Tuesday 16 January 2024

ஈரவாதை'நாவல் அறிமுகம்

நண்பர் ரபீக்ராஜாவின் முந்தைய எழுத்துக்களை நான் வாசித்ததில்லை.முதன்முதலாக இப்போது அவரின் ஈரவாதை என்னும் இந்த புதினத்தை வாசித்திருக்கிறேன். அக்கரை என்கிற சொல் இரண்டு அர்த்தங்களை கொண்டுள்ளது.நான் வாசித்துவிட்டு அக்கரையாக அவரிடம் சில விசயங்களைப் பேசிய  பேச்சில் குறிப்பிட்டுள்ளேன்.

நாம் இந்த வாழ்வில் அறிந்த பக்கங்களைக் காட்டிலும் அறியாதவைகளின் உலகம் ஆகப்பெரியது.ரபீக்ராஜா இந்த புதினம் வாயிலாக அறியாத உலகின் ஒரு திறப்பின் வழியே நம்மை குழந்தையைப்போலக் கரம் பிடித்து நடத்திக் கொண்டு போகிறார். அலங்காரமற்ற எளிய ஆவணமாக வரையப்பட்டிருக்கிறது.அலங்காரம் அத்தியாவசியமானதல்ல என்றாலும் ஒரு எழுத்து வாசகர்களுக்கான வெளியை வழங்காமல் அவைகளை அபகரித்துக் கொள்ளுதல் ஈர்ப்பை குறைக்குமென்றாலும்,புதினம் கொண்டிருக்கிற பாடுபொருளின் நிமித்தமாக ரபீக்ராஜா அதீத நம்பிக்கை கொண்டிருப்பதை நாம் குலைத்துவிட இயலாது.
        ஒரு தந்தையும் மகனும் கூட்டாகக் கலந்து  முதன்மையாக நகர்த்தும் இக்கதை உலகம் கடும் நோயின் பரப்பில் இயங்குகிறது.ஒரு மருத்துவமனையின் இருப்பினுள்ளே நோயாளிகளும் அவர்கள் மீது கடப்பாடுகள் கொண்டவர்களும் புழங்குகிறார்கள்.உயிர்களிடத்தில் நோய்கள் எண்ணிலடங்காத வகைமைகளில் இருக்கிறது.அது எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் உயிர்கள் அதனை எதிர்த்து உயிர்வாழ்தலின் பொருட்டு போராடுகின்றன.அது இரண்டுமாத குழந்தையாக  வயோதிகராக. அல்லது அப்போதுதான் திருமணமான இளம் தம்பதியரில் ஒருவராக இருக்கலாம், அந்த நோயாளிகளோடு ஒரு அம்மாவோ,மகனோ,கணவனோ,மனைவியோ சேர்ந்து போராடுகிறார்கள். இந்த போராட்டங்கள் பல காரணகாரியங்களைக் கொண்டிருக்கின்றன.இந்த உணர்வுகளின் பொதுவான பக்கம் போல 'ஈரவாதை' தோன்றினாலும் இது தனித்துவமான அகஉலகமாக இருக்கிறது.புற்றுநோய் பற்றி வெகுஜன சினிமா ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் நீண்டகால பிம்பங்களின் மீது ஒரு மாற்றை இக்கதை உலகம் செய்கிறது. சபிக்கப்பட்டதைப் போல தோற்றம் தரும் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.இங்கு மனிதர்களில் மோசமானவர்கள் என்று யாரும் வரவில்லை.நீதி நேர்மை தர்மம் அன்பு காரூண்யம் என தேவாம்சம் கொண்டவர்களாக பரஸ்பரம் மானுட அன்பின் பரப்பில் நடமாடும் மனிதர்கள். சிறுதுளி மூத்திரம் மகனின் மீது பட்டுவிட்டதற்காக கலங்கும் அப்பா நோயின் கடுமையால் மனம் வெதும்பி தற்கொலையில் தோல்வியடையும் போது அழுகிறார்.அம்மா பற்றிய நினைவுகள் எங்கோ தூரத்தில் திருப்பறங்குன்றம் மலைமீது கிடக்க,சிறுவனாக அம்மாவை இழந்த மகனுக்காக அப்பாவும் அம்மாவுமாக வாழ்துவரும் அப்பாவை அவன் இத்தனை கருணையோடும் வாஞ்சையோடும் பார்த்தும் கேட்டும் நடப்பதில் கதை கதையாகப் போய்கொண்டே இருக்கிறது.
           உணர்வுகளின் போராட்டத்தோடு  மனம் அலைபாயும் பேருலகின் பல அம்சங்களை எழுதுவதற்கான வாய்ப்புள்ள புதினமாக இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் மருத்துவம் அது நோயாளிகளிடத்தில் நிகழ்த்தும் வன்முறை அல்லது கருணை இவைகளின் விரிவான உலகைப்பற்றிய அறிய வாய்ப்புள்ளதையும் பயன்படுத்தாமல் புதினம் தன்னைச் சுருக்கியிருக்கிறது. சைக்கிளில் இருந்து இறங்காமலே வட்டமடிக்கும் ஒரு சாகசகாரனின் செயல்போலவும் இதனைக் கருதலாம். நேர்கோட்டு முறையில் எழுதப்பட்டுள்ள இப்புதினத்துக்கான தனித்த பயண இலக்கு எது என்பது இல்லை என்றாலும் இது நமக்கு காட்சிகளைக் காட்டுகிறது.காட்சிகளை சாதரணமாக ஒதுக்கியும் விடஇயலாதவாறு துயரம் நம்மை அடைகிறது.'அப்பாவின் கைகள் மட்டுமல்ல கால்களிலும் நரம்புகள் புடைத்துக் கொண்டு நிற்கும்.ஊசியை எடுத்து கையில் வைக்கும்போது அப்பா வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.அப்பாவின் செய்கை எனக்குப் புதிதாக இருந்தது. சமையலின் போது எந்த துணியின் பிடிமானம் இல்லாமலே சட்டியை அடுப்பிலிருந்து இறக்குவார். காய்கறிகள் நறுக்கும் போதுகூட ஏற்படும் வெட்டுக்காயம் அவரை முகம் சுளிக்க வைக்காது.இயல்பு வாழ்விலுள்ள வலிக்கும் வலிந்து திணிக்கப்படும் வலிக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.' ரபிக்ராஜா குறிப்பிடும் இந்த இரட்டைவலிகளின் உலகமாகவும் இந்த புதினத்தை இன்னொரு அர்த்தத்தில் கருத முடிகிறது.இயல்பு வலியும் திணிக்கப்படும்வலியுமாக மனிதர்கள் குறுக்குவெட்டாக நோயர்களின் உலகில் பயணம் நிகழ்த்துகின்றனர். நடேசன் மனைவியை இளமையிலேயே இழந்து விடுவது இயல்பான வலி என்றால் அவர் இன்னொரு துணையை அமைத்துக் கொள்ளாதது அவர் வலிந்து ஏற்படுத்திக் கொள்ளும் வலியாகத்தான் இருக்கிறது.
இந்த இரட்டை நிலைபாட்டை இந்த ஈரவாதை புதினத்தின் அனேக கதைமாந்தர்களிடம் அவதானிக்க முடிகிறது.நலவாழ்வும் நோய் வாழ்வுக்குமிடையே மீளத்துடிக்கும் மனிதர்களின் உலகமாக இந்த புதினம் அதன் பரப்புக்கு வெளியே இருக்கும் பேருலகின் அவதானங்களை விட்டு விடுவதையும் பார்க்க முடிகிறது.

              ஈரவாதை,காத்திரமான வாசிப்பிற்கான பகுதிகளை கொஞ்சம் பின்னே வைத்திருக்கிறது.புதினத்தின் மைய்யச் சரடில் ஊடுபாவி விலகும் சில கதைமனிதர்கள் மறக்கவியலாதவர்களா இருக்கிறார்கள்.மின்னலில் கனப்பொழுதில் மின்னி மறையும் அதிசயம்போல ஆக அபூர்வமான மனிதர்களாக இருக்கின்றனர். செய்முறையில் இந்த புதினம் கலைக்கப்பட்டிருக்கலாம் என்ற தோன்றுதல் எனக்கு திரும்பத் திரும்ப வந்த வண்ணமே இருப்பது இதன் நிமித்தமாக கூட இருக்கலாம்.
யாதார்த்தம் உண்மையைப் பேசுவதாக இருந்தாலும் உண்மையைக் கலையாக மாற்றுவதில்தான் ஒரு படைப்பாளி தனக்கான தனித்துவங்களை உருவாக்க இயலும்.உண்மைக்கும் கலைக்கும் இடையே ஒரு சந்திப்புத்தளம் இருக்கிறது.அந்த சந்திப்புத்தளத்தை படைப்பாளி மெருகேற்றக் கடமைப்பட்டவன்.அவன் இதன் தனித்துவம் குறித்து கவனம் கொள்ளவில்லை என்றால் உண்மை வெறும் உண்மையாகத்தான் இருக்கும்.புதினக்கட்டமைப்பில் கலைத்துப் போட்டு புதிய புதிய பரிமாணங்களை செய்வதற்கான சாத்தியங்களைப் பயன்படுத்தாமலும் விட்டு விடக்கூடாது.நோய் கொடியதாக இருந்தாலும் நோயாளி உட்பட யாரும் இரண்டு வாரத்திற்குப் பின் துக்கப்பட விரும்புவதில்லை.ஒன்று நோயை மறந்து விடுகிறார்கள் இல்லையேல் ஏற்றுக் கொள்கிறார்கள்.இரண்டுமே நல்லதுதான் எனக் குறிப்பிடும் புதிதனத்தின் சொல் வெறும் சொல் மட்டுமல்ல ஏகதேசம் வாழ்வின் நிலையும் கூட.ஆனால் வாழ்வில் ஒருபோதும் மறக்கவியலாத நினைவுகளைக் கொண்டு நடேசனை முன் வைத்துதான் இப்படியான சொற்களை செய்யும் முரண்களையும் நாம் புதினத்தின் வழியே அவதானிக்கலாம்.ரபீக்ராஜா ஒரு புதிய பகுதியை எடுத்துக் கொண்டு அதனையே முழுமையாகப் பேசும் புதினத்தை நம்பகமாக படைத்திருப்பதை பாராட்டவும் தவறிவிடக்கூடாது.சமரசமின்றி அவர் எழுத்தை எழுதியிருக்கிறார்.வெகுஜன வாசிப்பில் இதன்மீதான நல்ல உரையாடல்கள் புதினத்தின் உள்ளேயும் வெளியேயுமாக நிகழ்ந்தேற வேண்டும்.

      கடற்கரையைப் போலவோ பூங்காவைப் போலவோ நாம் ஒரு மருத்துவமனையின் உள்அவயங்களை நாம் நெருங்கிப் பார்க்க விரும்புவதில்லை.தள்ளி நின்று பார்க்கிறோம்.நமது இந்த அபிப்ராயத்தை உடைத்து ஈரவாதை நம்மை நெருக்கமாக்கியிருக்க வேண்டும்.மௌனங்களின் அழகை   வார்த்தைகளால் விரையம் செய்துவிடாமலிருப்பதும் கலைதான்.இந்த புதினத்தை வெளிக் கொண்டுவரும் ஆமினா முகம்மதுக்கும் நாவலாசிரியர் ரபீக்ராஜாவுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பான வாழ்த்தும் அன்பும்.இன்னும் எழுத்துக்கள் புறப்பட்டு வரட்டும்.

அன்புடன்
எம்.மீரான் மைதீன்
நாகர்கோவில்
01-01-24

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...