தருவேன் என்ற சொன்ன பிஞ்சி மனதின் எண்ணம் இந்த பிரபஞ்சத்தில் பரவுகிறது.இந்தப் பரவலின் அம்சமாக  நாவலை முடிக்கிறார் மீரான் மைதீன்.

“இந்த  உலகத்துல ஒருத்தன் முங்குனா கூட நாலு பேரு சேந்து முங்குவான்... ஆனா கிருஷ்ணன் முங்குன பொறவு இங்க நாலு பேரு பொங்கியிருக்கான் பாத்தியா ..தான் ஒருத்தன் தாங்கி பிடிக்கேல்லன்னா வானம் கீழே விழுந்துரும்னு நினைக்க நினைப்ப சில சூழல் அதெல்லாம் ஒரு மயிருமில்லேன்னு ஆக்கி விட்டுருது”
 
கிருஷ்ணனின் நினைப்பு போலவே இந்த உலகில்,இவ்வுலகை தாங்கி பிடிப்பவர்களாக நினைப்பவர்கள்  நிறையபேர் உண்டு.தானில்லை என்றால் இவ்வுலகம் அசையவே அசையாது எனும் எண்ணம்.
 நாவலில் வரும் பெரும்பாலான உரையாடல்கள் போலவே பேசியும்,கேட்டும் வளர்ந்த நான். படிப்பு முடிந்து ஊரை விட்டு சென்றபின் இது போன்ற வார்த்தைகளை பேசவோ, கேட்கவோ இயலாத சூழலில் வேறு மொழி பேசும் பிற நாட்டு பணியாளர்களுடன் இருப்பதால் இந்த நாவலை வாசித்த நான்கு நாட்களும் அதன் நினைவு என்னுள்ளத்தில் இருக்கும் காலமும் என் ஊரில் என் சமூகத்தில் வாழும் உணர்வை திருவாழி வாசிப்பனுபவம் தந்திருக்கிறது.
   
     மீரானின் பகடிக்கு குறைவேயில்லை வயிறு குலுங்க சிரித்த இடங்கள் நிறைய. பிராட்டியை வேத மாணிக்கம் “வேலைக்கி வாறியா” எனக்கேட்கும் போது “ஒமக்கு இப்போ  முடியுமாக்கும்” என்பது போன்ற நிறைய இடங்கள் 
எல்லா ஊரிலும் இந்த வாகாபி காரனுவோ வந்த பொறவு கச்சேரி நடத்தது ஹராம் என சொல்லி நிறுத்தி போட்டானுவோ,ஒரு கலைஞனை ஒரு சமூகம் இவ்வளவு தூரம் துரத்துமாடே எனும் இடம் தமிழ் சமூகத்துக்குள் ஊடாடும் பண்பாட்டு முரணிலுள்ள சிக்கலாக பதிவாகிறது .
உலகில் நிலையானது என எதுவுமில்லை என்பதை திருவாழி கட்டிடத்தின் கடை வைத்திருந்த சலாம்,சிலங்கா,அண்ணாச்சியின் வளர்ச்சியும் பின்னர் வீழ்ச்சியும் மூலம் மீரான் சொல்கிறார்.மனிதன் எப்போதும் நிறையாத ஒரு அதிசயமான நீர்க்குடுவை, மரணத்துக்கு முன்னால் மரணமடைய தெரியாதவனாக இருப்பதால் அவன் அவ்வாறுதான் வடிவமைக்கபட்டிருக்கிறான் என ஆக்களி சாயிப்பு சொல்லும் இடம்.தத்துவத்தின் உச்சம்.செத்தாரை போல் வாழ்வது எக்காலம் அதை மனிதன் அடைவதே இல்லை.
  எல்லா மக்களும் இணைந்ததே இந்த பூமி .இந்த புவியின் நெசவு அப்படி சலாமும்,பட்டணம் சாயிபும் இணைந்ததே திருவாழி.
மிகச்சிறப்பான ஒரு வாசிப்பனுபவத்தை,என்னுடைய மொழியில்,நான் வளர்ந்த சூழலை அப்படியே தந்த மூத்தவர் மீரான் மைதீனுக்கு நன்றியும் அன்பும் .
                                    அன்புடன்
                                  ஷாகுல் ஹமீது

                                sunitashahul@gmailcom

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...