1991லிருந்து 98வரையிலும் எழுதிய சிறுகதைகளின் தொகுப்புதான் "கவர்னர் பெத்தா".காலச்சுவடு வெளியீடாக இப்போதும் விற்பனையில் இருக்கிறது.முப்பது வருடங்களுக்கு மேலாகிவிட்ட கதைகளின் பெருவாழ்வின் சிலதுளிகள்.
நன்றி தோழர் காமு.
மீரான் மைதீனின்
" கவர்னர் பெத்தா" வாசிப்பனுவம் ....
***********************************
மீரான் மைதீனின் படைப்புகளின் தொடர் வாசிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே கவர்னர் பெத்தாவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது என்ன கவர்னர் என்னும் குறு குறுப்பு வளர்ந்து கொண்டே வந்தது. என்ன , ஏது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும் சேர்ந்து கொண்டது.
சரி, படித்துக் கொண்டிருக்கும் " ஓச்சை" நாவலை முடித்து விட்டு வாசிக்கலாம் என்று ஆன்லைனில் புத்தகம் ஆர்டர் செய்து அதுவும் வந்து விட்டது.
ஒரே மூச்சில் படித்து விட்டேன். பத்து சிறுகதைகள் கொண்ட குறுந்தொகுப்பு 'கவர்னர் பெத்தா' .
காலமாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போகும் மனிதர்களின் அவஸ்தைகளை அசன் கண்ணாப்பா என்ற முதியவரின் பாடுகளின் மூலமாக பதிவு செய்கிறது அசன் கண்ணாப்பா என்கிற கதை. அவருக்கு வயது எழுபது என்றாலும் இன்னும் ஊணிக்கொம்பு இல்லாமல் தான் நடமாடுகிறார்.
அந்த ஊரில் மொத்தமே முப்பது வீடுகள். அதிலும் பெரும்பாலும் குடிசை வீடுகள். சிலது ஓட்டு வீடுகள். உச்ச பட்ச விஞ்ஞான வளர்ச்சியாக மின்சாரம் மட்டுமே. வேறு சாதனங்கள் இன்னும் ஊருக்குள் வரவில்லை.
சிறுவர்களுக்குக் கதை சொல்வதுதான் அசன் கண்ணாப்பாவின் அன்றாட தினப்படி வேலை. அக்கம் பக்க சிறுவர்கள் கூடி, முதியவரின் நாடியைப் பிடித்து கொஞ்சி, கன்னத்தைப் பிடித்து , ஓய்.. அப்பா.. ஒரு கத சொல்லு என்று ஆரம்பித்து விடுவார்கள். உடனே உற்சாகமாகி கதை சொல்ல ஆரம்பித்து விடுவார். அது உண்மைச் சம்பவமோ இட்டுக் கட்டியோ எப்படியோ சொல்வார். மெய்மறந்து கேட்கும் சிறுவர்கள் நடுநடுவே சந்தேகங்கள் கேட்பார்கள். ' அப்போ பள்ளிக்கு பொறத்து ஒரு பெரிய வாவ மரம் நின்றது ' என்று ஒரு கதையில் சொன்ன போது, இப்ப அந்த மரம் எங்கே என்று ஒரு சிறுவன் கேட்கிறான். 'சொல்லத கேளுங்கலே' என்று செல்லமாக ஒரு அதட்டு அதட்டிவிட்டுக் கதையைத் தொடர்வார்.
விடிந்தெழுந்தால் இன்று குழந்தைகளுக்கு என்ன கதை சொல்லலாம் என்பதே அவரின் சிந்தனையாக இருக்கும்.
அரேபியாவில் இருந்து பேரன் காதர் ரஹ்மான் ஊருக்கு வருவதாக் கடிதம் வருகிறது. அந்த ஊரில் இருந்து அரேபியாவுக்கு முதன் முதலில் சென்றது தன்னுடைய பேரன் என்பதில் அளவு கடந்த பெருமை அவருக்கு. தாயழி, 'பிளேன்ல வானத்துல பறந்துல்லா அரேபியாவுக்கு போயிட்டான்' என்று தனக்குத் தானே சிலாகித்துக் கொள்வார்.
வந்த பேரன் பலருக்கும் விதவிதமான பொருட்கள் தருகிறான். பெரியவருக்கு ஒரு டீ ஷர்ட் . வீட்டுக்கென்று ஒரு டி.வி. பெட்டி.
டி.வி. பார்க்க ஊரே கூடி விடும். எம்.ஜி.ஆரும் நாயகியும் ஆடுவதை ரசித்துப் பார்க்கும் பொம்பளையளுக்கு பயங்கர சிரிப்பு. மறியம் பெத்தா, ' அட, நீக்கம்பத்து போவா, இப்படிக் கெடந்து ஆடுதா.. வெக்கம் கிடையாதா.. ' என்று சொல்லும் போது எல்லோரும் சிரிப்பார்கள்.
வழக்கம் போல் அன்றும் அசன் கண்ணாப்பா திண்ணையில் வந்து அமர்கிறார். சிறுவர்கள் கதை கேட்க உற்சாகமாக கூடுகிறார்கள். திடீரென்று ஒரு சிறுவன், ' டேய், டி.வி.ல படம் போட்டாச்சு' என்று சொன்னவுடன் எல்லோரும் டி.வி. பார்க்க ஓடி விடுறார்கள்.
வெறுமையாகப் போகிறது முதியவருக்கு. இப்போதெல்லாம் கதை கேட்க ஆளில்லை. பள்ளித் திண்ணையில் இருந்து கொண்டு கண்ணில் தென்படும் ஆட்டுக் குட்டியைப் பார்த்துக் கொண்டே காலத்தைக் கழிப்பதாகக் கதை முடிகிறது.
வாழ்நாள் முழுவதும் ஒரு குறிப்பிட்ட தினப்படி நடவடிக்கைகளில் பழக்கப்பட்டு விட்ட மனிதர்கள், குறிப்பாக முதியவர்கள் காலப் போக்கில் ஏற்படும் மாற்றங்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத போக்கை நுட்பமாக பதிவு செய்யும் அதே நேரத்தில் ஒரு காலகட்டத்தையும் தன் எழுத்தின் மூலமாக இலக்கியமாக உறையச் செய்து விட்டார் மீரான் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்து, கவர்னர் பெத்தா. பெத்தா என்றால் பாட்டி. அம்மாவைப் பெற்ற அம்மா.
கவர்னர் பெத்தா ஓர் அடையாளப் பெயர்தான். அந்த அடையாளம் எப்படி வந்தது என்பது தான் சுவாரஸ்யம்.
பெத்தாவின் இயற்பெயர் பீர்மா. அதாவது பீர்மா பெத்தா.
அவர்கள் ஊரில் உள்ள தர்காவிற்கு அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி விஜயம் செய்ய இருக்கிறார் என்ற செய்தியோடு கதை ஆரம்பிக்கிறது.
உடனே ஊர் அல்லோல கல்லோலகப் படுகிறது. எங்கு பார்த்தாலும் இதைப் பற்றியே பேச்சு. குளிக்கப் போகும் போது யாரோ ஒருவர் இன்னும் எட்டு நாள் என்று சொல்ல , கேட்டவர் எதுக்கு என்று கேட்க, கவர்னர் வாறதுக்கு என்று பதில் சொல்வது வாடிக்கை ஆகிவிட்டது. அந்த சிற்றூர் தர்காவிற்கு கவர்னரே விஜயம் செய்கிறார் என்பதை ஒவ்வொருவரும் தனிப்பட்ட கெளரவமாகவே கொண்டாட ஆரம்பித்து விடுகின்றனர். அந்தப் பரபரப்பு பீர்மா பெத்தாவையும் தொற்றிக் கொள்கிறது. அதில் கலந்து கொள்வதற்கான விஷேச ஏற்பாட்டில் கவனம் செலுத்துகிறாள்.
பீர்மாவுக்கு ' ஒரு பட்டுக் கசவுக் கவுணியும் ஒரு குப்பாயமும் எடுத்தால் கொள்ளாம்' போல் தோன்றவே, மருமகள் அடுப்படியில் இருந்த சமயம் பார்த்து மகனிடம் கோரிக்கை வைக்கிறாள். ' இப்பதான பெருநாளுக்கு எடுத்தோம் ' என்று மகன் பேசிக் கொண்டிருக்கும் போதே மருமகள் வந்து அவளும் தன் பங்குக்கு ' ஆமா, கவர்னர் வந்து நேர உங்கள் கையைப் பிடிச்சித்தான் குலுக்கப் போராளாக்கும் ' என்று குத்தலாகப் பேச , பெத்தா இடிந்து போகிறாள்.
ஆனால், அப்படித்தான் நடந்தது.
கவர்னர் வரும் நாளில், விடிந்தும் விடியாமல் எழுந்து , குளித்து , அப்படியே போய் மறியம் பெத்தா, பாக்கு பெத்தாவை அழைத்துக் கொண்டு தர்காவாசலில் , கேந்திரமான பகுதியில், கவர்னரை பார்க்க தோதான இடத்தில் இடம்பிடித்து விட்டனர். அதிலும் பீர்மா பெத்தாவுக்கு மூங்கில் தடுப்பை ஒட்டியபடி நிற்க இடம் கிடைத்து விட்டது.
சரியாக ஒன்பது மணியளவில் கவர்னர் பாத்திமா பீவி கம்பீரமாக காரில் இருந்து இறங்கி, ' முட்டாக்கும் போட்டுக் கொண்டு நடந்து நாலா பக்கமும் கம்பீரமாய் கூட்டத்தைப் பார்த்து கைஅசைத்துப் புன்னகையுடன் அங்கும் இங்குமாக திரும்பி ' பீர்மா பெத்தா நின்றிருக்கும் பகுதிக்கு வந்து விட்டார்.
சட்டென்று எந்தத் திட்டமிடலும் இல்லாமல் , யாரும் எதிர்பார்க்காமல் பீர்மா பெத்தா கவர்னரை நோக்கி கையை நீட்டிவிட்டார். கவர்னரும் வெகு இயல்பாக பீர்மாவின் கரத்தைப் பற்றிக் குலுக்கினார்.
கூட்டத்தில் இருந்து சத்தம் வந்தது.
" பிள்ளா, கவர்னர் பெத்தா.. "
அன்று முதல் பீர்மா பெத்தா கவர்னர் பெத்தா ஆனாள்.
திரும்பி வரும் போது மறியம் பீர்மாவிடம் பெத்தா சொன்னாள்.
" நாசமா போனதுவோ... நம்மள படிக்க வைக்காம உட்டுட்டுதுவோ.. நம்மள மாதித்தானே இருக்கா... எங்கம்மாகாரி நெலையளிஞ்சி நின்னுட்டா ... பள்ளிக்கோடத்துக்குப் போட்டாளான்ன கேட்டதுக்கு ... பொட்ட புள்ள படிச்சி பெரிய கவர்னராட்ட ஆவப்போறா... ன்னா.. "
பொட்ட புள்ள படிச்சி என்ன ஆகப் போகுது என்று இன்றளவும் நிலவும் சமூகத்தின் பொதுப் புத்தியை மென்மையாக அதே சமயம் வலிமையாக விமர்சிக்கும் அற்புதமான சிறுகதை.
இந்தக் கதை ஆங்கிலம், உருது, அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் தமிழ்ச் சிறுகதை என்ற பெருமையும் உண்டு.
மனித மனங்களின் உணர்வுகளின் மெல்லிய அசைவுகளை காத்திரமான கதா பாத்திரங்கள் மூலமாகவும், கதைப் போக்கின் ஊடாகவும் தன்னுடைய படைப்புக்களின் வழியாக தரிசிக்கச் செய்யும் மீரான் மைதீனின் எழுத்தைக் கொண்டாடுவோம்.
அன்புடன்,
காமு
07/11/2023
No comments:
Post a Comment