Monday, 1 January 2024

'இசைக் கடவாய்'- மொய்தீன்



குவிக்கப் பட்டிருந்த
நேசத்தின் வழியெங்கும்
எறும்புகளின் தடத்தில்
பெருக்கெடுத்தோடுகிறது
வெள்ளப் பிரளயம் 

பறந்து போன காகம்
செய்தி சொல்ல மறந்து 
செத்ததை தின்னும் 
அலாதி இன்பத்தில் 
அலைபாய்ந்து கொண்டே 
பறந்து திரிகிறது.

புறாக்களோ நிலம்பாவின. 

அருளின் அருள்பெற்ற 
சூஃபியின் கானத்தால் நிலமெங்கும்
சுடர் வழிந்து பெருகுகிறது,
புழுதி மண்டலத்தை துவம்சித்துக்கொண்டே. 

திரித்து முடிக்கப்பட்ட கயிறுகள்
காற்றில் கலைந்தோடுகின்றன
கண்ணுக்குத் தெரியாத மணல்துகளாய். 

மண்ணும் கடலும் வானும் ஒட்டிக்கிடக்கும்
மெல்லிய இருளில் 
எனை மறந்து.
நாவிலூறும் உன் நேசச்சுரப்பில் 
நடக்கின்றேன். 

நடக்க நடக்க
நடை வசப்படுகிறது. 

ஏழு அடுக்குகளில் 
ஒவ்வொன்றாக மறிகடந்து பயணித்து
ஆதியோடான கலப்பில் 
கலந்து கரைய
உன் புல்லாங்குழலிசை
கடவாய்.

01-01-24

No comments:

Post a Comment

வளர்பிறை

மீரான் மைதீன் பயணத்திலேயே எழுத்தாளர் ஜமீலா ராசிக்கின் "அது ஓரு பிறைக்காலம்" வாசித்தேன்.நினைவுகளை மீட்டித்தரும் அனுபவப்...