Saturday 11 November 2023

காலத்தை வரையும் எழுத்து

காலத்தை வரையும் எழுத்து-





நாம் எல்லா வகைகளிலும் காட்சிகளின் வழியே உலகைப் பார்க்கிறோம். அந்தப் பார்வையின் வழியே நிகழும் நமது அவதானமே நம்மைக் கட்டமைக்கிறது. அவதானம் எல்லாக் கண்களுக்கும் ஒன்றுபோல நிகழ்வதல்ல, அது நமது தனித்த மனங்களின் வழியே முன்னமே நாம் அடைந்த சிந்தனைகளின் கூட்டியக்கத்திலிருந்து இயங்குகிறது. நமக்கு நெருக்கத்தில் நிகழும் மகிழ்வானவைகளையும் துயரங்களையும் நாம் உணர்வுநிலையில்  பார்ப்பதுபோல பிற மனிதர்களின் மகிழ்வுகளையும் துயரங்களையும் பார்ப்பதில்லை. மனித மனம் பொதுவாக காலகாலமாக வடிவமைக்கப்பட்ட விதம் இப்படியானதுதான். ஆனால் மனிதர்கள் அபூர்வமாகத்தான் உணர்வுநிலையில்  சமபார்வையுடைய சமூக பங்கேற்பாளர்களாக இருக்கின்றனர். எனவே இன்றைய காலத்தில் சமபார்வையுடை மனிதர்கள் நம்மை கவருகிறார்கள். அதன்பொருட்டு நமக்குப் படிப்பினையாக இருக்கிறார்கள். நாம் அவர்களைப்பற்றிப் பேசவோ எழுதவோ கொண்டாடவோ  விரும்புகிறோம். இப்படியான விருப்பங்களும் கூட எல்லோருக்குள்ளும் நிகழாது. யாரோ எவரோ என அந்நியமான இந்த வாழ்வு நிலையில், அப்படி நிகழுமானால் அதுவும் ஒரு ஞானநிலைதான். இந்த ஞானநிலை வாய்க்கப்பெற்றவர்களில் ஒருவராக, இந்த வாசிப்பில்  கண்டடைந்தவைகளிலிருந்து எழுத்தாளர் ஹேமா அவர்களை மிக நேர்மையாகக் குறிப்பிடுகிறேன். 

  எழுத்தாளர் ஹேமா அவர்களின் "கதையல்ல வாழ்வு" கட்டுரைகளை வாசித்த இந்த அனுபவம் எனக்குள் சில புதிய பார்வைகளைச் சேர்ப்பிக்கிறது என்பதை  வாசிக்க வாசிக்க எனக்கு ஆத்மார்த்தமாக உணர முடிந்தது. இந்த எழுத்தின்  பரப்பென்பது மிகப் பெரியதாக, நிலம், மொழி, பிரதேசமென, எல்லைக் கடந்த சாத்தியப்பாடுகளில்  வியாபிக்கிறது. செல்லும் இடமெல்லாம் மனிதத்தை, மனிதர்களைக் கற்கிற  கரிசனமும் அக்கறையும் கொண்ட இந்த எழுத்தின் குரல் நம்மைக் கூட்டாக்கிக் கொள்வதில் முனைப்புக் கொண்டிருக்கிறது. இந்தக் குரல் அவசியமானதும் கூட, யார் நமக்கு கரிசனத்தோடும் அக்கறையோடும் நம் பார்வை புலனுக்கு, சாதாரண நாயக நாயகிகளின் வாழ்வை, வரலாறை, செய்திகளைக் கொண்டு வருகிறார்களோ அவர்களே அதன் மூலம் நம்மை விசாலப்படுத்துவார்கள். பெருங்கதையாடலும் அதிகாரமும் முயங்கும் வெளியிலிருந்து சாதரணர்களை நோக்கிப் பாயும் பேரன்பின் குரல். குரலற்றவர்களின் குரலாக இதன் பன்னிரண்டு  கட்டுரைகளை இதனடிப்படையில் மிக முக்கியமானதாக கருதலாம். 

        இந்த கட்டுரைகள்  துவங்கியிருக்கும் புள்ளி மேலும் தொடர்ந்து செல்லும் என்றே தோன்றுகிறது. நம் பார்வைப் புலனுக்குத் தெரியாத ஏராளமான மானுடர்களைக் கொண்டியங்கும் உலகினைத் தொடர்ந்து அவதானிக்கும் அன்புமயம் எழுத்துக்கள், இன்னும் காலதேச வர்த்தமானங்களைத்  தாண்டி  இடைவிடாது வளரும் என்றே நம்புகிறேன். ஹேமா அவர்களின் "பாதைகள் உனது பயணங்கள் உனது" என்கிற நூலை வாசித்துப் பெற்ற முந்தைய அனுபவமும் எனக்கு நல்ல நிறைவானது. அதன் நிமித்தமாக அவர் எழுத்தின் உள்ளார்ந்த நோக்கமாக வெளிப்படும் அவரின் சமூகப்பார்வை நம்பிக்கைகளை விதைப்பதை உள்வாங்கியிருக்கிறேன். அந்த புரிதலில் இருந்து வாசகர்களுக்கு நான் குறிப்பிட விரும்புவது, இன்றைய காலம் என்பது இவ்வாறான ஓராயிரம் நம்பிக்கைகளைத் திரும்பத் திரும்ப விதைக்கப்பட வேண்டிய அவசியமுள்ள காலமாகும். 

    இந்த அகன்ற உலகில் நம் கண்களுக்கு முன்னாலேயே மறைந்து கிடக்கும் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்தி அதனைக் கல்வியாக்கி விடுகிற அதீத அக்கரையின் பொருட்டு கவிதை கதை ஆய்வு என பலவகைமைகளில் படைப்புகளை உருவாக்குகிறோம். அப்படி உருவான படைப்புகளை இங்கு ஆழமாகவோ அல்லது மேம்போக்காகவோ  வாசிக்கப்படுகிறது. நோக்கப்படியே அது வாசகர்களைச் சென்றடையுமா என்பதனை உறுதிபட சொல்லவியலாத நிலையில் இதுபோன்ற எழுத்துக்கள் நோக்கத்தை சரியாக செய்துவிடும் என்பதில் தெளிவு இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான முகம் இருக்கிறது. பல தனித்துவங்களை அதனதன் அடிப்படையில் அப்படியே ஏற்றுக் கொள்வதே ஒரு பன்மைத்துவ சமூக அமைப்பின் நாகரீக முகமாகும்.  கட்டுரைகளில் உரைநடை வடிவத்தில் கதைபேசுவது போலவும், சம்பவ அடுக்குகளாகவும், செய்தியாகவும், நேரடி உரையாடலாகவும், இன்னும் சிலவற்றை ஒரு புனைவுபோலவும் பலவிதமான முறைமைகளில் இங்கு ஹேமா அவர்கள்  எழுத்துப் பாணியை கையாள்கிறார். இதனை கட்டுரை எழுத்தின் இன்னுமொரு வடிவமாகப் பார்க்கலாம். மானிட சமூகத்துக்கு முன்னே சமுத்திரம் போல குவியும் எழுத்துகளிலிருந்துள்ள வரலாறும் வாழ்வும் பிரதானவெளிகளில் வென்றவர்களுக்கும் அரண்மனை வாசிகளுக்கும் அதிகாரவர்க்கத்திற்கும்  மட்டுமல்ல, சாதாரண மனிதர்களுக்கானது. இதன் காரணமாக கீழிருந்து மேல்நோக்கிய வரலாறுகளில்தான் எளிய மனிதர்கள் தங்கள் இருப்பை எப்படி வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை  வெளிப்படுகிறது. வென்றும் முகம் தெரியாமல் பிரகாசமான அகம் கொண்ட அற்புதமனிதர்கள் இவ்வெழுத்தில் அணிவகுக்கிறார்கள். அவர்களோடு நிகழும் உரையாடலும் செய்தியும் அல்லது அவர்களின் கதைகளும் வாசக மனதில் ஒரு உத்வேகத்தை உருவாக்க முனைகின்றன. அந்த முனைப்பில் வெற்றியும் பெறுகிறது. குறைந்தபட்சம் நம்மில் ஒரு அசைவை ஏற்படுத்தாமல் அவை வெறுமையாக நகர்ந்து போகவேயில்லை. 
      ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுபவரைப்பற்றி நமக்கு என்ன தெரியும்? அவர் தனது வாகனத்தை நகரங்களின் நெரிசலான சாலையில் சைரன் சப்தத்தை ஒலிக்கவிட்டபடியே விரைந்து ஓட்டுகிறவர் மட்டுந்தானா அல்லது அவர் கூலிக்காக வேலை பார்க்கிற ஒருவர் மட்டுந்தானா..? அவர் தன்னை முன்காட்டிக் கொள்ளாமல் சப்தங்களால் கடந்துபோகும் அந்த வாகனஓட்டி சப்தமின்றி உயிர்காக்கும் தடத்தில் முதல் வரிசைக்காரனாக இருக்கிறான் என்பதனை நாம் என்னென்ன தருணங்களில் உணர்ந்திருப்போம். இந்த முகந்தெரியாத முதல்வரிசைக்காரர்களைப் பற்றிய இந்த எழுத்து நமக்கு புதிய கற்பிதங்களைத் தருகிறது. ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டிச் செல்லும் வீரலட்சுமி நமக்கு அறிமுகமாகிறார். இந்த உலகில் உயிரைவிட மதிப்புமிக்கது என்று எதாவது இருக்கிறதா..? என்றால், ஆமாம் இருக்கிறது என்று நாம் யாரும்  வேறொன்றைச் சொல்லத் துணிவதில்லை. உயிர் மதிப்பு மிக்கது என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை என்றாலும் நாம் சகமனிதர்களை இதன் மதிப்பீடுகளோடு கவனிக்கிறோமா என்ற கேள்வியை  முன்வைக்கலாம். ஒரு கட்டுமானத் தொழிலாளிபற்றி, ஒரு சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளிபற்றி, இன்னும் நாம் அன்றாடம் கடக்கும் இதுபோன்ற எண்ணற்ற சகாக்களைப்பற்றி உண்மையில் நமக்கொன்றுமே தெரியாது என்கிற உண்மை புலப்படுகிறது. நம் வாழ்வின் எல்லா அடுக்குகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அரிய மனிதர்களின் மனுசிகளின் வாழ்வும் வரலாறும் அதன் மதிப்பீட்டு முக்கியத்துவத்தையும் இந்த எழுத்து புலப்படுத்துவதாக அமைந்திருப்பதை வாசிப்பிலிருந்து உணருகிறேன்.
  நகரங்களில் மட்டுமல்லாது சாதாரணப்பகுதிகள் வரையிலும் உயர்ந்து நின்று நம்மை வியப்பிலாழ்த்துகிற கட்டடங்கள் அதற்கு பின்னே முகம் தெரியாத ஆண்பெண் உழைப்பாளிகள், திக்கற்ற இடங்களில் சிக்குண்ட மனிதர்களின் பிரச்சனைகளில் பலாபலனின்றி செயல்படும் மீட்பர்களைப் போன்ற களப்பணியாளர்கள், நாம் அருவருப்பாகக் கடந்துபோகும் கழிப்பிடங்களை சுத்தப்படுத்தும் மாமனிதர்கள், வீட்டு வேலையாட்கள், சாலையோர வியாபாரிகளென ஹேமாவின் எழுத்தில்  உலாவும் மனிதர்கள் நம் மனங்களில் நிரம்புகிறார்கள். அவர்கள் நம்மிடத்தில் யாதொரு கேள்வியும் கேட்கவில்லை அல்லது எந்த முறைப்பாடுகளையும் சொல்லவுமில்லை ஆனாலும் சிலவற்றில் மனம் கனக்கிறது. சிலரின் அதீத செயல்களால் நம் மனம் நிறைகிறது. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் நமக்கு அடையாளப்படுத்தும் இந்த  எழுத்துக்கு எல்லையற்ற கருணை இருக்கிறது. உறவுகளே கடந்துபோய்விடுகிற இந்த துயரம் மிகுந்த உலகில் யார் எவரென அறியாமலேயே  இறந்த உயிர்களிடத்தில் பெருங்கருணை கொள்ளும் மனிதர்கள் தங்கள் உயர்ந்த செயல்களின் வாயிலாக உயர்ந்து நிற்கின்ற அபூர்வங்களைத் தேடிக்கண்டடைந்து ஹேமா நம்மிடம் சேர்க்கிறார். இந்த அபூர்வ மாமனிதர்களை, அவர்களின் கதையை, வாழ்வை, அவர்களின் உன்னதமனங்களை, அவர்களின் பல்வேறு செய்திகளை நம்மிடம் எழுத்துக்களாக்கி சேர்ப்பதில் அவருக்கு உயர்ந்த சமூக நோக்கமிருக்கிறது. அது எல்லையற்ற அன்பின் வடிவம். சீர்திருத்தத்தை விரும்பும் உவகைக் கொண்ட மனதின் பிரார்த்தனை. மானிடத்தின்பால் அன்பும் கருணையும் கொண்ட பிரார்த்தனையாக இது மலருவதால்தான் இவ்வெழுத்து உருவாக்கும் காட்சிகளோடும் அந்தக் காட்சியில் உலவும் மனிதர்களோடும் நம்மை உறவாடச் செய்வதிலும் இந்தக் கட்டுரைகள் முனைப்பு கொள்கின்றன. செலினா சேச்சியைப்பற்றிய வரைதல் மலைப்பாக இருக்கிறது. நமக்கு இவ்வுலகில் அறிமுகமாகின்ற சுடுகாட்டில் பிணம் எரிக்கும் பணியைச் செய்யும் முதல் பெண். சமரசம் உலாவும் இடம் என்று உண்மையில் சுடுகாட்டைச் சொல்ல இயலுமா என்ற கேள்விகள் முன்வருகின்றன. கவிஞர் மருதகாசியை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய காலத்தைச் சொல்கிறது. செலினா சேச்சிக்கு இறந்த உடல்களின் மீது ஒரு பயமும் இல்லை. மாறாக உயிருடன் இருப்பவர்களிடத்தில்தான் பயமிருக்கிறது. இன்னொரு அற்புத மனுசியாக நமக்கு அறிமுகமாகும் வீரலட்சுமிக்கு உயிருக்குப் போராடும் மனிதர்களிடத்தில் ஆண் என்றும் பெண் என்றும் பேதமில்லை. அவர் சேவையின் பொருட்டு பால் வேறுபாடுகளைக் கடந்த ஞானநிலையை கண்டடைகிறார். இன்னொரு முனையில் கெட்டு அழுகிப்போன ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்யும் ஹாலீத் குழுவினர் மற்றுமொரு மலைப்பு. ஒரு நேர்கோட்டில்தான் எத்தனை எத்தனைப் பார்வைகள் எவ்வளவு எவ்வளவு பயணங்கள் நடந்தேறுகின்றன. இந்த வாழ்வும் நிலையும் மனிதர்களை அப்படியே பக்கத்துக்குப் பக்கம் புரட்டிப் போடுகிறது. ஆனாலும் யாரும் எதுவும் எந்த நிலையிலும்  ஸ்தம்பித்துப் போய்விடவில்லை. பாரமும் வலியும் கடந்து நூலாசிரியர் ஹேமா ஒரு பறவை பறப்பதைப்போல இதனை வாசகப்பரப்பில் வரைந்து செல்கிறார். இன்னும் வரைவார். செலினா சேச்சியின் வாழ்வை மைய்யமாகக் கொண்ட ஜூவாலமுகி திரைப்படத்தை தேட வேண்டும். 
    இது ஒரு உன்னத இலக்கியமாக எழுத்துமுறையில் எல்லாக் காத்திரங்களையும் வலுவாகக் கொண்டிருக்கிறது. நேர்த்தி பெற்று  இந்த எழுத்துக்கள் நல்ல நோக்கத்தைக் கொண்டிருக்கின்றன. உயரமான ஓரிடத்தில் நம்மை அமர வைத்து விசாலமானப் பார்வையை ஏற்படுத்துகிறது. ஒரு தந்தை தன் குழந்தையை தலைக்கு மேலாகத் தூக்கிப் தூரத்தில் ஒன்றைப் பார்க்க வைப்பது போல பார்வைகளினூடாகவே  நாம் எல்லா அவதானங்களையும்  பெறுகிறோம். நமக்கு இதுபோல எண்ணிலடங்காத அவதானங்கள் தேவைப்படும் காலமாக இது இருக்கிறது. இந்த நேசகரமான புரிதலோடு ஹேமா அவர்கள்  காலத்தை தம் எழுத்துகளில் இட்டு நிரப்புகிறார். இந்த நிரப்புதல் கதையல்லாத வாழ்வாக இருக்கிறது. இந்த நூலை வாசித்து சுற்றிலுமான  மனங்களைப் பாருங்கள், பிறறோடு பேசுங்கள், யாராவது பேசினால் உங்கள் காதுகளை சற்றேனும் அப்பக்கமாகத்  திருப்புங்கள். கேலக்ஸி வெளியீடாக வெளிவரும் இந்த கட்டுரை நூலுக்காக எழுத்தாளர் ஹேமாவுக்கு நெஞ்சம் நிறைந்த அன்பும் வாழ்த்தும்.
  

அன்புடன்
எம். மீரான் மைதீன்
பெங்களூரிலிருந்து
20/10/2023

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...