Friday 5 May 2023

கடல் பழகுதல்


 கடல் பழகுதல் 
ஒரு யுகத்துக்கான எழுத்து
                      எம்.மீரான் மைதீன்

கிட்டத்தட்ட நாற்பதுக்கும் அதிகமான நூல்களை படைத்திருக்கிற முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் எனக்கு நல்ல நண்பராக இருக்கிறார் என்பதில் இப்போதும் பெருமிதம் ஏற்படுகிறது. அவரின் எல்லா நூல்களையும் வாசிக்காவிட்டாலும் சிலவற்றை முன்னமே வாசித்திருக்கிறேன்.அவரின் நூற்களை கொஞ்சம் அகன்ற வாசிப்புக்கான காலம் கனிந்திருப்பதாக உணர்கிறேன்.முன்னமே வாசித்த நூல்களில்   "வர்ளக் கெட்டு" சிறுகதை நூலும் ஒன்று. எழுத்தின் எல்லா முனைகளிலும் அவர் தன்னைக் கூர்தீட்டி,தனது நீண்ட பயணத்தில் அவ்வாறு கூர்தீட்டிய தனது எழுத்துக்களை நல்ல ஆயுதமாக சமூகத்துக்கு ஒப்படைத்திருக்கிற ஒரு பெரும்பணியை செய்திருக்கிறார், செய்து கொண்டிருக்கிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இந்த வரிசையில் படைத்து மானிட சமூகத்துக்கு கொடையளிப்பதென்பது  லேசான பணியல்ல,கடின உழைப்பும் இலட்சிய வேட்கையும் கொண்ட பிரதிபலன் பாராத ஒருவருக்கே சாத்தியமானது.



இப்போது சில தினங்களாக முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய கடல் பழகுதல் நூலை வாசித்து நிறைந்திருக்கிறேன்.ஒரு நூல் என்ன செய்துவிடும் என்பவர்களுக்கு ஒரு நல்ல நூல் காலத்தால் எல்லாம் செய்துவிடும் வல்லமை கொண்டது என்பதை தவிர வேறு பதிலெதுவும் சொல்லத் தேவையில்லை.இதன் உறுதியை,உண்மைத் தன்மையை "கடல் பழகுதல்" வாசகர்களுக்கு மெய்பிக்கிறது.



கடல் அழகானது,எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது, குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை கடலைக் காணும் போது உற்சாகம் கொள்கின்றனர், கொண்டாடுகின்றனர். உற்சாகமிகுதியில் அலைகளோடும் கடலின் கரைகளோடும் விளையாடுகின்றனர். ஆர்பரிக்கும் கடலின் அழகில் ஆனந்தமடைதல் என்பது மனிதர்களுக்கு எப்போதும் ஆனந்த தாண்டவம்தான்.எந்த ஊருக்குப் போனாலும் கடல் பார்க்க வேண்டும் என்பது எனது அதீத விருப்பங்களில் ஒன்று.தொடர்ச்சியாக கடல் பார்க்க கிடைக்காத நாட்களின் எண்ணிக்கை கூடிப்போகும்  பல தருணங்களில் நான் வெறுமையாக உணர்ந்திருக்கிறேன். இயற்கையின் பேரம்சமான உப்புக்கடலில் இந்த நிலம் பாதுகாப்பாய் கிடப்பதாக நான் கருதுகிறேன்." ஊத்தைச் சடலம் படைத்து உலையாமலே உப்புக்கடலைப் புகுத்தி "என்று சூஃபிஞானி  ஞானமாமேதை பீர்முகம்மதப்பா அவரின் ஞான ஆனந்தகளிப்பில்,பாடியிருப்பார்.இந்த நிலத்தை  கடல்தான்  உலையாமல் பார்த்துக் கொள்கிறது. எனக்கு கடலின் மீதான காதல் அதீதமானது. விமான பயணங்களில் நான் நிலத்தின் மீது பறக்கும் போது இருப்பதை விட கடலின் மீது பறக்கும் போது ரொம்பவும் பாதுகாப்பாய் உணருவேன்.என்னோடு ஒருமுறை பயணித்த ஒரு பயணிக்கு இது விந்தையாக இருந்தது.அவர் ஆச்சரியமடைந்து காரணம் கேட்டார். பிரத்யோகமான காரணம் என்றால் நான் கடல் மீது காதல் கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான் என பதில் சொன்னேன்.இவ்வாறான மனநிலை கொண்ட எனக்கு "கடல் பழகுதல்" நூல் எண்ணிலடங்காத புத்தம் புதிய  வாசல்களை திறந்து தருகிறது. வறிதையா கான்ஸ்தந்தின் அவர் சார்ந்திருக்கிற  சமூகத்தின் மீது  கொண்டிருக்கிற பேரன்பின் வடிவமும் ஒரு கடல் போல படர்ந்து கிடப்பதாக தோன்றுகிறது.கடலும் உப்பு சுவையும் போல,இது ஒரு நேசனின் எழுத்து. நான் பல நேரங்களில் சிந்திப்பதுண்டு கடல் நம்மை அதிகமாக கவர்கிறது, அதன் கரையோரம் காலார நடக்கும் போதும்,நின்று அந்த நெடுங்காற்றை நெஞ்சிலிழுத்துக் கொள்ளும் போதும் இந்த ரசனை,கவர்ச்சியைத் தாண்டி இந்த கடலுக்குள் என்ன இருக்கிறது. வியப்பும் விந்தையும் மேலோங்க மேலோங்க சிந்தனைகள் எப்போதும் மனதுக்குள் அலைபோல அடித்துக் கொண்டே கிடக்கிறது.சின்னவிளை கடற்கரையின் குருசுப் பாறைக்கு கீழே அமர்ந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நெடுக விரிந்து கிடக்கும் கடல் என் கண்களுக்கு வழங்கிய இன்பம் அலாதியானது.இந்த கடல் இன்பத்தின் ஊடாகத்தான் எனது அஜ்னபி நாவலை நான் செங்கடல் கரையிலிருந்து துவங்கியிருப்பேன். ஒரு மீனவரோடு நீண்ட கடல் பயணம் நிகழ்த்த வேண்டும் என்கிற ஆவல் இன்னும் நிறைவேறாமல் மனதுக்குள்ளே கிடக்கிறது.சமவெளி பிரதேசங்களில் உடனுக்குடன்  ஆவல்களை பூர்த்தி செய்து கொள்கிற நமக்கு கடல் அவ்வாறு லேசானதல்ல. ஏன் என்றால் உண்மையில் கடல் பற்றிய எந்த அடிப்படை அறிவும் நமக்கில்லை.அது பேரற்புதங்கள் நிறைந்த ஒரு மாயலோகம்.அந்த மாயலோகத்தை நாம் கற்க வேண்டும்.கடலின் கரம்பற்றி நடைபோட யார் கற்றுத் தருவார்கள். இந்த நூல் மெல்ல மெல்ல  அதனைக் கற்றுத் தருகிறது.ஒரு பூமாலையில் இழையும் கசவு போல கடலோடு இழைய முடிகிறது.கடல் பற்றிய முந்தைய நமது  அபிப்ராயங்களை மறுகட்டமைப்புக்கு கொண்டு போகிறது.கடல் பற்றிய,மீனவர்கள் பற்றிய ,அவர்களின் ஈடில்லா உழைப்புபற்றிய,அவர்கள் மீது நிகழ்த்தும் அதிகார வர்க்கங்களின் சுரண்டல்கள் பற்றிய,இன்னும் பலநூறு உணர்வு நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளப்பரிய ஒர் வேலையை இந்த நூல் நமக்கு செய்துதருகிறது.



அவதானம்,ஆய்வு,வாசிப்பு, என மூன்று பகுதியாக எழுதப்பட்டிருக்கும் நூல் இந்த இயற்கையின் பேரம்சமான கடல் பற்றியும்,கடல்வாழ் உயிர்கள் பற்றியும், ஆதிப்பழங்குடி மீனவர்கள் பற்றியும் பொது சமூகத்தின் முன்னால்  அது பரப்பி வைக்கும் உலகமும் உண்மையும் ஆச்சரியம் நிறைந்தது மட்டுமல்ல அத்தியாவசியமான கல்வியும் கூட. இந்த கடல் பற்றிய கல்வியை கற்றுத்தேறாமல் இந்த உலகை நாம் பார்க்கமுடியாது.கடல் தவிர்த்த நம் கல்வியின் பார்வை ஒருபோதும் நிறைவு பெற்றதுமல்ல. கடல் என்பது அடிப்படையில் நீர் என்னும் திரவம். இயல்பில் வெப்ப ஆற்றல் மாற்றங்களைப்  பொறுத்துத் திட நிலைக்கும் ஆவி நிலைக்கும் மாறிக் கொள்கிற திரவம்.தன்னளவில் நிறமற்ற இந்த திரவம்தான் உயிரின் ஆதாரம் என்கிறார்.ஒரு உயிர் தனது ஆதாரத்தை கற்காமல் அதன் கல்வி ஒருபோதும் நிறைவு பெறாது.நாம் ஆசைதீர கடலைப் பார்க்கிறோமே தவிர கடலோடு பழகவில்லை. கடலோடு நாம் பழகுவதற்கு கடலிடம் என்னவெல்லாம் இருக்கிறது, கடல் நமக்கு  என்னவாக இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டுமல்லவா ?. அசைவற்ற சமபரப்பில் வாழ்கின்ற மனிதர்களுக்கு சதா அசைந்து கொண்டேயிருக்கும் ஒன்றில் உலவும் மனிதர்களின் கண்கள் வழியாக கடல் பார்ப் பதென்பதுதான் ஞானம் நிறைந்தது. அந்த ஞானத்தின் சில திறப்புகளை வறிதையா கான்ஸ்தந்தின் தனது எழுத்தின் வாயிலாக திறந்து தருகிறார்.


அவதானம் ,கடலை சொல்லித் தருகிறது. பெருங்கடல் நீரோட்டங்கள், கடற்பாதாளங்கள்,கடல்மாசுபாடு,கடல் பழங்குடிகள், கடல்உயிர்களனெ நமது அறிவை விசாலமாக்குகிறது. சுரண்டப்படுகிற ஒரு சமூகத்தையே ஏளனமாக பார்க்கப்படும் பார்வையின் ஆபத்தை உணர்த்துகிற நூலானது , சமநிலையற்ற வளர்ச்சி அபாயமானது. வளர்ச்சியிலிருந்து விலக்கப்படும் சமூகம் ஒடுக்குதலுக்கும் சுரண்டலுக்கும் ஆளாக்கப்படும் போது அது ஒரு பேராபத்தை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கைகளையும் நாம் இதன் வழியே அவதானிக்க முடிகிறது. நகர மையப் பார்வை,நில மையப் பார்வை, தான் வாழும் நிலத்தை மையமாகவும் கடலை நிலத்தின் விளிம்பாகவும் நிறுத்தும் கருதுகோள் ஏற்படுத்திய அபாயங்களை குறிப்பிடுகிற போது கடல் நதியை நம்பியிருக்கவில்லை,கடல்தான் நதியை ஈன்று தருகிறது என்கிறார்.

நில மைய,நகர் மையப் பார்வையோடு இதை எப்போதும் புரிந்து கொள்ள இயலாது.


  கடல் பழகுதல் நூலின் ஆய்வுப் பகுதியில் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் கிட்டத்தட்ட பனிரெண்டு  ஆண்டுகளுக்கு மேலாக  தொடர்ந்து செய்துவரும் ஆய்வுக்கட்டுரைகள் நம் பார்வைக்கு கிடைக்கின்றன.கடல் வாழ்க்கையின் சிக்கல்களை, உண்மைகளை போதிய அளவில்  அக்கரையோடு பதிவு செய்கிறார். உண்மையில் மீனவர்களுக்கான பிரச்சனைகள், அவர்களின் போராட்டங்களிலுள்ள நியாயங்கள், அவர்கள் வாழ்வின் போக்கும் சிக்கல்களும் என பொதுசமூகம் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் நமக்கு நேராக வைக்கிறார்.நாட்டில் எல்லோரும் சமமாக நடத்தப்படவில்லை என்கிற நேரடி எதார்த்தம் புரிகிறது. பேரிடர்களை எதிர்கொள்ளும் போது பண்பாட்டுக் கூறுகளுக்கும் முக்கியமான இடம் இருப்பதை யாரும் பேரிடர் சூழலை பண்பாட்டு புரிதலுடன் அணுகவில்லை என்கிற உண்மை புலப்படுகிறது.சுனாமி மற்றும் புயல் கால பேரிடர்களில் பண்பாட்டுக் கூறுகளோடு அணுகாததின் வலிகள் ஒரு பாடமாக முன்வைக்கப்படுகிறது. பெரும்பாலும் தோல்விகள் எப்போதும் அணுகுமுறை கோளாறுகளால்தான் ஏற்படுகிறது.அதுபோல பேரிடரை நாம்  இன்னும் பெண்களின் கண்கள் வழியாகப் பார்க்கத் தொடங்கவில்லை என்பதிலுள்ள உண்மை மானிடவர்கத்தின் துயரமான பக்கங்களாகவே இன்னும் இருக்கிறது. பேரிடர் மற்றும் பெருந்துயரக் காலங்கள் பெண்களுக்கு நிகழ்த்தும் கடினங்களை நாம் புரிந்து கொள்ள இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது.எல்லா துயரங்களும் பெண்களை சுலபத்தில் சென்றடைவதையும் குறிப்பிடும் வறீதையா எல்லையற்ற பிரதிநிதித்துவமாகி இருக்கிறார். ஆழ்கடலில் ஒரு புயலின் தாக்கம் எப்படியிருக்கும் என்னவெல்லாம் செய்யும் என்பது நம் பார்வை புலனுக்கு ஒருபோதும் வருவதில்லை. காற்றின் விசை அலைகளின் இடைவெளியை நிர்ணயிக்கிறது. காற்றின் சீரற்ற தன்மையில் ஒரு படகு என்னவாகும் அதிலுள்ள மனிதர்கள் என்னவாவார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் பதினைந்து கிலோ மீன்புரதம் தேவைப்படுகிறது. சீனாவுக்குப் பிறகு மிகப்பெரிய மீன் அறுவடை நடைபெறும் இந்திய கடலில் உழலும் மீனவர்களின் கடல் வாழ்வை சமவெளியிலிருக்கும் அரசும்,பெருமுதலாளிகளும்,  அதிகாரிகளும் திட்டங்கள் வகுக்கும் போது அது என்னென்ன துயரங்களை நிகழ்த்தும் என்பதை யெல்லாம் இந்த ஆய்வுக் கட்டுரைகள் நுட்பமான பார்வைகளை முன்வைத்து  பல கேள்விகளை நமக்கு முன்னால்  இட்டுச் செல்கிறது. அவர்கள் வாழ்வு அவர்களுக்கான கடினம் என்று தள்ளிவிட முடியாது .இந்த வாழ்வு ஒற்றைத் தன்மையுடையதல்ல மாறாக ஒரு சங்கிலியின் அடுத்தடுத்து வரும் கண்ணிகளைப் போன்றது.ஒன்றை வீழ்த்த ஒன்று முனைவது சிந்தனையற்ற அறிவின் போதமையாகவே இருக்க முடியும். சமவெளி பிரதேசத்தின் ஒரு அழுத்தம் கடலையும் கடலின் ஒரு அழுத்தம் சமவெளி பிரதேசத்தையும் நேரடியாக பாதிப்புக்குள்ளாக்கக் கூடியவைகள். கடலுக்குப் போகும் ஒரு மீனவரால் கரையில் சராசரியாக பதினாறு பேர் தொழில் பெறுகிறார்கள்.ஒன்று ஒன்றை வளர்க்கிறது,ஒன்று மற்றொன்றை தாங்குகிறது.நமக்கு மீன் உணவு வேண்டும்.அது கடலிலிருந்தே வந்தாக வேண்டிய நிலையில் பருவமாற்றத்தால் கடல் வீழ்ந்து கொண்டே வருவதைப் பற்றிய கவலை கொள்ள வேண்டிய நேரம் இது. பெரும் தொழிற்சாலைகள் மாசுகளை கடலில் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. வனத்தை பாதுகாக்கிற வனப் பழங்குடிகள் அங்கிருந்து துரத்தப்படுகின்றனர். கடலை பாதுகாக்கிற கடல் பழங்குடி மீனவர்கள் கரையிலிருந்து துரத்தப்படுகிறார்கள் என்பதெல்லாம் பெரும் சிக்கல்கள் நிறைந்த  துயரமான காலத்துக்கு மானிட சமூகத்தை கொண்டு போய்விடும். வனத்திலுள்ள ஒரு உயிரை, நகரத்திலுள்ள ஒரு உயிரை, சமப்பரப்பிலுள்ள இயற்கையின் சிறிய அம்சங்கள் வரையிலும் புவிகோளத்தின் எல்லா உயிர்களையும் கடலே வருடி நிக்கிற நிலையில்,கடலின் முக்கியத்துவத்தை ஆய்ந்தறியும் மேன்மையான பாங்கினை இந்த நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது. "கடல் பழகுதல்" நூலின் தலையாய சிறப்பும் இதுதான். பெருநகரங்கள் உள்ளிட்ட மக்கள் மிகுந்த எல்லா நகரங்களும் கடலின் வெகு அருகிலேயே அமைந்துள்ளன. இந்திய பெருங்கடலில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மீன் அறுவடை படிப்படியாக வீழ்ந்து வரும் நிலையில் 2048ல் மீன்களற்ற கடல் உருவாகும் துயரத்தைப் பற்றிய எச்சரிப்பை கவனப்படுத்தியாக வேண்டும் . நிலப்பரப்பில் நிகழும் எல்லா மற்றங்களின் அழுத்தமும்,வளர்ச்சி என்கிற பெயரில் நிகழும்  சிதைவுகளின் அழுத்தமும் கடலையே சென்று சேர்கின்றன. வெப்பநிலை உயர்வே புயலின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது.வீரியம் அதிகமாகும் புயல்களின் விளைவே சமவெளிப் பகுதிகளில் பெருவெள்ளப் பேரிடராகிறது. புவிப்பரப்பின் வெப்பநிலை மாற்றமே கடல் மட்டத்தை உயர்த்துகிறது.எல்லா இயற்கை சீற்றங்களும் மனிதனின் எல்லையற்ற இயற்கை ஆக்கிரமிப்புகளாலும், கட்டற்ற அறிவியல் தொழில்நுட்ப அணுகுமுறை விளைவுகளின் வழியாகவும் நடந்தேறுகிறது. இவைகளைப் பற்றிய ஒரு பொது அறிவை பேசுவதில் இந்த நூல் முக்கிய பங்காற்றுகிறது.


நெய்தல் நிலத்தின் இலக்கிய பரப்பை,வரலாறை,ஆளுமைகளைப் பற்றியும் இந்த நூல் "வாசிப்பு" என்கிற பகுதியில் பேசுகிறது.ஒவ்வொரு இனக்குழுவும் தனது இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வரலாற்றில் இடமில்லை என்றால் சமூக,அரசியல் வெளிகளிலும் இடமில்லாமலாகிவிடும் என்பதை கோடிட்டு நெய்தல் நிலத்தின் இலக்கிய உலகை அறிமுகம் செய்கிறார்.கடல்சார் மக்களோடு தொடர்புடைய "சென்பகராமன் பள்ளு"என்கிற பதினேளாம் நூற்றாண்டின் சிற்றிலக்கியம் பற்றிய குறிப்பு நமக்கு கிடைக்கிறது. அம்மூவனார்,உலோச்சனார்,போன்ற நெய்தல் நில கவிகள் நமக்குத் தெரிய வருகிறார்கள்.1975 ல் வார்த்தைச் சித்தர் ஞானபாரதி வலம்புரிஜாண் அவர்களின் "நீர்க்காகங்கள்" புதினமே தமிழ்நாட்டில் அச்சான முதல் நெய்தல் இலக்கியம் என்கிற செய்தி நம் தேடுதலை இன்னும் விசாலமாக்க துணை செய்கிறது.ஜோடி குரூஸ்,வறீதையா கான்ஸ்தந்தின், பானுமதி பாஸ்கோ,தார்சி எஸ் பெர்னாண்டோ,குரும்பனை பெர்லின், செல்வராஜ்,ஆன்றனி அரசு,அருள் சினேகம்,இரையுமன் சாகர் என பல நெய்தல் நில படைப்பாளிகள் நமக்கு அறிமுகமாகின்றனர்.வறிதையா கான்ஸ்தந்தின் குறிப்பிடும் இந்த அற்புதமான கதைச் சொல்லிகளின் கதை உலகில் பயணித்து அனுபவித்த அனுபவம் முன்னமே எனக்கிருக்கிறது. சமூக எதார்த்தத்தை பச்சையாகப் பிரதியிடும் சில நல்ல படைப்புகள் சமூக மாற்றத்திற்கான கருவிகளாக மாறி நிற்கின்றன.


முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருபவர்களால் அவரின் இணையற்ற மீக நீண்ட உழைப்பையும் அவதானிப்பையும் இடைவிடாது அம்மக்களுக்காக சிந்தனையை செலவிடும் அவரின் மிகஉயர்ந்த எண்ணம் வேறு எதனோடும் ஒப்பிட இயலாதது.நெய்தல் நிலத்தி்ன் வாழ்வை,பிரச்சனையை நமக்கு காட்டித்தருவதோடு மட்டுமல்லாமல் நம் கரிசனத்தை அப்பக்கமாக திருப்புகிற எழுத்து வல்லமை இவருக்கு அதிகமாக உண்டு.நெய்தல் மக்கள் மீதும்,ஈடு இணையற்ற இந்த இயற்கை மீதும் தான் கொண்டிருக்கிற நேசமே வறிதையா கான்ஸ்தந்தின் இரத்த நாளங்களிலிருந்து எழுத்தாக மலறுகிறது.எனவேதான் இந்த எழுத்து துடிப்படங்காமல் நம்முள் கலக்கிறது. இது ஒரு நேசனின் ஞானநிலை தவிர வேறொன்றுமில்லை.கடல்பழகுதல் நூல் இன்னும் சில யுகங்களுக்கானது.




  





No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...