Wednesday, 26 February 2025

வளர்பிறை

மீரான் மைதீன்



பயணத்திலேயே எழுத்தாளர் ஜமீலா ராசிக்கின் "அது ஓரு பிறைக்காலம்" வாசித்தேன்.நினைவுகளை மீட்டித்தரும் அனுபவப்பூர்வமான இவ்வகை எழுத்துக்கள் ஒப்பனையற்ற அழகு கொண்டவைகள்.

தலைப்பிறை தலைநோன்பு போல இது ஜமீலா ராசிக்கின் தலைநூல்.தன் வாழ்வின் நினைவுப் பத்தாயத்திலிருந்து குப்பியில் நீர் நிறைக்க இரு கைகொண்டு அள்ளுவது போல சிரத்தையோடு கொஞ்சம் அள்ளி எடுத்திருக்கிறார். இன்னும் நமக்குச் சொல்வதற்கு நிறைய இருப்பிலிருக்கிறது. மணக்க மணக்க ஆட்டுக்கறியாக்கி, முருங்கைக்கீரைப் பொரியல் செய்து,முட்டை அவித்து தலை நோன்பை வரவேற்பதைப் போல நாமும் மனமெங்கும் ஊர்மணம் வியாபிக்க இந்த நூலில் இரண்டறக் கலந்து கரைந்து வாழ முடிகிறது.இந்த வாழ்வில் நாம் என்ன என்ன அதிசயங்களையெல்லாம் பார்த்தும் கேட்டும் வாழ்ந்து வந்திருக்கிறோம். நான் உங்களை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன் என்று விவிலியத்தில் சொற்கள் இருக்கின்றன.அதிசயங்கள் எங்கோ தொலை தூரத்திலா இருக்கிறது. அதிசயங்கள் நம்மில் கலந்த நினைவுகளில் இருக்கிறது. அது ஒரு பிறைக்காலம் என்கிற இந்த அழகிய வாழ்வியல் அனுபவ நூல்  காலத்தின் இனிமையை நம் பக்கமாகத் திருப்பி விடுகிறது.
              பால்யகாலத்தின் நினைவடுக்குகளை ஜமீலா ராசிக் மிகச்சாதரண மொழியில் பரிமாறுகிறார். இந்த பரிமாற்றம் நமக்குள் குதூகலத்தையும் ஏக்கத்தையும் ஒருசேர நிரப்பி வைப்பதோடு என்னையும் அது எங்கள் பள்ளிவாசலுக்குப்  பின்னாலுள்ள சின்னாற்றில் என்னை நிப்பாட்டி வைத்திருக்கிறது.களிமண்ணைக் குழைத்து மூன்று உருண்டைகளாக உருட்டி மேல்புறம் ஒன்றும் கீழ்புறம் இரண்டுமாக அஃகன்னா வடிவத்தில் வைத்துவிட்டால் அடுப்பு தயார். தலைநோன்பு கூட்டாஞ்சோறுக்கான ஜமீலாவின் மற்றும் ஜமீலாவின் உடன்வயதுக்காரிகளின் கூட்டாஞ்சோறாக்கும் அடுப்பும் எங்கள் விளையாட்டு நேச்சைச்சோறாக்கும் அடுப்பும் நினைவுகளில் ஒரு வினை புரிகிறது.ஜமீலாவுக்கு உம்மும்மா லாத்தாக்கள் உதவுவதுபோல எங்களுக்கு உப்பாவோ அண்ணன்மார்களோ கூடியிருக்கவில்லை மாறாக ஜமீலாவின் கூட்டுபோலவே எங்களுக்கும் உம்மும்மாவும் அக்காகளும்தான் கூட்டாகி இருந்ததின் உலகம் இப்போது இன்னொரு சிந்தனையை உற்பத்தி செய்கிறது. அது குழந்தை மனம் கொண்ட எல்லா மகிழ்வுகளிலும் அறிவு கடந்த ஆனந்தம் பெண்களிடத்தில் மைய்யப்பட்டிருப்பதை உணர்தலாகும்.
            ஆதியிலிருந்து அந்தம் வரையிலும் பயணிக்கின்ற இந்த மெல்லெழுத்து பெண்ணின் பார்வையிலான அவதானம்.தமிழ் முஸ்லிம் சமூக வாழ்வியல் வெளிப்பாடுகளில் இது அரிதான வருகை.இதுபோன்ற எழுத்துகளின் பெருக்கம் அவசியமாக இருப்பதை இந்த எழுத்துக்களே நமக்கு அறிவிக்கின்றன.தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றுப்பாலம் சேதமடைந்து ஏற்படும் சிரமம் பழைய காலத்துக்கு கொண்டுபோய் மாட்டுவண்டியில் ஆற்றைக் கடந்த காலங்களின் வசந்தத்தின் லைப்பில் மூழ்குகிறது.நாம் நம் வாழ்வின் நிமித்தமாக ஒரு பாடலோ ஒரு கதையோ கால நினைவுகளைக் கொண்டுவரலாம். நாம் அவற்றை அதற்குரிய மனிதர்களோடு பகிர்கிறோம் அந்த நினைவின் காலத்தில் உலவிய மனிதராக இருந்தால் அவரும் பேருவுவகைக் கொள்வார்.அது தனிமனித அல்லது கொஞ்சம் மனிதர்களுக்கானதாக சுருங்கிவிடும்.மாறாக இவ்வாறான எழுத்துகள் சுருக்கத்திலிருந்து விடுபட்டு பெரும் பரப்புக்கு பேருவுவகையைக் கடத்துகிறது.ஒரு பெண்ணின் வாழ்வு வழியே அவளின் காலங்கள் வாயிலாக நம்பிக்கை, சடங்குகள்,பண்பாடு முதலானவைகளில்  நிகழ்ந்தேறும் மாற்றங்கள் மட்டுமல்லாது ஏரல் ஊரின் நகரின் காலங்களும் அதன் வணிகச்செயல்பாடுகளும் மணக்க மணக்க ஜமீலாவின் எழுத்துக்களில் பாய்ந்தோடுகிறது.
              அதுஒரு பிறைக்காலம் வாசிக்க வாசிக்க நான் நினைவுகளிலிருந்து வெளியேறி வெளியேறியே வாசிக்க இயன்றது.வாசிக்க விடாமல் நான் சார்ந்த ஊர் மனிதர்கள் நிலம் நீர்,எங்களது நோன்புகாலம் பெருநாள் காலம்,தராவீஹ் இரவுகள்,லைலத்துல் கத்ரு, பள்ளிக்கொடிக்கட்டு என நினைவுகள் மேலெழுந்து அழுத்தம் செய்து கொண்டிருந்தது. சமீபமாக நான் ஒரு நூலை வாசித்து ஏராளமான நினைவடுக்குகளில் சிக்குண்டுக் கிடந்தது இந்த வாசிப்பிலாகத்தான் இருக்குமென்று கருதுகிறேன். அவ்வகையில் இந்த எளிய நூல் ஒரு பேரனுபவமாகும்.
              நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அனுபவங்கள் உண்டு ஆனால் மனிதர்கள் அவற்றை அழகுற பதிவு செய்வதில்லை.அப்படியாக அதனை பதிவு செய்கிறபோதுதான் தனித்த அனுபவங்கள் பொது அனுபவமாக மலருகிறது. இதிலிருந்துதான் நாம் மனிதர்களை சமூகத்தைக் கற்க இயலுகிறது.இது கல்வியாக வாழ்வியல் வரலாறாக பண்பாட்டு அறிவாக சமூகங்களிடையே ஆவணமாகிவிடுகிறது. ஜமீலா ராசிக் இவ்வகை அனுபவ எழுத்துக்களின் வாயிலாக தனது தனி அனுபவத்தை சமூக ஆவணமாக கட்டமைத்திருப்பது இந்த நூலின் சிறப்பாகக் கொள்ளலாம். இன்றைக்கு உள்ளும் புறத்திலும்  வளர்ந்து வரும் பிரிவினைவாதப் போக்குகளுக்கு எதிரான காலத்தின் பதிலீடுகளாக  இவைகள்தான் நம்மிடையே எஞ்சி நிற்கப்போகிறது. இதுபோன்ற எழுத்துக்கள் எல்லா முனைகளிலிருந்தும் எழுதப்பட வேண்டும்.
                 நான் சிறுவயதில் எனது அம்மாவின் தாயாரிடம் நிறைய கதைகள் கேட்டுக் கேட்டு வளர்ந்தவன். அவள் எனக்கு கதை சொல்லித்தராத நாட்களே இல்லை என்று சொல்லலாம். இன்று கதைச் சொல்லுவாரின்றி நம்முடைய குடும்பங்கள் மாறி இருக்கிறது.நான் சின்னப் புள்ளையா இருக்கத்துல என்று யாராவது தொடங்கினாலேயே நாம் நகர்ந்துவிடுகிறோம்.காலத்துக்கு முன்னேயான மனிதர்களிடத்தில் காருண்யமும் அன்பும் அசாத்தியமான நம்பிக்கையுமிருந்தது.இன்றைய நவீன வளர்ச்சிகளின் பெருக்கத்தில் முந்தைய மனிதர்களின் தனிக் குணாம்சங்களின் இருப்பு புறத்தோற்றத்தில் அவசியமற்றதாகப் போய்விட்டது.ஆனால் அகம் யுகம் கடந்தாலும் உணர்வுகளின் கூடாரம்தான்.அது ஒரு  பிறைக்காலம் நூலும் உணர்வுகளின் கூடாரம்தான். காருண்யமும் அன்பும் அசாத்திய நம்பிக்கையும் கொண்ட ஒரு உம்மும்மாவின் உணர்வுகளின் கூடாரம். அவ்வளவு அழகான எழுத்துக்களின் பதிவுகளாக தாமிரபரணி நதிபோல ஏரலிலும் ஏரலைச் சுற்றியுள்ள  நிலமெங்கும் பாய்ந்தோடுகிறது. செழிப்பின் அடையாளம்.காலத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்கிற அன்பின் பிரவாகமாக அடையாளப்படுத்துகிறேன்.
உண்மையில் பிறை தெரிந்துவிட்டது.

Friday, 31 January 2025

யூசுபுக்கு அழகூட்டிய நேசம்


எம்.மீரான் மைதீன்

எனக்கு ஆணிலும் பெண்ணிலும் வயது முதிர்ந்த வயது குறைவான என கொஞ்சம் ஆசான்கள் உண்டு.நானே அடையாளம் கண்டு அமைத்துக் கொண்ட ஆசான்கள்.அப்படியான ஆசான்களின் அந்தஸ்தில் நான் நேசிக்ககூடிய ஆசான் மதிப்புக்குரிய முஸ்தபா காஸிமி அவர்கள்.இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்னர் என்னை அடையாளம் காட்டிய கவர்னர்பெத்தா சிறுகதையை இவர்தான் மறைச்சுடர் இதழின் மூலமாகப் பதிப்பித்திருந்தார்.ஆங்கிலம் உருது அரபி என அந்த கதையின் பரப்பு விரிவடைந்துப் போயிருந்தாலும் அதனை வெளியுலகுக்கு முதலில் அறிமுகப்படுத்தியது முஸ்தபா காஸிமி அவர்கள்தான்.

நாம் நம்முடைய பார்வையோடு சிந்தனைகளோடு தொடர்புடைய மனிதர்களைத்தான் இசைவாகக் கொள்கிறோம்.சூஃபிய பார்வையும் ஆழமான கருத்துப் பகிர்வும் பெரிய மனமும் வாய்க்கப்பெற்ற இந்த மார்க்க அறிஞர் நிறைந்த அன்பாளர்.

பங்காளி பிள்ளை என்கிற புனைப்பெயரோடு முஸ்தபா காஸிமி அவர்களின் "யூசுபுக்கு அழகூட்டிய நேசம்" கவிதை நூலை இக்றா பதிப்பகம் வெளிக் கொண்டு வந்திருக்கிறது.கவிதைகளை விடுங்கள் கவிதையைப் பற்றிக்கூட சாவகாசமாகப் பேசலாம்.முதலில் கவிதை தொகுப்பை நூலாக கொண்டு வந்திருக்கிற இந்த முனைப்புக்காக ஆசானை பாராட்ட வேண்டும்.அவர் கவிதையிலிருந்தே ஒரு வார்த்தையை எடுத்தாளுவதாக இருந்தால் நயவஞ்சகத்தின் சுள்ளிகள் நேசத்தின் ஜூவாலையில் சாம்பலாகின்றன.இது காஸிமியின் நேசம்.

முஸ்தபா காஸிமி தன் இணையர் அனிஸ் ஃபாத்திமாவுக்கு இந்த கவிதை நூலை அன்பின் வெளிப்பாடாக்கி இருக்கிறார்.சிலபல கவிதைகள் பெண் குரலாய் பிரதிபலிக்கிறது.பெண்களுக்கு எதிரான ஒடுக்கும் குரலை கனவு என்கிறார்./"என் விலா எலும்பின்
படைப்புதான் நீ என்றேன்.உன் எலும்பில்லா பசியின் உணவு நான் என்றாய்.ஞானமாமேதை பீரப்பா இறையை உணவானவனே என்கிறார்.பெண் குரலை வெல்ல அனுமதிக்கும் ஆண் குரலாக கவிதைகள் மொழிபடுகிறது.இவைகள் இஸ்லாம் சமூக சூழலில் சற்றுப் பெரும் குரல்கள்.மார்க்க அறிஞரான காஸிமியிடம் இருந்து இது சில உபாயங்களைக் கொண்ட திறப்பாகத் தெரிகிறது.நாம் ஏதேனும் கூடுதலாகச் சொல்லி அவருக்கு கடினங்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதிலும் எண்ணம் ஊடாடுகிறது./அலைவுறும் வாலின் முந்தானையால் நீ உரசிச் செல்வதென் கவனம் ஈர்க்கத் தானே.

பெண்மை ,இறைமை,இயற்கை,பிரார்த்தனை,நேசமென கவிதைகள் வெளிச்சப் பிரவாகத்தை நோக்கி நகர்கிறது.வெளிச்சம் என்பது ஔி.இஸ்லாம் இறை ஔியாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது.

அன்பான வாழ்த்துகள் ஆசானே....


/ உன்னைப்பற்றிய
என் சொற்களை
மௌனமாகக்
கடந்து செல்வதில்
மிளிர்கிறதுன் அழகு

தாயென்றிருந்தாய்
காலடியில் தவமென்றேன்
சகோதரி என்றிருந்தாய்
கண்ணிமை நானென்றேன்
சிநேகிதி நீயென்றாய்
விழிப்பரப்பில் வேடிக்கை செய்தேன்

மனையறம் நீயானாய்
நாளொரு கூத்தில்
நாளைக் கடத்தினேன்

மகளென்று
தோற்றம் கொண்டாய்
தாய் மீண்டும்
பிறந்தாய் என்றேன்

பேத்திக்காக நிலாச்சொற்களை
கோர்வை செய்கிறேன்

சொற்களின் வசீகரம்
உன்னில் எதையும்
மாற்றி விடவில்லை

இறைமையின் பாத்திரங்களாய்
தகவமைக்கிறாய்

இன்மையின் தவத்தை
இயற்கையாக்கிக் கொண்டிருக்கிறாய்..

வளர்பிறை

மீரான் மைதீன் பயணத்திலேயே எழுத்தாளர் ஜமீலா ராசிக்கின் "அது ஓரு பிறைக்காலம்" வாசித்தேன்.நினைவுகளை மீட்டித்தரும் அனுபவப்...