Monday 1 January 2024

அஜ்னபி'யின் பார்வையிலே- பிலால் அலியார்



அஜ்னபி, 355 பக்கங்கள் -
மீரான் மைதீன், காலச்சுவடு பதிப்பகம்

வளைகுடா வாழ்வு குறித்தும், அதன் வழியாக சம்பாதிக்கும் மனிதர்களை குறித்துமான இஸ்லாமியர், இஸ்லாமியரல்லாத சமூகங்களின் பொதுப்பார்வையையும், சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் போலி பிம்பத்தையும் உடைத்துச் சுக்குநூறாக்குகிறது, சவூதி அரேபிய நிலப்பரப்பில் சிக்கிக் கொண்ட திருமணமாகாத ஒரு இஸ்லாமிய இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து அதன் பின்னனியில்  எழுதப்பட்ட அஜ்னபி என்ற இந்த நாவல்…

அஜ்னபி என்ற அரபி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் அந்நியன். வளைகுடாவிற்கு பொருளாதார தேடலுக்காக செல்லும் எந்த நாட்டினரும் அஜ்னபி தான்.. கேட்பதற்கு நன்றாக தெரியும் இந்த வார்த்தைக்கு பின்னால் மறைந்து கிடக்கும், மற்றவர்களால் உணர முடியாத அவலங்களும்,அவமானங்களும், சுயமரியாதையை இழந்து குடும்பத்திற்காக படும் துயரங்களையும் தன் எழுத்தில் வடித்திருக்கிறார் மீரான் மைதீன்.

கதை நிகழும் காலம் 1990களுக்கும் 2000த்திற்கும் இடைப்பட்ட காலமாக இருப்பதை தெளிவாக உணர முடிகிறது.ஏனெனில் குடும்பத்தினரின் தொடர்புக்காக கடிதங்களை எதிர்பார்ப்பதையும், தொலைபேசியில் பேசுவதற்கு ஊரில் உள்ள வசதியானவர்களின் வீட்டுக்கு சொல்லி குடும்பத்தினரை வரவழைத்து பேசுவதும், திருமணம் நிச்சயிக்கப்பட பெண்ணின் புகைப்படத்தை பார்த்து கொண்டே காலத்தை தள்ளுவதும், சவூதி சென்றுவிட்டாலே சம்பாதித்து விடலாம் என்ற தவறான கற்பிதமும் அந்த காலகட்டத்தை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.இந்த சூழல்கள் தற்போது ஓரளவிற்கு களையப்பட்டிருப்பது ஒரு ஆசுவாசத்தை தருகிறது.

பட்டப்படிப்பை முடித்து விட்டு 2000 முதல் 2007 வரை சென்னையில் பணியில் இருந்து கொண்டே வளைகுடா வாய்ப்புக்காக Employment NRI Times என்று மும்பையிலிருந்து வெளியாகும் நாளிதழை வைத்து கொண்டு விண்ணப்ப படிவங்களை அனுப்பி கொண்டிருந்தேன்.. அப்போது வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக கீழ்ப்பாக்கத்தில் நடத்த ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். ஆப்ரிக்க நாட்டை சார்ந்த ஒருவர் நேர்முகத் தேர்வு நடத்திவிட்டு என்னை அலுவலக கணிணி உதவியாளராக நியமிப்பதாகவும், ஏனைய விபரங்களை ஏஜென்சியிடம் கேட்டு கொள்ளவும் என்றார். ஏஜென்சியினர் 30,000 பணமும் என்னுடைய ஒரிஜினல் பட்ட படிப்பு சான்றிதழ்களையும் (அட்டஸ்டேசன் செய்ய வேண்டுமென) கேட்டனர். சான்றிதழ் அட்டஸ்டேசன் என்றவுடன் முழுமையாக நம்பி விட்டோம். நானும் அண்ணன் கொடுத்த பணத்தை கட்டிவிட்டு அனைத்து சான்றிதழ்களையும், பாஸ்போர்ர்டையும் ஒப்படைத்து விட்டு வெளிநாட்டு கனவில் மிதந்து கொண்டிருந்தேன், ஆனாலும் சென்னையில் அதே வேலையை தொடர்ந்து கொண்டிருந்தேன்.. விசா வந்துவிட்டதா என ஒருவாரம் கழித்து ஏஜெண்ட அலுவலகம் இருந்த திருவில்லிக்கேணி சென்ற போது, அந்த அலுவலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர், ஒரே களேபரம்.. ஏஜென்ட் ஓடிவிட்டதாகவும் அலுவலகத்தில் யாருமில்லை என்ற தகவல் வந்தது.. அப்போது அங்கிருந்த ஒரு அண்ணனிடம் என்னண்ணே பண்றது என்ற போது அவர் என்னை பார்த்து அழுது விட்டார், கடைசியா பொண்டாட்டியோட தாலிய வித்துட்டு வந்து பணத்த கட்டுனேன், என்ன பண்றதுண்ணே தெரியல என்ற போது அதிர்ச்சியானேன்.. 30,000 பண இழப்பு என்பதை என்னால் பெரிய இழப்பாக கருதவில்லை, ஆனால் பாஸ்போர்ட்டும், சான்றிதழ்களும் மொத்தமாக போனதில் ஒரு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது.. அங்கிருந்த சிலர் எழும்பூர் காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு சென்று புகாரளிக்க செல்வோம் என கிளம்பினர், நாங்கள் அங்கே செல்லும் முன்னே ஊடகங்களும், செய்தியாளர்களும் குழுமி விட்டனர்.. அவர்களுடன் பணத்தை இழந்தவர்கள் பேட்டி கொடுத்தனர்.. ராஜ்டிவியில் ஒளிபரப்பான செய்தியில் கூட்டத்தோடு கூட்டமாக இருந்த என்னை பார்த்த அண்ணன், உடனடியாக இடத்தை விட்டு நகர சொல்லி ஊருக்கு வரச் சொன்னார்.. புகார் மனுவை அளித்து விட்டு ஊருக்கு வந்தேன், அடுத்த பத்து நாளில் கொரியர் மூலமாக அனைத்து சான்றிதழ்களும் பாஸ்போர்ட்டும் வீட்டுக்கு வந்தது.. பணத்தை மட்டும் அடித்து விட்டு சான்றிதழ்களை அனுப்பியதால் பத்து நாட்களில் என் மனதை வென்றான் அந்த ஓடிப்போன ஏஜெண்ட். அன்று ஒரு முடிவு எடுத்தேன், வெளிநாட்டுக்கு கம்பெனியே நம்மை கூப்பிட வேண்டும் நாமாக ஏஜெண்டிடம் செல்ல கூடாதென.. அதன்படியே அடுத்த இரண்டாண்டுகளில் துபாய்க்கு பணி திறனின் அடிப்படையில் வந்து சேர்ந்தேன்.. வந்தநாள் முதல் இன்றுவரை வளைகுடாவில் வாழும் தமிழர்களையும், தமிழ் இஸ்லாமியர்களின் சூழலையும் பார்க்கும் எனக்கு இந்த நாவல் ஒரு ஆவணமாக இருக்கிறது..

வளைகுடா பணிக்கு படித்துவிட்டு சரியான நடைமுறையில் வருபவர்களை விட, எப்படியாவது வளைகுடா (சவூதி, அமீரகம், குவைத், ஓமன், பக்ரைன், கத்தார்) சென்றால் போதும் என்ற எண்ணத்தில் யார் பேச்சையாவது கேட்டு, இல்லாத பணத்தை எப்படியாவது ஏற்பாடு செய்து, இங்கு வந்து அல்லல்படுபவர்கள் அதிகம். ஊருக்கும் சொல்ல முடியாமல், செல்ல முடியாமல், இங்கும் அதிகமாக சம்பாதிக்க வழியில்லாமல் அவர்கள் படும் துயரங்களை நாம் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது..

அம்மாதிரியாக சவூதியில் வந்திறங்கிய ஃபைசல் என்ற கதாபாத்திரத்தை மையமாக கொண்டு, குமரி இக்பால், பிரபு, மிஷிரி கிழவன், நாசர், மம்மரிபா, மம்மக்கண்ணு, மம்மலி, கோபகுமார், பணியடிமை, டெய்லர் அஹமது, செளதி அரபுகள் துவைஜி, அப்துல்லா,
அரூஷா, பிலிப்பைனி, பாகிஸ்தானி ஷமி, பாலஸ்தீனி, ஜாஸ்மின் என்ற உலகின் பலதரப்பட்ட நிரப்பரப்புகளில் வாழ்ந்தவர்களின் பின்னனியில் அஜ்னபியை ஒரு பத்தாண்டு சித்திரமாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் மைதீன்.

சவூதியின் நிலப்பரப்பு என்பது மிக நீண்டதாக இருந்தாலும் ரியாத்தில் இருந்து எந்தவித பேப்பரும், பாஸ்போர்ட்டும் இல்லாமல் தப்பிக்கும் ஃபைசலை ஜித்தா கொண்டு வந்து அவனை தாயகம் திரும்ப வைக்கும் நடவடிக்கைகளும், அந்த செயல்பாடுகளினோடு ஜித்தாவில் நிகழ்வும் அஜ்னபிகளின் வாழ்வியல் சம்பவங்களும் ஒரு காட்சிப்பிழையாக நம் கண்முன் நிற்கிறது. சவூதி அரபிகளின் சட்டங்களும், சட்டத்தை நிலைநாட்ட அவர்கள்  அரபி, ஷியா, அஜ்னபிகளுக்கிடையே காட்டும் பாகுபாடுகளை நாம் உணரும் போது, வாழ்வதற்கான பொருளாதார தேடலின் கடுமையான பயணம், பாலைவன சூட்டை விட சூடு மிகுந்ததாக உணர முடிகிறது.

துவைஜி என்ற அரபியின் கொடூர முகம் சாத்தானின் முகமாக நம் கண்களில் தெரியும் வேளையில், மம்மலியின் முதலாளி அரபி அப்துல்லாவும், அரபி அபுஹூசுனும் இஸ்லாத்திற்கான அடையாளமான மனிதம் இன்னும் இருக்கிறது என்றும் நம்மை ஆசுவாசப்படுத்துகின்றனர்.

வார இறுதிநாட்களில் ஏதேனும் ஒரு தங்குமிடத்தில் கூடி குடித்து, நன்றாக சமைத்து சாப்பிட்டு, சீட்டு விளையாடி, நீலப்படங்களை கண்டு விட்டு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்காக அடித்து பிடித்து ஓடுவதையே தனி நாவலாக எழுதலாம், அந்தளவிற்கு வியாழன் இரவு நண்பர்களுடனான தனிக் கதைகளும், கிண்டல்களும், ஊரிலிருந்து வந்திருக்கும் கடிதங்களின் செய்திகளுமே வளைகுடா வாழ்வை நகர்த்தி செல்ல ஒவ்வொருவருக்கைமான மனதை அளிக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது, அதை அஜ்னபியில் வெகு நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர், தன் எழுத்தாளுமையால்.

நாவலில் வரும் கருத்தான் காதர் என்ற கதாபாத்திரத்தின் முன் அறிமுகத்தையும், நாவலின் இறுதிப்பகுதியில் காதர் குறித்து வரும் செய்தியையும் படிக்கையில் ஒரு மனிதனின் வாழ்வை முடிவு செய்வது சம்பவங்களும், சூழலுமே.. எந்த மனிதனும் சமூகத்தின் பார்வையில் மோசமானவனகவும், நல்லவனாகவும் எப்போதுமே இருக்க முடியாது என்பதை காதரின் வாழ்வின் மூலம் நமக்கு கடத்தப்படுகிறது. கருத்தான் காதர் என்ற கதாபாத்திரம் இந்த நாவலில் சூறாவளியாய் வந்து தென்றலாய் கடந்து செல்லும் …

இஸ்லாம் குறித்த வாசகனின் பார்வையை இன்னும் கூர்மையாக்குகிறார் நாவலாசிரியர், தொழுகை, வணக்கம் போன்றவற்றின் செயல்பாடுகள் கணக்குகளுக்காகவோ, சமுதாயத்திற்காகவோ அல்ல, அவை இறையை நோக்கிய நம் நீண்டகால பயணம் என்பதும், நம் புற அடையாளங்களால் இறையை நோக்குவதை விட மனதை இறைவனை நோக்கி செலுத்துவதற்குண்டான உறுதியை பெறுவதே ஆகச்சிறந்த வணக்கம் என உணர்த்தப்படுவதும், அதை பிரபு என்ற இஸ்லாமியரல்லாத ஒரு இளைஞன் நானும் தொழலாமா? என்ற கேள்வியின் மூலம் மிஷிரி கிழவனின் வழியாக நம்மை வந்தடைவதுடன், அடிப்படைவாதிகளை பதட்டமடையவும் செய்யும்.

வாலிபனாக செளதி வந்து தொழிலாளியாக தன் வாழ்வை ஆரம்பித்து திருமணம், குழந்தைகள், அவர்களின் கல்வி என காலம் கடந்து பெற்ற மகனும் கல்வியை உதாசீனப்படுத்தி, எந்த வயதில் தந்தை செளதிக்கு தொழிலாளியாக வந்தாரோ அதே வயதில் மீண்டும் செளதிக்கு தொழிலாளியாக மகன் வரும் கொடுமையும், அந்த தந்தை ஊரில் இறந்த செய்தி வந்த பின்பு தந்தையின் ஜனாசாவை காண செல்ல முடியாமல் மனம் பேதலித்து திரியும் இடமும், தந்தையை இழந்த மகனிடம் மிஷிரி கிழவன் வந்து, நாசர்… அழாதே… உனது தந்தை எனது நீண்ட நாள் நண்பன், நீ பிறந்த செய்தியை அவன் என்னிடம்தான் இனிப்பு தந்து முதலில் சொன்னான், நீ கலங்காதே உன் தந்தையின் ஞாபகம் என் நெஞ்சம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது என, தந்தையின் இறப்பிற்கு செல்ல முடியாத மகனிடம் ஆறுதல் சொல்லும் இடம் நம்மை உருக்குலைத்து விடும். இன்றும் வளைகுடாவில் தன் மகன், மருமகன்களுக்கான விசாவுக்காக பாடுபடுவர்களையும், அவர்களின் சூழலையும் கேட்பது மனதை வருத்தமடைய செய்யும். ஆயினும் வாழ்தல் வேண்டி இதையெல்லாம் அவர்கள் பொறுத்துக் கொண்டே வாழ வேண்டியிருக்கிறது.

ஒரு படைப்பு சமூக அக்கறையுடன், சமூகம் குறித்த மதிப்பீடுகளையும், பிம்பங்களையும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் முன்னேற்றத்திற்கான ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில் அஜ்னபி தன் இலக்கை துல்லியமாக தாக்கியிருக்கிறது. உனக்கென்னப்பா வெளிநாட்டு சம்பாத்தியம் என்ற ஊராரின் பார்வையை இந்த புதினம் கேலி பேசுகிறது. அஜ்னபி (அந்நியன்)யாக நடத்துவதை விட மோசமான அடிமையாக நடத்துபவர்களும், இன்னும் தங்களின் கல்வியையும், உலகளாவிய போட்டிகளுக்கேற்ப திறமையை வளர்த்து கொள்ளாத இளைய சமூகமாக இருந்து கொண்டு, கடுங்கோட்பாட்டுவாத பார்வையில் அரசியல்/சமூக/பொருளாதார முன்னேற்றத்தை எவ்வாறு நாம் பெற முடியும் என்ற கேள்விக்கு யாராவது விடையளிப்பார்கள் என காத்திருக்கிறேன்.

பிலால் அலியார்
24/12/21
மனாமா, பஹ்ரைன்

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...