Tuesday 2 January 2024

"மனிதன் ரகசியங்களில் உடைபடுகிறவன்" மீரான் மைதீன்.

கதைகளுக்கு தனித்துவமான முகமிருக்கிறது.அபூர்வ பச்சிலையின் சாறு பூசிக்கொண்ட ஒரு மூதாதையின் முகம் போல வைரவன் லெ.ரா.வின் கதைகள் இருக்கின்றன.

              நண்பர் ஷாகுல் ஹமீதின் முயற்சியில் இரண்டு நூற்கள் கிடைக்கப்பெற்று நாட்களாகிவிட்டாலும் பட்டர்-பி பிறகதைகள் என்கிற சிறுகதை நூலும் ராம மந்திரம் என்கிற மற்றொரு சிறுகதை தொகுப்பு நூலும்  எப்போதும் பார்வையில் படும்படியாகவே இருந்தது.அவ்வப்போது வாசிப்பதும் அசைபோடுவதுமாக இருந்த சூழலில் இன்று 'நான்,நாய்,பூனை' என்கிற சிறுகதையை வாசித்து முடித்த தருணம் கொஞ்சம் மிரட்சியாகவே இருந்த உண்மையை மறுக்க இயலாது.நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியைச் சார்ந்தவர் வைரவன். வாசிக்க வாசிக்க நம்மை மௌனப்படுத்துகிறது.
நிலம், பெரும்வாழ்வு, ஆதிஅந்தம், மாயமென பழையாற்றின் வெள்ளப்பெருக்குப் போல நாள்பட்ட எல்லாவற்றையும் அடித்துப் பொறுக்கி மறிகடந்து ஓடும் ஓட்டத்தில் நம்மையும் இழுத்துப் போடுகிறது.ரொம்பவும் ஆழமானதுதான்.ஆழமென்றால் பள்ளிகொண்டவனின் தொப்புளில் நான்முகன் தோன்றிய தாமரைத்தண்டின் வேரினைக் காண விழைவதுபோல.கதைகளின் முடிப்பில் வாசகனை அந்த ஆழத்தில் தள்ளிவிட்டு அனாயசமாகக் கடந்துபோகும் ஒரு மாய சுழற்சி வசப்பட்ட எழுத்து.

         குமரி மாவட்டம் ஒரு பன்முகப் பண்பாட்டு பிரதேசமாகும்.ஒரே மாவட்டத்திலேயே பல விநோத எல்கைகளும் மொழிவழக்கும் உணவு உடை என எண்ணிலடங்காத முறைகளும் பல்கிப் பெருகிக் கிடப்பதை நுட்பமாக அவதானிக்க இயலும்.ஒரே சாதி ஒரே மதத்தினருக்குமிடையே கூட இந்த மாற்றங்கள் வேறு வேறு அலங்காரங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம்.வைரவனின் எழுத்து வகையை முந்தைய தடத்திலிருந்து பார்பதானால் என் புரிதலில் இது நாஞ்சில் நாடனின் பிரதேசவெளியும் பின்னர் அதில் மற்றொரு தடமாக வந்த தெரிசை சிவாவின் பிரதேச வெளியும் கடந்து முன்றாவதாக வைரவன் மற்றுமொரு அழகிய தடத்தை உருவாக்கியிருப்பதாகக் கொள்ளலாம்.பணி நிமித்தமான பெங்களுர் வாசமும் அடிப்படை இருப்பான  நாகர்கோவிலின் மணமும் முயங்குகிறது.'ராம மந்திரம்' தொகுப்பில் ராம மந்திரம் சிறுகதையும் அடுத்து வரும் பொந்து சிறுகதையும் அவ்வளவு நேர்த்தி.ஏகாந்த நிலையில் நட்பு கொள்ளும் மனிதர்களில் இருவர் வாழ்கிறார்கள்.அவர்களுக்குள் நிறைய பொருத்தப்பாடு.ஒருவரிடம் உள்ளதுபோலவே பிரிதொருவரிடமும் தாடகையும் தாடகமலை பற்றிய கதையும் கூட இருக்கிறது.ஒரு வாழ்வை  மந்திரத்தில் முழுங்கி ஆனந்தமாய் நிறைக்கிறார்கள்.இதற்கு சற்றும் குறைவில்லாமல் மேரி தனது பொந்தில்(பெண் குறியில்)எல்லாவனையும் எல்லாவற்றையும் முழுங்குகிறாள். அடுத்தடுத்து வரும் இந்த கதைகளின் உலகில் ஒரு பாலம் கிடக்கிறது. பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது எல்லா எழவுகளையும் அடித்துப்பிடித்துக் கொண்டு போனாலும் பாலம் ஒரு போதும் அசராது.அது அத்தனை உறுதியானது. வைரவன் கதைகளுக்கிடையே கட்டும் பாலமும் அப்படியாகத்தான் தோன்றுகிறது.

      ஓராண்டு இடைவெளியில் வந்துள்ள இரண்டு நூல்களிலுமாகச் சேர்த்து மொத்தம் இருபத்தியிரண்டு கதைகள் வாசிக்க கிடைக்கிறது.ஒரு சிற்பியைப் போல செதுக்கப்பட்டிருக்கிற இந்த கதைகளின் மொழி தனித்துவமானது. ஒன்றை சொல்ல இன்னொன்றை துவங்குகிறது.ஒரு சொல் நீண்ட தூரங்களுக்கு இட்டுச் செல்கிறது. இந்தியாவின் நீண்ட கழிப்பறை என்கிற சொல்லின் நீளமும் அப்படித்தான். நிலத்தை இணைத்துக் கொண்டு எழுதுகிற எழுத்துகள் எப்போதும் வீரியமானவைதான்.நல்லது கெட்டது மணம் நாத்தம் என எல்லாவற்றையும் தன்மீது வாரிப் போட்டுக்கொள்கிற எழுத்து வசப்படுவது லேசான காரியமல்ல.வைரவன் அதை சுவீகரித்திருக்கிறார்.எல்லா கதைகளையும் சொல்லிக் கொண்டிருப்பது உசிதமானதல்ல என்பதனால் ராம மந்திரம் மற்றும் பட்டர்-பி என இரண்டு சிறுகதை நூல்கள் வாசிக்கவும் அதில் பயணிக்கவும் எக்கச்சக்கமான விசயங்களை வைத்திருக்கிற ஒரு குறிப்பை மட்டும் சொல்லியிருக்கிறேன்.
இதல்லாத ஒரு குறிப்பாக சொல்வதென்றால்,உண்மையில் மனிதன் தன்னை ரகசியமாக வைத்திருக்கவே விரும்புகிறான் ஆனால் அவன் அவனறியாது உள்ளார்ந்த விருப்பங்களிலிருந்து விடுபடத் தெரியாதவனாக தனது ரகசியங்களில் உடைபடுபவனாக இருக்கிறான்.'ராம மந்திரத்தின்' பாத்திரங்களான சிவதானு மற்றும் ராமைய்யாவும் ஒரு பக்கமாகவும் 'பொந்தில்' வரும் பாத்திரங்களான மேரியும் ராமசாமியும் மற்றொரு பக்கமாவும் நின்றாடும் தளத்தில், பாத்திரங்களின் பெயர்களாக வலம் வருவது பெயர்கள் மட்டுமல்ல அது ஒரு குறியீடு எனக்கொண்டால் மனிதன் மட்டுமல்ல எழுதுகிறவனும் ரகசியத்தில் உடைபடுகிறவன் என்பது போத்தியமாகிறது.இவ்வாறு உடைபடுதல் இருபத்தியிரண்டு கதைகளிலும் நிகழ்கிறது. 'நான்,நாய்,பூனை'கதையிலும் கூட அவன் அப்படித்தான் உடைகிறான்.இந்த எல்லாக்  கதைவெளியிலும் நிகழுகின்ற உடைதல்  மேலோட்டமான வாசிப்பில் புலப்படுமா என்று தெரியவில்லை. இங்கு அரசியல் இல்லாமல் என்னதான் இருக்கிறது.நல்ல அனுபவத்தை ஏற்படுத்துகின்ற கதைகளின் எழுத்துக்காக வைரவன் லெ.ரா.வுக்கு அன்பும் வாழ்த்தும்.

மீரான் மைதீன்
நாகர்கோவில்
03/01/24


பட்டர்-பி
ராம மந்திரம்

நூல்கள் வாசிக்க
யாவரும் பப்ளிஷர்ஸ்

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...