Wednesday 29 November 2023

"திரைகளில்லை"மொய்தீன் கவிதைகள்

காண்டா மிருகத்தைப்
போன்ற யானையை 
ப்ப்பூ என ஊதித் தள்ளிய மிச்ச இரவை காற்றிலேறி கடந்து பயணித்ததில் ஏழு கடல் பின்னே போயிருந்தது.

ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தைப் போன்ற கொம்புடையவன் 
தானே சுயமாக அறுத்து வீசிய துவண்ட கொம்பில் துருவேறிக் கொண்டிருக்கிறது.

இங்கும் அங்குமாய் 
வெட்டி விளையாடுகிறான்  சங்காரன்.
இவனையும்,அவனையும் கட்டங்களில் நாய்களாக்கி உருட்டுகிறான்.
சங்காரனின் உருட்டு எண்களுக்கொப்ப
குரைக்கின்ற நாய்கள்
கட்டங்களிலிருந்து வெளிக் குதித்து
மிச்ச இரவுகளில் 
பிச்சிப் பிறாண்டி 
குரைத்துக் கொண்டே கிடக்கிறது .

ப்ப்பூ என ஊதிய 
காண்டா மிருகத்தைப் போன்ற யானை
தலையில் விழும் பயத்தில் 
வானம்பாத்தானாய் நகரத் துவங்கிய
பேட்டரி பொம்மைகளை நாய் துரத்துகின்றன.

பொம்மைகள் கதற
நாய்கள் குரைக்க
துருவேறிய கொம்பு முளைக்க
ஏழு கடல் தாண்டிப் பறந்திருந்த தேவதையை நோக்கித் தாக்கோலை தொலைத்திருந்த பொம்மை ஒன்று கத்தியது.

"இந்தக் கடலைப் புரட்டிப் போடு"
அப்போது தேவதைக்கும் பொம்மைக்கும் இடையே திரைகளில்லை.

நவம்பர் 2017

Thursday 23 November 2023

ஓதி எறியப்படா முட்டைகள்

* ஓதி எறியப்படாத முட்டைகள்*

ரொம்ப நாட்களாக படிக்க வேண்டும் என நினைத்த புத்தகம். சகோதரி ஹுதாவால் சாத்தியமானது...
இதுவரை பழக்கமேயில்லாத நாகர்கோவில் வட்டார  மொழி முதலில் படிக்க கஷ்ட்டமாக இருந்த துதான் படிக்கப் படிக்க அப்படியே  ஆழத்திற்கு இட்டுச் சென்றது........

"" கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நாவல்..1999ம் வருடம் முஸ்லிம் முரசில் தொடராக வந்த போது தொடரந்து படிக்கக் கிடைக்கவில்லை...""

இஸலாமிய வாழ்வியலை ரத்தமும் சதையுமாக பாத்திரங்கள் மூலம் உலாவ விட்டிருக்கிறார் ஆசிரியர்  மீரான் மைதீன்....

அந்த நாளைய முஸ்லிம் குடும்பங்கள் முதலில் " பர்மா" சம்பாத்தியத்தையும் அதன்பின்னர், " அரபு" நாட்டு சம்பாத்தியத்தையும் நம்பியே தங்கள் வறுமைப்பாட்டை போக்க விழைந்திருக்கிறது...

முதலில் கவர்ந்த து ,இருநூற்றம்பது வருட  பள்ளி வேப்பமரம்...நூற்றைம்பது வருடத்துப் பள்ளிவாசல். அதன் மோதியார்...

"" வெள்ளிக்கிழமை " குத்பா" தொடங்கியதும்,டீக்கடை நாயரின் குடிசை வீடு தீப்பற்றி எரிகிறது. நாயரின் மனைவி அலறுகிறாள். " குத்பா" ஆரம்பிச்சுருச்சு யாரும் வெளிய போக கூடாது. ஆலீமின்  குரலுக்கு இளைஞர் பட்டாளம் கட்டுப்படவில்லை. முதல் ஆளாக பக்கர் ஓடுகிறான்..அவன் பின்னே இளைஞர் பட்டாளம் ஓடிப்போய் எரியும் நெருப்புக்குள் நுழைந்து குழந்தையை காப்பாற்றுகிறார்கள்...

"" ஒலு செய்ய இருக்கும் ஹவுலு நீரில், முதல் முறையாக  ,நாயரின் குடிசை ஒளு செய்து தனது உஷ்ணத்தை தணித்துக் கொண்டது""... இந்த வரிகள் மனங் கவர்ந்த து"".....

" மொய்து சாகிபு- சுபைதா,...
குச்சித்தம்பி- செய்தூன்
ஹமீது சாகிபு- தஸ்லிமா... 

ஐந்து நேரமும் விடாத தொழுகையாளி ஹமீது சாகிபு. மூன்று ஆம்பளைப் பிள்ளைகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பி பணங்களை மூட்டை கட்டி வைத்துக் கொள்ளும் சாமர்த்தியசாலி.
ஊர்ச்  சொத்தையெல்லாம் ,தனதாக்கிக் கொண்டு விட வேண்டும் எனும் தீராத பேரவா.... தன் பாவங்களை, ஐந்து நேரத் தொழுகை , சுத்தப்படுத்தி விடும் என நம்புகிறார்... ஒவ்வொரு ஊரிலும் இப்படிப்பட்ட  ஹமீது சாகிபுகள்  உள்ளனர்...

" தன் குமர்களை கரையேற்ற ,தன் அருமை மகன் எப்படியாவது வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என எடுபிடி வேளைகளை சலிக்காமல் செய்யும் குச்சித்தம்பியின் மேல் பரிதாபம் ஏற்படுகிறது... மூத்த மகள் பலிகடாவாக  ஆக்கப்படும் சூழ்நிலை  வேதனை..."

" மொய்து- சுபைதாவின் செல்ல மகளின் நிக்காஹ், ஹமீது மகன் ஜின்னாவுடன். 
வெளிநாட்டிலிருந்து வந்த   சபுராளி.  ஆயிஷாவின் கனவில் வந்த ராஜகுமாரன்... திருமணச் சடங்குகளும்  அலங்காரங்களும் மனதை கொள்ளை கொள்கின்றன. என் திருமணத்தில் என் அண்ணண்  அப்போது மருத்துவ மாணவர்....,, பித்தளை அண்டாவை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு என்னை புகுந்த வீட்டில் கொண்டு வந்து விட்ட நினைவு வந்த தை  தவிர்க்க முடியவில்லை."

பேய்க்கதைகள் ,காலனி கட்டிடம் பள்ளிக்கூடம் போக அடம் பிடிக்கும் சிறுவர்களை  ,அள்ளிக்கொண்டு  போனாலும் , அவர்கள் பண்ணும் அலம்பல்கள்,சாத்தான்கோயில் கொடை விழா, ஊருக்கு ரயில் வந்த து வஞ்சனை செய்வினை, எதையும்  விடவில்லை..

சுக்குக் காப்பிக்கடை சுல்தான் மிகவும் சுவாரஸ்ய மனிதர்... 
" அலைகள் ஓய்வதில்லை" ராதாவின் மேலுள்ள அபிமானத்தை, வைத்து அவரை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், ராதா அம்பிகா பெயர்களில்  கடிதங்களை அனுப்பி அவரை பாடாய் படுத்துவதும், தொடர்ந்து நாற்பத்தி ரெண்டு நாள் முட்டையை தலையை சுற்றி  குளத்தில் எறிவதுமாக , , இதைப் பார்த்து  விட்ட ஹமீது அவரை இன்னும் பயமுறுத்த குச்சித்தம்பியின் மகனை விட்டு பயமுறுத்தி,, அவரை  தொடர்ந்து பேதியாக விடுவதும்,, ஆசிரியரின் தீராத நகைச்சுவைக்கு பெரிய சான்று..

அறிவிற் சிறந்த ஆயிஷாவை அந்த ஊர் வழக்கப்படியே  பருவம் எய்திய பின்  ,உடனே கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட பெற்றோர்கள் அவசரப்பட்டு, பணக்கார ஹமீது மகன் ஜின்னாவிற்கு கல்யாணம் செய்து வைக்க , பணத்தாசை பிடித்த ஹமீது கல்யாணத்துக்கு முன்னரே  தோப்பை எழுதி வாங்கிக் கொண்டதோடமில்லாமல்  மருமகளை , கணவனும் மனைவியிமாய் பாடாய் படுத்தி எடுக்கின்றனர். ஜின்னா   மனைவியிடம் பாசத்தை பொழிவதும், வெளிநாடு சென்ற பின்னர் அவன் மனதை மாற்றுவதும்,  அந்தக்காலத்தில் சகஜம்....

ஆயிஷா பிள்ளையை பெற்றெடுக்கு முன் தவிக்கும் தவிப்பு கணவனிடம் ஒரு வார்த்தை போனிலாவது பேசி விடமாட்டோமா எனும் ஆதங்கம்,  பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு அம்மாவுக்கும்  தீராத வேதனை..

குச்சித்தம்பியின் மௌத், மகனின் வெளிநாட்டின்  ஜெயில் வாசம் குடும்பத்தின் அவல நிலை, ஹமீதின் அட்டகாசம் எல்லாம் எங்களின் சிறு வயது ,கிராமத்தில் நடந்த காட்சிகள் இப்போதும் கண் முன்னே நினைவில்...

கடைசியில் ஆயிஷாவை  இப்படி மனப்பிரழ்வுக்கு ஆளானவளாய் காட்டியிருப்பதை தான் மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

"" இஸ்லாமிய சமுதாயத்தில் " படிப்பும் பதவியும் இல்லாததால்த்தான் ஆண் பெண் இருவருக்குமே  இந்தக் கஷ்டம் என்ற நெனைப்பு  வந்து விடுகிறதுதான்""

" இப்போதய படிப்பறிவு முன்னேறிய காலத்திலும் கூட , பரவலாக அங்கங்கே நம் சமுதாய பெண்களின் நிலமைகளில் பெரிதாக மாற்றம் வந்து விடவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை"....

ஜஹ்பர் மதீனா.
22-11-2023

Wednesday 15 November 2023

சைக்கிள் சக்கரம் கோட்டம் எடுப்பவன், லெஃப்ட்ல வளைவுன்னா டாப்புல நாலமத்த கம்பிய முறுக்குவான், எல்லாம் பொறிதான்....

சைக்கிள் சக்கரம் கோட்டம் எடுப்பவன், லெஃப்ட்ல வளைவுன்னா டாப்புல நாலமத்த கம்பிய  முறுக்குவான்,  எல்லாம் பொறிதான்....
-------------------------------------------------------------------
கொலை என்று கருதப்படுகின்ற ஒரு சம்பவம், அந்த கொலையுண்டவனின் தொடர்பிலிருக்கும் நட்புகள், உறவுகள், அக்கம்பக்கதாரை மற்றும் அவன் தினமும் சாப்பிடச் செல்லும் ஹோட்டல் உரிமையாரைக்கூட விடாது துரத்துவதோடு, காவல்துறை அவர்களை விசாரணை என்கின்ற பெயரில் அவர்களின் தற்போதைய நிலையிலிருந்து அப்படியே புரட்டிப்போடுகின்ற அவலம் என்பது ஒன்று. இரண்டாவதாக, இந்த நீளும் பட்டியலில் வருகின்ற எளிய மனிதர்களின் வாழ்க்கை முறையை, பழக்க வழக்கங்கள், பேச்சு மொழிகள் ஆகியவற்றை சுருக்கமாகவும் கனக்கச்சிதமாகவும் சொல்லுகின்ற பாங்கு. இதனூடாக, அவர்களின் அன்றாட வாழ்வின் கண்ணுக்குத் தெரியாக கண்ணிகளாக இருந்து வினையாற்றுகின்ற அரசியல், அதிகார வர்க்கத்தின் மமதையை உணர்த்துவது என தனது "ஒச்சை" என்கின்ற சிறிய நாவலில் ஒரு புதிய பாணியிலான கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார் அருமைத் தோழர் மீரான் மைதீன். நட.சிவகுமாரின் அறிமுகத்துடன் வந்திருக்கும் இந்நாவல் 164 பக்கங்களைக் கொண்டிருக்கிறது. புலம் வெளியீடு. விலை ரூ.180. 

கதையில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்படுகின்ற "கோயா" என்கின்ற கமர்தீன் என்பவர் நாவலின் இரண்டாவது அத்தியாத்திலேயே கொலை செய்யப்படுவதாகச் சொல்லி வாசகனை அதிர்ச்சிகுள்ளாக்கும் மீரான். அதன்பின்னர் அந்த கொலைக்கான மர்ம முடிச்சினை அவிழ்க்கும் முயற்சி என்ற காவல்துறையினரின் நடவடிக்கைகளைச் சொல்வதன் மூலமாக, கதையின் போக்கினை விறுவிறுப்பாக்குகிறார். ஆனால் உண்மையில் ஒரு கொலை, அதைக் கண்டுபிடிக்கின்ற காவல்துறை என்ற ஒரு சாதாரண கோணத்தில் இந்தக் கதையை நாம் அணுகமுடியாத அளவிற்கு, நாவலில் உலவுகின்ற கதைமாந்தர்களின் அறிமுகமும், அவர்களின் பாடுகளும் என அவற்றை நோக்கிய நமது பார்வையைத் திருப்பியிருக்கிறார் மீரான் மைதீன். 

நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற வட்டார வழக்கு மொழி பல வகையில் விளையாடுகிறது. அந்த விளையாட்டின் துவக்கமும் முடிவும் புதியதொரு விளையாட்டின் தொடக்கமாகிறது. மீரானின் துள்ளல் மற்றும் எள்ளல் நடை அவருக்கு இயல்பில் கிடைத்துள்ள பலம். அவ்வாறான மனிதர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர்கள் எழுத்தாளர்களாவதும் மொழிக்குக் கிடைத்த ஒரு வரம். நடந்துவிட்ட கொலையைப் பற்றியோ, அதை யார் செய்திருப்பார்கள் என்பது பற்றியோ அல்லது கொலையுண்டவனைப் பற்றியோ சிந்திக்காமல், அதைச் சுற்றி நடக்கின்ற விசயங்கள் குறித்த பார்வையை விரிவாக்குவது என்கின்ற வகையில் இந்த நாவல் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. 

"கோயா" என்பவன் ஒரு குறியீடு. அதிகாரத்தை ஆட்டுவிக்கும் குறியீடு. அப்படி ஆட்டுவிக்கப்பட்ட அதிகாரம், அந்த அதிகாரத்தின்கீழ் சுழன்று தவிக்கும் ஒடுக்கப்பட்டவர்களைக் கசக்கிப் பிழியும் என்பதற்கான குறியீடு. "எளியவன் கட்டமைத்து வைத்திருக்கும் அழகிய உலகங்களைச் சற்று மேலே நிற்கிறவன் குலைத்துப் போடுகிறான். அவனுக்கு மேலே அவனுக்கு மேலேயென இந்தக் குலைப்பின் கட்டமைப்பு ஒரு படிக்கட்டு மேலேறிப்போகிறது...." என்று மீரான் குறிப்பிடுவது, இந்தக் குறியீட்டினை முன்வைத்துதான் என்ற முடிவுக்கு நாம் வரலாம். 

தனியாக ஒரு மைய நீரோட்டம் என்றில்லாமல், கதையில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரத்தையும் நாம் கவனத்துடன் நோக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு வாசகனைத் தள்ளுவது வரவேற்கத்தக்க உத்தி. நாவலில் வருகின்ற "பஷீர்" "அன்வர்" "மனோரஞ்சிதம்" போன்ற பாத்திரங்கள்  நம் மனக்கண் முன்னால் விரிக்கின்ற செய்திகள் பலப்பல. கட்டமைத்தலில் ஒரு புதிய வடிவமாக இந்த "ஒச்சை" நாவலை நாம் எடுத்துக்கொள்ள முடியும். "எல்லாம் பொறிதான்" என்பதைப் போல தன்னுடைய அனுபவத்தின் மூலமாக மிக அருமையான ஒரு வாசிப்பனுபவத்தைத் தந்திருக்கின்ற தோழர் மீரான் மைதீனுக்கு அன்பும் நன்றியும். 

விசாகன்
தேனி

Sunday 12 November 2023

மீரான் மைதீனின் ஒரு காதல் கதை

இந்தப் பூமியில், பொருளியல் சூத்திரங்களால் மட்டுமே செயல்படுவதுபோல தோன்றும் இந்த இடத்தில் தரிக்கும் மனிதர்களை ஈர்த்து இன்னொரு கோளத்தில் வைத்திருக்கும் மகத்தான ஆற்றல்களில் ஒன்று காதல். ஆனால், காதலின் ஈர்ப்பும் அதனால் காதலர்களுக்குக் கிடைக்கும் பறத்தலும் தற்காலிகமானதே; இந்த ஈர்ப்பு செயல்படும் உலகிலிருந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பார்த்த தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர் மௌனியின் கதாபாத்திரங்களோ தங்கள் காதல் நிறைவேறாத நிலையில் அதற்கு ஒரு அமரத்துவத்தை ஏற்படுத்துபவர்கள். மீரான் மைதீன் எழுதியுள்ள ‘ஒரு காதல் கதை’ குறுநாவலின் நாயகியான ஷீலா தன் காதல் வாழ்க்கையில் வெற்றிகண்டவள்.

காதல் இன்னமும் கசிந்துகொண்டிருக்கும் திருமண வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லை. பணி வாழ்க்கையிலிருந்தும் கல்லூரி முதல்வராக ஓய்வுபெற்று 60 வயதிலும் வசீகரத்துடன் இருப்பவள். நாகர்கோவிலிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலில் பேரக் குழந்தைகளைப் பார்க்கச் செல்லும்போது, தனது வெற்றிக் கதையின் விடுபடல்கள், துயர எச்சங்கள், மௌனங்களைக் கதைசொல்லியுடன் பகிர்ந்துகொள்வதுதான் இந்தக் கதை. காதலுக்கு முன்னர் முஸ்லிம் பெண்ணாக இருந்த அவளது பெயர் வஷீலா. காதலுக்குப் பின்னர் இந்து பெண்ணாகத் தோற்றமளிக்கும் அவளது இப்போதைய பெயர் ஷீலா. வஷீலாவுக்கும் ஷீலாவுக்கும் இடையிலான பயணத்தை எழிலுடன் சொல்லியிருக்கிறார் மீரான் மைதீன். மதம் மாறிக் காதலிப்பது அந்தரங்க உரிமை என்ற நிலையிலிருந்து அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும் சமூக அரசியல் சூழலில் இந்தக் காதல் கதை மேலும் பொருத்தமானது.

ஒரு கதைசொல்லி, ரூமியின் தாக்கம் கொண்ட சூஃபி காதலன், நன்றாகக் கதை கேட்பவன் என்றெல்லாம் கலந்த ரொமான்டிக் கதாபாத்திரமாக, பொன்மொழிகளை அடிக்கடி உதிர்ப்பவராக, ஆனால் வாசகர்களும் ஏற்றுக்கொள்ளும்படியாகக் கதை சொல்லியிருக்கிறார். கோட்டார் சந்திப்பில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஷீலாவுடனான உரையாடல் தொடங்கும் வரை, காதலில் உள்ள உலகம் மறக்கும் தன்மையின் மீது கவனம் குவித்துப் பேசி நம்மில் ஒரு மேடையை நிறுவுகிறார் கதைசொல்லி. சின்னச் சின்னக் காதல் கதைகள் மினியேச்சர் சித்திரங்கள்போல இடம்பெறுகின்றன. அந்தக் கதைகள் வெவ்வேறு நாடுகளில் நடப்பவை. நிச்சயமற்ற பொழுதுகளில் நல்ல காட்சியோ, மோசமான காட்சியோ அவற்றை நினைவாகக் கடக்க வேண்டியிருக்கும் ரயிலில் இந்தக் கதை நடப்பதால் மொழியில் பயணத்தின் லயமும் கவித்துவமும் நுட்பமான கவனிப்புகளும் சேர்ந்துவிடுகின்றன.

ஷீலாவும் இந்துப் பையனான மணிகண்டன் மீது காதல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்று தனது அறுபது வயதில் விசாரிக்கத் தொடங்குகிறார். அவனது உருவம், கண்கள் ஆகியவற்றைச் சிலாகித்தாலும் ஏன் உயிருக்கு உயிராக நேசித்த பெற்றோரைக் கடந்து அவனைக் கைப்பிடிக்கும் பந்தம் ஏற்பட்டது என்பதை அவரால் விளக்கிச் சொல்லவே முடியவில்லை. திருமணமான பிறகு, தாயின் மரணம் செய்தியாகவே ஷீலாவுக்குத் தெரியவருகிறது. தந்தை பேச முடியாமல் மரணப் படுக்கையில் இருக்கும் சில மாதங்களில் மட்டுமே அவரை உடனிருந்து பராமரிக்கும் குறைந்தபட்ச ஆறுதலைப் பெறுகிறார் ஷீலா.

இன்னொரு மதம், இன்னொரு கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்ததால் எந்தவிதமான அசௌகரியத்தையும் ஷீலா அனுபவிக்கக் கூடாது என்று மணிகண்டனின் பெற்றோரால் அத்தனை பிரியத்துடன் நடத்தப்பட்டும் ஷீலாவுக்குத் தன் பெற்றோரைக் கைவிட்ட குற்றவுணர்வு இருக்கிறது. மீண்டும் ராசியாகிவிட்ட தம்பிக் குடும்பத்தின் உறவு, பேரக் குழந்தைகளின் பிரியத்தால் அதை அவள் நிரவுவதற்கு முயல்கிறாள். ஆனால், அவள் கதையில் நிரவ இயலாத பள்ளங்களை, சக இருதயனாக ஓர் இரவு மட்டுமே தன்னுடன் பயணிக்கும் ஒரு வழிப்போக்கனிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறாள்.

ரயிலிலிருந்து கதைசொல்லியைப் போலவே நாமும் இறங்கி ஷீலாவைப் பிரிந்துவிடுகிறோம். இன்னொரு மதம், இன்னொரு கலாச்சாரப் பின்னணியிலிருந்து வேறொரு வாழ்க்கைக்கு, வேறொரு பின்னணிக்குக் காதல் காரணமாகத் துணிகரமாகக் கடந்துசென்ற வஷீலா, ஷீலாவாக மாறிய பின்னர் பெற்றது என்ன? இழந்தது என்ன?

மணிகண்டன் என்ற ஆணிடம் தனது வாழ்க்கையின் திருப்பத்துக்கு ஒப்புக்கொடுத்த ஷீலா குறித்து ஏற்படும் விந்தையின் அளவு, தன் கதையைச் சொல்வதற்கு அவள் அந்த இரவில், ரயிலில் தேர்ந்தெடுக்கும் கதைசொல்லி தொடர்பானதிலும் எழுகிறது. மௌனி, இந்தக் கதையைப் படித்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். தனது பிரபஞ்சத்தில் உள்ள கதையாக ஷீலாவின் கதை இல்லை என்றாலும், ஷீலாவின் துக்கத்தோடு அவர் அடையாளம் கண்டிருப்பார்.

– ஷங்கர்ராமசுப்ரமணியன்,

Saturday 11 November 2023

காலத்தை வரையும் எழுத்து

காலத்தை வரையும் எழுத்து-





நாம் எல்லா வகைகளிலும் காட்சிகளின் வழியே உலகைப் பார்க்கிறோம். அந்தப் பார்வையின் வழியே நிகழும் நமது அவதானமே நம்மைக் கட்டமைக்கிறது. அவதானம் எல்லாக் கண்களுக்கும் ஒன்றுபோல நிகழ்வதல்ல, அது நமது தனித்த மனங்களின் வழியே முன்னமே நாம் அடைந்த சிந்தனைகளின் கூட்டியக்கத்திலிருந்து இயங்குகிறது. நமக்கு நெருக்கத்தில் நிகழும் மகிழ்வானவைகளையும் துயரங்களையும் நாம் உணர்வுநிலையில்  பார்ப்பதுபோல பிற மனிதர்களின் மகிழ்வுகளையும் துயரங்களையும் பார்ப்பதில்லை. மனித மனம் பொதுவாக காலகாலமாக வடிவமைக்கப்பட்ட விதம் இப்படியானதுதான். ஆனால் மனிதர்கள் அபூர்வமாகத்தான் உணர்வுநிலையில்  சமபார்வையுடைய சமூக பங்கேற்பாளர்களாக இருக்கின்றனர். எனவே இன்றைய காலத்தில் சமபார்வையுடை மனிதர்கள் நம்மை கவருகிறார்கள். அதன்பொருட்டு நமக்குப் படிப்பினையாக இருக்கிறார்கள். நாம் அவர்களைப்பற்றிப் பேசவோ எழுதவோ கொண்டாடவோ  விரும்புகிறோம். இப்படியான விருப்பங்களும் கூட எல்லோருக்குள்ளும் நிகழாது. யாரோ எவரோ என அந்நியமான இந்த வாழ்வு நிலையில், அப்படி நிகழுமானால் அதுவும் ஒரு ஞானநிலைதான். இந்த ஞானநிலை வாய்க்கப்பெற்றவர்களில் ஒருவராக, இந்த வாசிப்பில்  கண்டடைந்தவைகளிலிருந்து எழுத்தாளர் ஹேமா அவர்களை மிக நேர்மையாகக் குறிப்பிடுகிறேன். 

  எழுத்தாளர் ஹேமா அவர்களின் "கதையல்ல வாழ்வு" கட்டுரைகளை வாசித்த இந்த அனுபவம் எனக்குள் சில புதிய பார்வைகளைச் சேர்ப்பிக்கிறது என்பதை  வாசிக்க வாசிக்க எனக்கு ஆத்மார்த்தமாக உணர முடிந்தது. இந்த எழுத்தின்  பரப்பென்பது மிகப் பெரியதாக, நிலம், மொழி, பிரதேசமென, எல்லைக் கடந்த சாத்தியப்பாடுகளில்  வியாபிக்கிறது. செல்லும் இடமெல்லாம் மனிதத்தை, மனிதர்களைக் கற்கிற  கரிசனமும் அக்கறையும் கொண்ட இந்த எழுத்தின் குரல் நம்மைக் கூட்டாக்கிக் கொள்வதில் முனைப்புக் கொண்டிருக்கிறது. இந்தக் குரல் அவசியமானதும் கூட, யார் நமக்கு கரிசனத்தோடும் அக்கறையோடும் நம் பார்வை புலனுக்கு, சாதாரண நாயக நாயகிகளின் வாழ்வை, வரலாறை, செய்திகளைக் கொண்டு வருகிறார்களோ அவர்களே அதன் மூலம் நம்மை விசாலப்படுத்துவார்கள். பெருங்கதையாடலும் அதிகாரமும் முயங்கும் வெளியிலிருந்து சாதரணர்களை நோக்கிப் பாயும் பேரன்பின் குரல். குரலற்றவர்களின் குரலாக இதன் பன்னிரண்டு  கட்டுரைகளை இதனடிப்படையில் மிக முக்கியமானதாக கருதலாம். 

        இந்த கட்டுரைகள்  துவங்கியிருக்கும் புள்ளி மேலும் தொடர்ந்து செல்லும் என்றே தோன்றுகிறது. நம் பார்வைப் புலனுக்குத் தெரியாத ஏராளமான மானுடர்களைக் கொண்டியங்கும் உலகினைத் தொடர்ந்து அவதானிக்கும் அன்புமயம் எழுத்துக்கள், இன்னும் காலதேச வர்த்தமானங்களைத்  தாண்டி  இடைவிடாது வளரும் என்றே நம்புகிறேன். ஹேமா அவர்களின் "பாதைகள் உனது பயணங்கள் உனது" என்கிற நூலை வாசித்துப் பெற்ற முந்தைய அனுபவமும் எனக்கு நல்ல நிறைவானது. அதன் நிமித்தமாக அவர் எழுத்தின் உள்ளார்ந்த நோக்கமாக வெளிப்படும் அவரின் சமூகப்பார்வை நம்பிக்கைகளை விதைப்பதை உள்வாங்கியிருக்கிறேன். அந்த புரிதலில் இருந்து வாசகர்களுக்கு நான் குறிப்பிட விரும்புவது, இன்றைய காலம் என்பது இவ்வாறான ஓராயிரம் நம்பிக்கைகளைத் திரும்பத் திரும்ப விதைக்கப்பட வேண்டிய அவசியமுள்ள காலமாகும். 

    இந்த அகன்ற உலகில் நம் கண்களுக்கு முன்னாலேயே மறைந்து கிடக்கும் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்தி அதனைக் கல்வியாக்கி விடுகிற அதீத அக்கரையின் பொருட்டு கவிதை கதை ஆய்வு என பலவகைமைகளில் படைப்புகளை உருவாக்குகிறோம். அப்படி உருவான படைப்புகளை இங்கு ஆழமாகவோ அல்லது மேம்போக்காகவோ  வாசிக்கப்படுகிறது. நோக்கப்படியே அது வாசகர்களைச் சென்றடையுமா என்பதனை உறுதிபட சொல்லவியலாத நிலையில் இதுபோன்ற எழுத்துக்கள் நோக்கத்தை சரியாக செய்துவிடும் என்பதில் தெளிவு இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான முகம் இருக்கிறது. பல தனித்துவங்களை அதனதன் அடிப்படையில் அப்படியே ஏற்றுக் கொள்வதே ஒரு பன்மைத்துவ சமூக அமைப்பின் நாகரீக முகமாகும்.  கட்டுரைகளில் உரைநடை வடிவத்தில் கதைபேசுவது போலவும், சம்பவ அடுக்குகளாகவும், செய்தியாகவும், நேரடி உரையாடலாகவும், இன்னும் சிலவற்றை ஒரு புனைவுபோலவும் பலவிதமான முறைமைகளில் இங்கு ஹேமா அவர்கள்  எழுத்துப் பாணியை கையாள்கிறார். இதனை கட்டுரை எழுத்தின் இன்னுமொரு வடிவமாகப் பார்க்கலாம். மானிட சமூகத்துக்கு முன்னே சமுத்திரம் போல குவியும் எழுத்துகளிலிருந்துள்ள வரலாறும் வாழ்வும் பிரதானவெளிகளில் வென்றவர்களுக்கும் அரண்மனை வாசிகளுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும்  மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கானது. இதன் காரணமாக கீழிருந்து மேல்நோக்கிய வரலாறுகளில்தான் எளிய மனிதர்கள் தங்கள் இருப்பை எப்படி வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை  வெளிப்படுகிறது. வென்றும் முகம் தெரியாமல் பிரகாசமான அகம் கொண்ட அற்புதமனிதர்கள் இவ்வெழுத்தில் அணிவகுக்கிறார்கள். அவர்களோடு நிகழும் உரையாடலும் செய்தியும் அல்லது அவர்களின் கதைகளும் வாசக மனதில் ஒரு உத்வேகத்தை உருவாக்க முனைகின்றன. அந்த முனைப்பில் வெற்றியும் பெறுகிறது. குறைந்தபட்சம் நம்மில் ஒரு அசைவை ஏற்படுத்தாமல் அவை வெறுமையாக நகர்ந்து போகவேயில்லை. 
      ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுபவரைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? அவர் தனது வாகனத்தை நகரங்களின் நெரிசலான சாலையில் சைரன் சப்தத்தை ஒலிக்கவிட்டபடியே விரைந்து ஓட்டுகிறவர் மட்டுந்தானா அல்லது அவர் கூலிக்காக வேலை பார்க்கிற ஒருவர் மட்டுந்தானா..? அவர் தன்னை முன்காட்டிக் கொள்ளாமல் சப்தங்களால் கடந்துபோகும் அந்த வாகனஓட்டி சப்தமின்றி உயிர்காக்கும் தடத்தில் முதல் வரிசைக்காரனாக இருக்கிறான் என்பதனை நாம் என்னென்ன தருணங்களில் உணர்ந்திருப்போம். இந்த முகந்தெரியாத முதல்வரிசைக்காரர்களைப் பற்றிய இந்த எழுத்து நமக்கு புதிய கற்பிதங்களைத் தருகிறது. ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டிச் செல்லும் வீரலட்சுமி நமக்கு அறிமுகமாகிறார். இந்த உலகில் உயிரைவிட மதிப்புமிக்கது என்று எதாவது இருக்கிறதா..? என்றால், ஆமாம் இருக்கிறது என்று நாம் யாரும்  வேறொன்றைச் சொல்லத் துணிவதில்லை. உயிர் மதிப்பு மிக்கது என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும் நாம் சகமனிதர்களை இதன் மதிப்பீடுகளோடு கவனிக்கிறோமா என்ற கேள்வியை  முன்வைக்கலாம். ஒரு கட்டுமானத் தொழிலாளிபற்றி, ஒரு சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளிபற்றி, இன்னும் நாம் அன்றாடம் கடக்கும் இதுபோன்ற எண்ணற்ற சகாக்களைப்பற்றி உண்மையில் நமக்கொன்றுமே தெரியாது என்கிற உண்மை புலப்படுகிறது. நம் வாழ்வின் எல்லா அடுக்குகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அரிய மனிதர்களின் மனுசிகளின் வாழ்வும் வரலாறும் அதன் மதிப்பீட்டு முக்கியத்துவத்தையும் இந்த எழுத்து புலப்படுத்துவதாக அமைந்திருப்பதை வாசிப்பிலிருந்து உணருகிறேன்.
  நகரங்களில் மட்டுமல்லாது சாதாரணப்பகுதிகள் வரையிலும் உயர்ந்து நின்று நம்மை வியப்பிலாழ்த்துகிற கட்டடங்கள் அதற்கு பின்னே முகம் தெரியாத ஆண்பெண் உழைப்பாளிகள், திக்கற்ற இடங்களில் சிக்குண்ட மனிதர்களின் பிரச்சனைகளில் பலாபலனின்றி செயல்படும் மீட்பர்களைப் போன்ற களப்பணியாளர்கள், நாம் அருவருப்பாகக் கடந்துபோகும் கழிப்பிடங்களை சுத்தப்படுத்தும் மாமனிதர்கள், வீட்டு வேலையாட்கள், சாலையோர வியாபாரிகளென ஹேமாவின் எழுத்தில்  உலாவும் மனிதர்கள் நம் மனங்களில் நிரம்புகிறார்கள். அவர்கள் நம்மிடத்தில் யாதொரு கேள்வியும் கேட்கவில்லை அல்லது எந்த முறைப்பாடுகளையும் சொல்லவுமில்லை ஆனாலும் சிலவற்றில் மனம் கனக்கிறது. சிலரின் அதீத செயல்களால் நம் மனம் நிறைகிறது. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் நமக்கு அடையாளப்படுத்தும் இந்த  எழுத்துக்கு எல்லையற்ற கருணை இருக்கிறது. உறவுகளே கடந்துபோய்விடுகிற இந்த துயரம் மிகுந்த உலகில் யார் எவரென அறியாமலேயே  இறந்த உயிர்களிடத்தில் பெருங்கருணை கொள்ளும் மனிதர்கள் தங்கள் உயர்ந்த செயல்களின் வாயிலாக உயர்ந்து நிற்கின்ற அபூர்வங்களைத் தேடிக்கண்டடைந்து ஹேமா நம்மிடம் சேர்க்கிறார். இந்த அபூர்வ மாமனிதர்களை, அவர்களின் கதையை, வாழ்வை, அவர்களின் உன்னதமனங்களை, அவர்களின் பல்வேறு செய்திகளை நம்மிடம் எழுத்துக்களாக்கி சேர்ப்பதில் அவருக்கு உயர்ந்த சமூக நோக்கமிருக்கிறது. அது எல்லையற்ற அன்பின் வடிவம். சீர்திருத்தத்தை விரும்பும் உவகைக் கொண்ட மனதின் பிரார்த்தனை. மானிடத்தின்பால் அன்பும் கருணையும் கொண்ட பிரார்த்தனையாக இது மலருவதால்தான் இவ்வெழுத்து உருவாக்கும் காட்சிகளோடும் அந்தக் காட்சியில் உலவும் மனிதர்களோடும் நம்மை உறவாடச் செய்வதிலும் இந்தக் கட்டுரைகள் முனைப்பு கொள்கின்றன. செலினா சேச்சியைப்பற்றிய வரைதல் மலைப்பாக இருக்கிறது. நமக்கு இவ்வுலகில் அறிமுகமாகின்ற சுடுகாட்டில் பிணம் எரிக்கும் பணியைச் செய்யும் முதல் பெண். சமரசம் உலாவும் இடம் என்று உண்மையில் சுடுகாட்டைச் சொல்ல இயலுமா என்ற கேள்விகள் முன்வருகின்றன. கவிஞர் மருதகாசியை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய காலத்தைச் சொல்கிறது. செலினா சேச்சிக்கு இறந்த உடல்களின் மீது ஒரு பயமும் இல்லை. மாறாக உயிருடன் இருப்பவர்களிடத்தில்தான் பயமிருக்கிறது. இன்னொரு அற்புத மனுசியாக நமக்கு அறிமுகமாகும் வீரலட்சுமிக்கு உயிருக்குப் போராடும் மனிதர்களிடத்தில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை. அவர் சேவையின் பொருட்டு பால் வேறுபாடுகளைக் கடந்த ஞானநிலையை கண்டடைகிறார். இன்னொரு முனையில் கெட்டு அழுகிப்போன ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் ஹாலீத் குழுவினர் மற்றுமொரு மலைப்பு. ஒரு நேர்கோட்டில்தான் எத்தனை எத்தனைப் பார்வைகள் எவ்வளவு எவ்வளவு பயணங்கள் நடந்தேறுகின்றன. இந்த வாழ்வும் நிலையும் மனிதர்களை அப்படியே பக்கத்துக்குப் பக்கம் புரட்டிப் போடுகிறது. ஆனாலும் யாரும் எதுவும் எந்த நிலையிலும்  ஸ்தம்பித்துப் போய்விடவில்லை. பாரமும் வலியும் கடந்து நூலாசிரியர் ஹேமா ஒரு பறவை பறப்பதைப்போல இதனை வாசகப்பரப்பில் வரைந்து செல்கிறார். இன்னும் வரைவார். செலினா சேச்சியின் வாழ்வை மைய்யமாகக் கொண்ட ஜூவாலமுகி திரைப்படத்தை தேட வேண்டும். 
    இது ஒரு உன்னத இலக்கியமாக எழுத்துமுறையில் எல்லாக் காத்திரங்களையும் வலுவாகக் கொண்டிருக்கிறது. நேர்த்தி பெற்று  இந்த எழுத்துக்கள் நல்ல நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. உயரமான ஓரிடத்தில் நம்மை அமர வைத்து விசாலமானப் பார்வையை ஏற்படுத்துகிறது. ஒரு தந்தை தன் குழந்தையை தலைக்கு மேலாகத் தூக்கிப் தூரத்தில் ஒன்றைப் பார்க்க வைப்பது போல பார்வைகளினூடாகவே  நாம் எல்லா அவதானங்களையும்  பெறுகிறோம். நமக்கு இதுபோல எண்ணிலடங்காத அவதானங்கள் தேவைப்படும் காலமாக இது இருக்கிறது. இந்த நேசகரமான புரிதலோடு ஹேமா அவர்கள்  காலத்தை தம் எழுத்துகளில் இட்டு நிரப்புகிறார். இந்த நிரப்புதல் கதையல்லாத வாழ்வாக இருக்கிறது. இந்த நூலை வாசித்து சுற்றிலுமான  மனங்களைப் பாருங்கள், பிறறோடு பேசுங்கள், யாராவது பேசினால் உங்கள் காதுகளை சற்றேனும் அப்பக்கமாகத்  திருப்புங்கள். கேலக்ஸி வெளியீடாக வெளிவரும் இந்த கட்டுரை நூலுக்காக எழுத்தாளர் ஹேமாவுக்கு நெஞ்சம் நிறைந்த அன்பும் வாழ்த்தும்.
  

அன்புடன்
எம். மீரான் மைதீன்
பெங்களூரிலிருந்து
20/10/2023

Thursday 9 November 2023

தோன்றிய பொழுதின் பயணம்

"தோந்நிய யாத்ரா" என்ற மலையாளச் சொல்லின் பொருள்,தோன்றிய பொழுதின் பயணம்.
சாளை பஷீரின் இந்த நூல் பஷீர் எனக்குத் தந்து நாட்கள் நிறைய ஆகிவிட்டது.ஐந்தாறு நாட்கள் தீவிர எழுத்திலிருந்து இன்று வாசிப்பின் பக்கம்  திரும்பியபோது சிக்கியது. மலையாள நிலத்தில் நிகழ்த்திய பயணங்களின் வழியே அவரின் அனுபவங்களை நல்ல புதினம்போல எழுத்தாக்கி இருக்கிறார்.சாளை பஷீர் நம் பிரியப்பட்ட ஆசான் பஷீரின்,பேப்பூர் மற்றும் தலையோலப்பரம்பு முதலான  இடங்களில் நம்மையும் அழைத்துப் போகிறார். அப்படியே பாலக்காட்டிலுள்ள தஸ்ரக்கிலுள்ள ஆளுமை ஓ.வி.விஜயனின் நினைவகம் என அவரின் பயணத்தில் நாமும் இணைவதுபோன்ற நடபடியில்  அற்புதமான அனுபவமாகிறது. அவரரவர்களின் எழுத்து மொழியினை நமக்கு வசப்படுத்தும் ஒரு காரியத்தை சாளைபஷீர் அழகிய மொழியில் நமக்கு கடத்துவது இந்த நூலின் பேரம்சமாக இருக்கிறது.தொடரும் அவரின் யாத்திரைகளில் நாம் மேலும் அறிய இயலாத நல்ல அனுபவங்களைப் பெறுகிறோம். சும்மா ஒரு தகவலாக மட்டுமில்லாமல் தேர்ந்த வார்த்தைகளால் நல்ல இலக்கியமாக இதனை செய்திருக்கிறார்.
   
நவீனகால மனிதன் ஊர்களையும் கிராமங்களையும் உருக்கி நகரங்களாய் உருட்டித் திரட்டுகிறான்.ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைக் கொல்லவும் கற்றுக்கொண்டான்.ஆனால் கிராமங்களை ஊர்களைப் போல ஆறுகளை உருமாற்றும் கலையை இன்னும் கற்கவில்லை என்று பல்வேறு வராலற்று சிறப்புகளைக் கொண்ட  பொன்னானி நகர் பற்றிய பயணஅனுபவத்தில் பஷீரின் எழுத்து மிகமுக்கியமான ஒருபதிவாக இருக்கிறது.பொன்னானியின் பெரிய பள்ளிவாசல் பதினைந்தாம் நூற்றாண்டில் நிருவியபிறகே வெறும் துறைமுக இறங்குதளமாக இருந்த பொன்னானி முறையான நகரமாக மாறியிருப்பதை பதிவு செய்கிறார்.பயணநூல்,பயணத்தின் அனுபவத்தில் எழுதியநூல், பயணத்தின் வழியான ஆய்வுநூல், அல்லது பயண அனுபவ சுவிகாரத்திலிருந்த வெளிப்படும் புனைவு என பலவகைகளில் சாளை பஷீரின் இந்நூலைக் குறிப்பிடலாம். தமழ்சமூகம் கவனிக்கத்தக்கவான ஒரு நூலாக காண்கிறேன்.இதுஒரு நல்ல வழிகாட்டி நூலும் கூட.புத்தகமும் பயணமூம் மானிடவாழ்வில் சக்திமிக்கவை என்பதை நாம் இதன்வழி பரிபூரணமாகப் புரிந்து கொள்ளலாம்.இலக்கியமென்று எடுத்துக் கொண்டாலும் பயணம் எனக் கொண்டாலும் கேரளம் தீராக்காதலோடு கண்டுணர சாத்தியங்கள் மிகையாக இருக்கும் நிலம்.சாளைபஷீர் அதன் மகத்துவத்தை இந்நூலில் பூரணத்துவமாக்குகிறார்.மம்புரம் தங்கள் பற்றிய மற்றுமொரு கட்டுரை பனிரெண்டாம் சுல்தானிலுள்ள ஆசான் பஷீரின் சூஃபிய நிலைப்பாடு என இந்த நூலில் ஒரு அழகிய மாயத்தொடர்ச்சி இயங்குகிறது.இன்னும் குறிப்பிடாத ஏராளமான விசயங்கள் குவிந்திருக்கின்றன.சாளை பஷீருக்கு நிறைந்த அன்பு.
சீர்மை வெளியீடு.
Salai Basheer

Tuesday 7 November 2023

"காலங்களில் மேவும் கதைகள்"

1991லிருந்து 98வரையிலும் எழுதிய சிறுகதைகளின் தொகுப்புதான் "கவர்னர் பெத்தா".காலச்சுவடு வெளியீடாக இப்போதும் விற்பனையில் இருக்கிறது.முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்ட கதைகளின் பெருவாழ்வின் சிலதுளிகள்.

நன்றி தோழர் காமு.

மீரான் மைதீனின் 
" கவர்னர் பெத்தா" வாசிப்பனுவம் .... 
***********************************

மீரான் மைதீனின் படைப்புகளின் தொடர் வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே கவர்னர் பெத்தாவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது என்ன கவர்னர் என்னும் குறு குறுப்பு வளர்ந்து கொண்டே வந்தது. என்ன , ஏது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் சேர்ந்து கொண்டது. 
சரி, படித்துக் கொண்டிருக்கும் " ஓச்சை" நாவலை முடித்து விட்டு வாசிக்கலாம் என்று ஆன்லைனில் புத்தகம் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது. 

ஒரே மூச்சில் படித்து விட்டேன். பத்து சிறுகதைகள் கொண்ட குறுந்தொகுப்பு 'கவர்னர் பெத்தா' . 

காலமாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போகும் மனிதர்களின் அவஸ்தைகளை அசன் கண்ணாப்பா என்ற முதியவரின் பாடுகளின் மூலமாக பதிவு செய்கிறது அசன் கண்ணாப்பா என்கிற கதை. அவருக்கு வயது  எழுபது என்றாலும் இன்னும் ஊணிக்கொம்பு இல்லாமல் தான் நடமாடுகிறார். 

அந்த ஊரில் மொத்தமே முப்பது வீடுகள். அதிலும் பெரும்பாலும் குடிசை வீடுகள். சிலது ஓட்டு வீடுகள். உச்ச பட்ச விஞ்ஞான வளர்ச்சியாக மின்சாரம் மட்டுமே. வேறு சாதனங்கள் இன்னும் ஊருக்குள் வரவில்லை. 

சிறுவர்களுக்குக் கதை சொல்வதுதான் அசன் கண்ணாப்பாவின் அன்றாட தினப்படி வேலை. அக்கம் பக்க சிறுவர்கள் கூடி, முதியவரின் நாடியைப் பிடித்து கொஞ்சி, கன்னத்தைப் பிடித்து , ஓய்.. அப்பா.. ஒரு கத சொல்லு என்று ஆரம்பித்து விடுவார்கள். உடனே உற்சாகமாகி  கதை சொல்ல ஆரம்பித்து விடுவார். அது உண்மைச் சம்பவமோ இட்டுக் கட்டியோ எப்படியோ சொல்வார். மெய்மறந்து கேட்கும் சிறுவர்கள் நடுநடுவே சந்தேகங்கள் கேட்பார்கள். ' அப்போ பள்ளிக்கு பொறத்து ஒரு பெரிய வாவ மரம் நின்றது ' என்று ஒரு கதையில் சொன்ன போது, இப்ப அந்த மரம் எங்கே என்று ஒரு சிறுவன் கேட்கிறான். 'சொல்லத கேளுங்கலே' என்று செல்லமாக ஒரு அதட்டு அதட்டிவிட்டுக் கதையைத் தொடர்வார். 
விடிந்தெழுந்தால் இன்று குழந்தைகளுக்கு என்ன கதை சொல்லலாம் என்பதே அவரின் சிந்தனையாக இருக்கும். 

அரேபியாவில் இருந்து பேரன் காதர் ரஹ்மான் ஊருக்கு வருவதாக் கடிதம் வருகிறது. அந்த ஊரில் இருந்து அரேபியாவுக்கு முதன் முதலில் சென்றது தன்னுடைய பேரன் என்பதில் அளவு கடந்த பெருமை அவருக்கு. தாயழி, 'பிளேன்ல வானத்துல பறந்துல்லா அரேபியாவுக்கு போயிட்டான்' என்று தனக்குத் தானே சிலாகித்துக் கொள்வார். 

வந்த பேரன் பலருக்கும் விதவிதமான பொருட்கள் தருகிறான். பெரியவருக்கு ஒரு டீ ஷர்ட் . வீட்டுக்கென்று ஒரு டி.வி. பெட்டி. 

டி.வி. பார்க்க ஊரே கூடி விடும். எம்.ஜி.ஆரும் நாயகியும் ஆடுவதை ரசித்துப் பார்க்கும் பொம்பளையளுக்கு பயங்கர சிரிப்பு. மறியம் பெத்தா, ' அட, நீக்கம்பத்து போவா, இப்படிக் கெடந்து ஆடுதா.. வெக்கம் கிடையாதா.. ' என்று சொல்லும் போது எல்லோரும் சிரிப்பார்கள். 

வழக்கம் போல் அன்றும் அசன் கண்ணாப்பா திண்ணையில் வந்து அமர்கிறார். சிறுவர்கள் கதை கேட்க உற்சாகமாக கூடுகிறார்கள். திடீரென்று ஒரு சிறுவன், ' டேய், டி.வி.ல படம் போட்டாச்சு' என்று சொன்னவுடன் எல்லோரும் டி.வி. பார்க்க ஓடி விடுறார்கள். 

வெறுமையாகப் போகிறது முதியவருக்கு. இப்போதெல்லாம் கதை கேட்க ஆளில்லை. பள்ளித் திண்ணையில் இருந்து கொண்டு கண்ணில் தென்படும் ஆட்டுக் குட்டியைப் பார்த்துக் கொண்டே காலத்தைக் கழிப்பதாகக் கதை முடிகிறது. 

வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தினப்படி நடவடிக்கைகளில் பழக்கப்பட்டு விட்ட மனிதர்கள், குறிப்பாக முதியவர்கள் காலப் போக்கில் ஏற்படும் மாற்றங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத போக்கை நுட்பமாக பதிவு செய்யும் அதே நேரத்தில் ஒரு காலகட்டத்தையும் தன் எழுத்தின் மூலமாக இலக்கியமாக உறையச் செய்து விட்டார் மீரான் என்றுதான் சொல்ல வேண்டும். 

அடுத்து, கவர்னர் பெத்தா. பெத்தா என்றால் பாட்டி. அம்மாவைப் பெற்ற அம்மா. 

கவர்னர் பெத்தா ஓர் அடையாளப் பெயர்தான். அந்த அடையாளம் எப்படி வந்தது என்பது தான் சுவாரஸ்யம். 

பெத்தாவின் இயற்பெயர் பீர்மா. அதாவது பீர்மா பெத்தா. 

அவர்கள் ஊரில் உள்ள தர்காவிற்கு அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி விஜயம் செய்ய இருக்கிறார் என்ற செய்தியோடு கதை ஆரம்பிக்கிறது. 

உடனே ஊர் அல்லோல கல்லோலகப் படுகிறது. எங்கு பார்த்தாலும் இதைப் பற்றியே பேச்சு. குளிக்கப் போகும் போது யாரோ ஒருவர் இன்னும் எட்டு நாள் என்று சொல்ல , கேட்டவர் எதுக்கு என்று கேட்க, கவர்னர் வாறதுக்கு என்று பதில் சொல்வது வாடிக்கை ஆகிவிட்டது. அந்த சிற்றூர் தர்காவிற்கு கவர்னரே விஜயம் செய்கிறார் என்பதை  ஒவ்வொருவரும் தனிப்பட்ட கெளரவமாகவே கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர். அந்தப் பரபரப்பு பீர்மா பெத்தாவையும் தொற்றிக் கொள்கிறது. அதில் கலந்து கொள்வதற்கான விஷேச ஏற்பாட்டில் கவனம் செலுத்துகிறாள். 

பீர்மாவுக்கு ' ஒரு பட்டுக் கசவுக் கவுணியும் ஒரு குப்பாயமும் எடுத்தால் கொள்ளாம்'  போல் தோன்றவே, மருமகள் அடுப்படியில் இருந்த சமயம் பார்த்து மகனிடம் கோரிக்கை வைக்கிறாள். ' இப்பதான பெருநாளுக்கு எடுத்தோம் ' என்று மகன் பேசிக் கொண்டிருக்கும் போதே மருமகள் வந்து அவளும் தன் பங்குக்கு ' ஆமா, கவர்னர் வந்து நேர உங்கள் கையைப் பிடிச்சித்தான் குலுக்கப் போராளாக்கும் ' என்று குத்தலாகப் பேச , பெத்தா இடிந்து போகிறாள். 

ஆனால், அப்படித்தான் நடந்தது. 

கவர்னர் வரும் நாளில், விடிந்தும் விடியாமல் எழுந்து , குளித்து , அப்படியே போய் மறியம் பெத்தா, பாக்கு பெத்தாவை அழைத்துக் கொண்டு தர்காவாசலில் , கேந்திரமான பகுதியில், கவர்னரை பார்க்க தோதான இடத்தில் இடம்பிடித்து விட்டனர். அதிலும் பீர்மா பெத்தாவுக்கு மூங்கில் தடுப்பை ஒட்டியபடி நிற்க இடம் கிடைத்து விட்டது. 

சரியாக ஒன்பது மணியளவில் கவர்னர் பாத்திமா பீவி கம்பீரமாக காரில் இருந்து இறங்கி, ' முட்டாக்கும் போட்டுக் கொண்டு நடந்து நாலா பக்கமும் கம்பீரமாய் கூட்டத்தைப் பார்த்து கைஅசைத்துப் புன்னகையுடன் அங்கும் இங்குமாக திரும்பி ' பீர்மா பெத்தா நின்றிருக்கும் பகுதிக்கு வந்து விட்டார். 

சட்டென்று எந்தத் திட்டமிடலும் இல்லாமல் , யாரும் எதிர்பார்க்காமல் பீர்மா பெத்தா கவர்னரை நோக்கி கையை நீட்டிவிட்டார். கவர்னரும் வெகு இயல்பாக பீர்மாவின் கரத்தைப் பற்றிக்  குலுக்கினார். 

கூட்டத்தில் இருந்து சத்தம் வந்தது. 

" பிள்ளா, கவர்னர் பெத்தா.. " 

அன்று முதல் பீர்மா பெத்தா கவர்னர் பெத்தா ஆனாள். 

திரும்பி வரும் போது மறியம் பீர்மாவிடம் பெத்தா சொன்னாள். 

" நாசமா போனதுவோ... நம்மள படிக்க வைக்காம உட்டுட்டுதுவோ.. நம்மள மாதித்தானே இருக்கா... எங்கம்மாகாரி நெலையளிஞ்சி நின்னுட்டா ... பள்ளிக்கோடத்துக்குப் போட்டாளான்ன கேட்டதுக்கு ... பொட்ட புள்ள படிச்சி பெரிய கவர்னராட்ட ஆவப்போறா... ன்னா.. " 

பொட்ட புள்ள படிச்சி என்ன ஆகப் போகுது என்று இன்றளவும் நிலவும் சமூகத்தின் பொதுப் புத்தியை மென்மையாக அதே சமயம் வலிமையாக விமர்சிக்கும் அற்புதமான சிறுகதை. 

இந்தக் கதை ஆங்கிலம், உருது, அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் தமிழ்ச் சிறுகதை என்ற பெருமையும் உண்டு. 

மனித மனங்களின் உணர்வுகளின் மெல்லிய அசைவுகளை காத்திரமான கதா பாத்திரங்கள் மூலமாகவும், கதைப் போக்கின் ஊடாகவும் தன்னுடைய படைப்புக்களின் வழியாக தரிசிக்கச் செய்யும் மீரான் மைதீனின் எழுத்தைக் கொண்டாடுவோம். 

அன்புடன், 
காமு
07/11/2023

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...