Wednesday 20 December 2023

"சிகரி மார்க்கம்"நூல் அறிமுகம் மீரான் மைதீன்

அருமை நண்பர் கே.முகம்மது ரியாஸின் "சிகரி மார்க்கம்"சிறுகதை நூல் அவரின் இரண்டாவது தொகுப்பாக வந்திருக்கிறது. முந்தையது "அத்தர்"சிறுகதை தொகுப்பு.

             நான் இப்போது இந்த தொகுப்பில் எந்த சிறுகதையை முதலில் வாசித்திருப்பேன், சந்தேகமில்லாமல் மீரான் (எ) மரியா'வைத்தான்.அதை மேலும் ஒருமுறை வாசிக்கவும் செய்தேன். எனது "ஒரு காதல் கதை"யில் கூட மனிதர்களுக்கு அதீத நெருக்கமானது அவர்களின் பெயர்தான் என்று எழுதியிருக்கிறேன்.பெயர்போல நெருக்கமான இன்னொன்று இல்லை என்பது மெய்யானது. நான் முதலில் அந்தக் கதையை வாசிப்பதற்கு அந்த பெயர் ஒரு காரணமாக இருந்தது.
    ரியாஸின் கதை உலகம் மற்ற எழுத்தாளர்களின் எழுத்து வரிசையிலுள்ள மெல்லிய மாற்றங்களின் ஒரு அடுத்த அடுக்காக இல்லாமல் முற்றிலும் புதிதான ஒரு புத்தம்புது அடுக்கு.நல்ல அபூர்வமான அடுக்கும்கூட. கொண்டாடப்பட வேண்டியவர்களை கொண்டாடத் தெரியாமல்  நாம் கடந்து போவது ஒரு தடத்தை  அழிப்பது போலத்தான். இஸ்லாமியப் பெயரோடு ஒருவர்,இன்றைய சூழலில் வாழ்வின் நெடிய பரப்புக்களைக்  கலாபூர்வமான எழுத்தாக்குவது எளிதான காரியமல்ல. இந்த காரியத்தின் மீது எப்புறத்திலிருந்தும் ஆதரவு சொற்கள் சுலபத்தில் வந்துவிடாது.கதைகள் ஆகுமா ஆகாதா என்று அப்போதுதான் பேசத் துவங்குவார்கள்.இஸ்லாமியர் என்பதற்காக பொதுவெளியின் புறக்கணிப்பு ஒருபக்கமும்,இஸ்லாமிய பின்புலத்திலிருந்து பாராமுகமான பார்வை மறுபக்கமென மிகப்பெரும் இடங்கேறுகளுக்கிடையே ஒரு பிரதிபலனுமின்றி எழுதப்படும்  எழுத்தென்பதையே ஒரு சாதனையாகச் சொல்லலாம்.இங்கே கே.முகம்மது ரியாஸ் தனது அத்தர் சிறுகதை தொகுப்பின் வாயிலாக அடர்த்தியான கவனம் பெற்றவர்.கதை,கவிதை, கட்டுரையென தனது தனித்துவமான எழுத்துக்களால் தன்னை நன்றாக ஸ்தாபிதம் செய்திருக்கிறார்.சிரான இடைவெளியில் இப்போது சிகரி மார்க்கம் வந்தடைந்திருக்கிறது. 
தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன.தமிழில் இதற்கு முன்னால் எழுதப்படாத பாங்கில் எழுதப்பட்டுள்ள ஒன்பது கதைகளும் காட்சிகளும் இதன் வாழ்வும் அறுபுதமானவை என்று நான் சொன்னால் என்ன அர்த்தம் கற்பிப்பார்களோ எனக்குத் தெரியாது ஆனாலும் அதுதான் உண்மை என்பதை என்னால் என் வாசிப்பின் வழி சொல்லாமல் இருக்க இயலாது. அப்பழுக்கற்ற சிந்தனையோடு தேடுகிறவனுக்கு இந்த கதைகளின் உலகம் பெரும் ஆவலுக்குரியது.
     இஸ்லாம் என்றதும் ஒரு பண்பாடு என்றுதான் உலகில் பலரும் புரிந்து வைத்திருக்கின்றனர்.வழிபாட்டு முறைக்கடந்து வாழ்வியல் கூறுகளாக அது,பன்முகப் பண்படுகளைக் கொண்டது.உணவு உடை சடங்குகள் என தனித்தனியாக அதற்கு ஆயிரம் ஒட்டுதல் உரசல்கள் இருக்கிறது. நன்றாக உண்பவர்கள் உடுப்பவர்கள் என்கிற பொதுப்புத்தியில் உறைந்த அபிப்ராயங்களிலிருந்து அவர்களின் வாழ்வை அவர்களின் தனித்துவமான சொற்களை,அவர்களின் வழிபாட்டு முறைமையின் வாயிலாகக் கலந்துகிடக்கும் அரபுச் சொற்களை,அவதானித்துப் பயணிக்கிறவர்களுக்கு அது காட்டும் உலகமென்பது அசாத்தியமானதாகும். ஏனென்றால் ரியாஸின் கதைகளுக்கு எல்கைகளில்லை.ஆதியிலிருந்து இன்றைய அந்தம் வரை நிலமெங்கும் வியாபிக்கும் வகையிலிருக்கிறது.
           ஒரு நீதிமன்ற வழக்கிலிருந்து ஆரம்பிக்கும் மீரான் (எ) மரியா, இலங்கையின் ஆறுகாவல்துறையில் இருந்து வாகைத்தீவு,கோட்டையூர், ஏர்வாடி, அந்தோணியார்புரம் மற்றும் மிகப்பரந்த கடல்வெளி என நிலமும் இதன் மனிதர்களும் பரந்துபட்ட வாழ்வும் இதன் ஊடாடும் மனிதர்களின் பண்பாட்டுப் புள்ளிகள்,வாழ்வின்  கோலமாகின்றன.இதுஒரு பெருவாழ்வின் சாறு என்பதனால் ஒவ்வொரு துளிக்குள்ளும் அடர்த்தி பெருக்கப்பட்டிருக்கிறது.
"மரியா கடலில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.அதன் மேலே ஒரு ராஜாவைப்போல இடுப்பில் கையைக் கொடுத்து மீரான் நின்று கொண்டிருந்தான்.அவனுக்காக அவனது அம்மா அமலி தூரத்தில் கரையில் கைகளைக் கட்டிக் கொண்டு காத்திருந்தாள்.அவள் வாய் மாதா மன்றாட்டு மாலையை பாடிக்கொண்டிருந்தது"
முரண்களின் அபரிமிதமான இணைவின் உலகம்.இதனை ரியாஸ் துவங்குவதும் பகுதி பகுதியாக நகர்த்துவதும்,எல்லாம் சித்திர வேலைப்பாடுகளைப் போல இருக்கும். மானிடவாழ்விலுள்ள இழப்புகள் வலிகள் துரோகங்கள் எல்லாம் கடந்து மனம் ஒன்றை ஒன்று ஆராதிக்கும் புதிய துவக்கத்தை கதை அனேக நம்பிக்கைகளோடு துவங்கி வைக்கும். இப்போது நமக்கென்று தனித்த கோபமில்லை,தனித்த முடிவுமில்லை நாம் அதனோடு அமைதியாக கலந்து விடுகிறோம்.இது முழுக்க முழுக்க இயற்கைப் பூர்வமான மனம்.இந்த மாயலோகம் ஒன்றால் இயக்கப் படுவதைப்போலவே இவரும் கதைகளை இயங்கவிடுகிறார்.
          கடல்சார்ந்த வாழ்வின் பக்கங்கள் தமிழில் நமக்கு வேறு வேறு தளங்களில் அறிமுகமாகி இருந்தாலும் ரியாஸ் வெளிப்படுத்தும் கதையின் வாயிலாக நமக்கு அறிமுகமாகின்ற கடல்சார் வாழ்வென்பது தமிழுக்கு புதிய பக்கமாகும்.
பகுதாது கோமானே,பார் இலங்கும் சீமானே
அலையாடும் கடல் ஓரம் அரசாளும் கப்பல் ராஜா
திரையோடும் கடலில் திக்கற்ற படகு நான்
கலங்கரையாய் ஆயிடுமோ உன் அருள்
செவத்தகனி தன் இடுப்பில் இருந்த கப்பல் ஒலியுல்லா திவ்விய மாலைச் செய்யுளை எடுத்து ஒப்பித்தார்.கப்பல் ஒலியுல்லா வியக்கத்தக்க ஒரு புதிய அறிமுகமாக மலருகிறது.இதுவரை கடல்சார்ந்த பதிவுகளில் நாம் காணாத புத்தம் புதிய இந்த அறிமுகத்தை ரியாஸின் எழுத்துக்கள் நீட்டிச் செல்கின்றன.இலங்கை மலேசியா சிங்கப்பூர் இந்தோனேசியா என பேரெல்லைகளை வசப்படுத்தி இருக்கும் வாய்ப்புகள். பாதாம் துறைமுகத்தைச் சுற்றியும் கடல்.தூரத்தில் எங்கோ பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பு.பாதை கடலுக்குள் ஒரு பச்சை மினாரா நோக்கிச் செல்கின்றது.சிகரி மார்க்கம் கடல்பற்றிய புதிய சித்திரங்களை மார்க்கங்களை நிறுவும் கதைகளின் திரட்சியாக இருக்கிறது.கதைகள் ஒன்றின்மீது தெரிந்தவாறும் தெரியாதவாறும் அசைவுகளை ஏற்படுத்துகின்றன.இங்கு அசைவுகளுக்குப் பஞ்சமில்லை. ஆழ்ந்து வாசிப்பவர்கள் ஆராயந்து அறிய விரும்புபவர்களுக்கான அழகான திறப்புகள் நிறையக் கிடக்கிறத.ஆஸ்திரேலியாவில் நாளென்று ஒரு கடற்கரைக்கு செல்வதாக இருந்தால் ஒருவர் அங்குள்ள எல்லா கடற்கரைக்கும் சென்று வர இருபத்திஏழு ஆண்டுகள் ஆகுமென்று வாசித்திருக்கிறேன். இப்படியானதொரு பலமுனைகளைக் கொண்ட கதைஉலகமாக சிகரி மார்க்கம் அமைந்திருக்கிறது.
     ஏழாவது வானத்தில் வீடு என்று ஒரு சிறுகதை, கடல்களின் கோமான் தூதர் ஹிள்ரு உப்பு சமுத்திரத்தின் வழியே ஞானத்திரவியங்களை அள்ளித் தருபவர்.ரியாஸும் முஹப்பத்தானவர் என்பதனால் ஞானத்திரவியங்கள் கொஞ்சமல்ல நிறையவே  வசப்பட்டிருக்கிறது.எழுத்துகள் வெள்ளமென பெருக்கெடுக்கும் இக்காலத்தில் அவதானிக்கும் புறஉலகை தனது அகஉலகத்தால் அணுகும் தன்மையில் வெற்றியடையும் ரியாஸ் தனது எழுத்துகளை முந்திய எந்த சாயலுமில்லாமல் பார்த்துக் கொள்வதும் சிறப்பானது.கதை கலைப்பு,விரிவடைந்த எல்கைப் பயணம்,தனது நம்பிக்கையின் வழியேயான தென்மங்களின் இணைவு என பன்முகத்தன்மை கைக்கொண்ட விளையாட்டு நீண்ட பரப்புக்கு நகர்த்துகிறது.ஒருவகையில் வாசகனை வேறு வேறு பகுதிக்கு துரத்துவதும் கூட இலக்கியத்தின் உயர்தன்மைதான்.கதைக்கு வெளியே அவன் தேடவேண்டிய பேருலகின் திறப்புகளை,சாம்பிராணிப் புகை பனிபோல் பரவுவதைப் போலவும் உள்ளுக்குள்ளிருந்த ஒரு மிருகத்தின் கர்ஜனையாகவும் செய்ய இயலுகிறது.
           புல்வெளியில் பொசுக்கென இறங்கி ஒரு கால்நடை மேய்வதுபோலவும் மேயலாம். அவ்வாறான மேய்தலில் வயிறு நிரம்பும்.இன்ன சக்தியுள்ள உணவு என்று அறியாமல் உண்டாலும் அதன் சக்தியை உடல் கிரகிக்கதானே செய்யும்.அறிந்து கொள்ளும் போது அது மேலும் அலாதியானது.வாசிப்பும் ஒருவகையில் இப்படித்தான்.அது தரும் புதிய திறப்புகளில் ஏதுவாகப் பயணித்தால் பேரானந்த அனுபவமாக மலரும் "சிகரி மார்க்கம்" இதனை கதையாகவும் கொள்ளலாம் இதுதரும் புதிய திறப்புகளின் வழி பேரானந்தம் பெரும் தடமாகவும் கொள்ளலாம்.எல்லா கதைகளிலும் இதன் அம்சங்கள் மறைக்கப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டுமிருக்கிறது. "மண்ணறைக்குச் சென்றுவிட்டவர்களின் நினைவாக இருக்கும் பிரதியை,வாப்பாவின் வற்புறுத்தலால் இடுப்பளவு தண்ணீரில் கடலில் விட்டுவிட்டு வந்தேன்.குர்ஆன் பிரதி மீண்டும் மீண்டும் கரையில் செங்குத்தாக ஒதுங்கி நின்றது.ஏழாவது முறை கடலில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தபோது, வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த இலந்தை மரத்தின் மீது குர்ஆன் பிரதி தொங்கிக்கொண்டிருந்தது.
நெஞ்சோடு பிரதியை அணைத்துக் கொண்டேன்.'பெத்தம்மா....'
'இறைவா, தூயர் ஹிள்ரு பொருட்டால் என் சிரமங்களின் நன்மையை புலன்களுக்கு உணர்த்துவாயாக ! நான் ஒதுங்கிக் கொள்ள ஒரு கூரை வழங்குவாயாக! கூரையின் கீழ் ஞானக்கோப்பையைத் தருவாயாக ! உன்னிடத்தில் சேர்க்கும் ஒரு கப்பலை இக்கரைக்கு அனுப்பி வைப்பாயாக ! கடலைப் பார்த்துப் பிரார்த்தித்தேன்.
இவ்வாறாக கதை விரிக்கும் உலகம் ஒரு ஞானப்பரப்புக்கான மெல்லிய பாலத்தைச் சமைப்பதை அவதானிக்க இயலுகிறது.சிகரி மார்க்கம் பழையது எதுவும் போல இல்லாத புதிய அனுபவம்.தமிழில் கடல்சார் இஸ்லாமிய வாழ்வின் பதிவுகளின் ஆரம்ப புள்ளியும் கூட.ஒன்பது கதைகளும் விரிக்கும் உலகிற்கு ஒரு தொடர்புகள் தென்பட்டாலும் இதன் வாழ்வும் வரலாறும் நம்மை நீண்ட மௌனத்திலாக்கி பின்னர் பெரும் உரையாடலுக்கு இட்டுச் செல்பவை.கே.முகம்மது ரியாஸுக்கு அன்பும் வாழ்த்தும்.

சீர்மை வெளியீடு
பக்கம் 135
விலை ரூ 175

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...