Wednesday 2 August 2023

காலமும் நண்பர்களும் -மீரான் மைதீன்

1991ம் ஆண்டு நாகர்கோவில் ஸ்காட் கிருஸ்தவ கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டப்படிப்பை நிறைவு செய்து விட்டு கல்லூரியைவிட்டு வெளியேறிய நாள் இன்றும் மனதில் நிழலாடுகிறது.நண்பர்களைப் பிரிவது,அந்த சந்தோசமான நாட்களிலிருந்து வெளியேறுவது என மனம் சோகத்தால் கனத்துக்கிடந்தது.இந்த உலகில் ஒன்றிலிருந்து வெளியேறுவது சுலபமானதல்ல,அதில் நமக்கே நமக்கான தனித்துவங்களும் மனதின் ரகசியங்களும் நிறைந்து கிடக்கும்.ஆனாலும் காலம் சூழல் நம்மை நகர்த்திவிடுகிறது.
கல்லூரியைவிட்டு வெளியேறிய பிறகு அந்த சாலையில் பயணித்த பயணம் முந்தய பயணம் போல இல்லை.பார்வையாளனுக்கும் பங்கேற்பாளனுக்குமான வித்தியாசம்.ஆடிப்பாடி ஓடிய அந்த சாலை என்னைக் கொஞ்சம் பரிகசிப்பதுபோலக்கூடத் தோன்றியதுண்டு.நான் பலநேரங்களில் அந்த சாலை வழி பயணத்தை தவிர்த்ததுகூட உண்டு.நினைவுகள் மீண்டும் மீண்டும் ஏதேனும் ஒன்றை மீட்டுக் கொண்டுவரும்.அதுஒரு அவஸ்தையும்கூட.காலம் மெல்ல நகர்ந்தது.சென்னை வாசியானேன் பிறகு சில ஆண்டுகள் ஜித்தா வாசியாகி மீண்டும் ஊர்,சென்னையென நகர்ந்த இவ்வாழ்வில் சில நண்பர்களின் முகம்கூட மறந்துபோனது.உடன் படித்த நாலே நாலு பெண் தோழிகளும் ஐம்பதுபோல உள்ள நண்பர்களும் ஒரு கற்பனைக் காட்சியாகவே இருந்தனர்.கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக முகநூல் உலகம் சில நண்பர்களைத் தொடர்பில் கொண்டுவந்து தந்தது.சிலரை சந்திக்கவும் இயன்றது.ஆனாலும் பலமுகங்கள் தூரமாகவே இருந்தன.இந்த 32 ஆண்டுகாலங்களில் அபூர்வமாக சிலரை சில தருணங்களில் சந்திக்க வாய்த்தது.சில ஆனந்த உரையாடல் அதே ஒருமைச் சொற்கள்,கூக்குரலென பிராயம் துள்ளிக் குதிக்கும்.
இந்த நண்பர்களில் நாங்கள் சுமார் பனிரெண்டுபேர் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பிலும் ஒன்றாகவே பயின்றவர்கள்.பள்ளிக்கூடம்,கல்லூரியென நட்பின் ஆழம் அதீதமானது.எல்லோரும் லேய் மாப்ளேதான்.சாதி கிடையாது,மதம் கிடையாது யாது மயிரு பாகுபாடும் கிடையாது.அப்படியான காலம் போனது போனதுதான் என எண்ணி நினைவுகளில் கொண்டிருந்த காலத்தை நாங்கள் கடந்தவாரம் மீட்டெடுத்தோம்.

ஆமாம் நாங்கள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் கேரளாவின் அழகு மலைப்பிரதேசமான வாகமனில் நாங்கள் நண்பர்கள் ஒன்றிணைந்து 22 பேர் சந்தித்து பழைய காலத்தை மீட்டெடுத்தோம்.காலத்தை மீட்டுக் கொண்டுவருதல் சுலபமானதல்ல அது கடும் பணி கொண்டது.ஆனாலும் நாங்கள் வாட்ஸப் குழுமம் அமைத்து மூன்று நான்கு மாதம் திட்டமிட்டு மெல்ல மெல்ல நகர்ந்து அந்த அன்பின் கூட்டை மீண்டும் சமைத்தோம்.பெகரினிலிருந்து குமார் வந்தான்,தன்ஷானியாவிலிருந்து ஜாஹிர் உற்சாகப்படுத்தினான், மும்பையிலிருந்து செல்வன் மாப்ளே என குரல் கொடுத்தான், திருவனந்தபுரத்திலிருந்து டாக்டர் திமோத்தி மற்றும் சென்னையிலிருந்து ரூப்குமார் மற்றும் வழக்கறிஞராக இருக்கும் ரமேஷ், ஃபாஸ்டராக இருக்கும் ரமேஷும் இணைந்துகொள்ள ரோஹித் பம்பரமாய் சுழல நானும் சந்துருவும் நெல்சனும் ஜஸ்டினும் உற்சாகமூட்ட ஜஸ்டின் பரிமளம் அமீரகத்திலிருந்து புறப்பட்டான்.அந்தோனிசாமியும் வளனும் வந்தார்கள்.நடத்துனராக பணிசெய்யும் தாஸும் ஜித்தாவிலிருந்து வில்ஃப்ரட் இம்மானுவேலும், வால்பாறையிலிருந்து இம்மானுவேலும், தலைமையாசிரியராக பணிசெய்யும் எட்வர்டு ஜென்னரும், பல்கலைக்கழக மரிய இக்னோ ராஜேஸ் என கூடிய கூட்டம் காலத்தை மீட்டெடுத்தது. மீண்டும் வாலிபத்தை அடைவது மட்டுமல்ல காலத்தை அடைவதும் எத்துணை ஆனந்தம் என்பதை உணர்ந்து மகிழ்ந்த தருணம் அழகானது.நண்பர்கள் சொன்னார்கள் மீண்டும் அடுத்த ஆண்டு கூடுவோமென. காதலோடு காலத்தை மீட்டெடுப்பது மிக எழிதான வேலை இல்லை.நாம் அப்பழுக்கற்ற அன்பில் நனையாதவரை மழை நமது ஈரக்குலையை நனைப்பதில்லை. காலத்துக்காக நாமும் நமக்காக காலமும் காத்திருந்தால் பார்க்கலாம். இன்னும் முளைத்து வரும் அன்பை மண்ணில் நடுவோம்.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...