Saturday, 5 August 2023

சிறையில் "திருவாழி" மீரான் மைதீன்


சினிமாவில் சிறையிலிருந்த நாயகன் வெளியே வரும் பெரும்பான்மையான சினிமா காட்சிகளில் மத்தியச் சிறைச்சாலை என பெயர் பொறி்கப்பட்ட பலகையின் கீழ் பெரிய கதவொன்றைக் காட்டுவார்கள்.நான் சினிமாவில் உதவி இயக்குநராக பணி செய்த நாட்களில் அந்த கதவும் ஏவிஎம்மில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.இவ்வளவுதான் முன்பு எனக்குள்  சிறைபற்றி பதிந்திருந்த சித்திரம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் இயக்குநர் அனிஷ் அவர்களின் பகைவனுக்கு அருள்வாய் என்ற படத்தில் நடிகனாக பங்கேற்ற போதுதான் அவர் சிறைபற்றி அபரிமிதமான சித்திரங்களைத் தந்தார்.மெல்ல மெல்ல சிறை என்பது நாம் அறிந்திராத ஒரு தனித்துவமான உலகம் என்பது புரிந்தது.மதில்களுக்கு அப்பால் ஓராயிரம் உண்மைகளோடும் பொய்மைகளோடும் கிடக்கும் விசித்திர உலகமது.இவ்வாறான புரிதல்களின் நீட்சியில்
சென்னை புழல் நடுவண் சிறையில் சிறையில்லவாசிகளின் வள்ளுவர் வாசகர் வட்டம் சாரபில் எனது திருவாழி நாவலை திறனாய்வு செய்த கூட்டம் 3/8/2023 அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஏற்கனவே நாவலை வாசித்திருந்த சி.செல்வம் அவர்கள் எனக்கொரு பெருங்கடிதத்தை எழுதிய நிலையில் மேலும் சில சிறையில்லவாசிகள் நாவலை வாசித்தைத் தொடர்ந்து  சிறையின் உளவியலாளர் மதிப்புக்குரிய பாஸ்கரன் அவர்கள் முன்னெடுப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த வாழ்வு பன்முக அனுபவங்களால் விசாலமடைகின்றன, அவ்வகையில் இவ்வனுபவம் மறக்க இயலாத ஒன்றாகும்.நாம் கற்று வைத்திருப்பதும், கண்டு வைத்திருப்பதும் போலல்ல உண்மை.உண்மை ஓராயிரம் உண்மைகளாக இருக்கிறது.அவர்கள் அடைபட்ட உலகிலிருந்து என் எழுத்தை பேசி கொண்டாடினார்கள்.முந்தைய எதனோடும் ஒப்பிட இயலவில்லை.சிறை நூலகத்தைப் பார்வையிட்டேன், பேசினேன்.வாசிப்பு பழக்கம் அவர்களை அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கிறது.ஒரு சிறையில்லவாசி எனது ஒரு காதல்கதை நூலை கைகளில் சுமந்தபடி புன்னகையாய் கடந்து போனார்.எட்டுபத்து பக்கத்துக்கு நோட்ஸ் எடுத்துக் கொண்டு பதிமூன்று ஆண்டுகளாக அங்கிருக்கும்  சுரேஷ் என்கிற சிறையில்லவாசி தேர்ந்த உரையை நிகழ்த்தினார்.பத்து பதினெட்டுபேர் சுரேஷின் உரைமீது அபிப்ராயங்களைப் பேசினார்கள்.
என் நாவலைப்பற்றிய உரை என்பதில் மகிழ்வாக இருந்தாலும் அந்த உலகம் மனதில் பாரத்தையே நிரப்பியிருந்தது. மனிதர்களின் கடினங்களைக் கேட்கையில் வரும் வேதனையை எதனோடு ஈடுசெய்வது.மனிதர்கள் யாருக்கும் எந்த துயரமும் வராமலிருக்கட்டுமாக. வெளியேறிவரும் போது அடிக்கடி வாங்க சார் என்ற அவர்களின் அன்பும்,கடிதம் எழுதினால் பதில் போடுவீர்களா என்ற கேள்வியிலும் நிறைந்திருந்த ஏக்கத்தை சுமந்து நடந்தேன்.இந்த உலகம் சுழலுகிறது. அவற்றில் பலவற்றையும் நாம் பார்க்க முடிவதில்லை.கடலின் ஒரு மிடருபோல கதைகளின் ஒரு மிடருதான் நம் வசமாகிறது.

No comments:

Post a Comment

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...