மீரான் மைதீனின் நாவல் ஒச்சை - வாசிப்பு அனுபவம்
மீரான் மைதீனில் கதை மாந்தர்கள் எல்லோருமே அவரவர் நிறைகுறைகளோடு தான் வாழ்கிறார்கள். கதையும் கூட கதாநாயகன், நாயகி என்று இருவரை மட்டுமே சுற்றி வருவதில்லை. கதைப் போக்கில் , அது ஓர் ஊர்க் கதையாகவும் , அந்த மனிதர்கள் அனைவரின் கதையாகவும் உறுப்பெறும் மாயம் நிகழ்கிறது. இது அவருடைய எல்லா நாவல்களிலும் காணக்கூடிய பொதுவான போக்கு.
ஒச்சை நாவலும் விதிவிலக்கல்ல.
அன்று காலை வழக்கம் போல் சலாம்து சாயிப்பின் டீக்கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் வருவதும் போவதுமாக , டீ குடித்துக் கொண்டே ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த குருசுமிக்கேலின் மகன் சைக்கிளில் இருந்து காலை ஊன்றியபடி , ஓய் சாயிப்பு.. உங்களுக்கு ஒண்ணும் தெரியாதா என்று ஆரம்பிக்கிறான். சொல்லுலே .. தாயழி என்று சலாம்து சாயிப்பு சத்தம் போட , கிளவுஸ் கம்பெனிக்க பின்னாடி கோயாவக் கொன்னு போட்டிருக்கானுவ. கத்திக் குத்து .. ரத்த வெள்ளத்தில செத்துக் கிடக்கான் என்று சொன்னவுடன் ஊர் மக்களுக்கு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.
போலீஸ் விசாரணை சூடு பிடிக்கிறது.
மோப்பம் பிடித்து ஓடிவந்த போலீஸ் நாய் கோலப்பன் புரோட்டாக் கடை ஷட்டரைப் பார்த்து குரைத்து விட்டு அங்கேயே படுத்துக் கொள்கிறது. கோலப்பன் மீது கொலையின் சந்தேக நிழல் படிகிறது.
நள்ளிரவில் தன்னுடைய கடையைச் சாத்திவிட்டு , வீட்டுக்குச் சென்று குளித்து படுக்கைக்கு செல்ல 4 மணி ஆகிவிடும் கோலப்பனுக்கு. நம்பிக்கையும் நாணயமும் இரு கண்கள் என்று எழுதப்பட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர் நெட்டையின் விசிட்டிங் கார்டை கடுப்பில் தூக்கி வீசப்போக அது கொலையுண்ட கோயா, அன்றைய இரவில் நண்பர்களான பூமணி, மோசே உடன் மது அருந்திய இவனுடைய புரோட்டாக் கடையின் பின்புறம் கண்டெடுத்த போலீஸ் , கோலப்பனையும் வளையத்துக்குள் சிக்க வைக்கிறது. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவன் வாழ்க்கை போலீஸ் , விசாரணை என்று தடம் புரள்கிறது.
கொலையுண்ட கோயா ஒரு சுவாரஸ்யமான கேரக்டர். எல்லாவற்றையும் நுட்பமாக கிரகிக்கும் ஆற்றல் படைத்தவன். திடீரென்று பேரறிஞர் அண்ணா, மாப்பிள்ளமார் கலகம், குமர கோயில் நுழைவுப் பேராட்டம் பற்றியெல்லாம் வரலாற்றுத் தரவுகளோடு பேசுவான். மிதமான போதையில் கோயாவின் பேச்சு பெரும் ஞானம் கொண்டவனின் பேச்சு போல் இருக்கும் என்று எழுதிச் செல்கிறார் மீரான். அது சரிதான் என்று பல இடங்களில் நிரூபிக்கிறான் கோயா.
ஒரு முறை காசு, பணம் பற்றி ஐயப்பனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது போகிற போக்கில் கோயா, மானங் கெட்ட பயலுவளுக்குதான் காசு பணம் பெரிசு ஐயப்பா என்று சொல்வான்.
அதே போல் ஆட்டோ டிரைவர் பஷீரின் வேணி மேல் கொண்ட ஒரு தலைக் காதல் தோல்வியில் முடிந்தவுடன் ஆறுதல் சொன்ன கோயா, கவலைப்படாதே ... உனக்கென்று ஒரு சீதேவியோ மூதேவியோ வருவாள் என்று சொல்லிட்டு , காதல் ஒரு முடிவுறாத பயணம் என்பான். கேட்டுக் கொண்டிருந்த சிந்தா ஷேக்மதார், காதல் ஒரு முடிவுறாத பயணம்.. அருமையான டைட்டில் என்று பாராட்டுவான்.
மரியம் பீவி என்று தன் அன்னையின் பெயரில் இருந்த ஆட்டோவின் பெயரை திரிவேணி என்று பிரியப்பட்ட பொண்ணின் பெயரில் மாற்றிக் கொண்டு, காதல் தோற்றவுடன், ஆட்டோவில் அடிக்கடி கம்பன் ஏமாந்தான் பாடலை ஒலிக்க விடுவான். கேட்டுக் கொண்டிருந்த சங்கரன் மாமா, டீக்கடை சலாம்து பாயிடம், தாயழி , இவன் ஏமாந்துட்டு கம்பன தெருவுல இழுத்து விடுறான் பாரு என்று சொல்லும் போது சலாம்து பாயோடு சேர்ந்து நமக்கும் சிரிப்பு வருகிறது. சலாம்து பாய், சங்கரன் மாமா கல கல கூட்டணி ஊர் நடப்புகளைப் பற்றி இப்படி நச்சென்று கமெண்ட் அடிப்பது நாவல் முழுக்க பரவிக் கிடக்கிறது. எந்த ஒன்றையும் வலிந்து திணிக்காமல் , கதாபாத்திரங்களின் உணர்வுப் போக்கிலேயே கதையை நகர்த்துவதும், நகைச்சுவை உட்பட அனைத்து உணர்வுகளையும் நுட்பமாக கடத்தக் கூடிய எழுத்துக்குச் சொந்தக்காரராக மீரான் திகழ்கிறார்.
கோயா, மனைவி சைனபாவைத் தள்ளி வைத்து விட்டு , ஏதோ தொடுப்பில் இருப்பதாக ஊருக்குள் பேச்சு. மனோரஞ்சிதம் என்கிற அந்த ' நொண்டிச் சிறுக்கி ' , இடுப்புக்குக் கீழே கம்பியாய் சூம்பிக் கிடக்கும் கால்களோடு , ஆற்றங்கரைக் குடிசையில் கள்ளச் சாராயம் விற்று வயிற்றைக் கழுவுபவள். ஒரு முறை அவளுடைய குடிசை தீப்பற்றி எரிந்த போது, ஊரே வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, கோயா தான் உயிரைத் துச்சமென மதித்து அவளைக் காப்பாற்றியவன். கருணை உள்ளத்தோடு அவன் செய்யும் உதவிகளைப் பார்த்தால், அந்த உறவை எப்படிக் கொச்சைப் படுத்த முடியும் என்று தெரியவில்லை.
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு கன கச்சிதம். ஒரே ஒரு காட்சியில் வரும் கேரக்டர் கூட மனதில் ஆழமாய் பதிந்து விடுகிறது. நிஜ மனிதர்கள் போலவே மனதில் உலவ ஆரம்பித்து விடுகிறார்கள். வரிகளை வாசிக்க வாசிக்க அவர்களுடைய அனுபவங்கள் அப்படியே நெஞ்சில் உயிரோவியங்களாக நிலை பெற ஆரம்பித்து விடுகின்றன.
ரியல் எஸ்டேட் புரோக்கர் ஐயப்பனும் , கோயாவும் ' ஒண்ணாம் கிளாஸில் ' இருந்தே கூட்டாளிகள். ஓமனில் இருந்து இரண்டு மாத விடுமுறையில் வந்த ஜின்னாவுக்கு இடத்தைக் காட்டி, நாலு நல்ல வார்த்தை சொல்லி அவனுக்கு எடவாடு முடித்துக் கொடுத்தால் , கையில் கொஞ்சம் பணம் புரளும். லேசாக ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம் என்னும் ஆவலாதியில் இருவரும் போகும் போது, வழியில் சந்தித்த கோயாவிடம் சிறிது நேரம் உரையாடி விட்டுத்தான் செல்கிறார்கள். இப்படித்தான் நாவல் ஆரம்பிக்கிறது.
அடுத்த நாள் காலையில் பார்த்தால் கோயா குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஆடிப் போகிறான் ஐயப்பன்.
அப்போது சதாசிவனும், ராமச்சந்திரனும் ஐயப்பனிடம் மெல்லக் கேட்டனர் , செத்தவன் சாயப்பு, நான் வேணும்னா சுப்ரமணியத்துட்டப் பேசவா என்று எதற்கோ அடிபோடுவதைப் போல் கேட்கிறான். அவனுடைய விபரீத எண்ணத்தை உணர்ந்த ஐயப்பன் , " எங்க எழவு உழும் , ரத்தம் குடிக்கலாம்னு நடக்கியளாலே " என்று விரட்டி விடுகிறான். போகிற போக்கில் , உரையாடல் வழியாகவும், நிகழ்வுப் போக்குகள் வழியாகவும் அரசியல், சூழல் கேடு, சமய அடிப்படைவாதிகள் போற்றிப் பாதுகாக்கும் நம்பிக்கைகள், சமூகச் சீரழிவுகள் என எல்லாவற்றின் மீதும் இது போன்ற நுட்பமான விமர்சனங்களை பொதிந்து வைத்துக் கொண்டே போகிறார் மீரான்.
போலீஸின் சந்தேக நிழல் ஐயப்பன் மீதும் விழுகிறது. விசாரணைக்கு அழைத்துப் போக சுசீலன் என்கிற காவலர் மஃப்டியில் வந்து ஐயப்பனிடம் , எங்கயாவது தோப்பு வெலைக்குக் கிடந்தாச் சொல்லுங்க ... வாங்க தள்ளிப் போய் பேசுவோம் என்று நைசாக அழைத்துப் போகிறான். ஆட்டோ அருகில் வந்ததும், ஏறுலே வண்டில என்று அதட்டுகிறான். என்ன தொனி மாறுகிறதே என்று உச்ச கோபத்தில் பதற்றமான ஐயப்பன், யாருலே நீ? எதுக்குலே ஆட்டோல ஏறணும் என்று கேட்கிறான். ஆங், உன் அம்மைக்கு மாப்பிளை பாக்கதுக்கு ... ஏறுலே தாயழி என்று கழுத்தில் கைவைத்து ஆட்டோவுக்குள் தள்ளுகிறான்.
' அம்மைக்கு மாப்பிள பாக்கதுக்கு ' என்ற வார்த்தையை தாங்க முடியவில்லை ஐயப்பனால். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அந்த வார்த்தைகள் சம்மட்டி அடிபோல் இறங்கிக் கொண்டே இருந்தது. கற்பனையில் ஒருவன் சன்னம் சன்னமாக கொன்று போடக் கூடிய வார்த்தைகள் எத்தனை துரதிர்ஷ்டமானது என்று பதிவிடுகிறார் மீரான். வாழ்வின் எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பம் , "என்ன மயிரப் புடுங்குன வாழ்க்கைடா " என்று அங்கலாய்ப்பாய் இருந்தது ஐயப்பனுக்கு.
விடிய விடிய தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தவன், அதிகாலைப் பள்ளிப் பாங்கோசை கேட்டு எழுந்து பாயில் உட்காருகிறான். ஐயப்பனுக்கு அதன் அர்த்தங்கள் எதுவும் புரியவில்லை என்றாலும், குழந்தைப் பருவத்தில் இருந்தே கேட்டு வரும் அந்தப் பாங்கின் சத்தம் இனிமையாக இருந்தது. பாங்கு முடிந்ததும் சிவன் கோவிலில் பாட்டு போட்டார்கள் என்று எழுதுகிறார் மீரான்.
சட்டென்று எழுந்து குளித்து விட்டு, கோயாவின் அடக்க ஸ்தலத்துக்குப் போகிறான். நேற்று முந்திய காலையில் சிரிக்கச் சிரிக்கப் பேசிய கூட்டாளி இப்போது செத்து மண்ணுக்குள். ' மனிதன் காலத்தால் எதில் வளர்த்திருக்கிறான் என்றே தெரியவில்லை ' என்னும் யோசனையோடு அடக்க முடியாமல் அழுகை பீறிட்டு வெடிக்கிறது. கபர்ஸ்தானத்துக்கு அழைத்து வந்தவனால் இவன் இப்படி அழுவதை நம்ப முடியவில்லை. திரும்ப வரும் போது , இந்த உலகத்துல எங்கயாவது மனுஷன் நல்லவனாகவும் இருக்கான் என்று பலவிதமாக பேசிக்கொண்டே வருகிறான்.
நண்பனின் கொலை, போலீஸ் விசாரணை எல்லாம் அதுநாள் வரை தன்னுடைய ' சுய அசைவுகள் மேல் எழுந்து விடாதபடி தனக்குத் தானே போர்த்திக் கொண்ட வலையில் ' இருந்து மெள்ள மெள்ள விடுபடுபவனாகக் காட்சியளிக்கிறான் ஐயப்பன்.
ஆரம்பத்தில் துப்பறியும் மர்ம நாவல் போல் தோற்றம் கொண்டாலும் , சகல மனித உணர்வுச் சுழிகளாய் நடக்கும் நதிபோல் சலசலக்கிறது நாவல்.
விசாரணைக்குச் செல்லும் கணவன் ஜின்னாவுடன் செல்லும் மனைவி உசைமா, அவனைக் கலாய்ப்பதெல்லாம் தரமான நகைச்சுவை.
போலீஸ் விசாதனைக்குப் பிறகு ஆறு மாதத்தில் மரணித்த பூமணி, நோய்வாய்ப்பட்ட மோசே, இன்சா அல்லா என்று சொல்லிவிட்டு , சிரித்துக் கொண்டு, என்ன சரியாச் சொன்னேனா என்று கேட்கும் தடிக்காரன்கோணம் வைத்தியர், கிளீனிக்கின் நடுத்தர வயதுப் பேரழகி, வெட்டி பந்தா காட்டும் ஜமா அத் தலைவர் அன்வர், குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாளாய் வாழ்வைக் கழிக்கும் மோதினார், விசாரணை பயத்தில், சிவம்பிள்ளை பண்ணையார் வயலில் நாத்தங்கால் பிரிச்ச வாமடையில் நீர் ஓடுவது போலப் போயிட்டே இருக்கே என்று மூத்திரம் பெய்யும் நெட்டை என்றழைக்கப்படும் ரசாக் என்கிற ரியல் எஸ்டேட் புரோக்கர், கடைசியில் கொலையாளி என்று கைது செய்யப்படும் கோயாவின் தம்பி காஜாவின் மீதான குற்றப்பத்திரிக்கையில் உள்ள ஓட்டைகளைப் புட்டுப் புட்டு வைக்கும் நடேசன் வக்கீல், ஜமாஅத் தலைவர் அன்வரின் வெற்றுச் சவடால்களை அம்பலப் படுத்தும் ஆட்டோ டிரைவர் பஷீர், இன்ஸ்பெக்டர் ராயன், காவலர் ரேணுகா என்று எல்லோரும் உயிர்ச் சித்திரங்களாக உலா வருகிறார்கள்.
ஒச்சை என்ற மலையாளச் சொல்லுக்கு சந்தடி , இரைச்சல், கலகலப்பு என்று பொருள்.
கோயா கொலையானவுடன் நின்று போன பள்ளி முக்கு ஒச்சை, காஜா விடுதலை ஆன சிறிது காலத்தில் மீண்டும் வந்ததாகக் கதை முடிகிறது.
ஜி.நாகராஜன் , வைக்கம் முகம்மது பஷீர் போல், விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களுடைய சமூக நியதிகளை அல்லது நியதி மீறல்களை அன்பும் கருணையும் கொண்டு அவர்களின் சமூக, பொருளாதார நிலையில் இருந்து பார்க்கும் பார்வையில்தான் மீரான் மைதீனின் படைப்புகள் இருப்பதாக உணர்கிறேன்.
மனித நேயமே மீரான் மைதீனின் எழுத்தின் அடிநாதம். அதை மனித நேயம் என்றாலும் சரி, பேரன்பு என்றாலும் சரி, இவருடைய எழுத்துக்களும், கதை மாந்தர்களும் சாதி, மத, இன, மொழி என்ற எந்த மன மாச்சரியங்களும் இல்லாத வாழ்க்கை நெறியைத்தான் முன்வைப்பதாகப் படுகிறது.
எந்த மனநிலையில் உள்ள வாசகனுக்கும் இந்த உணர்வு ஏற்படும் என்று நினைக்கிறேன்.
நல்ல இலக்கியப் படைப்பு இதைச் சாதிக்கும்.
' ஒச்சையும் ' சாதித்திருக்கிறது.
அன்புடன்,
காமு
வெளியீடு : புலம்
பக்கம் : 164
தொடர்பு : 98406 03499
No comments:
Post a Comment