Tuesday, 1 August 2023

சிறுகதைகள் பற்றிய தோழர் காமு:

மீரான் மைதீன் கதைகள் பற்றி... 
———————————————-
மீரான் மைதீன் என்கிற பெயரை சமீபத்தில் தான் கேள்விப்பட்டேன். பன்னெடுங்காலமாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறார். எனக்குத்தான் தெரிந்திருக்கவில்லை. இதற்குக் காரணம் என்னுடைய வாசிப்புப் பரப்பும், ஞானமும் அவ்வளவுதான் என்று தான் சொல்ல வேண்டும். 

அகஸ்மாத்தாக அவருடைய கலுங்குப் பட்டாளம் என்னும் நாவலை சமீபத்தில் படித்தேன். ஒரு கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை படம்பிடித்து இருப்பார். அந்த மனிதர்கள் இரத்தமும் சதையுமாக வாழ்ந்ததை நேரில் கண்டு அவர்களுடனே வாழ்ந்தது  போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்படிப்பட்ட உயிர்ச்சித்திரம். 

அப்புறம் தான் அவரைப்பற்றி விசாரித்து, என்னென்ன நாவல்கள், சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்று தெரிந்து, எல்லாவற்றையும் தேடிப் பிடித்து ஏதோ எக்ஸாமுக்குப் படிப்பது போல் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஓதி எறியப்படாத முட்டைகள் , அஜ்னபி நாவல்களைத் தொடர்ந்து அவருடைய சிறுகதைத் தொகுப்புகள். 

நேற்று இரவு 7 மணிக்கு, ' பலாமரம் நிற்கும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான் ' தொகுப்பை ஆரம்பித்தேன். பாதி படித்து விட்டு தூங்கப் போய்விட்டேன். 

விடிகாலை நான்கு மணிக்கே முழிப்பு வந்து விட்டது. இந்நேரம் எழுந்திரிச்சி என்ன செய்ய என்று யோசிக்கும் போது, சட்டென்று அந்தப் புத்தகம் ஞாபகத்துக்கு வந்தது. உடனே எழுந்து ஒரு டீ போட்டுக் குடித்து விட்டு, விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன். 

ஒரே மூச்சில் புத்தகத்தை முடித்து விட்டேன். மொத்தம் ஏழு கதைகள். 

குட்டப்பாவின் புதிய செல் என்று ஒரு கதை. 
குட்டப்பா என்றால் சித்தப்பா. ஊரில் எல்லோரும் செல் வைத்திருக்கிறார்களே என்று, தானும் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு , அரேபியாவில் இருக்கும் தன்னுடைய அண்ணன் மகனுக்கு தகவல் தர, அவனும் ஒன்று அனுப்பி வைப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. 

அதைப் பயன்படுத்துவதில் தடுமாற்றம். அதையும் இதையும் தட்டியதால், போன் அடுத்த நாளே ' ஆவியும் இல்லை; அனக்கமும் இல்லை' என்றாகி விட்டது. மலுக்கு மச்சான் சரி செய்து கொடுத்து விட்டு,  " விரல வச்சி சும்மா நோண்டாத ... போன் வந்தா பச்சய அமுக்கு... பேசி முடிச்சா செவப்ப அமுக்கு..." என்று எச்சரித்து அனுப்புகிறான். 

உங்களுக்கு ஒரு லட்சம் பரிசு விழுந்திருக்கிறது என்று அனாமதேய அழைப்பு வர , புருஷனும் பெண்டாட்டியும் ஆசையாய் போய் அவமானப்பட்ட செய்தி ஊருக்கே தெரிய, ஆளாளுக்கு போன் செய்து அந்த ரூபாய என்ன செய்யறதா உத்தேசம் என்கிற ரீதியில் கிண்டலடிக்க, அந்த 'சிம்' மை தூக்கி வீசிவிட்டு, வேறு புதிய சிம் போட்டும் தொல்லைகள் தொடர்வதாக கதை போகிறது. 

கதை முழுக்க ஒரே சிரிப்பு . நகைச்சுவை என்றால் சம்பவக் கோர்வை மட்டுமல்ல ; அதை எழுதிய விதமும் . அந்த வெள்ளந்தி கிராமத்து பெரியவர் , மனைவியிடம் தன்னுடைய எண்ணை அழைக்கச் சொல்லி விட்டு வளவில் நின்று கொள்வார். மனைவி அழைத்தவுடன் என்னா.... சொகமா இருக்கியா... என்று கேட்பார். அதற்கு மனைவி ' இல்லண்ணா ஆர்லிக்ஸ் வாண்டித் தருவியரா... வையும் ஓய் போன .. லவ்வா பண்ணியரு ' என்று கேட்கும் போது சிரிக்காமல் இருக்க முடியாது. 

கண்மணியே பேசு தான் இவருடைய ரிங்டோன். கபர் குழியில் இருந்து திரும்பும் கூட்டத்தில் கண்மணியே பேசு பாடல் வந்தது என்று எழுதிச் செல்லும் போதும் சிரிப்புப் பொங்கும். ஒரு முறை செல்போனில் அழைப்பு வர, எடுத்துப் பேசியவர், தன் மகனிடம் " நயன்தாராவாம் .... யாருடே அது " என்று அப்பாவியாகக் கேட்பார். 

நடப்பதைக் கேள்விப்பட்ட அவருடைய அப்பாவும் சிரியோ சிரி என்று ரொம்ப நேரம் சிரித்துவிட்டு , ஒரு அஞ்சாறு வருஷமாச்சி பாத்துக்கோ இந்த மாதிரி சிரிச்சி என்பார். 

இப்படியே போய்க் கொண்டிருந்த கதையின் போக்கில்,  ஒரு கட்டத்தில் கப கப வென சிரித்து விட்டேன். இந்நேரத்துக்கு என்ன சிரிப்பு என்று தூக்கத்திலேயே முணகி விட்டு, திரும்பிப் படுத்து தூக்கத்தைத் தொடர்ந்தார் என் மனைவி.  

' மாமரம் , அவன், அவள் மற்றும் வளர்ப்புத் தந்தையின் கதை' என்னும் கதையை தொகுப்பின் ஆகச்சிறந்த ஒன்றாகக் கருதுகிறேன். 

அவனும் அவளும் நகரில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள தோப்பில் உலா வருகிறார்கள். இருவரும் கல்லூரியில் ஒரே வகுப்பு . அவள் நகரில் தனியார் விடுதியில் தங்கிப் படிக்கிறாள். தோப்புக்காரர் மாடசாமி, அவனுடைய அப்பாவின் நண்பர். இளம்பெண் ஒருத்தியுடன் அவனைப் பார்த்தவுடன் 'ஒண்ணும் சரியில்லையே ' என்று அசூசைப் படுகிறார். 

அவனும் அவளும் ஒரு மாங்கொட்டையை நடுகிறார்கள். அது வளர்கிறது. படிப்பு முடிந்து, அவள் தன்னுடைய ஊருக்குப் போய் விடுகிறாள். 

காலம் உருண்டு ஓடுகிறது. இவன் மட்டும் அவ்வப்போது சென்று செடியின் வளர்ச்சியை பார்த்து விட்டு வருகிறான். இப்போதல்லாம் அவள் ஏன் வருவதில்லை என்று  மாடசாமி கேட்கிறார். இவன் " படிப்பு முடித்து சென்று விட்டாள். இனி வர மாட்டாள் " என்று  சொல்கிறான். 'காலம் பொல்லாதுடே' என்கிறார் மாடசாமி. 

இப்படி பல ஆண்டுகள் கழிந்து விட்டன. 

அவன் தன் மனைவியிடம், தலையாட்டும் மாமரத்தைப் பற்றி சொல்கிறான். நம்ப மறுத்து, சரி பார்த்து விடலாம் என்று கிளம்புகிறாள். அவன் தன்னுடைய பெயரைச் சொன்ன போது மாமரம் தலையாட்டியது. பிரமித்துப் போய் அவளும் அவன் பெயரைப் சொல்கிறாள். அசையவில்லை. ஏன் என்பது போல் இவனைப் பார்க்க, பெயருடன் குயின் என்று சேர்த்து சொல் என்கிறான். அதிசயம்! இம்முறை தலையாட்டியது. 

திரும்பி வரும் போது யார் அந்த குயின் என்று மனைவி கேட்பதாக கதையை முடித்திருப்பார் மீரான் மைதீன். 

கதையை இப்படி முடித்திருந்தாலும், என்னால் அதில் இருந்து நீண்ட நேரம் மீள முடியவில்லை. ஒரே யோசனையாக இருந்தது. ஆரம்பத்தில் நண்பரின் மகனை ஓர் இளம்பெண்ணுடன் பார்த்தவுடன் ஒவ்வாமைக்கு ஆட்பட்ட மாடசாமி , பிறகு அவள் இல்லாமல் அவன் மட்டும் வந்து போவதன் காரணம் அறிந்தவுடன் ' காலம் பொல்லாது டே ' என்று அங்கலாய்த்தாரே ? அவருக்கும் இது போன்ற வாலிப வயது அனுபவம் ஏதும் இருந்திருக்குமா ? இல்லையென்றால் வீரியம் மிக்க அந்த ஒற்றைச் சொல் எப்படி வந்திருக்கும் என்று மனம் சிந்தித்துக் கொண்டே இருந்தது. 

மேலும் அவன் மனைவி,  யார் அந்த குயின் என்று கேட்பதோடு கதை முடிந்தாலும் அதற்குப் பிறகு என்ன ஆகியிருக்கும் என்று மனம் யோசித்துக் கொண்டே இருந்தது. 

மீரான் மைதீனின் கதை சொல்லும் பாணி அலாதியான ஒன்று. நெருங்கிய சிநேகிதன் நமக்கு மட்டும் தனியாக கதை சொல்வது போன்ற இலகுத்தன்மை ; இயல்பு. எந்த மிகை உணர்ச்சியும் இல்லாத, குழப்பம் இல்லாத , தெளிவான எழுத்து நடை. வட்டார வழக்கை இவர் சரளமாகக் கையாளும் விதம், கதைக்கு விசேஷமான உயிர்த்தன்மையைக் கொடுக்கிறது. 

பெரும்பாலான கதைகள் காலக் கோட்டில் முன் பின்னாக பயணித்தாலும் , ரயில் ஒரு தண்டவாளத்தில இருந்து இன்னொன்றுக்கு மாறுவது போல் அவ்வளவு லாவகம்.

கதை எழுதுவதற்கு ஒரு சொல்லுக்காகக் காத்திருப்பேன் என்கிறார் மீரான் மைதீன். அந்த காத்திருப்பு சமயத்தில் ஆண்டுக் கணக்கில் கூட நீண்டது உண்டு என்கிறார். எல்லாக் கதைகளிலும் ஆரம்பத்தில் இருந்து ஜிவு ஜிவு என்று எகிறி அடிக்கும் வேகத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. 

இவருடைய பாத்திரப் படைப்பு அபாரமானது. எந்த பாத்திரத்தின் குணாதிசியங்களைப் பற்றியும் கதாசிரியர் என்ற முறையில் தான் புகுந்து வர்ணணை செய்வதில்லை. கதையின் போக்கிலும், உரையாடல்கள் வழியாகவும் அந்தந்த பாத்திரங்கள் வாசகன் மனதில் மெல்ல மெல்ல உருப்பெறுகிறார்கள். இது மீரானின் தனித்தன்மை. 

சமூக, பண்பாட்டு, அரசியல் அவதானிப்பு மற்றும்  விமர்சனம் எதையும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. கதைப் போக்கிலேயே எல்லாவற்றையும் நுட்பமாகப் பொதிந்து வைத்திருப்பதை வாசகன் உணர முடியும். இதுவும் இவருடைய சிறப்பம்சம் என்று கருதுகிறேன். 

நிறைய வாசிக்க இருக்கிறது. 
வாசிப்போம். 

 அன்புடன், 
காமு 

பக்கம்.     100 
விலை ரூ. 100 
தொடர்புக்கு : போதிவனம்

No comments:

Post a Comment

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...