Thursday, 22 June 2023

மொய்தீன் கவிதைகள்



          மொய்தீன் கவிதைகள்.  
நான் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இதறியாத சிலர்
என்னைப் பார்க்க
வந்து விட்டுப் போகிறார்கள்.

எனக்காக அவர்களில் நிகழ்ந்த
மாற்றம்
முன்னெப்போதும் அவர்களில் நிகழாத மாற்றமாக இருக்கிறது.

நான் என்னை தேடுவதுபோலவே
அவர்களும் தேடுகிறார்கள்.
நான் பார்வையில் பட்டுவிட்டால் அவர்களின் பதட்டம்
மிகைப் பட்டு விடுகிறது
முகபாவனையில் விசித்திரம்
கூடியும் விடுகிறது

நான் என்னை தேடிக் கொண்டிருப்பதை அவர்கள்
அறியவில்லை
ஆகையால் அவர்கள்
தினந்தோறும் குளிக்கிறார்கள்
அலங்காரம் செய்கிறார்கள்
இப்போது புதிதாக
பல்லும் விளக்குகிறார்கள்.



                        2

உப்பரிகையோடு
இரண்டு ஜன்னலும்
கதவும் கொண்ட
வீடு இருக்கிறது.

முன்னறையிலும்
பின்னறையிலும்
இரண்டு
கழிப்பறைகள் உண்டு.

விருப்பம் போல
உலவலாம்
உண்ணலாம்
உறங்கலாம்.

உச்சி முகட்டில்
ஒளி உமிழும் விளக்கையும்
பறந்த பெருவெளியும்
பார்க்கும்படியாகவே
மாடத்தில் இரண்டு
ஜன்னல்கள் அமைந்திருக்கின்றன.

காற்றின் உள்வருகையும்
அதைப் போல
வெளியேறுதலுக்குமான
நேர்த்தியான வாசல் கொண்ட வடிவமைப்பிலானது வீடு.

வீட்டை சுத்தப்படுத்தி,
அழகு படுத்தி,செப்பனிட்டு ரசித்துக் கடக்கலாம் தினந்தோறும்.

வீட்டின் மீதான
பிடித்தம் உங்களைப் போல
எனக்கும்
அலாதியானதுதான்

வீட்டின் உரிமையாளன் பற்றிய
விபரத்தைக் குறித்து
யாருக்கும் தெளிவில்லை.


நான் வசிக்கும்
வீடு என்னுடையதல்ல.

                       3

மௌனத்தை
இன்னும் அவர்கள்
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேறு வேறு மௌனங்களுடன்
மலைகடந்து
பறந்து கொண்டிருக்கிறது பறவை.


No comments:

Post a Comment

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...