Monday 19 June 2023

கடவுளின் கடைசி முத்தத்திலிருந்து ஒரு உரையாடல்

    கடவுளின் கடைசி முத்தத்திலிருந்து 
                    ஒரு உரையாடல்
                  எம்.மீரான் மைதீன்


காதலின் சொற்கள் தூய்மையானவை அதற்கு ஒருபோதும் மாறு செய்யலாகாது.
அலிஷார் ஜம்ரூத்தின் சொற்களுக்கு ஒரேயொரு முறை மாறு செய்கிறான் பிறகு அவனை பிரிவும் துயரமும் நீண்டகாலம் துரத்துகிறது.ஆனாலும் அவர்கள் எல்லா துயரங்களையும் ஒவ்வொன்றாக துரத்தியடித்து காலத்தால் மீண்டும் அற்புதத்தில் அலிஷாரும் ஜம்ரூத்தும் நுழைந்துவிடும்போது மனம் அவ்வளவு சந்தோசம் கொள்கிறது.
ஒரு நீதிக்காக 
ஒரு உரிமைக்காக 
ஒரு வாய்ப்புக்காக
ஒரு தேவைக்காக
காத்திருப்பவர்களே
பொறுமையிழக்கிறார்கள்
அவ்வளவு விரைவாய் நம்பிக்கையிழக்கிறார்கள். 

அன்புக்காக
காத்திருப்பவர் 
எவரும் 
களைத்துத் திரும்புவதே 
இல்லை 

கடவுளின் கடைசி முத்தம் கவிதை தொகுப்பிலுள்ள ரிஸ்கா முக்தாரின் இந்த கவிதையை வாசித்து வரும்போது அலிஷார் ஒருபோதும் களைத்துத் திரும்பவே இல்லை.அவன் ஜம்ரூத்தை களைப்பற்றவனாய் கண்டடைகிறான். ஒரு கவிதை எங்கு கொண்டு போகிறது பாருங்கள் என்னை ஆயிரத்தியோரு இரவுகளிலுள்ள அலிஷாரின் கதைக்கு கொண்டு போயிருக்கிறது. 

கடவுளின் கடைசி முத்தம்,கஸல் பதிப்பகம் வெளியீடாக அருமை நண்பர் சப்ரி அவர்கள் எனக்கு அன்பளிப்பு செய்த இந்த கையடக்க கவிதைநூலின் தலைப்பு என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்த நூலின் முகப்பு அட்டையும்கூட ஈர்புடைதாக இருந்தது. இரண்டு வர்ணங்கள்தான் ஆனால் ஏதோ ஒன்றையோ பலதையோ  சொல்கிறது.வைக்கம் முகமது பஷீரின் சிறுகதைகளில் ஒன்றான மயக்கமுரச் செய்யும் "முதல் முத்தம்" கவித்துவமான ஒரு கதை.அந்த கதையில் அந்த கதைஞன் சொல்லுவான் கதைகள் இல்லாமல் முத்தம் தர முடியுமா? முத்தம் இதயத்தின் கண்ணாடி என்றால் அந்த முத்தத்தின் பாவனைகள் எப்படியிருக்கும்.இங்கு /ம்ம்ம் கள் என்பன மனம் கசிந்து மண்டியிடுமொருவனின் கரம் தீண்டும் கடவுளின் கடைசி முத்தம்/முதல் முத்தத்தில் மறைந்து கிடந்த கவித்துவமான வரிகளைப்போல ரிஸ்கா முக்தாரின் கடவுளின் கடைசி முத்தம் கவிதைக்குள் மறைந்து கிடக்கும் சில  கதைத்துவமான கவிதைகளைக்  கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
/நினைத்த நொடியில் 
நினைத்தவாறு 
இதிலிருந்து வெளியேறிச் செல்லலாம் 

இருந்தும் 
வாசல் தூனை இறுகப்பிடித்துக்கொண்டு
வெளியேற மாட்டேனென அடம்பிடித்து
அழுமொன்றுக்குத்தான் 
இங்கே 
பேரன்பென்று
பெயர்/
எது எப்படியானாலும் இந்த கவிதைகளுக்குள்தான் எவ்வளவு எவ்வளவு  பெருககெடுக்கும் அன்பின் படைப்பு மனம் இருக்கிறது. 

இலங்கை மண்ணில் இஸ்லாம் பின்புலத்திலுள்ள அனேக கவிஞர்கள் எனக்கு மிக மிக ஆச்சரியமாகவே இருக்கிறார்கள்.இவ்வாண்டு மின்ஹாவினுடையதும் மிஸ்ராவினுடையதுமாக இன்னும் இரண்டு கவிதை தொகுப்புகள் வாசிக்க இருக்கின்றன.இந்தியச் சூழலில் தமிழ் மண்ணில் இஸ்லாம் பின்புலத்திலிருந்து கவிதை எழுத வரக்கூடியவர்கள் ரொம்பவும் குறைவு அதிலும் பெண் என்று கவிஞர் சல்மா தவிர்த்து சிலர் இருக்ககூடும் அவ்வளவுதான்.இரண்டாயிரத்துக்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றம் ஒரு பக்கத்தில் பார்வைகளை எல்கைகள் தாண்டி பிரகாசப் படுத்தியிருப்பதாக தோன்றுகிறது.ஒரு அர்த்தத்தில்  கவிதையைக் குறித்து சில மாறுபட்ட அபிப்ராயங்களை இஸ்லாமிய கருத்தியலாளர்கள் முன்வைக்கும் பழைய சூழல் இப்போது அத்துனை வீரியமாக இருப்பதாகவும் தெரியவில்லை.இது நல்லவிடயமும் கூட.எட்டாம் நூற்றாண்டின் கடைசியில் பாரசீக வெளியில் ஒரு,றாபிய பர்வாரி வருகிறார். அவரின் காதல் கவிதைகள் தவறான புரிதலின் பொருட்டு அவரும் அவரின் கவிதைகளும் அழிக்கப்பட்டதாக ஒரு குறிப்புக் கிடைக்கிறது.சமகால இலங்கை கவிதைகளால் பெருகுகிறது. அவர்களின் கவிதைமொழி, கவிதைபுனையும் இலாவகம் நேர்த்தியென செழித்து வளர்கிறதை அவதானிக்க முடிகிறது.நிறைய பெயர்களை இங்கு வரிசைப்படுத்தலாம்.அது கொழும்பு கடற்கரையில் பறக்கவிடும் பட்டத்தின் கயிறுபோல மிக நீளமானதும் ரசனையானதுமாக இருக்கும்.
ரிஸ்கா முக்தாரின் உனக்கு நேசிக்கத் தெரியவில்லையென துவங்கும் ஒரு முகநூல் கவிதையை பெண்கள் பலரும் எடுத்தாட்கொள்வதும் அதன் உண்மைத்தன்மைக்கு சான்று வழங்குவதுமாக ஒரு ரகசிய உலகம் இயங்குவதையும் அறிய முடிகிறது. காதலின் பொருட்டு இயல்பிலேயே படைப்பு மனம் பெற்ற பெண்,ஆணை ஒரு அழகான சட்டகத்துக்குள் வடிவமைக்க விரும்புகிறாள். உண்மையில் அவளால் வடிவமைக்கவும் இயலும்.அவள் அன்புக்கு முன்னால் தன்னை ஒப்புக்கொடுக்க அவன் தயாராக இருந்தால் போதுமானது.மாறாக அவனிடம் போதமைகள் வெளிப்படும் போதுதான் அவள் உனக்கு நேசிக்கத் தெரியவில்லை என்கிறாள். உண்மையில் ஒரு பெண்னைப் தொடர்ச்சியாக நேசிப்பதில் ஆண்கள் தோற்றுப்போய் விடுகின்றனர். அவனுக்கு அன்பின் முன்னால் ஒப்புக்கொடுப்பதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.நான் ஆரம்பத்தில் சொன்ன அலிஷார் ஜம்ரூத் கதையில்கூட கதை துவங்கும்போதே ஜம்ரூத் அலிஷாரிடம் ஒரு விசயத்தைக் குறிப்பிட்டு இதை மட்டும் நீ செய்யாதே அதனை செய்தால் நாம் பிரிந்துவிடுவோம் பின்னர் நாம் இந்த உலகில் பிரிந்து பெருந்துயரங்களில் ஆகிவிடுவோம் என்பதை முதலிலேயே எச்சரிக்கிறாள். ஆனால் வாழ்வின் போக்கில் ஜம்ரூத் எச்சரித்த விசயம் அலிஷாருக்கு வந்து சேர்ந்துவிடுகிறது.பிறகு அவர்கள் கடுந்துயரங்களை அனுபவிக்கிறார்கள்.இரண்டு தனித்தனி அன்பு என்பதும் சிக்கலானதுதான் ஒரு அன்பில் கரைவதுதான் உத்தமமானது. எப்போதும் அவர்கள் ஒருவர் மற்றொருவரிடத்தில் இருப்பதுதான் அன்பின் படித்தரமாக இருக்கிறது. வாழ்வில் இந்த நிலைப்பாட்டுக்கு எதிரான எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் இருக்கின்றன தர்க்கம் இருக்கின்றது ஆனால் காதலில் இவைகள் செல்லுபடியாகாது.ஒரு மகாராணி அவள் விருப்பத்துக்கு உனதுதலையைக் கொய்வாள் பிறகு அவளது விருப்பத்துக்கு உனது தலையைப் புதுப்பிப்பாள்.உன் சித்தம் என் பாக்கியம் என்பதுதான் காதலின் மைய்யச் சரடு. 

ரிஸ்கா முக்தாரின் கவிதை உலகம் வெகுஜன ஈர்ப்புக்குரியது.அன்பை முதன்மையாக கொண்டது.அன்பின் நிமித்தமாக இயங்குகிறது, தேங்குகிறது,தேம்புகிறது.அழுது ஓய்ந்த இரவை மடித்து கைப்பையில் மறைத்தபடி விடியலை எதிர் கொள்வதாக இருந்தாலும் அது பிற்பாடு எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதற்கான நெடுங்குறிப்புகளை கருனையோடு பட்டியலிடுகிறது.அழுது பழக்கமில்லாத பார்ஃபி டோல்களுக்கு எல்லாவற்றுக்கும் புன்னகைதான். அதனால்தான் யாரேனும் கொஞ்சம் தேற்றுங்களேன் என்னை எனக் கேட்கமுடிகிறது.
      நீ,உன்,நான் என நிகழும் இந்த கவிதை மண்டலத்தின் விளையாட்டுக்களமாக அன்பே நிறைந்திருக்கிறது.அன்புக்காக காத்திருப்பவர்கள் எவரும் களைத்துத் திரும்புவதே இல்லை என வரைய முடிகிறது.ரிஸ்காவின் இந்த வரைதல் ஒருவேளை எங்கேனும் போலியாக தன்னை வெளிக்காட்டும் மாயப்புள்ளிகள் தென்படும் எனத்தேடினால் உறுதியாக நாம் தோற்றுப் போய்விடுவோம். 

உலகின் பிரச்சனைகளெல்லாம் உங்களிடமே தொடங்குகிறது.எனவே உங்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றுங்கள் என்பார் மௌலான ஜலாலுத்தீன் ரூமி.ரிஸ்காவின் கவிதை வரிகளைப் பாருங்கள் /
இதோ
பேரன்பின் பைத்திய இரவுகளின் 
மேல் 
பெய்து கொண்டிருக்கிறதொரு
பேய்மழை 

செய்வதறியாது 
வெறுமனே
உடல் நடுங்க வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 
நான் 

இந்த கவிதைகளின் பரப்பெங்கும் இப்படியான விளையாட்டொன்று நடந்தேறுகிறது.என்னை நானே நேசித்துக்கொள்ள தினமும் மூன்று காரணங்களைத் தேடுவதிலாகட்டும், என்னை நானே அணைத்துக்கொண்டு தன்னாலே உறங்கிப்போனேன் என தன்வயமாகும் அல்லது தன்வயத்துகுள்ளிருந்து நிகழும் தேடுதலின் மௌனம் நமக்குள் அசாத்தியமான காட்சிகளைக் கொண்டுவந்து நிரப்புகிறது.கடவுளின் கடைசி முத்தத்தை நாம் இவ்வாறு பேசிக்கொண்டே போகலாம் என்றாலும் இவரின் கவிதைகளை பின்னோக்கி வாசிக்கையில் கவிதைகள் இன்னொரு கட்டுமானத்துக்குள் இருப்பதும் தெரியவருகிறது.பெண்ணின் மனவோட்டமாக மைய்யம்  கொள்ளும் மனஅழுத்தங்கள் ரகசியமாகவும் பரகசியமாகவும் கவிதைகளாகி இருக்கின்றன.மேலோட்டமாகப் பார்த்தால் நிறைய காதல்கவிதைகள் போலத் தோற்றமிருந்தாலும் அதற்குள் ஊடுருவும் ஒரு மறுமுனையாக உயிர் பற்றிப் படருமொரு பெருங்காதலை நோக்கிய பயணமும் தெரிகிறது. கண்கண்டதிலிருந்த  கண்காணாத வெளியில் கரைவதை நோக்கி தாகிப்பதும் வெளிப்படுகிறது. இதனடிப்படையில் சூஃபித்துவத்தின் அடிப்படையான ஒரு மென் புள்ளியிலும் கவிதை உருமாறும் தன்மையுடையதாக வளர்கிறது.இத்தொகுப்பிலுள்ள ஐம்பத்தி ஏழு கவிதைகளில் சிலவற்றைத் தவிர்த்து  இதன் வார்ப்பில் ஒரே தடத்திலுள்ள பயணம்தான்.தன்னை அறிந்தவனே தன் தலைவனை அறிவான் என்பது ஞானமுறை.இந்தக் கவிதைகள்  ஒரு ஞானமுறை பயணமாகவும் பயணிக்கிறது.

ஒரு தேர்ந்த திருடனைப்போலவே 
நானும் 
இங்கிருந்து 
கண்காணாமல் எங்கேனும் மறைந்திட வேண்டும் 
எனக்கு 

இதுவரை
வாழா
என் பெருவாழ்வை
இனி நான் வாழந்திடவே


ரிஸ்கா முக்தாரின் கவிதை உலகம் ரசனைக் குறைவின்றி நிறைகிறது.தன்னைத்தானே சமாதானிப்பித்துக் கொள்ளும் அசாத்திய கவிதை மனம். தன்னைத்தானே நேசித்துக் கொள்ள தினமும் மூன்று காரணங்களைத் தேடிக் கொள்ளும் கவிதை ஒரு யாசகனுக்கு உணவளிக்கிறது,முறிந்துபோன பழைய உறவொன்றை புதுப்பிக்கிறது,நோய்மையிலான ஒருவரை நலம் விசாரிக்கிறது. கவிதையின் தனித்துவமான அன்பு பேரன்பாக மலருகிறதுஅன்பின் நிமித்தமான நூறு தருணங்களையேனும் நினைவில் கொள்ளத்தக்க வகையில் நகர்த்துகிறது.  இதன் வரிகள் அன்பின் மலர்களைக் கொய்து தருகிறது.


கடவுளின் கடைசி முத்தம்
ரிஸ்கா முக்தார்.


No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...