Sunday 7 May 2023

பர்தா- நாவலின் உள்ளும் வெளியும்- எம்.மீரான் மைதீன்

       பர்தா- நாவலின் உள்ளும் வெளியும்
                    எம்.மீரான் மைதீன்


 இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியைப்  பூர்வீகமாகக் கொண்ட நாவலாசிரியர் ஃபாத்திமா மாஜிதா தற்போது லண்டனில் வசிக்கிறார். இலங்கையின் எமூத்த எழுத்தாளரான எஸ் எல் எம் ஹனிபா அவர்களின் மகளான மாஜிதா, எழுத்தின் ஒரு பாரம்பரிய தொடர்ச்சியாக நமக்கு இந்நாவலின் வழியே அறிமுகமாகிறார்.மரபு ரீதியாக அவருக்குள் குடிகொண்டிருந்த எழுத்து இப்போது இந்த நாவலின் வாயிலாக  விசாலமான சமூகப்பார்வையோடு வெளிப்பட்டிருக்கிறது.இந்த வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாக மாஜிதா தனது நாவலான "பர்தா"வை தந்திருக்கிறார். எதிர் வெளியீடு வெளிக்கொண்டு வந்திருக்கிற இந்த நாவல் பல சிறப்புக்களையும், காத்திரமான  விவாதப் புள்ளிகளையும்  கொண்டிருக்கிறது.இந்த நாவலை மாஜிதா,மறைந்த கவிஞர் ஹெச் ஜி ரசூலின் நினைவுகளுக்கு சமர்பித்திருக்கிறார்.


உயிரினங்களில் உடை என்பது மனித சமூகத்துக்கு மட்டுமேயானது. மனிதர்கள் விதவிதமான உடைகள் அணிகின்றனர்.ஆடையின் வாயிலாக தங்களை அழகுபடுத்துகிறார்கள் அடையாளப்படுத்துகிறார்கள்.
விடுதலைப் போராட்ட களத்திலிருந்த மகாத்மா காந்தி அரையாடை அணிந்திருந்தார்.நேரு அப்போதே நவநாகரீக உடையணிந்து வலம் வந்த உன்னதமான அரசியல் தலைவர். அண்ணல்  அம்பேத்கார் தனது அழகிய உடையை ஒரு போராட்ட யுக்தியாகவே பிரகடனப்படுத்தி அணிந்தவர். தமிழ்நாடு கேரளாவில் வேட்டி அணிவதுபோல இந்தியாவின் பிற மாநிலங்களில் அணிவதில்லை. அவர்கள் உரிமைக்குரல் எம்ஜியார் வேட்டி போல அணிந்திருப்பார்கள். பெண்களின் புடவையிலும் கூட இந்த வகை மாதிரிகள் நிறைய உண்டு. மார்வாடி பெண்களின் புடவை அணியும் முறையும், பிராமண சமூகத்தில் பெண்கள் மடிசார் கட்டும் முறையும்,இஸ்லாம் பெண்கள் முட்டாக்கு போடும் முறையும் காலந்தொட்டே நீடித்திருக்கும் பண்பாட்டுப் பாரம்பரியமானதுதான். உலகெங்கிலும் மனிதர்கள் அணிகின்ற உடைகளை ஆராய்ந்து பார்த்தால் நிலம்,காலநிலை,தனித்த பண்பாடுகள் என ஏராளமானவைகள் அவற்றிற்குள் பெருஞ் செய்திகளாக  இருக்கின்றன. சிந்தனையாளர் சுவாமி விவேகானந்தரால்,மனநோயாளிகளின் கூடாரம் என அழைக்கப்பட்ட  பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கடுமையான சாதிய ஒடுக்குமுறைகள் இருந்த காலத்தில்  குறிப்பிட்ட சாதியினரைத் தவிர்த்து,பெண்களில் மற்றவர்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்ட நிலையிருந்தது. அக்காலத்திலும் இஸ்லாமிய பெண்கள் குப்பாயம் அணிந்து வந்தனர்.மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் ஒரு உரையாடலில் குறிப்பிட்டார் சமஸ்தான காலத்தில்  குமரிமாவட்ட முளகுமூட்டில் வைத்து ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த ஒரு பெண் மேலாடை அணிந்து வந்த நிலையில் அவள் மார்பை அறுக்க முயன்றபோது அப்பெண்மணி அங்கிருந்து தப்பியோடி குளச்சலில் ஒரு இஸ்லாமியர் வீட்டில் தஞ்சம் புகுந்ததாகவும் பின்னர் அவர் அங்கேயே  இஸ்லாமியராக மாற்றம் பெற்றுக் கொண்டு குப்பாயம் அணிந்ததாக ஒரு செய்தியைக் குறிப்பிட்டார்.அரபு சமூகத்தில் அறியாமைக் காலத்தில் பெண்கள் ஆடையின்றி வலம் வந்த செய்திகள் கிடைக்கின்றன.
கிருஸ்தவ பின்புலத்தில் அருள்சகோதரிகளாக வாழ்பவர்களின் உடை ஒரு அடையாளத்தைக் கொண்டிருப்பதையும் அவர்கள் திருமணபந்தங்களில் ஈடுபடுவதில்லை என்பதும் அவர்கள் மரபாக இருக்கிறது. அதுபோல சில ஆசிரமங்களில் மாதவிடாய் திட்டு போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு கர்ப்பபை அகற்றும் போக்கு பற்றி சில செய்திகள் வந்த நிலையில் அவைகள் பெரிதாகப் பேசப்படவில்லை. 
அரபு நாடுகளில் பெண்களின் பர்தா உடையை சவுதி அரேபியா மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் ஒரு நாடாக இருந்தது.மற்றைய அரபு நாடுகள் குறிப்பாக துபாய் போன்ற நாடுகள் தனிமனித விருப்பங்களுக்கு மதிப்பும்  முதன்மையும்  வழங்கியது. முழுக்க மூடிய பர்தா அணிந்து நடமாடும் பெண்களையும் அங்கு பார்க்கலாம் அதே நேரத்தில் மேற்கத்திய கலாச்சார உடையில் நடமாடும் பெண்களையும் பார்க்கலாம்.மனிதர்கள் தங்கள் விருப்பத் தேர்வுகளை செய்து கொள்ளலாம் அது எவ்வகையிலும் இன்னொரு மனிதனை பாதிக்காததாக இருக்க வேண்டும். எனது உடை என்பது எனது உரிமைதான்.நான் நிர்வாணமாக நடமாடினால் அது பிறருக்கு குந்தகம் விளைவிக்கிற செயல்.ஆனால் நான் ஒன்றுக்கு  இரண்டு சட்டை அணிந்து கொள்வதால் யாருக்கும் ஒரு பிரச்சனையும் ஏற்படுவதில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ளலாம்.
இஸ்லாம் உலகம் முழுவதும் ஊடக பலமற்ற சமூகமாக இருப்பதையும், அல்லது பொதுவான உரையாடல்கள் வருகிறபோது அவற்றில் இன்னும் மதவிவகாரங்களில்  ஜனநாயகப் பார்வையில் தன்னை வளப்படுத்திக் கொள்ளாத சிலர் இருப்பதையும் அவதானிக்கலாம்.மதஅறிஞர்கள் போதுமான அளவுக்கு பொதுக் கல்வியில் தங்கள் இருப்பை அமைத்துக் கொள்ளாத நிலையில் தொடர்ந்து கருத்தியல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய இடத்தில் பலவீனமான உரையாடலை மேற்கொள்ளும்  நிலையை முற்றிலும் மறுக்க இயலாது.
வரலாறு திரிக்கப்பட்ட நிலையில் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றை 1947க்கு முந்திய இந்தியாவின் கண் கொண்டு பார்க்கத் தெரியாத தலைமுறையின் பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்த அல்லது அவை குறித்த விசாலங்களை, உண்மைகளை  அரிதாகவே சிலர்  பேசுகின்றனர். இஸ்லாமியர்கள் விடுதலைப் போராட்ட அம்சமாக ஆங்கிலக் கல்வியை புறக்கணித்து தாங்கள் எல்கைகளைச் சுருக்கிக் கொண்டவர்கள்.இந்த வரலாற்றின்  மேலும் பல அம்சங்களை நாம் தட்டையாக அணுகாமல் ஒரு திறந்த மனம் கொண்டு விவாதிக்கப்பட வேண்டிய ஒரு காலமாக இன்றைய காலமிருக்கிறது.
இஸ்லாமிய ஆண்கள் இஷ்டத்துக்கு திருமணம் செய்யலாம் என்கிற ஒரு கருத்தியலை ஊதிப் பெருக்கும் பொதுமனம், இதல்லாத
இஸ்லாமிய ஆண்களின் வேறு  விசயங்களைப் பேசுவதில்லை. மாறாக  இஸ்லாமிய பெண்களின் விசயங்களை பேச அலாதி விருப்பமுடையவர்களாக இருப்பதையும் நாம் கவனிக்கலாம். இஸ்லாமிய பெண்கள் விசயத்தில்  தலாக் மற்றும் உடை விசயத்தில் நிறைய பேச்சுக்கள் இந்த உலகில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்த அளவுக்கு இந்த உலகில் வேறு ஏதேனும் விசயங்கள் பேசப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் ஆச்சரியமான உண்மை. உண்மையில் அது அவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் என்றால் அது  எந்த அடக்குமுறையாக இருந்தாலும் அவைகளுக்கு அடங்காமல் மனிதர்கள்  வெளிப்படும் தருணங்கள் உருவாகமல் போய்விடப் போவதில்லை. எல்லா சமயத்திலும் பெண்கள்தான் பெரும்பாலும் மத அடையாளங்களைக் கொண்டிருக்கிறார்கள்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இந்தியச் சூழலில் மத அடையாளங்களை தூக்கிச் சுமப்பது பெருகியது எனலாம்.மசூதி இடிப்புக்கு முன் பின் என சூழலை நாம் பிரித்துப்பார்த்தால் அந்த ஆய்வு நீண்டு போகும். புடவையின் முந்தாணையை நீட்டி தலையில் முக்காடாகப் போட்டுக் கொள்ளும் வழக்கம் மெல்ல விலகி அது அடையாள உடையாக பரிணாமம் கொள்கிறது.இப்போது பர்தா என்கிற வடிவம் பெரும்பாலும் எலலா இஸ்லாமிய குடும்பங்களிலும் குடியேறியிருக்கிறது.இந்த உடை பரவலாக நடைமுறைக்கு வந்த பிறகு இஸ்லாமிய பெண்களின் வெளியுலக வரவு என்பது புத்துயிர் பெற்றது. இப்போது கல்வி நிலையங்களில் மிக கணிசமான எண்ணிக்கையில் கல்வி கற்கின்றனர். இந்த புதிய சூழலை இந்த உடை வழங்கிய ஒரு மறுமலர்ச்சியாகவும் பார்க்கலாம்.
அரபு சூழலில் இஸ்லாமிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தியபோது நபிகளார் பெண்களுக்கு கௌரவமான ஆடை, அடிமை விடுதலை, விதவை மறுமணம் மற்றும் கல்வி என்கிற புரட்சிகரமான நிலைப்பாடு உருவாக்கினார். பெண் குழந்தைகள் உயிரோடு புதைக்கப்பட்ட அறியாமைக் காலத்தை, இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டிலேயே புரட்டிப் போட்டது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் கூட இந்தியச் சூழலில்  சமஸ்தானங்களில்  ஆடை மறுப்பு, கல்வி மறுப்பு,சதி, அடிமைமுறை முதலியன நடைமுறையில் இருந்ததை இந்த நாவலை ஒட்டியே நாம் விவாதப்புள்ளியாக எடுத்துக் கொள்ளலாம்.


உலகில் முதன் முதலாக முற்றிலும் உடை பற்றிய உரையாடல் சார்ந்த நாவல் இதுவாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.உள்ளும் புறமுமாகத் தொடர்ந்து இன்றளவிலும் விவாதம் முற்றுப்பெறாத ஒரு உடையாகப் பர்தா இருக்கிறது.எனவே இதனை பாடுபொருளாகக் கொண்டு ஒரு நாவல் வரைவது நிசாரமான காரியமாகக் கருதமுடியாது.இன்னும் பேசித்தீராத இந்த உடை பற்றிய பெண்களின் குரல்  பேசவேண்டும்.ஆனால்  ஏன் பொதுசமூகத்துக்கு இவ்உடையின் மீது இவ்வளவு ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதையும் இங்குள்ள வரலாற்றுப் பின்னணியிலிருந்தும் பேச வேண்டும். இஸ்லாமிய பெண்கள் இவ்உடை மூலமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்றால் அவர்கள் அதனை மறுதலித்துப் பேச பூரண உரிமையுடையவர்கள். இதனை அவர்கள் குரலிலிருந்துதான் பேசப்பட வேண்டும் என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தலாம்.இஸ்லாம் இன்ன வர்ணத்தில் இன்ன வடிவத்திலென எங்கேயும் அது உடையை வடிவமைக்கவில்லை.அது அங்கங்களை மறைத்து ஆண் பெண் என இருபாலருக்கும் கண்ணியமான உடை அணியச் சொல்கிறது. காலத்தால் உடையின் வடிவங்கள் பலமாற்றங்களைப் பெற்று பல வடிவங்களாக வளர்ந்து இன்று இது அடையாள உடையாக வந்து நிற்கிறது. இங்கு பெரும்பான்மையினர் பல பிரிவுகளாக இருக்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் எதிர் பிம்பமாக இஸ்லாமியர்களை தேவைக்கு அதிகமாகவே கட்டமைத்து வைத்திருக்கும் கருத்தியலாளர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட மனோபாவம் என்பது மிக சுலபத்தில் இந்த உடை மீது பாய்வதற்கு வழிகோலுகின்றன.இதன் அம்சங்களிலும் பேசப்பட வேண்டியதாக இந்த நாவலை முன்வைக்கலாம்.


1991ல்  செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஒரு மேலங்கிபோல வடிவமைக்கப்பட்ட ஒரு உடையை அணிந்திருந்தார். அவருக்கு தொடர்ந்து பொதுவெளியில் இயங்க வேண்டிய தேவை இருந்ததையும் அதன் காரணமாக அசௌரியங்கள் ஏதும் இல்லாமல் இருக்க அவர் அந்த உடையைத் தேர்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டது.அந்த உடை எங்கள் ஊரில் பெண்கள் வீட்டில்  தொழுகையின் போது அணிந்து கொள்ளும் மக்ணா என்கிற உடை வடிவத்துக்கு நிகராக இருந்தது.தீவிர இத்துத்துவ செயற்பாட்டாளர் உமாபாரதியின் உடையும்,மலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவராக குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாகூரின் உடையும் கிட்டத்தட்ட முக்காடற்ற ஒரு காவி பர்தா போல இருப்பதையும் நாம் பார்க்கலாம். சூடான் பெண்கள் பலமடங்கு புடவையை உடம்பில் சுருள் சுருளாக சுற்றியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.பிரம்மகுமாரிகள் ஒருவகை உடையணிகின்றனர். உலகம் முழுவதும் உடைகள்,அதுவும் பெண்களின்உடைகள் பலவகையான பண்பாட்டு முகம் கொண்டது. ஆண் மைய்ய மானுட சமூகம் எல்லா மதங்களிலும்  தாங்கள் அடையாளங்களை பெண்களிலிருந்துதான் துவங்கியிருப்பதை நாம் வரலாற்றுப் பூர்வமாகவே அறியலாம்.ஆனால் இங்கு தொடர்ந்து ஒரு சாராரின் விசயம் பேசப்படுவதற்கும் தர்க்கிக்கப்படுவதற்கும் பின்னாலுள்ள அகமும் புறமுமான அரசியல் கூறுகள்  நுட்பமாக பார்க்கப்பட வேண்டியதாக இந்த நாவலின் வாசிப்பிலிருந்தும் குறிப்பிடுகிறேன். ஒரு படைப்புக்குள் விழும்  வாசகனை அதன் பரப்புக்கு வெளியேயும் காலவெளி கடந்து அவனை நகர்த்திக் கொண்டு செல்வதும் நிகழுகிறது.

கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பொதுவெளியில் இஸ்லாமிய பெண்களின் பங்களிப்பு , கல்வி, போராட்டக்களம், வேலையென முன் எப்போதுமில்லாத அளவுக்கு நிறைந்து கிடக்கிறது.இந்த நிறைவு சிலரைப் பயப்படுத்துவதை நாம் இப்போது தெளிவாகவே உணருகிறோம். பெண்கள் தனியாக விமானப் பயணம் செய்கிறார்கள், பெருநகரங்களுக்கு வேலை கல்வியென நீண்ட பயணங்களை தனியாக மேற்கொள்கின்றனர். சரி பாதி மானுடசக்தியின் பயன்பாட்டை இஸ்லாம் சமூகம் பொதுவெளியில் இட்டு நிரப்பியிருக்கிறது.கூடவே பர்தாவின் நிரப்புதலும் பெருகி இருக்கிறது.அவர்கள் சர்வசாதரணமாக வெளியுலகில் புழங்குகின்றனர். மூடுண்ட சமூகம் எனச் சொல்லப்பட்டு குறுகிய விமர்சனங்களை தூவியவர்களுக்கு இந்த உடை எரிச்சலை ஏற்படுத்துவதையும் இந்த உடையின் வாயிலாக அவர்களின் கல்வி மேம்பட்ட தன்மையை அடைந்திருப்பதும்  அச்சப்படுத்துகிறது. அதன் விளைவாக ஹிஜாப் தடை என இந்த உடையரசியலை எடுத்துக் கொண்டு முடக்க முயலும் அரசியலையும் நாம் பேச வேண்டியவைகளாகப் பார்க்கலாம். இலங்கைச் சூழலில் நாவலின் கதைக்களம் இருந்தாலும் இந்தியச்சூழலில் சிறுபாண்மை மக்களின் மீது உருவாக்கப்படும நெருக்கடிக்குள்ளிருந்தும் இந்த நாவல் அவதானிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

நாவலில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன.இதன் உயிராக நாவலில் வரும் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆபிதாவின் ஒற்றைச் சொற்கள் மற்றொரு பெரும் உரையாடலுக்கான சிறப்பு புள்ளிகளாக தொடக்கம் பெருகின்றன. அவற்றையும் விட்டுவிட முடியாது.இலண்டன் பூங்காவில் பர்தா அணிந்த பெண்மீது அந்த ஆங்கிலேயப் பெண்மணி அத்துணை வன்மமாகப் பாய்வது உலகம் முழுவதும் எத்தகைய சித்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

வழக்கறிஞரான நாவலாசிரியர் இன, ஆணதிகார,அடிப்படை வாதங்களுக்கு எதிராக மிகக் காத்திரமான உரையாடலை இஸ்லாம் சமூகத்துக்கு உள்ளேயும் வெளியேயும்  தொடர்ந்து உரையாடி வருபவர்.மூன்று தலைமுறையின் மாறுபட்ட பார்வைகள் பதிவு பெறுகின்றன.கடந்த கால் நூற்றாண்டில் இந்த உடையின் பெருக்கம் எவ்வாறு வளர்ந்தோங்கியது.வாழ்க்கை ஆதாரங்களுக்காக பல்வேறு நாட்டினர் வளைகுடா நாடுகளில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றனர்.தகவல் தொழில்நுட்பம் உலகின் காட்சிகளையெல்லாம் நம் இருப்பிடங்களில் கொண்டு சேர்த்திருக்கிறது.கலாச்சாரங்கள் இங்கும் அங்குமாங் ஊடுபாவி இருக்கின்றன.வலுகுறைந்ததை வலுவானது உண்ணும் என்பதுபோல பெரும் சக்திமிக்க பண்பாடுகள் சில பிரதேசங்களின் நுண்பண்பாடுகளைக் கபளிகரம் செய்திருக்கின்றன.நாம் நாவலை இந்த கால மாற்றங்களிலிருந்தும் உலகமயமாக்கலின் ஆதிக்க பரவலிலிருந்தும் கூட பேசப்பட வேண்டிய விடயமாக காணலாம். இந்த நாவலில் அதன் எல்லா அடுக்குகளும் நிமித்தங்களும் பதிவாகி இருக்கின்றன.எந்த சாராரும் ஒரு ஒற்றைக் கண் கொண்டு வாசிக்கப்பட வேண்டிய புதினமாக இது இல்லை என்பது இதன் சிறப்பு.இவற்றை நாம் கால்நூற்றாண்டு கால சர்வதேச சமூகத்தில் நிகழ்ந்துள்ள உலகத்தை ஒருங்கிணைத்தல் தன்மையின் கூறுகளை உள்வாங்கி வாசிக்கப்பட வேண்டியதாகும்.உடையரசியல் மட்டுமல்லாது இஸ்லாம் சமூகத்துக்குள் தர்ஹா,பிரதேச பண்பாட்டு நிகழ்வுகள் என பலவிடயங்களில் அதன் தாக்கம் அப்பட்டமானது.இதனடிப்படையில் மாஜிதா இந்த நாவலை சர்வதேச தரத்தில் தந்திருக்கிறார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இஸ்லாம் சமூக சமய,பண்பாட்டுப் பிரச்சனைகளை,உள் முரண்களை எழுதுகின்ற இச்சமூகத்தின் பெரும்பாலான படைப்பாளிகள் துணிச்சலாகவே சுயவிமர்சனங்களை முன்வைப்பதையும்,அவற்றை காத்திரமாக எதிர் கொள்வதையும் நாம் கண்டு வருகிறோம்.தமிழ் சூழலில்,இதிலிருந்து விலகி மற்றொரு நிலையில் இங்குள்ள முற்போக்கு படைப்பாளிகளில் பலரும்கூட சுயசாதி பெருமை பேசும் எழுத்துக் கொண்டாட்டங்களில் இருப்பதையும் அறியமுடிகிறது.

பர்தா நாவலை முன்னெடுப்பாகக் கொண்டு அரசியல், உடையரசியல், அடையாள அரசியல், பண்பாட்டுக் கூறுகளில் இவை என்ன தாக்கங்களை உருவாக்குகிறது, உடை ஒடுக்குமுறையா அல்லது விடுதலையா என விரிவடையும் விடயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய உரையாடலுக்கான களமாக பர்தா நாவலைக் கொள்ளலாம். கொள்வேண்டும் என்பதுதான் முதன்மையானது.இந்த நாவலின் வெற்றி என்பது அது பல நூற்றாண்டு கதைகளை நமக்குள் மறுபார்வை செய்யவும் விவாதிக்கவும்  துணை புரிகிறது. இணையவெளியெங்கும் இஸ்லாமிய உரையாடல்கள் பல விசமக்காரர்களால் வெறும் குப்பையைப் போல பல்கிக் கிடக்கிறது. சாதாரணமாக ஒருவர் அதன் வழி இதனை அணுக முயலும் போது அவர் மனம் எவ்விதமான கட்டமைப்புக்கு செல்லும் என்பதை சிந்திக்க இயலவில்லை.எனவே இங்கு அரோக்கியமான விவாதங்களும் அதனுடைய பதிவேற்றங்களும் அவசியமான காலமாக இருக்கிறது.

நாவலாசிரியர்  மாஜிதாவுக்கு நிறைவான அன்பின் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...