நூல் அறிமுகம்: சேலம் ராஜா
எதையாவது ஓரிரு வார்த்தைகளை எழுதுவதும் பின்பு அழித்துவிடுவதுமாக, திருவாழியை வாசித்ததிலிருந்து மனம் ஓர் உள்ளே வெளியே விளையாட்டை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. காரணம் அது வாசக நெஞ்சின் இருண்ட பகுதிகளையும் தன்னுடைய பொருள் புதைந்த, கருணைமிக்க, எளிய மனங்களின் ஏகபோக அன்பினால் ஒரு வெளிச்சத்தை இழையோட விட்டிருப்பதுதான். இன்றெல்லாரும் நவீன காலத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் பழைமையான உணவு வகைகள், மண்பாண்ட சமையல், இயற்கைமுறை விவசாயம், பசுமை நடை, ஆற்றுக்குளியலென காலத்தில் பின்சென்றவற்றைத் தேடி ஓடுபவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். இதுவொரு உணவுச்சங்கிலித் தொடர்போலத்தான். கற்காலத்திலிருந்து தொடங்கி நவீனமயப்பட்டு பிற்பாடு கற்காலத்தை நோக்கியே திரும்புவது. இதுதான் என்றுமே மாற்றமுடியாத நியதியும்கூட. இன்னும் ஒரு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இவ்வுலகம் எப்படி இருக்குமென்பது இப்பொழுது இருக்கும் நமக்குத் தெரியப்போவதில்லை. ஆனால் இந்தக் காலச் சுழற்சியில் நாமும் சிறு துரும்பாகச் சுழன்றுகொண்டிருப்போம் என்பது உண்மை. இதிலுள்ள ஆச்சரியப்படும் ஒருசில உண்மைகள் என்னவென்றால், திடீரென திருவிழாக்கூட்ட நெரிசலில் நாம் தொலைத்துவிடுபவை / விடுபவர்களை இந்தக் காலம் மீண்டும் ஒரு புள்ளியில் நம்மிடமே அல்லது தொலைந்துபோன இடத்திலேயே வீசிச் செல்வதுதான். அப்படியாக, ஒருசிறு நிலத்தில் வாழும் சில மனிதர்களின் பெருவாழ்வே இந்தத் திருவாழி.
இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் என்பவன் சிறு துரும்பில் கால்பகுதிகூட இல்லை. ஆனால் மனிதகுலத்திலிருந்து எதிர்கொண்டு பார்க்கையில் அவனுடைய வாழ்வென்பது எவ்வளவு ஆச்சரியமாகவும் மலைப்பாகவும் எத்தனையெத்தனைத் திருப்பங்கள் பொதிந்துகிடப்பதாகவும் இருக்கிறது! திருவாழி என்பது வளர்ந்துவரும் ஒரு சிறு நகரிலுள்ள ஏழு கடைகள் அடங்கிய வணிகக் கட்டிடம். இத்தனைக்கும் அந்தப் பெயர் அதற்கெனப் பிரத்யேகமாக வைக்கப்பட்ட பெயரல்ல. அது அதனுடைய உரிமையாளரின் பெயர். அவர் வசிப்பது வேறொரு ஊராக இருப்பினும் தன்னுடைய மாமியார் வீட்டுவழி கிடைத்த நிலத்தில் அந்த வணிக வளாகத்தை நிறுவுகிறார். பிறகு அதில் கடை வைத்துத் தொழில் செய்து பிழைக்க வரும் மனிதர்களும் அவர்தம் வாழ்வுமே இந்த நாவல் முழுக்க விரியும் பிரதானக் கதைக்களம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் தொடங்கி இரண்டாயிரத்துப் பதினைந்து வரை, உத்தேசமாக நாற்பத்தி ஐந்தாண்டு காலம், பல்வேறு மனிதர்களினுடைய வாழ்வை உள்ளடக்கியது. ஒரு தனி மனிதனின் பாதி ஆயுள்; அதைச் சுணக்கமில்லாது சொல்லி முடிப்பதே ஒரு பெரிய வேலை. ஆனால் இந்த நாவலில் பிரவேசிக்கும் இருபதிற்கும் மேற்பட்டவர்களின் வாழ்வியலை அன்போடும் பரிகாசத்தோடும் அதேசமயம் சலிப்பேதும் வந்துவிடாதபடி நாஞ்சிலின் பச்சையான புழங்குமொழியில் ஐந்தாறு வருடப் பார்வையாளனாக விவரித்திருக்கிறார் மீரான் மைதீன்.
காட்சிகளாக விரிவடைகையில், மேற்கிலிருந்து கிழக்காக ஐந்து கடைகளும் கிழக்கிலிருந்து தெற்காக இரண்டு கடைகளுமாக ஒரு ‘எல்’ வடிவத் தோற்றமுடையது திருவாழி கட்டிடம். பின்புறமாக பொன்னம்மா மனையும் எதிர்ப்புறமாக கிருஷ்ணனின் டீக்கடையும் அதையொட்டி நீளும் பிள்ளையின் மனையுமாக, ஒரு வட்டாரத்தை உள்ளடக்கியது அவ்விடம். இதில் கிருஷ்ணன் கடையின் பக்கவாட்டில் உள்ள சிமெண்ட் பெஞ்சும் சில டிராக்டர் டயர்களுமே பல முக்கிய முடிவுகளெடுக்கப்படும் இடம். கதையின் தினசரி தொடங்குவது கிருஷ்ணணின் டீக்கடையிலிருந்துதான். திருவாழி கட்டிடம் எழும்பிய புதிதில் ஐந்தாம் எண் கடை பட்டணம் சாயிப்புக்காக ஓட்டல் நடத்தத் தரப்படுகையில், அதில் வேலை செய்தவர்தான் இந்தக் கிருஷ்ணண். அப்போது அவருடன் வேலைபார்த்து மரித்துப்போன மைதீன் கண்ணுவின் மகன் அன்சாரிதான் திருவாழி கட்டிடத்தின் மேற்பார்வையாளன். அனைத்துக் கடைகளிலும் மாத வாடகை வசூலிப்பது, வருட ஒப்பந்தப் பத்திரத்தைப் புதுப்பிப்பது, திருவாழி வருகிறார் என்றால் அவரை அழைத்துவர, பின்பு போய் பஸ் வைத்துவிட என்கிற பணி அன்சாரிக்கு. ஓர் இருபத்தைந்து வயதுடைய இளைஞன், அறுபதிலுள்ள கிருஷ்ணண் ஆகிய இருவரைத் தொட்டுதான் தினசரி கதைக்களம் விரியும். உடன் வேலை பார்த்த மைதீன் கண்ணுவின் மகன் என்பதால் தன்னுடைய மகன் போலவே கிருஷ்ணன் பரிகாசம் காட்டுவார். அன்சாரியும் எல்லாருக்கும் இணங்கிப்போகிற குணமுடையவன்தான்.
பட்டணம் சாயிபு, ஓட்டல் நடத்திய காலத்தில் கணவனால் கைவிடப்பட்டு இரு குழந்தைகளோடு சூளாமணி என்கிற பெண் சாயிபின் கடைக்கு வேலை கேட்டு வருகிறாள். சாயபு யாருக்கும் தவறுதலாகக்கூடத் தீங்கிழைக்காத நபர். வேலையும் தருகிறார். எல்லாம் நல்லபடியாகச் செல்லும்போது சாயிபின் மனைவிக்கு சூளாமணி மீது சந்தேகமெழ, அவளை விளக்குமாற்றால் அடித்துத் தூற்றி, இல்லாத வசவுகளைப் பேசி வெளியே அனுப்பிவிடுகிறாள். அதன்பிறகு தண்ணீர் பிரச்சனையென எதேச்சையாக சாயிபினாலும் ஓட்டலை நடத்தமுடியாமல் போய்விட, அதிலிருந்து அந்த ஐந்தாம் எண் கடையை எடுத்தவர்களுக்குத் தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு இடது கால் முறிய, அந்தக் கடையில் ஏதோவொரு அமானுஷ்யம் இருக்கிறதென ஒரு பேச்சு உலவத்தொடங்குகிறது. ஆறேழு இடது கால்களின் முறிவுக்குப் பிறகு, ஏரியாவில் ஐந்தாம் எண் கடையின் பேச்சுக்கு இறக்கை முளைத்துப் புற்றீசல் கூட்டாமாகி அவ்வூர் கடந்தும் ஐந்தாம் எண் கடையின் கட்டுக்கதைகள் பிரபல்யமடைகின்றன. என்னதான் நாகரீகத்தில் மனிதன் தெளிவான சிந்தனையாளனாக ஆகிவிடினும் உருவமற்றும் இலக்கற்றும் பறந்துகொண்டிருக்கும் இதுபோன்ற கதைகள், லேசாக அசைத்துதான் பார்க்கின்றன. நெடுங்காலமாக அங்கேயே திருவாழிக் கட்டடத்தின் ஒவ்வொரு மாறுதல்களையும் பார்த்துவந்த கிருஷ்ணண்கூட, இது முன்பு வேலை பார்த்த சூளாமணியின் சூழ்ச்சியாகத்தான் இருக்குமென நம்பிவிடும் ஆளாகிறார்.
எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் எனும் திராணி உடையவனாக ஆறேழு இடது கால்களுக்குப்பின் சிலாங்கா என்பவன் வந்து அன்சாரியிடமும் திருவாழியிடமும் பேசி, தாரை தப்பட்டையோடு தடபுடலாக ஐந்தாம் எண் கடையில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையைத் தொடங்குகிறான். கடை தொடங்கிய அன்றே அவனுக்கும் விபத்து நேர்ந்து இடதுகால் முறிகிறது. அக்கடை பற்றிய புற்றீசல் பேச்சுக்கு அது மேலும் பெட்ரோல் ஊற்றியதுபோல ஊரெங்கும் பறந்து பற்றி எரிகிறது. அன்சாரியும் கிருஷ்ணணும் திருவாழியும்கூட, அந்தக் கடையில் ஏதோ மாந்ரீக சக்தி உள்ளதாக நம்பத் தொடங்குகிறார்கள். பின்பு கிருஷ்ணணின் ஏற்பாட்டால் ஒரு மாந்ரீகன் வருகிறான்; கழிப்பு செய்து சூன்யம் நிவர்த்தியாக்கப்படுகிறது. பிறகு அக்கடைக்கு ஜீனா வருகிறான். இப்படியாக இறந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை ஊடாடி ஊடாடி கதைக்களம் விரிகிறது.
முதலாம் எண் கடை பூபாலன் என்பவனுடைய ஜெராக்ஸ் கடை. இரண்டாவதாக பேபி குட்டியின் நகை அடகுக் கடை, மூன்றாவதாக வேலுமயிலின் டிரம்ப்பட், நான்காவது சிந்துவின் பியூட்டி பார்லர், ஆறாவது ராஜகுமார் அண்ணாச்சியின் மளிகைக் கடை, ஏழாவது சலாமின் டெய்லர் கடை. இப்படியாக, பல மனிதர்களுடைய வாழ்க்கைப் பாடுகளைத் தாங்கியிருக்கிறது திருவாழி கட்டிடம். இதிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் பல கதைகள் இருக்கின்றன. இதில் சிந்து, விவாகரத்தான பேரிளம் பருவத்துடையவள். அவளுக்கு அன்சாரி மீது இன்னதென வரையறுக்கவியாலத ஒரு மோகம் இருக்கிறது. அவனுக்கும்தான். ஆனால் அதுவெல்லாம் தூரத்துப் பச்சையின் அளவுதான். வண்டிச்சக்கரம்போலச் சுழலும் இந்தக் காலம், தன்னகத்தே வைத்துக்கொள்ள மனிதன் நினைப்பவற்றைத் தொலைவில் விசிறிவிடுகிறது. தொலைக்க நினைப்பதை அருகிலேயே இருக்குமாரு பார்த்துக்கொள்கிறது. ஆனாலும் மிக விசித்திரமானது. எங்கெங்கோ அலைக்கழிக்க வைத்தபின் அவன் விரும்பியதை அல்லது அவனுக்குச் சேரவேண்டிய ஒன்றை அவனுக்கே இறுதியில் தந்துவிடும் என்பதே நிதர்சனம். ஐந்தாம் எண் கடையின்படி பார்த்தால் இது மாய மந்திர சித்துவிளையாட்டின் கதையாகத் தோன்றும். ஆனால் உண்மை வேறு. மனிதனின் பெருவாழ்வில் அவையெல்லாம் வந்துபோவதும் பலரும் அவற்றைக் கடந்து வருவதும் இயல்புதானே. அப்படி மிக இலகுவாகக் கடந்துவிடும் இடங்கள் அவை. அதன்பிறகு பார்த்தால், மனிதர்கள் தங்களின் இருப்பை இவ்வுலகில் தக்கவைக்கப் படும்பாடுகளே அதிகமாக நிறைந்திருக்கின்றன.
அன்சாரி தொடங்கி அவ்வப்போது பெரிதும் பின் விவரணைகளற்றுத் தொலைந்துபோகும் குச்சான் வரை, எல்லாருக்குப்பின்னும் வாசிப்பவர்கள் யாரும் எதிர்பாராத துயரமான நிகழ்வுகள் ஆலைக்கழிவுகளைப்போலக் குவிந்து கிடக்கின்றன. அதுபோலவே மிக இயல்பாக நம்மோடு ஒட்டிக்கொண்டு வரும் மனிதரிடத்தும் உள்ளுக்குள் பொறாமையும் பகைமையும் நிறைந்திருக்கின்றன என்பது வாழ்வின் அபத்தமான விசித்திரம். இப்படிப் பலவாறான ஏற்ற இறக்கமுள்ள கதை மாந்தர்கள் இருப்பினும், எங்கோ இருந்தபடி எல்லாரின் குணங்களையும் பிரித்து அறிந்து வைத்திருப்பவராக இருக்கிறார் திருவாழி. ஏகபோக சொத்துக்கள் இருந்தும் அதை இவ்வூரிலிருந்தபடியே ஆண்டு அனுபவிக்க மகன்கள் ஒத்துழைக்காத வேதனையே அவரை உருக்குகிறது. அவரைப் பொறுத்தவரை இந்த நிலமும் இங்கிருக்கும் மக்களும்தான் அவருக்கு நகமும் சதையும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிப்போக இஷ்டப்படவில்லை மனது. தனக்குப் பிறகு பிடிமானற்று நிற்கும் அன்சாரி தடுமாறிவிடக்கூடாது; அவனுக்கு ஏதாவது நல்லது செய்து கரையேற்றிவிட வேண்டுமென்கிற எண்ணம் ஒருபுறம் அவரை மேலும் வதைக்கிறது. அதுபோலவே அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை; அதில் பகுதி ஆசைகள் இந்த மீதமுள்ள ஜீவிதத்தைக் கடத்த பொருள் சேர்த்திவைப்பதாக இருப்பதுவே. அதற்குள்ளாக சாதி நிமித்தமும் மதத்தின் நிமித்தமும் ஏழ்மையின் நிமித்தமும் ஒருவன் உயிர்வாழ எவ்வளவோ முட்டுக்கட்டைகள் வந்துவிடுகின்றன. மொத்தமாகச் சொல்லப்போனால் வாழும் இந்தச் சிறிய வாழ்வில் கதைகள் இல்லாத மனிதனுமில்லை; ஆசையில்லாத மனிதனுமில்லை என்பது மட்டுமே உண்மை. ஆனால் அதை அன்போடும் கருணையோடும் முன்கொண்டு செல்வதில்தான் இவ்வுலகின் சக்கரம் இயங்குகிறது. அதன்படி அறத்தின்பால் ஒருவன் நடந்துகொள்ளும்போது அவன் முன்பு இழந்தவற்றை வேறு வடிவிலோ எப்படியோ மீண்டும் இயற்கையின் நியதி அவனிடமே அதை ஒப்படைத்துச் செல்கிறது. அன்சாரியும் பட்டிணம் சாயிபும் கிருஷ்ணணும் சிலாங்கா, மனோகரன் வாத்தியார் போல சுயநலத்தோடில்லாமல் அகமனதோடு உரையாடியபின் நல்லவற்றின் பக்கமே நிற்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் போட்டியான வாழ்வை எதிர்கொள்ள முடியாமல் அன்சாரி துவண்டுபோகும்போதெல்லாம் அவனுடைய உம்மாவின் வார்த்தைகள் அவனைத் தேற்றிக்கொண்டுவருபவையாக இருக்கின்றன.
ஒரு தனி மனிதனின் வாழ்வில் நடப்பதை எழுதுவது ஓரளவுக்கு சுலபம். ஆனால் இந்த ஏழு கடையின் மனிதர்கள் மட்டுமின்றி இவர்களுக்கு முன் அங்கிருந்தவர்கள், அவர்களின் சுற்றப்பாடுகள் தொடங்கி இடையில் வந்துபோவோர் முதற்கொண்டு அந்நிலத்தின் தகவமைப்பு, இயற்கை, மலை, மரம் என அப்படியே கண்முன் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் மீரான் மைதீன். அங்குள்ள ஏழு கடைகளை வர்ணித்திருப்பதிலேயே வாசகன் மனதில் காட்சிகள் விரிவடையத் தொடங்கிவிடுகின்றன. அதிலேயே ஒட்டுமொத்தக் கட்டடத்தின் வரைபடமும் மனத்தில் பதிந்துவிடும். மேலும் மைனர் சலீம் கடை சிந்தியாவிற்கும் அண்ணாச்சிக் கடை அகிலனுக்கும் டிரம்பட் கடை பிலிப்பிற்கும் சிந்துவிற்குமென நாவல் முடிந்தபிறகும் பெருங்கதைக்கான கிளைகள் நீண்டிருக்கின்றன. அதுவொரு வாசகப் பார்வைக்கான வெளியாக ஆசிரியர் திறந்துவிட்டிருக்கிறார் போலும்.
சிந்துவின் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பியூட்டி பார்லரை மிக உவமையோடு விவரித்திருப்பார். அதிலொன்றுதான் அழகிய வேலைப்பாடு மிகுந்த உள்அறைக் கதவு. அதை ‘கனவுசீன்’ கதவு எனும் சொல்லாடலில் குறிப்பிட்டிருப்பார். படிக்கும்போது ஒருமாதிரி சிரிப்பு வந்தாலும் பிறகு அதுவொரு பரஸ்பர அடையாளமாக ஒட்டிக்கொள்ளும். ஒட்டுமொத்த நாவலில் சிந்து வருமிடங்களிலெல்லாம் கனவுசீன் கதவும் வந்துகொண்டேயிருக்கும். அவள் அதை விலக்கிவிட்டுப் பார்ப்பதே சினிமாவின் ஒரு அழகிய காட்சிபோலத் தோன்றும். முழு திருவாழி நாவலுமே காதல், பாசம், பகை, பணம், ஏக்கம், துக்கம், சந்தோசமென எல்லாமே பக்கத்திற்குப் பக்கம் மாறும் ஒரு அழகிய கனவுசீன் கதவுதான். வாழ்வில் ஒரு மனிதன் படிக்கத் தவறக்கூடாத நாவல் இது.
Subscribe to:
Post Comments (Atom)
"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.
எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...
-
கதைகளுக்கு தனித்துவமான முகமிருக்கிறது.அபூர்வ பச்சிலையின் சாறு பூசிக்கொண்ட ஒரு மூதாதையின் முகம் போல வைரவன் லெ.ரா.வின் கதைகள் இருக்கின்றன. ...
-
அருமை நண்பர் கே.முகம்மது ரியாஸின் "சிகரி மார்க்கம்"சிறுகதை நூல் அவரின் இரண்டாவது தொகுப்பாக வந்திருக்கிறது. முந்தையது "அத்தர்&...
-
மஞ்சள் ஒளிப்பரவலில் சிதறிக் கிடந்த சித்திரத்தை யார் வரைந்து போட்டார்களென்று தெரியவில்லை விடியும் வரை அப்படியே கிடந்தது அதிகாலை பனியின் குள...
No comments:
Post a Comment