Friday 5 January 2024

"வீரியமிக்க விளிம்பின் குரல்" மீரான் மைதீன்


       கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாக இலக்கிய உலகில் கோலேச்சும் எழுத்தாளுமை மதிப்புக்குரிய தோழர் ம.காமுத்துரை அவர்கள். இவரது எழுத்துகளின் முதன்மைத் தன்மையாக நாம் அறிவது, உணர்வது, புனைவிலக்கியத்தில் விளிம்பு நிலைக் குரலாக எப்போதும் ஒலிக்கும் இவரின் படைப்புகள்தான். அடித்தட்டு மக்களின் வாழ்வை - வலியைக் கலைப்படுத்தும் காமுத்துரை அந்த மக்களின் சொற்களிலேயே அதனை வரைவதில் தமிழ்ச் சூழலில் வல்லமையுடையவர்களில் மிகச்சிறந்த ஒருவராக இருக்கிறார்.

              சாதாரணமாகப் பொருட்களை அளவீடு செய்வதற்கான உபகரணங்கள் பலவகைப்பட்ட மாதிரிகளில் நம்மிடமிருக்கின்றதைப் போல துல்லியமான அளவீட்டுக் கருவிகள் இலக்கியத்தின்பால் நம்மிடமில்லை. நாம்தான், நாம் ஒவ்வொருவரும்தான் கலையின், இலக்கியத்தின் அளவீடாக இருக்கிறோம். எனவே, காமுத்துரையின் அளவீடு என்பது இந்த உன்னத வாழ்வின் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வுபரப்பில் மேவும் சுவீகாரமாக இருக்கிறது.அதனை அதனளவில் அப்படியே உள்வாங்கும் இந்த தெளிவான சுவீகாரமே தேர்ந்த கதைகளாக  அந்நியப்பட்டவர்களுக்கும்  அதனைக் கொண்டு சேர்ப்பதில் வெல்கிறது. இந்த வெற்றி அங்குமிங்குமாக ஏற்றத்தாழ்வுளாகக் கிடக்கும் சமூகச் சமன்பாட்டுக்கு அத்தியாவசியமானது. கலையின் ஜனநாயக முகம். இதனடிப்படையில் சிறுகதை, நாவல் என தனது தனித்துவமான படைப்புலகை கால இடைவெளியின்றி சீரான பயணமாக நிகழ்த்தும் அவரிடமிருந்து எழுத்துக்கள் பொங்கிப் பெருகி வந்த வண்ணமே இருக்கின்றன.தமிழ் இலக்கியத் தடத்தில் பலரிடத்திலும் அவ்வப்போது சில தேக்கநிலைகளைக் கண்டிருக்கிறோம் ஆனால் சிறிதும் தளர்வின்றி அரை நூற்றாண்டை நோக்கிப் பாய்கிறது காமுத்துரையின் எழுத்து.சத்தமின்றி ஒரு சகாப்தமாக மலர்ந்திருக்கிற இதனை கொண்டாட்டத்திற்கான ஒன்றாக கவனப்படுத்துகிறேன்.


              குதிப்பி, கோட்டைவீடு, மில், கொடி வழி போன்ற முக்கிய புதினங்களை நான் முன்னமே வாசித்திருக்கிறேன்.காமுத்துரையின் இருப்பில் இன்னும் ஒன்றை நான் சிறப்பாகக் கருதுவது அவர் இலக்கிய உலகின் எல்லா முனைகளிலும் பாகுபாடின்றி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்சூழலில் இது அபூர்வமானதும் கூட. அவர் எழுத்தின் வழி இதனை சாத்தியப்படுத்தியிருப்பதாக உறுதிப்படுத்தலாம். காமுத்துரையின் எழுத்து என்பதே இந்த உறுதிப்பாட்டின் சாட்சியமாகச் சொல்கிறேன். காட்சியை அப்படியே எண்ணம் பிசகாமல் வாசக மனப்பரப்பில் பதித்துச் செல்லும் எழுத்தின் வலு, தன்னிடமிருந்தும் தன் நிலத்திலிருந்தும் சுவீகாரம் செய்கிற வாழ்வை வரைவதாலோ என்னமோ இவரின் எழுத்தில் குருதியோட்டம் துடிப்படங்காமல் எப்போதும் சுடச்சுட இருப்பதை அவதானிக்க இயலும். வாசிக்கும் மனங்களுக்கு உணர்ச்சிகளைக் கடத்துவதில் அனுபவமிக்க தனது எழுத்தால் ஆணுக்குள் பெண்ணையும் பெண்ணுக்குள் ஆணையும் மடைமாற்றி வாசகனைத் தனித்தவனாக இல்லாமல் நியாய அநியாயங்களின் மீது எதிர்வினை புரிய அந்த கூட்டத்தில் ஒருவனாக்கிவிடும் வசீகரம் இவரின் எழுத்திலுண்டு.
               கலவையை இப்போது வாசித்த இந்த அனுபவம் எனக்குள் காட்சியாகத்தான் இப்போதும் கிடக்கிறது. காட்சி என்றால் முற்றிலும் புதிய காட்சி,அபூர்வமான காட்சி. விளிம்புநிலையில் அழகிய அவதானம். இந்த அவதானம் உயிர்ப்புமிக்கது. எனவேதான் வேறு பிரதேசம் வேறு பண்பாட்டிலுள்ள ஒருவனையும் அது காட்சிக்குள் இழுத்துச் சென்று பாத்திரத்தில் ஒருவனாக்குகிறது.

           ம.காமுத்துரை எழுதியிருக்கிற இந்த கலவை என்கிற நாவல் விளிம்பு நிலை வாழ்வியலை மையமாகக் கொண்டுள்ளது. புதினம் திறக்கின்ற வாழ்வும், அந்த வாழ்வில் வலம் வருகின்ற மனித மனுசிகளும், அவர்களின் வழக்குமொழியும், ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்துகிறது.
கட்டுமானப் பணியிலுள்ள அடித்தட்டு உழைப்பாளிகளும் அவர்தம் நிலையிலுள்ள முதலாளிகளும் ஊடறுக்கும் கதைக் களத்தின் மையப் பாத்திரமாக பூங்கொடி இயங்குகிறாள்.
மனிதர்கள் எல்லா நிலைகளிலும் ஒருவரை ஒருவர் மிகைக்க விரும்புகின்றனர் உள்ளார்ந்த இந்த மிகைவிருப்பமே வாழ்வின் போக்கில் நாம் எண்ணவியலாத உணர்வுநிலை மாற்றங்களை நிகழ்த்துகிறது. பரஸ்பரம் பாலியல் தேவைகள்வரை பூர்த்தி செய்து கொள்ளும் ஒத்த அன்பு கொண்ட பூங்கொடியும் குரங்காட்டி குமாரும்‌ தமது உலகில் நிகழும் வாழ்வும் வலியும் முரணுமான ஒரு நேர்கோட்டு கதைக்களத்தில், அய்யம்மாள் மைதானத்தின் மத்தியக் கோடுபோல நின்று தனது இருப்பை நிலைநிறுத்தும் போது பூங்கொடியும், குரங்காட்டி குமாரும் அங்குமிங்குமாக நின்றாடும் தருணம் அமைகிறது.

எதார்த்த வாழ்வென்பது நம் புனிதங்களை உடைத்துப் போடுகிறதாய் இருக்கிறது. கட்டுமான தொழிலாளியான பெண்னொருத்தி வேலையிடத்தில் மூத்திரம் பொய்கிறாள். அது சின்ன அறை என்பதால் பாத்ரூம் என்று கருதி மூத்திரம் பெய்ததாக அவள் அய்யம்மாவிடம் கூறும் போது 'மூதேவி அதுதான் பூஜையறை'யென அய்யம்மாள் சொல்லும் பதில் காற்றில் கடந்து போகிறது.புனிதங்களின் முந்தைய இருப்புகள்மீது என்னவெல்லாமோ நிகழ்ந்திருப்பதை கதை உலகம் போகிற போக்கில் வீசுகிறது.நம்மிடமிருக்கிற தூய்மைவாதம்,பெருமைகள்,தனித்தஅடையாளமென கட்டி புணரமைக்கப்பட்டுள்ள எல்லாவற்றின் ஆதியும் இவ்வாறான கதைகளைக் கொண்டதுதான் என்கிற சிந்தனைக்கு நம்மை கடத்துமிடமாக புரிந்து கொள்ளலாம்.இன்றைய எல்லா புனிதங்கள்மீதும் உழைப்பவனின் இரத்தமும் சதையும் வியர்வையும் மட்டுமல்லாது அவர்களின் கழிவுகளும் கலந்திருக்கின்றன என்பதான இந்த சித்திரம் இலக்கியத்தின் புதிய பதிவாக விரிந்திருக்கிறது.எளிய மனிதர்களுக்கு வாழ்வின் நிமித்தமான காரியங்களின் மீது எந்த வரையரையுமில்லை.அவர்கள் அவர்களின் இயல்பிலேயே வாழ்கிறார்கள். நாம்தான் அந்த நிகழ்வுகளின் மீது அதிர்ச்சி கொள்கிறோம்.நல்லது என்றும் கெட்டது என்றும் தனித்த வார்த்தைகள் இல்லாத மனிதர்கள் தங்களது சேகரங்களில் உள்ள வார்த்தைகளை முன் தீர்மானங்களின்றி வீசிக்கொள்கின்றனர்.மொழி தெறிப்புகளாகி பரவுகின்றன. பெண்ணாக இருக்கும் அய்யம்மாளிடம் ஆணாதிக்க சிந்தனை கதையின் போக்கிலேயே மலருகிறது.அது ஏற்கனவே சமூகம் கட்டிவைத்திருக்கும் படிநிலைகளினால் ஏற்படும் கௌரவத்தின் கூறுகளிலிருந்து தோன்றி வளரும் பண்பாடுகளில் உள்ளவையாக இருக்கிறது.அவைகளால் துரத்தப்படும் அய்யம்மாள் மெல்ல மெல்ல தானே துரத்துபவளாகவும் மாறுகிறாள்.
பூங்கொடியும் குரங்காட்டிக் குமாரும்  செடிகொடி மறைவில் அதீத அன்பின் நம்பிக்கையின் நிமித்தமாக  சங்கோஜமின்றி புணரமுடிகிறது, நம்பிக்கையும் அன்பும் தகரும்போது  அவ்வாறு புணர்ந்தவனை தெரியாது என்று சொல்லுவதில் தனது கௌரவத்தை மீட்டெடுக்க பூங்கொடிக்கு இயலுகிறது. குமாரின் கருவைச் சுமக்கும் அவள் வாழ்கிறாள் மற்றொரு பக்கம் அவனும் வாழ்கிறான் காலமும் வாழ்கிறது. திட்டங்கள் தந்திரங்களின்றி ஒருவரை ஒருவர் ஆளுகிறார்கள்,வெல்கிறார்கள்,வெள்ளந்தித்தனமாக ஒன்றை ஒன்று ஒழித்துக்கட்டவும் முயலுகிறது.இந்த வினோதமான முரண்களோடு இயங்கும் எளிய மனிதர்களின் உலகில்தான் எண்ணிலடங்காத மாயஜாலம் நிகழ்கிறது. காமுத்துரை இந்த மனிதர்களை அவதானித்து நம்மிடம் கொண்டு சேர்பதற்காக அதில் மேலோட்டமாக இல்லாமல் இரண்டற கலந்திருக்கிறார் என்பதை இந்த புதினம் நமக்கு காட்சிப்படுத்துகிறது.

ஒரு வீடு கட்டுபவனுக்கு அது வாழ்வதற்கான கனவுகள் நிறைந்த வாழ்விடம் என்றால் அதைக் கட்டி எழுப்பும் உழைப்பாளிகளின் உலகம் அந்த வீட்டின் மீது புனிதங்களாலும் அபுனிதங்களாலும் நிறைகிறது. உழைப்புக்கு கூலியும் அங்கு உழைப்பின் நிமித்தமான ஒரு பெரும் வாழ்வும் அவர்களுக்கு வசமாகிறது. பிறகு அவர்களுக்கும் அந்த கட்டிடத்துக்கும் தொடர்பற்றுப் போய்விடுகிறது.இந்த தொடர்பற்றுப் போகுதல் என்பது இந்தக் கதை மனிதர்களுக்குள்ளும் நிகழும் போது நாம் வருந்துகிறோம்.மெல்லிய உணர்வுகளை,உழைப்பை வலியை காதலை ஆக்ரோசத்தை,ஒரு ஆணைக் தக்கவைப்பதில் பெண் என்னும் அடையாளத்தின் வழி நிகழும் சச்சரவுகளை சித்திரமாக்கும் காமுத்துரையின் இந்த நாவல் புனிதங்களும் அபுனிதங்களும் ஊடறுக்கும் உலகம். நாம் அன்றாடம் கடந்துபோனாலும் நாம் கவனிக்காத கதைமாந்தர்கள் வாழும் உலகத்தினுள் நம் இருப்பை வசமாக்கும் நாவல் கலவை, நமது தரிசனங்களில் பார்வைப் புலனுக்கு அகப்படாத வீரியமிக்க விளிம்பின் குரல் .

   நான் எப்போதும் கொஞ்சம் அதிசயமாகப் பார்க்கும் எளிய மனிதர். தனது நெடிய அனுபவங்களின் வழி வாழ்வையும் எழுத்தையும் ஒன்றாகக் கொண்டிருக்கும் தோழர் காமுத்துரையின் எழுத்து இன்னும் நீண்டதூரப் பயணத்துக்காக காத்திருக்கிறது. சலிக்காத மானுடப்பற்றாளர் இதையெல்லாம் சாத்தியப்படுத்துவார் என்றே நம்புகிறேன்.


           அன்புடன்
     எம்.மீரான் மைதீன்
        நாகர்கோவில்
        30/11/2023

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...