Wednesday, 28 June 2023

"யானை"சிறுகதை - மீரான் மைதீன் 1998


பள்ளிக்கிணத்துக்கு தெக்குப்பக்கம் அந்த வளைந்த தென்னையில் யானையை கட்டிப் போட்டிருந்தார்கள். ஆண் யானை . அதன் தந்தத்தின் முனை மழுக்கப்பட்டிருந்தது. வாலில் நிறைய ரோமங்கள் பிடுங்கப் பட்டிருந்தன.

நேத்திரவே பள்ளிக்கு யானை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் பெரிய கூட்டம் காத்திருந்தது. பனிரெண்டு மணிவரை யானை வரவில்லை; காத்திருந்த கூட்டம் முனங்கிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து போனது. சோன்பப்டி வியாபாரி ஒன்பது மணிக்கு மணியடித்துக்கொண்டே வந்தபோது பாதி பயலுவளும் பள்ளிக்கு முன்னால் சாடி வந்துட்டானுவோ. சோன்பப்டிகாரன் பெட்ரோமாஸ் லைட் வெளிச்சத்தில் மணியடித்தவாறு தெருவுக்குள் வந்தபோது பொம்பளையளு வெல்லாம் யானை போவதாக பரிகாசம் செய்து சிரித்தனர். பிறகு ஒவ்வொரு நிமிடமும் யானைக்கான காத்திருப்போடு நின்றார்கள்.

இரண்டு மகன்களையும் சேர்த்துப்பிடித்துக்கொண்டு நின்ற சேமொம்மதுசாயிப்பு பத்துமணி தாண்டியதும்..

“யானை வருமா வராதாடே” கேட்டபோது யானைக்கு ஏற்பாடு செய்திருந்த நூர்தீன் சொன்னார்.

அந்த பண்ணிக்குப் பொறந்தவன் … எட்டரைக்கெல்லாம் பள்ளியில் கொண்டு வந்து கெட்டிருவோம்னு சொன்னான்.. ”

“பயலுவ கெடக்க உடமாட்டேங்கானுவடே. யானையை காட்டு யானையை காட்டுன்னு சீவன் எடுக்கானுவோ..”

ஒன்றிரெண்டுபேர் சிரித்தார்கள். சிரிப்புக்கிடையே ஒருத்தன் மெதுவாக முனங்கினான்.

“ஒம்ம பொண்டாட்டிய காட்டி கொடுக்கவேண்டியதுதானே”

மேலும் சிரிப்பு சிதறியது.

பள்ளியில் சீரியல் செட்கள் மின்னி மினுங்கின. ஜங்சனில் ஒரு பாடு டியுப்லைட் கட்டியிருந்ததால் உண்டான வெளிச்சம் விழாவுக்கான பொலிவை கூட்டி இருந்தது. தெரு முகப்பில் ஆர்ச்சிப் போட்டு கொடி கட்டியிருந்தார்கள். நாளைக்கு சாயங்காலம் தான் பள்ளி கொடிக்கட்டு என்றாலும் விழாவுக்கான எல்லா பொலிவுகளும் இப்போதே தொடங்கி விட்டன. ஆனாலும் யானை இதுவரை வந்து சேராதது பலரையும் செறப்படுத்திக்கொண்டே இருந்தது. யாரோ ஒருத்தர் சொன்னார்.

“மணிசத்தம் கேக்கது மாதிரி இருக்குல்லா… ”

“போவுமோய் அப்புறம். ஓட்ட காதுவள் கொண்டுட்டு….”

யானையைப்பற்றியே பேச்சுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் அவர்கள் அறிவில் நடந்த யானையைக் குறித்த சம்பவங்களை சொல்லிக் கொண்டே இருந்தனர். கூடுதலும் யானை கலஞ்ச கதைகளையே பேசினார்கள். கொட்டாவி விட்டுக்கொண்டே சிலர் “காலையில் பாக்கலாம்டே…” என அழும் பிள்ளைகளை இழுத்துக் கொண்டுபோனார்கள்.

திடீரென காதர் சொன்னான்.

“யானை விட்டயில் ஒரு விசேசம் இருக்கு தெரியுமா.”

எல்லோரும் காதரைப்பார்த்தார்கள்.

படிப்பு வராத பயலுவளெல்லாம்.. யானை விட்டய சமுட்டுனா படிப்பு வரும்…”

சிலர் பொசுக்கென சிரித்தார்கள்.

“சிரிக்கியரு…அனுபவத்துல உள்ள உண்மையாக்கும்…” மரத் தூணில் சாய்ந்து நின்று காதர் சொன்ன கம்பீரத்தில் புரசான் தீர்மானித்துக்கொண்டார். மூணாங்கிளாசில ரெண்டு தடவகுட்டிபோட்ட மொவன் எப்படியாவது நாளைக்கு யானை விட்டய சமுட்ட வச்சிரனும்.

காலை சுபுஹ் தொழுகைக்கு பள்ளிக்குப்போன மசூதுசாகிப் காம்பவுண்டுக்குள் கால்வைத்ததும் யானையைப்பார்த்துவிட்டார். இருட்டுக்குள் இருட்டாய் நின்ற யானையின் மணிசத்தம் தான் அவருக்கு யானையை அடையாளம் காட்டியது. மதரஸா திண்ணையிலிருந்த லப்பையிடம் சிரித்துக்கொண்டே கேட்டார்..

“எப்போ வந்தது…”

“மூணுமணி இருக்கும்… எனக்க ஒறக்கத்த நாசமாக்கி போட்டு… கிணிங் கிணிங்ன்னு ஒரே சத்தம்.. எழவு ராத்திரி ஒறங்காது போல

எனக்கு ஒரே பேடி.. அத ஒறக்காட்டுடேன்னு ரெண்டு மூணுதடவை சொன்னேன். அந்த பொல்லாமுறுவம். தெங்குல கட்டிட்டு அவன் ஒறங்கிட்டான்….”

மசூது சாகிபு கிணத்துப்பக்கம் போய் பார்த்துவிட்டு சிரிப்பும் சந்தோசமுமாக வந்தார்.

“ஓம்மளதான் இன்னைக்கு யானையில் ஏத்துவானுவோ.”

“நல்ல மொவன்.. நான் ஏறுவனே..அது உலுப்பி கீழே தள்ளிச்சின்னா அந்தால கபர்குழிக்கு கொண்டுபோவ வேண்டியதுதான்…”

பண்டு ஒரு ஊர்ல யானைக்கு மேல உச்சைக்கே லெப்பைய ஏத்தி உட்டுட்டானுவோ…அது எல்லா தெருவுலயும் சுத்தி சுத்தி போச்சி..லெப்பைக்கு ஒருபக்கம் குறுக்குவலி. . தள்ளயத்தின்ன குறுக்குவலி யாவது பொறுத்துகிடலாம்…மனுசனுக்கு மூத்திரம் முடுக்கி நிக்கி… லே எறக்குங்கோ … மோளணும்.லே…எறக்குங்கோ மோளணும்..எவன் கேக்கான். அவரு உடலே… லே..கொர்னாகொடு பிடிச்சவனுவளே மோளணும் எறக்கி உடுங்கலே…ஒரு துக்கயளும் கேக்கல…கடைசியில் சொன்னாரு எறக்கியளா….மோளட்டான்னு…”

மசூதுசாகிபு சிரியோ சிரி என் சிரித்துக்கொண்டிருக்கும் போதே … இன்னும் ஒன்றிரெண்டுபேர் வந்து யானையை சுத்தி சுத்திப்பாத்தார்கள். தென்னை மடலை அப்படியே சுருட்டி உள்ளே தள்ளியது…

“படச்சவனுக்க வேலைய பாத்தியா…தாயோழி யானைக்க தீத்தி…ம்…” மலைப்பாகப் பார்த்துக்கொண்டே யானையின் அழகில் மயங்கி நின்றார்கள்.

விடியும் முன்னால் சின்னபுள்ளையளுவெல்லாம் வந்து குவிந்து விட்டன. கிணத்து மதிலை சுற்றியும் சீலாந்தி மரத்திலுமாக பயலுவ ஏறிக்கிடந்து கும்மாளமடித்தபோது மரியம் பெத்தா பேத்தியை இடுக்கிக்கொண்டு பக்கத்து களத்தில் நின்றாள். காதர்சாகிபு மகனை அழைத்துக் கொண்டு வந்தார். அவன் மூக்கை நோண்டிக்கொண்டே மலங்க மலங்க விழித்தான்.

“விட்டபோட்ட உடனே சமுட்டணும் என்னா..” மகனின் காதில் குசுகுசுத்தபோது மகன் சிணுங்கி கொண்டே கேட்டான்.

“விட்டன்னா என்ன வாப்பா..”

“அதுக்க பீ…”

“ஐய்யே…நாறும்…”

“நாறாதுலே துக்கோ…சமுட்டுனா படிப்பு வரும்…”

“பீ நாறும் வாப்பா…”

“யானை பீ நாறாது மொவனே.”

பயலுக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் காதர்சாகிப் விடுவதாக இல்லை . அவர் யானையைப் பார்த்துக்கொண்டே நின்றார்…அது விட்டைப் போடாமல் காலம் தாழ்த்துவது அவருக்கு எரிச்சலாக இருந்தது.

சேவு ஒரு சீப்பு பழம் கொண்டு வந்து பாகனிடம் கொடுத்தான். பாகன் வாங்கி யானையின் தும்பிக்கையில் வைக்க அது தின்று விட்டு தும்பிக்கையை தூக்கி சேவுவின் தலையை தொட்டது… பயலுவோ துள்ளி ஆடியதும் சின்னபெத்தா பேரன் சத்தம் போட்டான்.

“ஓய் யானை புரோட்டா திங்குமா… எங்க ஊட்ல இன்னைக்கு புரோட்டா…”

பாகனும் சகாக்களும் மெலிதாக சிரித்தனர். அவர்களின் சிரிப்புக்கு பிறகு பயலுவோ நிறைய கேள்விகளை அடுக்கடுக்காய் கேட்டார்கள்.

“ஓய்.. இந்த யானைக்கு மொவன் உண்டா ..”

காதர்சாகிப் இடையில் புகுந்து எரிச்சலாகச் சொன்னார்.

“இது ஆம்புளை யானைலே..இதுக்கு மொவன் கெடயாது…”

“ஒமக்கு மொவன் இருக்காம்புலா..”

காதர்சாகிபு பேச்சடைத்துப் போனார்…பாகனைப் பார்த்து எரிச்சல் பட்டுக்கொண்டு சொன்னார்…

“எல்லாம் தலதெறிச்சதுவோ..”

“ஓய்… இந்த யானைக்கு வாப்பா எங்கே.. ” என கேட்டதைத் தொடர்ந்து இன்னொருவன் “யானைக்கு மத்ததுல கட்டெறும்போ…” என் சத்தம் போட எல்லாவனும் கூடி நின்று சிரித்தார்கள். விதவிதமான சிரிப்பு. நேரம் போகப் போக ஒரு பாடு குழந்தைகள் வந்து விட்டனர். சில குழந்தைகளே குழந்தைகளை சுமந்து நின்று சிரித்தனர். சில வயசாளிகள் பேரன் பேத்திகளை சுமந்து நின்றார்கள். ஒன்றிரெண்டு வாப்பாக்கள் பிள்ளைகளைத் தூக்கி வைத்திருந்தார்கள்.களத்தில் ஐந்தாறு பொம்பளைகள் குழந்தைகளோடு நின்றார்கள். பலூன்காரனின் வியாபாரமும் பொம்மைக் காரனின் வியாபாரமும் பிசுபிசுத்துப்போனது. யானை. யானை – யானை மேலத் தெரு . மாவிளை இன்னும் இன்னும் ஊர்முழுக்க எங்கும் யானை பற்றிதான் பேச்சு . சாயிப்புமார் பள்ளியில் யானை வந்திருக்காம் என்ற செய்தி செட்டியார் தெருவிலும், பிள்ளமார் தெருவிலும் பரவி சிலர் குழந்தையைக் கொண்டு வந்திருந்தார்கள்.

காதர் சாகிபுவின் எதிர்பார்ப்பை யானை பதினொருமணிக்கு விட்டைப்போட்டு பூர்த்தியாக்கியது. நான்கு விட்டை அடுக்கடுக்காய் வந்து விழுந்தது. யானைப் பாகனிடம் மகனை கொடுத்து விட்டையை சமுட்ட வைத்தார். பயல் பயந்து நெழிந்து புழுவாக துடித்து அழுதான். ஆனாலும் பாகன் விட்டையை சமுட்ட வைத்து விட்டான். இனி பயல் படிப்பு வந்து கலெக்டர் ஆகிவிடுவான் என்ற திருப்தியோடு காதர்சாகிபு போனபிறகு முதலாளி அவரது நான்கு வயது மகனை தூக்கிக் கொண்டு நான்கைந்து பேர்களுடன் வந்தார். கையில் காமிரா இருந்தது. ஒருவன் யானைபாகனிடம் ஏதோ பேசினான். பாகனில் ஒருவன் யானை அருகே வந்து மலையாளத்தில் ஏதோ சொன்னதும்.

யானை வலது காலை மடக்கி லேசாக தூக்கியது. பாகன் அதில் சமுட்டி நின்று கொண்டு அதன் கழுத்தில் கிடந்த கயிறை பிடித்துக் கொண்டு ஊஞ்சலில் உயரே போவது போல யானையின் முதுகில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான். இன்னொருவன் முதலாளி மகனை வாங்கி யானையின் மேலே இருந்தவனிடம் கொடுத்துவிட்டு நீங்கிக்கொள்ள முதலாளியின் ஆள் நிறைய போட்டோ எடுத்துக் கொண்டே இருந்தான்.

ஒரு போட்டோவுக்கு யானை தும்பிக்கையை வளைத்துத் தூக்கி ஸலாம் போட்டது. பயலுவோ கோழை வடிய துள்ளி குதித்து கைத்தட்டி சிரித்தனர். யானை தன் சிறிய கண்களால் அவர்களை மட்டும் பார்ப்பதாக கருதி சிரித்துக் கொண்டும் கும்மாளமிட்டுக் கொண்டும் சுத்தி சுத்தி வந்தனர்.

காசிம் பிள்ளையின் மகன் நேராக வீட்டுக்கு ஓடிப்போய் வாப்பாவிடம் அழுதான்…

வாப்பா. என்னைய யானைக்கு முதுவுல ஏத்திவிடு நவுசானுக்கு வாப்பா: – அவன யானைக்கு முதுகுல வச்சி போட்டோ எடுத்தாரு..”

“போல..யானையும் மயிரும்தான்…”

பயல் விடவில்லை…ம்மாவிடம் போய் அழுதான். கண்ணீர் மடமடவென் சாடியது. அவனை பார்க்க சகிக்காமல் ம்மாக்காரி அவனை கூட்டிக்கொண்டு களத்துக்கு வந்தாள். பாகனை கூப்பிட்டு இரண்டு ரூபாய் கொடுத்து யானையின் முதுகில் தனது மகனை உட்கார வைக்கும்படி சொன்னாள். பாகன் மேலே உட்காரவைக்க முடியாது என்ற போது.

“நவுசான் இருந்தாம்புலா” பயல் சொல்லிக்கொண்டே அழுதான். பாகன் பயலை அழைத்துக்கொண்டு போய் யானை அருகே கொண்டு போனதும். அது தும்பிக்கையால் அவன் தலையை தொட்டவுடன் பயல் சிரித்த சிரிப்பு எதோடும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாததாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஒருபாடு பயலுவோ வீட்டில் போய் அடம்பிடித்து அழுது காசு கொண்டு வந்து யானையிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். சுல்தான் பிள்ளை பேரனை யானை அருகே கொண்டு போனதும் அது அவரின் தலையில் கைவைத்துவிட பேரன் அழுதான் மற்றவர்கள் பரிகாசம் செய்து சிரித்தனர்.

பனிரெண்டு மணிக்கு யானை குளிக்க புறப்பட்டது. குளம் நோக்கிப் புறப்பட்ட யானையை பின்தொடர்ந்து ஒருபாடு பயலுவ கூட்டம்.. பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு நிறைய பெரியவர்களும் நடந்தார்கள். தெருவில் யானை நடந்த போது பெண்கள் எல்லாம் வாசலுக்கு வந்து விட்டார்கள்.

“லே..சத்தம் போடாம போங்கலே.. யானை கலஞ்சிரும். ”

தெருவில் மைதிமாமி சொன்னாள். பயலுவளின் சத்தம் குறையவில்லை அவர்களுக்கான உற்சாகம் பீறிட்டுக்கிளம்பி…புதிய சத்தம் புதிய மொழி என அவர்களின் சந்தோசம் ரொம்பவும் உயரத்துக்கு போய் கொண்டே இருந்தது.

“லே.வாப்பா.. மெளனே . என்னமும் தின்னுட்டு போலே”.

ஒருவனை ம்மாகாரி – அழைத்தாள். யானைக்குப் பின்னால் அணிவகுத்த அவனுக்கு அந்த சத்தம் கேட்கவில்லை. பசிக்கவில்லை அந்த பிரமாண்டமான உருவம் அவனுக்கும் மற்றவர்களுக்கும் விளையாட்டு பொம்மையாகிக் கிடந்தது.

குளத்தில் மாடு குளிப்பாட்டும் சப்பாத்து வழியாக யானை இறங்கி தண்ணிரில் படுத்தது…

“லே….மக்கா யானை படுத்துட்டு..” குளத்தை சுற்றிலும் மக்கள் கூட்டம் செட்டியார் தெருவிலிருந்து பெண்கள் நிறைய வந்து நின்றனர்.

தும்பிக்கையில் தண்ணீரை உறிஞ்சி யானை முதுகில் ஊற்றியதும் அஞ்சாறு சின்ன பைய்யன்மார்கள் குளத்தின் இன்னொரு கரையில் கைகளால் தண்ணீரை கோரிகோரி இறைத்தனர். யானையை போல நடப்பதாக கூறி ஒருவன் குனிந்து கொண்டான். அவனை மற்ற பயலுவோ யானைக்குட்டி.. யானைக்குட்டி..என் பரிகாசம் செய்தனர். முஸ்தபாவும் அவன் தோளில் கிடந்த மூன்று வயது மகளும் யானை குளிப்பதை விழிவிலக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தபோது, திடீரென் முஸ்தபாவின் மகள் கேட்டாள்…

“வாப்பா யானையை மீன் கொத்துமா..”

“கொத்தாது…’

“யானை மீன ஒத்த அடிவச்சி கொடுக்குமோ..?”

முஸ்தபா பதில் சொல்லவில்லை. மகள் நாடியைப் பிடித்து இழுத்துகொண்டே மறுபடியும் கேட்டாள். ம்..ம் . என்றபடி பாகன் யானையை தேய்த்து குளிப்பாட்டும் அழகில் மூழ்கி நின்றார். மீண்டும் மகள் முஸ்தபாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தை திருப்பிப் பார்த்துக்கொண்டே

“வாப்பா இந்த யானையை பிடிச்சிதா.”

“யானையை பிடிக்க முடியாது மோளே. அதுபொல்லாதது. ” முகத்தை பயந்தது போல வைத்துக் கொண்டார்.

“அவரு மட்டும் பிடிச்சிவச்சிருக்காருல்லா..” பாகனைக் காட்டிச் சொன்னாள்….முஸ்தபா பதில் சொல்ல முடியாமல் திணறினார். மீண்டும் மீண்டும் யானையைப்பற்றியே கேட்டுக் கொண்டிருந்தாள்.

“பிள்ளே சும்ம இரிங்கோ. கன்னியாமரியில் இருந்து மர யானை வாங்கித்தருவேன்”.

“இதான் வேணும். நம்மோ ஊத்துக்கு கூட்டிட்டு போய் மாவு கொடுக்கலாம்…”

“அது முட்டிபோடும் மக்கா…”

“முட்டாது…”

மகள் அழ ஆரம்பித்தாள்…முஸ்தபா சமாதானப்படுத்திப் பார்த்தார். அவள் அழுகையை நிறுத்தவில்லை..

“யானைக்கு தும்பிக்கையை பாத்தியா. எப்படி இருக்கு. கொள்ளாமலா”

“அத் கூப்புடு வாப்பா.. ” மகள் தொடர்ந்து அழுதாள்.

அவள் அழுகையை நிறுத்தவில்லை. முஸ்தபாவின் எந்த சமாதானமும் மகளிடம் எடுபடவில்லை. யானை குளித்து கரையேறும் முன்னால் முஸ்தபா அழும்மகளோடு வீட்டுக்கு வந்துவிட்டார். வாசலில் கால் வைத்ததும் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு மனைவி ஓடி வந்து.

“எதுக்கு பிள்ளே அழுது.”

“ஆ. உன் மொவளுக்கு யானை வேணுமாம். எங்கிட்ட பிடிச்சி கேக்குதா. என்னைய குளோஸ்பண்ண பிளான் போட்டுட்டா…”

அவள் சிரித்துக்கொண்டே பிள்ளையை வாங்கினாள். ம்மாவிடம் போயிருந்தும் அவள் அழுதாள்… அழுகையினூடே ஆனை ஆனை என் சத்தம் பிசிறில்லாமல் வந்து கொண்டிருந்தது. ஒரு வகையிலும் சமாதானமடையாமல் யானையின் நினைவுகளோடு அழுதுகொண்டே தூங்கினாள்

நாலரை மணிக்கு யானை கம்பீரமாக புறப்படத்தயாரானது. யானையின் முகப்பட்டாவில் பழய பொலிவு இல்லை. முகப்பட்டா ஒரு காலத்தில் தங்கத்தில் இருந்ததாக சொல்லிக் கொண்டார்கள். யானையின் முதுகில் பட்டுத்துணி விரிக்கப்பட்டிருந்தது. லப்பையை எவ்வளவோ வற்புறுத்தியும் கொடியோடு அவர் யானையில் ஏறி உட்கார தயாராக இல்லை. அவர் கொஞ்சம் தைரியமடைந்து யானையில் ஏறிவிடுவார் என்ற நிலை வந்த போது எவனோ ஒருவன் பண்டு ஒரு ஊரில் யானை கலஞ்சி யானையின் முதுகில் இருந்தவனை யானை இழுத்துப்போட்டு சமுட்டி கொன்ன கதையை கிசுகிசுத்து விட்டான்.

“நான் புள்ள குட்டிகாரன்…என்ன விடுங்கோ….” ஒரேயடியாக மறுத்துவிட்டார். பலரும் யானையில் இருக்க தயங்கினார்கள். ஒரு வழியாக கடைசியில் சாலும், அத்துலும் யானையில் உட்கார சம்மாதித்தார்கள். புதிதாக தொப்பியெல்லாம் போட்டுக் கொண்டு வந்து இருவரும் பயந்து நடுங்கி ஏறி உட்கார்ந்து கொடியை பிடித்துக் கொள்ள யானை மெல்ல மெல்ல எழுந்து நடந்தது. எல்லா தெருவிலும் யானை போகவேண்டும். எல்லா வீட்டுக்கு முன்னாலும் யானை நிற்க வேண்டும். இல்லையென்றால் அதுவேறு பிரச்சனையாகிவிடும். யானை விட்டையச்சமுட்டினால் படிப்புவரும் என்ற செய்தி பரவலாகிவிட்டதால் பலரும் யானைவிட்டையை எதிர்பார்த்து பின்னால் நடந்தனர். யானை விட்டையை சமூட்டினால் காலில் செரங்கு குணமாகும் என வைத்தியர் சொன்னதை நம்பி ஜின்பிள்ளை சிரங்கு காலையும் வைத்துக்கொண்டு இழுத்து இழுத்து யானை பின்னால் நடந்தார். கும்மாளமாக துள்ளி குதித்து ஓடிய ஒரு சின்னப்பையன் ஜின்பிள்ளையின் சிரங்கு காலை சமுட்டிவிட அவர் வலியில் துடித்து அறுத்து கிழித்துக்கொண்டே யானை விட்டயை சமுட்டி விடும் ஆவேசத்தில் பின்தொடர்ந்து போனார்.

தக்கலை சாயிப்பு வீட்டு முன்னால் யானை விட்டை போட்டது, முண்டியடித்துக் கொண்டு பலரும் சமுட்ட ஜின்பிள்ளை சிரங்கு காலை உள்ளே விட்ட மறு நிமிடம் அலறினார்.

“யாரப்பே. என் கால சமுட்டி முறிக்கானுவளே – எங்காலு காலு ஹாவாபோவானுவளே… எங்கால உடுங்கலே..”

ஜின்பிள்ளையை இழுத்து தக்கலை சாயிப்பு வீட்டு நடையில் உட்கார வைத்தனர்.

“ஒமக்கு இது அவசியமா ஓய். இந்த கால வச்சிட்டு..”

“அந்த வைத்தியன் தாயழி சொன்னாம்னு வந்துட்டேம்டே என் கால மண்ணாக்கிட்டானுவோ… காந்தலு பொறுக்க முடியலியே ரப்பே…”

ஜின் பிள்ளையின் சிரங்கு காலில் ரத்தம் வழிந்து கொண்டிருந்த போது தெருவிலிருந்து யானை மேலத்தெருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தது. மேலத்தெருவின் தொடக்கத்தில் இருந்த சிவன்பிள்ளை வீட்டில் யானைக்கு ஒரு சிப்பு பழம் கொடுத்தார்கள். யானை தின்றுவிட்டு தும்பிக்கையை தூக்கி சிவன் பிள்ளையின் தலையில் வைத்து எடுத்தது. அவர் யானையை கும்பிட்டார். பதிலுக்கு யானையும் தும்பிக்கையை தூக்கி ஸலாம் போட்டது.

எல்லா தெருவும் சுத்தி விட்டு ஆறரைமணிக்கு யானை மீண்டும் பள்ளிக்குள் வந்ததும்… கொடியேற்றினார்கள். நேர்ச்சை பழத்தை யானை நிறைய தின்றது. கணக்கு முடித்துக் கொண்டு பாகன்கள் எட்டு மணிக்கெல்லாம் யானையோடு கிளம்பினார்கள். யானை எல்லோரிடமும் விடைபெற்றுக் கிளம்பியது. கிளம்பும் முன்னால் பள்ளிக்கு குனிந்து ஸலாம் போட்டது.

“லே.. . மக்கா நம்ம யானை போவுதுலோய்… ”

பயலுவோ எல்லாரும் யானைக்கு பின்னால் நடந்தார்கள். சிலரை சில வாப்பமார்கள் அடித்து இழுத்துப்போனார்கள். ஒருபாடு சிறுவர்கள் வாப்பாமார்களுக்கு தெரியாமல் யானைக்குப் பின்னால் ஓடினார்கள். யானை வேகமாக நடந்தது. அம்மங்குண்டு தாண்டியதும் பாதிசிறுவர்கள் திரும்பிவந்தனர். இன்னும் கொஞ்சம் பேர் ஊர் எல்கைவரை போனார்கள் யானை அவர்களை விட்டு வேகவேகமாக நடந்து போனது.

ஊர் எல்கையில் நின்று அவர்கள் கத்தினார்கள் “ஓய் அடுத்தவருசம் எங்க யானையை கொண்டு வாரும்..”

யானை இருட்டுக்குள் இருட்டாய் மறைந்து கொண்டே போகப்போக நீண்டநேரம் மணிச்சத்தம் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு வருசமும் கொடிகட்டு வருகிறது…ஆனால் யானை மட்டும் வரவே இல்லை.

No comments:

Post a Comment

"இதுவும் ஞான உரையாடல்தான்" எம்.மீரான் மைதீன் நண்பர்களுடன்.

எம்.மீரான் மைதீன் சில வருடங்களுக்கு முந்தைய எனது முகநூல் பதிவிலுள்ள ஒரு உரையாடலைத் தொகுத்திருக்கிறேன். ஓஷோவை கொஞ்சம் ஆழ்ந்து வ...