அன்பு அண்ணன் சி.சொங்கலிங்கம் அவர்களின் பதிவு
அன்புள்ள மீரான் வணக்கம்.
திருவாழி நாவலைப் படித்தேன்.படித்தவுடன் எழுந்த உணர்வுகளை எழுதியிருக்கிறேன். மனம்நிறைந்த வாழ்த்துகள்.
வாழ்க்கை என்பது காரண காரியத் தொடர்புகள் அதன் விளைவுகள் அதற்கு நேர் மாறாக காரணம் தெரியாத அல்லது புரியாத தற்செயல் நிகழ்வுகள் அதன் விளைவுகள் என இருவேறு புறங்களைக் கொண்டது. இவைகளுக்கு இடையிலான உறவும் முரணும் நாவலின் ஒரு விவாத மையம்.
தெரியாத அல்லது புரியாத ஒன்றைத் தேடுவதும் கண்டடைவதுவரை அவற்றைப் புதிர்களால் அல்லது பல்வேறு கற்பனைகளால் மாற்றுக் கட்டமைப்புகளால் அல்லது அனுமானங்களால் இட்டு நிரப்பிக் கடந்து கொண்டிருப்பதுதான் மனித வாழ்க்கை.
அறிவியல்ரீதியான காரண காரியத் தேடல்கள் ஒரு பக்கம் என்றால் கூடுதலாகவோ குறைவாகவோ இந்தப் புதிர்கள், செய்வினை, ஏவல் ,பில்லி ,சூன்யம், கழிப்பு, ஓதிப்பார்த்தல் இப்படி பல சொற்களின் வழியே சடங்குகளின் வடிவில் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பலநூறு கதைகளாக சமூகத்தில் புழங்கிக் கொண்டிருக்கின்றன.இது சரியா தவறா என்ற விசாரணையை நாவல் மேற்கொள்ளவில்லை.மாறாக முழுமையாக நம்புகிறவர்கள், நம்பாதவர்கள், அரைகுறையாக நம்புகிறவர்கள் எனவும் வேறுவேறுபட்ட மதநம்பிக்கைகள் சார்ந்தோரிடம் எப்படி செயல்படுகிறது எனவும் சமூகத்திற்குள் பின்னிக் கிடக்கும் இந்த செயல்முறை இன்னும் தொடர்கிறது என்ற விவரிப்புகளின் வழியே பல்வேறு மனிதர்களின் மனுஷிகளின் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மனப்போக்குகளை
" திருவாழி" சுவையாக விவரித்துச் சொல்கிறது.
எல்லோரின் வாழ்க்கையிலும் இத்தகைய சூழல்களை சந்தித்திருக்கும் வாய்ப்பு உண்டு. அவரவர் அனுபவம், கருத்தியல், சமூக அரசியல் பார்வைகள் சார்ந்து இவற்றை அணுகி இருப்போம்.திருவாழி பல்வேறு அனுபவங்களின் கருத்தியல்களின் பிரதானமாக வெகுமக்கள் உணர்வுகளின் தொகுப்பு.
திருவாழி ஏழு கடைகள் கொண்ட கட்டிடம்.இதில் ஐந்தாம் எண் கொண்ட கடை சிக்கல்கள் நிறைந்த ஒன்றாக அதனோடு உறவு கொண்டவர்களுக்கு மாறுகிறது.ஏழாம் எண் கடை நன்மைகளைக் கொண்ட செழிப்பான ஒன்றாக எல்லோருக்கும் தெரிகிறது. ஒவ்வொரு கடை சார்ந்து ஒரு கதையும் அதன் ஏற்றமும் இறக்கமும் என பல்வேறு மனிதர்கள் அவர்களின் மனோபாவங்கள் என பல்வேறு கதைகள்.இவைகளின் ஒட்டுமொத்தமே திருவாழி. இது நாவலின் இன்னொரு பரிசீலனை மையம்.
இவை அனைத்தின் பொதுச்சரடு அவரவர்கள் அவரவர்களின் நலன் சார்ந்து மட்டுமே சிந்திக்கிறார்கள் செயல்படுகிறார்கள். அன்சாரி பிறர் நலன் என்ற மையத்தைச் சுற்றியும் செயல்படுகிறார். இந்த எதிர்வு நாவலின் அறவியல் மையம்.
காலம் எப்படிச் செயல்படும் என்பதை நம்மால் முன் கூட்டியே அனுமானிக்க முடியுமா.முடியாது என்பது பொதுவான கருத்து.கர்ம வினை , விதிவசம் போன்ற கோட்பாடுகள் இந்தியாவில் பல்வேறு வடிவங்களில் செயல்படுவதை நாம் அறிவோம். வெகுமக்களின் எளிமையான நம்பிக்கை சார்ந்த சொற்களில் சொல்வதானால் நல்லது செய்தால் நல்லது நடக்கும் , முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இவை பொது உணர்வு. திருவாழி இந்த உணர்வுகளை அல்லது வெகுமக்களின் நம்பிக்கைகளை கதைகளாக்கி நாவலாகக் கட்டமைக்கிறது என்றும் சொல்லலாம்.
டால்ஸ்டாய் தம் அன்னா கரீனினா நாவலில் "எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒரே போல் இருக்கின்றன.ஆனால் மகிழ்ச்சியற்ற குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்"-என்பார்.
இங்கு திருவாழி தொட்டு அன்சாரி வரை பட்டணம் தொட்டு கிருஷ்ணன் வரை,பிராட்டி தொட்டு சிந்து வரை அவரவர்க்கான துயரங்களோடும் சிக்கல்களோடும் வாழ்நிலைகளைக் கடக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் அனுபவமும் நம் அனுபவங்களோடும் கருத்து நிலைகளோடும் ஒட்டியும் விலகியும் விவாதிக்கின்றன.
விவாதங்களைத் தூண்டுவதுதானே ஒரு படைப்பின் அடிப்படை நோக்கம்.அதனை வெற்றிகரமாகச் செய்துள்ளீர்கள்.
மனம்நிறைந்த வாழ்த்துகள்.
நிறைந்த அன்புடன்
சி.சொக்கலிங்கம்
31/03/23
No comments:
Post a Comment