Wednesday 5 July 2023

என்னுள் ஊர்ந்த அந்த மூன்று கதை- ஹனிஸ் முகம்மத்



என்னுள் ஊர்ந்த அந்த மூன்று கதை
********

பலாமரம் நிற்கும் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான் என்ற சிறுகதை தொகுப்பிலிருந்து.
சிறுகதையாளர் மீரான் மைதீன் அவர்களின் படைப்பான “பலாமரம் நிற்கும் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறான்” என்ற சிறுகதை தொகுப்பில் ஏழு சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. அச் சிறுகதைகளில் உள்ளம் கவர்ந்த, என்னுள் வியப்பை ஊற்றிய, என் மனதினுள் ஆச்சீரிய தீயை எரியவிட்ட இயற்கையோடும், ஜடப்பொருட்களோடும் அந்த மூன்று சிறுகதைகள் என்னை மிகவும் ஆழமாக கவர்ந்தும் பாதித்துமிருந்தது. இயற்கையும், சமூகத்தையும் நேசிக்கும் ஒரு மனிதனால்தான் இப்படியெல்லாம் எழுதமுடியும். அதுவும் ஒரு எழுத்தாளன்தான் இப்படி எந்த தங்கு தடையுமின்றி கற்பனை உலகத்தை நிஜத்தில் கொண்டு வர முடியும். அது கற்பனையென்றும் கூறமுடியாது, ஒரு சராசரி மனிதன் சாதாரணமாக நினைத்துக் கொண்டு கடந்து போகும் அசாதாரண சூழல் அது. ஆசார அசாதாரண பொருள் அது. இந்த வித்தியாசமான பார்வை தான் ஒரு. சாதா மனிதனையும் ஒரு எழுத்தாளனயையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
“வீடு என்பது வெறும் மண்ணும் கல்லும் மரத்தாலுமானது அல்ல, ரத்தமும் சதையும் நரம்புகளாலுமான துடிப்புள்ள ஒரு சரீரத்தை போன்றது, வீடுகளோடு நம்மால் பேச இயலும் ஆனால் துரதிருஷ்டவசமாக யாரும் பேசுவதில்லை, நம்மோடு பேசாத நொம்பலம் வீடுகளுக்கு உண்டு”
புத்தகத்தின் முதல் கதையான பலாமரம் நிற்கும் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறான் என்ற முதல் கதை எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வை தந்தது, நாம் வசிக்கும் இடங்களை, தனது சுற்றுச்சூழலை, தன்னோடு சேர்ந்து வாழும் ஒட்டுண்ணி உயிர்களை எப்படி ஒருவனால் இந்த அளவு நேசிக்க முடியும். பணத்தை செலவழித்து கல்லையும் மண்ணையும் கொட்டி சீமெந்தினால் மெழுகு வார்க்கப்பட்ட அந்த வீட்டிற்கு உயிர் உள்ளது என்று எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்ததுண்டா? நம்மைச் சுற்றியுள்ள எத்தனையோ ஜடப்பொருட்கள் நம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றது, ஆனால் நாம் அவைகளை செவிமடுக்க தயாராக வில்லை என்பதை இக்கதை உணர்த்துகின்றது. நமது வாழ்நாளில் சிந்திய மொத்த வியர்வை துளிகளால் உருவான அந்த வீடு நம்மை நேசிக்கின்றது, நம்மை அரவணைக்கின்றது, நம்மோடு பேச எத்தனிக்கிறது, நம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றது, ஆனால் நாமோ அந்த வாழ்நாள் முழுவதும் சிந்திய அந்த வேர்வைத்துளிகள் காய்ந்தவுடன், நாம் அதை கவனிப்பாரற்று விட்டுவிடுகிறோம். அந்த வீட்டிற்கும் ஒரு மனது இருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் கடந்து போகிறோம்.
“அவன் தன்னிடமிருந்த கருப்புக் காரை விற்பதைத் தவிர வேறு வழியற்று இருந்தான், அதில் ஒரு துளியும் அவனுக்கு விருப்பமில்லை, அவனை பார்த்துக் கொண்டே மனைவி சொன்னாள், ‘எல்லாவற்றையும் உயிருள்ளதாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அது பைத்தினக்காரதனமாக போய்விடும்’
பைத்தியக்காரத்தனங்களும் சிலநேரங்களில் அழகாகத்தான் இருக்கின்றது”.
மற்றுமொரு கதையான தங்க முலாம் பூசப்பட்ட இரண்டு சிறகுகள், இக்கதையில் வரும் குறிப்பிட்ட பகுதியானது நமது வாழ்க்கையில் நாம் என்றும் தேடி நிற்கும் ஒன்றை உணர்த்தி நிற்கின்றது. நமது ஆழ்மனம் இன்பத்திலோ, துன்பத்திலோ நாம் எப்போதும் ஒரு துணையைத் தேடிக் கொண்டிருக்கும், அது நமக்கு பக்கபலமாக இருக்கும் என்றால் நாம் கடந்து வந்த எல்லாவற்றையும் காற்றில் கரைந்து போகும் ஒரு உணர்வை நாம் உணர்ந்து கொள்வோம்.
“நீ நன்றாக ம்… கொட்டுகிறாய். இந்த ம்.. உரையாடலில் முக்கியமானது. நல்ல ‘ம்’ கள் இதயத்திலிருந்து எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுவிடும். நான் இந்த ம்… களுக்காய் ஏங்கிய நாட்கள் உண்டு”.
“…ம்…”
“உன்னுடைய ‘ம்’ என்னை பேசத்தூண்டுகிறது, மற்றவர்களின் ‘ம்’ மைப்போல் இல்லாமல் உன் ‘ம்’ ஈர்ப்புடையதாக இருக்கிறது. ஆகவே நான் பேச வேண்டாமென நினைக்கிறேன்”.
(தங்க முலாம் பூசப்பட்ட சிறகுகள் சிறுகதையிலிருந்து )
எவ்வளவு நிதர்சனமான உண்மைகள் இந்த வசனங்கள். நம்மை பிரச்சினைகளும், சிக்கல்களும் பூதங்களாகவும், சாத்தான்களாகவும் சூழப்பட்டு, சூறாவளியாக சுழன்று அடிக்கும்போது நாம் தனிமையில் வேர்கள் வாடிக்கொண்டிருக்கும் போது ஒரு துளி நீரின் ஏக்கத்துக்காக, நமது வலியின் ரணங்களை விதைப்பதற்கு ஒரு வகையான ஈரமுள்ள ஒரு மனித மனங்களை நாம் தேடுவோம். அந்த மனம் ஒரு தரிசு நிலமாக இருந்தாலும் கூட, நமது பபிரச்சினைகளை கேட்டு ‘ம்’ என்று பொடுபோக்காக கொட்டு போடுவதாக இருந்தாலும் பரவாயில்லை, நமது வலிகளும் சுமைகளும் ஒரு கணம் பஞ்சாக மாறி காற்றில் மிதந்து போவது போல் நமக்கு தோன்றும். நம்மினுள் சிக்கல்களின் வார்த்தைகள் சிக்கி தவிக்கும்போது தான், அந்த ‘ம்’ என்ற ஒற்றைச் சொல்லின் தேடலையும், அதன் ஏக்கத்தையும் நாம் அறிந்து கொள்வோம், அந்த ‘ம்…’ என்ற சொல் எங்கேயும் இருந்து கேட்கலாம், நம் துணைகளிடமிருந்து, நமது நண்பர்களிடமிருந்து, தமது உற்றார்களிடமிருந்து, ஏன் ஒரு தெரு செடி, கொடி மரங்களிடமிருந்து அல்லது ஒரு யாசகனமிடமிருந்தாவது அந்த ‘ம்…’ என்ற சொல் நமக்கு ஒரு வரத்தை தரலாம்.
மூன்றாவது கதையான “மாமரத்தின் அப்பா அம்மா மற்றும் வளர்ப்பு தந்தையின் கதை” தலைப்பே கதையை வாசிக்கும்போது ஒரு கருவை என்னுள் ஊற்றினாலும், கதையின் நுழைந்த பிறகுதான் எனது எண்ணப்பாடு பிழையானது என்று உணர்த்தியது. ஒரு மனிதனின் தாய், தந்தை மற்றும் வளர்ப்பு தந்தையானாலும், அது ஒரு மனிதனாக தானே இருக்கும். ஒரு மரத்தின் தாய் தந்தையும் மற்றும் வளர்ப்புத் தந்தையும் ஒரு மரமாக தானே இருக்க வேண்டும். ஆனால் இங்கே, ஒரு மரம் இரு மனிதர்களால் பிரசவிக்கப்பட்டு ஒரு தந்தையினால் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. தன்னால் பிரசவிக்கப்பட்ட அந்தக் குழந்தை. எப்படி தன் பெற்றோர்களுக்கு இசைவாக்கம் அடையுமோ! அதே மாதிரியான ஒரு தோற்றப்பாடு இந்த மரம் அதன் பெற்றோருக்கு கொடுக்கிறது.
நாம் எல்லோரும் இயற்கையை நேசிக்க தொடங்கி இருந்தால், நாம் இந்த இயந்திர வாழ்க்கைக்கு அகப்பட்டு, சிக்கிச் சீரழிந்து இருக்க மாட்டோம் என்று என்னுள் உணர்த்தியது இந்தக் கதை. வேடிக்கை என்னவென்றால், நாம் நமக்கு மட்டுமே உயிர் உள்ளது என்ற எண்ணப்பாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
“இரண்டுநாள் பிறையை தரையில் நட்டு வைத்தது போல பேரழகு முறையாக மெல்ல எழுந்து வந்து இருந்தது. “உன் பேர அதுட்ட சொல்லு.. அதுக்கு கேட்கும் என்றார் மாடம்பி, கேட்குமா என்றேன் மறுபடியும். கேட்கும் அது ஒரு உயிர் என்றார். என் பெயரை மெல்லச் சொன்ன போது முளை மண் புழுவைப்போல மெலிதாக அசைந்தது.
மாமரம் ஒரு அடி உயரத்திற்கு வந்துவிட்டது. வேண்டுமென்றே தொண்டயை இறுக்கி குரல் மாற்றி என் பெயரை மெதுவாகச் சொன்னேன். செடி மெல்ல அசைந்தது. மாடம்பி பின்னால் நின்று கவனித்தபடி “எப்படி மாற்றிச் சொன்னாலும் உம் பேருதான் அதுக்கு தனியா தெரியுதுடே”. அவளின் பெயரையும் சொன்னேன். செடி அவ்வாறே செல்லமாய் அசைந்தது. மாடம்பி சிரித்தபடி. கொள்ளாம்புடே நீயும் அவளும் இந்த மாமரத்துக்கு அப்பனும் அம்மையுமாக்கும் அதான்”. நான் மாடம்பியிகம் கேட்டேன் “அப்போ நீரு”. நான் வளர்ப்புத் தந்தை.

No comments:

Post a Comment

'அறிமுகமான நிலத்தின் இன்னொரு சாயல்'

                  அறிமுகமான நிலத்தின்                    இன்னொரு சாயல்                            எம்.மீரான் மைதீன்          ...