Friday 22 December 2023

'ஓர்மை' மீரான் மைதீன்

ஓர்மையின்
விளிம்புகளிலிருந்து
அற்று விழுந்து அதல பாதாளத்தில் கிடக்கும் நினைவுகளை
புசித்துப் புசித்து
பசியடங்காத இரவொன்றில்
நெளிந்து நெளிந்து பாம்பாகிப் 
பச்சிப் பறவையாகி
நேராகி நெடுஞ்சாண்கிடையாகி விழுந்து 
எழுந்து 
புறண்டு புறாவாகி
ஆடை தரித்து ஆயத்தமாகி
பறந்த பொழுதில் 
உருகி மெழுகாகி  மெய்யாகிய
ஓர்மையின் விளிம்புகளிலிருந்து
அற்று விழுகிறேன்
கதகதப்பில் அடைக்கலம் புகுந்தவாறு
அணைத்துப் பிடித்துக் கொள்ளுமாறு
காற்றில் விட்டெறிந்த முத்தம் பறக்கிறது.

2016

Wednesday 20 December 2023

"சிகரி மார்க்கம்"நூல் அறிமுகம் மீரான் மைதீன்

அருமை நண்பர் கே.முகம்மது ரியாஸின் "சிகரி மார்க்கம்"சிறுகதை நூல் அவரின் இரண்டாவது தொகுப்பாக வந்திருக்கிறது. முந்தையது "அத்தர்"சிறுகதை தொகுப்பு.

             நான் இப்போது இந்த தொகுப்பில் எந்த சிறுகதையை முதலில் வாசித்திருப்பேன், சந்தேகமில்லாமல் மீரான் (எ) மரியா'வைத்தான்.அதை மேலும் ஒருமுறை வாசிக்கவும் செய்தேன். எனது "ஒரு காதல் கதை"யில் கூட மனிதர்களுக்கு அதீத நெருக்கமானது அவர்களின் பெயர்தான் என்று எழுதியிருக்கிறேன்.பெயர்போல நெருக்கமான இன்னொன்று இல்லை என்பது மெய்யானது. நான் முதலில் அந்தக் கதையை வாசிப்பதற்கு அந்த பெயர் ஒரு காரணமாக இருந்தது.
    ரியாஸின் கதை உலகம் மற்ற எழுத்தாளர்களின் எழுத்து வரிசையிலுள்ள மெல்லிய மாற்றங்களின் ஒரு அடுத்த அடுக்காக இல்லாமல் முற்றிலும் புதிதான ஒரு புத்தம்புது அடுக்கு.நல்ல அபூர்வமான அடுக்கும்கூட. கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடத் தெரியாமல்  நாம் கடந்து போவது ஒரு தடத்தை  அழிப்பது போலத்தான். இஸ்லாமியப் பெயரோடு ஒருவர்,இன்றைய சூழலில் வாழ்வின் நெடிய பரப்புக்களைக்  கலாபூர்வமான எழுத்தாக்குவது எளிதான காரியமல்ல. இந்த காரியத்தின் மீது எப்புறத்திலிருந்தும் ஆதரவு சொற்கள் சுலபத்தில் வந்துவிடாது.கதைகள் ஆகுமா ஆகாதா என்று அப்போதுதான் பேசத் துவங்குவார்கள்.இஸ்லாமியர் என்பதற்காக பொதுவெளியின் புறக்கணிப்பு ஒருபக்கமும்,இஸ்லாமிய பின்புலத்திலிருந்து பாராமுகமான பார்வை மறுபக்கமென மிகப்பெரும் இடங்கேறுகளுக்கிடையே ஒரு பிரதிபலனுமின்றி எழுதப்படும்  எழுத்தென்பதையே ஒரு சாதனையாகச் சொல்லலாம்.இங்கே கே.முகம்மது ரியாஸ் தனது அத்தர் சிறுகதை தொகுப்பின் வாயிலாக அடர்த்தியான கவனம் பெற்றவர்.கதை,கவிதை, கட்டுரையென தனது தனித்துவமான எழுத்துக்களால் தன்னை நன்றாக ஸ்தாபிதம் செய்திருக்கிறார்.சிரான இடைவெளியில் இப்போது சிகரி மார்க்கம் வந்தடைந்திருக்கிறது. 
தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன.தமிழில் இதற்கு முன்னால் எழுதப்படாத பாங்கில் எழுதப்பட்டுள்ள ஒன்பது கதைகளும் காட்சிகளும் இதன் வாழ்வும் அறுபுதமானவை என்று நான் சொன்னால் என்ன அர்த்தம் கற்பிப்பார்களோ எனக்குத் தெரியாது ஆனாலும் அதுதான் உண்மை என்பதை என்னால் என் வாசிப்பின் வழி சொல்லாமல் இருக்க இயலாது. அப்பழுக்கற்ற சிந்தனையோடு தேடுகிறவனுக்கு இந்த கதைகளின் உலகம் பெரும் ஆவலுக்குரியது.
     இஸ்லாம் என்றதும் ஒரு பண்பாடு என்றுதான் உலகில் பலரும் புரிந்து வைத்திருக்கின்றனர்.வழிபாட்டு முறைக்கடந்து வாழ்வியல் கூறுகளாக அது,பன்முகப் பண்படுகளைக் கொண்டது.உணவு உடை சடங்குகள் என தனித்தனியாக அதற்கு ஆயிரம் ஒட்டுதல் உரசல்கள் இருக்கிறது. நன்றாக உண்பவர்கள் உடுப்பவர்கள் என்கிற பொதுப்புத்தியில் உறைந்த அபிப்ராயங்களிலிருந்து அவர்களின் வாழ்வை அவர்களின் தனித்துவமான சொற்களை,அவர்களின் வழிபாட்டு முறைமையின் வாயிலாகக் கலந்துகிடக்கும் அரபுச் சொற்களை,அவதானித்துப் பயணிக்கிறவர்களுக்கு அது காட்டும் உலகமென்பது அசாத்தியமானதாகும். ஏனென்றால் ரியாஸின் கதைகளுக்கு எல்கைகளில்லை.ஆதியிலிருந்து இன்றைய அந்தம் வரை நிலமெங்கும் வியாபிக்கும் வகையிலிருக்கிறது.
           ஒரு நீதிமன்ற வழக்கிலிருந்து ஆரம்பிக்கும் மீரான் (எ) மரியா, இலங்கையின் ஆறுகாவல்துறையில் இருந்து வாகைத்தீவு,கோட்டையூர், ஏர்வாடி, அந்தோணியார்புரம் மற்றும் மிகப்பரந்த கடல்வெளி என நிலமும் இதன் மனிதர்களும் பரந்துபட்ட வாழ்வும் இதன் ஊடாடும் மனிதர்களின் பண்பாட்டுப் புள்ளிகள்,வாழ்வின்  கோலமாகின்றன.இதுஒரு பெருவாழ்வின் சாறு என்பதனால் ஒவ்வொரு துளிக்குள்ளும் அடர்த்தி பெருக்கப்பட்டிருக்கிறது.
"மரியா கடலில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.அதன் மேலே ஒரு ராஜாவைப்போல இடுப்பில் கையைக் கொடுத்து மீரான் நின்று கொண்டிருந்தான்.அவனுக்காக அவனது அம்மா அமலி தூரத்தில் கரையில் கைகளைக் கட்டிக் கொண்டு காத்திருந்தாள்.அவள் வாய் மாதா மன்றாட்டு மாலையை பாடிக்கொண்டிருந்தது"
முரண்களின் அபரிமிதமான இணைவின் உலகம்.இதனை ரியாஸ் துவங்குவதும் பகுதி பகுதியாக நகர்த்துவதும்,எல்லாம் சித்திர வேலைப்பாடுகளைப் போல இருக்கும். மானிடவாழ்விலுள்ள இழப்புகள் வலிகள் துரோகங்கள் எல்லாம் கடந்து மனம் ஒன்றை ஒன்று ஆராதிக்கும் புதிய துவக்கத்தை கதை அனேக நம்பிக்கைகளோடு துவங்கி வைக்கும். இப்போது நமக்கென்று தனித்த கோபமில்லை,தனித்த முடிவுமில்லை நாம் அதனோடு அமைதியாக கலந்து விடுகிறோம்.இது முழுக்க முழுக்க இயற்கைப் பூர்வமான மனம்.இந்த மாயலோகம் ஒன்றால் இயக்கப் படுவதைப்போலவே இவரும் கதைகளை இயங்கவிடுகிறார்.
          கடல்சார்ந்த வாழ்வின் பக்கங்கள் தமிழில் நமக்கு வேறு வேறு தளங்களில் அறிமுகமாகி இருந்தாலும் ரியாஸ் வெளிப்படுத்தும் கதையின் வாயிலாக நமக்கு அறிமுகமாகின்ற கடல்சார் வாழ்வென்பது தமிழுக்கு புதிய பக்கமாகும்.
பகுதாது கோமானே,பார் இலங்கும் சீமானே
அலையாடும் கடல் ஓரம் அரசாளும் கப்பல் ராஜா
திரையோடும் கடலில் திக்கற்ற படகு நான்
கலங்கரையாய் ஆயிடுமோ உன் அருள்
செவத்தகனி தன் இடுப்பில் இருந்த கப்பல் ஒலியுல்லா திவ்விய மாலைச் செய்யுளை எடுத்து ஒப்பித்தார்.கப்பல் ஒலியுல்லா வியக்கத்தக்க ஒரு புதிய அறிமுகமாக மலருகிறது.இதுவரை கடல்சார்ந்த பதிவுகளில் நாம் காணாத புத்தம் புதிய இந்த அறிமுகத்தை ரியாஸின் எழுத்துக்கள் நீட்டிச் செல்கின்றன.இலங்கை மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா என பேரெல்லைகளை வசப்படுத்தி இருக்கும் வாய்ப்புகள். பாதாம் துறைமுகத்தைச் சுற்றியும் கடல்.தூரத்தில் எங்கோ பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பு.பாதை கடலுக்குள் ஒரு பச்சை மினாரா நோக்கிச் செல்கின்றது.சிகரி மார்க்கம் கடல்பற்றிய புதிய சித்திரங்களை மார்க்கங்களை நிறுவும் கதைகளின் திரட்சியாக இருக்கிறது.கதைகள் ஒன்றின்மீது தெரிந்தவாறும் தெரியாதவாறும் அசைவுகளை ஏற்படுத்துகின்றன.இங்கு அசைவுகளுக்குப் பஞ்சமில்லை. ஆழ்ந்து வாசிப்பவர்கள் ஆராயந்து அறிய விரும்புபவர்களுக்கான அழகான திறப்புகள் நிறையக் கிடக்கிறத.ஆஸ்திரேலியாவில் நாளென்று ஒரு கடற்கரைக்கு செல்வதாக இருந்தால் ஒருவர் அங்குள்ள எல்லா கடற்கரைக்கும் சென்று வர இருபத்திஏழு ஆண்டுகள் ஆகுமென்று வாசித்திருக்கிறேன். இப்படியானதொரு பலமுனைகளைக் கொண்ட கதைஉலகமாக சிகரி மார்க்கம் அமைந்திருக்கிறது.
     ஏழாவது வானத்தில் வீடு என்று ஒரு சிறுகதை, கடல்களின் கோமான் தூதர் ஹிள்ரு உப்பு சமுத்திரத்தின் வழியே ஞானத்திரவியங்களை அள்ளித் தருபவர்.ரியாஸும் முஹப்பத்தானவர் என்பதனால் ஞானத்திரவியங்கள் கொஞ்சமல்ல நிறையவே  வசப்பட்டிருக்கிறது.எழுத்துகள் வெள்ளமென பெருக்கெடுக்கும் இக்காலத்தில் அவதானிக்கும் புறஉலகை தனது அகஉலகத்தால் அணுகும் தன்மையில் வெற்றியடையும் ரியாஸ் தனது எழுத்துகளை முந்திய எந்த சாயலுமில்லாமல் பார்த்துக் கொள்வதும் சிறப்பானது.கதை கலைப்பு,விரிவடைந்த எல்கைப் பயணம்,தனது நம்பிக்கையின் வழியேயான தென்மங்களின் இணைவு என பன்முகத்தன்மை கைக்கொண்ட விளையாட்டு நீண்ட பரப்புக்கு நகர்த்துகிறது.ஒருவகையில் வாசகனை வேறு வேறு பகுதிக்கு துரத்துவதும் கூட இலக்கியத்தின் உயர்தன்மைதான்.கதைக்கு வெளியே அவன் தேடவேண்டிய பேருலகின் திறப்புகளை,சாம்பிராணிப் புகை பனிபோல் பரவுவதைப் போலவும் உள்ளுக்குள்ளிருந்த ஒரு மிருகத்தின் கர்ஜனையாகவும் செய்ய இயலுகிறது.
           புல்வெளியில் பொசுக்கென இறங்கி ஒரு கால்நடை மேய்வதுபோலவும் மேயலாம். அவ்வாறான மேய்தலில் வயிறு நிரம்பும்.இன்ன சக்தியுள்ள உணவு என்று அறியாமல் உண்டாலும் அதன் சக்தியை உடல் கிரகிக்கதானே செய்யும்.அறிந்து கொள்ளும் போது அது மேலும் அலாதியானது.வாசிப்பும் ஒருவகையில் இப்படித்தான்.அது தரும் புதிய திறப்புகளில் ஏதுவாகப் பயணித்தால் பேரானந்த அனுபவமாக மலரும் "சிகரி மார்க்கம்" இதனை கதையாகவும் கொள்ளலாம் இதுதரும் புதிய திறப்புகளின் வழி பேரானந்தம் பெரும் தடமாகவும் கொள்ளலாம்.எல்லா கதைகளிலும் இதன் அம்சங்கள் மறைக்கப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டுமிருக்கிறது. "மண்ணறைக்குச் சென்றுவிட்டவர்களின் நினைவாக இருக்கும் பிரதியை,வாப்பாவின் வற்புறுத்தலால் இடுப்பளவு தண்ணீரில் கடலில் விட்டுவிட்டு வந்தேன்.குர்ஆன் பிரதி மீண்டும் மீண்டும் கரையில் செங்குத்தாக ஒதுங்கி நின்றது.ஏழாவது முறை கடலில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தபோது, வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த இலந்தை மரத்தின் மீது குர்ஆன் பிரதி தொங்கிக்கொண்டிருந்தது.
நெஞ்சோடு பிரதியை அணைத்துக் கொண்டேன்.'பெத்தம்மா....'
'இறைவா, தூயர் ஹிள்ரு பொருட்டால் என் சிரமங்களின் நன்மையை புலன்களுக்கு உணர்த்துவாயாக ! நான் ஒதுங்கிக் கொள்ள ஒரு கூரை வழங்குவாயாக! கூரையின் கீழ் ஞானக்கோப்பையைத் தருவாயாக ! உன்னிடத்தில் சேர்க்கும் ஒரு கப்பலை இக்கரைக்கு அனுப்பி வைப்பாயாக ! கடலைப் பார்த்துப் பிரார்த்தித்தேன்.
இவ்வாறாக கதை விரிக்கும் உலகம் ஒரு ஞானப்பரப்புக்கான மெல்லிய பாலத்தைச் சமைப்பதை அவதானிக்க இயலுகிறது.சிகரி மார்க்கம் பழையது எதுவும் போல இல்லாத புதிய அனுபவம்.தமிழில் கடல்சார் இஸ்லாமிய வாழ்வின் பதிவுகளின் ஆரம்ப புள்ளியும் கூட.ஒன்பது கதைகளும் விரிக்கும் உலகிற்கு ஒரு தொடர்புகள் தென்பட்டாலும் இதன் வாழ்வும் வரலாறும் நம்மை நீண்ட மௌனத்திலாக்கி பின்னர் பெரும் உரையாடலுக்கு இட்டுச் செல்பவை.கே.முகம்மது ரியாஸுக்கு அன்பும் வாழ்த்தும்.

சீர்மை வெளியீடு
பக்கம் 135
விலை ரூ 175

"உலகியல் அறிவு " தோழர் காமுவின் ஆஸ்திரேலிய போஸட் அறிமுகம்

      ஒவ்வொரு முறையும் நம்மை புதுப்பிக்கும் அழகிய வேலையைப் பயணங்கள் செய்கின்றன. பயணத்தைப் பற்றி நினைப்பதும் பயணத்தைப் பற்றி பேசுவதும் புத்துணர்வளிக்கும் செயல்களில் உள்ளவை.இதல்லாது பயணத்தைப் பற்றி எழுதுவது என்பது மானுட விசாலத்தின் மீது  புத்தொளி பாய்ச்சும் ஆவணமாகும்.கவிஞர் கோவை காமு அவர்களின் 'ஆஸ்திரேலியா போஸ்ட் 'என்கிற இப்பயண அனுபவ நூல் ஆவணங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கும் அழகிய புதிய ஆவணமாகும்.

           1888ல் சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு துவங்கி புகழ்பெற்ற பயண இலக்கியங்களைத் தந்த நெ.து.சுந்தரவடிவேலு,ஏ.கே செட்டியார் வரிசையில் எழுத்தாளர் சோமலே என்கிற சோம.லெட்சுமணன் 1950ல் ஆஸ்திரேலியாவில் ஒருமாதம் என ஒரு பயண நூலைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறார்.1972க்குப் பிறகு எழுத்தாளர் மணியன் சிங்கப்பூர் மலேசியா ஆஸ்திரேலிய பயண அனுபவங்களை எழுதியிருக்கிறார். ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம் ஆஸ்திரேலியா பயண அனுபவங்கள் என்றும் 2012ல் பி.எம்.இராமசாமி ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள் என்ற ஒரு பயண நூலைப் படைத்திருக்கிறார்.இந்த நீண்ட தொடர்ச்சியின் வரிசையில் கோவை காமு அவர்கள் இப்போது ஆஸ்திரேலியா போஸ்ட் வாயிலாக தனது சிறப்பான பார்வையை ஐம்பது கட்டுரைகளாக எழுதிய இந்த நூல் சமீபத்திய பயண இலக்கிய நூற்களில் மிக முக்கியமான புதிய வரவாக இருக்கிறது.ஆஸ்திரேலியா நாட்டின் பன்முக தன்மையை அப்படியே எடுத்துவரும் காமுவின் எழுத்து நமக்கு படிப்பினையாக அமைகிறது என்பதை உறுதியாகக் குறிப்பிடலாம்.
         ஆதியிலிருந்தே மனிதன் இடம் விட்டு இடம் நகரும் பயணியாகத்தான் இருந்திருக்கிறான்.இப்படி நகர்கிறவர்களிடமிருந்தே மானிட சமூகம் புதியவைகளை கற்றுக் கற்று தேர்ந்திருக்கின்றன.பயணிகளால்தான் புதிய இடங்கள்,புதிய கலாச்சாரங்கள், இப்படி எல்லா புதியவைகளும் பரஸ்பரமாக வந்தடைந்தும் சென்றடைந்தும் காலங்கள் கடந்திருக்கிறது.கோவை காமு அவர்கள் இப்போது புதிய ஒன்றை வந்தடையச் செய்திருக்கிறார்.இது காலத்தின் அவசியமான ஒன்று.எப்படி அவசியமான ஒன்று என்பதைத்தான் இந்த ஐம்பது கட்டுரைகளும் நம்மோடு கதைக்கின்றன.
            காமு அவர்கள் தகவல்,செய்தி, கலாச்சாரம் ,தனித்துவமான தன்மைகளடங்கிய வாழ்வியல் இயல்புகள்,அரசு மற்றும் அரசமைப்பு முறை,உறவும் உறவுச்சிக்கலும், இணைந்து வாழுதல் மற்றும் தன்பாலின ஈர்பார்களின் சுதந்திரமென ஏராளமான பொருண்மைகளில் ஒரு தொடர் உரையாடலை நிகழ்த்துகிறார். இதில் வாசகனாக பங்கெடுக்கும் நாம் ஒப்பீடு செய்து பார்பவர்களாகவும் மலைப்பவர்களாகவும் அல்லது அப்படியான கட்டங்களை இங்கு நிறுவும் அகமன விருப்பத்தை விவாதிப்பவர்களாகவும் பயணிக்கிறோம்.அவர் பயணத்தில் நம்மை இணைக்கும் இந்த பயணநூல் ஒரு கல்வி நிலையத்தின் கற்பித நுட்பங்களை நமக்குள் மெல்லக் கடத்துகிறது.மனித சமூகம் ஒன்றுக்கொன்று முகம் பார்க்கும் கண்ணாடியாக இருக்கின்றன. செம்மைப்படுத்துதல் தொழில் விஞ்ஞானம் பொருளியல் மேம்பாடு காலநிலை என இன்று சர்வதேச சமூகத்துக்கு சில பொது குணாம்சங்கள் இருப்பதனால்  நாம் சர்வதேச சமூகத்தினைக் கற்பது காலத்தேவையாக இருக்கிறது.நாம் இதனை பாடசாலையின் மாணாக்களைப் போல கற்க இயலாது .எனவே இப்படியாகத் திறக்கும் தனித்தனி வாசல்களின் வழியேதான் நாம் நம் பார்வையை விசாலப்படுத்த இயலும்.இன்றைய நவீன உலகின் போக்கில் இன்று தொடர்பு என்பது எல்லாவகையிலும் சாத்தியம் என்றாலும் காமூ சுவீகரிக்கும் சில நுட்பங்களை பொதுவான தன்மையால் கொண்டுவர இயலுமா என்றால் அது சாத்தியமற்றது.எனவே இந்த பயணநூல்கள் நமது அறிவு பரப்பில் சாத்தியமற்ற ஒன்றையே சாத்தியப்படுத்துகிறது. ரோடு நன்றாக இருக்கும் பூங்காக்கள் அழகாக இருக்கும் கடற்கரைகள் கவர்ச்சியானவைகள் என்ற பொது பிம்பங்கள் கடந்து காமு சாலையில் சும்மா நிற்கும் போது ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் உதவ முன் வருகிறான்.ஒரு மனிதர் சாலையில் நிற்கிறார் ஒருவேளை அவருக்கு உதவி தேவைப்படலாம் என்ற எண்ணம் அங்கு வளர்க்கப்பட்டிருக்கிறது.நாம் ஒதுங்கிப் போய்விட வேண்டும் என்ற போதனையைக் கைக்கொண்டிருப்பவர்கள்.இங்கே காமு பதியும் வாழ்வு நமக்கு மாற்றுப் போதனையைத் தருகிறது.தனிமனித சுதந்திரம் என்பதன் வரையரை இந்த உலகின் சிறிய கண்டமாக இருக்கிற ஆஸ்திரேலிய வாழ்வின் வாயிலாக நமக்கு ஆவணப்படுத்துகிறார்.இந்த நூலுக்கு உள்ளேயும் வெளியேயும் நம்மை தேடத் துரத்தும் ஒப்பனையற்ற எழுத்து மதிப்புக்குரிய கவிஞர் காமுவினுடையது.

          அவர் நூலில் குறிப்பிடுகிறார் அரசாங்கத்தைப் பொறுத்தவரை கடவுள், மத,நம்பிக்கையில் எந்தப் பாகுபாடும் காட்டுவதாகத் தெரியவில்லை. குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகள் அவரவர் விருப்பப்படி மத அடையாளங்களை அணிந்துவரலாம் என்று அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

1901ல் இயற்றப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 106வது பிரிவு, அரசு, மதவிவகாரங்களில் தலையிடக்கூடாது. எந்த மதத்தையும் சாராமல் நடுநிலையோடு (State Neutrality) இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அந்த வகையில் இந்நாடு மத நடுநிலை நாடாகவும் திகழ்கிறது.இந்த செய்தி பெரும் படிப்பினையை சொல்லத்தருகிறது.

   
           பயணங்களின் வழியே நிகழும் உலகியல் அறிவு என்பதை நாம் பயணமல்லாத இன்னொன்றிலிருந்து கற்க இயலாது.எனவே பயண இலக்கியம் மானிட வாழ்வை மேலும் செம்மையான பகுதிக்கு நகர்த்தவல்லது.ஆஸ்திரேலிய நாடு பற்றி காமு எழுதியிருக்கும் இந்த பயண அனுபவ நூல் நம்மை செம்மையான ஒரு பக்கத்துக்கு நகர்த்துகிறது.இது ஒரு புள்ளி.இந்த புள்ளி மேலும் விரிவுபட வேண்டும். எழுத்தாளர் கவிஞர் கோவை காமு மேலும் இதனை விரிவாக்குவார்.


                           அன்பும் வாழ்த்தும்
                          எம்.மீரான் மைதீன்.

Monday 11 December 2023

"ஒரு அழகிய கனவுசீன் கதவு"

நூல் அறிமுகம்: சேலம் ராஜா

எதையாவது ஓரிரு வார்த்தைகளை எழுதுவதும் பின்பு அழித்துவிடுவதுமாக, திருவாழியை வாசித்ததிலிருந்து மனம் ஓர் உள்ளே வெளியே விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. காரணம் அது வாசக நெஞ்சின் இருண்ட பகுதிகளையும்  தன்னுடைய பொருள் புதைந்த, கருணைமிக்க, எளிய மனங்களின் ஏகபோக அன்பினால் ஒரு வெளிச்சத்தை இழையோட விட்டிருப்பதுதான். இன்றெல்லாரும் நவீன காலத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் பழைமையான உணவு வகைகள், மண்பாண்ட சமையல், இயற்கைமுறை விவசாயம், பசுமை நடை, ஆற்றுக்குளியலென காலத்தில் பின்சென்றவற்றைத் தேடி ஓடுபவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இதுவொரு உணவுச்சங்கிலித் தொடர்போலத்தான். கற்காலத்திலிருந்து தொடங்கி நவீனமயப்பட்டு பிற்பாடு கற்காலத்தை நோக்கியே திரும்புவது. இதுதான் என்றுமே மாற்றமுடியாத நியதியும்கூட. இன்னும் ஒரு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்குமென்பது இப்பொழுது இருக்கும் நமக்குத் தெரியப்போவதில்லை. ஆனால் இந்தக் காலச் சுழற்சியில் நாமும் சிறு துரும்பாகச் சுழன்றுகொண்டிருப்போம் என்பது உண்மை. இதிலுள்ள ஆச்சரியப்படும் ஒருசில உண்மைகள் என்னவென்றால், திடீரென திருவிழாக்கூட்ட நெரிசலில் நாம் தொலைத்துவிடுபவை / விடுபவர்களை இந்தக் காலம் மீண்டும் ஒரு புள்ளியில் நம்மிடமே அல்லது தொலைந்துபோன இடத்திலேயே வீசிச் செல்வதுதான். அப்படியாக, ஒருசிறு நிலத்தில் வாழும் சில மனிதர்களின் பெருவாழ்வே இந்தத் திருவாழி. 

இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் சிறு துரும்பில் கால்பகுதிகூட இல்லை. ஆனால் மனிதகுலத்திலிருந்து  எதிர்கொண்டு பார்க்கையில் அவனுடைய வாழ்வென்பது எவ்வளவு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் எத்தனையெத்தனைத் திருப்பங்கள் பொதிந்துகிடப்பதாகவும் இருக்கிறது! திருவாழி என்பது வளர்ந்துவரும் ஒரு சிறு நகரிலுள்ள ஏழு கடைகள் அடங்கிய வணிகக் கட்டிடம். இத்தனைக்கும் அந்தப் பெயர் அதற்கெனப் பிரத்யேகமாக வைக்கப்பட்ட பெயரல்ல. அது அதனுடைய உரிமையாளரின் பெயர். அவர் வசிப்பது வேறொரு ஊராக இருப்பினும் தன்னுடைய மாமியார் வீட்டுவழி கிடைத்த நிலத்தில் அந்த வணிக வளாகத்தை நிறுவுகிறார். பிறகு அதில் கடை வைத்துத் தொழில் செய்து பிழைக்க வரும் மனிதர்களும் அவர்தம் வாழ்வுமே இந்த நாவல் முழுக்க விரியும் பிரதானக் கதைக்களம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் தொடங்கி இரண்டாயிரத்துப் பதினைந்து வரை, உத்தேசமாக நாற்பத்தி ஐந்தாண்டு காலம், பல்வேறு மனிதர்களினுடைய வாழ்வை உள்ளடக்கியது. ஒரு தனி மனிதனின் பாதி ஆயுள்; அதைச் சுணக்கமில்லாது சொல்லி முடிப்பதே ஒரு பெரிய வேலை. ஆனால் இந்த நாவலில் பிரவேசிக்கும் இருபதிற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வியலை அன்போடும் பரிகாசத்தோடும் அதேசமயம் சலிப்பேதும் வந்துவிடாதபடி நாஞ்சிலின் பச்சையான புழங்குமொழியில் ஐந்தாறு வருடப் பார்வையாளனாக விவரித்திருக்கிறார் மீரான் மைதீன். 

காட்சிகளாக விரிவடைகையில், மேற்கிலிருந்து கிழக்காக ஐந்து கடைகளும்  கிழக்கிலிருந்து தெற்காக இரண்டு கடைகளுமாக ஒரு ‘எல்’ வடிவத் தோற்றமுடையது திருவாழி கட்டிடம். பின்புறமாக பொன்னம்மா மனையும் எதிர்ப்புறமாக  கிருஷ்ணனின் டீக்கடையும் அதையொட்டி நீளும் பிள்ளையின் மனையுமாக, ஒரு வட்டாரத்தை உள்ளடக்கியது அவ்விடம். இதில் கிருஷ்ணன் கடையின் பக்கவாட்டில் உள்ள சிமெண்ட் பெஞ்சும் சில டிராக்டர் டயர்களுமே பல முக்கிய முடிவுகளெடுக்கப்படும் இடம். கதையின் தினசரி தொடங்குவது கிருஷ்ணணின் டீக்கடையிலிருந்துதான். திருவாழி கட்டிடம் எழும்பிய புதிதில் ஐந்தாம் எண் கடை பட்டணம் சாயிப்புக்காக ஓட்டல் நடத்தத் தரப்படுகையில், அதில் வேலை செய்தவர்தான் இந்தக் கிருஷ்ணண். அப்போது அவருடன் வேலைபார்த்து மரித்துப்போன மைதீன் கண்ணுவின் மகன் அன்சாரிதான் திருவாழி கட்டிடத்தின் மேற்பார்வையாளன்.  அனைத்துக் கடைகளிலும் மாத வாடகை வசூலிப்பது, வருட ஒப்பந்தப் பத்திரத்தைப் புதுப்பிப்பது, திருவாழி வருகிறார் என்றால் அவரை அழைத்துவர, பின்பு போய் பஸ் வைத்துவிட என்கிற பணி அன்சாரிக்கு. ஓர் இருபத்தைந்து வயதுடைய இளைஞன், அறுபதிலுள்ள கிருஷ்ணண் ஆகிய இருவரைத் தொட்டுதான் தினசரி கதைக்களம் விரியும். உடன் வேலை பார்த்த மைதீன் கண்ணுவின் மகன் என்பதால் தன்னுடைய மகன் போலவே கிருஷ்ணன் பரிகாசம் காட்டுவார். அன்சாரியும் எல்லாருக்கும் இணங்கிப்போகிற குணமுடையவன்தான்.  

பட்டணம் சாயிபு, ஓட்டல் நடத்திய காலத்தில் கணவனால் கைவிடப்பட்டு இரு குழந்தைகளோடு சூளாமணி என்கிற  பெண் சாயிபின் கடைக்கு வேலை கேட்டு வருகிறாள். சாயபு யாருக்கும் தவறுதலாகக்கூடத் தீங்கிழைக்காத நபர். வேலையும் தருகிறார். எல்லாம் நல்லபடியாகச் செல்லும்போது சாயிபின் மனைவிக்கு சூளாமணி மீது சந்தேகமெழ, அவளை விளக்குமாற்றால் அடித்துத் தூற்றி, இல்லாத வசவுகளைப் பேசி வெளியே அனுப்பிவிடுகிறாள். அதன்பிறகு தண்ணீர் பிரச்சனையென எதேச்சையாக சாயிபினாலும் ஓட்டலை நடத்தமுடியாமல் போய்விட,  அதிலிருந்து அந்த ஐந்தாம் எண் கடையை எடுத்தவர்களுக்குத் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு இடது கால் முறிய, அந்தக் கடையில் ஏதோவொரு அமானுஷ்யம் இருக்கிறதென ஒரு பேச்சு உலவத்தொடங்குகிறது. ஆறேழு இடது கால்களின் முறிவுக்குப் பிறகு, ஏரியாவில் ஐந்தாம் எண் கடையின் பேச்சுக்கு இறக்கை முளைத்துப் புற்றீசல் கூட்டாமாகி அவ்வூர் கடந்தும் ஐந்தாம் எண் கடையின் கட்டுக்கதைகள் பிரபல்யமடைகின்றன. என்னதான் நாகரீகத்தில் மனிதன் தெளிவான சிந்தனையாளனாக ஆகிவிடினும் உருவமற்றும் இலக்கற்றும் பறந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கதைகள், லேசாக அசைத்துதான் பார்க்கின்றன. நெடுங்காலமாக அங்கேயே திருவாழிக் கட்டடத்தின் ஒவ்வொரு மாறுதல்களையும் பார்த்துவந்த கிருஷ்ணண்கூட, இது முன்பு வேலை பார்த்த சூளாமணியின் சூழ்ச்சியாகத்தான் இருக்குமென நம்பிவிடும் ஆளாகிறார். 

எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனும் திராணி உடையவனாக ஆறேழு இடது கால்களுக்குப்பின் சிலாங்கா என்பவன் வந்து அன்சாரியிடமும் திருவாழியிடமும் பேசி, தாரை தப்பட்டையோடு தடபுடலாக ஐந்தாம் எண் கடையில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையைத் தொடங்குகிறான். கடை தொடங்கிய அன்றே அவனுக்கும் விபத்து நேர்ந்து இடதுகால் முறிகிறது. அக்கடை பற்றிய புற்றீசல் பேச்சுக்கு அது மேலும் பெட்ரோல் ஊற்றியதுபோல ஊரெங்கும் பறந்து பற்றி எரிகிறது. அன்சாரியும் கிருஷ்ணணும் திருவாழியும்கூட, அந்தக் கடையில் ஏதோ மாந்ரீக சக்தி உள்ளதாக நம்பத் தொடங்குகிறார்கள். பின்பு  கிருஷ்ணணின் ஏற்பாட்டால் ஒரு மாந்ரீகன் வருகிறான்; கழிப்பு செய்து சூன்யம் நிவர்த்தியாக்கப்படுகிறது. பிறகு அக்கடைக்கு ஜீனா வருகிறான். இப்படியாக இறந்தகாலம் முதல்  நிகழ்காலம் வரை ஊடாடி ஊடாடி கதைக்களம் விரிகிறது.  

முதலாம் எண் கடை பூபாலன் என்பவனுடைய ஜெராக்ஸ் கடை. இரண்டாவதாக பேபி குட்டியின் நகை அடகுக் கடை, மூன்றாவதாக வேலுமயிலின் டிரம்ப்பட், நான்காவது சிந்துவின் பியூட்டி பார்லர், ஆறாவது ராஜகுமார் அண்ணாச்சியின் மளிகைக் கடை, ஏழாவது சலாமின் டெய்லர் கடை. இப்படியாக, பல மனிதர்களுடைய வாழ்க்கைப் பாடுகளைத் தாங்கியிருக்கிறது திருவாழி கட்டிடம். இதிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் பல கதைகள் இருக்கின்றன. இதில் சிந்து, விவாகரத்தான பேரிளம் பருவத்துடையவள். அவளுக்கு அன்சாரி மீது இன்னதென வரையறுக்கவியாலத ஒரு மோகம் இருக்கிறது. அவனுக்கும்தான். ஆனால் அதுவெல்லாம் தூரத்துப் பச்சையின் அளவுதான். வண்டிச்சக்கரம்போலச் சுழலும் இந்தக் காலம், தன்னகத்தே வைத்துக்கொள்ள மனிதன் நினைப்பவற்றைத் தொலைவில் விசிறிவிடுகிறது. தொலைக்க நினைப்பதை அருகிலேயே இருக்குமாரு பார்த்துக்கொள்கிறது. ஆனாலும் மிக விசித்திரமானது. எங்கெங்கோ அலைக்கழிக்க வைத்தபின் அவன் விரும்பியதை அல்லது அவனுக்குச் சேரவேண்டிய ஒன்றை அவனுக்கே இறுதியில் தந்துவிடும் என்பதே நிதர்சனம். ஐந்தாம் எண் கடையின்படி பார்த்தால் இது மாய மந்திர சித்துவிளையாட்டின் கதையாகத் தோன்றும். ஆனால் உண்மை வேறு. மனிதனின் பெருவாழ்வில் அவையெல்லாம் வந்துபோவதும் பலரும் அவற்றைக் கடந்து வருவதும் இயல்புதானே. அப்படி மிக இலகுவாகக் கடந்துவிடும் இடங்கள் அவை. அதன்பிறகு பார்த்தால், மனிதர்கள் தங்களின் இருப்பை இவ்வுலகில் தக்கவைக்கப் படும்பாடுகளே அதிகமாக நிறைந்திருக்கின்றன.  

அன்சாரி தொடங்கி அவ்வப்போது பெரிதும் பின் விவரணைகளற்றுத் தொலைந்துபோகும் குச்சான் வரை, எல்லாருக்குப்பின்னும் வாசிப்பவர்கள் யாரும் எதிர்பாராத துயரமான நிகழ்வுகள் ஆலைக்கழிவுகளைப்போலக் குவிந்து கிடக்கின்றன. அதுபோலவே மிக இயல்பாக நம்மோடு ஒட்டிக்கொண்டு வரும் மனிதரிடத்தும் உள்ளுக்குள் பொறாமையும் பகைமையும் நிறைந்திருக்கின்றன என்பது வாழ்வின் அபத்தமான விசித்திரம். இப்படிப் பலவாறான ஏற்ற இறக்கமுள்ள கதை மாந்தர்கள் இருப்பினும், எங்கோ இருந்தபடி எல்லாரின் குணங்களையும் பிரித்து அறிந்து வைத்திருப்பவராக இருக்கிறார் திருவாழி. ஏகபோக சொத்துக்கள் இருந்தும் அதை இவ்வூரிலிருந்தபடியே ஆண்டு அனுபவிக்க மகன்கள் ஒத்துழைக்காத வேதனையே அவரை உருக்குகிறது. அவரைப் பொறுத்தவரை இந்த நிலமும் இங்கிருக்கும் மக்களும்தான் அவருக்கு நகமும் சதையும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிப்போக இஷ்டப்படவில்லை மனது. தனக்குப் பிறகு பிடிமானற்று நிற்கும் அன்சாரி தடுமாறிவிடக்கூடாது; அவனுக்கு ஏதாவது நல்லது செய்து கரையேற்றிவிட வேண்டுமென்கிற எண்ணம் ஒருபுறம் அவரை மேலும் வதைக்கிறது. அதுபோலவே அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை; அதில் பகுதி ஆசைகள் இந்த மீதமுள்ள ஜீவிதத்தைக் கடத்த பொருள் சேர்த்திவைப்பதாக இருப்பதுவே. அதற்குள்ளாக சாதி நிமித்தமும் மதத்தின் நிமித்தமும் ஏழ்மையின் நிமித்தமும் ஒருவன் உயிர்வாழ எவ்வளவோ முட்டுக்கட்டைகள் வந்துவிடுகின்றன. மொத்தமாகச் சொல்லப்போனால் வாழும் இந்தச் சிறிய வாழ்வில் கதைகள் இல்லாத மனிதனுமில்லை; ஆசையில்லாத மனிதனுமில்லை என்பது மட்டுமே உண்மை. ஆனால் அதை அன்போடும் கருணையோடும் முன்கொண்டு செல்வதில்தான் இவ்வுலகின் சக்கரம் இயங்குகிறது. அதன்படி அறத்தின்பால் ஒருவன் நடந்துகொள்ளும்போது அவன் முன்பு இழந்தவற்றை வேறு வடிவிலோ எப்படியோ மீண்டும் இயற்கையின் நியதி அவனிடமே அதை ஒப்படைத்துச் செல்கிறது. அன்சாரியும் பட்டிணம் சாயிபும் கிருஷ்ணணும் சிலாங்கா, மனோகரன் வாத்தியார் போல சுயநலத்தோடில்லாமல் அகமனதோடு உரையாடியபின் நல்லவற்றின் பக்கமே நிற்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் போட்டியான வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் அன்சாரி துவண்டுபோகும்போதெல்லாம் அவனுடைய உம்மாவின் வார்த்தைகள் அவனைத் தேற்றிக்கொண்டுவருபவையாக இருக்கின்றன.  

ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடப்பதை எழுதுவது ஓரளவுக்கு சுலபம். ஆனால் இந்த ஏழு கடையின் மனிதர்கள் மட்டுமின்றி இவர்களுக்கு முன் அங்கிருந்தவர்கள், அவர்களின் சுற்றப்பாடுகள் தொடங்கி இடையில் வந்துபோவோர் முதற்கொண்டு அந்நிலத்தின் தகவமைப்பு, இயற்கை,  மலை, மரம் என அப்படியே கண்முன் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் மீரான் மைதீன். அங்குள்ள ஏழு கடைகளை வர்ணித்திருப்பதிலேயே வாசகன் மனதில் காட்சிகள் விரிவடையத் தொடங்கிவிடுகின்றன. அதிலேயே ஒட்டுமொத்தக் கட்டடத்தின் வரைபடமும் மனத்தில் பதிந்துவிடும். மேலும் மைனர் சலீம் கடை சிந்தியாவிற்கும் அண்ணாச்சிக் கடை அகிலனுக்கும் டிரம்பட் கடை பிலிப்பிற்கும் சிந்துவிற்குமென நாவல் முடிந்தபிறகும் பெருங்கதைக்கான கிளைகள் நீண்டிருக்கின்றன. அதுவொரு வாசகப் பார்வைக்கான வெளியாக ஆசிரியர் திறந்துவிட்டிருக்கிறார் போலும்.  

சிந்துவின் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பியூட்டி பார்லரை மிக உவமையோடு விவரித்திருப்பார். அதிலொன்றுதான் அழகிய வேலைப்பாடு மிகுந்த உள்அறைக் கதவு. அதை ‘கனவுசீன்’ கதவு எனும் சொல்லாடலில் குறிப்பிட்டிருப்பார். படிக்கும்போது ஒருமாதிரி சிரிப்பு வந்தாலும் பிறகு அதுவொரு பரஸ்பர அடையாளமாக ஒட்டிக்கொள்ளும். ஒட்டுமொத்த நாவலில் சிந்து வருமிடங்களிலெல்லாம் கனவுசீன் கதவும் வந்துகொண்டேயிருக்கும். அவள் அதை விலக்கிவிட்டுப் பார்ப்பதே சினிமாவின் ஒரு அழகிய காட்சிபோலத் தோன்றும். முழு திருவாழி நாவலுமே காதல், பாசம், பகை, பணம், ஏக்கம், துக்கம், சந்தோசமென எல்லாமே பக்கத்திற்குப் பக்கம் மாறும் ஒரு அழகிய கனவுசீன் கதவுதான். வாழ்வில் ஒரு மனிதன் படிக்கத் தவறக்கூடாத நாவல் இது. 

Saturday 2 December 2023

வாழ்வின் கோலங்கள்'



வாழ்வின் கோலங்கள்'
மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’
பாவண்ணன்



ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் மீரான் மைதீன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப்பற்றி பல நண்பர்களிடம் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அக்கதையின் பெயர் ’மஜ்னூன்’. அரபுமொழியில் அது ஒரு ஏளனச்சொல். பைத்தியம் என்பதுபோல. அரபு சிறையில் அகப்பட்ட ஒருவன், விடிந்தால் தண்டனை என்கிற நிலையில் தன் பிரியமான மனைவிக்குக் எழுதும் கடிதம்தான் அச்சிறுகதை. வேலை தேடிச் சென்ற அரபுநாட்டில், உரிய பதிவுச்சீட்டு இல்லாமல் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு தப்பித்தப்பி ஓடி, இறுதியில் காவல்துறையிடம் அகப்பட்டு சிறைப்பட்டுவிடுகிறான். அரபுநாட்டுக்கு வருவதற்காக அவன் பட்ட துன்பங்கள், அங்கு வந்தபிறகு அவன் பட்ட துன்பங்கள் அனைத்தையும் ஒருவிதமான சுயஎள்ளல் மொழியில் தொகுத்துச் சொல்லும் விதமாக இருந்தது அச்சிறுகதை. பொருளீட்டுவதற்காக ஒரு மானுடன் படும் வேதனைகளும் அவமானங்களும் எத்தகையவை என்பதை நுட்பமான மொழியில் கதை விரிவாக முன்வைத்திருந்தது. அயல்மண்ணில் குப்பை வாகனங்களில் திருட்டுப்பயணம் செய்து, அலங்கோலமான தோற்றத்தில், நகருக்குள் நடமாடும் அவனைத்தான் அந்நாட்டுச் சிறுவர்களும் பெரியவர்களும் பைத்தியம் பைத்தியம் என ஏளனம் செய்து சிரிக்கிறார்கள். விரட்டுகிறார்கள். கல்லால் அடிக்கவும் செய்கிறார்கள். யார் பைத்தியம், எது பைத்தியக்காரத்தனமானது என்கிற விவாதத்துக்கான வித்தை விதைத்துவிட்டு அச்சிறுகதை முடிந்திருந்தது. மேலும் சில ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய ’கவர்னர் பெத்தா’ என்கிற சிறுகதையைப் படித்தேன். அவருக்கென ஒரு சிறுகதைமொழி அழகான முறையில் கைகூடி வந்திருப்பதைக் கண்டேன். என் மனத்தில் நான் குறித்துவைத்திருக்கும் சிறந்த சிறுகதையாசிரியர்கள் பட்டியலில் அவர் பெயரை அன்றே குறித்துக்கொண்டேன். ’ஓதி எறியப்படாத முட்டைகள்’ படைப்பு அவரைச் சிறந்த நாவலாசிரியராகவும் முன்வைத்தது. அடுத்ததாக இப்போது ‘அஜ்னபி’ நாவல் வந்துள்ளது. கடந்த பதினாறு ஆண்டுகளாக எழுதி வரும் அவருடைய சீரான வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது.
’அஜ்னபி’ ஒருவகையில் மஜ்னூன் போன்றவர்களின் கதைகளைத் தொகுத்து முன்வைத்த முயற்சி என்றே தோன்றுகிறது. விசா தாளுக்காக தன் சக்திக்கு மீறி கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு, பாலைவன தேசத்தில் ஒட்டகம் மேய்ப்பவர்கள், ஆடுகள் மேய்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், வாகனங்கள் ஓட்டுகிறவர்கள், சின்னச்சின்ன ஏவல்வேலைகள் செய்கிறவர்கள், தையல் தொழில் செய்பவர்கள், கட்டடத்தொழில் செய்பவர்கள், கறிக்கடையில் வேலை செய்பவர்கள், உணவுவிடுதிகளில் வேலை செய்பவர்கள் என நாவலில் இடம்பெறும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் மஜ்னூன் போன்றவர்கள். ஆனால், அவர்கள் தாயக மண்ணில் வாழ வேறு வழியில்லை. தன் குடும்பம் பசியின்றி உணவுண்ணவும் சகோதரசகோதரிகளை கைதூக்கிவிடவும் தேவையான பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் அரபுதேசம் செல்கிறார்கள். ஒரு காலத்தில் தேயிலைத்தோட்டத் தொழிலாளியாக இலங்கை, மலேசியா, பிஜி தீவுகளுக்குச் சென்றவர்களைப்போல, நம் காலத்தில் அரபுதேசத்தை நோக்கிச் செல்கிறார்கள். யோசித்துப் பார்த்தால், மானுடகுலம் வாழ்க்கைக்கான வழிதேடி ஆதிகாலத்திலிருந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள். பொருள்வயின் பிரிந்திருக்கும் இவ்வாழ்க்கை, அவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் எப்படி வடிவமைத்திருக்கிறது என்பதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கவைக்கிறது அஜ்னபி.
அரபுதேசத்தில் அரேபியர்கள் அல்லாத மற்றவர்கள் அனைவரையும் குறிக்கும் பட்டச்சொல்தான் அஜ்னபி. வட இந்தியாவில் தென்னிந்தியர்களை மதராசி என்பதுபோல, கேரளதேசத்தில் தமிழர்களை பாண்டிகள் என்பதுபோல, கர்நாடகத்தில் கொங்கரு என்பதுபோல, தெலுங்கு தேசத்தில் அரவாடு என்பதுபோல, அஜ்னபி ஒரு அடையாளச்சொல். அதைப் பொருட்படுத்தாமல், எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அரபு தேசத்தை நோக்கி ஏராளமானவர்கள் சென்றார்கள். ஊருக்கு ஊர் ஏஜெண்டுகள் வாடகை வீட்டில் அலுவலகம் நடத்தி, ஆள்களை ஆசைகாட்டி வலைவீசிப் பிடித்து, கடவுச்சீட்டு வாங்கிக் கொடுத்து, விசா வாங்கி, பம்பாயில் (அப்போது மும்பை அல்ல) மெடிக்கல் முடித்து விமானத்தில் ஏற்றிவிடுவார்கள். ஆண்களுக்கு ஆபீஸ்பாய் வேலை, பெண்களுக்கு ஆயா வேலை என்ற ஒப்பந்தப் பேச்சுக்கு, அந்தப் பாலைவன மண்ணில் இறங்கிய பிறகு ஒரு பொருளும் இருப்பதில்லை. கண்ணீரிலும் வேர்வையில் நனைந்தபடி கிடைத்த வேலையைச் செய்து, வாங்கிச் சென்ற கடனை அடைக்கும் வேகத்தில் மூழ்கத் தொடங்கிவிடுவார்கள் அவர்கள். ஒவ்வொருவரைச் சுற்றியும் ஏராளமான கனவுகள். அவஸ்தைகள். வலிகள். வேதனைகள். தூக்கமற்ற இரவுகள். மனநிலைப் பிறழ்ச்சியின் விளிம்புவரை சென்று ஒவ்வொருவரும் மீண்டு வருவார்கள். பொருளாதார அளவில் சிறிதளவேனும் முன்னெறுவதற்கு அரபுதேச வாழ்க்கை துணையாக ஒருபக்கம் இருந்ததென்றாலும், இன்னொரு பக்கத்தில் அவர்களைக் கசக்கிப் பிழிந்து சக்கையாக்கியது என்பதும் உண்மை.காலி பெப்ஸி டின்களை உதைத்துக்கொண்டே நடக்கும் சிறுவர்களையும் பெரியவர்களையும் இந்த நாவலில் பல இடங்களில் மீரான் மைதீன் சித்தரிக்கிறார். தெருவைப்பற்றிய ஒவ்வொரு சித்தரிப்பிலும் இது இடம்பெறுகிறது. அரபியர்கள் கால்பந்தாட்டத்தில் ஆர்வம் மிகுந்தவர்கள். அவர்களுக்கு சாலையில் கிடக்கும் ஒவ்வொரு பொருளும் கால்பந்தாகவே தெரிகிறது. தனியாக நடப்பவன் அதை உதைத்துக்கொண்டே செல்கிறான். கூட்டமாகச் செல்பவர்கள் கால்களிடையே தள்ளித்தள்ளி, அதை ஒரு ஆட்டமாக மாற்றிவிடுகிறார்கள். அரபுப்பகுதிகளில் வாழ நேர்ந்த அஜ்னபிகள் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இந்தப் பெப்ஸி டின்கள்போன்றதுதான். பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் அவர்கள் நடக்கும்போது தடுத்து நிறுத்தலாம். அவர்களை அடிக்கலாம். காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடைக்கலாம். முதலாளிகள் வேலையிடங்களிலேயே அவர்களை இருட்டறையில் வைத்து வதைக்கலாம். தெருவில் நடக்கும்போது கல்லால் அடித்துத் துரத்தலாம். அயல்தேச வாழ்வின் அவலங்களை ஒருவித நகைச்சுவை உணர்வோடு மைதீன் சித்தரித்துச் சென்றாலும் வாசிக்கும்போது மனம் கனத்துவிடுகிறது. சிரிக்கப் பழகாதவர்கள் மனம் சிதைந்து பைத்தியமாகிவிடக்கூடும் என்றொரு பாத்திரம் நாவலில் சொல்லும் இடமொன்றுண்டு. அது நூற்றுக்குநூறு சத்தியம்.

நாவலின் மையப்பாத்திரமாக இருப்பவன் ஃபைசல். பல இடங்களிலிருந்து ஆபத்துமிகுந்த பயணங்கள் செய்து, ஜித்தாவுக்கு வந்து சேர்ந்து, அங்கே அமைந்த நண்பர்கள் உதவியால் எமெர்ஜென்ஸி பாஸ்போர்ட் வாங்கி, இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முயற்சி எடுக்கப்படுகிறது. ஃபைசல் நாவலின் மையச்சரடு. அவனைச் சுற்றி பல மனிதர்கள் வாழ்கிறார்கள். அவனைப்போலவே அவர்களும் அஜ்னபிகள். எல்லா அஜ்னபிகளும் அரபிகளை வெறுப்பதில்லை. அதுபோல எல்லா அரபிகளும் அஜ்னபிகளை வெறுப்பதில்லை. நபியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, உழைப்பவனின் உடல்வியர்வை உலர்வதற்கு முன்பாக, சம்பளத்தைக் கொடுத்துவிடும் அரபிகளும் இருக்கிறார்கள். கைகால்களைக் கட்டிப் போட்டு, இருட்டறையில் வைத்து வேளாவேளைக்குச் சோறு போடும் அரபிகளும் உண்டு. பொதுமைப்படுத்திவிட முடியாதபடி அமைந்திருக்கிறது மனிதவாழ்க்கை.
வேலைநேரத்தில் உழைப்பு அவர்களை வேறெதையும் சிந்திக்க முடியாதபடி வைத்திருக்கிறது. வேலையை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பியதும் தனிமை அவர்களை வாட்டியெடுக்கிறது. தனிமையை நினைவுகளால் விரட்ட முயற்சி செய்கிறார்கள். குடும்பத்தைப்பற்றிய நினைவுகளாலும் ஊரைப்பற்றிய நினைவுகளாலும் மனத்தை நிரப்பிக் கொள்கிறார்கள். அள்ளியள்ளிக் கொட்டினாலும் நிரம்பாத மனம் அவர்களைப் பைத்தியம் பிடித்தவர்களாக மாற்றுகிறது. குழுவாக நண்பர்கள் சேர்ந்து பாலியல் கதைகள் பேசுகிறார்கள். நீலப்படம் பார்க்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள். மது அருந்துகிறார்கள். சீட்டு விளையாடுகிறார்கள். தொலைபேசியில் பாலியல் விஷயங்கள் பேசுகிறார்கள். தூங்குகிறார்கள். ஃபைசலைச் சுற்றிலும் பல விதமான மனிதர்கள் இடம்பெறுகிறார்கள். துன்பமாக இருந்தாலும் இன்பமாக இருந்தாலும், எதிலும் ஒரு நிரந்தரமற்ற தன்மையே ஓங்கியிருக்கிறது. நிரந்தரமற்ற கணங்களைத் தொகுத்துச் சொல்லும் போக்கில் மானுட வாழ்வின் நிரந்தரமின்மையையே நாவல் அடையாளப்படுத்துகிறது.
நாவலில் இடம்பெறும் எண்ணற்ற பாத்திரங்களில் மறக்கமுடியாத ஒரு பாத்திரம் அரூஷா. அவளும் ஓர் அஜ்னபிதான். இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒரு பெண். ஃபைசல் அடிவாங்கி இருட்டறையில் அடைபட்டுக் கிடக்கும்போது, அவனுக்கு உணவைக் கொண்டுவந்து கொடுப்பவள். ஃபைசலும் அவளும் ஒரே முதலாளியிடம் வேலை செய்பவர்கள். கடமை ஒரு கட்டத்தில் இரக்கமாக மாறி, பிறகு கனிவாக மாற்றமுற்று, மெல்லமெல்ல காதலாக உருமாறி, அவனிடம் தன்னையே இழக்கிறாள் அவள். “ஏமாற்றி விடுவாயா?” என்கிற அச்சம் ஒருபக்கம். “உன்னோடுதான் நான் வாழவேண்டும்” என்கிற ஆவல் மறுபக்கம். அச்சத்துக்கும் ஆவலுக்கும் இடையே ஊடாடி ஊடாடி தினமும் வீடு உறங்கும் வேளையில் அவன் அறைக்குள் வந்து மோகத்துடன் தழுவிக்கொள்ளும் அவள் காதல், ஒருவித கனவுச்சாயலுடனும் காவியத்தன்மையுடனும் அமைந்திருக்கிறது. ஈடு இணை சொல்லமுடியாதது அந்தக் காதல். ஆனால், அக்கனவையும் நம்பிக்கையையும் சிதைத்துவிட்டு, அவ்விடத்திலிருந்து தப்பித்து வெளியேறுகிறான் ஃபைசல். கணவன் மனைவியென பரிமாறிக்கொண்ட அன்பும் முத்தங்களும் காதலும் வெறுமையான ஒரு புள்ளியில் கரைந்துபோய்விடுகின்றன. அவளுக்கு இழைத்த துரோகத்தைப்பற்றிய குற்ற உணர்வோடு அவனும், அவனைப்பற்றிய நினைவுகளோடு அவளும் வெவ்வேறு திசைகளில் பிரிந்துபோய்விடுகிறார்கள். பிரித்து விளையாடுகிறது வாழ்க்கை விதி.
மம்மிலி இன்னொரு முக்கிய பாத்திரம். அரபு முதலாளியின் பிள்ளைகளை தன் சகோதரிகளாக எண்ணி நடந்துகொள்கிறான் அவன். அவர்களுக்குரிய மரியாதையையும் லாபப்பங்கையும் அளிக்க அவன் மனம் ஒருபோதும் தயங்கியதே இல்லை. விசாலமான அவன் அன்பும் ஆதரவும் வாழ்க்கைச்சுழலில் சிக்கித் தவித்த ஃபைசலுக்கு துடுப்புகள்போல அமைகின்றன. அரபு நாட்டிலிருந்து வெளியேறமட்டுமல்ல, அவனுக்கு தன் தங்கையை மணம்முடித்துக் கொடுத்து மைத்துனனாக மாற்றிவைத்துக் கொள்ளவும் அவன் விரும்புகிறான். கடையின் வாசலில் கூடிவிடும் பூனைகளுக்கு ஒவ்வொருநாள் அதிகாலையிலும் அவன் பால் ஊற்றி அருந்தவைக்கும் காட்சி நெகிழ்ச்சியானது. வழங்குவதற்கு அவனிடம் அன்பு உள்ளது. மன்னிக்கும் குணமும் உள்ளது. பூனைகளைப் படமெடுத்து, தன் அன்புத் தங்கைக்கு அனுப்பிவைக்கிறான் அவன். அந்தப் படத்தைப் பார்த்து அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தொலைபேசியில் அதைக் குறிப்பிடும் அவள் அம்மா, தங்கச்சங்கிலியையே கொண்டுவந்து கொடுத்தாலும் பொங்கிவராத அளவுக்கு அந்தச் சந்தோஷம் அவள் முகத்தில் பொங்கி வழிந்ததாகச் சொல்லிச்சொல்லிப் பூரித்துப்போகிறாள்.
கருத்தான் காதர் இன்னொரு முக்கிய பாத்திரம். ஊருக்கு அடங்காமல் திரிகிறவனை ஒரு வேலையில் அமர்த்தி, நல்வழிப்படுத்தலாம் என எண்ணிய அண்ணன் ஏற்பாட்டின்படி, அரபு தேசத்துக்கு வந்தவன் அவன். வந்த இடத்திலும் அவன் அவனாகவே இருக்கிறான். மது, புகை, சூது என எல்லாவற்றையும் தொட்டு ஒரு வலம் வருகிறான். சூதாட்டத்தில் ஒரே இரவில் பதினஞ்சாயிரம் ரியால் சம்பாதிப்பது, சிறைக்குச் செல்வது, மீண்டும் திரும்பி ஊருக்குச் செல்வது, எதிர்பாராத விதமாக குரான் படிக்க ஆரம்பிப்பது, எல்லாவற்றையும் ஒரே கணத்தில் துறந்து பள்ளிவாசல் முக்கியஸ்தராக மாறுவது என அவன் வாழ்க்கை முழுக்கமுழுக்க அசாதாரணமான சம்பவங்களால் நிறைந்திருக்கிறது.
முகமே இல்லாமல் ஒரு புகைப்படமாகமட்டுமே அறிமுகமாகி, மறைந்துபோகும் ஒரு பாத்திரம் ஜாஸ்மின். ஃபைசலுக்காக அவன் வாப்பா பார்த்துவைத்திருக்கும் பெண். அவள் புகைப்படம் அவர் கடிதத்துடன் அவனுக்கு வருகிறது. அரூஷாவை தன் நெஞ்சிலிருந்து அகற்றிவிட்டு, அவ்விடத்தில் ஜாஸ்மினை வைக்கிறான் அவன். முதலில் பட்டும்படாததுமாக முளைவிடும் ஆசை, ஒரு மரமென வளர்ந்து நிழல்பரப்பி நிற்கிற சமயத்தில் சூறாவளியென வீசிய காற்றில் அந்த மரம் முரிந்துவிடுகிறது. இந்தியா வரும் தேதி உறுதியாகத் தெரியாத நிலையில் அந்தச் சம்பந்தம் கைவிட்டுப் போய்விடுகிறது. கடைசியில் ஜாஸ்மின் படம் நிறைந்திருந்த அவன் நெஞ்சில் பிர்தெளஸாபானுவின் முகம் அவன் நெஞ்சை அடைத்துக்கொள்கிறது.
அரபு தேசத்தில் முருங்கைமரம் வளர்த்துக்கொண்டு, நாடகம் எழுதி இயக்கும் கனவோடு இருக்கும் குமரி இக்பால், தொழுகை நேரத்தில் வேலை செய்ததால் உதைபட்டு வலியில் புரளும் டைலர், தனிமையின் வெறுமையைப் போக்கிக்கொள்ள, தூக்குப் போட்டுப் பழக விளையாட்டாக முயற்சி செய்யும் ஹபீப் முகம்மது, மம்மனியா, மம்மக்கண், கண்காணிக்கவேண்டிய காவல் பொறுப்பில் இருந்தபடி, பாஸ்போர்ட்டைத் திருடிக்கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடும் பிலிப்பைனி, மிஷரி கிழவன், ஊரிலிருக்கும் நான்கு பெண்பிள்ளைகளுக்கும் நல்லதுசெய்யும் கனவோடு அரபுதேசம் வந்து, கிட்டும் மிகச்சிறிய ஊதியத்தில் எதையும் செய்ய இயலாத குற்ற உணர்வோடு அழும் பணியடிமை, நாசர் என நாவலுக்குள் ஏராளமான மனிதர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள்.
நாசரின் தந்தையாரின் மறைவுச்செய்தி வரும் இடம், நாவலின் மிகமுக்கியமான ஒரு கட்டம். அரபு தேச வாழ்வின் அவலக்காட்சிகளில் அதுவும் ஒன்று. மரணம் இயல்பானது என்று மிகச்சாதாரணமாகச் சொல்லிவிட்டு, விடுப்பு கொடுக்க மறுக்கிறான் அவன் அரபி முதலாளி. அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாத அவன் உடல்நிலை மெல்லமெல்ல குன்றுகிறது. நாசர் சார்பில், பல நண்பர்கள் கூடி அவனுடைய முதலாளியிடம் பேசுகிறார்கள். அங்கே வசிக்கும் இன்னொரு அரபுமுதலாளியும் நாசருக்காகப் பரிந்து பேசுகிறான். எதற்கும் மசியாத கருங்கல்லாக இருக்கிறான் அந்த அரபி. நாசரின் இடத்தில் தன்னுடைய வேலைக்காரனை அனுப்புவதாக அரபி வாக்களித்த பிறகுதான் பதினைந்து நாட்கள் விடுப்பு கிடைக்கிறது. என்ன சம்பாதித்து என்ன பயன், பெற்றெடுத்த தந்தையின் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்துகொள்ள இயலாத நெருக்கடியான வாழ்வுதானே என்கிறபோது அயல்தேச வாழ்வின்மீது கவிகிற கசப்பும் விரக்தியும் நாவலில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
குளிர்சாதனப் பெட்டியின் கதவிடுக்கில் படிந்துவிடும் மணல்துகள்போல அரபுதேசத்துக்கு வந்தவர்கள் நெஞ்சில் ஏராளமான அனுபவங்கள் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. சாதாரண மனிதர்களின் சாதாரண அனுபவங்கள். சாதாரணத்தின் கவித்துவமும் கலையுச்சமும் அந்த அனுபவங்களில் வெளிப்படும்வகையில் தன் வலிமைமிக்க மொழியால் வசப்படுத்தியிருக்கிறார் மைதீன். மைதீனின் பதினாறு ஆண்டு கால இலக்கிய முயற்சிகளில் இந்த நாவல் மிகப்பெரிய திருப்பம். ஒரு நல்ல உச்சம்.

(அஜ்னபி- நாவல். மீரான் மைதீன். காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். 

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...