Friday 9 June 2023

"மதில்களுக்கு அப்பால்" எம்.மீரான்மைதீன்

எனக்கு கடிதங்கள் வந்து நீண்டகாலமாகிவிட்டது முன்புபோல யாரும் இப்போது கடிதம் எழுதுவதில்லை.முன்பு வந்த பலகடிதங்கள் எனது சேகரத்தில் உள்ளன.பெரும் எழுத்தாளர்கள் வாசகர்கள் என பல பெருமக்களின் கடிதங்கள் அதில் அடங்கும்.கல்லூரி காலங்களில் காதல் கடிதங்கள் பெற்றதும் எழுதியதுமென விரிவான அனுபவம் இருக்கிறது. சமீபகாலமாக கடிதம் என்றால் ஆயுள் காப்பீடு பிரிமியம் கட்டச் சொல்லி நினைவூட்டும் கடிதம் மேலும் அடகிலுள்ள நகைகளை மீட்க்கச் சொல்லி வரும் கடிதமென சிரத்தையற்ற கடிதங்கள்தான்.ஆனால் நேற்று கிடைக்கப்பெற்ற 8/06/2023 கடிதம் மலைப்பான இன்பகரமான கடிதமாகும்.

சென்னை புழல் நடுவண்சிறையிலிருந்து ஒரு தண்டனைச் சிறையாளி "திருவாழி" நாவல் குறித்து சுமார் பனிரெண்டு பக்கங்களுக்கு முத்துமுத்தான கையெழுத்தில் எழுதி அனுப்பிய கடிதம் எனது சமீபத்திய பொக்கிசமாக மாறியிருக்கிறது. கடைசியாக, இரண்டாண்டுக்கு முன்பாக  எனக்கு ஒச்சை நாவலுக்கு ஒரு பிரபலமான பதிப்பக அதிபர் எழுதியிருந்த இரண்டுபக்க கடிதமே முக்கியமானதாக இருந்தது.ஆனால் நேற்றைய சி.செல்வத்தின் கடிதம் முற்றிலும் புதிய ஒரு இனிய அனுபவமாக மாறுகிறது.

கர்நாடக மாநிலம் சிமோகாவில் 2021ல் அரசால் கைவிடப்பட்ட ஒரு சிறைச்சாலையில் பத்து நாட்கள் "பகைவனுக்கு அருள்வாய்"படத்தில் சிறையில் சேவை செய்யும் அருட்தந்தை பாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குநர் அனிஷ் அவர்கள் வழங்கிய வாய்ப்பில் அங்கு கலந்திருந்த  அனுபவம் மிக முக்கியமானது.அந்த அனுபவ படிப்பிலிருந்து சிறையின் அமைப்பும் கைதிகளின் வாழ்க்கை முறையும் அவ்வளவு வலிமிகுந்ததாக உணரமுடிந்தது.சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றவாளிகளானவர்களே அதிகமான மனிதர்கள்.வலிக்க வலிக்க அவர்களின் கதைகள் கேட்டு வந்தபிறகு நிறைய பார்வைகள் மாறுகின்றன.இந்த உலகில் நாம் ஒன்றை அறிந்த பிறகே அதன்மீதான மாறுபட்ட எண்ணங்கள் நம்மிடமிருந்து மறைகிறது.யாவற்றையும் நெருங்கிப் பார்த்தல் ஒரு நல்ல கல்வியும் கூட. இங்கு ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன ஆனால் எல்லா அனுபவங்களையும் நாம் அனுபவப்பூர்வமாக உணர இயலாது. ஒரு விடயம் நமக்குள்ளே அனுபவமாக உயிர்ப்பாவதற்கு நாம் அடிப்படையில் ஒரு படைப்பு மனம் கொண்டிருக்க வேண்டும்.

நாடெங்கும் புத்தகத் திருவிழா நடப்பதுபோல சிறையிலும் ஒரு புத்தகத் திருவிழாவை நடத்தியிருக்கிறார்கள்.அந்த புத்தகத் திருவிழாவில்தான் அருமைக்குரிய சி.செல்வம் அவர்கள் சென்னை புழல் நடுவண்சிறையில் "திருவாழி "நாவலை வாங்கியிருக்கிறார்.அவர் வாசித்து பிறகு அங்கு அனேகர்கள் வாசித்து கூடிப் பேசி மகிழ்ந்த ஒவ்வொரு பகுதிகளையும் குறிப்பிட்டு எழுதியருக்கும் இக்கடிதம் மற்றைய கடிதங்களைவிட எனக்கு முக்கியமானதாக இருக்கிறது.
சி.செல்வத்தின் கடிதம் இப்படி துவங்குகிறது.
"திரு.மீரான் மைதீன் அவர்களுக்கு வணக்கத்துடன் சென்னை புழல் நடுவணசிறையிலிருந்து ஆயுள் தண்டனை சிறையாளி சி.செல்வம் எழுதும் மடல்.தாங்களின் முதல் நூலான கவர்னர் பெத்தாவிலிருந்து திருவாழி வரை தாங்கள் எழுத்தை தொடர்ந்து வாசித்துவரும் வாசகன் நான்.வாசிப்பு விரிவடையும் போது கற்பனைகளும் விரிவடையும். சகமனிதர்களை நேசிக்கும் போது சமூகத்தை நேசிக்கிறோம்.சிரிப்பை மகிழ்வை தொலைத்துவிட்டு தேடும் இன்றைய சமூகத்துக்கு இதுபோன்ற நூல்கள் தேவையாகிறது.மனித மனதை பேனாவில் நிரப்பி திருவாழி நிறைந்து வழிகிறது.மனித மனதை இவ்வளவு உள்நுழைந்து எழுத்து வழியாக கொண்டுவர முடியுமா என்று பிரம்மித்துப் போனேன்" எனத் துவங்கி நாவலின் அவரின் மனம் கவர்ந்த பல அம்சங்களை பத்து பக்கங்களுக்கு மேலாக எழுதியிருக்கிறார்.அவர் நாவலிலிருந்து ஒரு வரியைக் குறிப்பிடுகிறார்."ஒரு மனதின் சிதைவும் அதன் விவரிக்க முடியாத வலியும் ஏதேனும் ஒரு புள்ளியில் சகமனிதனிடம் போய்விடத்தான் செய்கிறது." உண்மையில் அது போய்விடுகிறது என்பதை நானும் மீண்டும் ஒருமுறை இப்போது உணர்கிறேன்.

மிகப்பெரிய மதில்களுக்கு உள்ளே இருக்கும் மனிதர்களின் மீது நமக்கு உருவாக்கி வளர்க்கப்படும் ஒரு பார்வை இருக்கிறது.அந்த பார்வையின் வழியே நாம் நம் நகரங்களின் மத்தியில் அமைந்திருக்கிற சிறைச்சாலைகளைக் கடந்து போகிறோம்.அங்கு என்ன நடைபெறுகிறது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எதுவும் நம் பார்வை புலனுக்கு வருவதில்லை. அங்கிருந்து மனிதர்கள் வெளியேறுகிறார்கள் பிறகு மேலும் மனிதர்கள் செல்கிறார்கள்.இந்த சமூக அமைப்பில் குற்றங்கள் நிகழ்ந்தேறுகின்றன.தண்டனைகள் நிகழ்ந்தேறுகின்றன.அப்படியானால் இந்த சுற்று எப்போது நிற்கும் என்கிற கேள்வி நம்முள் உருவாகவேயில்லை. அங்கிருப்பவர்கள் கலையை விரும்புகிறார்கள், மனதைக் கொண்டாடுகிறார்கள்,சமூக நேசம் பற்றிய அக்கரையை வெளிப்படுத்துகிறார்கள்.பிறகு எங்கே மானிட சமூக அமைப்பில் குற்றங்கள் நிகழ்கின்றன.அந்த பெரிய மதில்களுக்கப்பால் உலகம் முழுவதும் சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும் மனித மனுசிகளுக்காக நான் பிரார்த்திக்கலாம் நீங்கள் பிரார்த்திக்கலாம் நாம்கூடி பிரார்த்திக்கலாம், ஆனால் பிரார்த்தனைகளைவிட இப்படியான சிறை இல்லாத உலகம் மலர நாம் என்ன செய்வது என்பதனை சிந்திப்பதுதான் ஆரம்பபுள்ளியாக இருக்குமென்று நம்புகிறேன். செப்பனிடப்படாத சமூக அமைப்பும் பாரபட்சமான ஆண்டான் அடிமை முறைகளும் துவேசமும் கொண்ட சமூக அமைப்பில் பெரும்பாலும் சிறைவாசிகள் எழியவர்களாக இருக்கின்றனர் என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். செல்வம் மதில்களுக்கு அப்பாலிருந்து எனது நாவலைப்பற்றி எழுதி கடிதமாக எனக்கு அனுப்புகிறார்.இந்த கடிதத்தை வாசித்துவிட்டு நான் அவரைப் பற்றி சிந்திக்கிறேன்.நமது கல்விமுறை,சமூக அமைப்பு,மனிதமாண்புகளென நாம் எவ்வளவு மாற்றங்களையும் தூரங்களையும் இனியும் கடக்க வேண்டியிருக்கிறது.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...